மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை –

This entry is part 6 of 40 in the series 8 ஜனவரி 2012

தாங்கள் அறுவடை செய்த செல்வத்தை தான தருமம் செய்வதைக் காட்டிலும் தாசிக்கு தருவதனூடாக தங்கள் ஆண்மையை வெளியுலகிற்கு உறுதிபடுத்து நினைக்கிறார்கள், அவ்வளவுதான்.

10. சீர்காழியிலிருந்து திரும்பிய முதல் நாள் இரவு தூக்கமின்றி கழிந்தது. உப்பரிகையின் கைப்பிடி சுவரிலமர்ந்து வானத்தை வெகு நேரம்பார்த்தாள். நட்சத்திரங்களில் இளைஞனைத் தேடினாள். விரல்கொண்டு அவளது முழங்கையையை தடவிப்பார்த்துக்கொண்டாள் இளைஞைனின் விரல் தீண்டிய இடங்களில் வெது வெதுப்பினை உணர்ந்தாள். மயிற்கால்கள் சிலிர்த்தன. ஓர் ஆணின் ஸ்பரிஸம் இதற்கும் முன்பும் சித்ராங்கிக்கு நேர்ந்துள்ளது. இவள் வயது சிறுவர்களோடு விளையாடுகிறபோது தொட்டு விளையாடிய சந்தர்ப்பங்கள் நிறைய வாய்த்திருக்கின்றன. செண்பகம் பணிக்கென்று வீட்டுக்கு வருவதற்கு முதல் நாள்வரை எடுபிடியாகவிருந்தவன் அக்காள் என பலரும் அழைக்கும் கார்மேகம். சித்ராங்கியை வெகு நாட்கள் வரை தூக்கிக்கொண்டு திரிந்தவன். எத்தனை காதம் நடக்க சொன்னாலும் முனுமுனுப்பின்றி நடப்பான். அவன் ஸ்பரிசமும் அவளுக்குப் பழகியிருந்தது. அம்மாவைத் தேடிக்கொண்டு சிதம்பரத்தை சுற்றிலுமுள்ள கிராமங்களிலிருந்து வண்டிகள் வர ஆரம்பித்தபிறகு, வீட்டில் பெருந்தனக்காரர்களின் நடமாட்டம் மிகுந்தது. சந்தனம் ஜவ்வாது, புனுகை மூச்சைத் திணறும்படி பூசிக்கொண்டு வருவார்கள். அவர்கள் வாசற் கதவை தாண்டுகிறபோது, கூடத்தைக் கடக்கையில், தூக்க கலக்கத்துடன் வெளியேறுகையில் எதிர்ப்படும் சித்ராங்கியை சிலர் மீனாம்பாள் மகளா என்று அழைத்து ஊஞ்சலில் அமர்த்தி இவளுக்கு கூச்சத்தை ஏற்படுத்தக்கூடிய இடங்களில் தொடுவார்கள். மீனாம்பாளோ, கார்மேகமோ குறுக்கிட்டாலொழிய அம்மனிதர்களின் குரங்கு சேட்டைகளிடமிருந்து தப்புதல் அரிது. அப்போதுங்கூட தீட்சிதர் மகன் ஏற்படுத்தியிருந்த அனுபவத்தை இவளுக்கு யாரும் தந்ததில்லை. பாவடையை மார்புக்கு மேல் முடிந்துகொண்டு, செண்பகத்தின் வற்புறுத்தலின் பேரில் பாசிபடிந்த படித்துறைகளில் கவனமாக காலெடுத்துவைத்து கணுக்கால், கால்கள், தொடைகள், இடுப்பென்று கடந்து மார்பளவு நீரில் முதன்முறையாக நின்றபோது முதுகுதண்டில் ஏற்பட்ட சிலுசிலுப்பு பாம்புபோல ஊர்ந்து பிடறியைக் கடித்து வாலை அசைத்து அதிர்வை ஏற்படுத்தியிருந்தது. அந்த அதிர்வை வேண்டுமானால் இந்த அனுபவத்தோடு ஒப்பிடமுடியும்.

தன்னை தம்புரவாக நிறுத்தி இளைஞன் மீட்டுவதுபோல கற்பனை செய்து உருகினாள். பால்போல பொங்கி வழிந்த இசை அவள் தேகத்தை நனைத்தது. பல்லக்கில் திருஞான சம்பந்தரில்லை, குறுநகைபுரியும் அவரது திருமுகமில்லை. ஜெகதீசன்: பெண்ணே வா! பிரம்ம தீர்த்தகரையை நோக்கித்தான் எமது பல்லக்கு செல்கிறது, உம்மை தேடித்தான் யாம் வந்தோம், என்கிறான். இவள் இதயம் வேகமாகத் துடிக்கிறது. கட்டுக்கடங்கா ஆவலுடல் கைகளை உயர்த்துகிறாள். தோளைபற்றி அநாயசமாகத் தூக்கி பல்லக்கில் அருகில் அமர்த்திக்கொள்கிறான். அடுத்த கணம் இதென்ன பிரம்மதீர்த்த கரை திசையை மறந்து பல்லக்கு விண்ணைநோக்கி முன்னேறுகிறது. பல்லக்குதூக்கிகள் எங்குபோனார்கள்? இறக்கைகள் எப்போது முளைத்தன? தங்கு தடையின்றி இலவம் பஞ்சுபோல காற்றில் மிதந்தபடி மெல்ல மெல்ல உயருகிறது, குடியானவர் இல்லங்கள், பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில் கோபுரம், மேகங்கள், நட்சத்திரங்கள், நிலவு. சித்ராங்கி எப்போது படுத்தாளென்று தெரியாது. ஆனால் முகம் உட்தளத்தைபார்க்க படுத்தாள், புரண்டாள், கவிழ்ந்து படுத்தாள், திரும்பினாள், நெளிந்தாள், ஒருக்களித்துப் படுத்தாள், மீண்டும் முன்போலவே விழிகளிரண்டும் விதானத்தில் பதிந்திருக்க இவள் மனம் சீர்காழிக்கு இறக்கை கட்டி பறந்தது. வழியில் இவளைப்போலவே அவளுக்கு முன்பாக பாய்ச்சலுடன் நடப்பது யார். அவனேதான். அவனை முந்திக்கொள்ளவேண்டும் போலிருந்தது, எட்டி நடந்தாள். முதல் நாள் மாட்டு வண்டியில் பயணம் செய்த களைப்பு, அரைக்கண்மூடி மீண்டும் நினைவுகளில் லயித்தவள் விடிகாலையில் அயர்ந்து உறங்கிப்போனாள்.

விடிந்தும் விடியாததுபோல பொழுது. தடதடவென்று இங்கிதமின்றி யாரோ கதவைத் தட்டினார்கள். எழுந்து சென்று கதவைத் திறக்க விருப்பமில்லாதவள்போல விரிப்பை தலைவரை இழுத்து மூடிக்கொண்டு சுருண்டு படுத்தாள். இவ்வளவு உரிமை எடுத்துக்கொண்டு சித்ராங்கியின் உறக்கத்தை எவர் கலைப்பது. தாய் மீனாம்பாளன்றி வேறுயார்? செண்பகம் கதவை இதுபோல தட்டிக் கேட்ட அனுபவமில்லை. ஒன்றிரண்டுமுறை மெல்ல தட்டிப்பார்த்துவிட்டு போய்விடுவாள். இம்முறை பலமாக மீண்டும் கதவு தட்டப்பட்டது. எரிச்சலுடன் சென்று கதவை விரியத் திறந்தாள். மீனாம்பாள் நிற்கிறாள்.

– என்ன அம்மா ? கொஞ்சம் உறங்க விடுங்களேன். தாயிடம் கெஞ்சுவதுபோல கண்களைக்குறுக்கி, உதடுகளைக் குவித்து மீனாம்பாளின் இடுப்பில் செல்லமாக குத்தியபடி கூறினாள்.

வழக்கமான மீனாம்பாளென்றால், இதுபோன்ற நேரங்களில், “பெண்ணாய் இலட்சணமாய் இல்லாமல் என்னடி இவ்வளவு தூக்கம். காலையில் எழுந்திருக்கவேண்டாமோ? சங்கீதம் கற்பிக்கவென்று சாஸ்திரிகள் வந்து அரைமணி நேரமாகிறது அவர் ஊர்க்கதையை பேசிக்கொண்டு ஏற்கனவே அரைகவுளி வெற்றிலையை ஆடுபோல மென்றாகிவிட்டது.”, என இரைவாள். இன்று அவள் முகத்தில் பரிவைப் பார்க்க முடிந்தது.

– என் கண்ணில்லை, சீக்கிரம் வாடா. நீராடுவதற்கு வேண்டியவை எல்லாம் தயாராக இருக்கிறது. இராகுகாலம் பிறப்பதற்குள் கோவிலில் இருக்கவேண்டும்- எனக் கெஞ்சுவதுபோல கூறினாள்.

சித்ராங்கிக்கு அலுப்பாக இருந்தது. நீ போ அம்மா நான் வருகிறேன் என்றாள். மீனாம்பாளும் வறுபுறுத்தவில்லை. அதிக நேரம் எடுத்துக்கொள்ளாதே! ஒரு நாழிகையில் கிணற்றடியில் இருக்கவேணும் செல்லம், எனச் கூவிட்டு வாத்துபோல காலை எடுத்து வைத்து அரக்கி நடந்தாள். அவள் இடுப்பு அரவை கல்போல சுழல்வதைப்பார்க்க மகளுக்கே சிரிப்பு வந்தது, சிரித்துக்கொண்டே கதவை மூடினாள்.

மீண்டும் கதவு பலமாகத் தட்டப்பட்டது. படுக்கையிலிருந்து போர்வையை விலக்கி சோம்பல் முறித்தபடி எழுந்தவள்; கதவை உடைச்சுடாதே! தாழ்ப்பாள் போடவில்லை, திறந்துதான் இருக்கிறது. உள்ளே வா என்றாள். சித்ராங்கிக்கு இம்முறை கதவைத் தட்டுபவள் செண்பகமென்று தெரியும்.

திறந்த கதவின் இடைவெளியில் ஒரு கீற்றுபோல நுழைந்த வெளிச்சம் கட்டிலைத் தொட்டு நின்றது. செண்பகத்தின் நூல் புடவை முழங்கால் வரை இருந்தது, இளம் மார்புகள் அவ்வப்போது புடவைக்கு அடங்காமல் வெளியில் தெரிந்தன. கொசுவத்தை இடுப்பில் சொருகியிருந்தாள். தலைமயிரை வாங்கி பக்கவாட்டில் அக்கரையின்றி முடிந்திருந்தாள். அதுவும் அழகாகத்தான் இருந்தது. கைகளில் ஈரம். நடந்து வந்தபோது வளையும் தண்டையும் சேர்ந்தாற்போல குலுங்கின.

– எழுந்திருங்க. வெந்நீர் விளாவி வைத்திருக்கிறேன், நீராடுவதற்குத் தேவையானவற்றை எடுத்து வைத்திருக்கிறேன். கையோடு உங்களை அழைத்துவரவேண்டுமென்பது அம்மாவின் கட்டளை.

– இன்றைக்கு என்ன இப்படி ஆளாளுக்கு கட்டளை, ஆணையென்று கால்களில் வெந்நீர்க்கொட்டிக்கொண்டு பறக்கிறீர்கள்?

– உங்களுக்கு உண்மையில் தெரியாதா?

– என்ன கேள்வி இது? அம்மா அல்லது நீ உங்கள் இருவரில் ஒருவர் எதையும் சொல்லவில்லையெனில் இந்த வீட்டில் என்ன நடக்கிறதென்று எனக்கெப்படி தெரிய வரும்.

– முதலில் குளித்து முடியுங்கள், உங்களுக்கு விளக்கமாகச் சொல்கிறேன்.

செண்பகத்தை பின் தொடர்ந்து சித்ராங்கி கிணற்றடிக்கு வந்தாள். கல்லில் சம்மணமிட்டு உட்கார்ந்தாள். செண்பகம் அவள் தலை முடியை அவிழ்த்து கூந்தலை இருபுறமும் ஒதுக்கினாள். உச்சி வகிட்டைப் பிரித்து எண்னெயை கைகொள்ள அள்ளி அப்பினாள். சீயக்காய் கலந்து மீனாம்பாள் யோசனையின் பேரில் வைத்தியன் தயாரித்துக்கொடுத்த வாசனைப்பொடியை உடலில் பூசி இளஞ்சூட்டுப் பதத்தில் வெந்நீரை தலையில் நிறுத்தாமல் ஊற்றியபோது, செண்பத்தின் கைகளைப் பிடித்து நிறுத்தினாள். ஒருமுறை நீர்சொட்டும் அளகாபாரத்தை சிலுப்பினாள், மூக்கை சிந்தி எறிந்தாள். நீரில் நனைந்த உடலில் வானவில்லை பொடிசெய்து தூவியதுபோல ஆங்காங்கே ரோமங்கள் மினுங்கின. அதிகாலைச்சூரியனும் ஒட்டியும் ஒட்டாமலும் உருண்டோடிய நீர்த்தாரைகளும் சித்ராங்கியின் தேகத்தின் நிகழ்த்தும் செப்பிடுவித்தை. அதைக் காணவும் சேடியின் மனம் எஜமானியின் மேல் வைத்துள்ள அன்பையும் பரிவையும் ஒருகணம் மறந்து பொறாமையில் வெந்தது. அடுத்த நொடி நீண்டதொரு பெருமூச்சாய் வெளிப்படவும் செய்தது.

நீராடிமுடித்ததும் மீண்டும் சேடியும் எஜமானியுமாக அறைக்குத் திரும்பினர். செண்பகம் தலையைத் துவட்டி, கூந்தலை பகுதி பகுதியாகப்பிரித்து அவள் கையில்போட்டு தூபம்காட்டினாள். மீனாம்பாள் எட்டிப்பார்த்தாள். என்னடி ஆயிற்றா? நான் சொன்னது ஞாபகமிருக்கட்டும். அலங்கார பூஷிதையாக சித்ராங்கி இருக்கவேண்டும்., என்ன? என்று தமது மூக்குத்தியின் திருகாணியைப்போட்டபடி கட்டளை பிறப்பித்தாள்.

திறந்திருந்த கதவின் வழியாகக்கூடம் தெரிந்தது. கூடத்திலிருந்த ஊஞ்சலில் ஒரு பெரிய தாம்பாளத் தட்டு: பூ, வாழைப்பழ சீப்பு, தேங்காய், வெற்றிலை பாக்கு, வெல்லம் என்றிருந்தது அதனுடன் இரண்டுநாட்களுக்குமுன் தஞ்சாவூர் தேவாங்கர் கொடுத்துவிட்டுப்போன மாம்பழ நிறத்தில் பட்டுப்பாவாடைபுடவையும், அரக்கு வண்ணத்தில் முத்துகள் அலங்கரித்த மார்பு கச்சையும் இருந்தன.

கண்டாங்கி பட்டை சித்ராங்கிக்கு உடுத்திக்கொண்டே, ‘இதோ கொஞ்ச நேரத்தில் புறப்பட்டுவிடலாம். நீங்கள் வண்டியைக் தயார்செய்யச் சொல்லுங்கள் என்றாள் செண்பகம்.

– செண்பகம் கதவைச்சாத்தி தாழ்ப்பாள்போடு, என்று சித்ராங்கி கட்டளையிட சேடியும் அவ்வாறே செய்தாள். அதற்காகவே காத்திருந்ததுபோல தோழியிடம் கேட்டாள்:

– செண்பகம் இப்போதாவது உண்மையைச் சொல் தட்டிக் கழித்து நேரத்தைக் கடத்தாதே?

– உங்கள் அம்மா ஒரு தாசியென்று தெரியுமா இல்லையா? அதுவும் தெரியாதென்று சொல்லிவிடாதீர்கள்

– ம்… அதெற்கென்ன இப்போ. அதை உலகமே அறியுமே. அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்.

– இன்றைக்கு அந்தக் கிரீடத்தை உங்களுக்குச் சூட்டவிருக்கிறார்கள். காலையில் சித்தயோகத்துலே நடராஜர் சன்னதியில் வைத்து தீட்சதர் கரத்தால் தலைமை தாசியாகத் தாலிகட்டிக்கொள்ள இருக்கிறீர்கள்.

– ம். சிறிது விளக்கமாகச்சொல்

– பெரிய தீட்சதரிடம் தங்களுக்குப் பொட்டுக்கட்டி தாசியாக்கிக்கொள்ள வேண்டுமென்று அம்மா விண்ணப்பித்து நான்கைந்து மாதங்களுக்கு மேலாயிற்று. அதற்கு நேரம் இப்போதுதான் பிறந்தது போலிருக்கிறது. சீர்காழி கோவிலில் வைத்து உங்களை தீட்சதர் பார்த்தாரில்லையா? அதனால் இப்போது உத்தரவாகியுள்ளது. நேற்று தீட்சதர் ஆள் ஒருவர் வீட்டிற்கு வந்தவர் அம்மாவிடம் கோவிலுக்குச் வரசொல்லி இருக்கிறார்.

– எதற்கு?

– அங்குதானே ஐதீகத்தின்படி சடங்குகளை நிறைவேற்றவேண்டும்.

– பிறகு?

– அநேகமாக சிதம்பரத்திற்கு மீனாம்பாள் என்ற புகழொழிந்து சித்ராங்கியைத் தேடி அவனி அம்பத்தாறு தேசத்திலிருந்தும் ராஜாக்களும், தனவந்தர்களும், பெரு நிலக்கிழார்களும் தேடிவருவார்கள். பல்லக்குகளிலில் தளவாய்களும்; மயிலைக் காளை பூட்டிய வில் வண்டிகளில் பெரிய மனிதர்களும், ஏன் அதிர்ஷ்டமிருந்தால் குதிரைபூட்டிய இரதங்களில் நாயக்கர்கள் கூட வரலாம். இளைஞர்கள் வருகிறார்களோ இல்லையோ கிழங்கள் இருமிக்கொண்டாவது வந்துபோகும். இந்தவீட்டிற்கு வருபவன் எப்படி யிருந்தாலென்ன நமக்கு அவர்கள் மூட்டை கட்டிவரும் செல்வம் முக்கியம். மனைவிமாரை சந்தோஷப்படுத்தமுடியாத மனிதர்கள் கூட தங்கள் ஆடலையும், பாடலையும் பார்க்கவும் கேட்கவும் வருவார்கள், இரவு தங்குவார்கள், தாம்பூலம் தரிப்பார்கள், விருந்து உபசாரம் நடக்கும், அலங்கரித்த மஞ்சத்தில் கிடத்தி ஆசைதீர பார்ப்பார்கள். தங்கள் ஜென்ம சாபல்யம் அடைந்ததை நினைத்து பூரித்துபோவார்கள். உங்களை மரபாச்சிபொம்மைபோல நடத்துவார்கள். நீங்களும் அப்படித்தான் நடந்துகொள்ளவேண்டும் உயிர்த்துவிடக்கூடாது. ஆசைதீர தொட்டுபார்த்துவிட்டுத் தூங்கிவிடுவார்கள், காலையில் கம்பீரமாக பட்டுவஸ்திரம் தரித்து மார்பில் சந்தணம் பூசி மீசையை நீவிக்கொண்டே புறப்பட்டுச்செல்வார்கள். தாங்கள் அறுவடை செய்த செல்வத்தை தான தருமம் செய்வதைக் காட்டிலும் தாசிக்கு தருவதனூடாக தங்கள் ஆண்மையை வெளியுலகிற்கு உறுதிபடுத்து நினைக்கிறார்கள், அவ்வளவுதான்.

– என்ன அவ்வளவுதான்? உனக்கு எத்தனை வயது.

– உங்களை அக்காள் எனக்கூப்பிட்டாலும் உங்களைவிட வயதில் மூத்தவள்தான் ஐப்பசி வந்தால் பதினேழு.

– ஆனாலும் கிழவிபோல நிறைய தெரிந்து வைத்திருக்கிறாய். தமிழ் பண்டிதையோ?

– அப்பா தமிழ் படித்தார், புலவர். இரவும் பகலும் பணையோலைகளும் எழுத்தாணியுமாக அமர்ந்திருப்பவர். ஆயிரத்து இருநூறு செய்யுள்களைக்கொண்ட தொகை நூலொன்று எழுதினார். வேலூர் லிங்கம நாயக்கரின் நண்பர் சிவப்பிரகாச சாமியே பாராட்டினதாக அப்பா கூறிக்கொண்டிருப்பார். இங்கே தெலுங்கோ கனனடமோ தெரிந்தால் பிழைக்கலாம். உத்தர ராமாயணம், தட்ஷிண ராமாயணமென்று ஏதாவதொரு ராமயனத்தை எழுதியிருக்கலாம். நாயக்கர்களும் கொண்டாடுவர். உண்மையைச் சொல்லட்டுமா, எனக்கே கூட உங்கள் தொழில் தேவலாம் போலிருக்கிறது. நானும் பொட்டு கட்டிக்கொள்ளலாமாவென யோசிக்கிறேன்.

– தாராளமாக கட்டிக்கொள், தீட்சதர் மைத்துனனைத் தவிர்த்து எத்தனைபேருடன் வேண்டுமானாலும் படு எனக்கு கவலைகளில்லை.

– நான் நினைத்தாலும், நீங்கள் அனுமதித்தாலுங்கூட நான் பொட்டுக் கட்டிக்கொள்வதென்பதெல்லாம் நடவாது. அததற்கு விதிகள் வைத்திருக்கிறார்கள். தீட்சதர் மைத்துனன் என்று வார்த்தை வந்ததே? என்ன சேதி? சீர்காழி உறவு அத்தனை சீக்கிரம் விட்டுப்போகாது போலிருக்கிறதே.

– ஆமாம் செண்பகம், அவரை நான் மறுபடியும் காணவேண்டுமே.

– இதென்ன வம்பு, மாமனையும் மைத்துனனையும் சேர்ந்தாற்போல வீட்டுக்கு அழைக்கிறீர்கள். யாரவாது ஒருவரைத்தான் தற்போதைக்கு பார்க்கமுடியும். ஆனால் பெரிய தீட்சதர் இன்றிரவு எழுந்தருளப் போவதென்று தீர்மானித்தாயிற்று. தீட்சதர் மைத்துனனை வேண்டுமானால் வேறொரு நாளைக்கென்று வைத்துக்கொள்ளுங்கள்.

– தீட்சதரை தவிர்க்க முடியாதா?

– முடியாது. அம்மா ஊரில் பெரிய செல்வந்தரான ஏகம்ப முதலியாரின் விருப்பத்தையே நிராகரித்துவிட்டு தீட்சதரை உங்களுக்குத் தாலிகட்ட ஏற்பாடு செய்திருக்கிறாள். கொஞ்ச நாட்கள் தீட்சதரை சமாளியுங்கள். தீட்சதர் மைத்துனனிடம் நான் பேசிபார்பார்க்கிறேன். ஆனால் இந்த சங்கதி அம்மாவின் காதில் விழாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

-தொடரும்-

Series Navigationஜென் ஒரு புரிதல் -26ஜெயமோகனுக்கு “முகம் “ விருது
author

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *