எனது இலக்கிய அனுபவங்கள் – 17 எழுத்தாளர் சந்திப்பு – 4. (மௌனி)

This entry is part 8 of 41 in the series 25 செப்டம்பர் 2011

“நினைவுப்பாதை” முற்றிலும் ஒரு மாறுபட்ட வாசிப்பாகவே எனக்கு அமைந்தது. இப்பொழுது கூட அக்கதையில்(கதையா?) வரும் கதாபாத்திரங்களின் பெயர்கள் நினைவிருக்கிறதே தவிர அவற்றின் தன்மைகள் விளங்கவில்லை எனக்கு. மேலும் பெரும்பாலான இடங்களில் வார்த்தை விளையாட்டு காணப்படுகிறது. அதுவே வேண்டுமென்றே திணிக்கப்பட்டது போல் தெரியவில்லை. அவர் எழுத்து நடையே அப்படிதானா? என்று எண்ணத் தோன்றுகிறது”

நகுலனின் ‘நினைவுப்பாதை’ நூலை வாசித்த பிரவின் என்கிற வாசகரின் விமர்சனம் இது. ‘மணிக்கொடி’ எழுத்தாளர் திரு.மௌனி அவர்களது சிறுகதைகளைப் படித்தபின் எனக்கும் இதே எண்ணம்தான் எழுந்தது. இன்னும் அதில் மாற்றமில்லை. புதுமைப்பித்தன் அவரை ‘தமிழ்ச் சிறுகதையின் திருமூலர்’ என்று விமர்சித்தது எதை உத்தேசித்து என்று எனக்கு இன்றளவும் புரியாத புதிர்தான். ‘நிந்தாஸ்துதி’ போல புகழ்வது போல கேலி செய்திருக்கிறாரோ என்று கூட நினைத்திருக்கிறேன்.ஜெயகாந்தன் அவரது ‘மாறுதல்’ கதைதான் தனக்குப் பிடித்த கதை என்று சொன்னதும் எனக்கு ஒத்துப் போகவில்லை. அந்தக் கதை மட்டுமல்ல அவரது மற்ற கதைகளும் என்னை ஈர்க்க வில்லை. ‘எவற்றில் நடமாடும் நிழல்கள நாம்’ என்பது போன்ற ஓரிரு வரிகள் ஒருவித மயக்கத்தைத் தருகின்றன என்ற அளவில் மட்டுமே அவரது எழுத்து என்னுள் நிற்கிறது.

பல ஆண்டுகளுக்கு முன் 18-192 &19-1-92 தேதிகளில் நெய்வேலியில் ‘வேர்கள் கலை இலக்கிய அமைப்பின் சார்பில் ‘வேர்கள் ராமலிங்கம்’ ஏற்பாடு செய்த ‘மௌனி கதைகள்’ என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில், மௌனி கதைகளைப் பதிப்பித்தவரும் இன்றளவும மௌனியைத் தூக்கிப் பிடிப்பவருமான திரு.கி.சச்சிதானந்த்ம் அவர்களும் மற்றும் எம்.டி.முத்துக்குமார், ‘லயம் சுப்பிரமணியம்’, சா.தேவதாஸ், எம்.வேதசகாயகுமார், பூர்ணசந்திரன், ஞானி, அ.மார்க்ஸ், தமிழவன் எனப் பலரும் மௌனியின் படைப்புகளை விதந்து விமர்சித்தர்கள். அதில் கலந்து கொண்ட எனக்கு அப்போதும் மௌனியிடம் ஏதும் பிரமிப்பு ஏற்படவில்லை. எல்லோரும் பாராட்டுகிற எழுத்தைப் புரியவில்லை என்று சொல்வது எனது அஞ்ஞானத்தைக் காட்டுவதாக யாராவது நினைத்தால் அது என்னைச் சங்கடப் படுத்தாது. உண்மையில் அதிகம் பேர், ‘புரியவில்லை’ என்று சொல்லக் கூச்சப்பட்டே அப்படிப் பாராட்டி இருப்பார்கள் என்றே நான் நினைக்கிறேன். அதற்கு முன்பாகவே மௌனி அவர்களை நான் திட்டமிடாமலே சந்திக்கும் ஒரு வாய்ப்பு ஏற்பட்டது. 1970ல் ஓருநாள் நான் அவர் வசித்த சிதம்பரத்துக்கு ஒரு வேலையாகச் சென்றிருந்த போது அது நிகழ்ந்தது. தெற்கு ரத வீதியில், அவர் வசித்த சத்திரம் போன்ற வீட்டிற்கு அருகில் இருந்த பேருந்து நிறுத்தத்தில் விருத்தாசலம் செல்லும் பேருந்துக்காகக் காத்திருந்த நேரத்தில், மௌனி இங்குதான் குடி இருக்கிறார் என்பதை முன்பே கேள்விப்பட்டிருந்தது நினைவுக்கு வரவே, அவரைப் போய் பார்த்தால் என்ன என்று திடீரென்று தோன்றவே உடனே பயணத்தை ஒத்தி வைத்துவிட்டு அவரது வீட்டை நோக்கி நடந்தேன்.

முன்புறம் ஒரு சின்ன திண்ணையும், மறுபுறம் விசாலமான நீண்ட திண்ணையும் இருந்தன. சின்ன திண்ணை மீது, கச்சலான கருப்பு உடம்புடன, சரியாகச் சீவப்படாமல் சிலும்பி நின்ற வெள்ளை முடியுடன், தீர்க்கமான பர்வையுடன் ஒரு முதியவர் அமர்ந்திருந்தார். ‘மௌனி கதைகள்’ பின்னட்டையில் பார்த்த உருவம் போல இருந்தது. அருகில் நெருங்கி வணக்கம் தெரிவித்தேன். அவர் நிமிர்ந்து உட்கார்ந்து “வாங்கோ, யாரப் பார்ககணும்” என்றார். “மௌனி அவர்கள்……….” என்று இழுத்தேன். “நாந்தான்! என்ன வேணும்?” என்றார். நான் என்னை பற்றியும், என் எழுத்து முயற்சி பற்றியும் சொல்லி ஒரு மூத்த எழுத்தாளர் என்ற முறையில் அவரைப் பார்க்க வந்ததாகச் சொன்னேன். “என்ன எழுதி இருக்கேள்?” என்று கேட்டார். எப்போதும் கைப்பையில் வைத்திருக்கிற அந்த ஆண்டில் வந்த என் முதல் சிறுகதைத் தொகுதியை எடுத்து நீட்டினேன். அதை வாங்கிப் புரட்டியபடி, “என் கதைகளைப் படிச்சிருக்கேளா?” என்று கேட்டார். “படிச்சிருக்கிறேன்” என்றேன். பின் தயக்கத்தடன் “ஆனால் உங்கள் கதைகள் எனக்குப் புரியவில்லை” என்றேன். கையிலிருந்த என் புத்தகத்தைக் கீழே வைத்து விட்டு, “என்ன புரியவில்லை? எந்தக் கதை புரியவில்லை?” என்று கேட்டார். “எனக்குச் சொல்லத் தெரியவில்லை. எந்தக் கதையும் புரியவில்லை” என்றேன். அவர் என் பதிலால் ஏமாற்றமோ அதிருப்தியோ கொண்டமாதிரி தெரியவில்லை. “திரும்பவும் படிச்சுப் பாருங்கோ!” என்று மட்டும் சொன்னார்.

அப்போதுதான் பெரிய திண்ணையில் கடைசியில், ஒருவர் சம்மணமிட்டு அமர்ந்திருந்ததைக் கவனித்தேன். அவரது முகம் எனக்குப் பரிச்சயமானது போல் தோன்றியது. அவர் எங்கள் பக்கம் பார்காமல் எங்கோ வெறித்துப் பார்த்தபடி இருந்தார். அப்போது அவர் அணிந்திருந்த வெள்ளைப் பேன்ட், வெள்ளைச் சட்டையில் – அண்ணாமலையில் நான் பயின்ற கடைசிநாட்களில் புகுமுக வகுப்பில் பயின்ற கிரிக்கட் விளையாட்டுக்கார மாணவரை ஒத்து இருக்கவே, “அவர்……” என்று இழுத்தேன். “அவன் என் பையன்!” என்றார். “கல்லூரியில் பார்த்திருக்கிறேன்” என்றேன். “அவனுக்கு கொஞ்சம் சித்த சுவாதீனம் இல்லை” என்று எந்த முகமாற்றமும் இன்றிச் சொன்னபோது அதிர்ந்து போனேன். கொஞ்சமும் இங்கிதமின்றி, ஒரு தந்தையிடமே அப்படி ஒரு விசாரிப்பைக் கேட்டதற்காக மிகவும் வருந்தினேன். அதற்கு மேல் அவரிடம் பேச்சைத் தொடர எனக்குச் சங்கடமாய் இருந்தது. நெருப்பில் கை வைத்துவிட்ட துடிப்புடன் எழுந்து விடை பெற்றேன். அவரும் மேற்கொண்டு பேசாமல் தலை அசைத்து விடை கொடுத்தார். பின்னாளில், அதற்கு முன்னதாக அவரது இன்னொரு மகன் இறந்து போனதை அறிந்தேன். புத்திர சோகத்தில் அவர் இருந்ததை அறியாமல் அவர் கதை பற்றிய என் கசப்பான விமர்சனத்தை அவரிடமே பேசி விட்ட எனது இங்கிதமற்ற செயலை எண்ணி, அதன் பின் அவர் பெயரை உச்சரிக்கும் போதெல்லாம் மிகுந்த குற்ற உணர்ச்சிக்கு ஆளாகிறேன். 0

Series Navigationபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! இரட்டைப் பரிதிகளைச் சுற்றும் வியப்பான ஓர் அண்டக் கோள் கண்டுபிடிப்பு. (கட்டுரை : 75)இரவை வென்ற விழிகள்
author

வே.சபாநாயகம்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *