கட்டுநாயக்க தாக்குதல் – இரு மாதங்களின் பின்னர்…

This entry is part 18 of 45 in the series 2 அக்டோபர் 2011

‘தம்பி இன்னும் ஆஸ்பத்திரியில்தான் இருக்கிறார். அவரால் கட்டிலிலிருந்து எழ முடியாதுள்ளது. இருக்கும் காணியை அடகுவைத்துத்தான் தம்பிக்குச் செலவழித்துக் கொண்டிருக்கிறோம். அப்பாவும் தம்பியைக் கவனித்துக் கொள்ளவென கட்டுநாயக்கவுக்கு வந்து அறையொன்றை வாடகைக்கு எடுத்துத் தங்கியிருக்கிறார். எனது கணவர், கொத்தனார் வேலை செய்து உழைக்கும் நாட்கூலியில்தான் எல்லாவற்றுக்கும் செலவு செய்ய வேண்டியிருக்கிறது.’

கட்டுநாயக்க தாக்குதலின் போது காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தற்போது சிகிச்சை பெற்று வரும் மங்கள சம்பத் எனப்படுபவரது சகோதரியான சம்பிகா என்பவர்தான் மேற்கண்டவாறு எம்மிடம் தொலைபேசியில் கூறினார். சம்பிகா தெரிவித்த தகவல்களுக்கு அமைய நாம் அடுத்து வந்த தினங்களிலொன்றில் தேசிய வைத்தியசாலைக்குச் சென்றோம்.

மங்கள சம்பத், தேசிய வைத்தியசாலையின் 27 ஆவது வாட்டின் கட்டிலொன்றின் மீது மிகவும் துயரத்தோடு தனது வாழ்நாளைக் கழித்து வருகிறார். அவருக்கு இப்போதுதான் பத்தொன்பது வயது நடக்கிறது. இரண்டரை மாதங்களுக்கு முன்னர்தான் கட்டுநாயக்கவுக்கு வேலைக்காக வந்திருக்கிறார். உயர்கல்வியைப் பூர்த்தி செய்ய முன்பே குடும்ப வறுமையின் காரணமாக வேலைக்கு வந்திருக்கிறார்.

ஊழியர் சேமலாப நிதியை முன்வைத்து ‘தனியார் பிரிவு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டம்’ எனும் பெயரில் கொண்டு வரப்பட்ட அரசாங்கத்தின் போலியானதும் வஞ்சகமானதுமான செயற்திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வேலைத்தள மட்டத்தில் ஊழியர்களின் ஆர்ப்பாட்டம் பாரிய அளவில் எழுந்து நின்றது. கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்திலும் இந்த ஊழியர்களின் ஆர்ப்பாட்டமானது முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது. தான் பாடுபட்டு உழைத்துச் சேமித்த சேமலாப நிதியைப் பாதுகாத்துக் கொள்ளவென மங்கள சம்பத்தும் அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டார். அந்த ஆர்ப்பாட்டத்தில் ஊழியர்களின் பக்கமே வெற்றியீட்டிய போதிலும் அந்த வெற்றியைக் கொண்டாடுவதற்கோ, அதனால் மகிழ்வதற்கோ அவரால் முடியவில்லை.

இந்த ஆர்ப்பாட்டத்தை எதிர்த்து காவல்துறை மேற்கொண்ட துப்பாக்கித் தாக்குதலில் மங்கள சம்பத்தின் இடுப்புப் பகுதி முற்றாக சேதமுற்றது. அவர் மயங்கி விழுந்தது வரையில் அவரது நினைவில் உள்ளது. இத் தாக்குதலின் போது அவரது அந்தரங்க உறுப்புக்கள் முற்றாக சேதமடைந்துள்ளன. அப் பாகங்களை மீண்டும் ஒருபோதும் பழைய நிலைமைக்குக் கொண்டு வர முடியாதுள்ளது. உடலுக்கு வெளியே பொருத்தப்பட்டுள்ள உபகரணங்களின் மூலமாகவே அவரது கழிவகற்றல் நடைபெறுகிறது.

‘அன்றைய ஆர்ப்பாட்டத்தின் போது துப்பாக்கிக் குண்டு பட்டு வீழ்ந்ததன் பிற்பாடு என்னை நீர்கொழும்பு வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றார்கள். அங்கிருந்துதான் தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பினார்கள். சத்திரசிகிச்சையின் போது எனது அந்தரங்க உறுப்புக்களை அகற்றியிருக்கிறார்கள். கழிவகற்றுவதற்காக குழாய்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இன்னுமொரு சத்திரசிகிச்சை செய்யப்பட வேண்டுமென வைத்தியர்கள் சொல்கிறார்கள்.’

கிட்டத்தட்ட இரண்டு மாத காலங்கள் கட்டிலின் மீது பலவீனமான நிலையில் கிடக்கும் மங்கள சம்பத், அது குறித்து நம்மிடம் துயர் தோய்ந்த குரலில் மேற்கண்டவாறு சொல்கிறார்.

தம்மிக அத்தநாயக, கட்டுநாயக்க துப்பாக்கிக் குண்டு தாக்குதலில் காயமடைந்து, ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் இன்னுமொரு இளைஞர். முப்பது வயதினைக் கடக்கும் அவர் ஏழு வருடங்களுக்கு முன்னர் இங்கு வேலைக்காக வந்துள்ளார். தனது உடல்நிலைமை குறித்து தம்மிக இவ்வாறு கூறுகிறார்.

‘இலங்கை வங்கியின் அருகில் வைத்து எனக்கு குண்டடி பட்டது. துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு பொலிஸார் முன்னால் வந்தனர். குண்டு பட்டதும் நான் கீழே விழுந்தேன். அங்கிருந்த முச்சக்கர வண்டியொன்றில் ஏற்றி என்னை வைத்தியசாலைக்கு எடுத்து வந்திருந்தனர். இன்னுமொரு சத்திரசிகிச்சை எனக்கு மேற்கொள்ளப்பட வேண்டுமென வைத்தியர்கள் கூறுகின்றனர். எனது சம்பளத்தில் தான் அப்பா, அம்மாவைக் கவனித்துக் கொண்டேன். எனக்கு குண்டடி பட்ட பிறகு அவர்களிருவரையும் கவனித்துக் கொள்ள வழியில்லை. தற்போது நான் மிகவும் கையாலாகாத நிலையில் உள்ளேன். திரும்பவும் என்னால் வேலை செய்ய முடியுமென நினைத்துப் பார்க்கவும் முடியவில்லை.’

தம்மிகவையும் சம்பத்தையும் போல கட்டுநாயக்க தாக்குதலின் காரணமாக கையாலாகாத நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ள அனேகம்பேர் இருக்கின்றனர். அவர்கள் தற்போது மிகவும் பலவீனமான நிலையில் உள்ளனர். தமது வறுமையின் காரணமாகவே இளைஞர் யுவதிகள் வர்த்தக வலயங்களின் தையற் தொழில்களுக்கு வருகின்றனர். இவ்வாறான அசம்பாவிதங்கள் ஏற்படுமிடத்து அவர்கள் சொல்ல முடியாத அளவிலான உதவியற்ற நிலைமைக்கு தள்ளப்படுகின்றனர். இன்று இந் நிலைமை இவர்களுக்கு உரித்துடையதாக இருக்கிறது.

ராஜபக்ஷ அரசாங்கமானது, இன்று அவர்களை மறந்து போயிருப்பதன் காரணம், அவர்களைப் பழி வாங்குவதற்காகவேயாகும். இவர்கள் இந் நிலைமையில் உள்ள போதும், அரசாங்கம் சும்மா இருப்பதில்லை. உளவாளிகளைக் கொண்டு தகவல்களைத் திரட்டுகிறது. ஊழியர்களை அச்சுருத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. இரகசியப் பொலிஸ் அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களது வீடுகளுக்குச் செல்கின்றனர். அங்கிருக்கும் மூத்தவர்களை அச்சுருத்துகின்றனர். தொழிற்சங்கங்களோடு இணைந்தால் சுட்டுக் கொல்வோமென மிரட்டுகின்றனர். ராஜபக்ஷ அரசாங்கமானது முதலீட்டு சபையினூடு ஊழியர்களைப் பழிவாங்க ஆரம்பித்திருக்கிறது. முதலீட்டு சபையின் ஆலோசனைக்கமைய ஊழியர்களின் சம்பளக் கொடுப்பனவானது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதோடு எந்தவொரு தொழில் நடவடிக்கைகளுக்கும் இடந்தராத விதத்தில் நிறுவன உரிமையாளர்களுக்கு அறிவித்தலும் வழங்கப்பட்டிருக்கிறது.

கட்டுநாயக்க தாக்குதலானது, அரசாங்கம் திட்டமிட்டுச் செய்த ஒன்றாகும். எனினும் அத் தாக்குதலின் காரணமாக அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை காவல்துறையின் முதுகில் ஏற்றிவிட்டு சமப்படுத்தப் பார்க்கிறது.

எல்லா அழுக்குகளையும் காவல்துறை மீது சுமத்திவிட்டு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தாக்குதலில் செத்துப் போன மற்றும் காயமடைந்த ஊழியர்களுக்கு நஷ்ட ஈடுகளை வழங்கப் போவதாகச் சொன்னார். தேவையேற்படின் காயமடைந்தவர்களை வெளிநாடுகளுக்காவது அழைத்துச் சென்று குணப்படுத்தப் போவதாகச் சொன்னார். எனினும் அந்தக் கதைகள், அப்பொழுது ஆவேசமடைந்திருந்த நாட்டின் பொதுமக்களை அமைதிப்படுத்துவதற்காகச் சொல்லப்பட்டவையாகும்.

எவரது உதவியும் அற்ற நிலையில் வைத்தியசாலைக் கட்டில்களில் துயரத்தோடு காலம் கடத்திவரும் ஊழியர்களைக் குறித்து தேடிப் பார்க்க எவருமில்லை. வாழ்க்கையொன்றின் மதிப்பை பணத்தால் ஈடு செய்ய முடியாத போதிலும், நிரந்தரமான அங்கவீன நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கும் இந் நோயாளிகளுக்கு நீதமானதொரு நஷ்ட ஈட்டைப் பெற்றுக் கொடுப்பது அரசாங்கத்தின் கடமையாகும். அப் பொறுப்பை ராஜபக்ஷ அரசாங்கத்தின் மீது சுமத்துவது, இவ் வாழ்க்கைகளை கையாலாகாத நிலைமைக்குத் தள்ளியது அவர்கள் என்பதனாலேயாகும். ராஜபக்ஷ அரசாங்கத்தின் உத்தரவுக்கமையவே காவல்துறை துப்பாக்கிப் பிரயோகம் செய்தது. அதை மறைக்க, ஓய்வு பெற்றுச் செல்லவிருந்த காவல்துறை தலைமையதிகாரியை வெளிநாட்டுத் தூதுவராக்கி, வெளிநாட்டுக்கு அனுப்பியதில் ஒரு பயனும் இல்லை.

– ஜனக விஜேகுணதிலக
தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை

Series Navigationபரீக்‌ஷா வழங்கும் பாதல் சர்க்காரின் தேடுங்கள் தமிழ் வடிவம்: இயக்கம்: ஞாநிதங்க ஆஸ்பத்திரி
author

எம்.ரிஷான் ஷெரீப்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *