பழமொழிகளில் மனம்

Spread the love

மனம் மிகவும் அற்புதமான ஒன்று. இதில் என்ற இருக்கிறது? அது எதை நினைக்கிறது?எப்படிச் செயல்படுகிறது? என்பதை யாராலும் கூற முடியாது. மனம் புதிர் போன்றது. மனம் உடையவன் மனிதன். இன்றும் இம் மனித மனத்தை வைத்துப் பல்வேறு ஆய்வுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. நமது முன்னோர்கள் புதிராக விளங்கும் இம்மனித மனத்தைப் பற்றி பல்வேறு கருத்துக்களைப் பழமொழிகள் வாயிலாகக் கூறியுள்ளனர்.
மனம்-வாழ்வு
வாழ்விற்கு அடிப்படையாகவும், நலத்தையும் தருவது மனம். வாழ்க்கை மனத்தையே சார்ந்துள்ளது. பணம், பொருள், பொன், பதவி ஆகிய அனைத்தும் இருந்தாலுமை், மன நலம் ஒருவருக்கு வாய்க்கவில்லையெனில் வாழ்வு செம்மையாக அமையாது எனலாம். மனம் ஒன்றி வாழ்ந்தால் மட்டுமே வாழ்வு இனிக்கும். இல்லையெனில் துன்பமே.
நம்முன்னோர்கள் மனதைக் குரங்கிற்கு ஒப்பிடுவர். குரங்கு எவ்வாறு ஓரிடத்தில் நிலைத்து நிற்காதோ அதுபோன்று மனம் ஒன்றில் நிலைத்து நிற்காது. மனம் ஒன்றைவிட்டு ஒன்று மாறிக் கொண்டே இருக்கும் தன்மை உடையது.
மனதை நல்வழிப்படுத்தினால் அனைத்துச் செயல்களிலும் வெற்றிபெறலாம். நமது மனம் எதைச் செம்மையாக நினைக்கிறதோ அது நன்றாக நடக்கும். நல்லதை நினைத்தால் நல்லது நடக்கும். தீயது நினைத்தால் தீயதே நடக்கும் என்பர்.
நாம் ஒன்றில் வெற்றி பெறவேண்டும் என்று கருதினால் அதனைத் தீவிரமாகக் கருதி மனதை ஒருநிலைப்படுத்திச் செயலில் ஈடுபட வேண்டும். அவ்வாறு ஈடுபட்டால் எளிதில் வெற்றி பெறலாம். நன்கு திறமையாளனும்கூட மனதில் தன்னால் முடியாது என்று கருதத் தொடங்கினால் அவ்வாறே அவனது செயலும் தோல்வியில் முடிவுறுகிறது. வள்ளுவரும்,
‘‘எண்ணிய எண்ணியாங்கு எய்துப
எண்ணியர் திண்ணியராகப் பெறின்.’’
என்று இதனைப் பற்றிக் கூறியிருப்பது நோக்கத்தக்கது.
இத்தகைய அரிய கருத்தையே,
‘‘மனம்போல வாழ்வு”
‘‘எண்ணம்போல் வாழ்க்கை”
என்ற பழமொழிகள் மூலம் நமது முன்னோர்கள் கூறிப்போந்தனர் எனலாம். மனம் எண்ணங்களை எண்ணுகிறது. எண்ணம் செயலாகிறது. செயல் வெற்றியைத் தருகிறது. நமது எண்ணங்கள் தீமைகளைப் பிறருக்கு விளைவிக்காதபோது நமது வாழ்வு சிறக்கும். எண்ணங்கள் தீயதாக இருப்பின் அதுபோன்றே நமது வாழ்வும் அமையும். இதனையே மேற்குறித்த பழமொழிகள் தெளிவுறுத்துகின்றன.
மனமும் – மாளிகையும்
மனம் குறுகியதாக இருத்தல் கூடாது. அது நல்ல எண்ணங்களாலும், பெருந்தன்மையாலும், கருணையாலும் நிரப்பப் பெற்றிருக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் நல்ல அமைதியான, மகிழ்வான வாழ்வினை வாழ முடியும். மனதில் குறுகிய, கோணல்தன்மையான எண்ணங்கள் விளையுமானால் அது தீரா நோய் போன்ற வாழ்வையே தரும்.
நாம் வாழும் இடம் சிறிதாக இருக்கலாம். வசதிகளின்றியும், விசாலமின்றியும், வளமின்றியுமிருக்கலாம். ஆனால் மனம் நன்றாக இருந்தால், நலமான எண்ணங்களால் நிரப்பப்பட்டிருந்தால் வாழ்வு இனிமையாக இருக்கும்.
ஔவையார் கூறியுள்ள,
‘‘நாடாகொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையாகின்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே!’’
என்ற புறநானூற்றுப் பாடலில் இடம் எதுவாக இருந்தாலும் நல்மனமுள்ள மக்கள் வாழ்வதாக இருந்தால் அது நல்ல இடமாக மாறும். வளமுள்ள இடமாக இருந்து தீய மனமுள்ள மனிதர்களாக இருப்பின் அது நரகத்தைப் போன்ற இடமாக இருக்கும். இவற்றையெல்லாம் உணர்ந்த நமது முன்னொர்கள்,
‘‘மனம் கொண்டதே மாளிகை’’
என்ற பழமொழியினைக் கூறி வாழ்க்கையை வளமாக வாழ வேண்டும் என்று வற்புறுத்தினர் எனலாம். மேற்கண்ட கருத்துக்களையெல்லாம் உள்ளடக்கியதாக இப்பழமொழி அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மனம் – ஆசை
மனம் ஆசைக்கு அடிமைப்படுதல் கூடாது. ஆசைக்கு அடிமையானால் மனம் துன்புறும். ஆசைக்குட்பட்ட மனம் மேலும் மேலும் ஆசைப்பட்டுக் கொண்டே அடங்காது அலைபாயும். அவ்வாசை போதும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தாது. அதனால் மனதை ஆசைக்கு ஆட்பட வைக்காது ஒருநிலைப்படுத்தி வாழ வேண்டும். அவ்வாறு வாழ்கின்றபோது வாழ்வில் அமைதியும் மகிழ்வும் ஏற்படும். இத்தகைய வாழ்வியல் பண்பாட்டை,
‘‘போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து’’
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.
போதும் என்ற மனப்பான்மை அரிய மருந்தாகும். இத்தகைய மனப்பக்குவம் ஒருவனுக்கு அமைந்துவிட்டால் வாழ்வு வசந்தமயமாகிவிடும் என்பதை தமது அனுபவத்தால் இப்பழமொழி வாயிலாக நமது முன்னோர்கள் தெளிவுறுத்தியுள்ளனர்.
மனம் – பேச்சு
மனதிற்கும் பேச்சிற்கும் நெருங்கிய தொடர்புண்டு. மனம் நினைக்கின்ற நினைவே எண்ணமாகவும், பேச்சாகவும் வெளிப்படுகிறது. மனம் துன்பத்திலோ, குழப்பத்திலோ ஆழ்ந்து விடுமானால் பேச்சில் தெளிவு வராது. உளறலாக மாறும்.
சிலர் மனதில் நினைப்பதைப் பேசாது மறைத்து, வெளியில் வேறொன்றைப் பற்றிப் பேசுவர். அவ்வாறு பேசுவது தவறான ஒன்றாகும். மனதில் குழப்பமின்றித் தெளிவாக மனதில் நினைத்ததைச் சரியானவற்றறைப் பேசுதல் வேண்டும் என்பதை,
‘‘மனசுல ஒன்று வெளியில ஒன்றாகப் பேசக் கூடாது’’
என்ற பழமொழி வாயிலாக நமது முன்னோர்கள் கூறினர். இப்பழமொழியையே,
‘‘மனதுக்குள்ள ஒண்ணு வாய்க்குள்ள ஒண்ணு வைத்துப் பேசாதே’’
என்றும் வழக்கில் வழங்குவர்.
மனம் – வழி
ஒரு பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்க வேண்டுமெனில் அதைப்பற்றி சிந்தனை செய்தல் வேண்டும். மனதிற்குள் அதனைப் பற்றி சிந்தித்துக் கொண்டே இருந்தால் ஏதேனும் தீர்வு கிடைக்கும். தவறான நெறியில் செல்பவனும் பிறருக்குத் தீமை விளைவிப்பவனும் மனதில் தான் செய்வது சரியா? என்று சிந்தனை செய்தால் அவனுக்குச் சரியான நெறி புலப்படும். அவன் நன்னெறியில் செல்வான். இத்தகைய நன்னெறியை,
‘‘மனம் இருந்தால் மார்க்கம் உண்டு’’
என்ற பழமெழி எடுத்துரைக்கின்றது.
இங்கு குறிப்பிடப்படும், ‘மார்க்கம்’ ‘நல்ல நெறி’ என்று பொருள்படும். நன்னெறியையே மார்க்கம் என்று வழக்கில் கூறுவர். மனம் ஒருநிலையில் இருந்தால் நல்ல நெறி-நல்லவழி புலப்படும். அலைபாயாத மனத்திலேயே நற்சிந்தனை எழும். மனதில் நற்சிந்தனை எழும்போதுதான் நல்வழி புலனாகும். அதனால் மனதை அலைபாயவிடாது ஒருநிலையில் வைத்து நன்னெறியை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்ற பண்பாட்டு நெறியை இப்பழமொழி உள்ளீடாகக் கொண்டுள்ளது நோக்கத்தக்கது.
மன ஆழம் – கடல் ஆழம்
உலகில் மிகவும் ஆழமானது கடல். அத்தகைய கடலின் ஆழத்தை அளந்தறிய பல கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றின் வாயிலாக பல கடல்களின் ஆழத்தை மனிதர்கள் கணக்கிட்டுக் கூறியுள்ளனர். ஆனால் பெண்ணின் மன ஆழத்தை யாராலும் அளந்தறிய இயலாது. இதுவரை பெண்ணின் மனதை முழுதும் அறிந்து கொண்டவர்கள் யாருமில்லை எனலாம். இதனை,
‘‘கடல் ஆழத்தைக் கண்டாலும் காணலாம்
பெண்ணோட மன ஆழத்தைக் காண முடியாது’’
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது. இப்பழமொழி பெண்ணிற்கு எதிராகக் கூறப்பட்டதோ? என்று கூட எண்ணுவதற்கு இடமுள்ளது. கடல் ஆழம் – பெண்ணின் மன ஆழம் இவற்றில் பெண்ணின் மன ஆழம் கண்டறிய இயலாது என்று கூறுவது பெண்களைக் குறைகூறுவதைப் போன்றுள்ளதாக அமைந்துள்ளது.
நமது முன்னோர்கள் அவ்வாறு கூறியிரப்பார்களா? என்று ஆராய்ந்தால் அவர்கள் உளவியல் அடிப்படையிலேயே இப்பழமொழியைக் கூறியுள்ளனர் என்பது நன்கு புலனாகும். பெண்கள் என்ன கருதுகிறார்கள், எப்படி, எப்போது எவ்வாறு அது மாறும் என்பதைப் புரிந்து கொள்ள இயலாது. ஆண்களைச் சட்டென்று ்சில விஷயங்களைக் கூறி ஒரு கருத்தினை ஏற்றுக் கொள்ள வைத்துவிடலாம். பெண்கள் எந்த ஒரு விஷயத்தையுமோ, அல்லது நபரையுமோ நம்பி ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
பெண்களுக்கு எச்சரிக்கை உணர்வு அதிகம் என்பதனையே இப்பழமொழி எணர்த்துகிறது. பெண்கள் அராய்ந்து ஒரு முறைக்குப் பலமுறை சிந்தித்து ஒரு முடிவுக்கு வருவர். அப்படியே வந்தாலும் அது குறித்து எப்போதும் எச்சரிக்கையுடன் இருப்பர். இவ்வாறு பெண்களின் மனப்பான்மையைத் தெளிவுறுத்தவே உளவியல் ரீதியாக இப்பழமொழியினை நமது முன்னோர்கள் கூறியுள்ளனர் எனலாம்.
மனதை நன்னெறியில் செலுத்தி, அலைபாய விடாது ஒருநிலைப்படுத்தி, நல்ல எண்ணங்களை மனதிற்குள் நிரப்பி நன்மை செய்து நல்வாழ்வு வாழ மனம் குறித்த இப்பழமொழிகள் நமக்கு உறுதுணையாக அமைந்திலங்குகின்றன எனலாம்.

முனைவர்சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.
E. Mail: Malar.sethu@gmail.com

Series Navigationஐயனாரானாலும் யூ ஹுவாங் ஆனாலும்….அடைக்கலம்