மந்திரச் சீப்பு (சீனக் கதை)

மந்திரச் சீப்பு
(சீனக் கதை)
வெகு காலத்திற்கு முன்பு, சேவல் தான் வயல்வெளியின் அரசனாக இருந்தது.  அது வயல்வெளியில் திரிந்து கொண்டு இருக்கும் கோழிகளையும் குஞ்சுகளையும் காப்பதையே வேலையாகக் கொண்டிருந்தது.  எதிரிகளைக் கண்காணிக்க, ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பறந்து செல்லும் திறனையும் பெற்றிருந்தது.
ஒரு நாள் டிராகனும் புழு ஒன்றும் சேவல் செய்யும் வேலையைக் காண வயலுக்கு வந்தன.  ஒவ்வொரு வீட்டு உச்சியிலிருந்து உச்சிக்குத் தாவிச் சென்று நாய்களையும் நரிகளையும் பயமுறுத்துவதைக் கண்டன.  வயல் மிகவும் பாதுகாப்பாக இருப்பதைக் கண்டு சேவலைப் பாராட்டின.
“சேவலே.. நீ பறப்பதை நாங்கள் பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.  அதை நீ எப்படிச் செய்கிறாய்?” என்ற டிராகன் கேட்டது.
சேவலுக்கு எப்போதும் பாராட்டுக்களைக் கேட்பது மிகவும் பிடிக்கும்.  உடனே அது, “நான் என் தலையில் மந்திரச் சீப்பை அணிந்திருக்கிறேன்.  பாருங்கள் என் தலையில்.  மஞ்சள் நிறத்தில்” என்று காட்டி பெருமிதம் கொண்டது.
டிராகன் உடனே, “அப்படியா? உன்னுடைய மந்திரச் சீப்பை நான் ஒரு முறை பயன்படுத்திப் பார்க்கலாமா? என்னால் பறக்க முடிவதில்லை.  எனக்கும் பறக்க ரொம்பவும் ஆசை.  அதனால் நான் முயன்று பார்க்கிறேனே?” என்று குழைந்து கேட்டது.
“ஊம்.. பறக்க முடியுமா என்ற தெரியாது.  ஆனால் என் சீப்பை நீ திருப்பிக் கொடுப்பாய் என்று எப்படி நம்புவது?” என்று சந்தேகத்துடன் கேட்டது.
“என் தோழன் இந்தப் புழு.  அவன் உன்னுடன் தங்கி இருப்பான்.  அவன் தான் அதற்கு உத்திரவாதம்.. சரியா?” என்று புழுவினை பணையம் வைத்தது டிராகன்.
மனமில்லாமல், நண்பர்களுக்காக, சேவல் ஒத்துக் கொண்டு, தன்னுடைய மந்திரச் சீப்பை டிராகனிடம் கொடுத்தது.  டிராகன் உடனே தரையில் சேவலையும் புழுவையும் விட்டு விட்டு, வானத்தில் பறந்து சென்றது.
மந்திரச் சீப்பை தந்த பின், டிராகன் எதுவும் சொல்லாமல் பறந்ததைக் கண்ட சேவல், “டிராகன் எப்போது வருவதாகச் சொன்னது?” என்று புழுவிடம் வருத்தத்துடன் கேட்டது.  புழு, “நிச்சயம் டிராகன் சீக்கிரமே வந்து விடும்” என்று தைரியம் கூறியது.
கதிரவன் மறைந்தான்.  அடுத்த நாள் காலை. கதிரவன் உதயமானான்.
சேவல் வைகறையில் உயரமான இடத்திற்குச் சென்று வானத்தை நோக்கியது.  புழுவிடம் திரும்பி வந்து, “டிராகன் திரும்பி வரும் என்று நம்புகிறாயா?” என்று கேட்டது.  புழு மீண்டும் நம்பிக்கை அளித்தது.  ஏமாற்றத்துடன் சேவல் வயல்வெளியில், கோழிப் பண்ணையில்  நடந்து சென்று தன் வேலையைச் செய்ய ஆரம்பித்தது.
கதிரவன் அன்றும் மறைந்தான்.  அடுத்த நாள் கதிரவன் உதயமானான்.
சேவல் மறுபடியும் உயரமான இடத்திற்குச் சென்று வானத்தை நோக்கியது.  புழுவிடம் திரும்பவும் “டிராகன் இன்று திரும்பி வரும் என்று நம்புகிறாயா?” என்று கேட்டது.
புழு “டிராகன் திரும்பி வரும்” என்று மீண்டும் நம்பிக்கைக் கொடுத்தது.
கதிரவன் அன்றும் மறைந்தான்.  அடுத்த நாள் கதிரவன் உதயமானான்.
சேவல் மீண்டும் உயரமான இடத்திற்குச் சென்று வானத்தை நோக்கியது. பிறகு புழுவிடம், “இன்று மூன்றாம் நாள்.  டிராகன் வரும் என்று சொல்கிறாய். ஆனால் இன்று மட்டும் வரவில்லையே..” என்று பெருத்த வருத்தத்துடன் கூறியது.  சேவல் நெற்குதிருக்கு மேல் ஏறி, வானத்தை நோக்கிக் கூவியது.  “எங்கே என் சீப்பு?  எங்கே என் சீப்பு?” என்று கூவியது.
புழு சேவலை நோக்கிச் சிரித்தது. “முட்டாளே.. நீ டிராகனுக்கு உன்னுடைய மந்திரச் சீப்பை கொடுத்தாய்.  இப்போது பறக்க முடியாமல் தவிக்கிறாய்” என்றது.
கோபத்துடன், சேவல் நிலத்தில் குதித்து, சிறகை அடித்துக் கொண்டே புழுவினை கொத்தித் தின்ன ஆரம்பித்தது.
“டிராகன் சீப்பைத் திருப்பிக் கொண்டு வர வேண்டும்.  நீயும் கொண்டு வரும் என்று சொன்னாய்..” என்று தனக்குத்தானே ஆத்திரத்துடன் பேசிக் கொண்டது.
அன்றிலிருந்து, ஒவ்வொரு காலையும், இன்று வரையிலும், சேவல், “என் சீப்பு எங்கே?” என்று கத்துவதைக் கேட்கலாம்.  வயலில் புழுவினைத் துரத்தித் துரத்தி கொத்துவதையும் காணலாம்.
Series Navigationஇருள் தின்னும் வெளவால்கள்வாழ்வியல்வரலாற்றில்சிலபக்கங்கள்-46