கதையல்ல வரலாறு: ருடோல்ப் ஹெஸ்ஸென்ற பைத்தியக்காரன் -? (தொடர்ச்சி)

This entry is part 3 of 41 in the series 7 ஆகஸ்ட் 2011

அதற்கும் மறுநாள் ஒரு திங்கட்கிழமை, ஜெர்மன் அரசாங்கத்தின் வானொலிச் செய்தியைத் தவறாமல் கேட்கின்றவர்களுகென்றே ஓர் அறிவிப்பு, அரசாங்கத்தின் ஊர்ஜிதப்படுத்தப்பட்ட தகவலாக வாசிக்கப்பட்டது. ஜெர்மனியரை திகைப்பில் ஆழ்த்திய அறிக்கையின் சாரம் இதுதான்:

“தேசிய சோஷலிஸ்டு கட்சி அதிகாரபூர்வமாக வெளியிடும் செய்தி: தோழர் ருடோல்ப் ஹெஸ் கடந்த சிலவருடங்களாகவே இனம் காணவியலாத நோயொன்றினால் பாதிக்கப்பட்டிருந்தார், எனவே அவர் வானில் பறப்பது முறைப்படி தடை செய்யப்பட்டிருந்தது, இத்தடையை மீறிய வகையில் ஒரு யுத்த விமானத்தை கையகப்படுத்தியுள்ளதாக அறிகிறோம்.”

“ருடோல்ப் ஹெஸ், ஆக்ஸ்பூர்க் யுத்த விமான தளத்திலிருந்து மே மாதம் பத்தாம் தேதி சனிக்கிழமையன்று புறப்பட்டுப் போனவர் திரும்பவில்லை.”

“போனவர் ஒரு கடிதத்தை விட்டுச் சென்றிருக்கிறார், அக்கடிதத்திலிருந்து அவர் மனநிலை பாதிக்கப்பட்டிருக்கிறாரென்பது உறுதிபடுகின்றது, பிரமை பீடித்திருப்பதாக அஞ்சுகிறோம். ”

“•ப்யூரெர் இப்பிரச்சினையில் தனிக்கவனம் செலுத்தியதன் விளைவாக தோழர் ‘ஹெஸ்’ ஸின் பாதுகாவலர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். தோழர் ஹெஸ்ஸின் விமான பயணம் பற்றிய முழுத் தகவல்களை தெரிந்திருந்த அவர்கள் •ப்யூரெர் ஆணைப்படி அதனை தடுத்து நிறுத்தியிருக்கவேண்டும், அல்லது உரிய நேரத்தில் அரசுக்கு சம்பவம் நடப்பதற்கு முன்பாக தெரிவித்திருக்கவேண்டும், இரண்டும் இல்லையென்றானதால் சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது”

தமது நெருங்கிய நண்பர் ஹெஸ்ஸின் திடீர் பயணத்தை உலகுக்கு இட்லர் எவ்வாறு அறிவித்திருந்தார் என்பதைத்தான் நீங்கள் மேலே வாசித்தீர்கள்.

ஒரு குற்றத்தில், குற்றவாளியை உடனடியாக கைது செய்யமுடியாத நிலையில் யாரை அரசாங்கம் சந்தேகிக்கவேண்டுமோ அவர்கள் எவரையும் குற்ற வளையத்துக்குள் இட்லர் அரசு கொண்டுவரவில்லை.’ஹௌஸ் ஷோபெரையோ, யுத்த விமான தயாரிப்பாளரும், அவரது நெருங்கிய மற்றொரு சகாவான மெஸ்ஸெர்ஷ்மிட்டையோ, ஹெஸ்ஸின் மனைவியையோ.. மூவரில் ஒருவரைக்கூட அரசு தொடவில்லை. ஹௌஸ் ஷோபெருடைய மகனை, விசாரணை என்ற பேரில் மூன்று மாதம் சிறை வைத்தார்கள். மூன்றாவது மாதம் விடுதலைசெய்யப்பட்டு வெளியில் வந்தவர் வழக்கம்போல தமது பணியினைத் தொடர அனுமதிக்கபட்டார். அடுத்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர், ஹெஸ்ஸின் பாதுகாவலர் ‘பின்ஷ்’. இவர் மூன்றாண்டுகள் சிறையிலிருந்தார். விடுதலைக்குப்பிறகு 1944ம் ஆண்டு கிழக்கு ஐரோப்பிய போர்முனைக்கு அனுப்பப்பட்டார். அங்கே அவர் ரஷ்யர்களிடம் சிக்கவே மீண்டும் சிறைவாசம்.

ஹெஸ்ஸின் பாதுகாவலர் ‘பின்ஷ்’ ஐ சிறைபிடித்த ரஷ்யர்கள், அவரது எஜமானருடைய பிரிட்டிஷ் பயணத்தின் உண்மையை அறிய பலவகைகளிலும் வதைசெய்தார்கள்: விரல்கள் உடைக்கப்பட்டன, உணவு மறுக்கப்பட்டது; உறங்க விடவில்லை. எவ்வளவு வதை செய்துமென்ன? அவருக்கு என்ன தெரியுமோ அதைத்தானே சொல்லமுடியும். அவர்களிடத்திலும் அதைத்தான் கூறினார். பதினோறு ஆண்டுகள் அவர் ரஷ்ய சிறையிலிருந்த பின்னர் விடுதலைப்பெற்று 1955ம் ஆண்டு ஜெர்மன் திரும்பினார்.

இனியும் ஹெஸ்ஸின் பயணத்தையும் அவருடைய திட்டத்தையும் மர்மப் பயணம் என்றோ, ரகசியப் பயணமென்றோ சொல்லிக்கொண்டிருக்க இயலாது. வெளியுலகம் அறிந்த ரகசியமாயிற்று. 1941ம் ஆண்டு மே 17ந்தேதி பிரிட்டிஷ் பிரதமர் வின்சன் சர்ச்சில் அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட்டிற்கு விளக்கமாக மே 11, 12, 14, 15 தேதிகளில் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் வெளிவிவகாரத்துறை அமைச்சகத்தின் பிரதிநிதி நடத்திய உரையாடலின் முழுவிபரத்தையும் ஓர் அவசரசெய்தியாக பாவித்து தகவல் அனுப்பியிருந்தார். இதற்கு முந்தைய தொடரில் நீங்கள் வாசித்தவைதான் அத்தகவல்கள் என்றபோதிலும் மீண்டும் ஒருமுறை உங்களுக்குச் சுருக்கமாக நினைவுபடுத்துவது நல்லது..

மே 11 மற்றும் 12 தேதிகளில் இரவில் நடந்த உரையாடலில் ஹெஸ் குறிப்புகளை வைத்துக்கொண்டு வளவளவென்று நிறைய பேசினாரென்றும். அன்றையப் பேச்சில் மூன்று விடயங்கள் அவரிடம் பிரதானமாக இருந்தனவென்றும் சொல்லப்பட்டிருந்தது. முதலாவது இங்கிலாந்து ஜெர்மன் நாடுகளிடையேயான கடந்த 30 ஆண்டுகால உறவுபற்றியப் பேச்சு. அதன் நோக்கம் ஜெர்மன் நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதும், பிரிட்டன் செயல்பாடுகளில் குற்றம் கண்டுபிடிப்பதும். இரண்டாவது எப்படியும் இட்லர் ஜெர்மன் மக்களின் முழு ஆதரவுடன், விமானப்படை மற்றும் அதி நவீன நீர்மூழ்கிக் கப்பல்களின் துணைகொண்டு கூட்டுபடைகளை வெல்லப்போகிறாரென்ற ஹெஸ்ஸின் கர்வப் பேச்சு. இங்கிலாந்துடன் சமாதானமாக போகவேண்டுமென்பதைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்த ஹெஸ்ஸின் பேச்சு பற்றியது, மூன்றாவது. •ப்யூரெருக்கு பிரிட்டனைப் பற்றி வெகுகாலந்தொட்டு உயரிய கருத்துக்கள் இருப்பதாகவும், அவை இனியும் தொடருமென்றும், அந்நம்பிக்கைக்கு இடையூறின்றி பிரிட்டன் ஜெர்மனுக்குச் சொந்தமான காலனிநாடுகளை திருப்பி அளித்து, ஐரோப்பிய விவகாரத்தில் ஜெர்மனியின் நடவடிக்கைகளில் பிரிட்டன் குறுக்கிடக்கூடாதென்று ஹெஸ் கூறியதும் முதல் நாள் ஹெஸ்ஸின் பேச்சில் குறிப்பிடத்தக்க விஷயம். ‘இங்கிலாந்துடன் சமாதானமாகப்போவதற்கு இப்போதுள்ள தலமைக்குப் பதிலாக வேறொரு அரசாங்கம் பொறுப்பேற்கவேண்டும்’ என்று ஹெஸ் தெரிவித்த இட்லர் விருப்பத்தையும் சர்ச்சில் மறக்காமல் தந்தியில் குறிப்பிட்டிருந்தார்.

மே 14ம் நாள் ‘ஹெஸ்” ஸ¤டன் நடந்த உரையாடலென்று:

1. சமாதான ஒப்பந்தத்தின் ஷரத்துகள் எதுவாயினும் ஜெர்மன் ஈராக்கின் ரஷீத் அலி குழுவினரை ஆதரிக்கும், அடுத்து ஈராக்கிலிருந்து பிரிட்டன் வெளியேறியே ஆகவேண்டும். 2. நீர்மூழ்கி கப்பல்களின் துணையுடன் இங்கிலாந்தின் உணவுப்பொருட்களின் வரத்தை தடைசெய்யும் வகையில் முற்றுகையை நீட்டித்து கடைசி இங்கிலீஷ்காரன் பசியால் துடிப்பதை ஜெர்மன் காணவேண்டும். என தந்தி தெரிவித்தது.

மே15ம்நாள் ஹெஸ்ஸ¤டனான பேட்டி என்ற வகையில் தந்தியில் அமெரிக்கா நட்புக்குகுகந்த நாடல்ல என்பதாகவும்; அமெரிக்காவின் ஆயுதங்கள், யுத்த விமானங்கள் ஆகியவைக்குறித்து ‘ஹெஸ்’ ஸ¤க்கு பெரிய அபிப்ராங்கள் ஏதும் இல்லை என்று கூறப்பட்டிருந்தது.

‘ஹெஸ்’ஸ¤டன் நடந்த உரையாடலென்று மேற்கண்ட தகவல்களைத் தெரிவித்திருந்த சர்ச்சில் ‘ஹெஸ்’ஸின் ஆரோக்கியம் பற்றி குறிப்பிட்டிருந்த தகவலும் வரலாற்றில் முக்கியத்துவம் பெறுகின்றது. இப்பிரச்சினை பின்னர் தெரியவந்தற்கு இங்கிலாந்து அரசாங்கமும் ஜெர்மன் அரசாங்கமும் ஹெஸ் உடல்நிலைகுறித்த அறிக்கையில் முரண்பட்டிருந்தைக் காரணமாகச் சொல்லலாம். ஹெஸ் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்ததாகவும், மன நிலை பாதித்ததன் அறிகுறி அவரிடம் சுத்தமாக இல்லையென்றும் சர்ச்சில் தந்தி தெரிவிக்கிறது. அதுவன்றி ஹெஸ்ஸின் முயற்சிகள் பற்றி இட்லர் அறிந்திருக்கமாட்டாரென தாம் நம்புவதாகவும், இங்கிலாந்தில் சண்டையின்றி சமாதானமாக போகவேண்டுமென்ற எண்ணத்துடன் ஒரு குழுவினர் இருப்பதாகவும், அவர்கள் இப்போதுள்ள பிரிட்டிஷ் அரசாங்கத்தை ஆட்சியிலிருந்து விரட்டிவிடுவார்களென்று அந்த’ ஆள் (ஹெஸ்) கூறுவதை நம்பாமல் இருக்கமுடியவில்லை என்கிறார் சர்ச்சில்.

வணக்கத்திற்குரிய அதிபருக்கு, மேற்கண்ட தகவல்கள் அனைத்தும் உங்கள் கவனத்திற்கு மட்டும் உரியது. எங்கள் தரப்பில் நாங்கள் விரும்புவதெல்லாம், இதுகுறித்த எத் தகவலையும் பத்திரிகையாளர்களுக்கு மூச்சு விடகூடாது. அதன் மூலம் ஜெர்மன் தலைவர்கள் குழப்பத்தில் நிறுத்தவேண்டும். நம்மிடம் கைதிகளாகவுள்ள எதிரிகளின் ராணுவ அதிகாரிகளுக்கும் அதுதான் நிலமை. நிச்சயமாக இப்பிரச்சினை ஜெர்மன் ராணுவத்தில் ஸ்திரமற்ற தன்மையை ஏற்படுத்தியிருக்குமென நம்புகிறேன், என எழுதி சர்ச்சில் முடித்திருந்தார்.

இதற்கிடையில் ‘ஹெஸ்’-ஐ •பார்ன் பரோவுக்கருகிலிருந்த மாளிகைக்குக் கொண்டு சென்று சிறை வைத்தார்கள். ஹெஸ் தொடர்ந்து சர்ச்சில் அரசாங்கத்தில் ஓர் அமைச்சரையேனும் தாம் சந்திக்க ஏற்பாடு செய்யவேண்டுமென்று நிப்பந்தம் கொடுத்தார். கிர்க் பட்ரிக், பிரிட்டிஷ் பிரதமரிடம் இதுபற்றி எடுத்துரைத்து கைதுசெய்யப்படுள்ள ஹெஸ்ஸ¤க்கு உதவ முன்வந்தார். சர்ச்சிலுக்கு உடன்பாடில்லை. தாம் இணங்கினால் சர்ச்சில் ஜெர்மனுடன் சமாதானம் பேச குறுக்குவழியில் இறங்கினாரென அரசியல் விமர்சர்கள் எழுதுவார்களென்று தவிர்த்தார். ஆனாலும் கிர்க் பட்ரிக் சளைக்கவில்லை. அதன் மூலம் ஹெஸ்சிடமிருந்து வேறு உண்மைகளை பெறமுடியுமென்பதுபோல பேசினார். இறுதியில் சர்ச்சில் அவர் யோசனைக்கு சம்மதிக்க சர் ஜான் சைமன் என்ற வெளிவிவகாரத்துறை முதன்மைச் செயலரை அனுப்பினார்கள். இப்படியொரு சந்திப்பு நிகழ்ந்ததாகவே காட்டிக்கொள்ளகூடாது என்று பிரதமர் அலுவலகம் தீர்மானித்தது. இச்சந்திப்பு பற்றிய முழு விபரமும் பின்னர் நூரம்பெர்க் விசாரனையின்போது வெளிவந்தது. இம்முறை உரையாடல் மூன்றுமணி நேரம் நீடித்தது. ஹெஸ், சர் ஜான் சைமனிடம் பிரான்சு நாட்டிலிருந்து 1940ம் ஆண்டு இங்கிலாந்துக்கு வரவேண்டுமென்று தமக்கு திட்டம் இருந்ததென்பதை உறுதி செய்தார். தொடர்ந்து

– எப்படியும் இன்றில்லாவிட்டாலும் ஒரு நாள் போரில் நாம்தான் ஜெயிக்கபோகிறோம், அப்படி இருக்கையில் சமாதான ஒப்பத்தத்திற்கு முன்பாக வெர்சாய் ஒப்பந்தத்தின்படி நம்மிடம் கைப்பற்றியவற்றை திரும்பவும் ஒப்படைக்கவேண்டுமென்று உங்களை ஏன் வற்புறுத்தக்கூடாதெனக் கேட்டதற்கு •ப்யூரெரிடமிருந்து வந்த பதிலென்ன தெரியுமா, ‘அப்படியே போரில் நாம் ஜெயித்தாலும், நல்லுறவை பேண்வேண்டும் என நினைக்கிறபோது இதுபோன்ற நிர்பந்தங்களை விதிக்கக்கூடாது’, என்றார். எங்கள் தலைவரின் நல்லெண்ணம் மட்டும் உங்களுக்குத் தெரியவருமெனில், சமாதானத்திற்கு நீங்கள் உடன்படுவீர்கள் என்று நினைத்தேன். தவிர மிக மோசமான உங்கள் நிலமையும் இப்படியொரு பயணத்தை மேற்கொள்ள எனக்குக் காரணமாயிற்று, -என்றார் ஹெஸ்.

– எங்கள் மீது நீங்கள் பரிதாபப் படுவதைவைத்து, மிகமோசமானதொரு தாக்குதலை நடத்த நீங்கள் திட்டமிட்டிருக்கிறீர்கள் எனக் கருதலாமா?

தலையாட்டிய ஹெஸ் மீண்டும் தமது நாட்டின் யுத்ததளவாடங்களின் எண்ணிக்கை, நீர்மூழ்கிக்கப்பல்களின் ஆற்றலென பேச ஆரம்பித்துவிட்டார். இடையில் குறுக்கிட்ட சர் ஜான் சைமன்:

– வந்தது எப்படி •ப்யூரெர் அனுமதியுடனா? அல்லது அனுமதி இன்றியா?

– அவரது சம்மதத்துடன் வந்தேனென்றா சொல்லமுடியும்? என்று பதில் கேள்விகேட்ட ஹெஸ், கடகடவென்று சிரிக்கிறார். சிரித்துமுடித்ததும் ஒரு சிறிய தாளை எடுத்து அவர் முன் பரப்பினார்.

‘ஒப்பந்தத்திற்கான அடிப்படை நிபந்தனைகள்’ என்று அதில் எழுதியிருந்தது. அதனைத் தொடர்ந்து ஹெஸ்:

– இவைகளெல்லாம் அவ்வப்போது எங்கள் தலைவர் முன்வைத்த நிபந்தனைகள், என்றார்.

சர் ஜான சைமன் அதனைப் படித்துபார்த்தார் புதிதாக எதுவுமில்லை, ஏற்கனவே இவோன் கிர்க் பட்ரிக்கிடம் ஹெஸ் கூறியிருந்தவைதான் அதிலிருந்தன.

(தொடரும்)

நாகரத்தினம் கிருஷ்ணா

Series Navigationஜூலையின் ஞாபகங்கள்நான் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சியம் – வாசிப்பனுபவம்
author

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *