கவிஞர் தேவதச்சனுக்கு விளக்கு விருது

author
0 minutes, 0 seconds Read
This entry is part 17 of 31 in the series 5 பிப்ரவரி 2012

சிபிச்செல்வன்

இந்த ஆண்டிற்கான விளக்கு விருது தேவதச்சனுக்கு வழங்கும் விழா மதுரையில் ஜனவரி 28,2012 காலை 10,30 மணியளவில் ஓட்டல் ராம் நிவாஸில் நடைபெற்றது.

விளக்கு விருது தேர்வு குழு சார்பில் சிபிச்செல்வன், விழாவில் சிறப்பரையாற்ற எஸ்.ராமகிருஷ்ணன்,விழா ஒருங்கிணைப்பாளர் வெளி ரங்கராஜன் ஆகியோருக்கு நடுவில் விருது பெறும் கவிஞர் தேவதச்சன் மேடையில் அமர்ந்திருக்க பார்வையாளர்கள் அவர்களைச் சுற்றிலும் வட்டமாக அமர்ந்தனர்.
முதலில் வெளி ரங்கராஜன் விளக்கு விருது குறித்தும், கடந்த பதினைந்து ஆண்டுகளாக விருது பெற்றவர்களைப் பற்றியும் பேசினார் .

சி.மணி,ஞானக்கூத்தன்,தேவதேவன்,வைத்திஸ்வரன்,விக்கிரமாத்தியன்,அம்பை,திலீப்குமார்,ஞானி. ஆகியோர் இதற்கு முந்தைய ஆண்டுகளில் விளக்கு விருது பெற்றவர்கள். தேவதச்சனுக்கு மூத்த கவிஞர் ந.ஜெயபாஸ்கரன் விளக்கு விருது வழங்கினார்.

சிறப்புரையாற்றிய எஸ்.ராமகிருஷ்ணன் தனக்கு தேவதச்சன் ஒரு மானசீக குரு எனத் தொடங்கி அவரின் பல கவிதைகளை வாசித்து அவற்றின் நுட்பங்களை விளக்கி பேசினார்..

கவிஞர் ஆனந்த் ,தேவதச்சனுடன் தன் முதல் கவிதை தொகுப்பான அவரவர் கை மணல் வெளியிட்டதையும், அவருக்கும் தேவதச்சனுக்கும் உள்ள உறவையும் , அவர் கவிதைகள் குறித்தும் உரையாற்றினார்.அவரைத் தொடர்ந்து கவிஞர் .ஷா அ., யுவன் ஆகியோர் பேசினர்.

இவர்களைத் தொடர்ந்து தமிழகம் முழுவதிலிருந்தும் விழாவில் பங்கேற்பதற்காக வந்திருந்த கவிஞர்கள் பேசினார்கள். கவிஞர் கலாப்ரியா,கோணங்கி,சோ.தர்மன்,கடற்கரய்,இசை,இளங்கோ கிருஷ்ணன்,சங்கர ராம சுப்பிரமணியன்,நிலா ரசிகன்,சமயவேல்,சுரேஷ் குமார் இந்திரஜித் ஆகியோர் தங்கள் கருத்தையும் தேவதச்சன் கவிதைகளோடு தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் பகிர்ந்த கொண்டார்கள்.

நீண்ட கட்டுரையுடன் தனது வாசிப்பை தொடங்கி வைத்தவர் இளங்கவிஞர் நேசன்.இறுதியாக விரிவாக பேசி முடித்தவர் சுந்தர் காளி. அவரின் உரையில் தேவதச்சன் கவிதைகளில் பழங்கவிதைகளின் தொடர்ச்சியைக் காணலாம் என்பதற்காக ஒரு சில உதாரணங்களை எடுத்துக் காட்டினார்.

சிபிச்செல்வன் தனது உரையில் விளக்கு விருதிற்கான தேர்வாளரைத் தேர்ந்தெடுப்பது படைப்பாளிகள் ஒரு நல்ல படைப்பை உருவாக்குவது போன்ற சவாலான பணி என்றார்..தமிழகத்தில் இன்று விருதுகள் தேர்வு குறித்தும் , அதில் இருக்கும் அரசியல் குறித்தும் தொடர்ந்து விமர்சனங்கள் கடுமையாக இருப்பதையும் சுட்டிக்காட்டினார்.

அப்படி எந்த விதத்திலும் விளக்கு விருது விமர்சனங்களுக்கு ஆட்படாமல் சரியான தேர்வாளைரை தேர்ந்தெடுக்கும் மரபைக் காக்கும் சவால் நடுவர் குழு முன் தொடர்ந்து இருப்பதையும் அதில் தங்கள் தேர்வு சரியானது தான் என்பதற்கான சான்றாக விழாவில் பங்கேற்று பேசிய ஒவ்வொரு கவிஞரும்,தேவதச்சனுக்கு வழங்கப்பட்ட விளக்கு விருது தங்களுக்கே வழங்கப்பட்டதாக நெகிழ்ந்து பேசியது தங்களின் தேர்வு சரியானதுதான் என்பதையும் விளக்கு விருதின் மரபைக் காப்பாற்றிய பெருமை ஏற்பட்டதாகவும் கூறினார்.
இளங்கவிஞர்கள்,மூத்த கவிஞர்கள், எனப் பல தரப்பினர்களும் தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலிருந்தும் வந்திருப்பதையும் தேவதச்சனுடன் அவர்களுக்கு இருக்கும் உறவை அவர்கள் ஒவ்வொருவரும் விளக்கியதையும் பார்க்கும்போது சுந்தர ராமசாமிக்கு அடுத்ததாக தேவதச்சனுக்குதான் அடுத்த தலைமுறையினருடனும் நல்ல உறவு இருப்பதைக் காண முடிகிறது.

மரபுக்கவிதையுடன் தேவதச்சன் கவிதைகளை பலரும் அடையாளம் காட்டி பேசினார்கள், ஆனால் சமகால உலக கவிதைகளோடு தேவதச்சனுக்கு நல்ல பரிச்சயம் இருப்பதையும், தமிழ் கவிதை இயல் என்பது குறித்தும் பொயட்ரி என்ஜினியரிங் குறித்தும் தேவதச்சனின் உரையாடல்கள் இருப்பதையும் தன் உரையில் சுட்டிக்காட்டினார் சிபிச்செல்வன்.

ஏற்புரையில் பேசிய தேவதச்சன் , கவிதையின் பேசப்படாத பக்கங்களை பேச வேண்டும் என மிகச் சுருக்கமாக தன் உரையை முடித்தார். அந்த அதிர்வுகளின் அலைகளோடு கூட்டம் நிறைவு பெற்றது

சிபிச்செல்வன்,வெளி ரங்கராஜன்,தேவதச்சன்,எஸ்.ராமகிரஷ்ணன்

விளக்கு விருது தேவதச்சனுக்கு வழங்கும் நிகழ்வு
படத்தில் சிபிச்செல்வன்,வெளி ரங்கராஜன்,தேவதச்சன்,எஸ்.ராமகிருஷ்ணன்

விளக்கு விருது தேவதச்சனுக்கு வழங்கும் கூட்டத்தில் பங்கேற்றவர்களில் ஒரு பகுதி.

Series Navigationவருத்தப்பட்டு பாரம் சுமப்போரே…புகுஷிமா விபத்துக்குப் பிறகு அணுமின் நிலையங்களின் எதிர்கால இயக்கம் பற்றி உலக நாடுகளின் தீர்மானங்கள் -1
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *