அழகிய உலகம் – ஜப்பானிய நாடோடிக்கதை

This entry is part 40 of 53 in the series 6 நவம்பர் 2011

ஜப்பானில் கசுமியும் இசிரௌவும் திருமணம் செய்து கொண்டு, மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை ஆரம்பித்தனர். ஆனால் வருடங்கள் செல்லச் செல்ல, குழந்தை இல்லாததால், அவர்கள் வாழ்வில் துயரம் எட்டிப் பார்த்தது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, பல வேண்டுதலுக்குப் பிறகு, ஒரு அழகிய மகனை ஈன்றெடுத்தாள் கசுமி. மகிழ்ச்சிக் கடலில் மூழ்கி, “அதிர்ஷ்டச் சிறுவன்” என்ற பொருள் படும்படி, குழந்தைக்கு “கிசிரௌ” என்று பெயரிட்டனர்.

கசுமியும் இசிரௌவும் மகனைப் பெரிதும் நேசித்தனர். அவனுக்கு எதையும் இல்லை என்று சொல்லாமல், அழுதாலும், கோபித்தாலும், பிடிவாதம் பிடித்தாலும், வருந்தாமல், பரிசுகளை வாங்கிக் குவித்து, சமாதானப் படுத்தினர்.

கிசிரௌ அழகிய பலம் வாய்ந்த இளைஞனாக வளர்ந்த போதும், எதற்கும் உதவாதத் தான்தோன்றியாக மாறிவிட்டிருந்தான்.

ஊரார் அவனை “எதற்கும் உதவாத உதவாக்கரை, சோம்பேறி” என்று கூறும் அளவிற்கு அவனது செய்கைகள் இருந்தன.

அவர்கள் சொல்வதையெல்லாம் பெற்றோர் பிள்ளைப் பாசத்தால் கண்டு கொள்ளவில்லை. தங்கள் மகனுக்கு எதையும் மறுக்க முடியாமல், வேண்டியதையெல்லாம் தந்த வண்ணமே இருந்தனர். வீட்டை விட்டுச் சென்று சொந்தமாக வாழ்க்கையை நடத்தும் வயது வந்தும் கூட, சுதந்திரமாக வாழ அவன் ஒப்பவில்லை.

“நான் ஏன் வேலை செய்து சம்பாதிக்க வேண்டும்? ஏன் சமையல் செய்து சாப்பிட்டு, வீட்டைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்? நீங்களே என்னை எப்போதும் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று தன் பெற்றோரிடம் கூறினான்.

அவனுக்கென்று எந்த நண்பர்களும் கிடையாது.

அதனால் வாழ்க்கையில் அவர்களுக்கு மகன் இருக்கிறான் என்பதொன்றைத் தவிர, வேறு எந்தவித மகிழ்ச்சியும் இருக்கவில்லை. இதை யோசித்த கிசிரௌ வருத்தப்பட்டார்.

அதற்கு கசுமி, “அவன் எப்படி இருக்கிறானோ, அப்படியே இருந்து விட்டுப் போகட்டும். நமக்குக் கிடைத்தப் பரிசுப் பற்றி எந்தவித புகாரும் செய்யாதீர்கள்” என்றாள்.
ஒரு நாள், கிசிரௌ காட்டில் சுற்றச் சென்றான். மிகவும் மகிழ்ச்சியுடன் நடந்து சென்று கொண்டிருந்த வேளையில், அவனை இரண்டு கண்கள் கூர்ந்து பார்ப்பதை உணர்ந்தான்.

“என்ன அது?” என்று எண்ணிக்கொண்டே கவனித்த போது, அது ஒரு புலியின் கண்கள் என்பதைக் கண்டான். கோபத்துடன் அவனைப் பார்ப்பதைக் கண்டு பயந்தே போனான்.

“உதவி.. உதவி.. யாராவது வந்து காப்பாற்றுங்கள்” என்று அலறினான்.

அவன் ஊருக்கு அருகே இருந்த போதும், ஊர்வாசிகளுக்கு அவன் கத்துவது கேட்ட போதும், “அவனுக்கு வேறு வேலையே கிடையாது. தண்ணீர் வேண்டுமென்றாலும் இப்படி கத்துவான்” என்று எண்ணி, அவனை கண்டு கொள்ளவில்லை.

பயத்தில் கிசிரௌ ஓடத் தொடங்கினான். புலி விரட்டியது. ஓடிய அவன் திடீரென நிற்க வேண்டி வந்தது. அவன் மலை முகட்டிற்கு வந்து விட்டிருந்தான். கீழே பெரிய பள்ளம்.

“உதவி.. உதவி.. யாராவது வேகமாக வந்து காப்பாற்றுங்கள்” என்று மறுபடியும் கத்தினான். உதவிட யாரும் வருவதாகத் தெரியவில்லை.

என்ன செய்வது என்று யோசித்த வேளையில், புலி அவன் மேல் பாய எத்தனித்தைக் கண்ட போது, முகட்டை ஒட்டி ஒரு கொடி படர்ந்திருந்ததைக் கண்டான். அதைப் பிடித்துக் கொண்டு தொங்க ஆரம்பித்தான். புலி அவனை எட்டிப் பிடிக்க முடியாது, பார்த்த வண்ணம் நின்றது.

தன் பலம் அனைத்தையும் திரட்டி, கொடியில் தொங்கிக் கொண்டே, மறுபடியும் உதவிக்கு அழைத்தான்.

அப்போது முகட்டிற்குக் கீழே பார்த்தான்.

அவனது கூச்சலுக்கு, உதவிக்கு யாரும் வரவில்லையென்றாலும், வேறொரு விருந்தாளி வந்தாh.; கீழே மற்றொரு புலி இருந்தது. அவன் தொங்கிய வண்ணம் இருப்பதைக் கண்டு, அவனையே பார்த்த வண்ணம் இருந்தது.

கிசிரௌ இரு புலிகளுக்கு இடையே மாட்டிக் கொண்டான். வியர்த்தது. எப்படி தப்பிக்கலாம் என்று யோசித்தான். யாராவது வந்து காப்பாற்றினால் தான் உண்டு. ஆனால் யார் வருவார்கள்? எல்லோரும் எங்கே போனார்கள்? தேவைப்படும் போதெல்லாம் உடன் இருக்கும் பெற்றோர் எங்கே? நண்பர்கள்.. யார் இருக்கிறார்கள்? இனி சாக வேண்டியது தான். எதற்கு இப்படி நடக்கிறது?” என்று தனக்குத்தானே பேசிக் கொண்டான்.

அப்போதுதான் தன்னுடைய தவறான நடவடிக்கைகள் பற்றி புரிந்து கொண்டான். இத்தனை ஆண்டுகள் வீணடித்துவிட்டது தெரிந்தது.
“நான் பலசாலியாக இருப்பதால், கொடியிலேயே தொங்கிக் கொண்டு இருந்து விடலாம். விரைவில் புலிக்கு வேறு இரை கிட்டினால், நகர்ந்து விடும். அது வரை தொங்க வேண்டியது தான்!” என்றும் கூறிக் கொண்டான்.

அப்படியே பேசிய வண்ணம் இருந்த போது, ஒரு எலி அந்தக் கொடியை கடித்துக் கொண்டிருப்பதைக் கண்டான். “எலி கொடியை கடித்துத் தின்றால், என் கதி அதோ கதி தான்” என்று கூறிக் கொண்டே கீழே பார்த்தான். கீழே புலி இன்னும் பார்த்துக் கொண்டே நின்றிருந்தது.

“தயவுசெய்து யாராவது வந்து எனக்கு உதவி செய்யுங்கள்” என்று சத்தமாகக் கத்தினான்.

பொழுது சாய ஆரம்பித்திருந்தது. தன் முடிவு நெருங்கி விட்டது என்று எண்ணிக் கொண்டே அருகே சுற்றும் முற்றும் பார்த்தான். அங்கு கொத்துக் கொத்தாக பழங்கள் தொங்கிக் கொண்டிருத்தன. காலை முதல் எதுவுமே உண்ணாமல் தொங்கிக் கொண்டே இருந்ததால், பழங்களைக் கண்டதும் பசி வயிற்றைக் கிள்ளியது. ஒரு கையால் பழம் ஒன்றைப் பறித்து, வாயில் போட்டுக் கொண்டான்.

“ஆகா.. என்ன ருசி..” தன்னை மறந்து, தன் நிலையை மறந்து, பழத்தின் சுவையை ரசித்தான். இதுவரை இத்தனை சுவையான பழத்தை அவன் உண்டதில்லை. தான் வாழ்ந்த உலகம் எவ்வளவு அழகானது, அதில் இந்தப் பழம் போன்ற சிறு பரிசு எவ்வளவு சிறந்தது என்பதை உணர்ந்தான். மேலும் பழங்களை பறித்து உண்டான். தான் உணர்ந்ததைப் பெற்றோரிடம் சொல்லவாவது உயிர் வாழ வேண்டும் என்று விரும்பினான். நண்பர்களைச் சேர்த்துக் கொண்டு, உலகினை ரசிக்க வேண்டும் என்று எண்ணினான்.

அத்தருணத்தில், அருகே இருந்த மற்றொரு கொடியைக் கண்டான். கொடிக்குக் கொடி தாவி அந்த இடத்திலிருந்து தப்பிக்கலாம் என்பதை உணர்ந்தான். அப்படியே தாவித் தாவி, இரு புலிகளின் கண்களுக்கு எட்டாமல் முகட்டைக் கடந்தான்.

தான் உயிர் தப்பியதை உணர்ந்த போது, கிசிரௌ இனி தன்னுடைய இனிமையான சிறு வாழ்க்கையை நல்ல முறையில் மரியாதையுடன் வாழ முடிவு செய்தான்.

Series Navigationசனநாயகம்:சற்றே நீடிக்கட்டும் இந்த இடைவேளை
author

சித்ரா சிவகுமார், ஹாங்காங்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *