தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

This entry is part 1 of 8 in the series 31 ஜூலை 2022

 

 

 

 

பாச்சுடர் வளவ. துரையன்

 

 

களம் காட்டல்

                                    

 

கூழுண்டுக் களித்து வாழ்த்துப் பாடிய பேய்கள், சிவபெருமானுக்கும் உமையம்மைக்கும் தக்கனின் வேள்விக் களத்தை, வீரபத்திரர் போர்க்களத்தைக் காட்டியதைக் கூறும் இது.

=====================================================================================

      ஒரு மருங்குடைய மூலநாயகியொடு ஒற்றை வெள்ளைவிடை ஊர்தி மேல்

      இருமருங்கும் மறைதொழ எழுந்தருளி இராசராசபுரி ஈசரே.          778

 

[ஒரு மருங்கு=ஒரு பக்கம்; மூலநாயகி=ஆதி சக்தி; வெள்ளை விடை=வெள்ளை இடபம்; ஊர்தி=வாகனம்; இருமருங்கும்=இரு பக்கமும்; மறை=வேதம்; இராசராசபுரி=இன்றைய தாராசுரம்]

===========================================================================

      யாக நாயகரொடு ஏனை வானவர் இறந்து பேயொடு பிறந்தவ

      றாக நாயகி தனக்கு உணர்த்திவர அன்னை முன்னை முனிவு ஆறியே. 779

 

[யாகநாயகன்=வேள்வித் தலைவன்; முனிவு=கோபம்; ஆறியே=தணிந்து]

 

பிரமனும் மற்ற தேவர்களும் இறந்து பிணமாகக் கிடப்பதை பெருமான் உமையம்மைக்குக் காட்ட, அம்மை தாம் முன்னர் கொண்டிருந்த கோபம் தணியப் பெற்றார்.

=====================================================================================

      நெடுநிலம் அளந்து கொள்ள வளர்ந்து தாள்நீட்டு நாளில்

      இடுநிழல் போல நின்று இப்பெரும் பேயைப் பாராய்.                    780

 

[நெடுநிலம்=பரந்த பூமி; தாள்=கால்; நிழல்=சாயல்]

 

முன்னொருகாலத்தில் இவ்வுலகை அளக்கக் காலை நீட்டிய இப்பேய், உலகளந்த பேருருவம் இன்றி நிழலாய்ப் பேயாய் வந்து நிற்பதைப்பார்.

=====================================================================================           

    

       பொன்முகம் ஒன்று பண்டுபோனது புகுதப் பொன்றித்

      தன்முகம் ஐந்தும் பெற்ற சதுமுகப் பேயைப் பாராய்.                  781

 

[பொன்=ஒளி; பண்டு=முன்பு; பொன்ற=இழக்க; புகுத=சேர; சதுமுகன்=பிரமன்]

 

பொன்னான ஒரு முகம் முன்னர் குறைந்து போக. மீண்டும் இழந்த முகத்தோடு ஐந்து முகம் கொண்டு நிற்கிற இது நான்முகன் எனும் பிரமப்பேய். பார்த்துக் கொள்.

=====================================================================================

      அங்கு நின்று ஏவல் செய்யும் அமரரே அலகையாக

      இங்கு நின்று அரசு செய்யும் இந்திரப் பேயைப் பாராய்.                782

 

[ ஏவல்=ஏவிய பணி; அமரர்=தேவர்; அலகை=பேய்]

 

இங்கே பார்; வானுலகத்தில் கட்டளைகளை எல்லாம் நிறைவேற்றிய தேவர்கள் எல்லாம் பேயாகி இங்கு இந்திரனுக்கு ஏவல் செய்ய வந்துள்ளனர்.

=====================================================================================

      விடுபுகை உயிரானது ஏங்கி வெங்கனல் உயிர்ப்பு

      படுபுகை வடிவம் கொண்ட பாங்கப் பேயை பாராய்.                 783

 

[உயிராது=வெளிப்படாது; வெங்கனல்=கோப நெருப்பு; உயிர்ப்ப=பொசுக்க]

 

நெருப்புப் புகையை வெளியிடும் தன் இயல்பு அழிந்து அதனால் வருந்தி, வீரபத்திரரின் கோபக்கனல் பற்றி எரிக்கத் தானே புகை வடிவாக மாறிப் போன அக்கினிப் பேய் இது. பார்.

====================================================================================

விசும்பினும் நிலத்தினும் உள்ள உயிர்பண்டு விழுங்கி இன்று

பகந்தசை மிசையா நின்ற தென்திசைப் பேயைப் பாராய்.                784

 

[விசும்பு=ஆகாயம்; தசை=ஊன்; மிசைதல்=உண்ணுதல்]

 

ஆகாயத்திலும் பூமியிலும் உள்ள உயிர்களை எல்லாம் உண்டு விழுங்கிய தென் திசைக்குரிய யமப்பேய் இதுவாகும், இப்போது அதற்கு வழியில்லாமல் போனதால் பச்சை மாமிசத்தைத் தின்று கொண்டிருப்பதைப் பார்.

===================================================================================

சாயை மேற்கொண்டு நின்ற சாயையே போலஇன்று

பேயை மேற்கொண்டு நின்றது ஒரு கரும்பேயைப் பார்.                  785

 

[சாயை=புகழ்; மேற்கொண்டு=வாகனமாகக் கொண்டு]

 

பேயையே வாகனமாகக் கொண்டு இருப்பது இந்த நிருதிப் பேய். தென்மேற்குத் திசைப்பாலகன் நிழல் உருவானவன்; இவன் வாகனம் பேய்; அந்தக் கரும்பேய் நிற்கிறது பார்.

=====================================================================================

 

 

    

  தன்அகத்து அங்கிஇங்கு வயிற்றுத் தீயாகத் தூங்கும்

  பன்னகப் பாசம் வீசும் குடதிசைப் பேயைப் பாராய்.                     786

 

[அங்கி=நெருப்பு; பன்னகம்=பாம்பு; பாசம்=கயிறு; குட்திசை=மேற்குத் திசை]

 

வடமுகாக்கினியைத் தன்னுள்ளே கொண்டவன் வருணன். தன் வயிற்றுத் பசித் தீயாக மாறிய பாம்பை பாசப்படையாகக் கொண்ட மேற்குத் திசை அதிபதியான வருணப் பேயைப் பார்.

=====================================================================================

      வாயுவே ஆயபண்டை வடிவுஅற மாய்ந்து பெற்ற

      ஆயுவே வடிமான அழிபசிப் பேயைப் பாராய்.                        787

 

[வாயு=காற்று; மாய்ந்து-இகழ்ந்து; ஆயு=ஆயுள்; அழி=மிகுந்த]

 

காற்று எனும் தன் பெயரை இழந்து, வாழ்நாளாகிய பொழுதையே உருவடிவாகக் கொண்டு தீராப் பசியோடு திரியும் வாயுப் பேயைப் பார்.

=====================================================================================

            வளரிளம் கொங்கை மங்கை நங்கையர் வனப்புக்கேற்ற

            கிளரொளி வனப்புத் தீர்ந்த கெடுமதிப் பேயைப் பாராய்.      788   

 

[வனப்பு=அழகு; கிளரொளி=அழகு மிளிரும்; வனப்புத் தீர்ந்த=அழகு கெட்ட; கெடுமதி=தீயபுத்தி; மதி=சந்திரன்]

 

வளரும் இள மார்புகளைக் கொண்ட பெண்கள் அழகுக்குடையவனாகக் கருதும் ரோகிணிப் பெண் இட்ட சாபத்தால் அழகை இழந்து ஒளி மங்கிக் கிடக்கும் கெடுமதி கொண்ட சந்திரப்பேயைப் பார்.

            கருத்துப்பேய் ஏற ஏறும் கழிபசி உழப்பது ஓர்முத்

            தெருத்துப்பேய் ஏறி நின்ற இப்பெரும் பேயப் பாராய்            789

 

[கருத்து=அகங்காரம்; ஏற=மிக; அழிபசி=மிகுந்த பசி; உழப்பது= வருத்தமடைந்தது; முத்தெடுத்து=[முது எடுத்து] கிழட்டுக்காளை]

 

அகங்காரம் எனும் பேய் பிடித்ததால் மிகுந்த வயிற்றுப் பசியால் வருந்தி ஒரு கிழட்டுக் காளை மாட்டின் மீதேறித் திருயும் இது ஈசானப் பேய். இதையும் பாராய்

=================================================================================

            விடைவலன் ஏந்திவந்து வெண்பிறை மலைந்து சூலப்

            படைவலன் ஏந்தமாய்ந்த பதினொரு பேயைப் பாராய்.           790

 

[விடை=காளை; வலன்=வலது; மல்;இந்து=அணிந்து; சூலப்படை=சூலாயுதம்; மாய்ந்து=மடிந்த; பதினொரு=ஏகதசம்; [ஏகம்=ஒன்று+தசம்=பத்து;ஆக ஏகாதசம்=பதினொன்று]

 

காளைக்கொடி வலப்புறமாக வெண்பிறை அணிந்து கொண்டு, சூலாயுதத்தை வலக்கையில் ஏந்திப் போரிட வீரபத்திரர் முன்வந்து மடிந்து போன ஏகாதச ருத்திரர் என்னும் பதினொரு பேய்களைப் பாராய்.

=====================================================================================

              

            ஓர் இருசுடரும் அன்ன யோகமே போகப் போகா

            ஈஇரு மறையும் தேடும் எண்பெரும் பேயைப் பாராய்.           791

 

[இரு சுடர்=சூரியன், சந்திரன்; மறை=வேதம்]

 

சந்திர கலை சூரிய கலை வழியாகச் சித்தி பெற்ற இவர்கள் அழியா உடல் பெற்றவர்கள். நன்மறைகள் தேடும் இவர்களையும் பார்.

=====================================================================================

            ஆயுநூல் ஆயும் பண்டென்று அரும்பசி நோய்க்குத் தங்கள்

            பேயும்நூல் கேட்கநின்ற மருத்துவப் பேயைப் பாராய்.          792

 

[ஆயும் நூல்=மருத்துவ சாஸ்திரம்]

 

மருத்துவ நூல்களை எப்போதும் ஆய்ந்து கொண்டிருக்கின்ற பேய்கள் என்று சொல்லிப் பேய்கள் எல்லாம் தங்களின் பசி நோய்க்கு மருந்து கேட்டு வந்திருக்கிற இந்த மருத்துவப் பேய்களைப் பார்.

=====================================================================================

            அணங்கு நீவணங்கா யாகஅன்று இகழ்ந்ததற்குத் தானே

            வணங்கியே நன்று நிற்கும் மாமடிப் பேயைப் பாராய்.           793

 

[அணங்கு =உமையம்மை; மாமடி=மாமனார் தக்கன்]

 

பெண்ணே! நீயும் நானும் தன்னை வணங்கவில்லை என்பதற்காக இகழ்ந்து பேசி, அதன் பொருட்டாகவே ஒரு யாகத்தைத் தொடங்கி நம்மை இழிவுபடுத்த நினைத்து ஏமாந்து உயிரையும் விட்டு ஒரு பேயுருவில் நம்மை வணங்கி நிற்கும் என் மாமன் பேயைப் பார்த்தாயா?

=====================================================================================

            அவ்வகை இறைவர் காட்ட அமரர்மேல் முனிவுதீர்ந்து

            மைவகை நெறிந்த கூந்தல் மலைமகள் அருளிச் செய்வாள்.     794

 

[முனிவு=கோபம்; மைவகை=கருஞ்சாந்துக்கலவை; நெறிந்த=மிகுந்த; மலைமகள்=உமையம்மை]

 

இவ்வாறு இறைவன் காட்ட, தேவர் மீது தாம் கொண்ட கோபம் தீர்ந்து கருநிறக் கூந்தல் கொண்ட மலைமகள் பேசலானார்.

=====================================================================================

நின்முதலாகத் தோன்றும் நெடியமால் முதலாய் உள்ளோர்                  என்முதலாக மாய்வதற்கு உறுவதுஎன்? இறைவா என்றே.           795

 

”தங்களிடத்திலிருந்து தோன்றிய திருமால் முதலானவர்களெல்லாம், என் ஒருத்தி பொருட்டாக மாய்வதில் ஏதாவது நியாயம் இருக்க முடியுமா? அப்பழிக்கு நான் ஆளாகலாமா?”

===============================================================================

                          

            தணிந்தருள் இறைவா! யானும் தணிந்தனள் என்று தாளில்

            பணிந்தனள் இறைவி நிற்கப் பரனும் புன்முறுவல் செய்தே. 796

 

 

[தணிந்தருள்=தணித்துக் கொள்க; பரன்=பரமசிவன்]

 

“இறைவா! சினம் தணிந்து அருள் செய்க. நானும் கோபம் தணிந்தவள் ஆகிவிட்டேன்” எனக் கூறி இறைவனைப் பணிந்து வேண்டப் பரமனும் புன்னகை செய்து,

===============================================================================

            மிக்கன பேசி தம்மை வேள்வியில் இகழ்ச்சி செய்த

            தக்கனை முதிய மோத்தைத் தலைபெற அருளிச் செய்தே  797

 

[மிக்கன=தேவையற்ற முதிய மோத்தை= கிழ ஆடு]

 

 இறைவன், தம்மை இகழ்ந்து வீண்வார்த்தைகள் பேசி  யாகத்தில் இகழ்ச்சி செய்த தக்கன் உடலில் கிழ ஆட்டுத் தலையை வெட்டிக் கொண்டு வந்து அவன் உடலில் பொருத்தி அவனை உயிர் பெறச் செய்தார்.

            ஒழிந்த வானவர் கட்கெல்லாம் உயிரும் தம்உடம்பும் நல்கி

            அழிந்த வானுலகும் தங்கள் பதங்களும் அளிப்பக் கொண்டே.  798

 

[ஒழிந்த=மற்ற; நல்கி=அருளி; பதம்=பதவி; ஆட்சி]

 

மற்றைய தேவர்க்கெல்லாம் அவர்களின் உயிரும் முன்னம் இருந்த உடலும் மீண்டும் பெற அருளிச்செய்து, அவர்களுக்கு முன்னர் இருந்த வானுலகும், பதவிகளும் பெற்று உயரச் செய்தார்.

      குலம்கொண்ட அமரர் எல்லாம் குனிசிலை வீரன்தன்னை

      வலம் கொண்டு விடையும் கொண்டு போயினர் வாழ்த்தி வாழ்த்தி.     799

 

[குலம்=கூட்டம்; குனிசிலை மலையை வில்லாக வளைத்த வீரன்]

 

உயிர் பெற்றுக் கூட்டமாக எழுந்த தேவர்கள் எல்லாரும் வீரபத்திரர், உமையம்மை ஆகியோருடன் காளையை வாகனமாகக் கொண்டு நின்ற விரிசடைப் பெருமானை வலமாக வந்து வணங்கி, வாழ்த்திப் போற்றித் துதித்து விடை பெற்றனர்.

 

 

 

Series Navigationசந்துரு….
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *