2011 ஜப்பான் புகுஷிமா அணு உலை வெடி விபத்துக்களில் வெளியான கதிரியக்கக் கழிவுகள் -4

This entry is part 41 of 46 in the series 19 ஜூன் 2011

(ஜூன் மாதம் 8, 2011)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

“புகுஷிமா அணு உலை விபத்துக்களின் தீவிரப் பாதிப்புக்களை யாரும் இன்னும் தெளிவாக ஆழ்ந்து அறியும் நிலைக்கு நெருங்க வில்லை !  வெப்பக் கட்டுப்பாடு இன்னும் அணுமின் உலைகளில் நடந்து கொண்டிருப்பதால், கதிரியக்க வெளியேற்றத்தின் அளவு ஏறத்தான் போகிறது.  அகில நாட்டு அணுவியல் நிபுணர் ஆலோசனைகளை வரவேற்க ஜப்பானியர் அனுமதி அளிக்க வேண்டும்.”

நில்ஸ் போமர், ஆஸ்லோ பெல்லோனா அணுவியல் பௌதிக நிபுணர் (ஜூன் 6, 2011)

“இந்த எதிர்பாராத துன்பமய நிகழ்ச்சி ஜப்பானில் எதிர்கால அணுமின்சக்தித் திட்டங்களைத் தவிர்க்கப் போவதில்லை.  புதிய அணுமின் சக்தி உற்பத்தித் திட்டங்கள் செம்மைப் படுத்தப் பட்டாலும் பெருமளவில் மாற்றம் அடையப் போவதில்லை.  இப்போதும் அணுமின்சக்தி ஆதரிப்பாளர் எண்ணிக்கை எதிர்ப்பாளர் எண்ணிக்கையை விட இரண்டரை மடங்கு (42% Versus 16%) மிகையாகவே உள்ளது.”

பேராசிரியர் அதனாஸ் தஸேவ் (Bulgarian Nuclear Forum, Energy Expert)


நவீன ரஷ்ய அணுமின் உலைகளைக் கட்டுவ தென்றால் தற்போதைய பாதுகாப்பு நெறிப்பாடு விதிகள் மிகக் கடுமையாக எழுதப்பட்டுள்ளன.  அணு உலை எரிகோல்களின் அபாய வெப்பத்தைத் தணித்துப் பாதுகாக்கப் பல்வேறு நீரனுப்பு முறைகளை நாங்கள் அமைத்திருக்கிறோம்.  எங்கள் நவீன AES-2006 மாடல் அணுமின் நிலையத்தில் இயக்க முறைப்பாடு, ஓய்வு முறைப்பாடு (Active & Passive Emergency Coolant Systems) என்னும் இரட்டை நீரனுப்பு ஏற்பாடுகள் எரிக்கோல்களின் அபாய வெப்பத்தை உடனே தணிக்க அணு உலையின் கோட்டைக்குள்ளேயே இரட்டைக் குழாய்ப் பைப்போடு இணைக்கப் பட்டுள்ளன.  அத்தோடு வெப்பக் கோல்கள் உருகி விட்டால் தாங்கிக் கொள்ளும் கும்பாவும் (Fuel Rods Melt Trap) கீழே அமைக்கப்பட்டு உள்ளது.  மேலும் ஓய்வு வாயு வெப்பத் தணிப்பி, நீண்ட கால அணுப்பிளவுக் கதிரியக்கச் சுத்தீகரிப்பு ஏற்பாடு, ஹைடிரஜன் வாயு மீள் இணைப்பிகள்  போன்றவையும் அமைக்கப் பட்டுள்ளன.  செர்நோபில் விபத்துக்குப் பிறகு கடின முறையில் நாங்கள் கற்றுக் கொண்ட பாடங்கள் இவை யெல்லாம்.

லியோனிட் போல்ஸோவ் (Director, Institute of Safe Development of Nuclear Power Industry)


ரஷ்யாவின் ரோஸாட்டம் குழு (Rosatom Group) ஜப்பான் நாடு அழைத்தால் முடங்கிப் போன அணு உலைகளுக்கு உதவி செய்யத் தயாராய் இருந்தது.  எந்த எந்தத் துறைகளில் உதவி தேவை என்று ஜப்பான் கேட்டால் அந்த அந்தத் துறைகளில் உடனே உதவிட நாங்கள் எதிர்பார்த்திருந்தோம்.  (ஆனால் மெய்யாக அழைப்பு வரவில்லை).

செர்கி நோவிகோவ் (Sergei Novikov, Head of Communication at Rosatom)

“விஞ்ஞானப் பொறியியல் நிபுணத்துவத்தில் முற்போக்கான ஜப்பானியர் எப்படி நான்கு அணுமின் உலைகளின் வெப்பத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறிப் போனார் என்று ரஷ்ய அணுசக்தித் துறையினர் குழம்பிப் போயுள்ளார்.  முடியாமைக்குக் காரணம் நிலநடுக்கம், சுனாமி ஆகிய இரு நிகழ்ச்சிகளின் கூட்டு விளைவு என்பது என் கருத்து.  எந்த அணுமின் சக்தித் திட்டமும் இந்த அசுர அளவு பூகம்பத்துக்கும் (ரிக்டர் : 9) 30 அடி உயரச் சுனாமி எதிர்பார்ப்புக்கும் டிசைன் செய்யப் படவில்லை.

விலாடிமிர் குபரேவ் (Vladimir Gubarev, Chernobyl Burial Drama Author)

முன்னுரை: 2011 மார்ச்சு மாதம் 11 ஆம் தேதி ஜப்பான் கிழக்குப் பகுதியைத் தாக்கிய 9 ரிக்டர் அளவு அசுர நிலநடுக்கத்தில் கடல் நடுவே 50 அடி (14 மீடர்) உயரச் சுனாமி எழுந்து நாடு, நகரம், வீடுகள், தொழிற்துறைகள் தகர்ந்ததோடு, புகுஷிமா அணுமின் உலைகளின் எரிக்கோல்கள் வெப்பத் தணிப்பு நீரின்றி, ஓரளவு சிதைந்து, ஹைடிரஜன் வாயு சேமிப்பாகி வெளியேறி மேற்தளக் கட்டங்கள் வெடித்தன.  அத்துடன் ஒன்று அல்லது இரண்டு அணு உலைக் கோட்டை அரணில் பிளவு ஏற்பட்டுக் கதிரியக்கப் பிளவுத் துணுக்குகள் (Radioactive Fission Products) சூழ்வெளியிலும், கடல் நீரிலும் கலந்தன.  அந்தப் பேரிழப்பால் பல்லாயிரம் பேர் உயிரிழந்தும் பிழைத்துக் கொண்டோர் வீடிழந்தும், தமது உடமை இழந்தும், சிலர் கதிரியக்கத்தாலும் தாக்கப்பட்டார்.  நான்கு  அணுமின் உலைகளில் பெருஞ் சேதம் ஏற்பட்டதால் ஜப்பான் நாட்டில் 2720 மெகா வாட் மின்சக்தி (MWe) உற்பத்தி குன்றி அண்டை நகரங்களில் பேரளவு மின்வெட்டுப் பாதிப்புகள் நேர்ந்துள்ளன.

தற்போது முப்பது உலக நாடுகளில் 430 அணுமின் நிலையங்கள் [அமெரிக்காவில் திரி மைல் தீவு, ரஷ்யாவில் செர்நோபிள் நிலையம், ஜப்பானில் புகுஷிமாவின் நான்கு அணுமின் உலைகள் ஆகியவற்றைத் தவிர] பாதுகாப்பாக இயங்கி சுமார் 370,000 MWe (16%) ஆற்றலைப் பரிமாறி வருகின்றன.  மேலும் 56 நாடுகளில் 284 அணு ஆராய்ச்சி உலைகள் அமைப்பாகி ஆய்வுகள் நடத்தப் பட்டு வருகின்றன.  அணு மின்சக்தி நிலையங்கள் 1950 ஆண்டு முதல் தோன்றி மின்சாரம் அனுப்பத் துவங்கிய பிறகு தொடர்ந்த 60 ஆண்டுகளில் ஆறு பெரிய கதிரியக்க விபத்துகள் நிகழ்ந்துள்ளன.  அதாவது 2011 ஆண்டு மார்ச்சு வரை உலக அணு உலைகளில் சராசரி 10 ஆண்டுக்கு ஒருமுறை ஒரு பெரு விபத்து நேர்ந்திருக்கிறது !  ஜப்பான் புகிஷிமா அணு உலைகள் விபத்துக்குப் பிறகு எதிர்கால அணுமின் சக்திக்கு உலக நாடுகள் இன்னும் ஆதரவு அளிக்கின்றனவா அல்லது எதிர்ப்பு அறிவிக்கின்றனவா என்பதை விளக்கமாய் ஆராய்வதே இந்தக் கட்டுரையின் குறிக்கோள்.


புகுஷிமா விபத்து அணுமின் உலைகளின் தற்போதைய நிலை

2011 மே 31 இல் அகில நாட்டு அணுவியல் பேரவை (IAEA) ஜப்பான் புகுஷிமா அணுமின் உலைகளின் அப்போதைய நிலையை வெளியிட்டது.  IAEA இன் மூன்று முக்கிய பாதுகாப்பு விதிகளை நிலைய இயக்குநர் பாதிக்கப் பட்ட நான்கு அணு உலைகளிலும் தொடர்ந்தனர்.

1.  உருகிய எரிக்கோல்களால் மீண்டும் பூரணத் தொடரியக்க விபத்து எழாமல் தடுப்பது. (Prevention of Criticality Chain Reaction).

2.  நிறுத்தமான அணு உலை எரிக்கோல்களின் தேய்வு வெப்பத் தணிப்பு ஏற்பாடு தொடர்ந்து இயங்கி வருவது (Removal of Decay Heat of Shutdown Fuel

3.  கதிரியக்க வெளியேற்றம் கவசத்தாலும், கட்டுப்பாடாலும் கூடியவரைக் குறைக்கப் படுவது (Mitigation of Radioactive Releases).

அத்துடன் சேமிப்புத் தடாகங்களில் தீய்ந்த எரிக்கோல்கள் நீரில் மூழ்கப்பட்டுத் தடையின்றித் தணிப்பு நீரோட்டச் சுற்று தொடர வேண்டும்.  டெப்கோ நான்கு யூனிட்டுகளின் சேமிப்பு எரிக்கோல்களுக்கு தடாகத்தில் போதிய நீரை தொடர்ந்து அனுப்பி வருகிறது.

அபாயத் தடுப்பு முறையில் கதிரியக்க வெளியேற்றத்தைக் குறைப்பதற்கு வெடித்த யூனிட் 1 அணு உலை மேற் கட்டடத்தைத் தற்காலியமாக மூட டெப்கோ நிறுவகம் முயன்று வந்தது.

கதிரியக்கம் கசியும் பிளவுகள் அடைக்கப் பட்டு கதிர்வீச்சுக் கவசங்கள் (Radiation Shieldings) அமைக்கப் பட்டன.

ஹைடிரஜன் வாயு தீப் பற்றுவதைத் தடுக்க நைட்ரஜன் வாயு யூனிட் 1 அணு உலைக்குள் செலுத்தப் பட்டது.

யூனிட் 1, 2 & 3 அணு உலைக்குள் நீரனுப்புப் பைப்புகள் மூலமும், தீயணைப்புப் பைப்புகள் வழியாகவும் தொடந்து புதிய நீர் அனுப்பப் படுகிறது.  இப்போது அணு உலை எரிக்கோல்களின் வெப்பமும், தணிப்பு நீர் அழுத்தமும் குறைக்கப் பட்டுக் கட்டுப்பாடு நிலை மேவி வருகிறது.

யூனிட் 1 & 3 டர்பைன் கட்டடத்தின் அடித்தள அறையில் சேமிப்பான உயர்நிலைக் கதிரியக்கம் உள்ள நீர் வெள்ளம் கதிரியக்கக் கழிவுச் சுத்தீகரிப்பு ஏற்பாட்டின் (Radioctive Waste Water Treament Facility) குளிர்க் கலன்களுக்கு (Condensers) அனுப்பப் பட்டது.


புகுஷிமா அணுமின் நிபுணர் கதிரியக்கக் கழிவு வெளியேற்ற அறிவிப்பு பாதியே !

2011 மார்ச் ஜப்பான் பேரலைச் சுனாமியில் விபத்துக்குள் சிக்கிய புகுஷிமா அணுமின் நிலையங்களின் உரிமையாளர் நிறுவகம் டெப்கோ (Tepco -Tokyo Electric Power Company) முதன்முதலாக ஜூன் 6 ஆம் தேதி யூனிட் 1, 2, 3 ஆகிய மூன்று அணு உலைகளின் எரிக்கோல்கள் பூராவும் உருகிப் போனதாக ஒப்புக் கொண்டது.  அது இதுவரை வெளியேறிய கதிரியக்க வெளிவீச்சுக் கசிவுகள் அளவை அறிவித்ததை விட இரண்டு மடங்கு என்றும் கூறியது !  அதாவது 1986 செர்நோபில் வெடி விபத்தில் சூழ்வெளியில் பரவிய கதிரியக்க அளவில் 40% புகுஷிமாவில் வெளியேறியதாக இப்போது அறியப் படுகிறது.  இதற்கு முன்பு ஜப்பானிய அரசாங்கம் அணு உலையில் எரிக்கோல்கள் உருகிப் போக வாய்ப்பில்லை என்று மாறாக அறிவித்து வந்தது !  ஜப்பான் தேச அணுசக்திக் கட்டுப்பாடு ஆணையகமும், அணுசக்தித் தொழில் பாதுகாப்பு நிறுவகமும் (NISA) தமது மதிப்பீட்டின் படி விபத்து நேர்ந்த முதல் வாரத்தில் மட்டும் கதிரியக்க வெளியேற்றம் 770,000 டெரா பெக்குவரல் (tera-becquerels) அளவு இரண்டு மடங்குக்கும் மிகையென்று அறிவித்தது.  அதே சமயத்தில் அந்த ஆணையகம் முன்னால் குறைவாக வெளியிட்டது 370,000 டெரா பெக்குவரல் அளவு ! (one tera becquerel = one trillion becquerel).  மேலும் ஆணையகம் புகுஷிமா கதிரியக்கக் கசிவுகள் செர்நோபில் விபத்தில் நேர்ந்த வெளிவீச்சு போன்று 10% அளவென்று குறைத்து மதிப்பீடு செய்தது !  ஆனால் தற்போதைய மதிப்பீடு 770,000 டெரா பெகுவரல் செர்நோபில் வெளியேற்றத்தில் 40% வெளிவீச்சுக்குச் சமமாகும் !

பெரும்பான்மையான அணுவியல் நிபுணர் செர்நோபில் வெடி விபத்தில் வெளியேறிய கதிரியக்கக் கசிவுகள் சோவியத் ரஷ்யா அறிவித்ததற்கு மேல் ஒன்றரை முதல் இரண்டரை மடங்கு மிகையானவை என்று தற்போது மதிப்பீடு செய்கிறார்.  செர்நோபில் வெளிவீச்சு இரண்டு மடங்கென்று அனுமானித்தால், தற்போது புகுஷிமா கதிரியக்கக் கசிவுகளின் அளவு அறிவிப்பு செர்நோபில் வெளிப்பரவல் அளவுக்கு 20% என்று முடிவு செய்யலாம் !  தற்போதைய புதிய கதிரியக்க அறிவிப்பும் போகப் போக அளவில் அதிகமாகலாம்.  புகுஷிமா அணு உலைகளின் ஜப்பானிய அதிகாரிகள் கூறுவது:  யூனிட் 1 அணு உலையின் வெப்பத் தணிப்புக் கதிரியக்க நீர் 3000 டன் அடித்தள அறை ஒன்றில் சேமிப்பானது.  பெரும்பான்மையான கதிரியக்க வெளிக் கசிவுகள் கடலில் கலந்த நீரகத் திரவங்களே.  அவற்றில் உள்ள கதிரியக்கத் துகள்களின் அரை ஆயுள் சிறிதாக இருப்பதால் உயிரியல் பாதிப்புகள் குறைவே !  ஆயினும் 20 கி.மீ (12 மைல்) ஆர வட்டத்தில் வாழும் 80,000 பேர் புலம்பெயர நேரிட்டது !  அரசாங்கம் அணு உலைக் கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு இழப்பீடு செய்ய 100 பில்லியன் டாலர் வைத்திருப்பதாக ஒப்புக் கொண்டது.

புகுஷிமா அணு உலைக் கடற்பகுதி வெள்ளத்தில் கதிரியக்கக் கழிவுகள்

2011 மார்ச்சு மாதக் கடைசி வாரத்தில் புகுஷிமா அணு உலைக் கடற்பகுதி வெள்ளத்தச் சோதித்தில் விட்டு விட்டுக் கதிர்வீச்சு எழுச்சிகள் ஏறியது அறியப் பட்டது.  அதற்குக் காரணம் அணு உலை வெப்பத்தைத் தணிக்கும் நீரோட்டம் பிளவு பட்ட அரணிலிருந்து கசிந்து வெளியானதே !  புகுஷிமா அணுமின் உலைகளின் உரிமை நிறுவகம் டெப்கோ (Tokyo Electric Power Company -TEPCO) விதிக்கப் பட்ட பாதுகாப்பு எல்லைக்கு மேல் 1200 மடங்கு ஏறிய உயர்நிலைக் கதிர்வீச்சு (High Level Radition) ஐயோடின், சீஸியம், பேரியம், டெக்னீசியம், லாந்தனம் கடல் வெள்ளத்தில் இருப்ப தாக அறிவித்தது.  ஐயோடின்-131 கதிரியக்க அளவு 29 பெக்குவரல், சீஸியம்-134 இன் அளவு 5 பெக்குவரல், சீஸியம்-137 இன் அளவு 5.1 பெக்குவரல்.  அத்தகையச் சிறிய கதிரியக்கக் கலப்புகள் கடல் பெரு வெள்ளத்தில் நீர்த்துப் போய் சிறுப்பதால் (Diluted Profusely) பொது மக்களுக்கு ஏதும் திடீர் தீங்குகள் விளையா.  ஐயோடின்-131 இன் அரை ஆயுள் 8 நாட்கள். சீஸியம்-134 இன் அரை ஆயுள் 2 ஆண்டுகள், சீஸியம்-137 இன் அரை ஆயுள் 30 ஆண்டுகள். கடல் வெள்ளத்தில் இவற்றின் கலப்பு அளவு மிகச் சிறியதால் திடீர் தீங்குகள் உடனே பொது மக்களைப் பாதிக்கா.  புகுஷிமா அணு உலைப் பகுதி மீன்வளம் ஒரு சில ஆண்டுகள் பாதிக்கப் படலாம்.

(தொடரும்)

***************

தகவல்:

1. Safety of Nuclear Power Reactors, [www.uic.com.au/nip14.htm] (July 2007)

2. Nuclear Power Plants & Earthquakes [www.uic.com.au/nip20.htm] (Aug 2007)

3.  IAEA Issues Report on Kashiwasaki-Kariwa Nuclear Plant   (August 17, 2007)

4.  Third IAEA Report on Kasiwasaki-Kariwa Nuclear Plant  (Jan 29, 2009)

5.  Efforts toward Enhansing Scismic Safety at Kasiwasaki-Kariwa Nuclear Power Station  (Nov 14, 2009)

6.  Backgrounder on Earthquakes & Nuclear Power in Japan   (March 11, 2011)

7. Japan Nuclear Industry is in Meltdown [Sep 28, 2002]

8. Monju Fast Breeder Startup (Feb 10, 2010)

9.  Nuclear {Power in Japan (March 30, 2011)

10. Russia & India Report –  Lessons of Fukushima – Expert Opinions.  (March 28, 2011)

10 (a)  Macleans Magazine – Japan Fearing the Fallout  (March 28, 2011)

10 (b)  Radiation Spikes in Seawater Near Fukushima Reactor By : Jesse Emspak (March 30, 2011)

10 (c)  Fukushoma Radiation Comparison (March 30, 2011)

11. Monju Fast Breeder Restarts after 14 years of Suspension  (May 12, 2010)

12.  Fukushima & Chernobyl Compared (April 11, 2011)

13.  World Nuclear Association Report – Nuclear Power in Japan & Nuclear Safety and Seurity in the wake of Fukushima Accident (Updated in April 2011)

14. Fukushima : What Happened and What Needs to be done ? (April 10, 2011)

15. Japan Fukushima Damaged Nuclear Reactors’ Status (April 13, 2011)

16. Setbacks at Japan (Fukushima) Nuclear Plants (May 12, 2011)

17. World Nuclear Association Report : Fukushima Accident 2011 (May 30, 2011)

18. World Nuclear Association Report : Policy Responses to the Fukushima Accident. (May 31, 2011)

19 Wikipedea Report : http://en.wikipedia.org/wiki/Paks_Nuclear_Power_Plant (Hungarian Paks Atomic Plant Loss of Coolant Accident) (May 27, 2011)

20. Wikipedea Report :  List of Civilian Nuclear Accidents (June 4, 2011)

21. BBC News – Japan Nuclear Crisis : Fukushima Cold Shutdown for January 2012 (May 17, 2011)

22 BBC News – Fukushima Lessons may take 10 years to Learn By : Richard Black (June 8, 2011)

21. Environment News Service – Analysis: Japan Underestimated Fukushima Radiation Releases By Half – Author Charles Diggs (June 8, 2011)

22. IAEA Briefing on Fukushima Nuclear Accident (June 2, 2011)

************************
S. Jayabarathan  (jayabarat@tnt21.com) June 10, 2011
http:jayabarathan.wordpress.com/

 

Series Navigationதமிழ் இணையம் 2011ன் தொடக்க விழா மற்றும் நிறைவுவிழாதற்கொலை நகரம் : தற்கொலையில் பனியன் தொழில் திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணீயனுடன் பேட்டி:
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *