நேரத்தில் மனிதனின் நெடும் பயணம்

This entry is part 27 of 41 in the series 7 ஆகஸ்ட் 2011

பாரிய அணு உலைகள் ,செயற்கை பசுமை, பறக்கும் மின்சார வாகனங்கள்  என  கி .பி 2050 இல் ஒரு இயந்திரச்சாலை போலவே  காட்ச்சியளித்தது ஜப்பானின் தலைநகரம் டோக்கியோ .இயந்திரங்களிடையே சில சில இடங்களில்  மனித நடமாட்டமும் இருந்தது .மனிதர்கள் புன்முறுவலுடனும் ஆச்சரியம் கலந்த முகத்துடனும் ஆங்காங்கே குழுக்களாக நின்று சாலையின் பாரிய திரைகளில் செய்தியை பார்த்துக்கொண்டிருந்தார்கள் .

அவர்களின் எதிர்பார்ப்பு, மகிழ்ச்சிக்கு காரணம் உலகையே தமது பக்கம் திருப்பும் வேலையில் அவர்களின் விஞ்ஞானிகள் ஈடுபட்டுக்கொண்டிருப்பது தான் .

 மத்திய விஞ்ஞான தொழில்நுட்ப மையத்தில் மும்முரமாக வேலைகளில்  ஈடுபட்டிருந்த விஜய்க்கு, இருந்த இடத்தில் ரோபோக்களின் உதவியால் உடல் அசையாத வேலை என்றாலும் மூளை படுவேகமாக இயங்கிக்கொண்டிருந்தது . காரணம் அடுத்த நாள் ஒளியின் வேகத்துக்கு இணையாக செல்லவிருக்கும் விண்வெளிக்கப்பல்  பயணத்திற்கு தயார்நிலையில் ஒரு குழுவே இயங்கிக்கொண்டிருந்தது .அதில் தொழில்நுட்பத்தை பரிசோதிக்கும்   பொறுப்பு விஜய்யிடம் இருந்ததால் குட்டித்தூக்கம் போட கூட நேரமில்லை .

இருந்தாலும் அங்கு வேலை செய்பவர்களுக்கு இத்தனை மணித்தியாலங்கள் கட்டாயம் உறங்கவேண்டுமென்று கட்டுப்பாடு இருந்தது.அங்கேயே சாய்ந்திருக்கும் கதிரையில் படுத்துக்கொண்டு ஒரு பொத்தானை அழுத்தியதும் கதிரையில் ஒரு வித அதிர்வு தொடர்ந்து இருக்க,இன்னொரு பொத்தானை அழுத்தி எழ வேண்டிய நேரத்தையும் பதிந்துவிட்டு  அப்படியே உறங்கிவிட்டான்  .

குறித்த நேரத்தில் எழுந்து வேகமாக இயங்க தொடங்கினார்கள் அவர்கள் .புறப்படும் நேரமும் நெருங்கிக்கொண்டிருந்தது .இறுதி செக்கன்கள் வரை தனது நோக்கம் தவிர வேறு எந்த நினைவுகளும் அவன் தலையை தட்டிப்பார்க்கவில்லை  .3 ,2 ,1 என செக்கன்கள் கணணி திரையில் எண்ணப்பட்டு முடிந்ததும் தனது விலங்குகளை அவிழ்த்து புறப்பட்டது விண்வெளிக்கப்பல் .

திணிவின்  காரணத்தால் உடனடியாக வேகத்தை ஆர்முடுக்க  முடியவில்லை . ஆனாலும் சிறிது நேரத்தில் தனது முழு இயந்திர சக்தியையும் பயன்படுத்தி கூடிய வேகத்தை பெற்றுக்கொண்டு பல மைல் தூரம் சென்றது  .ஒருவாரத்தில் கிரகங்களை தாண்டி செல்லத்தொடங்கியது .கிட்டத்தட்ட ஒரு வருடத்தின் பின் ஒளியின் வேகத்தின் அரைவாசியை பெற்றுக்கொண்டு சூரிய குடும்பத்தையும் தாண்டி விட்டது  .

 

உள்ளேயும் பல தொழில்நுட்ப வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டிருந்த விஜய்க்கு அவ்வப்போது தனது அப்பா ,மகன் பற்றிய சிந்தனை  எட்டிப்பார்க்கும்  .சில வருடங்களாக அவன் தனது தந்தையை பார்க்கவில்லை .இறுதியில் கூட அவன் அவரிடம் சொல்லிவிட்டு வரவில்லை .

அவன் காதல் மனைவி விபத்தில் இறந்து விட்டதால் தனது தந்தையிடமே தனது மகனை பராமரிக்கும் பொறுப்பை கொடுத்துவிட்டு வானியல் ,தொழில்நுட்பம்  என்று மூழ்கிவிட்டான் .

 

மனைவி இறந்ததை நினைத்துக்கொண்டு தனது வானியல் துறையில் கவனம் செலுத்தாமல் இருந்த தன்னை அப்பா தோளோடு தோள் நின்று தட்டிக்கொடுத்ததை நினைத்து ஒரே இடத்ததை பார்த்துக்கொண்டிருக்க  ,நண்பர்கள் கை  அவனை தட்டி “இன்னும் கொஞ்ச நேரத்திலை ஸ்பெஷிப் ஒளியின் வேகத்தில் 90 % ஐ அடையப்போகிறது “என மகிழ்ச்சியில் கட்டிப்பிடித்து ஜபநிஸ் பாட்டு ஒன்றையும்  பாடிக்கொண்டிருந்தார்கள் .

 

90 % மா !அப்பிடின்னா இனி எங்களுக்கு ஒரு நாள் எண்டா பூமியில் இருக்கிறவங்களுக்கு இரண்டு நாள் . நாங்க பூமியில் இருந்து புறப்பட்டு 2 வருடங்கள் ஆகிறதே! காலம் ஒரு புரியாத புதிர் என தனக்குள்ளேயே விஜய் நினைத்ததும் அவனது தந்தையின் ஞாபகம் மீண்டும் வந்தது .

“அப்பா நேரம்னா என்னப்பா ? டிக் டிக் ன்னு போகுமா ? “என ஆண்டு ஐந்தில் படிக்கும் போது  செல்லக்குரலில் அவன் கேட்ட கேள்வியை அப்பா கடவுள் மீது பழி போட்டு  புறக்கணிக்காமல் கைகளை பற்றிப்பிடித்து ஆற்றோரமாக அழைத்து சென்று அவனை தூக்கிப்பிடித்தபடி “நேரம்ங்கிறது இந்த ஆறு மாதிரிப்பா போய்க்கொண்டே இருக்கும் .ஒவ்வொரு இடத்திலையும் ஒவ்வொரு வேகம் .இது ஐங்ஸ்டெயின்ன்னு ஒரு பெரியவர் சொன்னது “.

 

அவன் கேட்ட சின்ன சின்ன கேள்விகளையும் அப்பா புறக்கணிக்காமல் ,அன்பாக பதில் தந்ததை எண்ணி கண் கலங்கியது . இயந்திரங்களோடு பழகியிருந்தாலும் அவனது உணர்வுகள் பூ போலவே இருந்தது .ஒரு தமிழனாக இருந்து இவ்வளவு தூரம் வந்ததற்கு காரணம் ,தனது மழலை கேள்விகளை தந்தை புறக்கணிக்காமல் சலிக்காமல் தேடிப்பிடித்தாவது அவனுக்கு விளக்கிவிடுவார் .

நேரம் பற்றிய இந்த விளக்கம் தான் அவனிடம்  நேரபயணம் பற்றிய எண்ணத்தை தூண்டியது .அவன் இந்த வானியல் துறைக்கு வந்ததன் காரணமும் அவன் தந்தை தான் .

என்ன தான் கரண்டியில் தேசிக்காய் வைத்து இலக்கை நோக்கி ஓடினாலும் அன்பு எனும் தேசிக்காய் விழுந்த பின் இலக்கை அடைந்து என்ன பயன் என சலித்துக்கொண்டான் .

மொத்தமாக பூமியில் இருந்து வந்து நான்கு வருடங்களும் ஓடிவிடவே விண்வெளி கப்பலும் கிட்டத்தட்ட ஒளியின் வேகத்தின் 99 % ஐ அடைந்தது .ஒளியின் வேகத்தை அடைந்ததும் விண்வெளிக்கப்பல் கொஞ்சம் ஆட்டம் கண்டு பின்னர் சரியாகிவிட்டது .

 

வழக்கம் போல தனது யோசனைகளை களைந்துவிட்டு தொழில்நுட்பத்தை பரிசோதிக்கும் வேலைகளில் இறங்கிவிட்டான் .எல்லாம் சரியாக இருந்தது . அதில் இருந்த அனைவருக்கும் என்ன பேசுவதென்றே தெரியாத அளவு மகிழ்ச்சி . காரணம் அவர்கள் அனைவரும் ஐங்ஸ்டேயினின் கனவை,கணிப்பீட்டை உணர்ந்துகொண்டிருக்கிறார்கள்  .

அவர்கள் விண்வெளிக்கப்பலில்   கழிக்கும் ஒவ்வொரு மணித்தியாலமும் பூமியில் ஒருவருடத்திற்கு சமம் .நேரத்தில் அவர்கள் எதிர்காலத்திற்கு பயணித்தார்கள்  .

அவன் தந்தையை பற்றி யோசித்துக்கொண்டிருந்தாலும் அவன் மனைவி இறந்த சோகத்தில் இருக்கும் போது அவனது தந்தை அருகில் வந்து “உறவுகள் எப்போதும் தொடர்ச்சியானதுடா கவலைப்படாதை ஒன்றோடொன்று எப்போதும் தொடர்பிருக்கும்.முடிவென்று ஒன்று இல்லை ” என்று சொன்ன ஆறுதல் வார்த்தைகள் அவன் மனதில் ஓடிக்கொண்டிருந்தது .

சில நாட்களில் பூமியிலிருந்து அவனது மகன் அனுப்பிய குரல் செய்தி அவனுக்கு கிடைத்தது .”அப்பா எப்படி இருக்கீங்க ?வாழ்த்துக்கள் வெற்றி கண்டுடீங்க. ஐங்ஸ்டெயின் கனவை நனவாக்கீடீங்க .” என்றதும் அவனது குரல் நிறுத்தப்பட்டு “நாசா மையத்தால் அனுப்பப்பட்ட முதல் பரீட்சார்த்த மிக வேகமான தொடர்பாடல் முறை ” என ரெக்கார்டிங் சொன்னது .

 

அவனுக்கு மிகவும் மகிழ்ச்சியும் ஆச்சரியமாகவும் இருந்தது . தனது மகனும் ஒரு விஞ்ஞானி என எண்ணி பெருமிதத்துடன் தனது குழுவுடன் சில நாட்களில் பூமியை மீண்டும் வந்தடைந்தான்  .ஆனால் பூமியில் ஆண்டு அப்போது 2020

2050  இல் இவர்களை அனுப்பியவர்கள் யாரும் இப்போது பூமியில் உயிரோடு இல்லை .ஆனாலும் ஒரு நினைவு சின்னத்தில் இவர்கள் பெயர்கள் “2050 இல் பூமியில் இருந்து புறப்பட்டவர்கள்.இவர்கள் வந்தடையும் ஆண்டு 2120 ”  என குறிப்பிட்டிருந்தது .

மக்கள் அனைவரும் வரவேற்ப்பு நிகழ்ச்சிகள் என அமர்க்களப்படுத்தியதோடு இளமையாகவே சென்று இளமையாகவே வந்தவர்களை பார்த்து ஆச்சரியப்பட்டனர் .

விஜய் வந்ததுமே தனது பேரப்பிள்ளைகளுடன் வந்திருந்தான் அவனது மகன் .மகன் மிகவும் வயது போனவனாய் இருந்தான் .மகனை பார்த்த மகிழ்ச்சி என்றாலும் விஜய்யிடம்  ஏதோ ஒரு நிறைவேறாத ஆசை ஒன்று இருந்தது .

ஒரு மகிழ்ச்சியான செய்தியை முகத்தில் மறைத்துக்கொண்டு வந்த மகன்  “அப்பா நான் பரடொக்ஸ் பிரச்சனைகளை நிவர்த்தி செய்து  இறந்தகாலத்துக்கு செல்லும் இயந்திரத்தை கண்டுபிடித்துவிட்டேன் “. என்று கூறியதும் பூரித்துப்போனான் விஜய் .

பரடொக்ஸ் னா என்ன தாத்தா என விஜய்யின் கொள்ளுப்பேரன் கேட்க்க விஜய்யின் மகன் அவனை தூக்கி வைத்து “இப்போ தாத்தாக்கு மறுபடியும் வயசு குறைஞ்சா இளமையாகீடுவன் இல்லையா ” என சொல்லிக்கொண்டே போனார் .

“ஆமா அப்புறம் “என வியப்பாக கேட்டான் அவன் .”அந்த இளமையான தாத்தாவை எனக்கு பிடிக்காம நானே  சுட்டு கொன்னுட்டேன்னா .அந்த இளமையானவரை சுட்டது யாரு ? இது தான் இறந்தகாலத்துக்கு போறதிலை இருந்த பிரச்சனை “.அடிப்படை ஒழுங்கு விதிமுறைகள் மீறப்படும் .

 

“புரியல்லையே  தாத்தா ஒரே குழப்பமா இருக்கு” என இதழை பிதுக்கி வைத்துக்கொண்டு சொன்னான் .”குழப்பமா இருக்கா ? அது தான் பரடொக்ஸ் “. அந்த குழப்பத்தை தான் தாத்தா இல்லாம பண்ணியிருக்கேன் .

இதை உணர்ந்து கவனித்துக்கொண்டிருந்த விஜய்க்கு கண்ணீர் ஊற்றியது .தனது அப்பாவை கட்டிப்பிடித்துக்கொண்டு அழ வேண்டும் போல இருந்தது அவனுக்கு .மீண்டும் தந்தையுடன் தான் இருந்த காலங்கள் வருமா என்று எண்ணி வருத்தப்பட்டான் .

 

தனது தந்தை விஜய்யின் இந்த பிரச்னையை உணர்ந்த மகன் ,தந்தையை  இறந்த காலத்துக்கு அனுப்பினான் .மீண்டும் சின்னவயதுக்கு சென்ற விஜய் தனது தந்தையின் ஒவ்வொரு விளக்கங்களையும் தெரிந்திருந்தாலும் மீண்டும் மீண்டும் ரசித்து கேட்டுக்கொண்டிருந்தான் .தான் எதிர்காலத்திலிருந்து வந்தவன் என்று தந்தையிடம் அவன் இறுதிவரை சொல்லவில்லை .

தன்னையே இழந்து தான்  வெளியில் தேடினாலும் மனிதனுக்கே உரித்தான அன்பு ,காதல் ஒன்றும் தேடினாலும் கிடைப்பதில்லை என்பதை உணர்ந்து சிரித்துக்கொண்டே நேரம் பற்றிய அப்பாவின் விளக்கத்தை கேட்டுவிட்டு அவரின்  கைகளை பிடித்து கொண்டு ஆற்றங்கரையில் இருந்து நடந்தான் .

சு .சுதர்ஷன்

Series Navigationவல்லரசாவோமா..!நதிகளில் நீந்தும் நகரங்கள்:-
author

சு .சுதர்ஷன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *