இலக்கியங்களும் பழமொழிகளும்

This entry is part 20 of 45 in the series 2 அக்டோபர் 2011


நம்முன்னோர்கள் பன்னெடுங் காலமாகத் தங்களின் வாழ்க்கையில் கண்டு, கேட்டு, உணர்ந்து, அனுபவித்தவற்றை எல்லாம் ஒருங்குகூட்டி அவற்றைப் பின்வரும் தலைமுறையினருக்குப் புகட்ட வேண்டி பழமொழிகளாக ஆக்கி வைத்தனர். இப்பழமொழிகள் அனைத்தும் வாழ்வியல் உண்மைகளாகத் திகழ்கின்றன. இவை மனித வாழ்க்கைக்கு வழிகாட்டும் பேரிலக்கியங்களாகத் திகழ்கின்றன.

இதனை, ‘‘கலை நுட்பம் கொண்ட பேரிலக்கியங்களைப் பழமொழிகளின் விரிவாக்கங்களாகக் [provermbs writ large]கருதலாம் என்றும்,
பழமொழிகள் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளை நாம் எதிர்கொள்ளத்துணை செய்யும் கருவிகள் ஆகும்’’ என்பர் அறிஞர் கென்னத் பர்க். ஒரு சமுதாயக் கட்டமைப்பில் சிலவகைச் சூழல்கள் மீண்டும் மீண்டும் தோன்றும் போது மக்கள் அவற்றை அடையாளம்கண்டு அவற்றிற்கு உரிய பெயர் அளித்து அவற்றைக் கையாளுவதற்கான உத்திகளையும் உருவாக்கிக் கொள்கிறார்கள் என அறிஞர் கென்னத் பர்க் (Kenneth Burke) தமது ‘வாழத்துணை செய்யும் கருவியாக இலக்கியம்’ [Literature as Equipment for Living, p., 944 ] எனும் கட்டுரையில் குறிப்பிடுகின்றார்.

கென்னத் பல ஆங்கிலப் பழமொழிகளைச் சான்றுகளாகக் காட்டி, அவையெல்லாம் முற்றும் இலக்கிய நயத்திற்காகவோ,நடைமுறையை நடைமுறையாகத் தருவதற்கு மட்டுமோ, படைக்கப்பட்டவையல்ல என்ற கருத்தை அவர் தமது கட்டுரையில் நிலைநாட்டக் காணலாம். அவற்றில் உள்ள கலை அழகு, முருகியல் இன்பம் தருவது உண்மையேயாயினும் அவற்றைத் தூயஇலக்கியம் [pure literature] என்று முத்திரை குத்தி ஒதுக்கிவிட முடியாது. ஏனெனில் அவை வாழ்க்கைக்குப் பயன்படும் அரியஉண்மைகளைக் கூறுபவை. வாழ்க்கை நிகழ்வுகளை உள்ளவாறு படம் பிடித்துக் காட்டுபவை ஆயினும், அவை அந்நோக்கில்மட்டும், (realism for its own sake) உண்டாக்கப்பட்டவை என்று முடிவெடுப்பதும் தவறாகும். இது அவற்றின் இலக்கியத் தரத்தைப்புறக்கணிப்பதாகும் என்றும் கென்னத் குறிப்பிடுவது நோக்கத்தக்கது.

பழமொழிகளின் தன்மை

ஒவ்வொரு பழமொழியும் ஒரு மருந்தை ஒத்தது. இப்பழமொழிகளை பர்க், ‘‘ஆறுதல் கூறுதல், பழிக்குப் பழிவாங்கல்பற்றிப் பேசுதல், தவறுகளை இடித்துரைத்தல், செயல் மேற்கொள்ள ஊக்கம் அளித்தல், எதிர்வருவது உரைத்தல்’’ (Consolation, vengeance, admonition, exhortation, foretelling) என அவற்றின் பணிகளின் அடிப்படையில் ஐந்து வகையாகப் பகுத்துரைக்கின்றார்.இவ்வகைப்பாடுகளைப் பழமொழிகளின் பணிகள் என்றும் குறிப்பிடலாம். இவை மட்டுமல்லாமல் அவை வாழ்க்கையில் சிலவகைகளில் அடங்கக் கூடிய, மீண்டும் மீண்டும் விளையும் நிகழ்வுகளை (typical, recurrent situations) அடையாளம் காட்டிஅவற்றிற்குப் பெயரிடும் பணியையும் செய்கின்றன. எனவே பழமொழிகளில் யதார்த்தம் என்பது உறுதி அளிக்கவும்,கடிந்துரைக்கவும், ஆறுதல் கூறவும், எதிர்த்தாக்குதல் நடத்தவும், வருங்காலம் உரைக்கவும், திட்டமிடவும்பயன்படுத்திக்கொள்ளப் பெறுகிறது. மேலும் இச்செயல்களெல்லாம் எந்த அளவுக்கு வாழ்க்கை நலத்திற்குத் தேவை யென்பதால்பழமொழி உருவாக்கப் பின்னணியில் இடம்பெறுகிறது. (பர்க் ,மேலது, கட்டுரை943-44).

இலக்கியத்தையே வாழ்க்கைச் சூழல்கள், அறைகூவல்கள், அவற்றை எதிர்கொள்ளத் தேவையான உத்திகள்ஆகியவற்றை எடுத்துச் சொல்லுவனவாகப் பார்க்கலாம். பழமொழிகளும் அத்தன்மை வாய்ந்தனவாகக் அமைந்திலங்குகின்றன. நண்பர்களையும், பகைவர்களையும் இனம் கண்டு கொள்வது, இழப்புகளைப் பொதுமைப் படுத்துவது, கண்ணேறு படலைத்தவிர்ப்பது, தூய்மைப்படுத்துவது, புனிதப்படுத்துவது, ஆறுதல் கூறுவது, எதிர்த்தாக்குதல் நடத்துவது, பழித்துப் பேசுவது,ஊக்கமூட்டுவது, கட்டளை இடுவது, செயல்பட வழிமுறைகள் சொல்வது ஆகியவற்றையெல்லாம் கணக்கில் கொண்டுபழமொழிகளாகிய இலக்கியங்களை  அணுகலாம்.

தமிழினம் உலகின் தொன்மையான இனங்களில் ஒன்றென்பதால், அது பெற்றிருக்கும் பழமொழிக் கருவூலம் அளவாலும்தரத்தாலும் பெரும் பெயர்க்கு உரியது. தமிழ்ப் பழமொழிகள் வாழ்வின் எல்லாக் கூறுகளைப் பற்றியும் பேசுபவை. அவை பேசாதவாழ்க்கை அனுபவம் ஏதுமில்லையென்றே சொல்லலாம்.

பெரும் பேதையிலிருந்து பேரறிஞன் வரை, எல்லாவகை மக்களும் தமிழ்ப் பழமொழிகளிலிருந்து நற்பயன் பெறலாம்;பாடம் கற்றுக் கொள்ளலாம். எப்படிச் செயல்படுவது என்று மனம் தடுமாறுகின்ற நிலையேற்படின், கை கொடுக்கும் பழமொழிகள்பலவுண்டு. அடிப்படைத் தேவைகளான உணவு, உறைவிடம், உறக்கம் பற்றி மட்டுமல்லாமல் மிகவும் உயர்ந்த வாழ்க்கைத்தத்துவங்கள் பற்றிக் கூறுகின்ற பழமொழிகளும் புலனின்பங்கள் பற்றி மட்டுமல்லாமல் ஆன்மிகம் பற்றிப் பேசும்பழமொழிகளும் மிகுதியாகத் தமிழ்ப் பழமொழிகளில் பொதிந்திருப்பது நோக்கத்தக்கது. அவையெல்லாம் கருத்துகளைக்கலையழகோடு சொல்வதோடு மட்டுமல்லாது கற்றவர்க்கும் பாமரர்க்கும் ஒருசேரப் பயன்படுவதாகவும் அமைந்திலங்குகின்றன. தமிழினத்தின் தொன்மையையும், தமிழ்ப் பண்பாட்டின் பெருமையையும் அப்பழமொழிகள்பிரதிபலிப்பதாக அமைந்துள்ளன.

தொல்காப்பியர் கூறும் இலக்கணம்

பழமொழியின் இலக்கியத் தன்மையையும் தமிழினம் உணர்ந்திருந்தது. இலக்கிய வகைகளுக்கான பட்டியலில்,

‘‘பாட்டு, உரை, நூலே, வாய்மொழி, பிசியே
அங்கதம், முதுசொல்லோடு அவ்வேழ் நிலத்தும்
வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின்
நாற்பேர் எல்லை அகத்தவர் வழங்கும்
யாப்பின் வழியது என்மனார் புலவர்’’ (தொல்: 1336)

எனத் தொல்காப்பியர் பழமொழிக்கும் இடம் தருகிறார்.

பழமொழி உரைநடையில் இருக்குமாயினும் கவிதைக்குரிய பண்புகள் யாவும் அதில் இடம்பெற்றிருப்பதையும்,

‘‘நுண்மையும் சுருக்கமும் ஒளியுடைமையும்
ஒண்மையும் என்று இவை விளங்கத் தோன்றிக்
குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம்
ஏது நுதலிய முதுமொழி என்ப’’ (தொல்: 1443)

என்று தொல்காப்பியர் சுட்டுவார்.

சங்க இலக்கியத்தில் பழமொழிகள்

பொருட்செறிவும் சொற்சிக்கனமும் கொண்ட செய்யுள்களை எழுதிய சங்கச் சான்றோர் பொருள் விளக்கத்திற்காகப் பழமொழிகளை இடையிடையே இணைத்துக் கூறியுள்ளமை நோக்கத்தக்கது.  அகநானூற்றில் இடம்பெறும்,

‘‘அம்ம வாழி தோழி இம்மை
நன்று செய் மருங்கில் தீது இல் என்னும்
தொன்று படு மொழி இன்று பொய்த்தன்று கொல்’’ (அகநானூறு 101 1-3)

எனும் பாடல் தன் கருத்தை வலியுறுத்த ஒரு பழமொழியைக் கூறி அது தொன்று தோன்றிய முதுமொழியாயினும் இன்றுபொய்யாய்ப் போய்விடாது என்றும் தெரிவிக்கிறது.

திருக்குறளும் பழமொழியும்

     பெருநாவலராகிய திருவள்ளுவரின் திருக்குறளில் பல்வேறுவிதமான பழமொழிகள் இடம்பெற்றிருப்பது நோக்கத்தக்கது. அக்காலத்தில் வழக்கில் வழங்கி வந்த பழமொழிகளைத் தமது நூலில் ஆங்காங்கே வள்ளுவர் புகுத்தியிருப்பது பழமொழிகளின் செல்வாக்கினைக் காட்டுவதாக அமைந்துள்ளது. திருக்குறளில்,

“தீயன ஆவதே போன்று கெடும்” (பழ. 173)

‘‘களவு அளவைக் குறைக்கும்’’

(தற்போது வழக்கில் வழங்கப்படும் பழமொழி) என்னும் பழமொழி,

“களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்”

என்றும்,
“முதலிலார்க்கு ஊதியமில்” (பழ.232)

என்னும் பழமொழி
“முதலிலார்க் கூதியமில்லை”

என்றும்,
“ஓரறையுள் பாம்போடு உடனுறையும் ஆறு” (349)

என்னும் பழமொழி
“உடம்பாடிலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடனுறைந்தற்று.”

என்றும்
“அஞ்சுவார்க் கில்லை அரண்” (பழ.254)

என்னும் பழமொழி
“அச்சமுடையார்க் கரணில்லை”

என்றும்,
“யாப்பினுள் அட்டிய நீர்” (பழ. 311)

என்னும் பழமொழி
“நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள்; அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர்.”

 என்றும்,
“மனைமர மாய மருந்து (பழ. 350)

 என்னும் பழமொழி,
“மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகையான் கட் படின்.”

என்றும்
“இறைத்தோறும் ஊறும் கிணறு” (பழ.378)

‘‘இறைக்கின்ற கிணறுதான் ஊறும்’’(தற்போது வங்கப்டும் பழமொழி)

என்னும் பழமொழி

“இறைப்பவர்க்கு ஊற்று நீர்போல மிகும் (குறள் 1161)

என்றும்
‘‘கூற்றம் குதித்து உய்ந்தறிவார் இல்’’ (பழ. 391)

என்னும் பழமொழி
‘‘கூற்றம் குதித்தலும் கை கூடும்’’

என்றும் திருக்குறளில் இடம் பெறுகின்றன. தம் காலத்தில் வழக்கில் வழங்கி வந்துள்ள பழமொழிகளை வள்ளுவர் எடுத்தாள்வதுபழமொழிகளின் செல்வாக்கினை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது எனலாம்.

பழமொழி நானூறு

சங்கம் மருவிய காலத்தைச் சேர்ந்த முன்றுறை அரையனார் தம் காலத்தில் வழக்கிலிருந்த நானூறு பழமொழிகளைத்தேர்ந்தெடுத்து ஒவ்வொரு பழமொழியையும் ஒரு பாடலில் பொதிந்து வைத்து ஓர் அறவுரையைத் தெளிவுபடுத்தப்பயன்படுத்திக்கொண்டார் என்பது சிந்தனைக்குரியதாகும் பழமொழி பற்றியும் இலக்கியம் பற்றியும் சமுதாயத்திற்கு அவற்றின்பயன்பாடு பற்றியும் அவர் நுட்பமாக நோக்கி உணர்ந்திருந்தார் என்பதற்கு இது ஒன்றே சான்றாக அமைந்துள்ளது. இத்தகையஉத்தியைக் கையாளும் இலக்கியம் வேறு எம்மொழியிலும் இல்லை என்பது நோக்கத்தக்கது.

பழமொழி நானூற்றில் சில பழமொழிகள் கூறப்படும் கருத்திற்கு விளக்கங்களாகின்றன; சில பொருளை விளக்கும்சான்றுகளைத் தருகின்றன. சில பொருள் பொதிந்த உவமைகளாகப் பயன்படுகின்றன. பழமொழி எத்தகையதாயினும்கவிதையின் இன்றியமையாக் கூறாகி, அதன் பொருளை உடனடியாக உணர வழி செய்கிறது. ஒன்றுக்கொன்று முரண்பட்டகருத்தைத் தரும் பழமொழிகளும் உண்டு; ஆனால் அவை தக்க விளக்கங்களோடு கூறப்படுகின்றன. பழமொழி நானூறு குறித்து,“பல முனிவர் இயற்றிய நாலடியார் போல இந்நூலில் கூறியது கூறல், மாறுகொளக் கூறல் இல்லை”  எனச் செல்வகேசவராயமுதலியார் கூறுவது பொருத்தமான ஆய்வுரையாகும்.

காப்பியங்களும் பழமொழிகளும்

திருத்தக்க தேவர் முன்னோர் மொழிகளையும் சங்கச் சான்றோர் செய்யுட்களையும் தக்கவாறு தமது பாடல்களில் பெய்துகொள்ளும் நுண்ணறிவு உடையவர். அவர் தமது காப்பியத்தில் பழமொழிகளைப் பொருத்தமுற அமைத்துக் கதை மாந்தரின் உணர்வுகளை விளக்கிக் கூறியுள்ளார்.

‘‘ஆற்றப் பெரியார் பகைவேண்டிக் கொள்ளற்க
போற்றாது கொண்டரக்கன் போரில் அகப்பட்டான்
நோற்ற பெருமை உடையாரும் கூற்றம்
புறம் கொம்மை கொட்டினாரில். (பழமொழி 126)

இப்பாடலில் இடம்பெறும் ‘‘கூற்றம் புறம் கொம்மை கொட்டினாரில்’’ பழமொழிக்கு ஒரு புதிய பரிணாமம் தரும் வகையில் திருத்தக்கதேவர்,

நோற்றிலர் மகளிர் என்பார் நோங்கண்டீர் தோள்களென்பார்
கூற்றத்தைக் கொம்மை கொட்டிக் குலத்தோடு முடியுமென்பார்’’

                                                                                               (சீவக சிந்தாமணி 1109)

என்ற பாடலில் கொண்டு வந்து அவல உணர்வையும் அறச்சினத்தையும் மிகுதிப்படுத்துகிறார். சீவகன் சிறைப்பட்டபோதுஉள்ளம் உடைந்த பெண்டிர் தங்கள் துயரத்தை வெளிப்படுத்துவதை ஓவியமாகத் தர இப்பழமொழி புலவருக்குப் பயன்படுகிறது.

“முள்ளினால் முள் களைதல்” (54)

என்னும் பழமொழியைச் சீவக சிந்தாமணி விமலையாரிலம்பகத்தில்,

 “மோதி முள்ளொடு முட்பகை கண்டிடல் பேது செய்து”

என்று திருத்தக்க தேவர் மாற்றுகிறார்.

உரையாசிரியர்களும் பழமொழியும்

நச்சினார்க்கினியர் போன்ற உரையாசிரியர்களும் தம் உரை விளக்கங்களில் பழமொழிகளை எடுத்தாண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  சேர்க்கத் தயங்கவில்லை. சீவகசிந்தாமணியில் பூமகள் இலபகத்தில் இடம்பெற்றுள்ள, “மைத்துன நீண்டவாட்கட்டடங் கண்ணார்” என்னும் தொடருக்கு, ‘வாள் மைத்து உன்ன நீண்ட கண். ‘வாள் ஒளி மழுங்கி நினைக்கும்படி நீண்ட கண்’என்று பொருள் தந்து நச்சினார்க்கினியர் ‘மைத்தல்-ஒளி கெடுதல்: “மைம்மைப்பின் நன்று குருடு’ என்றாற்போல என்பார்.தெரிவதும் தெரியாததுமாகும் கண்ணின் தன்மையைக் காட்டிலும் குருட்டுக்கண்ணின் தன்மையே நன்று என்று பொருள் தருவதுஇப்பழமொழி (பழ.188). நச்சினார்க்கினியர் பழமொழி நானூற்றின் ஆசிரியர் பொருளைப் புலப்படுத்துவதோடு அணியாகி இன்பம்பயக்கும் உவமைகள் வேண்டிய வழியும் பழமொழிகளை நாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பக்தி இலக்கியங்களும் பழமொழியும்

பக்தி இயக்கம் தமிழ்க்கவிதை பெருவளர்ச்சி பெறத் துணை செய்த ஒரு வரலாற்று நிகழ்ச்சியாகும். அவ்வியக்கத்தைச்சார்ந்த சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் போன்ற புலவர்களுக்கு பழமொழிகள் ஒரு பொற்சுரங்கமாகியது. நான்காம்திருமுறையில் அப்பர்,

‘‘வாழ்க்கைத் தளையிலிருந்து விடுபடுதற்குச் சைவத்தை விட்டுச் சமணனாக மாறியமை, “கனியிருப்பக் காய் கவர்தல்”ஆகும். எளிதில் பின்பற்றக் கூடிய சைவமிருக்கக் கொடிய வழியாகிய சமணத்தை மேற்கொண்டமை “முயல் விட்டுக் காக்கைப்பின் போதலா”கும். அடைக்கலம் தருதற்குச் சிவன் காத்திருக்கும்போது அருகனை நாடியமை, “அறமிருக்க மறம் விலைக்குக்கொள்ளல் ஆகும்”. விடுதலை பெறுதற்குச் சமணத்தை நம்பியமை “பனி நீரால் பாவை செயப் பாவித்தல்” ஆகும். ஈசனுக்குத் தன்உடலில் இடம் கொடாமல் தீயோர் நட்பில் திளைத்தது “ஏதன் போர்க்கு ஆதன் அகப்படல்” ஆகும். உண்மையான இறைவனைநினையாது பொய்யான சமய நூல்களைக் கற்றது “இருட்டறையில் மலடு கறத்தல்” ஆகும். பலர் நகையாடுமாறு, நாணத்தகுந்தவாழ்க்கையை நாடியது “விளக்கிருக்க மின்மினி தீக்காய்தல் “ஆகும். உய்தலுக்கு வழி செய்யாத சமணத்து றவியின் ஏமாற்றுவாழ்க்கை, “பாழூரில் பயிக்கம் புகல்” (பாலை நிலத்தில் பிச்சை எடுத்தல்) ஆகும். தீமையை அழிக்கும் இறைவனைஅணுகாதிருத்தல், “தவமிருக்க அவம் செய்தல்” ஆகும். தேவர்களைக் காக்க நஞ்சை அருந்திய சிவனை மறந்து வேறுதெய்வத்தை வழிபடல், ‘கரும்பிருக்க இரும்பு கடித்தல்’’

எனப் பழமொழிப் பதிகம் என்ற தலைப்பிலேயே பத்துப் பழமொழிகளை அரிய உவமைகளாகக் கூறி நினைவூட்டுகிறார். சைவசமயத்தைச் சாருமுன் சமணனாக இருந்தது பற்றி வருந்துகின்ற அவர் மனநிலையை இப்பாடல்கள் படம் பிடித்துக்காட்டுவனவாக அமைந்துள்ளன.

வள்ளுவர், முன்றுறை அரையனார், திருத்தக்கதேவர், அப்பர் உள்ளிட்ட புலவர்கள் பழமொழிகள் பொதிந்தபாடல்களை இயற்றிருக்கவில்லையானால் பல பழமொழிகளை நம் தமிழ்ச் சமுதாயம் இழந்திருக்கும்.அவர்களுடைய பாடல்கள் முன்னோரின் அனுபவ முதிர்ச்சி கொண்ட அறிவைப் போற்றும் ஓர் அரிய இலக்கிய ஆவணம் என்பதோடு மட்டுமல்லாமல் வாழத் துணைசெய்யும் பழமொழிகளின் பதிவுகளாகவும் விளங்குகின்றன.

முனைவர் சி.சேதுராமன்இணைப்பேராசிரியர்தமிழ்த்துறைமா.மன்னர் கல்லூரிபுதுக்கோட்டை.

E. Mail: Malar.sethu@gmail.com

Series Navigationதங்க ஆஸ்பத்திரிமைலாஞ்சி
author

முனைவர் சி.சேதுராமன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *