நெஞ்சு பொறுக்குதில்லையே…..

Spread the love

கடந்த சில வாரங்களாக தினமும் ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் செய்தியை தமிழ் ஆங்கில நாளிதழ்களில் படிக்க நேர்கிறது. மிகவும் அவலமாக உணர்கிறது மனம்.

இன்று சென்னை மதுரவாயில் பகுதியில் ஒரு வீட்டின் மூன்றாவது மாடியில் வசிக்கும் குடும்பத் தைச் சேர்ந்த 10 வயதுச் சிறுமி இரவு பனிரெண்டு மணிக்கும் மேல் சிறுநீர் கழிக்க வீட்டுக்கு வெளிப் புறத்தில் இருந்த கழிப்பறைக்குச் சென்றபோது அந்தக் குடியிருப்பில் வசிக்கும் 29 வயதுக் கட்டிடத் தொழிலாளி ஒருவர் மேற்கொண்ட பாலியல் பலாத்கார முயற்சியின் இறுதியில் மூன்றாம் மாடியிலிருந்து வீசியெறியப் பட்டு இறந்துபோயிருப்பதாக ஒரு செய்தி.

தமிழ் நாளிதழில் பாலியல் பலாத்காரம் செய்ய முற்படுகையில் சிறுமி கூவியதால் அவள் வாயில் துணியை வைத்து அடைத்து அவள் மயங்கிப்போக, அந்த ஆள் வீசியெறிந்துவிட்டதாக செய்தி. ஆங்கில நாளிதழில் பாலியல் பலாத்காரம் செய்து பின் மயங்கிய நிலையிலிருந்த அந்தச் சிறுமியை அந்த ஆள் வீசியெறிந்துவிட்டதாய் விவரம் தரப்பட்டிருக் கிறது.

படித்தவுடன், உலகிலிருக்கும் கொரோனா கிருமிகள் எல்லாவற்றையும் அந்தக் கொடூரன் மீது ஏவ முடிந்தால் எத்தனை நன்றாயிருக்கும் என்றுதான் தோன்றியது.

இப்படிப்பட்ட செய்திகள் வந்தால் உடனே சில அறிவுசாலிகளும், படைப்பாளிகளும், பெண்ணிய வாதிகளும் ’பாவம், அந்த ஆள் அப்படி நடந்துகொண் டதற்கு அவருடைய ஏழ்மை காரணம், சாதிப்பாகு பாடுகள் காரணம், சமூகப் புறக்கணிப்பு காரணம் என்று (அ)நியாயாதிபதிகளாக தர்க்கிக்கவும், தீர்ப்பு சொல்லவும் ஆரம்பித்துவிடுகிறார்கள்.

இப்படிப் பேசுவது சுய ஒழுக்கத்தோடும், சக உயிர்கள் மீது மரியாதையோடும், கரிசனத்தோடும் வாழும் அத்தனை தரப்பு மனிதர்களையும் அவமானப்படுத் துவதாகிறது என்பதை அவர்களால் ஏன் உணரமுடிய வில்லை?

அப்படித்தான், அயனாவரம் பகுதியில் மாற்றுத்திற னாளியான பள்ளிச்சிறுமி மாதக்கணக்காக அந்தக் குடியிருப்பில் பணியாற்றும் சில தொழிலாளர் களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட போது இங்கே ஒரு பெண் படைப்பாளி ‘அவள் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவள்’ என்றும் ‘குற்றவாளிகள் பாவம் குடிசைப்பகுதியைச் சேர்ந்தவர்கள்’ என்றும் கருத்துப் பதிவிட்டார்.

ஒரு நிஜ ஊரின் பெயரைக் குறிப்பிட்டு அங்கே 70 வருடங்களுக்கு முன்பு குழந்தைப்பேறில்லாத பெண்கள் ஊர்த்திருவிழாவின்போது தனக்குகந்த ஆணோடு உறவுகொள்ளும் வழக்கம் இருந்தது என்று, சில லட்சங்கள் நிதியுதவி பெற்று கதையெழு தியவரை ஒரு வார்த்தை கூட கண்டிக்காமல், அந்த ஊரின் பெண்களுக்கு இந்தப் படைப்பு மூலம் நேரக் கூடிய, நேர்ந்திருக்கும் பாதிப்புகளை அறவே பொருட்படுத் தாமல், அவர் பெண் விடுதலையை எழுதினாரென்றும் படைப்புச் சுதந்திரம் பறிபோகலாகாது என்றும் வக்காலத்து வாங்கிய படைப்பாளப் பெண்கள் கணிசமானோர்.

ஆண்டாள் விஷயத்திலும், மீ டூ விஷயத்திலும் அவற்றை ஆதிக்கசாதி சமாச்சாரமாகப் பகுத்து மௌனம் சாதித்த, அல்லது, பாதிக்கப்பட்ட பெண்களுக்குப் பாராமுகம் காட்டிய அறிவுசாலிப் பெண்கள் அதிகம்.

நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டபோது முதலில் அவர் பெயர் வெளியிடப்படாத நிலையில் அவரை ஆதிக்கசாதி பெண் என்று தவறாகப் பகுத்து, அதனால்தான் இந்தப் பிரச்னைக்கு இத்தனை ஆதரவுக்குரல் என்றவிதமாகப் பேசிய பெண்ணிய வாதிகள் உண்டு.

இப்பொழுது நிர்பயா வழக்கின் குற்றவாளிகளுக்கு ஏழெட்டு வருடங்களுக்குப் பிறகு தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டதும், rarest of rare வழக்கில்தான் மரணதண்டனை விதிக்கப்படுகிறது என்பதை வசதியாக மறந்தவர்களாய் அந்த இளைஞர்களுக்காகப் பரிந்துபேசிக்கொண்டிருக்கிறார்கள்.

கொலைக்குக் கொலை என்பதாய் அரசாங்கமே குற்றவாளியைக் கொலைசெய்வது முறையல்ல என்று சொல்பவர்களில் கணிசமானோர் ஆதிக்க அரசை வீழ்த்தவெனப் போராடும் அமைப்புகள் கூட்டமாகக் கொலைகள் நிகழ்த்துவது குறித்து அதேபார்வையை முன்வைப்பதில்லை என்பது கவனிக்கத்தக்கது.

கொலைக்குக் கொலை தீர்வல்ல என்பது உண்மையே. ஆனால், அதைச் சொல்லும் வேகத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுடைய வலி வேதனைகளை நாம் புறமொதுக்கி விடலாகாது.

நிறைய எழுதலாம். பாலியல் பலாத்காரத்திற் காளாகி, அல்லது பாலியல் பலாத்கார முயற்சிக்கு ஆளாகி (அந்த கணங்களில் அந்தச் சிறுமியின் மெல்லிய மனமும் உடலும் எத்தனை வலித்தி ருக்கும்….) மூன்றாம் மாடியிலிருந்து வீசியெறியப் பட்டு இறந்துபோன அந்தச் சிறுமி இறுதித்தருணங் களில் மயக்கத்திலிருந்து மீளாமலேயே, மரணத்தை விட மிக மிக மோசமான அந்த வலியுணராமலேயே இருந்திருக்கட்டும் என்பது மட்டுமே ஒரு கையறு நிலைப் பிரார்த்தனையாக மனதிற்குள் மிஞ்சுகிறது.

Series Navigationகொள்ளைநோயும் கொள்ளைக்காதலும் வெள்ளையும் சொள்ளையாயுமாய் மெய்யும் பொய்யும்…….சொல்வனம் 219ஆம் இதழ் வெளியீடு அறிக்கை