நினைவில் நிற்கும் நேர்காணல்கள். ஒரு பார்வை.

This entry is part 24 of 45 in the series 2 அக்டோபர் 2011
ஒவ்வொரு முறையும் நேரிலோ., தொலைபேசி மூலமோ ஒருவரை பேட்டி அல்லது நேர்காணல் எடுக்க பலமுறை முயலவேண்டி இருக்கும். முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என கடைசியில் வாகை சூடலாம். சில முடியாமலும் போகும்.  ”என் மனைவி” என்ற தலைப்பில் ஒரு மாத இதழுக்கான கட்டுரைக்காக ஒரு நடிகரை தொடர்பு கொண்டேன். அவருடைய மனைவிக்கு பத்ரிக்கையில் வருவது பற்றிய ஆர்வமில்லை என்றார் அவர்.! . இன்னொரு பிரபலத்தை தொடர்பு கொண்டால் அவர் தன் மனைவியைப் பற்றிக் கூறியதை விட அவரின் மனைவி அவரைப்பற்றிக் கூறியதே அதிகம். இன்னும் ஏதேதோ படிக்கும் அவருக்கு மனைவி லஞ்ச் பாக்ஸ் கட்டிக் கொடுத்து குழந்தையைப் போல பார்த்துக் கொள்வதாக கூறினார் !. மூன்றாவதாக ஒரு சினிமா மற்றும் நாடக நடிகர். இவர் நேரில் வராமல் பேட்டி எல்லாம் கிடையாது  என்று மறுத்து விட்டார். இப்படியாக அந்த தலைப்பு கைவிடப்பட்டது.
சில மருத்துவர் பேட்டிகளும்., நடிகர்., நடிகைகள் பேட்டிகளும்., போராடி ஜெயித்த பெண்களின் பேட்டிகளுமாக அவ்வப்போது தொடர்ந்து எடுத்துக் கொண்டிருக்கிறேன். சில பேட்டிகள் எடுத்த எனக்கே இவ்வளவு அனுபவங்கள் என்றால்  மிகப் பெரும் பிரபலங்களை எல்லாம் பேட்டி எடுத்த அண்ணா கண்ணனின் நேர்காணல்கள் தொகுப்பு பிரமிக்க வைக்கிறது.  சாட்., வாய்ஸ் சாட்., மின்னஞ்சல்., தொலைபேசி, நேர்காணல் எனப்பல வகைககளில் பல துறை சார்ந்த பிரபலங்களிடம் பேட்டி  எடுத்திருக்கிறார். இலக்கியவாதிகள்., பேராசிரியர்கள்., மருத்துவர்கள்., இணைய சம்பந்தப்பட்ட பிரபலங்கள்  இவர்களுடன்., தனித்தனியாயும் குழுவாயும் எடுக்கப்பட்ட பேட்டிகளின் தொகுப்பு அருமை..
தென்கச்சி கோ சுவாமிநாதன், சுரதா., அப்துல் ரகுமான், பழநிபாரதி ஆகியோருடனான இலக்கியப் பேட்டிகள் இனிமை. சுரதா பேட்டிகள் கொஞ்சம் காரம் என்றால்  கவிக்கோவின் பேட்டிகள் நச் ரகம். பெண் கவிஞர்களின் சில வார்த்தைப் பிரயோகங்களை கடுமையாக சாடி இருக்கிறார்.  ஃபாஷன் என நினைத்து விபச்சாரிகள்., ஏழைகள்., சுதந்திரத்தைத் தாக்கிப்பாடுவது என் திரும்பத் திரும்ப இன்றைய கவிதைகள் எழுதப்படுவதாக கூறுகிறார். ரஜனீஷின் (ஓஷோ) எக்ஸ்டஸி பாதிப்பு ஏற்படுத்தியதாகக் கூறுகிறார்.
பாலகுமாரன்., ஞானக்கூத்தன்., ஈரோடு தமிழன்பன், திலகவதி ஐபிஎஸ் போன்ற இலக்கியகர்த்தாக்களிடமும் கருத்துக் கணிப்பு நிகழ்த்தி இருக்கிறார்.ஓவியர் விஸ்வத்தின் ஆர்ட் டைரக்டர்கள் பற்றிய கருத்தும் எல்லா வண்ணங்களுக்கும் எல்லா அர்த்தங்களும் உண்டு என்று கூறியதும் சிந்திக்க வைத்தது.
வாக்காளர் விழிப்புணர்வு இயக்கம் பற்றி நீதியரசர் கிருஷ்ணசாமி ரெட்டியாரின் பேட்டியில் அறிய முடிந்தது. குற்றவியல் படிப்புத் துறையின் தலைவர் பேராசிரியர் திலக்ராஜ் பெண்கள் தற்காப்புக் கலை பயிலவேண்டும் என்கிறார். அறுபது ஆண்டு நிறைவைக் கொண்டாடிய பேராசிரியை சரளா ராஜகோபாலனும்முனைவர் பார்த்தசாரதியும் அந்தக்காலம் , இந்தக்காலம் பற்றி சுவாரசியமான தகவல்கள் தந்துள்ளார்கள்.  1500 திரைப்படப்பாடல்கள் வடித்த முத்துலிங்கம் அவர்கள் பேட்டி மிகவும் கவிநயம்.
கவனகக் கலை பற்றி கலை. செழியனும், 2000 இல் கவிதைகள் பற்றி அப்துல் ரகுமான், இன்குலாப், ஈரோடு தமிழன்பன்., மு. மேத்தா., பழனிபாரதி சிந்திக்க வைத்தது. முதியோரைத் தத்தெடுக்கவேண்டும் என மூதியோர் மருத்துவத்துறை வல்லுனர் வ.செ.நடராஜன் கூறியது அனைவரும் செயல்படுத்தவேண்டிய விஷயம். குள்ளமானவர்களை உயரமாக்கும் மருத்துவர் மயில்வாகனன் நடராஜனின் பேட்டியும், ஒற்றைத் தலைவலி பற்றி மருத்துவர் பன்னீரும்., ஆஸ்த்துமா பற்றி மருத்துவர் ஸ்ரீதரும், குழந்தைகள் மனநலன் பற்றி டாக்டர் ஜே. விசுவநாத்தும்,அறுவை சிகிச்சைகள் தேவையா என்பதுபற்றி மருத்துவர் பூபதியும் கூறியுள்ள கருத்துக்கள் கவனத்தில் கொள்ளப்படவேண்டியவை.
எனக்கு மிகவும் பிடித்தது என்றால் அது தேனுகாவின் கட்டுரைகள்தான். க்ரியேட்டிவ் மெனோபாசிட்டி பற்றியும், ஓவியங்கள், சிற்பக்கலை., கட்டிடக்கலை பற்றியும், பலவித இஸங்கள் குறித்த பகிர்வும் மிக நேர்த்தி. புகழைத்தேடி அலைவதை விட படைப்பின் நேர்த்தியில் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார். அமெரிக்கத் தகவல் மையத்தின் து்ணை அதிகாரியான கிறிஸ்டோபர் ஊர்ஸ்டின் யதார்த்தமான புகைப்படக்கலை பற்றிய விவரங்கள் அருமை.
அடுத்தபடியாக இணையம் பற்றிய தொகுப்புகள். தமிழ்நாடு அரசின் இணையப் பல்கலைக் கழகத்தின் இயக்குநர் பொன்னவைக்கோ., பேராசிரியர் இ. அண்ணாமலை, தமிழ் விக்கிபீடியா இ. மயூரநாதன் ( இதுதான் மிகப் பெரிய இ- நேர்காணல்), மற்றும் இணையத்தில் பள்ளிக்கூடம் நடத்தும் ( MASTER MINDS E ACADEMY)  ஆர். செல்வகுமார்.,  ஒலி இதழ் “ப்ரைம் பாயிண்ட்”  ஸ்ரீனிவாசனுடன் இ- நேர்காணல்.,காந்தளகம் பதிப்பக உரிமையாளர் க.சச்சிதானந்தன்., இ கவர்னெஸ் பற்றி தேசிய தகவலியல் மையத்தின் தொழில்னுட்ப இயக்குனர் எம் பாலசுப்பிரமணியம், வாய்ஸ்நாப்பில் குரல் அஞ்சலும், குரல் மனுவும் பற்றி கணேஷ் பத்மநாபனும்,தேடுபொறி உகப்பாக்கம் பற்றி டிஜிக்ளிஃப் நிறுவனத்தின்  தலைமைச் செயல் அதிகாரி  பாலாஜி ராமநாதனின் கருத்துக்களும் மிகவும் வித்யாசமானவை.
தமிழ் விக்கிபீடியா பற்றிய விவரங்களும்., ஆர். செல்வகுமாரின் நெட் ஸ்கூலும், வெர்ச்சுவல் லேர்னிங்கும்., ப்ரைம் பாயிண்ட் ஸ்ரீனிவாசனின் பாட்காஸ்ட்டும் , கணேஷ் பத்மனாபனின் குரல் அஞ்சலும் குரல் மனுவும்., பாலாஜி ராமனாதனின் தேடுபொறி உகப்பாக்கமும் ( SEO) , தேடுபொறி சந்தையாக்கமும் (SEM)  மிகவும் ஆச்சர்யப்படவைத்தன. தொழில்நுட்பம் எவ்வளவு வளர்ந்திருக்கிறதென. நச்சு நிரல் உள்ள தளங்கள், மாரீச வலைத்தளங்கள் பற்றியும் எச்சரிக்கை கிடைத்தது.
ஆனால் இ கவர்நெஸின் எம் பாலசுப்பிரமணியம் சொல்வதுபோல இது முழுமையாய் பயன்படுத்தப்படவேண்டும். அரசு ஊழியர்களும் தங்களுக்கு வரும் மின்னஞ்சல்களைப் பார்த்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் . கிட்டத்தட்ட 89 களிலேயே இது போல இணையக் கல்வியிலும் பெருமுயற்சி எடுத்து வரும் ஆர். செல்வகுமார் சொல்வது போல இதன் பயன்பாடு இன்னும் நிறைய மக்களுக்குப் போய்ச்சேர அரசு நிர்வாகமும்  ஆதரவு வழங்கவேண்டும்.
திரிசக்தி பதிப்பகத்தின் இந்தத் தொகுப்பு., அம்பலம் மின்னிதழ்., ராணி, அமுதசுரபி, இதயம் பேசுகிறது, தினமணி கதிர், சென்னை ஆன்லைன், இவற்றில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பாகும். இதில் முன்னுரையில் எந்தத் துறை பற்றிக் கொஞ்சமேனும் ஏதேனும் துறை பற்றி முமுமையாகவும் அறிந்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்கள் பதிப்பகத்தார். உண்மைதான். அண்ணா கண்ணன் எல்லாத்துறையிலும் அடிப்படை அறிவோடும் நிறைய கேள்விகளைக் கேட்டும் இந்தத் தொகுப்பை சிறப்பாக அளித்துள்ளார். தன் கருத்துக்களைப் புகுத்தாமல் நேர்மையான் நேர்காணல் பதிவாக ஒலிக்கிறது இது.  நேர்காணல் எடுக்க விரும்புகிறவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய  ஒரு சிறந்த நூலாக இது இருக்கிறது.  வாழ்த்துக்கள் அண்ணா கண்ணன், மற்றும் திரிசக்தி.
நூல் – நினைவில் நிற்கும் நேர்காணல்கள்.
ஆசிரியர் – அண்ணா கண்ணன்
பதிப்பகம் – திரிசக்தி
விலை – ரூ. 75/-
Series Navigationகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) காதல் என்பது என்ன ? (கவிதை – 50 பாகம் -1)சுதேசிகள்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *