திண்ணைப் பேச்சு – கனிமொழி, சின்னக் குத்தூசி பற்றி ஜெயமோகன் பற்றி பி கே சிவகுமார் பற்றி ஸிந்துஜா

This entry is part 50 of 51 in the series 3 ஜூலை 2011

பி கே சிவகுமார் எழுதியிருந்த பத்திக்குப் பின்னால் தான் ஜெயமோகனை நான் படித்தேன்.

முதலாவதாக எல்லா நிகழ்வுகள் பற்றியும் எல்லோரும் அல்லது ஜெயமோகன் போன்றவர்கள் கருத்துச் சொல்லியே ஆக வேண்டும் என்று எதிர்பார்ப்பது ஒரு அபத்தம். இரண்டாவது கனிமொழி வீழ்ச்சியைத் தொடர்ந்து கருத்துச் சொல்ல விரும்பாத ஒருவர், சின்னக் குத்தூசியின் மரணத்திற்குப் பிறகு அவரை ஏன் விமர்சனம் செய்தார் என்ற கேள்வி எழுப்புவது – ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையது என்று எனக்குத் தோன்றவில்லை.

சின்னக் குத்தூசியைப் பற்றி ஜெயமோகன் கருத்துத் தெரிவித்தது பற்றி எந்த முரண்பாடும் எனக்குத் தெரியவில்லை. அவர் சின்னக் குத்தூசியின் ஆளுமையின் ஒட்டுமொத்தமான கணிப்பை முன்வைத்ததாய் எனக்குப் படவில்லை. ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற வகையில் ஜெயமோகன் கருணா நிதியின் எழுத்துப் பற்றி முன்வைத்த கருத்துகளை எதிர்கொண்ட விதத்தை சுட்டிக் காட்டி அவருடைய சார்பு எப்படி அவரைத் தடம் புரள வைத்திருக்கிறது என்று சுட்டிக் காட்டுகிறார். இந்த விமர்சனம் சின்னக் குத்தூசி என்ற தனிமனிதர் பற்றியது மட்டுமல்ல, தமிழின் இதழியல் பங்களிப்பாளர்களுக்கு பெரும்பான்மைக்கு பொருந்தும் என்று சுட்டிக் காட்டுகிறார்.சீரிய இலக்கியவாதியாக வேடமிடும் அ மார்க்ஸ் முதல் சோ வரையிலும், சோலை முதல் தணிகைச் செல்வன் வரையிலும் இந்த விமர்சனம் பொருந்தக் கூடிய ஒன்றே. இலக்கியம் பற்றி எல்லோரும் கருத்துச் சொல்லலாம். ஆனால் இலக்கியவாதியைப் பற்றிய கருத்தாக அது மாறி எப்படி என் தலைவனை நீ விமர்சிக்கப் போயிற்று என்று கட்சி கட்டுவது நேர்மையில்லை. எனக்கு ஜெயமோகனைப் பிடிக்க வில்லை, இன்னின்ன காரணங்களுக்காக, கலைஞரின் எழுத்து எனக்குப் பிடிக்கும் இன்னின்ன காரணங்களுக்காக என்று சொல்லலாம். காரணமே சொல்லக் கூட வேண்டியதில்லை. என் மனப்போக்கிற்கு ஜெயமோகன் எழுத்து உகந்ததாய் இல்லை. ஆனால் விமர்சனத்துக்கு நோக்கம் கற்பிப்பதும் , விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட முறையில் தனிப்பட்ட தாக்குதல்களை நிகழ்த்துவதும் தான் சின்னக் குத்தூசி, இளையபாரதி போன்றவர்களின் போக்கு. இதைத்தான் ஜயமோகன் சுட்டிக் காட்டி ஒரு பொதுப்போக்கின் அடையாளமாக் அதைக் காண்கிறார்.

சின்னக் குத்தூசியிடம் இருந்த சிலாகிக்க வேண்டிய தன்மைகளை பாவண்ணனும் பிற நண்பர்களும் பட்டியலிட்டிருக்கிறார்கள்.

கருத்துச் சார்பு முழுக்கத் தவிர்த்து ஒருவரால் செயல்படமுடியாது என்று ஒப்புக் கொண்டால் கூட, மறு பக்கத்தைப் பார்க்கிற நேர்மை ஒரு பத்திரிகையாளருக்கு அவசியம். அது ஏன் அருகிப் போயிற்று என்பது நம் விவாதமாக இருக்க வேண்டும். மாறாக சின்னக் குத்தூசியை ஏன் ஜெயமோகன் விமர்சித்தார், அதுவும் அவர் இறந்தபிறகு என்ற கேள்வியாய் அது மாறிவிட்டது.

அதே போல் தான் கனிமொழி குறித்தமௌனமும்.

கனிமொழி பற்றிக் கருத்து சொல்ல என்ன இருக்கிறது? ஒரு குறிப்பிட ஊழல் வழக்கில் அவர் கைது செய்யப் பட்டிருக்கிறார். அதற்கான வழக்கு அரசியல் தலையீடு இல்லாமல்,   நடத்தப் பட்டு தாமதமில்லாமல் தீர்ப்பு வரையப் பட்டு, தவறு புரிந்தவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கிட வேண்டும் என்பதாகத் தான் இருக்கலாம். அரசியல் காரணங்களுக்காக வழக்குத் தள்ளிப் போடப்படாமல் சீக்கிரமாய் ஒரு முடிவுக்குக் கொண்டுவரவெண்டும். தகுந்த ஆதாரங்கள் இருந்தால் அதிக பட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று சொல்லலாம் அவ்வலவு தான்.

கனிமொழியின் கைது எப்படி “வீழ்ச்சி” என்று ஜெயமோகன் அர்த்தப் படுத்திக் கொள்கிறார் என்று எனக்குப் புரியவில்லை. தி மு க தேர்தலில் தோற்று வீழ்ச்சி அடைந்திருக்கிறது என்று சொல்லலாம், ஆனால் பொருளாதாரக் குற்றங்களுக்காக சிறை சென்றிருக்கும் ஒருவரின் நிலை வீழ்ச்சியல்ல.

கனிமொழியைப் பற்றி வேறு ஏதும் கருத்துச் சொல்ல வேண்டும் என்றால், கனிமொழி, மு க அழகிரி, ராகுல் காந்தி, அன்பு மணி என்று ஒரு பெரிய வாரிசுப் பட்டியல் பற்றித் தான் கருத்துச் சொல்ல வேண்டும். எப்படி நம் ஜன நாயகம் வாரிசு அரசியலாகவும் குடும்ப அரசியலாகவும் மாறிப் போயிற்று என்பதைப் பேச வேண்டும்.

கனிமொழியும், சின்னக் குத்தூசியும் ஒரு கட்டுரையில் இணைந்து பேசப்பட்டதன் பின்னணி, ஒருவரின் வீழ்ச்சிக்குக் கருத்துச் சொல்ல மறுத்த ஜெயமோகன் ஏன் இறந்த ஒருவரைப் பற்றி கருத்துச் சொல்ல வேண்டும் என்றல்லாமல், கனிமொழிக்கு தி மு க என்ற அரசியல் கட்சி கொடுத்த மரியாதையின் பொருத்தமின்மையையும், அருவருப்பையும் பதிவு செய்திருக்க வேண்டும். கட்சியின் கொள்கைக்காகவே அதனுடன் இணைந்து வருடக் கணக்கில் பணியாற்றிய சின்னக் குத்தூசி போன்ற ஒருவருக்கு தி மு க என்ற அமைப்பு கொடுத்த மரியாதை எத்தகையது என்பதையும், இந்த அவமதிப்பு கட்சியைப் பற்றியும், கட்சியின் தலைவரைப் பற்றியும் என்ன தெரிவிக்கிறது என்பதையும் பேசியாக வேண்டும்.

பி கே சிவகுமாருக்கு ஒரு பின் குறிப்பு : ஜெயகாந்தனின் மீது மிகுந்த மரியாதை பாராட்டுபவர் நீங்கள். அண்ணாதுரையைப் பற்றிய காத்திரமான, கடுமையான விமர்சனம் ஜெயகாந்தனால், அண்ணாவின் மறைவின் பின்பு உடனடியாக வெளிவந்ததை உங்களுக்குச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

Series Navigationநினைவு நதியில் ஒரு உயிரின் மிச்சம் !அணுமின் நிலையங்களின் எதிர்கால இயக்கம் பற்றி உலக நாடுகளின் தீர்மானங்கள் !
author

கோபால் ராஜாராம்

Similar Posts

3 Comments

 1. Avatar
  Kargil Jay says:

  மிகவும் திருப்தியான, ஏற்புடையதான கருத்துக்களை எழுதியிருக்கிறார் ஆசிரியர் கோபால் ராஜாராம்.

  போன வாரம் எழுதிய ரிஷான் ஷெரிப் பற்றிய கருத்துக்களும்
  ரொம்ப யதார்த்தமானதே. நானே ரீஷான் ஷெரிப்ஐ பாராட்டி எழுதலாம் என்றிருந்தேன். வாசகர்களுக்கு அந்தக் கஷ்டம் இல்லாமல் பார்த்துக்கொண்டார் ஆசிரியர்.

 2. Avatar
  மலர்மன்னன் says:

  மட்டுமல்ல, காங்கிரசில் இருந்த சம்பத், கண்ணதாசன் ஆகியோர் நெக்குருகியதைக் கிண்டலும் செய்தார். காரணம், சம்பத்தும் கண்ணதாசனும் அண்ணா என்கிற மனிதரை அறிந்தவ்ர்கள். எனவே மனம் நெகிழ்ந்தனர். ஜெயகாந்தன் ஒரு மணி நேரம் அண்ணாவுடன் பழகியிருந்தாலும் போதும், அவரை துச்சமெனக் கருதிப் பேச அவருக்கு மனம் வந்திருக்காது. அண்ணாவைக் கடுமையாக விமர்சிப்பதெல்லாம் தொலைவில் இருந்தால்தான் சாத்தியம். நெருங்கிவிட்டால் அவரது அன்புக்கு அடிமையாகிவிட வேண்டியிருக்க்கும். மிகவும் ஆச்சரியமான மனிதர் அண்ணா.
  -மலர்மன்னன்

 3. Avatar
  சிம்மக்கல் says:

  De mortuis nihil nisi bonum (Never speak ill of the dead.)

  இறந்தவரைப் பற்றிப் பேசுவது ஒரு பண்பாடற்றச் செயல். இருந்தாலும் செய்கிறார்கள். செய்கிறார்கள் என்பதனாலேயே அவை சரியென்று ஆகா.

  ஏன் பண்பாடற்றச்செயல்? இறந்தவர் எழுந்து தன்மேல் வைக்கப்படும் குற்றச்சாட்டுகளைப் பொய் என்று சொல்லமுடியாது. ஆதாரங்கள் காட்ட முடியாது. Dead men tell no tales.

  சொன்னவன் தனக்கு எதிர்ப்பு கிடையாது என்ற சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நிறைய பொய்களை வீசலாம். அவன் பெரிய எழுத்தாளன் என்றால் அவனை நம்புவோர் ஆயிரக்கணக்கில் இருப்பார்கள். ஆக, பொய்கள் ஓகோவென விற்கும் சந்தையாக மாறும் பொது வாசிப்புத்தளம். அஃது ஒரு ஆபத்து. This is unfair. A court of only the plaintiff. How can there be justice delivered there ? It is kangaroo court.

  நீதினெறியற்றச் செயல். இதை நீங்கள் விரும்புகிறீர்களா ?

  ஜெயகாந்தன் செய்தார் எனவே சரி என்பது என்ன வாதம் ?

  சின்னக்குத்தூசி எழுத்துத்திறமை வாய்ந்த அனுபவஸ்தர். அவரின் மேல் வைக்கப்படும் விமர்சனம் அவர் காலத்திலேயே செய்யப்பட்டிருந்தால் கண்டிப்பாக அவரால் அதை எதிர்த்துத் தன்பெயரைக் காத்துக்கொள்ள முடியும். அவரில்லை. எனவே ஜெயமோகன் எழுதுகிறார். நீங்கள் சரியென்கிறீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *