நினைவு நதியில் ஒரு உயிரின் மிச்சம் !

Spread the love

இதுநாள் வரை
பிரிந்திராத
மரக்கிளை விட்டு
கிளம்புகிறது
பழுத்த இலை ஒன்று …..

முடிந்துவிட்ட
ஆயுள் எண்ணி
பெருமூச்சொன்றை
பிரித்தபடி தொடங்குகிறது
அதன் இறுதிப்பயணம் ….

விம்மிவெடிக்கும்
அதன் துயரங்கள்
யார் காதிலும்
கேட்டிருக்க வாய்ப்பில்லை ….

இலையை பிரிந்த
சோகம் தாளாமல்
சுழன்று சுழன்று
மரக்கிளை வைக்கும்
ஒப்பாரியை கவனிக்க
யாருக்கும் இங்கே
விருப்பமில்லை …..

இலையொன்று போனால்
துளிர் ஒன்று முளைக்கும்
என்கிற
சமாதானத்தையும்
மரக்கிளை ஏற்ப்பதாயில்லை .

இதோ !
அழுதபடி ஓடும்
என் நினைவு நதியில்
சலனமில்லாமல் மிதக்கிறது
ஆயுள் முடிந்த இலை ….

விழுந்த இலை
சலனமில்லாமல் மிதக்கிறது ,
எனக்குத்தான் இதயம்
சலனப்பட்டு கனக்கிறது …….

—- க.உதயகுமார்

Series Navigationசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 41திண்ணைப் பேச்சு – கனிமொழி, சின்னக் குத்தூசி பற்றி ஜெயமோகன் பற்றி பி கே சிவகுமார் பற்றி ஸிந்துஜா