பாரிசில் இலக்கிய விழா, இலக்கியத் தேடல் விழா

author
0 minutes, 2 seconds Read
This entry is part 39 of 46 in the series 26 ஜூன் 2011

செய்தி : புதுவை எழில்

பாரீசிலும் சரி பாரில் வேறு எங்கும் சரி, விழாவைக் குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கிக் குறிப்பிட்ட நேரத்தில் முடிக்கும் வழக்கம் தமிழர்களிடம் இல்லை.
இதற்கு விலக்காக நடை பெற்ற விழா, இலக்கிய விழா-இலக்கியத் தேடல் விழா! சூன் திங்கள் 4 -ஆம் நாள் பாரீஸ் 14 – ஆம் வட்டத்தில் உள்ள
Maison de l’Inde என்ற இடத்தில் இவ்விழா நடந்தேறியது. இதில் மகா கவி தாகூரின் 150 -ஆவது ஆண்டு விழாவும் இடம் பெற்றது.

சரியாக 03 மணிக்கு, திரு இராமு ஜெயபால் இரட்டையர் குத்துவிளக்குக்கு ஓளி ஊட்டினர். ஆசிரியர் பி சின்னப்பா, திருமதி பவானி இராமு
இறைவேட்டலையும் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலையும் இனிமையாகப் பாடினர். செல்விகள் கோதண்டம் சாரா, கோதண்டம் ஒலியா நடேச கவுதம் இசைக்கு நாட்டியம் சிறப்பாக ஆடினர்.
தம் குரு திருமதி மஞ்சுளா ஸ்ரீதரன் பெயரை நிலை நாட்டினர். முத்தமிழ்ச் சங்கத்தின் தலைவர் அடியார்க்கன்பன் கோவிந்தசாமி செயராமன் வரவேற்புரை வழங்கினார். முன்னிலை வகித்த திருவாளர்கள் சுகுமாரன் முருகையன், தமிழியக்கன் தேவகுமாரன், பேராசிரியர் பா. தசரதன் தம் முன்னுரைகளில் தாகூரைப் பற்றிப் பல செய்திகளை உரைத்தனர். புதுவைத் தமிழுலகம் பேராசிரியர் செவாலியே சச்சிதானந்தம் அவர்களை நன்கு அறியும். விழாவுக்கு வந்திருந்த அவரை அவைக்கு அறிமுகம் செய்து பேசினார் அவர் நண்பர் திரு நாரா ராசவேலு. அவரைத் ஒடர்ந்து பேசிய பேராசிரியர் செவாலியே சச்சிதானந்தம் தாகூரைப் பிரஞ்சுக் கவிஞரும் நாவல் ஆசிரியருமான விதோர் யுகோவுக்கு ஒப்பிட்டு உரையாற்றினார்.தலைமை தாங்கிய திருமிகு அலன் ஆனந்தன் மகா கவி தாகூரின் மாண்புகளை விளக்கினார். பட்டினப் பாலை என்ற சங்க இலக்கியத்தைப் பிரஞ்சில் மொழி பெயர்த்த திரு கோபாலகிச்ணன் தம் நூலை அறிமுகப் படுத்திப் பேசினார். பொன்னாடைக்குப் பதிலாகப் புத்தகங்களைப் பரிசாக அளிக்கும் பழக்கம் இப்போது முதன்மை பெற்று வருகிறது. அதனை ஒட்டி, இவர்கள் அனைவருக்கும் முத்தமிழ்ச் சங்கம், இலக்கியத்தேடல் சார்பாக நூல்களை வழங்கியவர் திரு முனுசாமி சந்திரன்.

அடுத்துக் கருத்துரை அரங்கம். தலைமை : பேராசிரியர் பெஞ்சமின் லெபோ. முதல் உரை அளித்தவர் திருமதி அமல்ராஜ் எலிசபெத். தலைப்பு : (தாகூர்) தேசிய கீதம் தந்த விடுதலை வீரர். இந்திய நாட்டின் தேசிய கீதமாக விளங்குவது தாகூர் இயற்றிய பாடல் என்பதைக் கூறி அப்பாடலின் பொருளையும் தமிழில் விளக்கினார் இவர். (தாகூர்) சாந்திநேகேதனம் கண்ட கல்வியாளர் என்ற தலைப்பில் எடுப்பான குரலில் மிடுக்காக உரை ஆற்றிய பெருமை ஆசிரியர் ப . சின்னப்பாவைச் சேரும். கவிதாயினி லினோதினி சண்முகநாதன், சிலப்பதிகாரத்தில் காணும் கலை நயனகளைத் தொகுத்து வழங்கினார். தம் தலைமை உரையில், பேராசிரியர் பெஞ்சமின் லெபோ மகா கவி பற்றியும் அவர் படைத்த கீதாஞ்சலி பற்றியும் பிறர் அறியா அரிய செய்திகளை எடுத்துரைத்தார்.ஏனெனில் அவர்க்குத் தரப்பட்ட தலைப்பு : (தாகூர்) கீதாஞ்சலி படைத்த மகா கவி.

தொடர்ந்து கவியரங்கம். (தாகூர்) ஆன்மிகம் இசைத்த குயில் என்ற தலைப்பில் கவிதை படித்த திருமதி பவானி கீர்த்தியால் இராமு முதல் முறையாகக் கவியரங்கம் ஏறியவர். சிக்கலின்றி விக்கலின்றிக் கவிதை படித்தார். தாகூர் பற்றித் தாமே இயற்றிய பாடல் ஒன்றை இறுதியில் பாடிக்காட்டிப் பாராட்டைப் பெற்றார். திரு புலவர் பொன்னரசு, குறள், வெண்பா ஆகிய மரபுக் கவிதைகளில் கவிதை வழங்கி இறுதியில் பாட்டு ஒன்றுடன் தம் கவிதை அரங்கை நிறைவு செய்தார். இவர் தலைப்பு ; (தாகூர்) மானுடம் பாடிய வானம்பாடி.

இதனைத் தொடர்ந்து இலக்கியதேடலின் 9 ஆம் கூட்டம் நடை பெற்றது. உலக மொழிகளுக்கு எல்லாம் தாய் மொழி ஆவது தமிழ் மொழியே என்பதைச் சொல்லாய்வு வழிநின்று விளக்கினார் ஆசிரியர் பி. சின்னப்பா. அவர் கூற்றுக்கு வலிமை சேர்க்கும் வண்ணம், இலக்கியத் தேடலின் அமைப்பாளர் பேராசிரியர் பெஞ்சமின் லெபோ சில பல எடுத்துக்காட்டுகளைக் கூறினார்.
இறுதியில் திருமிகு ரவி பாலா நன்றி உரை நவில விழாக்கள் இனிதே நிறைவு பெற்றன. இரவு 9 மணிக்கு முடிவு பெற வேண்டிய விழா முன்னதாகவே 8 மணி அளவிலேயே முடிந்தது என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. இடையில் சிற்றுண்டி வழங்கப்பட்டது.
விழா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியவர்கள் :
பேராசிரியர் பெஞ்சமின் லெபோ, புலவர் பொன்னரசு.

Series Navigation21 ஆம் நூற்றாண்டில் பாதுகாப்பாய் இயங்கி வரும் அணுமின் நிலையங்கள் நாட்டுக்குத் தேவையான தீங்குகள் – 5ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 6
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *