13-ம் நம்பர் பார்சல் – புது நாவல் தொடர் (5,6)

This entry is part 10 of 18 in the series 3 ஜனவரி 2016

( 5 )    

   

நினைத்தது போலவே செக் போஸ்டில் கெடுபிடி. போலீஸ் கூட்டம் வேறு ஸ்பெஷலாய் நின்றிருந்தது. எதேனும் ஒன்றில் முனைந்து விட்டார்களென்றால், அவர்களின் பணியின் தன்மையே தனிதான். புயலாய்ப் பணியாற்றுவார்கள். எந்தக் கொம்பனும் அவர்களின் பிடியிலிருந்து தப்பிவிட முடியாதுதான். ஆனாலும் திருட்டுத்தனம் செய்பவர்களும், கடத்தல்காரர்களும் அதற்கும்மேல்தான் சிந்திக்கச் செய்கிறார்கள். அதுவும் அவர்களுக்குத் தெரிந்துதான் இருக்கிறது. எந்த மேலிடத்தின் குறுக்கீடும் இல்லாதிருக்க வேண்டும். நிச்சயம் கதையை முடித்து விடுவார்கள்.

கார் தானாகவே வேகம் குறைந்தது. தப்பிச் செல்வது அத்தனை சுலபமில்லை. குறுக்கே லாரி வேறு நிற்கிறது. அதையும் மீறினால் பாலத்திலிருந்து பறந்து ஆற்றுப்படுகையில்தான் விழ வேண்டும்.

மாமு, வண்டிய அப்டியே ஸ்டெடியா ஸ்லோ பண்ணி நிறுத்திக்கோ…கெடுபிடி ஜாஸ்தியா இருக்கும் போலிருக்கு…..

கார் மெல்லக் குலுங்கி நிற்க காக்கி உடைகள் நெருங்கின சுறுசுறுப்பாக.

( 6 )

தலையில் கைவைத்து அமர்ந்திருந்தார் மைக்கேல் ராபர்ட். மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கியாயிற்று. மீன் குஞ்சுக்கு நீந்த்த் தெரியும் என்று நினைத்தது தப்பாய்ப் போய் விட்டது. தலையில் அடித்துக் கொண்டார்.

என்ன செய்யலாம்? உதவியாளரிடம் கேட்டார்.

முதல்ல எங்கே கொண்டு போயிருக்காங்கன்னு பார்க்கணும். ஏரியா டி.எஸ்.பி. யாருன்னு விசாரிக்கணும். பிறகு நம்ம ஆட்களோடு போய் முயற்சி எதுவும் பலிக்குமான்னு யோசிக்கணும்.

பலிக்குமாவா? பலிச்சாகணும்யா…இல்லேன்னா நாமெல்லாம் கூண்டோட கைலாசம். எந்த ஏரியாவில் பிடிச்சிருக்காங்கன்னு கவனிச்சியா? குறுக்கு வழி எது எதுன்னு அத்தனையையும் தெரிஞ்சி வச்சிருக்கு போலீஸ். நாம எப்படியும் தப்பிச்சாகணும். நா இவனை அனுப்பினா ப்ரெண்ட்சுகளையுமில்லே கூட இழுத்திட்டுப் போயிருக்கான்? இது ஊருக்கே டமாரம் போட்டு சொன்ன மாதிரியில்லே இருக்கு? மடப்பய மவன், மடப்பய மவன்…வெறி பிடித்தாற்போல் கத்தினார் மைக்கேல் ராபர்ட்.

வெல்டன் டேவிட்…வெல்டன்…புலிக்குப் பிறந்த்து பூனையாகாதுன்னு நிருபிச்சுட்டீங்க     ஒண்டர்புல்…ஓண்டர்புல்…

கையை இழுத்துக் குலுக்கி தன் ஆட்களை பலமாகக் கைதட்ட வைத்து டேவிட்டை வாழ்த்தினார் கஜராஜ்.

இந்த வேலையை சின்னப் பையனான உங்கிட்ட ஒப்படைச்சிருக்கேன்னு உங்கப்பா சொன்னப்போ, நான் பயந்துதான் போனேன். ஆனா அந்த எண்ணத்தை தூள் தூளாக்கிட்டே நீ…போலீஸ் கண்ணில மண்ணைத் தூவிட்டு எப்படி இதை சாதிச்சே…

வெரி சிம்பிள் அங்கிள். மலைப்பாதை முடிஞ்சு பைபாஸ் ரோட்டில ராத்திரி பத்து மணிக்குள்ளே கஞ்சா கட்த்துறதா முதல்லயே போலீசுக்கு யாரோ மாதிரி ஃபோன் பண்ணிச் சொல்லிட்டேன்… அப்பா தனியா கொடுத்த எக்ஸ்ட்ரா பார்சலை ஒருத்தனுக்கும் தெரியாமே காரிலே மறைச்சு வச்சேன். நாலஞ்சு நாளாகவே டூர் போவோம், டூர் போவோம்னு அனத்திட்டிருந்த என் நண்பர்கள்கிட்டே வேணுங்கிற பணத்தைக் கொடுத்து என் கார் ரிப்பேர்னு சொல்லி இன்னொருத்தனோட கார்லயே அனுப்பினேன். நாளைக்கு லைட் பெங்களுர்ல வந்து நான் ஜாய்ன் பண்ணிக்கிறதாச் சொன்னேன். அவங்க கார் பிடிபட்டிருக்கிற அதே நேரத்துல மெயின் ரூட்ல பஸ்ஸோட பஸ்ஸா, லாரியோட லாரியா, சொகுசா சுலபமா எந்தவித டிரபிளும் இல்லாமே அனாயாசமா உங்ககிட்டே வந்து சேர்ந்துட்டேன் அவ்வளவுதான்….

மலைத்து நின்றார் கஜராஜ். அதற்கு மேல் ஒன்றும் கேட்கவில்லை. மலையாக வந்த பத்துக் கோடி ரூபாய் பணம் ஆளைக் கிறங்கடிக்க மைக்கேலுக்கு மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள எண்களை ஒத்தினார்.

அவசியமில்லை அங்கிள். அவசரப்படாதீங்க…நான் கிளம்பறேன். நேரில விஷயத்தை உடைக்கிறவரைக்கும் விஷயம் சஸ்பென்ஸாவே இருக்கட்டும்…

இட்ஸ் ஓகே…இன்னிக்கே இந்த சரக்கை உரிய பார்ட்டிக்கு மாத்திடறதா உங்கப்பாகிட்டே சொல்லு… கைமேல் கேஷ்…அன்டர்ஸ்டான்ட்…

புரிஞ்சிது அங்கிள்….

Series Navigationஎனது நோக்கில் ” முடிவுறாதா முகாரி “மௌனத்தின் பக்கங்கள்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *