“திறமான அடிப்படை வரலாறு’’ நூல் மதிப்புரை

‘‘தமிழ்ச் செம்மொழி வரலாறு’’ என்ற தலைப்பில் முனைவர் சி.சேதுராமன் உருவாக்கியுள்ள நூலானது தமதிழ்ச் செம்மொழியான திறத்தை உளிய உரைநடையால் உணர்த்தும் சிறந்த நூலாகும். இந்நூலில் 9 கட்டுரைகள் இடம்பெற்றிருக்கின்றன. 110 பக்கங்களைக் கொண்டதாக இந்நூல் அமைந்துள்ளது. செம்மொழி குறித்த அடிப்படையான தகவல்கள், அரிய செய்திகள், சான்றுகள் நூலில் நுண்மான் நுழைபுல அறிவுடன் இடம்பெற்றுள்ளன.
தமிழ் மொழி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான இலக்கியப் பராம்பரியம் உள்ள பண்டை மொழிகளுள் ஒன்றாகும். தமிழ் உலகம் தழுவி வாழும் ஒரு மொழிக் குடும்பத்தின் தாய்மொழியாகவும் விளங்குகின்றது.
தமிழ் மாநில மொழி, நாட்டு மொழி என்பதோடு மட்டுமல்லாது உலகக் குடும்பத்தின் தாய்மொழியாகவும் வளர்ந்து நிற்கின்றது. இத்தகைய சிறப்பு வாய்ந்த தமிழ் மொழி செம்மொழியாக அமைப்புற்ற வராலாறு நீண்ட நெடிய வரலாறாகும். தொன்மைச் சிறப்பு, உலகம் தழுவியமை, காலத்திற்கேற்ற வகையில் தகவமைதல் உள்ளிட்ட பல சிறப்புகள் தமிழுக்கு இருப்பினும் நீண்ட போராட்டத்திற்குப் பின்னரே தமிழ் செம்மொழியாக ஏற்றுக்கொள்ளப் பெற்றது நோக்கத்தக்கது.
தமிழுக்கென்று நீண்ட, நெடிய வரலாறும் பாரம்பரியமும் உண்டு. அந்த வகையில் தமிழ் செம்மொழியாக அமைப்புற்ற வரலாற்றை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் முனைவர் சி. சேதுராமன் அவர்கள் எழுதியிருப்பது சிறப்பிற்குரியதாகும்.

தமிழ்ச் செம்மொழி வரலாறு எனும் இந்நூலுள் ஒன்பது கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. மொழி தோன்றிய விதம், மொழியின் பயன்பாடு, மொழி நிலைகள் உள்ளிட்டவை குறித்து அழகுற ஆசிரியர் விளக்கியிருப்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
தமிழின் தொன்மைச் சிறப்பையும் அதன் வரலாற்றையும் திறம்பட கால ஓட்டத்துடன் ஆசிரியர் எடுத்துக்கூறியிருப்பது சிறப்பிற்குரியது. மேலும் செம்மொழி என்றால் என்ன என்பதற்கு பல்வேறு கருத்துக்களைத் தொகுத்தும் வகுத்தும் ஆசிரியர் தந்திருக்கின்றார். எவற்றைச் செம்மொழி இலக்கியங்கள் என்று கூறுகின்றோம் அவற்றின் தனிச் சிறப்புகள் என்ன என்பதைப் பற்றிய பல தகவல்களை ஆசிரியர் தந்திருப்பது நூலிற்கு மெருகேற்றுவதாக அமைந்துள்ளது.
செம்மொழி என்ற ஏற்பினைப் பெற எத்துணை விதமான போராட்டங்களை, எந்தெந்தக் காலங்களில் தமிழர்கள் நடத்தினர் தமிழ்ச் சங்கங்களின் முயற்சிகள், பல்கலைக் கழகங்களின் பங்கு, தமிழக அரசின் பெருமுயற்சி என ஒவ்வொரு போராட்டத்தையும் பற்றி எடுத்துக் கூறி வரலாற்றை முழுமையாக ஆதாரங்களுடன் மெய்மையாக எழுதியிருக்கும் ஆசிரியரின் முயற்சி பாராட்டுதலுக்கு உரியதாகும். நூலில் இடம்பெற்றிருக்கும் பல தரவுகள் நிரல் படி அமைந்திருப்பது, ஆசிரியரின் புலமைக்குச் சான்றாக அமைகின்றது. இந்நூல் அனைவரும் படித்துப் பயன்பெற வேண்டிய நூலாக அமைந்துள்ளது மட்டுமன்றி, பாதுகாக்கப்பட வேண்டிய நூலாகவும் அமைந்துள்ளது.

தமிழ்ச் செம்மொழிக்குரிய பண்புகளாக, 1.தொன்மை, 2.தலைமைத் தன்மை, 3.இலக்கிய வளமை எனும் மூன்று பகுப்புகளில் உள்ளீடாக இடம்பெறும் பல்வேறு அறிஙர் பெருமக்களின் கருத்துக்கள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
‘‘ஒரு மொழியின் செம்மொழித் தன்மையை அம் மொழியில் இடம்பெற்றுள்ள, ‘‘கருத்துப்பொருட்கள்(Incorporeal Objects) அதாவது இலக்கியப்படைப்புகள் இரண்டாவது காட்சிப் பொருட்கள்’ (Corporeal Objects) அவை பண்டையக் காலப் படைப்புகள் என்பவையாகும். ஒரு மொழியின் செம்மொழிச் சிறப்புகளில் தலையாய ஒரு மொழியின் செம்மொழிச் சிறப்புகளில் தலையாய சிறப்பிற்குச் சான்றாக இருப்பவை ‘கலைப்படைப்புகளே’’
எனும் செம்மொழி குறித்த சான்றுகள் அரிய முயற்சியால் கடும் உழைப்பினால் அன்பு நண்பர் சி.சேதுராமன் அவர்களால் உருவாக்கப்பட்ட இந்நூல் எல்லோருக்கும் பயன்தரும் வகையில் அமைந்தவிதம் போற்றுதற்குரியதாகும்.

நூல் : தமிழ்ச் செம்மொழி வரலாறு
ஆசிரியர்: முனைவர் சி.சேதுராமன்
பக்.. 110,
விலை ரூ.60/-
வெளியீடு: பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை.

பேரா. வீ. பாலமுருகன், தமிழாய்வுத்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.

Series Navigationநூலிழைபயணங்கள்