இரண்டு அடி கொடுத்தால் பிரச்சனை தீர்ந்துவிடும்.

author
4
0 minutes, 42 seconds Read
This entry is part 1 of 16 in the series 9 ஆகஸ்ட் 2020

கோ. மன்றவாணன்

      சிற்பத்தில் மேடு பள்ளங்கள் இல்லை என்றால் அது சிலை ஆகாது. ஓவியத்தில் வளைவு நெளிவு இல்லை என்றால் அது சித்திரம் ஆகாது. வாழ்வில் இன்ப துன்பங்கள் இல்லை என்றால் அது வாழ்க்கை ஆகாது. ஆனால் வாழ்வு முழுவதும் இன்ப மயமாகவே இருக்க வேண்டும் என்றே மனம் ஆசைப்படுகிறது.

      ஒவ்வொரு மனமும் தன்னை மட்டுமே உலகம் என்று நினைத்துக் கொள்கிறது. துயர் ஏதும் வந்துவிட்டால் அது தனக்கு மட்டுமே வந்துவிட்டதாக வருந்துகிறது. பிறரும் சிலபல நேரங்களில் துயரப் படுகிறார்கள் என்பதை மனம் ஏனோ உணர்வதே இல்லை.

      பஞ்சு மெத்தையில் புரள்வோருக்கும் பிரச்சனைகள் உண்டு. நடைபாதைப் புழுதியைப் போர்த்தியபடி, பட்டினியில் படுத்துக் கிடப்பவர்களுக்கும் பிரச்சனைகள் உண்டு. பிரச்சனை இல்லாதவர் என்று யாரேனும் இருக்கிறார் என்றால் அவர் இன்னும் பிறக்காதவரே.

      ஒரு பிரச்சனை முடிந்துவிட்டால் இன்னொரு பிரச்சனை வராது என்பது கிடையாது.     சிறிய காயம் பெரிய துன்பம். ஆறும் முன்னே அடுத்த காயம் என்பதுபோல் பிரச்சனைகள் நம்மைத் துரத்தியும் வரலாம். வந்த பிரச்சனையை ஒருவன் எவ்வாறு அணுகுகிறான். அதில் இருந்து மீள்வதற்கு என்ன வழிமுறைகளைக் கண்டு வெற்றி அடைகிறான் என்பதில்தான் வாழ்க்கையின் உயர்வு அடங்கி உள்ளது.

      பிரச்சனைகளைக் கையாளுவது எப்படி என்று பிறருக்கு நாம் ஆலோசனை சொல்ல முடியும். நமக்கே பிரச்சனை வந்தால் செய்வது அறியாது தவிப்போம். அதனால்தான் தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்றார்கள்.

      தன்னம்பிக்கை நூல்கள் தற்காலத்தில் நிறைய வெளிவருகின்றன. அவற்றை நிறைய பேர் படிக்கின்றனர். வெற்றி பெற்ற மனிதர்களை மட்டுமே எடுத்துக் காட்டுகளாகக் கூறிப் படிப்பவர்களுக்கு ஊக்கம் ஊட்டுபவையாக அந்த நூல்கள் உள்ளன. வாழ்வில் வீழ்ந்தவர்களை எடுத்துக் காட்டுகளாக அந்நூல்கள் சுட்டுவது இல்லை. வீழ்ச்சியை எழுதினால் ஊக்கக் குறைவு ஏற்படும் என்றும்-  அதைப் படிக்க யாரும் விரும்ப மாட்டார்கள் என்றும் “வாழ்வியல் கலை” எழுத்தாளர்கள் சொல்கின்றனர்.

      வெற்றி என்பது எப்படி நமக்கு ஒரு பாடமோ… தோல்வியும் நமக்கு ஒரு பாடம்தான். எதைச் செய்ய வேண்டும் என்று சொல்கிற வேளையில்… எதைச் செய்ய வேண்டாம் என்பதையும் அழுத்தமாகச் சொல்ல வேண்டும். அப்போதுதான் நாம் எந்த எந்த இடங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை அறிய முடியும்.

      அடுக்கடுக்காய்த் தோல்விகளைச் சந்தித்தவர் அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் ஆகிவிட்டார். தெருமுனையில் இட்லி சுட்டு விற்ற விதவையின் மகன் மருத்துவராகி விட்டார். மூளை வளர்ச்சி குன்றியவர் விஞ்ஞானி ஆகிவிட்டார். தேநீர் விற்றவர் நாடாளும் பிரதமர் ஆகிவிட்டார். பார்வை அற்றவர் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றுவிட்டார். விபத்தில் ஒரு காலை இழந்தவர் சிறந்த நடனமணி ஆகி அசத்துகிறார். தம்பி நீதான் நாளைய முதலமைச்சர் என்றெல்லாம் பேசி உற்சாகம் ஊட்ட முடியும். ஆனால் வெற்றி அடைவதற்காக அவர்கள் தாண்டிய நெருப்பு ஆறுகள் எத்தனை என்பதை விளக்குவதே இல்லை. அவர்கள் எப்படித் தடைகளை உடைத்து எறிந்தார்கள் என்பதை விவரிப்பதே இல்லை. எப்படிப் பிறரின் உதவிகளைப் பெற்றார்கள் என்று பேசுவதே இல்லை.

      பிரச்சனைகளைத் தாண்டாமல் எந்தச் சாதனையும் நிகழ்வது இல்லை. தடைகளைத் தகர்க்காமல் யாரும் தலைவர் ஆகிவிடுவது இல்லை. தடைகளை உடைத்த அந்தச் செயல்பாடுகளே வெற்றியின் திறவுகோல்கள். அந்தத் திறவுகோல்களை நமக்குத் தராமல், வெற்றிக் காட்சியை மட்டும் நமக்குக் காட்டி உசுப்பேற்றி விடுகிறார்கள்.

      மற்றவர்க்குப் பிரச்சனை என்றால் அதனைத் தீ்ர்ப்பதற்கு வழிசொல்லத் தெரிகிறது நமக்கு. நமது பிரச்சனையைத் தீர்ப்பதற்கு ஏன் நமக்கு வழி தெரிவது இல்லை? நமக்குப் பிரச்சனை வருகிற போது, அந்தப் பிரச்சனைக்கு உள்ளேயே வட்டமிட்டு யோசிக்கிறோம். அதை வெளியில் இருந்து பார்ப்பதில்லை. ஒரு பிரச்சனையை வெளிப்புறத்தில் இருந்து பார்த்தால்தான் அதன் முழுப்பரிமாணமும் தெரியும். பிரச்சனைக்கு உள்ளே இருந்து சிந்திக்கும் போது, அந்தப் பிரச்சனையின் மற்றொரு புறத்தை நாம் பார்க்க முடிவதில்லை. ஆனால் பிறரின் பிரச்சனைகளை வெளியில் இருந்து பார்ப்பதால் அதற்கான தீர்முறைகளைக் காண முடிகின்றன. மேலும் நம்முடைய பிரச்சனையாக இருக்கையில் நாம் அறிவு வசப்படுவதைக் காட்டிலும் மிகுதியாக உணர்ச்சி வசப்படுகிறோம். அடுத்தவர் பிரச்சனையை நாம் அறிவு வசப்பட்டே அணுகுகிறோம். அதனால் தீர்வு காண முடிகிறது.

      பொதுவாக…

      நமக்கு ஏற்படும் 70 விழுக்காடு பிரச்சனைகள் சாதாரணமானவை. அவை கால ஓட்டத்தில் கரைந்து போய்விடும். எந்த முயற்சியும் இன்றிச் சில பிரச்சனைகள் தாமாகவே சரியாகிவிடும். உறங்கி எழுந்தால் நேற்றைய பிரச்சனை இன்று முடிந்து போயிருக்கும்.

      20 விழுக்காடு பிரச்சனைகளைக் கொஞ்சம் முயற்சி செய்தால் நாமே தீர்த்துவிடலாம்.

      அடுத்துவரும் 5 விழுக்காடு பிரச்சனைகளைத் தீர்க்க நாம் கடுமையாகப் பாடுபட வேண்டும். பிறரின் உதவிகளையும் பெற வேண்டும்.  

      அதற்கு அடுத்துள்ள 5 விழுக்காடு பிரச்சனைகளை நம் சக்திக்கு உட்பட்டு… நம் சூழலுக்கு ஆட்பட்டு எவ்வளவு முயன்றாலும் எத்தனை பேர் உதவி புரிந்தாலும் தீர்க்கவே முடியாமல் போகலாம். அந்த நேரத்தில் மாற்ற முடியாததை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை நாம் வளர்த்துக் கொள்ளத்தான் வேண்டும்.

      ஆக… ஒரு பிரச்சனை வரும்போது அதைத் தீர்க்க முயலாவிட்டால் அது மேலும் நூறு பிரச்சனைகளை உடன் அழைத்து வந்து உங்களைச் சுற்றி வளைத்து முற்றுகைப் போராட்டம் நடத்தும். எனவே பிரச்சனையை அந்தந்த நேரத்திலேயே எதிர்கொள்ளுங்கள். எதிர்த்து வெல்லுங்கள். கால ஓட்டத்தில் கரைந்துவிடும் என்று காத்திருக்க வேண்டாம்.

      பிரச்சனைகளைத் தீர்ப்பது எப்படி? என்ற பொருளில் ஏராளமான புத்தகங்கள் வருகின்றன. பல நூற்றுக் கணக்கான பக்கங்களில் பிரச்சனைகளைத் தீர்ப்பது எப்படி என்று எழுதி எழுதிக் குவிக்கின்றனர். அவ்வளவு பக்கங்களையும் படிப்பதற்கு நமக்குப் பொறுமை இல்லாமல் போகலாம். வாழ்வியல் நுட்பங்களை இரண்டே அடிகளில் சொல்லித் தரும் வள்ளுவரிடத்தில் பிரச்சனையைத் தீர்ப்பது எப்படி என்று ஒரு கேள்வி கேட்டேன்.

      அவர் சொன்ன குறள் :

      நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

      வாய்நாடி வாய்ப்பச் செயல்

இந்தக் குறள், நோய் பற்றியதுதானே. பிரச்சனையைப் பற்றியது இல்லையே என நீங்கள் என்னை மடக்கலாம். உங்களிடத்தில் ஒரு வேண்டுகோள். நோய் என்ற சொல்லின் இடத்தில் பிரச்சனை என்ற சொல்லை வைத்துப் பாருங்கள். நோயும் ஒரு பிரச்சனைதானே!

பிரச்சனை நாடி –

      என்ன பிரச்சனை என்றே தெரியாமல் பலர் அல்லாடுவார்கள். பிரச்சனை என்ன என்று தெரியாவிட்டால் தீர்வு காண முடியாது. ஆகவே பிரச்சனை என்ன என்று முதலில் கண்டுபிடியுங்கள்.

பிரச்சனை முதல் நாடி –

      இந்தப் பிரச்சனை ஏன் ஏற்பட்டது? எவ்வாறு ஏற்பட்டது? என்று கேள்வி கேட்டுக் காரணங்களைக் கண்டு பிடியுங்கள். ஒரு காரணம் இருக்கலாம். பல காரணங்களும் இருக்கலாம். ஆக, பிரச்சனை உருவானதற்கான மூலத்தைக் கண்டுபிடித்து விட்டீர்கள் என்றால் குறளின் அடுத்த இரு சீர்களைப் படியுங்கள்.

அதுதணிக்கும் வாய்நாடி-

      பிரச்சனை உண்டாவதற்கான மூலங்களையும் காரணங்களையும் கண்டுபிடித்துவிட்டால் அவற்றைத் தணிக்கும் வழிமுறைகள்… செயல்முறைகள் என்ன என்ன உள்ளன என்று அமைதியாக ஆராய்ந்து அறியுங்கள்.

வாய்ப்ப-

      பிரச்சனையின் மூலத்தைத் தீர்க்கும் வழிமுறைகள் பல இருக்கலாம். அவற்றுள் எந்த முறை நமக்கு ஏற்றது? எந்த முறை பெரிதும் பயன் அளிக்கக் கூடியது என்று தீர்மானியுங்கள். தீர்மானிப்பது என்பது… முடிவு எடுப்பது என்பது… மிகச் சரியாக இருக்க வேண்டும். பலரும் தவறும் இடம் இதுதான். சரி… தீர்மானித்து விட்டீர்களா? குறளின் அடுத்த சீரைப் பாருங்கள். அதுதான் முக்கியம்.

செயல்-

      நீங்கள் தீர்மானித்த வழிமுறையைக் கவனமாகச் செயல்படுத்துங்கள். மேலே சொன்ன செயல்படிகளில் தேவை ஏற்படின் தகுந்தவர்களின் உதவிகளைக் கேட்டுப் பெறுவதும் நல்லது. இவ்வாறு செயல்படுத்தும் போது வெற்றி கிடைக்கலாம். ஆனால் மிகவும் சிற்சில வேளைகளில் வெற்றி கிடைக்காமலும் போகலாம். அந்தத் தறுவாயில் அதை மறுஆய்வு செய்யுங்கள். இன்னொரு கதவு திறக்கும்.

ஒரு கருத்து :

      பிரச்சனைகளைத் தீர்ப்பது எப்படி என்று ஆயிரம் ஆயிரம் புத்தகங்கள் வந்திருக்கலாம். பல்லாயிரம் பக்கங்களில் வழிமுறைகளைச் சொல்லி இருக்கலாம். ஆனால் இந்த இரண்டடிக் குறளைத் தாண்டி எதுவும் அந்தப் புத்தகங்களில் இருக்கப் போவதில்லை.

Series Navigationஅணுயுகப் பிரளய அரங்கேற்றம் !
author

Similar Posts

4 Comments

  1. Avatar
    வெ. நீலகண்டன் says:

    கவிஞர் அறிவுமதி கவிதை

    இரண்டு அடி கொடுத்தால்தான்
    திருந்துவாய்!
    வாங்கிக்கொள்
    வள்ளுவனிடம்.

  2. Avatar
    BSV says:

    நோய் நாடி…குறளில் அப்படியொன்றும் புதிதாக எதையுமே சொல்லவில்லை. ஒரு மருத்துவர் செய்வதுதான் அது. எல்லா மருத்துவர்களுமே இருவகை சிகிச்சை செய்வார்கள். 1. நோய் மூலமெது என்று கண்டு பிடித்து அதை ஒரேயடியாக அழிக்கும் சிகிச்சை 2. நோயில் தற்போதையை தாக்கங்களென்ன‌ எனத்தெரிந்து (இஃது இலகு. நோயாளியே சொல்வார். மருத்துவரும் தெரிய முடியும்) அவற்றைக் குறைக்கும் சிகிச்சை. 2வதுக்கு முதலில் சிகிச்சை அளித்து அதன் தாக்கத்தை தணித்துவிட்டு பின்னர் மூலத்தை ஆராய்ந்து அதைத் தாக்கி நிரந்தர பலனைத்தரும் சிகிச்சை அளிப்பார்கள். (ஆபரேசனுக்கு முன்னால் மயக்க ஊசி போடுவது போல. ஆனால் மயக்க ஊசியே நிரந்தர தீர்வு அன்று) சில வியாதிகள் (காச நோய்) போன்று அதன் தற்போதையை தாக்கத்தை ஒன்றும் செய்ய முடியாது. அதன் மூலத்தை (காச நோய் கிருமி) அழிக்கும் மாத்திரைகளைத் தருவார்கள். தொடர்ந்து 6 மாதங்கள் அல்லது 9 மாதங்கள் சாப்பிட்டுவந்தால், கிருமிகள் ஒரேயடியாக அழிக்கப்பட்டு நிரந்தர குணம் கிடைக்கும். காச நோயும் குட்ட நோயும் குணப்படுத்த வல்ல வியாதிகளே. வள்ளுவருக்கு இவை தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. அவர் காலம் அப்படி. நோய் மூலம், நோயில் தற்போதைய தாக்கம் – இரண்டுமே தனித்தனியாக சிகிச்சைக்குள்ளாக்கப்பட வேண்டியவை. தற்போதைய தாக்கத்தை சில வியாதிகளில் ஒன்று செய்ய‌ முடியாத நேரத்தில் மூலத்தை மட்டுமே நாடி சிகிச்சை. சிலவியாதிகள் (எய்ட்ஸ், க்ரோஹன் போன்றவை) மூலத்தையும் தற்போதையை தாக்கத்தையும் ஒன்றும் செய்ய முடியாது. கொஞ்சம் தற்காலிகமாக தற்போதைய வலியைக் குறைக்கலாம். அவ்வளவுதான்). இவை இக்குறளில் சொல்லப்படவில்லையே! இக்குறள் வைக்கப்பட்ட அதிகாரம் மருந்து, சிகிச்சை பற்றியே. 10ம் அவை பற்றித்தான். இதை சமூகப்பிரச்சினைக்கும் வைத்தும் பார்க்கலாமென்று ஒரு சில உரையாசிரியர்கள் (கருநாநிதி, சாலமன் பாப்பையா) மட்டுமே சொன்னார்கள்.

  3. Avatar
    BSV says:

    நான் எழுதியதையே குறள் சொல்கிறது என்பது என் கருத்து. இக்குறளுக்கான தமிழ் உரைகள் அனைத்துமே (பரிமேலழகர் தொடங்கி, பாப்பையா வரை) இப்படி நோக்கவே இல்லை. ஆனால் ஆங்கில உரை அருமை. ஜி யு போப்பால் எழுதப்பட்ட உரை நமக்கு கிடைக்கிறது. அவர் சொல்வதாவது.
    English Couplet 948:

    Disease, its cause, what may abate the ill:
    Let leech examine these, then use his skill.

    Couplet Explanation:

    Let the physician examine deeply the (nature of the) disease, its cause and its method of cure and treat it faithfully according to (medical rule).

    1) The cause of the disease 2) what may abate the ill என்று பிரிக்கிறார். Abate என்றால் நோய் உருவாக்கும் வலியைப் படிப்படியாகக் குறைப்பது. நிரந்தர குணம் என்று பொருள் இல்லை. வலி என்பது தற்போது உணரப்படுவது. மூலம் (cause) எனபதற்கு ‘தற்போது’ என்ற குணமில்லை. எப்போது உருவானது? யாரிடமிருந்து? எப்படி? என்றெல்லாம் நோயாளிக்கே தெரிவதில்லை. மருத்துவர் ஊகம்தான் செய்ய முடியும். Asymptomatic COVID 19 எப்படி வருகிறது என்று தெரியாது.

    போப் சொல்வதாவது: மருத்துவர் நோயின் மூலக்காரணம் ஆராயந்து கண்டுபிடித்துவிட வேண்டும். அதேசமயம், நோயுருவாக்கிக் கொண்டிருக்கும் தற்போதைய வலிகளையும் தெரிந்து அவற்றைக் குறைக்க (abate என்றார்; ஏனென்றால் மூலத்தை அழிக்காமல் வலியைக் குறைக்கலாமே தவிர நிரந்தரமாக நீக்க முடியாது). இவையிரண்டையும் தன் மருத்துவ அறிவால் சிகிச்சை தருவதே (then use his skill) மருத்துவர் செய்யவேண்டியது.

  4. Avatar
    jananesan says:

    மன்றவாணன் அவர்களுக்கு வாழ்த்துகள். ஒண்ணேமுக்காலடியில் பிரச்சினை பாம்பை அடித்து தூர எறிந்துவிட்டாரே.பிரச்சினைக்கு வெளியே வந்து யோசிக்கப் பழகவேண்டும் என்பது மிக முக்கியம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *