நித்ய சைதன்யா – கவிதைகள்

Spread the love

நித்ய சைதன்யா

 

1.தவம்

வழியெங்கும் மலர்களாய்

மலர்ந்திருக்கிறது மரணம்

சிதறிக்கிடந்த ஒவ்வொரு மலரும்

விட்டுச்சென்றுள்ளது

சொல்ல மறுத்த பிரியத்தை

உள்ளம் பதற சிதையில்

உன்னை கிடத்தும் கோலம் கண்டு

துக்கித்து நடக்கமுயன்றேன்

முன்னால் திறந்து கிடந்தது

பாதைகளும் திசைகளும் அற்ற பாழ்வெளி

இன்று இம்மண்ணில் இருந்து மறைகிறாய்

உன்னைப் புசித்த தானியமாகி

பசிதேடி நாளை வருவாய்

அதுவரை என் இருப்பு

நினைவுகளின் தாழ்வாரத்தில்

 

 

 

 

2.விசை

யாருமற்ற அறைகளில்

சதா

கேட்டுக்கொண்டே இருக்கிறது

காலத்தின் மூச்சு

முட்டிமோதி வாயில் தேடிய ஒன்று

கண்டுகொள்கிறது

யாருமற்ற அறையின் துயரத்தை

வெளி அமர்ந்த நாற்காலி

மௌனம் சுமந்து நிற்க

யாருமற்ற அறையில்

இருள் சூழ்கிறது

யாருமற்ற அறையில் பிறந்த

இசையில் வழிந்தோடுகிறது

விண்ணைத் தீண்டும் பறவையின் தாகம்

———————————————-

 

Series Navigationசொல்வனம் இணைய இதழின் 139வது இதழ் திரு வெங்கட் சாமிநாதன் அவர்களின் நினைவு இதழாய் வெளிவந்துள்ளது.எழுத்தாளர்கள் சந்திப்பு நவம்பர் 21,22 : திருப்பூர்