பாக்தாதில் இரு நாட்கள் (பிப்ரவரி 02 & 03 , 2015)

author
2
0 minutes, 5 seconds Read
This entry is part 6 of 24 in the series 8 பெப்ருவரி 2015

 ஜெயக்குமார்
கடந்த இரு தினங்களாக பாக்தாதிற்கு அலுவலக வேலையாகச் சென்றிருந்தேன். வழக்கமான பாக்தாத்தான் என்றாலும் இப்போது போலிஸ் மற்றும் மிலிட்டரியின் கெடுபிடிகள் அதிகமாயிருக்கிறது எப்போதும் ஏதேனும் ஒரு மிலிட்டரி வாகனம் சைரனுடன் வழிவிடச்சொல்லி கேட்டுக்கொண்டே செல்கிறது. வாகனங்கள் பெருத்துவிட்டதால் சாலையெங்கும் வாகனங்கள் மட்டுமே. 2 கிலோமீட்டர்களைக் கடக்க 45 நிமிடங்களாகிறது, காலைவேலைகளில். மதியம் 30 நிமிடங்கள். அவ்வளவுதான் வித்தியாசம்.

20150204_161305சீனப்பொருட்கள் கிட்டத்தட்ட மலைபோல குவிந்திருக்கின்றன. பல் விளக்கும் பிரஷ்ஷிலிருந்து எல் ஈ டி டிவிக்கள் வரை அவர்களின் ஆதிக்கமே. இத்தனைக்கும் விலை ஒன்றும் குறைவில்லை. சாம்சங்கிற்கும், சீன எல்.ஈ டிக்கும் வித்தியாசம் வெறும் 150 டாலர்கள்தான்.

இப்போது அரசின் பார்வை பெரிய காண்ட்ராக்டர்கள் (கம்பெனிகள்) மீது திரும்பியிருக்கிறது. முதலில் வேலையை சுத்தமாக முடிப்பதில்லை, காலம் தாழ்த்துகிறார்கள் என முனங்கிக்கொண்டிருந்தவர்கள் இப்போது தமதிக்கும் நாட்களுக்கு அபராதம் விதித்திருக்கிறார்கள். மிக மோசமாய் தாமதம் செய்த கம்பெனிகளை ஓராண்டுக்கு டெண்டர்களில் பங்கெடுப்பதிலிருந்து விலக்கி வைத்திருக்கிறார்கள்.

எல்லா கம்பெனிகள் குறித்தும் தகவல்கள் சேகரிக்கப்ட்டு யார் யார் எந்தெந்த நாட்டுக் கம்பெனி, அதில் யார் யாரெல்லாம் பங்குதாரர்கள் என்ற விபரம் சேகரிக்கப்பட்டு சவுதி, குவைத் போன்ற நாடுகளின் கம்பெனிகளை பிளாக்லிஸ்ட் செய்யும் வேலையும் முடுக்கி விட்டுள்ளனர்.

அபுதாபி மற்றும் துபாயில் உள்ள ஈராக்கிய தூதரகங்கள் இஷ்டம்போல விசா அடித்து கொடுத்துக்கொண்டிருந்தார்கள், (அமீரக ரெசிடெண்ட் விசா உள்ளோர்களுக்கும், இல்லாதவர்களுக்கும்) ஒரே ஒரு உத்தரவில் அந்த விசாக்கள் செல்லாது எனச் சொல்லிவிட்டனர், பாக்தாத் அதிகாரிகள். ரஷ்யாவைச் சேர்ந்த லூகாயில் என்ற கம்பெனியினரின் ஆட்கள் பாஸ்ரா விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பப்படனர். இப்போதும் கத்தார் ஏர்வேய்ஸ் எம்பஸி விசாக்கள் வைத்திருப்போர்களை ஏற்றிக்கொள்வதில்லை.

பாக்தாதில் சுன்னி ஏரியாவில் நடந்த திருமணக்கொண்டாட்டங்களில் வானை நோக்கிச் சுட்டதில் தரையிறங்கிக்கொண்டிருந்த ஃப்ளை துபாய் விமானத்தில் குண்டு துளைத்து ஒரு ஓட்டை விழுந்துவிட்டது. கடந்த ஒரு வாரமாக ஃப்ளை துபாய் விமானங்கள் பாக்தாத் வருவதில்லை.

வாரம் இருமுறை இருந்த பாஸ்ரா – பாக்தாத் – பாஸ்ரா விமான சர்வீஸுகள் தற்போது முழுவாரத்துக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. வெறும் 135 டாலர்களில் போய்விட்டு வந்துவிடலாம். ஷேரிங் ஜி எம் ஸிக்கும் விமானக்கட்டனத்துக்கும் வெறும் 35 டாலர்களே வித்தியாசம். 6 மணி நேர ரிஸ்க்கான பயணம், தேவையற்ற அலுப்பு மற்றும் எங்க கொண்டுபோய் வண்டியை சொருகுவானோ என்ற அளவில் ஓட்டும் ட்ரைவர்களிடமிருந்து விடுதலை. (ஒரு கையில் சிகரெட் மற்றும் ஸ்டீயரிங், ஒரு கால் டேஷ் போர்டில் வைத்துக்கொண்டு 180 கிலோமீட்டர் வேகம் வரை ஓடுவார்கள் ஈராக்கி ட்ரைவர்கள்)

பாக்தாத் விமான நிலையம் மெருகேறிக்கொண்டு வருகிறது. ஓராண்டுக்குள் நல்ல முன்னேற்றம். அழகு படுத்துதலிலும், வசதிகள் உண்டாக்கியதிலும், சுத்தம் பேணுவதிலும். இனி புறப்பாடு ஹாலில் 10 பேருடன் அரட்டை அடித்துக்கொண்டு சிகரெட் குடிக்கும் கும்பல்கள் குறையும். மொத்த ஏர்போர்ட்டையுமே ஆஷ்ட்ரேயாக பயன்படுத்திக்கொண்டிருந்தனர், சென்ற ஆண்டுவரை. கன்வேயர் பெல்ட் மாற்றி இருக்கிறார்கள். இமிக்ரேஷன் மட்டும் இன்னும் அதே சோம்பேறித்தனத்துஅன் இயங்குகிறது. நான் பாஸ்ராவில் இருந்து வந்த விமானத்தில் திருச்சியைச் சேர்ந்த 5 நபர்கள் பாத்ரா என்ற இடத்தில் வேலைக்குச் செல்வதற்காக அவர்களின் கொரிய பாஸுடன் வந்திருந்தனர். ஆண்டுக்கு ஒருமுறை லீவுக்குச் செல்பவர்கள். நாங்கள் வேலை செய்வதெல்லாம் தெற்குக் கடைசியில். ஆண்டுக்கு இருமுறை பாக்தாத் வந்தாலே அதிகம். ஆனால், இந்த பையன்கள் ஐ எஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிக்கு வெகு அருகில் வேலைக்குச் செல்கிறார்கள். பாத்ரா பத்தி தெரியுமாப்பா எனக் கேட்டேன். அதெல்லாம் தெரியும் சார் எனச் சொல்லிச் சென்றனர்.

பாக்தாத் நகரம் இன்னும் கொஞ்சம் அழுக்கேறி இருக்கிறது. 20 டாலருக்கு ஆர்டர் செய்த வெஜிடபுள் பிஸ்ஸாவில் சாசேஜ் போட்டுக் கொண்டுவந்தார்கள். என்னடா இது எனக் கேட்டால் அங்கிருக்கும் பங்களாதேஷி சிக்கன் சாசேஜ்தான, பரவால்ல போடு என செஃப்பிடம் சொல்லி இருக்கிறான். பசியினால் வந்த கோபத்தில் நீ பன்னி திம்பியாடா என அந்த பெங்காலியைக் கேட்டுவிட்டு வந்தேன். ஹோட்டலில் எவனுக்கும் ஆங்கிலம் தெரியாது என்பதால் எனது அரபியில் சொல்லி, மேலும் சரியாக புரிந்ததா எனச் சோதிக்க பெங்காலியிடம் ஹிந்தியில் சொல்லி அவன் அரபியில் செஃப்பிடம் சொல்லிவிட்டு வந்தபின்னரும் இந்த கூத்து. கடை மேனேஜர் ஏகப்பட்ட மன்னிப்பு கேட்டு, புது பிஸ்ஸா செய்து தருகிறேன் என்றார். எனக்கு பொறுமையும், ஆசையும் போய்விட்டதால் சாப்பிடாமல் வந்தேன். இன்னும் ஒரு இந்திய ஹோட்டல்கூட இல்லை, பாக்தாத்தில்.

எனக்கு, பாக்தாதில் இந்தியர்களிடமோ, பாக்கிஸ்தானிகளிடமோ நின்று பேசும் எண்ணம் குறைந்திருக்கிறது. ஏனெனத்தெரியவில்லை. அரபிகளிடம் அமர்ந்து பேசும் நேரம் கூடியிருக்கிறது.

20150203_181813பெங்களூரில் சிவில் இஞ்சினியரிங்கை 35 ஆண்டுகளுக்குமுன்னர் படித்தவர் ஒருவரை இரண்டாவது முறையாக சந்தித்தேன். ஈராக்கில் மாலைநேர டிஃபனாக அவித்த கொண்டைக்கடலை விற்கிறார். அவரிடம் 1 மணி நேரம் பேசிக்கொண்டிருந்தேன். அவருக்கு என்றாவது இந்தியாவிற்குச் செல்ல மாட்டோமா என இருக்கிறது. பெங்களூரைப்பற்றி மிக மகிழ்சியான நினைவுகள் அவருக்கு. India is a Heaven, Iraq is a hell. But I am an Iraqi, where can I go? என அவரே சமாதானம் ஆகிக்கொண்டார். அவ்வளவு அருமையாக சரளமாக ஆங்கிலம் பேசினார். ஏதேனும் அரசில் வேலைக்கு முயன்றிருக்கலாமே என்றால் சிரித்துக்கொண்டே காசிருப்பவனுக்கே வேலை கிடைக்கும் இங்கு. இரண்டாவது ஜாதியும், பலத்த ரெகமண்டேஷனும் இருந்தால் ஈராக்கில் யார் வேண்டுமானாலும் அரசாங்கத்தில் வேலைக்குச் செல்லலாம் என்றார். இரவு உணவாக வெஜிடபுள் பிரியாணி செய்து ஹோட்டலுக்கு கொண்டுவந்து தருவதாக சொல்லி இருந்தார். நாந்தான் என்னிக்கு வரை இருப்பேனோ தெரியாது, அடுத்த முறை நிச்சயம் அமர்ந்து பேசுவோம் எனச் சொல்லிவிட்டுவந்திருக்கிறேன் அவரை ஓராண்டுக்கு பின்னர் பார்க்கிறேன்.

பாக்தாத் விமான நிலையத்தில் நம்மூர் ஜடாயு போல ஒரு பெயிண்டிங் பார்த்தேன். அங்கு விசாரித்ததில் 3000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அசுர் எனும் விலங்காம். வெயில் படத்தின்மீது பட்டதால் தெளிவான படம் அமையவில்லை. ( படம் இணைப்பு)

போன வேலை ஏதும் முடியவில்லை. அதே சமயம் பாக்தாதில் அமர்ந்திருந்தாலும் ஒன்றும் ஆகப்போவதில்லை என்பதால் பாஸ்ராவுக்கு வந்தாச்சு.

இனி அவ்வப்போது செல்ல வேண்டியிருக்கும்.

ஜெயக்குமார்

Series Navigationவைரமணிக் கதைகள் – 2 ஆண்மைநிலவின் துருவச் சரிவுகளில் நீர்ப்பனி, ஹைடிரஜன் வாயு மிகுதி கண்டுபிடிப்பு
author

Similar Posts

2 Comments

  1. Avatar
    Mani says:

    அருமையான பயண அனுபவ குறிப்புகள். தொடர்ந்து எழுதுங்கள். முந்திய கட்டுரையும் நன்றாக இருந்தது.

Leave a Reply to subrabharathimanian Cancel reply

Your email address will not be published. Required fields are marked *