வளவ.துரையனின் நேர்காணல்

This entry is part 9 of 31 in the series 5 பிப்ரவரி 2012

வினாத்தொகுப்பு : பாரதி இளவேனில் ( அன்பாதவன் )
கணினி அச்சு, வலைப்பதிவு : சிறகு இரவிச்சந்திரன்

வளவனூர் அ.ப. சுப்பிரமணியன் வளவ.துரையன் ஆனது எப்படி?

அறுபதுகளில் நான் இலக்கிய உலகில் காலடி எடுத்து வைத்தபோது முதலில் ஈர்த்தவை மரபுக்கவிதைகள் தாம். அவற்றை எழுதி திண்டிவனம் குயில் இதழுக்கு அனுப்ப நினைத்தேன். அப்போது அறிமுகமான இலக்கிய நண்பர்கள் அனைவரும் திராவிட இயக்கத் தோழர்கள்.எனவே கடவுளின் பெயர் காட்டும் சொந்தப் பெயர் பிடிக்கவில்லை. புனைப்பெயர் வேண்டுமென எண்ணினேன். கிராமத்து அறுவடைக்காக போனபோது, கல்கியின் மூன்று முக்கிய நாவலகளைப் படித்து முடித்திருந்த கால கட்டமாகையால், அவர் புனைப்பெயர் பிடித்திருந்தது. அவர் முன்னிரண்டு எழுத்துக்களை சேர்த்து வைத்திருந்தார். அவர் குருவின் பெயர் கல்யாணசுந்தரம். திமுகவையும் அண்ணாவையும் அளவுக்குமீறி உள்ளே உட்கார வைத்திருந்தேன். எனவே அண்ணாதுரையின் இறுதி இரண்டெழுத்துக்களும், என் இயற்பெயரின் இறுதி இரண்டு எழுத்துக்களும் இணைந்து துரையன் ஆனது. வளவனூர் என்கிற என் சொந்த ஊரின் முன்னொட்டே வளவ என்பது.

மரபிலக்கியத்தில் காலூன்றி நின்றவர் நவீன இலக்கியத்தின் பக்கம் வந்ததெப்படி?

இதற்கு மையக்காரணம் பாவண்ணன் என்று கூடச் சொல்லலாம். எனக்குப் பின்னால் எழுத ஆரம்பித்து என்னைத் தாண்டி எங்கேயோ போய்விட்டார். அவர் தொடர்பே விட்டுப்போன பல ஆண்டுகள் கழித்து கடலூர் நூலகத்தில் அவரது சிறுகதைத் தொகுப்பு ( நேற்று வாழ்ந்தவர்கள் என்று நினைக்கிறேன் ) படித்து ஒவ்வொரு கதைக்கும் விமர்சனம் எழுதி அனுப்பினேன். விரிவான பதில் எழுதியிருந்தார். உடனே அப்போது கடலூ இரா.நடராசன் முழுநாள் இலக்கிய அமர்வை கடலூரில் நடத்த பாவண்ணன் வந்தார். அதில் கலந்து கொள்கையில் புதிய உலகம் தெரிந்தது. பாவண்ணன் சொல்லித்தான் வேர்கள் ராமலிங்கம் மூலம் பல சிற்றிதழ்கள் வரவழைத் தேன். பிறகு கடலூர் எஸ்ஸார்சி தொடர்பு ஏற்பட்டது. வட்டம் விரிந்தது.

சங்கு இதழ் அனுபவங்கள் குறித்து

வளவனூரில் திருக்குறட்கழகம் நடத்தியபோது இருந்தவர்கள் எல்லோரும் பேச்சாளர் கள், எழுத்தாளர்கள் தாம். எழுதுகின்ற படைப்புகளை வெளியிட கையெழுத்து இதழாக தொடங்கியதுதான் சங்கு. தென்மொழியின் தாக்கத்தில் சிறப்பாசிரியர், உறுப்பாசிரியர், பொறுப்பாசிரியர் எல்லாம் அமைத்துத் தொடங்கினேன். பிறகு என் பள்ளி ஆசிரியர் சிவலிங்கம் எழுதி அமைக்க ஒளிநகல் இதழாக இருபது படிகள் எடுத்து அஞ்சலில்ல் அனுப்பினேன். கடலூர் வந்து எஸ்ஸார்சி தொடர்பு ஏற்பட்டதும் அவர்தான் சிதம்பரத்தில் ஒரு அச்சகத்தை ஆற்றுப்படுத்தி அச்சடிக்க வழி வகுத்தார். இப்போது கடலூரில் இருந்து வருகிறது. தமிழின் நவீன படைப்பாளிகள் எல்லோரும் அதில் எழுதுகிறார்கள். அதுதான் வளவ துரையனை வெளிச்சம் போட்டு பலருக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. தினமணி ஆசிரியர் அதைப் பாராட்டி எழுதினார். 2010ம் ஆண்டின் சிறந்த சிற்றிதழ்க்கான விருதை தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கம் அளித்தது. என் இல்லத்தார் மற்றும் நண்பர்கள் கொடுக்கும் ஊக்கமே இன்னும் புலிவாலை விடாமல் பயணம் செய்யச் சொல்கிறது.

வளவனூர் இலக்கிய அனுபவங்கள் பதிவு?

வளவனூர் இலக்கிய அனுபவங்களைப் பேச நாள்களே போதாது. என்னைச் செதுக்கியவை அவை. நான் உருவாகக் காரணமானவை அவை. பள்ளியிறுதி முடித்து பதினெட்டிலிருந்து இருபத்தி ஐந்து அகவையுள்ள இளைஞர் கூட்டத்தை ஒன்று சேர்த்து, ஆ. இராசாராமன் திருக்குறட்கழகம் 1967ல் அமைத்தார். ஐம்பது வயது முதிர்ந்த கணேசனாரும் உண்டு. எல்லாருமே தனித்தனி தீவுகள்தாம். ஒவ்வொருவருமே சாதி கட்சியால் வேறுபட்டு தமிழால் இணைந்தவர்கள். 67 முதல் 80 வரை ஒவ்வொரு வாரமும் கூட்டம். ஆளுக்கொரு தலைப்பு. கேட்பவர் பத்து பேரானாலும் சரி, மாதம் ஒரு கவியரங்கம். ஆண்டு தோறும் விழாக்கள் என அமர்க்களம். அடுத்த கட்டம் பக்கத்து ஊர்கள். வேலூர், ஆத்தூர் எனச் சென்று பட்டிமன்றங்கள். இப்படி இலக்கியம் மரபு ரீதியாக வளர்ந்தது. கருத்துக்கள் வளர வளர வேறுபாடுகளும் வளர்ந்தன. ஆ.இராசாராமன் மறைந்த பின் ஏன் அவர் இருக்கும்போதே அதன் செயல் பாடுகள் குறைந்துவிட்டன. பாவண்ணன் கூறியதுதான் அப்போது நினைவு வருகிறது. ‘எல்லா மரமும் எல்லாக் காலத்துக்கும் பயன் அளிக்காது. ‘

‘ மலைச்சாமி ‘ புதினத்தின் களமும் காலமும் என்ன? அதை எழுதியபிறகு எப்படி உணர்ந்தீர்கள்?

மலைச்சாமி வருகிற மாலதி, கோபு, சுலோச்சனா ஆகிய மூவரும் வளவனூரைச் சேர்ந்தவர்கள். நாவல் தொடங்கும்போதே இவர்களை மையம் கொண்டுதான் தொடங் கினேன். பின்னால் சின்னச்சாமி தானாகவே ஓர் இடத்தைப் பிடித்துக் கொண்டு விட்டான். பேரைச் சொன்னாலும் ஊரைச் சொல்லக்கூடாது என்பார்கள். அதனால் தான் ஊரைச் சொல்லவில்லை. மற்றபடி அதில் வரும் ஏரி எல்லாம் வளவனூர் தான். காலத்தைப் பொறுத்தவரையில் சேலம் இளங்கோ ஏற்கனவே பிரச்சனை எழுப்பி இருக்கிறார். அறுபதுகள் என்று வைத்துக் கொள்ளலாம்.

சங்க இலக்கியம் குறித்தும் பேசுகிறீர்கள்; நவீன இலக்கியம் எழுதுகிறீர்கள்? எப்படி சாத்தியமானது இது?

விக்கிரமாதித்யன் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது. ‘ சங்க இலக்கியம் அறிந்த ஒரு நவீன படைப்பாளிதான் வெற்றி பெற முடியும். ‘ அடிப்படையில் நான் மரபை விரும்புபவன். மரபிலிருந்து வெளி வந்தவன். படிக்கும்போது பாடப் புத்தகங்களிலில் இருந்த அகநானூறு, புறநானூறு குறுந்தொகை பாடல்களால் அந்நூல்கள் முழுவதும் படிக்க ஆவல் உண்டாயிற்று. திடீரென ஒரு தேக்கம் வந்தது. பழமையான சங்க இலக்கியக்காரர்கள் நவீனத்தைக் கிண்டல் செய்ய, பதிலுக்கு இவர்கள் சங்க இலக்கியம் இக்காலத்திற்கு பொருந்தாது என்று முரண் கூறும் காலம் வந்தது. பாவண்ணன், நாஞ்சில் நாடன், விக்கிரமாதித்யன், ஜெயமோகன் போன்று இரண்டும் நன்கு தெரிந்தவர்கள் எனக்குப் பழக்கமானது பெரிய மகிழ்வு தந்தது. என்னைப் பொருத்தமட்டில் நான் எழுதி வந்த மரபு இதழ்கள் கவிதை, கவிஞன், கவியுகம், திண்டிவனம் குயில் போன்றவை நின்று போக வெற்றிடம் உருவானது. நவீன சிற்றிதழ் கள் மற்றும் கவிதைகளின் வாசிப்பு என்னையும் எழுதத் தூண்டியது. எழுதிய முதல் கவிதை கணையாழியிலும் கதை சௌந்தரசுகனிலும் வெளிவந்தது. நம்பிக்கை அளிக்க நவீன எழுத்துலகில் பிரவேசித்தேன். இந்த நேரத்தில் புறநானூறைப் புதுமொழியில் சுஜாதாவும், சங்கச் சித்திரங்களை ஆனந்தவிகடனில் ஜெயமோகனும் எழுதினார்கள். நானும் ஒரு முத்தொள்ளாயிரத்து பாடலை எடுத்துக் கொண்டு அதற்கேற்ப ஒரு சமூக சிந்தனை தோன்றும் நவீனப் படைப்பு எழுதி இரண்டையும் இணைத்தேன். இதற்கு சுகன் வாய்ப்பளித்ததை நன்றியோடு நினைவு கூற வேண்டும்.

Series Navigationசிற்றிதழ் அறிமுகம் – ‘ நீலநிலா ‘சுஜாதாவின் ” சிவந்த கதைகள்” நாவல் விமர்சனம்
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *