மொழிபெயர்ப்பு கவிதை – சாரா டீஸ்டேல்

மொழிபெயர்ப்பு கவிதை

மூலம் : சாரா டீஸ்டேல் [ Sara Teasdale ]

தமிழில் :தி.இரா.மீனா

எனக்கு நட்சத்திரங்களைத் தெரியும்

ரோகிணி, திருவோணம் என்று

நட்சத்திரங்களை அவற்றின் பெயர் கொண்டு எனக்குத் தெரியும்

சொர்க்கத்தின் அகன்ற படிக்கட்டில்

அவைகள் போகும் பாதை எனக்குத் தெரியும்.

ஆண்களின் கண் பார்வையிலிருந்து

அவர்களின் ரகசியங்கள் எனக்குத் தெரியும்

அவர்களின் தெளிவற்ற, விசித்திர எண்ணங்கள்

சோகமும் விவேகமும் உடையவளாக என்னை உருவாக்கியிருக்கின்றன

ஆனால் உன் கண்கள் என்னை அழைப்பதாகத் தெரிந்தபோதும்–

அவை எனக்குக் கருமையாகத் தெரிகின்றன

நீ என்னைக் காதலிக்கிறாய் அல்லது

என்னைக் காதலிக்கவில்லை என்று

என்னால் சொல்லமுடியவில்லை

எனக்குப் பல விஷயங்கள் தெரியும்,

ஆனால் ஆண்டுகள் வரும் போகும்,

நீண்ட காலமாக நான் அறிந்து கொள்ள விரும்பிய

அந்த விஷயம் தெரியாமலே நான் இறந்து போகலாம்.

குற்றம்

உன் பிழைகளைச் சொல்வதற்கு அவர்கள் என்னிடம் வந்தனர்,

அவர்கள் ஒன்றொன்றாகச் சொல்லிப் பெயரிட்டனர்;

அவர்கள் சொல்லி முடித்ததும் நான் பெரிதாகச் சிரித்தேன்,

மிக முன்பாகவே அவைகள் எனக்குத் தெரியும்—

ஓ, அவைகள், வெறுமையானவை, பார்க்க மிக வெறுமையானவை

உன் பிழைகள் உன்னை அதிகம் காதலிக்கச் செய்கின்றன.

சாரா டீஸ்டேல் 1918 ல்  கவிதைக்கான புலிட்சர் விருதை முதலில் பெற்ற 

அமெரிக்கப் பெண் கவிஞர்.

Series Navigationஇலைகள்ஒரு கதை ஒரு கருத்து – ஆர்.சூடாமணியின் நாகலிங்க மரம்