வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 44

This entry is part 12 of 31 in the series 10 பெப்ருவரி 2013

 

 

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல

 

பூலோக யாத்திரைக்குப் புறப்பட்டுவிட்டார் இறைவன்

தனியாக இல்லை

துணைவியுடன்தான் புறப்பட்டார்

புறப்படும் முன்னர் இறைவனுக்கும் இறைவிக்கும் வாக்குவாதங்கள். கணவனின் விளையாட்டுப் புத்தியை மனைவி அறிவாள். எனவே என்ன நேரிடினும் சக்தியை வெளிப்படுத்தக் கூடாது என்பதுதான் தேவியின் வேண்டுகோள். இறைவனும் சிரித்துக் கொண்டே புறப்பட்டுவிட்டார். திருவிளையாடலில் மிகச் சிறந்தவர் ஆயிற்றே. பிரபஞ்சமே அவர் விளையாட்டில் விளைந்த ஒன்றுதான். பாம்பு அணிகளை அகற்றிவிட்டு ஜடாமுடியுடன் காவியுடையில் துறவியைப் போல் மாறினார். அம்மையும் காவி உடைக்கு மாறினாள். முதல் தவறே அதில்தான் ஆரம்பம்.

கடவுள் தவறு செய்வாரா அல்லது அதுவும் அவர் விளையாட்டில் ஓர் அம்சமா?

இருவரையும் சேர்த்துப் பார்க்கும் பொழுது பொருந்தாத ஜோடியாகத் தெரிந்தனர். ஓர் துறவிக்கு இத்தனை அழகுடன் ஒரு மனைவியா? வருவது அவர் உண்டாக்கிய பூலோகம் தான். மனிதனும் அவர் படைத்ததுதான். ஆனால் அவர் படைடைப்பிற்குப் பின் எத்தனை மாறுதல்கள் !

நடந்தவைகளைச்  சுருக்கமாகச் சொல்ல விரும்புகின்றேன்

பரமனின் திருவிளையாடல் என்றாலே மதுரையை மறந்துவிட முடியுமா?? இப்பொழுதும் அவர் மதுரைக்கே போக  முடிவு செய்திருந்தார். ஆனால் அதற்கு முன் ஒரு கிராமத்தைப் பார்க்க விரும்பினார்.

இயற்கைச் சூழலில் அந்த கிராமம் அழகாய்த் தெரிந்தது. மச்சு வீடுகளும் தெருக்களின் தோற்றமும் ஓரளவு வசதி பெற்றவர்கள் வாழும் ஊராய்த் தெரிந்தது.  பார்த்தவர்கள் கூட நமஸ்காரம் செய்துவிட்டுப் பேசாமல் நகர்ந்து சென்று கொண்டிருந்தனர். பேசினால் சாமியார் காசு கேட்டுவிடுவார் என்ற நினைப்போ?! ஊரைச் சுற்றி முடிக்கும் நேரத்தில் ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் சில குடிசைகள்.  ஒரு குடிசையின் வாயிலில் ஓர் சிறுமி குவளையில் கஞ்சி குடித்துக் கொண்டிருந்தாள். உள்ளேயிருந்து ஓர் பெண்மணி வெளியே வந்தாள். சிறுமியின் தாயார். இவர்களைப் பார்க்கவும் கும்பிட்டுவிட்டுப் பேசினாள்.

“கும்பிடறேன் சாமி. உங்களுக்குக் கொடுக்க எங்கிட்டே காசு இல்லை. எங்க வீட்டு கஞ்சி நீங்க சாப்பிடமுடியாது. நீங்க உயர்ந்த சாதியாத் தெரியுது “ இதைச் சொல்லும் பொழுது வேதனை இழைந்தோடியது

“ஒண்ணும் வேண்டாம்மா. நாங்க கோயிலுக்குப் போறோம். ஒண்ணும் சாப்பிட மாட்டோம்”. என்று பதில் சொல்லிவிட்டு நகர்ந்தார்.  அவர் சிந்தனையில் ஓடியவைகளைப் பேசாமலேயே அன்னை புரிந்து கொண்டாள்.

இறைவன் மனிதனைப் படைத்தார். அவனோ என்னவெல்லாம் படைத்துவிட்டான்!.  இறைவன் அவனுக்கு சுதந்திரம் கொடுத்திருந்தார். மனிதன் பணம் படைத்தான். அவனோ அவன் படைத்த பணத்திற்கு அடிமையாகி விட்டான். ஏற்ற தாழ்வு பொருளாதாரத்தில் மட்டுமல்ல.. ஆண், பெண் என்ற இரு இனமாகப் படைத்திருந்தார். அதுவும் ஒருவருக் கொருவர் துணையாக இருக்க. ஆனால் அவனோ நூற்றுக் கணக்கான சாதிகளைப் படைத்து அவைகளுக்குள் சிக்கிக் கொண்டு நெளிகின்றான். “மனிதம்” மங்கிக் கொண்டிருப்பதை உணர்ந்தார்.

கிராமத்தைவிட்டுப் புறப்பட்டவர் ரயிலில் பயணம் செய்ய விரும்பினார். இருவரும் அப்பொழுது வந்த பாஸஞ்சர் வண்டியில் ஏறினார்கள். கூட்டம் அதிகம் இல்லை. அவர்களுக்கெதிரே இரண்டு இளைஞர்கள் இருந்தனர். இவர்கள் இருவரையும் வெறித்துப் பார்த்தனர். ஆங்கிலத்தில் மெதுவாகப் பேசிக் கொண்டனர். இறைவன் துறவியாகக் காட்சியளித்ததால் சாமியாருக்கு ஆங்கிலம் தெரியாது என்று நினைத்தனர். அவர்கள் பேசியது தேவியைக் குறித்து.

அவரோ  தாடியும் மீசையும் ஜடை முடியுடன் இருக்கின்றார். உடன் இருக்கும் பெண் மிகவும் அழகாய் இருக்கின்றாள். இந்த சாமியார் எங்கிருந்தோ கடத்திக் கொண்டு வந்திருக்க வேண்டும் என நினைத்தனர். பெண்ணை சாமியாரிடமிருந்து காப்பாற்றி வாழ்வு கொடுக்க நினைத்தனர். உடனே கற்பு பற்றிய பேச்சு வந்தது. விவாதம் சூடு பிடித்தது. புராணக் கதைகளை எடுத்துக் கொண்டாலும் சரி அல்லது யதார்த்த வாழ்க்கை என்று எடுத்துக் கொண்டலும் சரி கற்பு என்ற சொல்லுக்கு அர்த்தங்கள் காலம் தோறும் மாறி வந்திருக்கின்றது என்றான் ஒருவன். . இப்பொழுது கூட வாழும் பொழுது சரியாக இருந்தால் போதும் என்றான் இன்னொருவன்.

அவர்கள் நினைப்பும், பேச்சும் நேரமாக ஆக பரமனிடம் கோபத்தை உண்டுபண்ணியது. . தேவியும் நிலைமை மோசமாகி வருவதைப் புரிந்து கொண்டாள். பரமனின் உடல் நெருப்பாகச் சுடுவதைக் கண்ட தேவி அவரைச் சாந்தப் படுத்த அவரைத் தொட்டாள். அந்த குளிர்ந்த மேனியின் ஸ்பரிசம் அவர் சூட்டைத் தணித்தது.

மனிதன் எப்படியெல்லாம் சிந்திக்க ஆரம்பித்துவிட்டான். ஆக்க பூர்வமான சிந்தனையாக இல்லையே !

மதுரை வந்துவிட்டது. பரமனும் தேவியும்  இறங்கி டவுன்ஹால் ரோட்டில் நடந்து மேலமாசி வீதி, புது மண்டபம் தாண்டி , மீனாட்சி அம்மன் கோயிலுக்குள்முன் வாயில் வழியாக நுழைந்தனர். அன்று வெள்ளிக் கிழமை. நல்ல கூட்டம். தேவிக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. கூட்டத்துடன் சென்று அம்மனைத் தரிசித்துவிட்டு சுவாமி சன்னிதிக்கும் சென்றனர். பரமன் எதுவும் பேசவில்லை. அங்கும் தரிசனம் செய்து முடிக்கவும் அங்கிருந்த ஒரு சிலைக்கருகில் சென்று நின்று அதையே பார்த்தார்.

மீனாட்சி திருமணக் காட்சி. மணப் பெண்ணின் நாணம். பெண்ணின் கை பிடிக்கின்றவன் முகத்தில் கம்பீரம். என்ன அழகான காட்சி. பல சிந்தனைகளில் இருந்த பரமனுக்கு இந்த திருமணக் காட்சி புன்முறுவலைத் தோற்றுவித்தது.

அங்கிருந்து நகன்று பொற்றாமரைக் குளக்கரைக்குச் சென்று ஓரிடத்தில் உட்கார முயன்றனர். அங்கே ஏற்கனவே இருவர் அமர்ந்திருந்தனர். இவர்கள் வருவதைப் பார்க்கவும் சத்தமாகவே வெறுப்பைக் காட்டினர்.

“இந்தக் கிழங்களுக்கு வேறு இடம் கிடைக்கல்லியா? சின்னஞ்சிறுசுகள் இருக்கும் இடத்திற்கா வந்து தொந்திரவு செய்வது?! “

அந்த இருவரும் மணமானவர்கள் இல்லை. காதலர்கள். அப்படித்தான் அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றர்கள்.

உட்கார்ந்திருந்தவர்கள் எழுந்து சென்றனர்.

பரமனும் தேவியும் உட்கார்ந்தனர். இருவரும் பேசவில்லை. பேசாவிட்டால் என்ன? பரமனின் எண்ணங்கள் ஓடும் திசையில் தேவியும் உடன் தொடர்ந்தாள்.

கோயிலில் கூட்டம் அதிகம்தான். ஆனால் வந்தவர்களின் பார்வைகள் பாயும் இடங்கள், பேசும் உரையாடல்கள் மனிதனை உரித்துக் காட்டியது.

அலங்காரம் செய்து கொண்டு ஆடம்பரத்தைக் காட்ட சிலர்.  பிறரைப் பற்றி வம்பு பேசும் பலர். குறிப்பாக மாமியாரைப் பற்றி மருமகளும், மருமகளைப் பற்றி மாமியாரும் விமர்சிக்கும் கூட்டம் ஒருபக்கம்.  நெரிசலில் முடிந்தமட்டும் உரசிப்பார்க்கும் வக்ரபுத்தி யுள்ளவர்கள் சிலர் இப்படி இருப்பவர்களைக் கழித்துப் பார்த்தால் எஞ்சியவர்கள் தங்கள் கஷ்டங்களைப் புலம்பிவிட்டு கன்னத்தைத் தொட்டு ஓர் கும்பிடு போட்டுப் போகும் கூட்டம் இன்னொரு பக்கம்.

ஆத்மார்த்தமாகக் கடவுளைக் கடவுளுக்காக நினைத்து வருபவர்கள் தென்படவில்லை. அப்படிப்பட்டவர்கள் கோயிலில் இருந்தாலும் வீட்டில் இருந்தாலும் அவர்கள் ஆழ்மனத்தில், சக்தியை இருக்கும் இடத்தில் நினைத்து தியானம் செய்வார் போலும்!.

மனிதன் எவ்வளவு சுயநலவாதியாகி விட்டான்?!

யாத்திரை புறப்பட்டதிலிருந்து இதுவரை கண்ட காட்சிகளில் ஒன்று கூட அவருக்கு மகிழ்வைத் தரவில்லை. பயணத்தை முடித்துவிட்டுப் புறப்பட்டிருக்கலாம். ஆனால் இன்னும் இந்த விளையாட்டுத் திடலில் இருக்க விரும்பினார்.

இரவில் தங்க ஒரு இடம் வேண்டும். மதுரையில் இல்லாத லாட்ஜுகளா? ஆனால் இவர்கள் போன இடங்களில் இடமில்லை என்று அனுப்பிவிட்டனர். தாடி மீசை மட்டு மல்ல  ஜடைமுடி யுடன் ஒருவனுடன் அழகான பெண்ணொருத்தி. எனவேதான் இடம் இல்லையென்ற நிலை. அப்படியும் ஓர் இடம் கிடைத்தது. அந்த விடுதி ஏற்கனவே சரியானதல்ல. எனவே தம்பதியர்கள் இருவரும் தங்களுக்கென்ற அறையில் நுழைந்த சில நிமிடங்களில் கதவு தட்டும் ஓசை கேட்டது. கதவைத் திறந்து பார்த்தால் வெளியில் போலீஸ். ஏற்கனவே இந்த பொருந்தாத ஜோடியைக் கவனித்த போலீஸ் பின்னாலேயே தொடர்ந்து வந்தது. இப்பொழுது கேள்விகள் கேட்டார்கள். முக்கியமான கேள்விக்கு இறைவனால் பதில் சொல்ல முடியவில்லை. அது அவருடைய விலாசம். எதைச் சொல்வார்? உண்மையும் சொல்ல முடியாது. பொய்யும் கூடாது. அவருடைய தவிப்பு சந்தேகத்தை அதிகமாக்கியது.. உடனே “சந்தேகக் கேஸ்” என்று அவர்களை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று போலீஸ் லாக்கப்பில் வைத்துவிட்டனர்

பரமனுக்குக் கோபம் வர ஆரம்பித்துவிட்டது. தேவிக்குக் கொடுத்த வாக்குறுதியினால் தெய்வ சக்தியையும் காட்ட முடியவில்லை. இந்தத் தொல்லையிலிருந்து எப்படி தப்புவது?

அந்த நேரத்தில் காவல்நிலைய வாசலில் படகு போன்று ஓர் பெரிய கார் வந்து நின்றது. அதிலிருந்து அழகான ஓர் இளைஞன் கோட்டும் சூட்டும் போட்டுக் கொண்டு கம்பீரமாக இறங்கி காவல் நிலையத்தில் நுழைந்தான். அவன் தோற்றத்தைப் பார்க்கவும் உட்கார்ந்திருந்த இன்ஸ்பெக்டர் எழுந்துநின்று வர வேற்றார்.

வந்த இளைஞன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பிரச்சனையையும் உடனே விளக்கினான்.

அவன் பெயர் சுப்பிரமணியன். திருப்பரம்குன்றத்திலிருந்து வருகின்றான். அவனுடைய பெற்றோர்கள் தீர்த்த யாத்திரைக்குப் புறப்பட்டு வந்தவர்கள் ஏதோ பிரச்சனையினால் காவல் நிலையத்திற்குக் கொண்டு வந்த செய்தி கிடைத்தது . போலீஸ் வண்டியில் ஏற்றுவதைப் பார்த்த ஒரு நண்பர்  உடனே தகவல் தெரிவித்ததால் அங்கே வர முடிந்ததையும் கூறினான்.

இன்ஸ்பெக்டருக்குத் தூக்கிவாரிப்போட்டது. இவ்வளவு அழகான மகன், வசதியான குடும்பம் இருந்தும் அந்த தாடிக்காரக் கிழவன் உண்மையைச் சொல்லாமல் இருந்து விட்டாரே. அதனால்தானே சந்தேகம் வந்தது. பிள்ளைமேல் கோபம் போல் தெரிகின்றது. ஒருவேளை மருமகள் மாமனார் தகராறா? அவருக்கு ஒரே குழப்பம். நடந்ததை விளக்கிவிட்டு “ உங்கள் அப்பாவிற்குக் கொஞ்சம் மன நிலை சரியில்லை போல் தெரிகின்றது.பைத்தியம் போல் விழிக்கின்றார். டாக்டரிடம் காண்பியுங்கள். அவரை நம்பி உங்கள் தாயாரையும் அனுப்பாதீர்கள்” என்று அக்கறையுள்ளவரைப் போல் பேசினார்

அடப்பாவி மனுஷா அவர் உன்னைப் படைத்தவர். அவரையே பைத்தியகாரன் என்று சொல்லிவிட்டாயே !

ஒரு போலீஸ் சிறைக் கதவைத் திறந்து பரமனையும் தேவியையும் கூட்டி வந்தான். பரமன் முகத்தில் கடுகடுப்பு. தேவியோ மகனை அந்த உடையில் பார்க்கவும் மகிழ்ந்தாள்.. தன் மகனைக் கோவணத்துடன் பார்த்த பொழுது குமுறிய தாயுள்ளம் இப்பொழுது நாகரீக உடையில் அழகே உருவாக இருப்பதைக் கண்டு பூரித்துப் போனாள்.

மேற்கொண்டு எதுவும் பேசாமல் வெளியில் வந்து காரில் ஏறினர். முருகன்தான் காரை ஓட்டினார். அவருக்கென்ன, மயில் மேல் ஏறி உலகையே சுற்றியவராயிற்றே. தந்தையிடம் பேசினார் முருகன் :

“பூலோக யாத்திரைக்கு வந்தது தப்பில்லை. ஆனால் அதற்கேற்ப வர வேண்டாமா?”

அப்பனுக்கு  மகன் உபதேசம் சுவாமிமலையில் மட்டுமா, மதுரையிலும் நடந்தது

பரமன் தன் யாத்திரையை முடிக்க விரும்பவில்லை. மதராஸ் பட்டணம் செல்ல விரும்பினார். பரமனும் தேவியும் தங்கள் தோற்றங்களை மாற்றி நாகரீக உடையில் பயணம் தொடர்ந்தனர்.

நகர்ப்புர அனுபவத்தில் பொறுமையை முற்றிலும் இழந்து ருத்ர தாண்டவம் ஆட ஆரம்பித்துவிட்டார்.

நல்ல வேளை. நாரதர் ஆரம்பத்திலிருந்தே ரகசியமாக வேடிக்கை பார்த்து வந்ததினால் சமயத்திற்கு வந்து நிலைமை மோசமாகி உலகம் அழியும் முன்னர் கைலாசம் கூட்டிச் சென்றுவிட்டார். உலகம் பிழைத்தது.

இந்த நூற்றாண்டில் அறுபதையொட்டி எட்டுகிரகச் சேர்க்கையால் உலகம் பாதிக்கப்படும் என்ற செய்தி எங்கும் ஒலித்தது. இப்பொழுது 2012 ஆண்டில் மாயன் காலண்டர் வைத்து வந்த செய்திகள் போல் அதுவும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்பொழுது எழுதப்பட்டு பத்திரிகையில் வெளிவந்த ஓர் சிறுகதை. ஆம். நான் எழுதியதுதான். அப்பொழுது எனக்கு வயது 25. நையாண்டி கதைபோல் இருந்தாலும் அதில் காணும் காட்சிகள் இந்த சமுதாயத்தில் அவலங்களைச் சுட்டிக் காட்டும்.

லட்சக்கணக்கான ஆண்டுகள் கடந்துவந்த மனிதன் இந்த பத்தாயிரம் ஆண்டுகளுக்குள் கொண்டுவந்த மாற்றங்கள் வியப்பைவிட விபரீதத்திற்கு வித்திட்டிருப்பதை உணரலாம். இன்று சமுதாயத்தை ஆட்டிப் படைக்கும் சாதிப் பிரிவினைகள், பண ஆசையால் ஊழல். கோயிலுக்குச் சென்றாலும் வம்பு, ஆடம்பரம், இவைகள் மட்டுமா, அங்கு கூட மனிதனின் வக்ர குணத்திற்கு உரசல்கள்.   எனக்கு இதைச் செய். உனக்கு காணிக்கை போடுகின்றேன் என்று கடவுளுடன் வியாபாரம்.  அப்பப்பா! ஆழ்மனத்திலிருந்து எழும்ப வேண்டிய ஓர் அன்பு அங்கே போலி முகம் தரித்து உலாவரும் கொடுமை!. கடற்கரையில் தான் காதலர்கள் என்றால் கோயில் குளத்தையும் விடவில்லை. ரயில் பயண உரையாடல் பண்பாட்டைப் பிணமாக்கி அதன் மேல் உட்கார்ந்து செய்யும் கச்சேரி. சென்னை நகர் வலத்திலும் மனிதனின் பண்பட்ட மனம் சிதறிவருவதைக் கண்டார். . முக்கியமாக ஊடகங்களின் போக்கில்தான் பரமன் பொறுமை இழந்தது.

இந்த 2000 ஆண்டுகளில் நிறைய மாற்றங்கள்!. அதிலும் கடந்த 50 ஆண்டுகளில் அதன் வேகம் மிக மிக அதிகம்!.

ஆடையின்றி அலைந்தான். பின்னர் இலை, தழை, என்று உடலை மறைக்க ஆரம்பித்து இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் குறைக்க ஆரம்பித்துவிட்டான்.

இளவயதிலேயே படைக்கும் கதைகளில் கூட சமுதாய நலன் பற்றியதாக இருக்கும். ஏறத்தாழ ஐந்து ஆண்டுகளில் நான் எழுதிய சிறுகதைகள் நிறைய. யாருடைய சிபாரிசிலும் வெளிவந்ததல்ல. எங்கள் வாடிப்பட்டி எழுத்தாளர் வட்டம் ஓர் சிறந்த அமைப்பு. வாடிப்பட்டி வட்டத்தில் ஒருவர்தான் ருதர துளசிதாஸ். எங்கள் மதுரை வட்டத்தில் திரு நா . பார்த்தசாரதி அவர்கள். மதுரை மாவட்ட எழுத்தாளர்கள் கூடி ஒர் சிறுகதைத் தொகுப்பு புத்தகமும் வெளியிட்டோம். பத்திரிகை உலக ஜாம்பவான்கள் அறிமுகம் ஆனவுடன் என் எழுத்தும் நின்றது. அவர்கள் காரணமல்ல. பதவி உயர்வு பெற்று, பணிச்சுமை அதிகரித்ததால் எழுத்து நின்றது.

கடவுள் நேரில் வருவாரா என்று கேட்பதைப் போல் பேசுவாரா என்ற கேள்விகளும் உண்டு. அதற்காக எழுதப்பட்டதுதான் “ஒருநாள் கூத்து”

ஒரு சின்ன கிராமத்து ஆலயத்தில் பரமன் அரூபமாகப் பேச ஆரம்பித்தார். ஒருவருடன் ஒருமுறை என்று விதி அமைத்துக் கொண்டு வந்திருந்தார். கோயிலில் பல நிகழ்ச்சிகள். ஒன்றை மட்டும் உதாரணமாகக் கூறுகின்றேன். அவருடை பக்தை ஒருத்தி. அவள் செல்வந்தர் வீட்டுப் பெண். ஒருவன் அவளைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தான். அவளும் அதை உண்மை அன்பு என்று நினைக்க ஆரம்பித்துவிட்டாள். சந்திப்பு எல்லாம் இந்தக் கோயிலில்தான்.

அன்றும் வந்தனர். தன்னுடன் வெளியூருக்குப் புறப்பட அவளை வற்புறுத்தினான். ஏற்கனவே இதே சிவனைச் சாட்சியாக வைத்து வேறு ஒரு பெண்ணிற்குத் தாலி கட்டியவன். ஆனால் இப்பொழுது பொய் பேசி இன்னொரு பெண்ணின் வாழ்க்கையைக் கெடுக்க முயன்று கொண்டிருந்தான். பரமனுக்கு பொறுக்க முடியவில்லை. நடந்த மணத்தைக் கூறி இவனை நம்ப வேண்டாம் என்று சொல்லிவிட்டார் ஈசன். அவ்வளவு தான். வந்தவன் கத்தினான். கேள்விகள் கேட்டான். அவளும் கேட்டாள். ஆனால் சிவன் பேசவில்லை. இனி விசாரிக்காமல் அவன் பின்னால் வர முடியாது என்று சொல்லி விட்டுப் போய்விட்டாள். அவனோ சிவலிங்கத்தைப் பார்த்து கத்திவிட்டுச் சென்றான்.

மாலையில் ஓர் பெண் தலைவிரி கோலமாய், கண்ணீர் விட்டபடி கோயிலுக்கு வந்தாள்.

“இங்கே யாரோ பேசினாங்களாமே. இப்போ பேசட்டும். என் புருஷன் இப்படித்தான் கண்டவ பின்னாலே சுத்துவான். ஆனாலும் கடைசியில் என் வீட்டுக்கு வந்துடுவான். . இப்போ என்னை விரட்டி சாமியைச் சாட்சிக்குக் கூட்டிவான்னு விரட்டிட்டான். கடவுளா இருந்தா என் வாழ்க்கையைக் கெடுக்குமா? நீ சாமியில்லை. நீ பேய். நீ பிசாசு”.

இப்படி அவள் கத்திக் கொண்டிருக்கும் பொழுது ஊர்த் தலைவர்களுடன் ஓர் கூட்டமே வந்தது. காலை முதல் சிவன் பலரை விரட்டியிருந்தார். இப்பொழுது எல்லோரும் சேர்ந்து வரும் பொழுது இந்தப் பெண்ணின் அழுகையும் கத்தலும், எழுந்த வதந்தி பொய்யில்லை என்பதும் ஊர்ஜிதமாயிற்று. “பேய் நுழைத்த கோயிலுக்கு இனி பூஜை கிடையாது. சாந்தி செய்து பேயை விரட்டும் வரை கோலில் பூட்டிக் கிடக்கட்டும்” என்று கோயில் கதவுகளை மூடிவிட்டுச் சென்றுவிட்டனர்.

ஒரு கோயிலில் பேசியதற்கே இந்த நிலை. கடவுள் பேச ஆரம்பித்தால் எத்தனை வழக்குகளுக்குப் போக வேண்டிவரும்?!. உருவத்துடன் வந்தால் பகல்வேஷக்காரனாக்கி விடுவார்கள்.

“இந்தம்மாவுக்கு என்னாச்சு. ஏதோ வரலாறு அது இதுன்னு எழுதிக்கிட்டு இருந்தாங்க, இப்போ புராணக் கதையிலே இறங்கிட்டாங்களே பாவம் வயசாச்சு. பொழுது போகணுமே” என்னும் முணுமுணுப்பு கேட்கின்றது.

இதுவரை எடுத்துக் காட்டுகளுக்கு உண்மைச் சம்பவங்களைத்தான் எழுதிக் கொண்டு வந்தேன். இப்போது, கதைகளின் சுருக்கங்களை ஏன் எழுதினேன்?

பத்திரிகைச் செய்திகள், அவர்கள் கொடுக்கும் புள்ளிவிபரங்கள் என்னைப்  பதற வைத்துள்ளன. 68000 கற்பழிப்பு வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள் 16000 பேர்கள்தான். முதலில் ஒரு பெண் தனக்கு இது போன்ற கொடுமை நடந்தாலும் வெளியில் சொல்ல வருவ தில்லை. நீதி மன்றங்களில் வக்கீலின் கேள்விகள் புண்படுத்தும். விமர்சனங்கள் , இந்த வேதனைகளைச் சகித்துக் கொண்டாலும் குற்றம் சுமத்தப்படுகின்றவர்கள் சாமர்த்தியமாகத் தப்பிவிடுகின்றனர். ஆக மிச்சம் பெண்ணுக்கு அவமானம் மட்டும்தான். வெளியில் போக முடியாத நிலை. கெடுக்கப்பட்டவள் என்று தெரிந்தவர்கள், சுலபமாக அவளைப் பாலியல் உறவிற்குக் கூப்பிடுவான். புதிதாகக் கெட ஒன்றுமில்லையாம். பதிவேடுகளில் பதியப்பட்ட குற்றங்கள் இவ்வளவுதான். பச்சைக் குழந்தையைக் கூடக் குதறும் அரக்கர்கள் கணக்கில் வராத கூட்டம் எத்தனை எத்தனை?!

குற்றவாளிக் குழந்தைகள் , அதாவது பதியப்பட்ட வழக்குகள்படி 33000 சிறார்கள். 18 வயதிற்குக் கீழ் உள்ளவர்கள். இந்த எண்ணிக்கையைப் பார்க்கவும் வேதனைக் கத்தல் எனக்குள் கிளம்பியது. கொலை, கொள்ளை, பாலியல் உறவு, போதை, மது, . சொல்லிக் கொண்டே போகலாம். அவர்கள் கொடுத்த விளக்கங்கள்.

72% பெற்றோருக்குத் தங்கள் பிள்ளைகளையைப் பற்றிய உண்மைகள் தெரியாது. 80% சிறார்கள் கணினியில் அரட்டை, வீடியோ கேம் போன்றவற்றில் பொழுதைப் போக்குதல். இவர்களில் 87% சிறார்கள் தங்கள் குடும்ப விபரங்களை வெளிப்படுத்துகின்றார்கள். கணினியில் வரும் சிறார்களில் 55 % சிறார்கள் தங்கள் உண்மைப் பெயர்களைக் கூறுவ தில்லை. வீடுவரை தொல்லைகளைக் கொண்டுவருகின்றார்கள்.

பெற்றோர்கள் பிள்ளைகளைவிட மற்ற விஷயங்களில் கவனம் செலுத்துகின்றனர். ஆண்மகன்  அரசியல், சினிமா விமர்சனம் என்றால் பெண்கள் தொலைக்காட்சி பெட்டியில் கவனம்.

நான் எழுதிய முதல் கதையின் பெயர் “உயிர்மேல் ஆசை”. உளவியல் என்றாலும் சரி வாழ்வின் தத்துவம் என்றாலும் சரி. அப்பொழுது என் வயது 23. மேலே காட்டிய கதைகள் எழுதிய பொழுது வயது 25. சிரிக்க வைக்கவா எழுதினேன். நான்கு வரிகள் எழுதினாலும் சிந்திக்கத் தூண்டும் வரிகள்.  நான் வளர்ந்த சூழல். எனக்கு குழந்தைப் பருவத்தில் கிடைத்த வழி காட்டிகள். சமுதாயச் சீரழிவிற்கு நாம் காரணமாகியிருக்கின்றோம் என்று இன்னும் உணரவில்லையே.

பிடிக்காத அரசியல்வாதியின் பெயரை எத்தனை முறை உச்சரிப்பு. மனம் முழுவதும் கசப்பு. வெறுப்பைச் சுமந்து வாழ்கின்றோம். தம்பதியர்க்குள் முதலில் இணக்கம் குறைந்தது இதனால்தான்.   ஓர் அரசியல்வாதியைப் பிடிக்கவில்லையென்றால் ஓட்டு போடாதே. உன் குடும்பத்திலும் உனக்குத் தெரிந்தவர்களிடத்திலும் சொல்லி ஓட்டு போட வேண்டாம் என்று சொல்லுங்கள். வாழ்நாள் முழுவதும் வசைப்பாட்டில் நேரம் கழிக்க வேண்டுமா? கணவன் , மனைவி முதலில் குடும்பத்தைக் கவனிக்க வேண்டும். அவர்கள் கலப்பில் பிறந்துவிட்ட அந்த பச்சிளம் குழந்தைகளின் வளர்ச்சியில் அக்கறை கொள்ள வேண்டும்.பெற்றோரின் கவனக் குறைவால் பிஞ்சுகள் பாழாகி அழிந்து கொண்டிருக் கின்றன. இனிமேல் சிறார்கள்மேல் குற்ற வழக்குப் பதியப்படும் பொழுது பெற்றோர் களுக்கும் தண்டனை கொடுக்க விதிகள் வகுக்கப்பட வேண்டும். ஆனால் அந்த சட்டங்கள் வராது. சட்டம் இயற்றும் இடத்தில் இருக்கின்றவர்களில் எத்தனை பேர்கள் குற்றவாளிகள் ? ஒன்றும் செய்ய முடியவில்லையே.

எழுத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம் இருக்கின்றதா? ஓர் ஊரைச் சொல்லி அங்கே சண்டை நடந்ததாக கற்பனையில் செய்தி கூறினால் கூட எங்கள் ஊரை அவமதித்துவிட்டார்கள் என்ற வழக்கு. மனிதனுக்கு ஏதோ ஒரு பெயர் இருக்க வேண்டும். பெயரும் கூடாது. கடற் கொள்ளைக்காரர்கள் என்றால் உலகைச் சுற்றி வரும் பொழுது எங்கு கொள்ளைகள் அதிகம் என்ற செய்திகள் வருகின்றதோ அதை வைத்து ஒருவன் ஓர் கதை எழுதினால் அது மதப் பிரச்சனையாகின்றது. சாதிப் பிரச்சனையும் அதுதான். ஆக மனிதனை எல்லாவகையிலும் முடக்கும் காலம் வந்துவிட்டது. இதற்கு இனி விடிவு வராதா? 50 ஆண்டுகளுக்கு முன்பே எழுதிய கதைகள் நினைவிற்கு வந்தன. இப்பொழுது பிரச்சனைகள் விஸ்வரூபம் எடுத்து விட்டது.

பழைய கற்காலத்தில் அச்சம் தவிர்க்க ஆண்டவனிடம் தஞ்சம் புகுந்தான். அதையும் சீர்திருத்தம் என்று கல்லாக்கிவிட்டான். கடவுளைவிட கட்சித் தலைவர்கள், சினிமா நடிகர்கள் மிக மிக உயர்ந்தவர்களாகி விட்டார்கள். அவர்கள் செல்வத்திலும் அதிகாரத்திலும் கொழிக்கின்றனர். மற்றவர்களுக்குப் போராட்ட வாழ்க்கை. மனிதன் கேள்வி கேட்காமல் இருக்க மதுவும் கூத்தும் கொடுத்து மயக்கத்தில் வீழ்த்தப்பட்டு விட்டதே!

இருக்கும் சில நல்ல இதயம் படைத்தவர்களாவது நம்பிக்கை கொண்டு முயற்சிப்போம் வீடுகளில் முன்பு பெரியவர்கள் ஒன்று சொல்வார்கள். தேவதைகள் எப்பொழுதும் சுற்றிக் கொண்டிருப்பார்களாம். அப்படி செல்லும் பொழுது “ அப்படியே ஆகட்டும் “ என்று சொல்லிக் கொண்டு போவார்களாம். எனவே நல்லதையே நினைக்க வேண்டும். நல்லதையே பேச வேண்டும். தீயது எண்ணத்தில் வந்தால்கூட தீமை நடக்கும் என்பார்கள். எண்ணங்களுக்கு அதிக வலு உண்டு. முதலில் ஒவ்வொருவரும் தன்னைத் திருத்திக் கொள்வோம். பின்னர் குடும்பம். குழந்தைகளை சீரிய முறையில் வளர்ப்பதுதான் லட்சியம் என்று நினைத்து அவைகளில் கவனம் செலுத்த வேண்டும். கோயிலுக்குப் போகச் சொல்லவில்லை. மதம் பேசவில்லை. வீட்டிலேயே ஓரிடத்தில் அமர்ந்து சில நிமிடங்கள் உள்ளிருக்கும் ஆழ்மன சக்தியை நினைக்கலாம். . மனம் அமைதியானால் பிரச்சனைகளுக்கு வழி தெரியும்.

இதுவரைத் தொடரில் மற்றவர்களை எடுத்துக் காட்டுகளில் காட்டினேன். இனி என்னையும் எனக்கருகில் உள்ளவர்களையும் உதாரணமாகக் காட்டப் போகின்றேன். சுயத் தம்பட்டம் என எண்ணிவிட வேண்டாம். இது சுய பரிசோதனை. என் குறைகள், என் பலஹீனங்களை மறைக்காமல் சொல்வேன். என்னுடைய பயணத்தில் வேறு சில பக்கங்களையும் பார்க்கலாம். இதிலும் வரலாற்றின் மூலம் பிரச்சனைகளைக் கூற விரும்புகின்றேன். வரலாற்றை மாற்றும் வித்தகர்களையும் காணலாம். நல்ல எண்ணத்துடன் ஓர் விதை விதைக்க முயற்சிக்கின்றேன்.

இறைவனின் பூலோக யாத்திரையில் கண்ட காட்சிகளை வரலாற்றின்படி வளர்ச்சி, பின்னர் வீழ்ச்சியின் காரணங்களை அலசலாம். உலகைப் படைத்தவனையே உலுக்கி யெடுத்த ஊடகங்களையும் பார்க்கலாம்.

எழுதுவதற்கு சக்தி கொடுக்க இறைவனை வேண்டுகின்றேன். .

நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய், உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்! உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே! நான் எதையும் சாதிக்க வல்லவன்” என்று சொல். நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம்கூட சக்தி யற்றது ஆகிவிடும். பலமே வாழ்வு; பலவீனமே மரணம்!
-சுவாமி விவேகானந்தர்

[தொடரும்]

Series Navigationசுஜாதாவின் வெள்ளி விழா முன்னுரையும், சுப்ரபாரதிமணியனின் கொஞ்சம் கவிதைகளும்புதியதோர் உலகம் செய்வோம் . . .
author

சீதாலட்சுமி

Similar Posts

2 Comments

  1. Avatar
    Dr.G.Johnson says:

    நாகரீக வளர்ச்சியில் மனிதன் மனிதாபிமானம் இழந்து கொண்டிருக்கிறான் என்பதை அழகாக பல எடுத்துக்காட்டுகள் மூலமாக இந்த வாரம் எழுதியுள்ளார் சீதாலட்சுமி. அவர் தனது 25 வயதில் எழுதிய அங்கத கதைகள் பற்றியும் இங்கே குறிப்பிட்டுள்ளார். படிக்க சுவையாக இருந்தன.

    பிள்ளைகள் பற்றி சொன்னது உண்மை. இன்று பிள்ளைகள்மேல் நாம் சரிவர கண்காணிப்பு இல்லாமல்தான் வளர்கிறோம்.அவர்களின் பொழுதுபோக்கு அப்படி.

    அதுபோன்றேதான் சமுதாயமும். அரசியலும் நம்மை வஞ்சித்து வருகிறது. நேர்மையான அரசியல் தலைவர்களைப் பார்ப்பது அரிதாகிவிட்டது. பொய்யும் , புறட்டும் ஊழலும் மலிந்துபோனது.

    இன்னும் சாதி வேற்றுமை தீர்ந்தபாடில்லை. இதில் பல்கலைக்கழக படிப்பும் பயனில்லை. படித்து பட்டம் வாங்கியவனும் சாதிதான் பார்க்கிறான் திருமணத்தின்போது! இப்படியே போனால் சாதி எப்படி ஒழிவது?

    என்னைப் பொறுத்தவரை இந்தியர்கள் சாதியின் அடிப்படையில் இப்படி பிரிந்து வாழ்வதும், அதை அரசியல் தலைவர்கள் தங்களின் சுய இலாபத்துக்குப் பயன்படுத்தும் வரையிலும், உலக அரங்கில் இந்தியனுக்கு தலைகுனிவே! எழுத்தாளர்களும், கவிஞர்களும், இதர படைப்பாளிகளும் எழுதுவது எல்லாமே விழலுக்கு இரைத்த நீர்தான்!……………………………

    டாக்டர் ஜி. ஜான்சன் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *