“மதுரையின் மணிக்குரல் மங்கயர்க்கரசி”

This entry is part 14 of 25 in the series 15 மார்ச் 2015
Inline image 1

ஜெயஸ்ரீ ஷங்கர், ஹைதராபாத்

மதுரையில் பிறந்தவர்கள் மிகவும்  அதிர்ஷ்டம் செய்தவர்கள் என்று நானும் அடிக்கடி நினைத்துக் கொள்வேன். மீனாட்சி அம்மன் கோயில், சித்திரைத் தேர் திருவிழா, நவராத்திரி விழா, மல்லிகைப்பூ, சூடான  இட்லி, காரவடை, பட்ணம் பக்கோடா, சுக்குமல்லி காப்பி என்று இதையெல்லாம் கடந்து ஆடிவீதியில் நடக்கும் ஆன்மீக சொற்பொழிவுகளும் தான் இங்கே பிரசித்தம். பல பிரபலங்களின் கதாகாலாக்ஷேபம் ,  கச்சேரிகள், என்று ஆடிவீதி அடிக்கடி களைகட்டும். அலைமோதும் கூட்டத்தின் நடுவில் தென்றல் நுழைந்து செல்லும். தொலைக்காட்சி பெட்டியின் அறிமுகம் கூட அதிகம் இல்லாத அந்த காலகட்டம்.  எனது பாட்டியின் வற்புறுத்தலின் பேரில் வேண்டாவெறுப்பாக கோயிலுக்கு ‘சொற்பொழிவு’ கேட்கச் சென்றேன். அன்றைய தினத்தில் ‘திருமுருக கிருபானந்த வாரியாரின்’ உரை ஆரம்பமாயிற்று. அவர் பேசப்பேச, என்னோடு சேர்ந்து ஆயிரக்கணக்கான தலைகளும் ‘மகுடிக்கு ஆடிய அரவம்’ போல் அவர் இருக்கும் திக்கைத் தவிர வேறெங்கும் திரும்பாமல் அவர் ஆற்றிய உரைக்குள் உறைந்து போயிருந்தோம் என்று தான் சொல்லவேண்டும். அப்படியொரு அருமையான ‘கந்தபுராணம்’ பற்றிய சொற்பொழிவு. அன்றைய கூட்ட மிகுதியால் என்னால் அவரது அருகில் சென்று ஆசீர்வாதம் வாங்க நினைத்தும் இயலவில்லை. மனத்துள் ஒருவித ஏமாற்றம் சேர்ந்து கொள்ள வீடு திரும்பினேன். அடுத்த நாளே , அரவிந்த் கண் மருத்துவமனையில் டாக்டர்.நாச்சியார் அவர்களோடு ‘கிருபானந்த வாரியாரை’ மிக அருகில் காணவும், ஆசீர்வாதம் பெறும் பாக்கியம் எதிர்பாராமல்  எனக்கு அங்கு கிட்டியதையும் இன்றுவரையில் ஒரு வரமாகவே எண்ணுகின்றேன்.

அதுபோலவே, பல ஆண்டுகள் கடந்து, சமீபத்தில் எனது அக்காவுடன் பள்ளி நிர்வாக நிமித்தம் சாத்தூர் திரு.ராஜேந்திரன் அவர்களது இல்லத்துக்கு சென்றிருந்த போது, “இந்த வீட்டிலிருந்து தான் வாரியார் சுவாமிகள் இறுதியாக லண்டனுக்கு சொற்பொழிவாற்ற கிளம்பிச் சென்றார். திரும்பி வரும்போது விமானத்திலேயே உயிரிழந்து விட்டார்…இருபத்தோரு வருடங்கள் இன்னும் இந்த வீட்டிலிருந்து  நகரவே இல்லை என்று அவர் சொன்னதும், அந்த இடத்தில் கனமான மௌனமும் கூடவே வாரியாரின் சுவாசமும் நிழலாக நிலவியது. தனது வாழ்நாள் முழுதும் கிட்டத்தட்ட எழுபது ஆண்டுகள் இடைவிடாது இறையுணர்வோடு பக்தியை உபதேசித்தவர். அந்தத் தீவிர முருக பக்தரைப் பற்றி அறியாதவர் தமிழராக இருந்திடல் முடியாது. தமது வாக்கால் வாழ்ந்த பலருள் முன்னணியில் நின்றவர் வாரியார்.

பெரும் பேறு பெற்ற அவரது அருகாமையில் நின்று, அவரது ஆசியில் வளர்ந்து அவர்காட்டிய பாதையில் சென்று இன்று, தனது வாழ்க்கைப் பிரயாணத்தில் வெற்றிகரமாக பயணிக்கும், மதுரையில் பிறந்த மணிக்குரல் தேச மங்கையர்கரசி மட்டுமே வள்ளல் வாரியாருக்கு பிரசங்க வாரிசாக வளருகிறார் என்றால் அது மிகையாகாது. அதிக இனிய சுவையுடைய மாங்கனியைத் சுவைத்துவிட்டு அதன் சுவையை மீண்டும் நமது சந்ததியர் அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அதன் விதையை மறக்காமல் மண்ணில் புதைத்து வைப்போம். . அதைப் போலவே, வாஞ்சையோடு வள்ளல் வாரியாரும் இறை உணர்வை, தேசபக்த சிந்தனையை, தேச மங்கயர்கரசிக்குள் ஞானப் புதையலாக புதைத்து விட்டாரோ என்ற எண்ணம் எழுகிறது.

கதை கேட்பதோ, படிப்பதோ வயது வித்தியாசமின்றி அனைவராலும் விரும்பப்படுவது தான் .  அதுவும் விறுவிறுப்பான உண்மை சம்பவத்தை கதையாக படிக்கும் போதே மனத்துள் அந்த ராஜ்ஜியமே உருவாகிவிடும். எண்ணங்களின் ஆதிக்கத்தை எழுத்துக்கள் இழுத்து கண்களுக்குப் படையல் செய்துவிடும். அதை சகஜமாக யார் வேண்டுமானாலும் செய்து விட இயலும். எழுதுவதை ஊறப்போட்டு, ஆறப்போட்டு, சேர்த்து, அடித்து, திருத்தி, இழுத்து, சுருக்கி என்று இஷ்டம்  போல வெட்டி ஒட்டிக் கொள்ளலாம். இறுதியாய் பள்ளத்தில் பாயும் நீராக எண்ணங்கள் வடிவெடுக்கும்.அந்த எழுத்தும் வாசகரை கட்டிப் போடும். அதைப் போன்றே ‘செவிக்கு உணவு’ என்றொரு பதமும் உண்டு. அந்த பதத்தை, கேட்கும் செவிகளுக்கெல்லாம் ‘விருந்தாக’ தனது வெண்கலக் குரலில் கதை கதையாய் கதைத்துக்  கேட்கும் ஒவ்வொருவரையும் கதைவசம் கவர்பவர் கலைமாமணி தேச மங்கையர்கரசி மட்டுமே.
மற்ற சொற்பொழிவாற்பவர்களைப் போல, அவர்கள்  பேசும்போது கூடவே ஓடிச் சென்று நாம் மூச்சு விடத் தேவையில்லை. எல்லாம் கேட்டு விட்டு என்ன சொன்னார்னு  ஒண்ணுமே புரியலையே என்று தவிக்கவும் அவசியமில்லை.

சரித்திரத்தில் ஐந்து, ஆறு ஔவையார்கள் இருப்பதாக சொல்வதுண்டு. அந்த ஔவையார், தற்போது  மீண்டும் பிறவியெடுத்து  நம்மோடு அதே பரந்த அறிவோடும், ஞானத்தோடும் நடமாடிக் கொண்டிருந்தால் ஒருவேளை அவர் தேச மங்கையர்க்கரசி போன்றே இருந்திருப்பாரோ என்று கூட எண்ணத் தோன்றும். அந்த அளவுக்கு தெள்ளத் தெளிவோடு வானத்திலிருந்து ‘ஜோ’ வென்று ஒரே சீராக பெய்யும் மழையைப் போல தன்னிடம் இருக்கும் ஞானத்தை தாராளமாக ஒவ்வொருவருக்கும் பகிர்ந்து அளிப்பதை ‘செவிக்கு விருந்தென்று ‘ சொல்லாமல் என்னென்பது? சந்தேகமே இல்லாமல் இவரும் ஒரு தெய்வீக ஞானக் குழந்தை தான்.

எண்ணங்களை எழுத்தாணியின் உதவியின்றி தனது சொல்லாதிக்கத்தால் முத்திரை பதிக்க முடிந்தால், இதில் சிலர் தான் வெற்றி பெற முடியும் என்பது எனது அபிப்ராயம். அத்தனை புராணங்களும், இதிகாசங்களும், நாயன்மார் கதைகளும், அடுக்கடுக்காக தனது மூளையில் பதியவிட்டு நிறுத்தி அதை அவ்வண்ணமே தங்கு தடையற்ற வார்த்தை ஜாலத்தில் வெளிக்கொணரும் விதம் காண்போருக்கு வியப்பூட்டும். போட்டிபோடும் எண்ணங்கள் யாவும் அவரது குரலில் ஒரே சீரான ஆலயமணி போலக் கேட்கும். ‘பக்தி உலா’ தொடரில் அவர் கூறும் ஆலய தரிசனம் நிகழ்ச்சி ஒவ்வொன்றும், கேட்போரை அந்தந்த கோயிலுக்கே  அழைத்துச் செல்லும் பிரமையை ஏற்படுத்தும். பேசுவது ஒரு கலை தான். ஆனால் தான் எடுத்துக் கொண்ட தலைப்பைச் சுற்றியே கன கச்சிதமாக தங்கு தடையின்றி ஒவ்வொருவரின் நாடி பிடித்துப் பார்ப்பது போல எதார்த்தமான பேச்சு வழக்கில்,மடை திறந்த வெள்ளம் போல கூடவே நகைச்சுவை கலந்து கேட்பவரின் ஆவலை இறுதிவரையில் தூண்டி , ‘எப்பொழுது முடியும்’ என்று காக்க வைக்காமல், சீக்கிரம் முடிந்து விடக் கூடாதே என்ற ஆதங்கத்தோடு ரசிக்கும் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப கதை சொல்பவர்
சொல்லரசி தேச மங்கையர்கரசி .

கால காலத்துக்கும் நிலைபெறவேண்டிய  நமது கலாச்சாரங்கள், நீதி,நேர்மை, இலக்கிய புராணங்களை அழியவிடாமல் காத்துவரும் வகையில் தேசபக்த சிந்தனையோடு இவர் பிரசங்கம் செய்வதுவும் தேசத்தொண்டு தான். இவரது சொற்பொழிவுகள் சிறுவர்களுக்கும், இளைய தலைமுறையினருக்கும் எளிதில் புரியும் வண்ணம் இந்தக் காலத்திற்கும் பொருந்தும் வண்ணம் கதைகள் சொல்லி எடுத்துரைப்பது தான் இவரது தனிச்சிறப்பு. இந்த உலகத்தில் விரல் விட்டு எண்ணிவிடக் கூடிய அளவில் மிகச் சிலரே சரஸ்வதியின் பரிபூரண கடாக்ஷத்தோடு வளைய வருகின்றனர். அதில் நாவுக்கரசி மங்கையர்கரசியும் ஒருவர் என்று நினைக்க, மனம் நிறைகிறது.

தற்போது தேசம் தாண்டி இவரது பிரசங்கங்கள் நடைபெறுவது மகிழ்வான  விஷயம். நமது நாட்டிற்குப்  பெருமை தேடித் தரும் ‘கலைமாமணி’ இவரையும் நமது தமிழ்நாடு அரசு அங்கீகரித்து சிறப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையை  அவரது ரசிகர்கள் அனைவரின் சார்பாக இங்கே சமர்ப்பிக்கிறேன்.

தான் எடுத்துக் கொண்ட செயலில் முழு முனைப்புடன் ஈடுபட்டால் கிடைக்கும் வெற்றியின் மகத்துவம் அபரிமிதமானது என்பதற்கு கலைமாமணி தேச மங்கையர்கரசி ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.இவரைப் பற்றி முன்பே அறிந்தவர்கள்  இந்த கட்டுரையையும்  ஏற்றுக் கொள்ளக்கூடும்.இதுவரையில் இவரைப் பற்றிய பரிச்சயம் இல்லாதவர்களுக்கு இந்த கட்டுரை ஒரு ‘விசிட்டிங் கார்டு’ போல செயல்படட்டும். இணையத்தில் இவரது சொற்பொழிவுகள் காணொளியில் நிரம்பி வழிகின்றது. வாய்ப்புக் கிடைத்தால் ஒருமுறை கேட்டுத் தான் பாருங்களேன். புதையலாக மறைந்திருக்கும் ஒரு பொக்கிஷத்தை அடையாளம் காட்டிய பலன் இந்தக் கட்டுரையைச் சேரட்டும்.

Series Navigationநாதாங்கிதொட்டில்
author

ஜெயஸ்ரீ ஷங்கர்

Similar Posts

4 Comments

  1. Avatar
    BS says:

    இன்று மதுரை மீனாட்சியம்மன் ஆலய நிகழ்ச்சிகள் வெளியூர் மக்களால்தான் நிரம்புகிறது. கள்ளழகர் விழா மட்டுமே மதுரை மக்கள் விழா எனலாம். நான் மதுரையில் ஆன்மிக நிகழ்ச்சிகளுக்கு கூடலழகர் கோயிலுக்குத்தான் போவேன். கோயிலின் வெளிச்சுற்றுப்பிரகாரம் நல்ல வசதியான இடம்.

    கட்டுரையில் குறிப்பிடப்படும் ஆடிவீதியில் சைவ சமயப் பனுவல்களைப்பற்றி மட்டுமே பேசுகிறார்கள். உள்ளே வயதானவர்கள் மட்டுமே இருப்பார்கள். குறைந்தது 30 பேர்கள் மட்டுமே அமரலாம். சைவ சமயப்பனுவல்களே எளிய மக்களுக்காக எழுதப்பட்டவை அல்ல. எனவே படித்த வயதானவர்கள் மட்டும் இருப்பார்கள். பொது மக்கள் கண்டுகொள்வதில்லை. விளம்பரமும் செய்வதில்லை. இப்பனுவல்கள் இந்துமதத்தை பண்டிதர் மதமாக்க பெரிதும் உதவின.

    கட்டுரை நாயகி மங்கையர்க்கரசியார் தொலைக்காட்சியில் நிறைய பேசுகின்றாரே? எல்லாருக்குமே தெரியுமே? ஆனால் மதுரையில் இவர் பேசியதாக விளம்பரம் பார்த்ததில்லை. யாழ் சந்திரா மட்டுமே ஆடிவீதியில் பேசும் பெண் பேச்சாளர். இவர் சைவத்திருமுறைகளில் கற்றுத்துறை போகியவர். பகட்டில்லை. எனவே வெளியில் இவர் பேர் தெரியவில்லை. இவர் பன்னிரு திருமுறைகளைப் பற்றிமட்டுமே பேசுவார்.

    ஆன்மிகப்பேச்சுக்களுக்கும் ஓரளவுக்குத்தான் இடம் கொடுக்கவேண்டும் நண்பரே. இல்லாவிட்டால், அது //வாழ்க்கையில் வெற்றி பெறுவது எப்படி?” என்ற உதவி நூல்களை வாணாள் முழுக்கப் படித்துக்கொண்டு இருப்பதைப் போலாகிவிடும். எப்போது முன்னேறுவது? எப்போது நமக்கு ஆன்மிகம் வருவது? Stop theory at one point of life; and start practising as soon as possible. Life is short, isn’t ?
    மேலும், இப்படிப்பட்ட பேச்சுக்களைக் கேட்கும் போது ஒரு கேள்விச்சுவை வந்து உட்கார்ந்து இன்பத்தைத் தர ஆன்மிக உள்ளம் அடிபட்டுப்போகிறது. ஒரு சமயம் புலவர் கீரனின் வில்லிபாரதச்சொற்பொழிவை 10 நாட்கள் தொடர்ந்து கேட்டேன். வந்த கூட்டம் நாத்திகர்களாலும் கிருத்துவர், இசுலாமியர்களால் நிரம்பி வழிந்தது. அவ்வளவு இலக்கியச்சுவை!

    எல்லாப்பேச்சாளர்களயும் கவனித்தால் – ஆன்மிகம், இலக்கியம் – ஒன்று புரியும். இவர்கள் முதலில் தொடங்கி தங்கள் பிராண்டைப் பலப்படுத்திக்கொண்டபின், புகழ்ச்சியையும் அதனால் வரும் வாய்ப்பு வசதிகளைத் தக்க வைத்துக்கொள்வதிலுமே குறியாகிப்போவார்கள். எல்லாரும் மனிதர்கள்தானே! குறை சொல்லமுடியாது.

  2. Avatar
    BS says:

    எனக்கு நீண்ட நாளாக சிவஞானபோதத்ததைப் படிக்க ஆசை. ஆனால் அதை எடுத்து வாசிக்கும்போது ஒன்றுமே புரியாது. தமிழா? அது மணிப்பிரவாளம். புரியாது. அது சொல்லும் சித்தாந்த கருத்துக்களுக்கு விளக்கமில்லாமல் புரியாது. எனவேதான் பண்டிதர்களுக்காக என்றேன். பிறர்மூலமாக அறியத்தான் முடியும்.

    எனவே ஆடிவீதியில் யாழ் சந்திரா சிவஞானபோதத்தைப் பற்றிப்பேசுகிறார் என்றறிந்து அவ்வீதியெங்கேயுள்ளது என நண்பர்களிடம் கேட்டபோது அவர்கள் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் மீனாட்சி கோயில் தெருக்களில்தான் நடக்கும் என்றார்கள். கோயிலைச்சுற்றி அலைந்து அலைந்து தேடினாலும் கிடைக்கவில்லை. பிறகு வடக்கு ஆடிவீதியெனவே வடக்கு கோபுர வாசலருகில் கேட்டபோதும் ஒருவருக்கும் தெரியவில்லை.நான் கேட்டதை அறிந்து ஒரு லுங்கிகட்டிய ஆள் கோயிலுக்குள்ளே போய்க்கேளுங்கள் என்றார். உள்ளே எப்படி தெருவிருக்கும்? சுற்றுப்பிரகாரம்தானே இருக்கும்?

    யாத்ரிகள் எவருக்கும் தெரியவில்லை. அங்கு வந்த‌ ஒரு கோயில் வேலையாளிடம் கேட்டால், நாம் நின்று கொண்டிருக்கும் இடம்தான் ஆடி வீதி என்றார். அட கோயில் சுற்றுப்பிரகாரத்திற்குப்ப பெயரே ஆடிவீதி:-) வடக்கு ஆடிவீதியில் பேசுகிறார் எனவே வடக்குக்கோபுர வாயில் அருகில் சென்றால் அங்கு இருக்கும் ஒரு சிறு அறையே பேச்சு நடைபெறும் அறை. உள்ளே ஒரு 30 கிழவர்களும் உட்கார்ந்திருந்தார்கள் நாற்காலிகளில். சில கிழவிகள் தரையில் கால் நீட்டி அமர்ந்திருந்தனர். இவர்களுக்கிடையில் போய் உட்கார்ந்தால் இந்த வயதினிலேயே எல்லாப்பற்றையும் விட்டுவிட்டானே என நினைத்துவிடக்கூடாதென்பதால், வாசலில் நின்று கேட்பது வழக்கம்.

    கட்டுரையாளர் சொல்லும் காலத்தில் அறைக்கு வெளியே தாழ்வாரத்தில் நடைபெற்றிருந்திருக்கலாம். இன்று இல்லை. ஆதிகாலத்தில் கோயில் சுற்றுச்சுவர்கள் இல்லாத போது கோயிலைச் சுற்றியிருக்கும் முதல் சுற்றுத்தெருவுக்கே ஆடிவீதி. வடக்கு ஆடிவீதி; தெற்கு ஆடிவீதி; கிழக்கு ஆடிவீதி; மற்றும் மேற்கு ஆடிவீதி எல்லாமே இன்று கோயிலுக்குள் போய்விட்டதால் மக்களுக்குத் தெரியவில்லை.

    கோயிலுக்கு வெளியேதான் முதற்சுற்று வட, தென், மேல், கீழ் சித்திரைவீதி, அடுதத சுற்று வட, தென், மேல், கீழ் ஆவணி வீதி, பின் வட, தென், மேல், கீழ் மாசி வீதி இப்படி சதுரம் சதுரமாக தெருக்கள்.

  3. Avatar
    BS says:

    கட்டுரையினுள் மங்கையர்க்கரசி என்று பிழையில்லாமல் எழுதியவர் தலைப்பில் மங்கயர்க்கரசி என்றெழுதி விட்டார். அவர்தான் அப்படியென்றால், திண்ணை ஆசிரியர் என்ன தூங்குகிறாரா? திருத்தியிருக்கலாமே?

  4. Avatar
    mahakavi says:

    My wife’s maternal uncle Mr. “Nehru” NArAyaNan( now in his eighties) is also considered an heir to KrupAnanda variyar. He has a testimonial from Kripananda variya himself. Mr. Narayanan has been making upanyAsams for over 40 years or so. He currently lives in Kolkatta with his wfe and two sons, travels all over India ( through invitations)and follows the tradition of Variyar in presenting kandapurANam and other related topics.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *