பஞ்சதந்திரம் தொடர் 11 – விஷ்ணுரூபம் கொண்ட நெசவாளி

This entry is part 40 of 45 in the series 2 அக்டோபர் 2011

விஷ்ணுரூபம் கொண்ட நெசவாளி

 

கௌட ராஜ்ஜியத்தில் புண்டரவர்த்தனம் என்ற நகரம் ஒன்றிருந்தது. அங்கே இரு நண்பர்கள் இருந்தனர். ஒருவன் தச்சன்; இன்னொருவன் நெசவாளி. இருவரும் தத்தம் வேலையில் நிபுணர்கள். அதனால் அவர்கள் தொழிலிலே சம்பாதித்த பணத்திற்குக் கணக்கு வழக்கு எதுவும் வைத்துக் கொள்ளவில்லை. அவர்கள் மென்மையான வேலைப்பாடுகளுள்ள, விலை உயர்ந்த ஆடைகளை உடுத்தினர். பூ, தாம்பூலம் அணிந்து அலங்கரித்துக் கொண்டனர். கற்பூரம், அத்தர், கஸ்தூரி முதலிய வாசனைப் பொருட்களை உபயோகித்தனர். பகலில் ஒன்பது மணி நேரம் வேலை செய்வார்கள். மற்ற நேரங்களில் நன்றாக அலங்கரித்துக் கொண்டு பொது ஸ்தலங்கள், கோவில்கள் முதலான இடங்களில் தினந்தோறும் ஒன்றாய்ச் சேர்ந்து சுற்றித் திரிவார்கள். நாடகங்கள், கூட்டங்கள், விழாக்கள் போன்ற ஜனக் கூட்டம் அதிகமுள்ள இடங்களில் சுற்றிவிடட்டுச் சாயங்காலம் வீட்டிற்குத் திரும்புவார்கள். இப்படியே அவர்களுக்குப் பொழுது போய்க்கொண்டிருந்தது.

ஒருநாள் பெரிய விழா ஒன்று வந்தது.

 

ஜனங்கள் எல்லோரும் அவரவர்களுக்கு ஏற்றபடி அலங்கரித்துக் கொண்டு கோவில் முதலான இடங்களைச் சுற்றிவரப் புறப்பட்டார்கள். நெசவாளியும் தச்சனும் நன்றாக உடுத்தி அழகுபடுத்திக்கொண்டு வெளியே புறப்பட்டு, அங்கங்கே கூடி நிற்கும் அலங்காரமயமான ஜனங்களில் முகங்களைப் பார்த்துக்கொண்டே போனார்கள். அப்பொழுது, ஒரு வெள்ளை மாளிகையின் உப்பரிகையிலே, தோழிகள் புடைசூழ, ஒரு அரசகுமாரி அமர்ந்திருந்தாள்.  இளமையால் பொங்கித் திரண்ட ஸ்தனபாரம், பரந்த நிதம்பம், குறுகிய இடை, கார்மேகம்போல் கறுத்தடர்ந்து அலைபோல் புரளும் மிருதுவான பளபளப்பான கேசம், மன்மதன் கேளிக்கைக்குகந்த ஊஞ்சல் போல் தொங்கியாடும் தங்கத்தோடுகள் அணிந்த காதுகள், மென்மையும் ஒளியும் சிந்தும் அன்றலர்ந்த தாமரைக்கொப்பான முகம், விளங்கப் பேரெழிலுடன் அரசகுமாரி அங்கே, நித்திரை கவர்வதுபோல், சகல மக்களின் கண்களையும் கவர்ந்து ஒளிர்ந்தாள்.

 

அரசகுமாரியின் ஒப்புயர்வற்ற சௌந்தரியத்தைக் கண்ட நெசவாளி அந்த வினாடியே மன்மத பாணத்துக்கு இரையானான். மிகவும் சிரமப்பட்டு, மனோதிடத்துடன் தன் எண்ணங்களை மறைத்துக்கொண்டு, எல்லாத் திசைகளிலிருந்தும் அரசகுமாரியைப் பார்த்தபடியே வீட்டுக்கு வந்து சேர்ந்தான். வெப்பம் மிகுந்த நெடிய பெருமூச்சு விட்டுக்கொண்டு படுக்கை விரிக்காத கட்டிலிலே விழுந்து அப்படியே கிடந்தான். அவளை எப்படிப் பார்த்தானோ அப்படியே மனத்தில் வர்ணித்துக்கொண்டும், நினைத்துப் பார்த்துக்கொண்டும் சுலோகங்களைச் சொல்லிக்கொண்டும் கிடந்தான்.

 

அழகுள்ள இடத்தில் குணமும் இருக்கும் என்ற கவிகள் பாடியிருப்பது தவறு. ஏனெனில் இவள் பேரழகியாயிருந்தும் என் இதயத்தில் வீற்றிருந்தபடியே என்னைப் பிரிந்து துன்புறுத்துகின்றாள்.

 

அல்லது இப்படியும் இருக்கலாமோ?

 

ஒன்று துன்பத்தால் நிறைந்திருக்க மற்றொன்றைக் காதலி கவர்ந்து செல்ல, இன்னொன்று உணர்ச்சிகளிலே ஊறித் தவிக்க என்னுள் எத்தனை இதயங்கள்தான் உள்ளனவோ?

 

நற்குணங்களால் உலகம் நன்மையே அடைகின்றது என்றால் பிறகு மான்விழியாளின் நற்குணங்கள் என்னைத் துன்புறுத்துவானேன்?

 

”அவனவன் தானிருக்கும் வீட்டைப் பத்திரமாகக் காக்கின்றான். அழகியே! என் இதயத்தில் நீ குடிகொண்டிருந்தும் அதை என்றென்றும் எரித்துக் கொண்டிருக்கிறாய்.

 

சிவந்த இதழ்களும், இளமைக் கர்வத்தில் ஓங்கிய கலசம் போன்ற ஸ்தனங்களும், குழிந்த நாபியும், இயல்பாய்ச் சுருண்ட நெற்றிக் கேசமும், நுண்ணிய இடையும், நினைத்தவுடன் துன்பமுண்டாக்குவதில் அதிசயம் ஒன்றும் இல்லை. ஆனால் அவளுடைய பளபளப்பான கன்னங்கள் என்னை எரிப்பதுதான் சரியில்லை.

 

அவளது ஸ்தனங்களிலே விளையாடிக் களைப்படைந்து, குங்குமம் போல் சிவந்து மதயானையின் மத்தகத்தைப் போல் பரந்துள்ள நிதம்பத்தில் மார்பை வைத்து, அவளது கைக்கட்டிலே சிக்கிக் கிடந்து, கணப் பொழுது துயில்கொண்டு கணப்பொழுது கனவு காணப்பெறுவேனோ?

 

நான் இறக்க வேண்டுமென்று விதியிருந்தால் அந்த மான் விழியாள் தான். அதற்குக் காரணமாக வேண்டுமா? வேறு மார்க்கம் இல்லையா?

 

நெஞ்சே! காதலி வெகுதொலைவிலிருந்தாலும் அருகிலிருப்பதே போல் கண்டு களித்திருக்கிறாய் நீ! நீ கண்டு களைத்துப் போனால், பிறகு அந்த யோகத்தைக் கண்களுக்கும் உபதேசம் செய். தனிமையிலே அவளுடன் உறையும் உனக்குத் துக்கமே உண்டாகும். ஏனெனில் பிறர் பொருளை விரும்புகிறவர்கள் தன் மதிப்பால் சுகம் பெறுவதில்லை.

  

அந்த மெல்லியலான நிலவின் தண்ணொளியைத் தனதாக்கிக் கொண்டாள்; அதனால் சந்திரனின் வதனம் மங்கிவிட்டன; தாமரையின் பளபளப்பை அவள் கண்கள் உண்டன: என்றாலும் அவளுக்குத் திருட்டுப் பட்டம் கட்டுவார் யாருமில்லை. மதயானையின் நடையையும் கவர்ந்து விட்டாள். அது எப்படியோ நான் அறியேன்! என் இதயத்தையும் பறித்து விட்டான். என்ன விந்தையோ! என்ன மாயமோ!

 

மண்ணிலும், விண்ணிலும் திசையிலும், திக்கிலும், எங்கும் அவளைக் காண்கின்றேன். உயிர்ப்பின் இறுதித் துடிப்பின் போதும் என் நெஞ்சின் நினைவில் அவள் எங்கும் நிறைந்திருப்பான். விஷ்ணுபோல் அந்த மெல்லியலாள் எங்கும் நிறைந்திருக்கிறாள்.

 

மனோ நிலைகள் எல்லாம் அநித்தியம் என்னும் புத்தபகவான் வார்த்தை பொய். ஏனெனில் காதலியைப் பற்றிய எனது சிந்தனை நீடித்ததாய், நித்தியமாய் வளர்கின்றது.

 

இப்படி நெசவாளி பலவிதமாகப் பிதற்றியவாறு அலைபாயும் மனதுடன் துயர்பட, எப்படியோ இரவு கழிந்தது. மறுநாள் வழக்கம்போல் சரியான நேரத்தில் தன்னை அலங்கரித்துக் கொண்டு தச்சன் நெசவாளியின் வீட்டுக்கு வந்தான். படுக்கை விரித்திராத கட்டிலிலே கைகளும் கால்களும் போட்ட இடம் தெரியாமல் நெசவாளி கிடப்பதைக் கண்டான். வெம்பிய பெருமூச்சு விட்டுக்கொண்டு, வெளிறிய கன்னங்களோடும் நீர் நிரம்பிய கண்களோடும் அவன் கிடப்பதைக் கண்டான். ”நண்பனே, உன் உடல்நிலை ஏன் இன்றைக்கு இப்படியிருக்கிறது?” என்று விசாரித்தான். பதில் இல்லை. மீண்டும் மீண்டும் கேட்டுப் பார்த்தான். நெசவாளி வெட்கத்தால் பதில் பேசவில்லை. தச்சன் சலிப்படைந்து இந்தச் செய்யுளைச் சொன்னான்:

 

தனது கோபத்தால் பிறரை மனம் சலிக்கும்படி செய்கிறவன் நண்பன் இல்லை; பயத்தோடு தன்னை உபசரிக்கும்படி செய்பவனும் நண்பன் இல்லை. ஒருவனைத் தாய்போல் பாவித்து நம்பிக்கை வைத்திருக்கிறாய் என்றால் அவன் உன் நண்பனே தவிர, சும்மா அறிமுகமானவன்தான் என்று எண்ணிவிடாதே!

 

இப்படிச் சொல்லிவிட்டு, நோய்க் குறிப்பு அறியும் கைவிரல்களால் அவனது மார்பையும் மற்ற அங்கங்களையும் தொட்டு பார்த்துவிட்டு, ”நண்பனே, உனக்குக் காய்ச்சல் ஒன்றும் இல்லை. உனது உடல் நிலைக்குக் காரணம் மன்மதன்தான் என்று நினைக்கிறேன்” என்றான்.

 

தச்சனே தன் உடல்நிலை விஷயத்தை உடைத்துச் சொன்னவுடன், நெசவாளி எழுந்து உட்கார்ந்துகொண்டு, பின்வரும் செய்யுளைச் சொன்னான்:

குணத்தை நன்கறிந்த எஜமானன், நம்பிக்கையுள்ள வேலையாள், பக்தி விசுவாசமுள்ள மனைவி, ஆதரவளிக்கும் நண்பன் ஆகியோரிடம் ஒருவன் தன் துக்கத்தை வெளியிட்டால் மனத்துக்கு நிம்மதியுண்டாகிறது.

 

நெசவாளி அரசகுமாரியைப் பார்த்தது முதலான விருத்தாந்தம் முழுவதையும் தச்சனிடம் தெரிவித்தான். தச்சன் யோசனை செய்துவிட்டு, ”அந்த அரசனோ ஒரு க்ஷத்திரியன். நீயோ வைசியன், அப்படியிருக்க, அதர்மத்துக்கு நீ பயப்பட வில்லையா?” என்றான்.

 

”சாஸ்திரத்தின்படி க்ஷத்திரியனுக்கு மூன்று மனைவிகள் உண்டு. அரசகுமாரி ஒருவேளை வைசிய ஜாதி மனைவியின் புத்ரியாக இருக்கலாம். அதனால்தான் எனக்கு அவள்மேல் காதை ஏற்பட்டிருக்க வேண்டும். ஒரு கதையில் அரசன் சொன்னதுபோல்,

 

எனது பரிசுத்தமான மனது அவளை விரும்புகிறதென்றால் அவள் நிச்சயமாக க்ஷத்திரிய குலத்தில் உதித்தவளாக இருக்க வேண்டும். பகுத்தறிவு சொல்வதில் நல்லவர்களுக்குக் சந்தேகமேற்பட்டால் மனம் சொல்வதையே நியாயம் என்று முடிவு கட்டுகின்றனர்’.” என்றான் நெசவாளி.

 

அவனது துணிந்த முடிவைத் தச்சன் அறிந்து கொண்டான். ”இனிமேல் என்ன செய்யவேண்டும் என்கிறாய்?” என்று கேட்டான்.

 

”எனக்கு ஒன்றும் தெரியாது. நண்பனானதால் உன்னிடம் சொன்னேன்” என்று சொல்லிவிட்டு நெசவாளி மௌனியானான்.

 

கடைசியில், ”சரி, எழுந்திரு, குளித்துவிட்டுச் சாப்பிடு! நிராசையை விட்டு விடு, ஒரு உபாயம் சொல்கிறேன். அதன்படி நடந்தால் சீக்கிரமே அவளைக் கூடி நீ சுகபோகம் அனுபவிப்பாய்” என்று தச்சன் சொன்னான்.

 

நண்பன் அளித்த உறுதிமொழியால் மீண்டும் நம்பிக்கை அடைந்து நெசவாளி எழுந்தான். பழையபடியே தன் அலுவல்களைக் கவனித்தான். மறுநாள் தச்சம் வந்தான். வந்தவன், ஒரு கருட வாகனத்தையும் தன்னோடு கொண்டு வந்திருந்தான். அது மரத்தால் செய்யப்பட்டது; பல வர்ணங்களிலே சித்திர வேலை செய்யப்பெற்றிருந்தது. அதை இயக்குவதற்குப் பல யந்திர வேலைப்பாடுகளும் அதில் இருந்தன. நெசவாளியிடம் அதைக் காண்பித்து, ”நண்பனே, இதில் நீ ஏறிக்கொண்டு விசையை அழுத்தினால் விரும்புகிற இடத்துக்குப் போகலாம். எந்த இடத்தில் விசையை எடுத்து விடுகிறாயோ அங்கே இந்த வாகனம் இறங்கும். இதை எடுத்துக்கொள். ஊர் உறங்கும் நேரம் பார்த்து, இன்றிரவே, அலங்காரம் செய்துகொள். என் சாஸ்திர ஞானத்தைக் கொண்டு நீ விஷ்ணுரூபம் தரிசிக்கும்படி உனக்கு ஜோடனை செய்து விடுகிறேன். பிறகு இந்த கருட வாகனத்தின் மீது ஏறிக்கொண்டு போய் அரசகுமாரியின் அந்தப்புரத்தின் மாடியில் இறங்கிவிடு. பிறகு அந்த அரச குமாரியுடன் உனக்கு விருப்பமான ஏற்பாடு செய்துகொள். அவள் மேன் மாடத்தில் தனிமையிலே தூங்குகிறாள் என்று அறிந்து வந்திருக்கிறேன்” என்றான்.

 

இவ்வாறு சொல்லிவிட்டு தச்சன் போய்விட்டான். நெசவாளி பல மனக்கோட்டைகள் கட்டியபடியே அன்றையப் பகற் பொழுதைக் கழித்தான். இரவில் குளித்தான்; உடம்புக்குச் சாம்பிராணி புகை ஏற்றி, முகத்துக்கு வாசனைச் சுண்ணமும் தைலங்களும் பூசிக்கொண்டான்; தாம்பூலம் தரித்துக்கொண்டான்; விதவிதமான வர்ணமும் வாசனையும் நிறைந்த மலர்மாலைகளையும் வஸ்திரங்களையும் அணிந்து கொண்டான். இதர ஆபரணங்களையும் கிரீடத்தையும் தரித்தான். தச்சன் சொன்ன நேரத்தில் சொன்னபடியே கருட வாகனத்தில் ஏறிச் சென்றான்.

 

அரண்மனை மேன்மாடத்தில் அரசகுமாரி தனிமையில் படுக்கையிலே  படுத்திருந்தாள். நிலவொளி அவள் மீது படர்ந்திருந்தது. சந்திரனைப் பார்த்த வாறு அவளது மனம் காதல் சிந்தனைகளிலே மூழ்கிப் போயிருந்தது. திடீரென்று கருட வாகனனாய் விஷ்ணு ரூபத்தில் இறங்கும் நெசவாளியை அவள் பார்த்துவிட்டாள். உடனே படுக்கையிலிருந்து பரபரப்புடன் எழுந்து சென்று அவனது பாதங்களில் விழுந்து நமஸ்கரித்து, ”தேவதேவ! தங்கள் வருகையால் என்னை அனுக்ரஹித்ததின் காரணம் என்னவோ, தெரிவியுங்கள்! கட்டளைப்படி செய்கிறேன்!” என்று வேண்டிக்கொண்டாள்.

 

இந்தச் சொற்களைக் கேட்ட நெசவாளி, ”அன்பே! உன் பொருட்டாகவே நாம் இம்மண்ணுலகிற்கு விஜயம் செய்திருக்கிறோம்” என்று கம்பீரமாகவும், மிருதுவாகவும், மெதுவாகவும் வார்த்தை உதிர்த்தான்.

 

”நான் மானிடப் பெண்ணாயிற்றே!” என்றாள் அவள்.

 

”முன்பு நீ எம்தேவியே. சாபத்தால் மண்ணுலகில் பிறந்திருக்கிறாய். இத்தனை காலமாக நீ மனிதனுடன் சேராமல் உன்னை நாமே ரக்ஷ¢த்து வந்தோம். உன்னைக் காந்தர்வ மணம் புரிந்துகொள்ள மனம் கொண்டோம்” என்று பதில் அளித்ததான் நெசவாளி.

 

”மனிதன் பெறுவதற்கரிய பெரும்பேறு ஆயிற்றே இது!” என்று அரச குமாரி தனக்குள் யோசித்தாள். ”சுவாமி, அப்படியே ஆகட்டும்” என்று ஒப்புக் கொண்டாள். அவளைக் காந்தர்வ முறைப்படி நெசவாளி மணந்து கொண்டான்.

 

அதன்பிறகு தினந்தோறும் அவர்கள் காதலின்பத்தில் மூழ்கினார்கள். இருவருக்குமிடையே ஆசை வளர்ந்து கரை புரண்டோடியது. நாட்கள் பல சென்றன. இரவு நீங்குவதற்குச் சிறிது நேரமிருக்கும் பொழுதே, நெசவாளி தன் கருட வாகனத்தில் ஏறிக்கொண்டு ”வைகுண்டம் சென்று வருகிறோம்” என்று அவளிடம் விடைபெற்றுக்கொண்டு யார் கண்ணிலும் படாமல் வீட்டுக்குத் திரும்பிவிடுவான்.

 

பிறகு ஒரு நாள் அந்தப்புரத்தைக் காவல் காக்கும் சேடிமார் அரசகுமாரியின் உடம்பில் கலவிக் குறிகள் இருப்பதைக் கண்டுவிட்டார்கள். ‘இனி செத்தோம்’ என்று பயந்து போனார்கள். உடனே அசரனிடம் ஓட்டமாய் ஓடிச்சென்று, ”அரசே, தஞ்சம், தஞ்சம்! உம்மிடம் ஒரு செய்தி சொல்ல வந்திருக்கிறோம்” என்றார்கள். ”சொல்லுங்கள்!” என்று அரசன் கட்டளை இட்டான். ”அந்தப்புரத்தில் ஆண்கள் நுழையாதபடி எவ்வளவோ முயற்சித்துக் காவல் காத்தோம். இருந்தபோதிலும், அரசகுமாரி சுதர்சனாவின் உடம்பில் கலவிக்குறிகள் தெரிகின்றன. வேறொன்றும் எங்களுக்குத் தெரியாது. தங்கள் சித்தம்” என்று அவர்கள் தெரிவித்துக்கொண்டார்கள்.

 

அரசன் இதைக்கேட்டதும் மனக்கலக்கமடைந்து சிந்திக்கத் தொடங்கினான்.

 

பெண் பிறந்தாள் என்றாலே பெருங்கவலைதான்; யாருக்குக் கொடுப்பது என்பதும் பெரிய தொல்லை; கொடுத்த பின் சுகமாய் வாழ்கிறாளா என்பதும் ஒரு பெரிய கேள்விதான். பெண்ணுக்குத் தந்தையாக இருப்பது மிகவும் கஷ்டமே.

 

பெண் பிறந்தவுடன் தாயின் மனத்தை அபகரிக்கிறாள்; வளர்ந்தவுடன் பிராண சிநேகிதர்களையும் பிரிக்கிறாள்; மணந்த பிறகு களங்க மடைகிறாள். பெண்கள் என்றாலே கஷ்டந்தான்.

 

நல்லவனின் கையில் போய்ச் சேருமா? சேர்ந்து அவர்களை மகிழ்விக்குமா? தோஷ தூஷணைகள் இல்லாமல் இருக்குமா? என்று, தனது கவிதையைப் பற்றி கவிஞன் கவலை கொள்வது போல் பெண்களைப் பற்றி பெற்றோர்களும் கவலைப்படுகிறார்கள்.

 

இப்படிப் பதலவிதமான எண்ணியபடியே அரசன் ராணியிடம் சென்றான். ”தேவி, சேடிமார் சொன்ன விஷயம் உனக்குத் தெரியுமா?” இப்படிப்பட்ட காரியம் செய்தவன் இன்றைக்கே யமனுக்கு இரையாவான்” என்று கூறிவிட்டுத் தான்கேட்ட விஷயத்தை ராணிக்குச் சொன்னான். ராணியும் மனக்கலக்கத்துடன் அரசகுமாரியின் அந்தபுரத்துக்குச் சென்றாள். அங்கே தனது புதல்வியின் உதட்டிலே பல்குறியும் அங்கங்களிலே நகக்குறியும் இருக்கக் கண்டாள். உடனே, ”அடிபாவி! நம் குலத்துக்கே களங்கம் ஏற்படுத்தி விட்டாயே! ஏன் இப்படி நடத்தை கெட்டுப் போனாய்? உன்னிடம் தொடர்பு கொண்டிருப்பவன் யார்? அவனுக்குச் சாவு நெருங்கி விட்டது. இந்தக் கேடு கெட்ட நிலைக்கு வந்து விட்ட பிறகாவது உண்மையைச் சொல்!” என்று இரைந்தான்.

அவமானத்தால் அரசகுமாரி முகம் கவிழ்ந்துக் கீழ்நோக்கியபடியே, விஷ்ணு ரூபத்தில் வந்த நெசவாளியின் விருத்தாந்தத்தை எல்லாம் வெளியிட்டாள். அதைக் கேட்டவுடனேயே ராணியின் முகம் மலர்ந்தது; உள்ளும் புறமும் பரவசமானாள். அரசனிடம் வேகமாக ஓடிச்சென்று, ”நாதா, தாங்கள் மிகவும் பாக்கியசாலி. தினந்தோறும் இரவில் விஷ்ணு பகவானே பிரசன்னமாகி நமது பெண்ணையடைகிறார். அவளைக் காந்தர்வ முறைப்படி கல்யாணம் செய்து கொண்டிருக்கிறார். இன்றிரவு நீங்களும் நானும் ஜன்னல் வழியாக அவரைப் பார்க்க வேண்டும். மனிதருடன் அவர் பேசுவதில்லையாம்” என்று கூறினாள்.

 

அரசன் மிகவும் சந்தோஷமடைந்தான். அன்றையப் பகற்பொழுது போவது அவனுக்கு நூறு வருஷங்கள் போவதுபோல் இருந்தது. கடைசியில் இரவில் ஜன்னல் அருகில் ஒளிந்து கொண்டு, அரசி தன் பக்கத்தில் இருக்க, ஆகாயத்தைப் பார்த்தபடியே நின்றிருந்தான். அந்தச் சமயத்தில், கருட வாகனத்தில் அமர்ந்து சங்கும் சக்கரமும் கதாயுதமும் கைகளில் ஏந்தியபடி பொருத்தமான சின்னங்களுடன் ஆகாயத்திலிருந்து யாரோ இறங்குவதை அரசன் கண்டான். அமிர்தத்தால் அபிஷேகம் செய்யப்பட்டவன்போல் தன்னை எண்ணிக்கொண்டான். ராணியைப் பார்த்து, ”தேவி! இவ்வுலகில் நம் இருவரைப் போல் புண்ணியம் செய்தவர்கள் வேறு யாருமில்லை. நமது பெண்ணை விஷ்ணு பகவானே நேரில் வந்து ஏற்கிறார். நமது இதயக் கனவுகள் எல்லாம் பலித்து விட்டன. இனி என் மாப்பிள்ளையின் வல்லமையைக் கொண்டு இந்தப் பூமி முழுவதையும் ஆளுவேன்” என்று கூறினான்.

 

நிற்க, தொண்ணூற்றென்பது லட்சம் கிராமங்களுக்கு அதிபதியான தென்னாட்டு மன்னன் ஸ்ரீவிக்கிரமசேனனின் தூதர்கள் ஒருநாள் இந்த அரசனிடம் வந்தார்கள். ஸ்ரீவிக்கிரமசேனனுக்கு ஆண்டுதோறும் இந்த அரசன் கப்பம் செலுத்துவது வழக்கம். அதை வசூலிக்கவே தூதர்கள் வந்தார்கள். சாட்சாத் மகாவிஷ்ணுவே தனக்கு மாப்பிள்ளையாக வாய்த்திருக்கிறார் என்கிற கர்வத்தால் அரசன் தூதர்களுக்கு முன்போல் மரியாதைகள் எதுவும் செய்ய வில்லை. அதனால் அவர்கள் கோபமடைந்து, ”அரசே, கப்பங்கட்ட வேண்டிய நாள் கடந்துவிட்டது. கிரமப்படி நீங்கள் செலுத்தவேண்டிய கப்பத்தைச் செலுத்தத் தவறியது ஏன்? எதிர்பாராத, அமானுஷ்யமான, சக்தி எங்கிருந்தோ உங்களுக்குக் கிடைத்திருக்கக் கூடும். இல்லாவிட்டால் நெருப்பு, புயல், விஷப் பாம்பு, யமன் முதலியோருக்குச் சமமான எமது அரசன் ஸ்ரீவிக்கிரமசேனனை எதிர்க்கத் துணிவீரா!” என்று கூறினர்.

 

இந்தப் பேச்சைக் கேட்ட அரசன் அவர்களை அவமானப்படுத்தி அனுப்பினான். தங்கள் காரியம் பலிக்காததால் தூதர்கள் திரும்பிப்போய், விஷயத்தை நூறாயிரம் மடங்கு மிகைப்படுத்திச் சொல்லி தங்கள் மன்னனைக் கோபமூட்டி விட்டனர்.

 

அதன் விளைவாக, ஸ்ரீவிக்கிரமசேனன் தனது நான்கு விதப் படை பலங்களையும் திரட்டிக்கொண்டு அந்த நாட்டின் மேல் படையெடுத்தான்.

 

“சமுத்திரத்துக்குள் ஓடி யொளிந்தாலும் சரி, இந்திரன் காக்கும் மேருமலையில் ஏறினாலும் சரி, அந்தக் கெட்ட அரசனைக் கொல்லாமல் விடப்போவதில்லை. இது என் சபதம்!” என்று கோபத்தோடு சபதம் செய்தான்.

 

ஸ்ரீவிக்கிரமசேனனின் படைகள் எவ்விதத் தடையும் இல்லாமல் முன்னேறின. கடைசியில் அந்த நாட்டை அடைந்து நாசஞ் செய்யத் தொடங்கின. கொல்லப்பட்டவர்கள் போக மற்றவர்கள் எல்லோலும் புண்டர வர்த்தன மன்னனின் அரண்மனையைச் சூழ்ந்து கொண்டு அரசனை நிந்திக்கலாயினர். அதைக் கேட்ட பிறகும் அரசனுக்குத் துளிகூட கவலை ஏற்படவில்லை.

 

மறுநாள் ஸ்ரீவிக்கிரமசேனனின் படைகள் நெருங்கி புண்டரவார்த்தன புரியைத் தாக்கின. மந்திரிகளும், புரோகிதர்களும் பெரியோர்களும், அரசனிடம் போய், ”அரசே, பலமுள்ள எதிரி வந்து நகரை முற்றுகை இட்டிருக்கிறான். நீங்கள் எப்படிக் கவலை கொள்ளாமல் இருக்கிறீர்கள்?” என்று கேட்டனர்.

 

”உங்களுக்குக் கவலை வேண்டியதில்லை. எதிரியைக் கொல்வதற்கு ஒரு வழி யோசித்தது வைத்திருக்கிறேன். எந்த பலத்தைக் கொண்டு எதிரியைக் கொல்லப்போகிறேன் என்கிற விஷயம் உங்களுக்கு நாளை காலையில்தான் விளங்கும்” என்றான் அரசன். இவ்வாறு தெரிவித்து விட்டு, அரசன் கோட்டை வாயில்களை நன்றாக பலப்படுத்தினான்.  பிறகு அரசகுமாரி சுதர்சனாவை அழைத்து இனிய சொற்களில் பரிவுடன் பேசினான்: ”குழந்தாய்! உன் கணவன் பலத்தை நம்பித்தான் எதிரியுடன் சண்டை ஆரம்பித்திருக்கிறேன். ஆகையால்  இன்றிரவு ஸ்ரீமந் நாராயணன் வரும்பொழுது இந்த எதிரியைக் காலையில் கொல்ல வேண்டும் என்று அவரிடம் சொல்!” என்றான்.

 

தந்தையின் வேண்டுகோள் முழுவதையும் சுதர்சனா இரவில் நெசவாளிக்கு விவரமாகச் சொன்னாள். அதைக்கேட்டு நெசவாளி சிரித்தான். ”அன்பே! முன்பு ஹிரண்யகசிபு, கம்சன், மதுகைடபர்கள் போன்ற பெரிய மாயாவி ராக்ஷசர்களையெல்லாம் நான் விளையாட்டாக் கொன்றிருக்கிறேனே! இந்த மனிதர்களுடன்  சண்டை செய்வது எனக்கு எம்மாத்திரம்? ‘கவலை இல்லாமல் இருங்கள். காலையில் சக்கராயுதம் எறிந்து மகாவிஷ்ணு தங்கள்  எதிரியின் படைகளைக் கொல்வார்’ என்று அரசனிடம் போய்ச் சொல்” என்றான்.

 

அரசகுமாரி இதைப் பெருமையுடன் தந்தையிடம் தெரிவித்தாள். அரசனுக்குச் சந்தோஷம்  தாங்கவில்லை. வாயில் காப்போனை அழைத்து, ‘காலையில் சண்டையின்போது கொல்லப்படும் ஸ்ரீவிக்கிரமசேனன் தரப்பிலிருக்கும் தனமோ, தானியமோ, பொன்னோ, யானையோ, குதிரையோ, ஆயுதங்களோ எதுவானாலும் சரி, யார் கைப்பற்றுகிறார்களோ அவர்களுக்கே அது சொந்தம்’ என்று நகரெங்கும் பறைசாற்றும்படி உத்தரவிட்டான்.

 

அரசருடைய பிரகடனத்தைக் கேட்டு மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியடைந்தனர். ”நமது மன்னர் மிகுந்த பராக்கிரமசாலி; எதிரியின் சேனை பெரிதாக இருந்துங்கூட கவலை கொள்ளவில்லை. நிச்சயமாய்க் காலையில் கொன்று விடுவார்” என்று பேசிக்கொண்டு போனார்கள்.

 

நிற்க, நெசவாளியின் இன்பக்காதல் நினைவுகள் எல்லாம் பறந்து போயின. அவனைக் கவலை சூழ்ந்துகொள்ளவே, யோசிக்கத் தொடங்கினான்: ”இப்பொழுது என்ன செய்வது? கருடவாகனத்தில் ஏறிக்கொண்டு வேறு எங்காவது போய்விடலாமா? போய்விட்டால் இந்தப் பெண்மணியை மீண்டும் கூடமுடியாதே! ஸ்ரீவிக்கிரமசேனன் என் மாமனாரைக் கொன்று, அந்தப் புரத்திலிருக்கும் இவளைப் பிடித்துக்கொண்டு போய் விடுவானே! எனவே யுத்தம் செய்வதே சரி. நான் இறந்தால் என்னோடு என் மனவிருப்பங்களும் மண்ணாய்ப் போய்விடும். அவள் இல்லையென்றாலும் எனக்கு மரணமே. சுருங்கச் சொன்னால், இரண்டு வழிகளிலும் எனக்கு மரணமே. ஆகவே சண்டை செய்து சாவதே மேல். மேலும், நான் யுத்தம் செய்தால் கருடவாகனத்தின் மேல் அமர்ந்துவரும் என்னைக் காணும் எதிரிகள் என்னை சாட்சாத் மகாவிஷ்ணுவே என்று எண்ணி ஒரு வேளை ஓட்டம் பிடிக்கலாம்.

 

கஷ்டமும், சங்கடமும், பேராபத்தும் நேர்கிற சமயங்களில் மேலோர் தைரியத்தைக் கைவிட மாட்டார்கள். சிறந்த விவேகமும், தைரியமும் காட்டி விபத்துக்களை விலக்குகிறார்கள்

 

என்றும் சொல்லப்படுகிறது.

 

இவ்வாறு நெசவாளி யோசித்து முடிவு செய்து பிறகு, வைகுண்டத்தில் நிஜமான மஹாவிஷ்ணுவிடம் நிஜமான கருடபகவான் சென்று, ”சுவாமி! மண்ணுலகில் இருக்கிற புண்டரவர்த்தன நகரத்தில் ஒரு நெசவாளி தங்கள் உருவம் தரித்துச் சென்று அரசகுமாரியை அனுபவித்து வருகிறான். புண்டர வர்த்தனத்தின் அரசனை மகா பலசாலியான ஒரு தென்னாட்டு அரசன் வேரறுக்க எண்ணங் கொண்டு படையெடுத்து வந்திருக்கிறான். தன் மாமனாருக்கு உதவி செய்ய நெசவாளி இன்றையதினம் நிச்சயித்திருக்கிறான்.  இதைத் தங்களிடம் தெரிவிப்பது என் கடமை. அந்த யுத்தத்தில் நெசவாளி ஒருவேளை இறக்க நேரிட்டால் தென்னாட்டு அரசன் மகாவிஷ்ணுவைக் கொன்றான் என்று மானிட உலகில் பழிச்சொல் கிளம்பும். அதனால் யக்ஞம் முதலிய சடங்குகள் நடக்காமற்போய், மேலுலகத்தாருக்கு நஷ்டம் ஏற்படும். விஷ்ணு கோவில்களை நாஸ்திகர்கள் நாசம் செய்து விடுவார்கள். திரிதண்டி ஏந்திய பக்தர்களோ தீர்த்த யாத்திரை செய்வதை நிறுத்திவிடுவார்கள். இதுதான் நிலைமை. இனி தங்கள் சித்தம்” என்று தெரிவித்துக் கொண்டார்.

 

மகாவிஷ்ணு யோசனையில் ஆழ்ந்தார். பிறகு, கருடபகவானை நோக்கி, ”பக்ஷ¢ ராஜனே! நீ சொல்வது சரி. இந்த நெசவாளி நமது ஒரு அம்சம்தான். இவனே அந்த அரசனைக் கொல்லக் கடவதாக! அதற்கு இதுவே உபாயம்: நீயும் நாமும் அவனுக்கு உதவி செய்ய வேண்டும். நாம் அவனுடைய உடலில் பிரவேசிப்போம். நீயும் அவன் கருடவாகனத்திற்குள் பிரவேசி. நமது சக்கரம் அவன் சக்கரத்துக்குள் பிரவேசிக்கட்டும்” என்று கூறினார்.

 

”அவ்விதமே” என்று கருடபகவான் ஒப்புக்கொண்டார்.

 

பிறகு, மகாவிஷ்ணுவின் தூண்டுதலின் பேரில் நெசவாளி சுதர்சனாவுக்கு இவ்வாறு கட்டளையிட்டான்: ”அன்பே! நான் யுத்தத்திற்குப் புறப்படப் போகிறேன். எனக்கு மங்களச் சடங்குகள் எல்லாம் நடக்கட்டும்” என்றான். அவ்விதமே சகல மங்களச் சடங்குகளும் நடந்து முடிந்தன. யுத்தத்துக்குரிய ஆயுதங்களை அவனுக்கு அணிவித்தனர். கோரோஜனை, கஸ்தூரி, புஷ்ப வகைகளைக் கொண்டு அவனுக்குப் பூஜை செய்தார்கள்.

 

தாமரையின் காதலனான ஆயிரங்கிரணங்கள் கொண்ட சூரிய பகவான் கீழ்வானம் எனும் கங்கையின் வெற்றித் திலகம் போல் உதயமானான். போர் முரசங்கள் வெற்றி முழக்கம் செய்ய, அரசன் நகரை விட்டு வெளியே வந்து போர்க்களம் புகுந்தான். இருதரப்புப் படைகளும் அணிவகுத்து நின்று, காலாட்படைகள் போரிடத் தொடங்கின. அதேசமயத்தில், நெசவாளி கருடவாகனத்தின் மீது அமர்ந்து, விதிப்படி பொன்னும் முத்தும் தானம் செய்துவிட்டு வெண்மாளிகையிலிருந்து உயரக் கிளம்பி ஆகாயமார்க்கமாகச் சென்றான். அவனைப் பார்த்த ஜனங்கள் உற்சாகமடைந்து வணங்கினார்கள். நகருக்கு வெளியே தனது படைகளின் மேல் பறந்து வந்து, கம்பீரமாக ஒலி செய்யும் பாஞ்சஜன்யம் என்னும் சங்கு எடுத்து நெசவாளி ஊதினான்.

 

சங்கநாதத்தைக் கேட்டதும் நால்வகைப் படைகளும் நடுங்கிப் போயின. வஸ்திரங்களை அடிக்கடி நனைத்துக் கொண்டன. சிலர் பயங்கரமாகக் கூக்குரலிட்டபடியே ஓட்டம் பிடித்தனர். சிலர் மூர்ச்சை போட்டு பூமியில் உருண்டனர். சிலர் பயத்தினால் ஆகாயத்தின்மேல் நிலை குத்திய பார்வையோடு  ஸ்தம்பித்து நின்றனர்.

 

அந்தச் சமயத்தில் யுத்தத்தைப் பார்க்கவேண்டுமென்று ஆவல் கொண்டு தேவர்கள் அனைவரும் ஒன்று கூடினர். இந்திரன் பிரம்மாவைப் பார்த்து, ”பிரம்மதேவா! அங்கென்ன, யாராவது ராக்ஷசனையோ அசுரனையோ கொல்ல வேண்டியிருக்கிறதா? பின் ஏன் ஸ்ரீமந் நாராயணனே கருடவாகனம் ஏறி யுத்தம் செய்யப் புறப்பட்டிருக்கிறார்?” என்று கேட்டான். பிரம்மா யோசித்தார்:

தேவர்களின் பகைவர்களைக் கொன்று ரத்தங்குடித்த சக்கராயுதத்தை மகாவிஷ்ணு மனிதன்மேல் வீசமாட்டார். சிங்கத்தின் பாதம் யானைகளைக் கொல்லுமேயல்லாமல் கொசுக்களைக் கொல்லாது.

 

பின் ஏன் இந்த அதிசயமான காட்சி?” என்று பிரம்மாவும் மலைத்துப் போனார். ஆகையால்தான் நான்,

 

நன்றாகத் திட்டமிட்ட சூழ்ச்சியின் முடிவைப் பிரம்மாவாலும் அறிய முடியாது; விஷ்ணுரூபத்தில் சென்ற நெசவாளி அரசகுமாரியை அணைத்தான் என்று சொன்னேன்” என்றது தமனகன்.

 

தமனகன் கதையை மேலும் தொடர்ந்து சொல்லிற்று:

 

”இவ்விதம் ஆவல் நிறைந்தவர்களாய் தேவர்கள் யோசித்துக் கொண்டிருக்கும் போது, நெசவாளி சங்ககராயுதத்தை ஸ்ரீவிக்கிரமசேனன் மீது பிரயோகித்தான். சக்கராயுதம் அந்த அரசனை இரண்டு துண்டமாக்கிவிட்டுத் திரும்பி நெசவாளியின் கைக்கு வந்து சேர்ந்தது. இதைக்கண்டு எல்லா அரசர்களும் தத்தம் வாகனங்களிலிருந்து இறங்கி சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்து, ஸ்ரீமந் நாராயணன் ரூபத்திலிருக்கும் நெசவாளியை நோக்கி, ”சுவாமி! தலைவனற்ற சேனை தோற்றுவிடும் என்பதறிந்து எங்கள் உயிரைக் காப்பாற்றுங்கள். நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று கட்டளையிடுங்கள்!” என்று பிரார்த்தித்தனர்.

 

”உங்களுக்கு அபயம் அளித்தேன். அரசன் சுப்ரதிவர்மன் இடுகிற கட்டளைகளைத் தயக்கமின்றி என்றென்றும் பின்பற்றி வருவீர்களாக!” என்று நாராயண வடிவில் இருக்கும் நெசவாளி பதிலளித்தான்.

 

”சுவாமி! கட்டளைப்படியே நடக்கிறோம்” என்று எல்லா அரசர்களும் அங்கீகரித்தனர். எதிரிக்குச் சொந்தமான போர் வீரர்கள், யானைகள், குதிரைகள், ரதங்கள், பண்டங்கள் முதலிய சகல செல்வங்களையும் நெசவாளி சுப்ரதிவர்மன் வசமாக்கினான்.  அதன்பிறகு, வெற்றிப்புகழ் நாட்டிய நெசவாளி அரசகுமாரியுடன் இருந்து சகல சுகங்களும் அனுபவித்தான்.

 

அதனால்தான், ‘செயல் துணிவுள்ளவர்களுக்குத் தேவர்களும் துணை செய்வார்கள்…’ என்று சொல்கிறேன்” என்றான் தமனகன்.

 

”சரி, நீயும் துணிந்த முடிவுக்கு வந்து விட்டிருந்தால், விரும்பியபடியே வெற்றி தேடிச் செல். உனக்கு மங்களமுண்டாகட்டும்!” என்றது கரடகன்.

 

பிறகு, தமனகன் சிங்கத்திடம் போய் வணங்கிவிட்டு உட்கார்ந்தது, ”உன்னைக் கண்டு ரொம்ப நாள் ஆயிற்றே! காரணமென்ன!” என்று சிங்கம் விசாரித்தது.

 

”அரசே! தங்களிடம் இன்று ஒரு அவசர காரியமாய் வந்திருக்கிறேன். அது உங்கள் மனதுக்குப் பிடிக்காத விஷயந்தான் என்றாலும் அது உங்கள் நன்மைக்குத்தான் என்பதால் தெரிவிக்க வந்தேன். பிடித்தமான விஷயம், பிடிக்காத விஷயம் என்பவை எல்லாம் என்னைப்போல் அண்டிப் பிழைப்பவர்களின் கையில் இல்லை. அவசர அவசியமாகச் செய்ய வேண்டிய காரியம் நேரம் தவறிப்போய்விடுமோ என்ற பயத்தால் தெரிவிக்க வேண்டியவனாயிருக்கிறேன். ஒரு பழமொழி தெரிவிப்பதுபோல்:

 

மந்திரிப் பதவி வகிப்பவர்கள் என்றென்றும் உண்மையே பேசுவது அவர்களின் திடமான எஜமான பக்தியைத்தான் காட்டுகிறது.

 

எஜமானனிடம் என்றைக்கும் இனிப்பாகப் பேசுபவனைக் காண்பது சுலபம். ஆனால், கசப்பான உண்மையைப் பேசுகிறவனையும் கேட்கிறவனையும் காண்பது மிகவும் அரிது.”

 

என்றது தமனகன்.

 

இந்தச் சொற்களைக் கேட்ட பிங்களகன்  தமகனனின் பேச்சை நம்பலாம் என்று எண்ணி, ”நீ என்ன சொல்ல விரும்புகிறாய்?” என்று மரியாதைதோடு கேட்டது.

 

”அரசே! கெட்ட எண்ணங்கொண்டு தான் சஞ்சீவகன் உங்கள்  நம்பிக்கையைப் பெற்றிருக்கிறது. என் எதிரிலேயே பல தடவை ‘உன் எஜமானனிடமிருக்கும் கீர்த்தி பலம், புத்தி பலம், பொருள் பலம் ஆகிய மூன்றின் பலா பலங்களையும் தெரிந்துகொண்டு விட்டேன்; இனிச் சுலபமாக அவனைக் கொன்றுவிட்டு ராஜயத்தை நான் கைப்பற்றப் போகிறேன்’ என்று ரகசியமாகச் சொல்லி வந்திருக்கிறது. அந்தத் திட்டத்தைச் சஞ்சீவகன் இன்றைக்கே நிறைவேற்ற விரும்புகிறது. அதனால்தான் தங்கள் பரம்பரை ஊழியனாகிய நான் தங்களை எச்சரிக்க வந்தேன்” என்றது தமனகன்.

 

இந்தச் சொற்களைக் கேட்பது பிங்களனுக்குப் பேரிடிவிழுகிறதைக் கேட்பதைவிட பயங்கரமாக இருந்தது. மன வருத்தமும் திக்பிரமையும் கொண்டு பிங்களன் ஒன்றும் பேசாமல் இருந்தது. அதன் மனோநிலையை தமனகன் ஊகித்தறிந்து, “ மந்திரிகளுக்கு வந்துசேரும் பெரிய தர்ம சங்கடம் இதுதான்

அரசனோ மந்திரியோ அதிகமாக நிமிரும்போது பெண்ணாகிய லட்சுமி பாரம் தாங்கமாட்டாமல் அவ்விருவரில் ஒருவரை விட்டுச் செல்கிறாள்.

 

உடைந்த வெள்ளியையும், ஆட்டங்கண்ட பல்லையும், துஷ்ட மந்திரியையும், நீக்கிவிடுவதே மேல்; அதனால் துயரம் நீங்கிச் சுகம் வரும்.

 

ஒருவனை மட்டும் தனது மந்திரியாக அரசன் நியமித்துக் கொண்டால் அவன் அறிவீனத்தால் கர்வமடைகிறான்; பிறகு, அரசனுக்கு அடங்கிய நடப்பதையே வெறுக்கிறான்; அதன் விளைவாக, தானே யதேச்சையாக அரசு செலுத்த ஆசைப்படுகிறேன். அந்த ஆசையால் தூண்டப்பட்டு அரசனையே கொல்லச் சதி செய்கிறான்.

 

இப்பொழுதே பார்க்கலாமே, எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல் சஞ்சீவகன் சகல காரியங்களையும் தன்னிஷ்டம் போலத்தான் செய்து வருகிறது!

 

ஒரு மந்திரிக்-கு சுயநல நோக்கங்கள் இல்லாமலிருக்கலாம். என்றாலும் அலட்சியமாக அலுவல்களைப் பார்த்தால் அவனை அரசன் விரும்புவதில்லை. எதிர்காலத்தை நிகழ்காலமல்லவா நிர்ணயிக்கிறது?

 

என்கிற பேச்சு ரொம்பச் சரி. அதுதான் போகட்டும். அரசனின் இயல்பும்  இப்படி இருந்தால் பிறகு என்ன செய்யலாம்?

 

உண்மை அன்போடு ஒருவன் நன்மை செய்தாலும் அவன்மேல் சிலர் வெறுப்புத்தான் கொள்கின்றனர். சாதுரியமாக ஒருவன் தீமையே செய்தாலும் அவனோடு நேசம் பாராட்டுகின்றனர். அரசர்களின் மனத்தை ஆழம் காணவே முடியாது.

 

அரசனின் மனம் ஒருபோதும் ஒரே நிலையில் இருப்பதில்லை. யோகிகள்கூட அதைப் புரிந்துகொள்வது கடினம். அரசசேவை என்பது மிகவும் கஷ்டமான வேலை”

 

என்றது தமனகன்.

 

”அதுதான் என் வேலைக்காரன் ஆயிற்றே, எதிரியாக மாறுவானேன்?” என்று கேட்டது பிங்களகன்.

 

”வேலைக்காரனோ இல்லையோ, அதைக்கொண்டு எதையும் தீர்மானம் செய்துவிட முடியாது.

 

செல்வத்தை விரும்பாதவன் அரசனிடம் வேலை பார்க்க வரமாட்டான். வேறு வக்கு இல்லை என்றால்தான் ஒருவன் பிறருக்கு உழைக்கிறான்,

 

என்கிற பழமொழியை நீங்கள் கேட்டதில்லையா?” என்றது தமனகன்.

 

”நண்பனே, நீ சொல்கிறபடியே இருந்தாலும், எனக்கென்னவோ அதை வெறுப்பதற்கு மனம் இடங்கொடுக்கவில்லை. ஏனென்றால்,

 

உடம்பில் குற்றங் குறைகள் பல இருக்கின்றன. என்றாலும் அதை அவனவன் பிரியமாகப் பேணுவதில்லையா? ஒருவன் மேல் பிரியம் வைத்தது வைத்ததுதான்; பிறகு அவன் என்ன தவறுகள் செய்தாலும் பரவாயில்லை.

 

நாம் மனதார நேசிக்கிறவன் எவ்வளவுதான் வெறுக்கத்தக்க காரியங்கள் செய்தாலும் அல்லது நிஷ்டூரமாகப் பேசினாலும், நமது நெஞ்சம் அவனைத்தான் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கும்.”

 

என்றது பிங்களகன்.

 

”வாழ்க்கையில் செய்கிற பெரிய தவறே அதுதான்.” என்றது தமனகன், ”மற்றெல்லா மிருகங்களையும் விட்டுவிட்டு யார்மீது முழுஅன்பு செலுத்தினீர்களோ அதுவே உங்கள் பதவியைப் பறிக்க விரும்புகிறது.

நற்குலத்தவன் ஆனாலும், அறிவில்லாதவன் ஆனாலும், யார்மீது அரசனின் கிருமை அதிகமாக லயிக்கிறதோ அவன் மனம் ராஜ பதவியில் மோகம் கொள்கிறது.

 

என்பது மக்கள் வாக்கு. ஆகையால், எவ்வளவுதான் நேசித்திருந்தாலும் அது கெட்டவன் ஆகிவிட்டதால் அதனை விட்டுத் தொலைக்க வேண்டும்.

 

இந்தப் பழமொழி சரியானதே!

 

தோழனோ, சகோதரனோ, நண்பனோ, மகனோ, வணங்கத்தக்க பந்துவோ யாராயிருந்தாலும்சரி, அவர்கள் கர்வங்கொண்டு பகைவர்களாக மாறினால், காரியவாதி அவர்களை விலக்கி வைக்கிறான். ‘தங்கத்தோடு என்றால்தானென்ன, காதைப் புண்ணாக்குகிறது என்றால் எடுத்துவிட வேண்டியதுதான்’

 

என்று பெண்கள் பாடுவதைக் கேட்டிருக்கிறீர்கள் அல்லவா? மேலும், இது பலசாலி, இதனால் நமக்குப் பிரயோஜனம் உண்டு என்று தாங்கள் நினைத்தீர்களேயானால் அதுவும் விபரீதந்தான். ஏனெனில்,

 

அரசனுக்குத் தொண்டு புரியாமல் கர்வங்கொண்டு திரியும் யானையினால் என்ன பிரயோஜனம்? பலசாலியோ இல்லையோ, உதவி செய்கிறவன் தான் நல்லவன்.

 

இன்னொரு விஷயமும் சொல்கிறேன். தாங்கள் அதன்மேல் அனுதாபமும் பரிவும் காட்டுவது சரியல்ல, எப்படி என்று கேட்டால்,

 

நல்ல வழியைவிட்டுக் கெட்ட வழியில் செல்கிறவன் காலக் கிரமத்தில் கஷ்டங்கள் பட்டு மனம் நொந்துபோகிறான். நண்பனின் நல்லுபதேசங்களை நாடிக் கேளாதவன் விரைவிலே தன் நிலையிழந்து, விரோதிகளை மகிழ்வித்து, தனது மடமையின் பலனை அனுபவிக்கிறான்.

 

காரியமறியாத மூடன், நல்வழியில் நாட்டமில்லாதவன். புத்தி மழுங்கிப்போனவன் இவர்களெல்லாம் நல்லோர் சொல்லும் வார்த்தையைக் கேட்பதில்லை.

 

முதலில் கசந்து முடிவில் இனிக்கிற வார்த்தையைச் சொல்பவனும் கேட்கிறவனும் எங்கிருக்கிறானோ அங்குதான் லட்சுமி தாண்டவமாடும்.

 

ராஜசேவகன் வஞ்சனை செய்யக்கூடாது; ஏனென்றால் அரசனின் கண்கள் உளவாளியைப்போல் அதைக் கண்டுபிடித்துவிடும். ஆகையால், அரசே! விஷயம் கடூரமாயிருந்தாலும் இதமாயிருந்தாலும் அதைக் காது கொடுத்துக் கேளுங்கள். உண்மை எப்பொழுதும் காதுக்கு இதமாக இருக்காது.

 

தேர்ந்து பழகிய சேவகர்களைக் கைவிட்டு, புதிய முகங்களை வேலைக்கு எடுத்துக்கொள்ளக்கூடாது. அரசாங்கம் நலிவதற்கு அதைப் போல் வேறு நோய் ஒன்றும் கிடையாது.”

 

என்றது தமனகன். இதைக்கேட்ட பிங்களகன், ”நண்பனே, அப்படிச் சொல்லாதே!

 

நல்லவன் என்று முன்பு அரச சபையில் புகழ்ந்துவிட்டு, பிறகு அவனை நாமே இகழ்தலாகாது. கொடுத்த வாக்கை மீறக்கூடாது என்ற பயம் நமக்கு இருக்க வேண்டும்.

 

சரணாகதியடைந்த அதற்கு முன்பு அபய வாக்குக் கொடுத்தேனே அது எப்படி நன்றி கெட்டவனாக ஆகமுடியும்?” என்று கேட்டது.

 

தமனகன் பதில் சொல்லிற்று.

 

துவேஷம் பாராட்டுவதற்குத் துஷ்டன் காரணம் தேடிக் கொண்டிருப்பதில்லை. அதேபோல, அறவழியில் நிற்பதற்கு நல்லவனும் காரணம் தேடிக்கொண்டிருப்பதில்லை. அது அவரவர்களின் சுபாவ குணம். கரும்பு இனிக்கிறதும் எலுமிச்சம் பழம் புளிக்கிறதும் அதனதன் இயற்கைக் குணத்தினால் அல்லவா?

 

எவ்வளவுதான் சிரமப்பட்டு நேசம் பாராட்டினாலும் கெட்டவன் கெட்டவனாகத்தான் இருப்பான். வியர்க்க வியர்க்க முயற்சித்தாலும் நாய்வாலை நிமிர்த்த முடியாது.

 

மேலோருக்குச் செய்யும் நன்மை சிறியதாக இருந்தாலும் மேன்மை அடைகிறது. இமய முடியைத் தொடும் சந்திர கிரணங்கள் கூடுதலான ஒளியுடன் பிரகாசிப்பதுபோல்! கீழோருக்குச் செய்யும் நன்மை நலிந்து நசிகிறது கறுத்த மலைமுகட்டின்மேல் விழும் சந்திரகிரணங்கள் மங்கி மறைவதுபோல்!

 

தீயவனுக்கு நூறு நன்மைகள் செய்தாலும் வீண்; அறிவிலிக்கு நூறு புத்திமதிகள் சொன்னாலும் வீண்; சொற்படி நடக்காதவனுக்கு நூறு யோசனைகள் சொன்னாலும் வீண்; புத்தி கெட்டவனுக்கு நூறு உபதேசம் செய்தாலும் வீண்; தகுதியில்லாதவனுக்குத் தானம் கொடுப்பதும், அறிவற்ற சோம்பேறிக்கு உதவி செய்வதும், நன்றியறிதலில்லாதவனுக்கு நன்மை செய்வதும், பண்பற்றவனிடம் பண்பு பழகுவதும் வீண்.

 

காட்டில் அழுவது; பிணத்துக்குப் புனுகு தடவுவது; தாமரையைத் தரையில் படரச் செய்ய முயற்சிப்பது; நாய் வாலை நிமிர்த்துவது; செவிடன் காதில் சங்கு ஊதுவது; குருடன் முகத்துக்கு அழகு செய்வது;  இவையெல்லாம் மூடனுக்குப் புத்தி சொல்வதற்கு நேர்.

 

கனத்த மடியுள்ள பசுவென்று நினைத்து எருதைக் கறக்க முயற்சிப்பதும், அழகியை விட்டு விட்டு அலியை அணைத்துக் கொள்வதும், பளபளப்பான மணலில் ஆசையோடு வைடூரியத்தைத் தேடுவதும் முட்டாள் தனமாக மூடனுக்குச் சேவை செய்வதற்கு ஒப்பாகும்.

 

எனவே, என் ஆலோசனையைத் தாங்கள் கேட்கத் தவறாதீர்கள். ஏனென்றால்,

 

”புலியும், குரங்கும், பாம்பும் சொன்ன பேச்சை நான் கேளாமற் போனதால், ஒரு நன்றிகெட்ட மனிதன் என்னை வீழ்த்திவிடத்தெரிந்தான்” என்றது தமனகன்.

 

”அது எப்படி?’ என்று பிங்களகன் கேட்கவே தமனகன் சொல்லத் தொடங்கிய

Series Navigationபேசும் படங்கள் :::: டீசண்டா ஒரு ஆக்ரமிப்பு….முன்னணியின் பின்னணிகள் – 7 சமர்செட் மாம்
author

அன்னபூர்னா ஈஸ்வரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *