மன்னை சரஸ்வதி தாயுமானவன் எழுதிய ‘நெல் மணிகள்’கவிதைத்தொகுப்பு

மணி.கணேசன்

தமிழ்க்கவிதையின் நோக்கும் போக்கும் தற்காலத்தில் நிரம்ப மாறுதல் பெற்றுவருகின்றன.பின்நவீனத்துவக் காலக்கட்ட எழுச்சிக்குப்பின் அதன் உருவம் மற்றும் உள்ளடக்கங்களில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.மேலை இலக்கியக் கோட்பாடுகளின் தாக்கம்,புத்தாக்க முயற்சி,உளவியல் சிந்தனை காரணமாக நவீனத் தமிழ்க் கவிதைகளின் பாடுபொருள் தளங்களும்,படிமம்,குறியீடு,இருண்மை முதலான உத்திமுறைகளும் விரிவடைந்துள்ளன.இவை வரவேற்கத்தக்கன என்றாலும் உப்புச்சப்பில்லாத தன்னுணர்ச்சிகளும் எளிதில் விளங்கிக்கொள்ள முடியாத தன்மைகளும் கவிதைகளைச் சாதாரண மக்களிடமிருந்;து விலக்கி வைத்துள்ளன.ஏனெனில்,புரிதலும் அதன் வழிச் செயல்படுதலும் இலக்கியப் படைப்பின் உயரிய குறிக்கோள் மற்றும் வெற்றி எனலாம்.

அந்த வகையில் எளிய பெண் கவிஞர் மன்னை சரஸ்வதி தாயுமானவன் எழுதியுள்ள ‘நெல் மணிகள்’கவிதைத்தொகுப்பு எளிமை-இனிமை-புதுமை நிறைந்து மிகுந்த கவனத்தைப் பெறுகின்றது.கவிதைகள் அனைத்தும் பாமரனுக்கும் எளிதில் புரியத்தக்கவகையில் அமைக்கப்பட்டுள்ளது ஒரு சிறப்பாகும்.காட்டாக,சமூகத்தில் ஆகப்பெரிய சீர்கேடாகப் பெருகிவரும் கையூட்டையும் அதனால் தனிமனிதனுக்கு உண்டாகும் மனஉளைச்சலையும் பின்வரும் கவிதையில் அழகாகப் பதிவுசெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒருநாள் வருமானத்தை இழந்து

இருநாள் வருமானத்தைப் பகிர்ந்தளித்து

இங்குமங்குமாய் அலைந்து

இறுதியில் கிடைக்கப்பெற்றேன்

என் வருமானச்சான்று!

மனித அடிப்படை உரிமையாக விளங்கிவரும் கல்வி இன்று கடைச்சரக்காகிப் போன கொடுமையினை இக்கவிஞர் எடுத்துரைக்கும் பாங்கை,

மகன் பள்ளிப் படியேற

தாய் ஏறுகிறாள்

பலவாசல் படி

கடன் பெறுவதற்கு.

என்னும் கவிதையில் நன்கு உணரவியலும்.பெண்ணடிமைத்தனம் புரையோடிக்கிடக்கும் இச்சமூகத்தில் பெண்ணையே பெண்ணிற்கு எதிரியாக மாற்றிப் பல்வேறு வன்கொடுமைகளை நிகழ்த்திவருவது பெரும்சோகம் எனலாம்.

இதைப் பெண்ணினம் உணரவேண்;டுமென்பதைத் தன் பகட்டில்லாதச் சொற்களால் இக்கவிஞர்-

தனியாய்

வந்தபோதும்

துணையாய் நின்றன

மாமியின் வசவுகள்.

என்று அழகாகச் சித்திரித்துள்ளார்.அதுபோல்,இருபத்தோறாம் நூற்றாண்டுப் பெண்கள் குடும்பம்,கல்வி,வேலைவாய்ப்பு,அரசியல் முதலானவற்றில் சுதந்திரமும் சமத்துவமும் தழைத்தோங்கியுள்ளதாக ஆண்வர்க்கத்தால் தொடர்ந்து பரப்புரை செய்யப்படுவதைக் கவலையுடன் கீழ்க்காணும் கவிதையில் தோலுரித்துக்காட்டியுள்ள விதம் சிறப்பு எனலாம்.

இப்போதெல்லாம்

பெண்ணுக்கு

ஏக சுதந்திரம்

வீட்டிலும் உழைத்து

வேலைக்கும் சென்றுவர.

இக்கவிதை, பணிக்குச் செல்லும் பெண் வீடு-பணியிடம்-மீண்டும் வீடு என மூன்று இடங்களிலும் அல்லும்பகலும் மாடாய் உழைத்து ஓடாய்த் தேய்வதை நன்றாகச் சுட்டிக்காட்டுகிறது.தவிர,இன்றைய தமிழக அரசியல் சூழலில் வருமானம் ஒன்றையே நோக்கமாகக் கொண்டு எண்ணற்ற அரசு மதுபானக்கடைகள் பொதுவிடங்களில் மக்கள் நலனைப் புறந்தள்ளித் தாராளமாகத் திறக்கப்பட்டுள்ளன.இவற்றால் சமூகம் கொஞ்சம் கொஞ்சமாகச் சீரழிக்கப்படுவது கண்டு மனம் பொறுக்காமலும் ஆல்கஹால் அடிமைகளாக மனிதாபிமானம் கிஞ்சித்துமில்லாமல் மாறிப்போன மனிதர்களின் செய்கைகளைச் சகிக்கவியலாமலும் இக்கவிஞர்,

வாங்கிய காய்கறி

விலை கூடுதலென்று

திருப்பித் தந்தவன்

எந்த விலையும் கேட்காமல்

காசை எடுத்து நீட்டுகிறான்

டாஸ்மாக் கடையில்!

எனத் தம் ஆற்றாமையைக் கவிதையாகத் தந்துள்ளார்.மேலும்,கவிஞர்கள் தம் புதிய கருத்தை வாசிப்போர் மத்தியில் ஆழமாகப் பதியச்செய்திடும் பொருட்டு பல்வேறு தொன்மங்களைத் தம் படைப்பின்வழி புகுத்த முற்படுவர்.ஏனெனில்,தொன்மங்கள் எளிய மனிதருக்கும் எளிதில் விளங்க வல்லவை.அதுபோல்,இந்தியத் தொன்மங்களில் சிறந்ததாக அறியப்படும் சீதைத் தொன்மம் மற்றும் அதன் மாற்றம் பெண்ணியத்தின் எழுச்சி அடையாளமாகத் திகழச்செய்வதை,

எரியும் சிதையில் நின்று

சீதை அழைக்கிறாள்

………………………

இதோ என் அக்னிப்பிரவேசம்

நீயும் வா!

உன் கற்பின் பவித்ரம் காட்ட.

என்னும் கவிதையின்வழி அறியமுடியும்.சீதையின் மூலமாக ஈண்டு புதுமைப் பெண்ணின் மன உணர்வு நன்கு படம்பிடித்துக் காட்டப்பட்டுள்ளது.பாரதி உள்ளிட்ட பல்வேறு சமூகச் சீர்திருத்தவாதிகளின் உள்ளக்கிடக்கையினை இக்கவிஞரும் வெளிப்படுத்தியுள்ளார்.

ஆக,சமூக அவலங்கள்,வாழ்க்கை நடப்புகள்,பெண்ணியச் சிந்தனைகள் ஆகியவற்றின் ஊற்றுக்கண்ணாக இக்கவிஞரின் இம்முதல் தொகுப்பு விளங்குவதே இவருக்குக் கிடைத்திட்ட பெரும்வெற்றி எனலாம்.தனி மனித,சமுதாயச் சிக்கல்களைப் பாங்குடன் எடுத்துரைத்து இச்சமுதாயத்தை அவற்றிற்குத் தக்க தீர்வுகாண இக்கவிதைகள் தூண்டச்செய்வதால் அனைத்துத் தரப்பு மக்களிடமும் இத்தொகுப்பு நன்மதிப்புப் பெறும் என்பது திண்ணம்.தவிர,இந்நெல்மணிகள் தமிழ்த்தாயின் தீராப் பசியினைச் சற்றுப் போக்கியிருக்கிறது என்றுதான் கூறவேண்டும். மேலும்,இதுபோன்ற ஆக்கங்களுக்குத் தமிழ்ச்சமூகம் ஊக்கமளிப்பதை ஒரு வழக்காக்கிக் கொண்டால் தமிழ்க்கவிதை உலகு மேன்மேலும் செழுமையுறும்.

———

Series Navigationமுப்பெரும் சக்தியின் நவராத்திரி..!