அப்பா

This entry is part 5 of 38 in the series 20 நவம்பர் 2011

திரும்பிப் பார்க்கிறேன். என் ஐந்து வயது முதல் இதோ இதைச் சொல்லும் இந்த நாள்வரை. எல்லாவற்றையும் திரும்பிப் பார்க்கிறேன்.
ஐந்து வயது. கலரான பாட்டிலில் எது இருந்தாலும் அதைக் குடிக்கலாம் என்று நினைத்திருந்தேன். அடுக்களையின் மூலையில் இருந்த அந்த பச்சை நிற பாட்டிலை எடுத்து இரண்டு முடக்கு குடித்துவிட்டேன். ‘என்னாங்க’ என்று அலறிக்கொண்டு அம்மா ஓடிவந்தார். மேல் சட்டை இல்லாமல் அப்பாவும் ஓடி வந்தார். நிலைமையைப் புரிந்து கொண்டேன். நான் குடித்தது மண்ணெண்ணெய். அப்பா ஒரு துண்டைப் போர்த்திக் கொண்டு என்னைத் தோளில் சரித்துக் கொண்டு அந்தக் கப்பி ரோட்டில் எரியும் வீட்டிலிருந்து தப்பி ஓடுவதுபோல் ஓடுகிறார். வாந்தி எடுத்தேன். அப்பாவின் துண்டில் பாம்பாக நெளிந்து வேட்டி மடிப்பில் சுருண்டது வாந்தி.
சில மாதங்கள் கழித்து அந்த நிகழ்ச்சியைப் பற்றி அப்பா யாரிடமோ பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டேன். அப்பா சொன்னார். ‘சுருதியின் (அதுதான் என் பெயர்.) மூக்கில் ரப்பர் குழாயை டாக்டர் செருகிய போது என் கண்ணை கம்பியால் துளைத்தது போல் இருந்தது. கப்பி ரோடு என் பாதத்தைத் தாறுமாறாகக் கிழித்துவிட்டது. அது குணமாகப் பல மாதங்கள் ஆகிவிட்டன.’
ஒரு கிருத்துவ ஆங்கிலத் தொடக்கப் பள்ளியில் அப்பா என்னைச் சேர்த்துவிட்டார். எல்லாப் பிள்ளைகளும் புத்தகங்களோடு ஒரு பொட்டலமும் கொண்டு வருவார்கள். காலையில் செய்த இட்லி அல்லது தோசை அதில் இருக்கும். 12.45க்கு மணி அடிக்கும். 12.50 க்கெல்லாம் சுடச்சுட மதியச் சாப்பாடு எடுத்துக் கொண்டு அம்மாவை அழைத்துக் கொண்டு அப்பா ஸ்கூட்டரில் வந்துவிடுவார். ஆசிரியை அறைக்குப் பக்கத்தில் ஒரு குட்டையான பூவரச மரம்தான் நான் சாப்பிடும் இடம். நான்காக மடித்த பாயை விரித்து அதில் அம்மா அமர்ந்திருப்பார். நான் வகுப்பிலிருந்து வரும்போதே அப்பா வேகமாக நடந்து வருவார். உச்சந்தலையைத் தடவி நெற்றியில் முத்தமிட்டு தாவாயை கையால் வளைத்தபடி அழைத்து வருவார். இப்போது கூட அந்த நினைவுகள் வரும்போது நெற்றியைத் தடவிக் கொள்வேன். இறைச்சி சூப்பில் பிசைந்த சோறு ஒரு டப்பா, தயிரில்
2
பிசைந்த சோறு ஒரு டப்பா, வறுத்த இறைச்சித் துண்டுகள், இன்னொரு டப்பாவில் சில கருப்புத் திராட்சைப் பழங்கள், வெதுவெதுப்பான தண்ணீர் ஒரு பாட்டிலில். அம்மா சோறூட்டுவதே ஓர் அழகு. விரல் நுனியில் மட்டும்தான் அந்தச் சோறு படும். இரண்டு வாய் கொடுத்து நான் விரும்பும்போது இறைச்சித் துண்டு தருவார். தண்ணீர் குடித்தால் தேவலாம் போல் இருக்கும். அம்மா பாட்டிலைத் திறந்து கொண்டிருப்பார். அப்பா ஒரு கவிஞரும் கூட. பல விஷயங்களையும் பற்றிப் பேசுவார். ‘ ‘அ’ என்றால்இன்றுவரை அம்மா என்றுதான் எழுதுகிறார்கள். ‘அன்பு’ என்று எழுதினால் எத்தனை விஷயங்களைச் சொல்லலாம். ‘ஆ’ என்றால் ஆடு என்று எழுதுகிறார்கள். ‘ஆறு’ என்று எழுதினால் மனித வாழ்க்கையையே அதில் சொல்லி விடலாம். பிள்ளைகளுக்குப் புரியாது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாதம்மா. புரியும்படிச் சொல்ல முடியும்’ என்பார். சாப்பிட்டு விட்டு வகுப்புக்குப் போவேன். ஆசிரியை கேட்பார், ‘இன்று என்ன கறிக் குழம்பா?’ என்று. டப்பாவைத் திறக்கும்போதே வாசம் நான்கு திசையும் எட்டிவிடும். ஒரு நாள்கூட நான் பொட்டலச் சாப்பாடு சாப்பிட்டதில்லை. நான் சாப்பிட உட்காரும் அந்த மரத்தை ‘சுருதி மரம்’ என்றுதான் எல்லாரும் சொல்வார்கள். சமீபத்தில் பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்தப் பள்ளிக்குச் சென்றேன். தலைமை ஆசிரியை அப்படியே இருந்தார். மற்ற ஆசிரியர்கள் மாறிவிட்டார்கள். தலைமை ஆசிரியை என்னை அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். ‘சுருதி மரம் என்று சொல்கிறோமே அந்தச் சுருதி இந்தப் பெண்தான்’ என்று.
இப்போது உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து இரண்டு ஆண்டு ஓடிவிட்டது. ஒரு நாள் அடி வயிற்றைச் சுருட்டி வலித்தது. வளைந்து படுத்துவிட்டேன் டெஸ்கில். ஒன்னுக்குப் போய்விட்டதுபோல் உணர்ந்தேன். வகுப்பாசிரியை அருகில் வந்து ஒரு காக்கைப் பார்வை பார்த்தார். விளங்கிக் கொண்டார். அப்பாவுக்கு தகவல் பறந்தது. ஒரு செட் ஆடையுடன் அம்மாவை அழைத்துக் கொண்டு வந்துவிட்டார் அப்பா. எல்லா மாணவர்களையும் வெளியே போகச் சொல்லிவிட்டார் ஆசிரியை. அம்மா மட்டும்தான் என்னுடன். ஆடை மாற்றிய பின் அப்பா வந்தார். உச்சந்தலையைத் தடவி நெற்றியில் முத்தமிட்டார். என் முகத்தை அப்பா வயிற்றில் புதைத்துக் கொண்டு அழுதேன்.

3
ஒரு வாரம் கழித்து அப்பா உறவினர்களுக்கெல்லாம் சொல்லி ஒரு தேவை செய்தார். அம்மா வழி அப்பா வழி என்று ஏராளமான உறவினர்கள். எல்லாரும் வாயில் சீனி தந்து வாழ்த்தினார்கள். சீனி திகட்டியது. கடவாயில் குரங்குபோல் அதக்கிக் கொண்டேன். கக்குவதற்குத் தருணம் பார்த்திருந்தேன். மேலும் மேலும் சீனி தந்து கொண்டே இருந்தார்கள். அப்பாவுடைய அம்மா சாந்தாப் பாட்டி அருகே வந்தார். தன் முந்தானையில் மொத்தச் சீனியையும் துப்பச் சொல்லி விடுதலை தந்தார். அடுத்த சில மாதங்களிலேயே அவர் இறந்து போனது ஆறாத காயம் எனக்கு இன்றுவரை. எல்லாரையும் சாப்பிடக் கூப்பிட்டார்கள். அம்மாவோட அம்மா கிருஷ்ணவேணிப் பாட்டி மட்டும் என்னுடன் இருந்தார். எனக்கு சாப்பாடு வரவழைத்து ஊட்டிவிட்டார். அவரும் சில மாதங்களிலேயே இறந்துவிட்டார். இன்று நினைத்தால் கூட இந்த இரண்டு மரணங்களும் புண்ணாய் வலிக்கிறது.
அப்பா ஒரு நண்பரோடு பேசிக் கொண்டிருந்தார். ‘இந்த சம்பளத்தை நம்பி இருந்தால் சாப்பிட மட்டும்தான் முடியும். சுருதிக்கு ஒரு நல்ல எதிர்காலம் அமைத்துக் கொடுக்க முடியாது. சிங்கப்பூருக்கு ஏற்பாடு செய்கிறேன். அடுத்த மாதம் அநேகமாக நாங்கள் எல்லாரும் சென்னை சென்றுவிடுவோம்.’ என்றார்.
சென்னைக்கு வந்துவிட்டோம். மொத்தச் சம்பளத்தைதயும் வாடகை தின்றது. சிங்கை வாய்ப்பு கிடைத்துவிடும் என்ற அசுர நம்பிக்கை மட்டும் அப்பாவிடம் இருந்தது. சென்னையிலேயே பத்தாம் வகுப்பைத் தொடர்ந்தேன்.
அதே தெருவில் எங்களின் தூரத்து உறவினர் பொறியாளர் சடகோபன் இருந்தார். அவர் மகன் சக்தியை அடிக்கடி ஜன்னல் வழி பார்ப்பேன். கைகளை உடம்போடு ஒட்டாமல் நடப்பான். எவ்வளவு அழகான பெண் தென்பட்டாலும் பத்து டிகிரி கூட கண்களைத் திருப்பமாட்டான். யாராவது ஏதாவது கேட்டால் நெற்றியைப் பார்த்துப் பேசுவான். அவனை நான் விரும்பினேன். ஓ இதுதான் காதலா?
அப்பாவுக்கு சிங்கை வேலை கிடைத்துவிட்டது. எனக்கும் அப்பாவுக்கும் இடையே சக்தி தளதளவென்று வளர்ந்து அப்பா உயரத்துக்கு நின்றான். முதன்முறையாக அப்பாவிடம் ஒரு சேதியை மறைக்க முயற்சிக்கிறேன்.
4
சிங்கப்பூர் செல்லவிருக்கும் சேதியைச் சொல்ல அப்பாவும் அம்மாவும் சடகோபன் வீட்டுக்குச் சென்றார்கள். வீட்டில் நான் மட்டும்தான். ஒரு போன் வந்தது. எடுத்தேன். ‘நான் சக்தி பேசுகிறேன். உன் அம்மாவும் அப்பாவும் இங்குதான் இருக்கிறார்கள். அதனால்தான் பேசுகிறேன். ஐ லவ் யூ. நீ உடனே பதில் சொல்ல வேண்டாம். பத்து நிமிடம் கழித்து நானே அழைக்கிறேன்.’ போனை வைத்துவிட்டான். நான் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. ஒரு காந்த மண்டலம் உச்சந்தலையில் இறங்கி பாதம்வரைப் பரவியது. சொல்லிவிட வேண்டியதுதான். சிங்கப்பூர் சென்றுவிட்டால் இந்தச் சேதி அப்படியே புதைந்துவிடும். இது புதையக்கூடாது. இடியென இரைந்தது அடுத்த போன். சக்திதான் பேசுகிறான். ‘என்ன முடிவு செய்துவிட்டாயா?’ நான் சொன்னேன். ‘யெஸ். ஐ டூ.’
எல்லாரும் சிங்கை செல்ல ஏற்பாடுகள் நடக்கின்றன. இரவுதான் எங்களுக்கு விமானம். மதியம் சடகோபன் வீட்டில் விருந்து. அம்மாவிடம் சக்தி சொன்னான். (‘ன்’என்றே அவனைக் குறிப்பிடுகிறேன். ‘ர்’என்று சொல்ல இன்னும் பக்குவம் வரவில்லை) ‘உலகத்திலேயே உயர்வான வாழ்க்கைத் தரம் சிங்கப்பூரில்தான் ஆன்ட்டி . நீங்கள் முதலில் செல்லுங்கள். என் பிகாம் முடிய இன்னும் சில மாதங்கள்தான். நானும் வந்துவிடுகிறேன்’ நான் சிங்கப்பூருக்குப் போவதை அவன் விரும்புகிறான். அவனும் வர ஆசைப்படுகிறான். அதுபோதும் இப்போதைக்கு.
சிங்கப்பூரில் ஓ நிலை படிக்கிறேன். கழிவறைதான் நான் கண்ணீர் சிந்தும் அறை. தனிமை என்னைக் கொன்றது. எண்ணங்கள் மின்காந்த அலைகளாய் அவனை நோக்கியே பயணிக்கிறது. ஓ நிலைத் தேர்வு முடிந்ததும் ஊருக்குச் சென்று வருவோம் என்றார் அப்பா. ஒவ்வொரு நாளையும் வினாடி வினாடியாக எண்ணினேன்.
தேர்வை திருப்திகரமாகச் செய்தேன். அப்பாவின் தன்மானம் என் தேர்வு முடிவில் இருப்பதாக உணர்ந்தேன். இதோ சென்னைக்குப் புறப்பட்டுவிட்டோம். சக்திதான் ஏர்போர்ட்டுக்கு வந்தார். (‘ன்’ போய் ‘ர்’ இயற்கையாகவே வந்துவிட்டது.) சக்தி காரோட்டியது கிருஷ்ணர் ரதம் ஓட்டுவதுபோல் இருந்தது. அத்தனை அழகு.

5
எனக்கு மீண்டும் சிங்கை செல்லப் பிடிக்கவே இல்லை. அப்பாவிடம் சொன்னேன். ‘ப்ளஸ் டூ இங்கேயே படிக்கிறேனப்பா. எனக்கு சிங்கை பிடிக்கவில்லை. ஒரு பெண்கள் விடுதியில் எனக்கு ஏற்பாடு செய்யுங்களப்பா’ அப்பா சொன்னார். ‘நன்றாக யோசித்துக் கொள்ளம்மா. நாம் திரும்ப இன்னும் ஒரு மாதம் இருக்கிறது. ஒரு வலியோடு நீ சிங்கைக்கு வரக்கூடாது. முடிவை உன்னிடமே விட்டுவிடுகிறேன்.’
அம்மாவும் அப்பாவும் சடகோபன் வீட்டில் இருந்த போது போன் வந்தது. ஆம் சக்திதான். ‘சுருதி நான் உன்னைப் பார்க்க வேண்டும். உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும். யோசித்துச் சொல். பத்து நிமிடம் கழித்து மீண்டும் அழைக்கிறேன்.’ சக்தி எனக்குக் கொடுத்த பத்து நிமிடத்தில் அவர் என் முன் விண்ணுக்கும் மண்ணுக்குமாக நின்றார். என்ன சொல்வது என்று முடிவு செய்துவிட்டேன். சரியாகப் பத்து நிமிடத்தில் அழைத்தார். நான் சொன்னேன். ‘நாளைக் காலை 11 மணிக்கு என் பத்தாம் வகுப்பு ஆசிரியை தங்கம் டீச்சரைப் பார்க்கப் போகிறேன். நீங்களும் வந்து விடுங்கள். தங்கம் டீச்சருக்கு எல்லாம் தெரியும். அவரும் காதல் திருமணம் செய்தவர்தான். என்னிடம் பேச நினைப்பதை டீச்சரின் முன்னிலையில் பேசுங்கள்.’
தங்கம் டீச்சரோடு நான். சரியாக 11 மணி. சக்தி உள்ளே வந்தார்.
‘நீங்கள் பேச விரும்புவதை என்னிடம் சொல்லலாமா?’ டீச்சர் கேட்டார்.
‘தாராளமாக’
‘அப்படியானால் சொல்லுங்கள்’
‘சுருதி வாழ்க்கையை கண்ணுக் கெட்டிய தூரம் வரைதான் பார்க்கிறார். நான் அப்பாலும் பார்க்கிறேன். சுருதி சிங்கப்பூரில்தான் படிக்க வேண்டும். நானும் அங்கே செல்ல வேண்டும். எங்கள் திருமணம் சிங்கப்பூரில்தான் நடக்கவேண்டும். தயவுசெய்து சுருதியை அவங்க அப்பாவோடு சிங்கைக்குப் போகச் சொல்லுங்கள்.’ தங்கம் டீச்சர் சொன்னார். ‘அறிவுப் பூர்வமாகப் பேசுகிறாரம்மா இவர். காதல் வாழையல்ல. எப்போதும் நீரைக் குடித்துக் கொண்டே இருப்பதற்கு. அது கருவமரம். மழையே இல்லாவிட்டாலும் இலைகளை உதிர்த்துவிட்டு முள்ளால் தவம் செய்ய வேண்டும் சுருதி. உன்னுடைய முடிவில் எந்த நியாயமும் இல்லை. ஒரு மாமரம் எல்லாக் கிளையிலும் பூக்காது. கனியைத் தாங்கும் வலுவுள்ள கிளையில்தான் பூக்கும்.
6
இன்னும் காலம் இருக்கிறது சுருதி. நீ அப்பாவோடு சிங்கை செல்வதுதான் நல்லது’
இரண்டாண்டு முடிந்தது. நான் தொடக்கக் கல்லூரி முடித்துவிட்டேன். அப்பா போனில் பேசிக் கொண்டிருந்தார். ‘எங்களுக்கு டிசம்பர் மாதம் 20ம் தேதி மண்டபம் வேண்டும். இன்னும் ஒரு மணி நேரத்தில் நேரில் முன் பணம் தருகிறேன். தொடர்ந்து ஒரு கேட்டரிங் கம்பெனியிடம் பேசுகிறார். எங்களுக்கு தம் பிரியாணிதான் வேண்டும். அதோடு என்னென்ன சேர வேண்டுமோ அத்தனையும் வேண்டும். கடைசியில் பாதாம் கீர் வேண்டும். மீண்டும் அழைக்கிறேன். உங்களின் கொடேசனை வைத்துத்தான் நான் முடிவு செய்ய வேண்டும்.
பல நாள் தொடர்ந்து போட்ட ரங்கோலி அழிவதுபோல் உணர்ந்தேன். யாருடைய திருமணத்திற்கு அப்பா ஏற்பாடு செய்கிறார்? என் திருமணம் என்றால் என்னிடம் ஏன் மறைக்கிறார்? வேட்டுச் சத்தம் கேட்டால் காகம் யோசித்தா பறக்கும். யோசிக்காமலேயே கேட்டேன்.
‘யாருக்கப்பா திருமணம்?’
உனக்குத் தானம்மா. டிசம்பர் 20ல் உனக்குத் திருமணம்.’
என்னிடம் எதையுமே கேட்காமல் எப்படியப்பா முடிவு செய்தீர்கள்?’
‘உன்னிடம் ஏனம்மா கேட்க வேண்டும். மாப்பிள்ளை சக்திதானே. அவர்கள் எல்லாரும் டிசம்பர் 15ல் இங்கு வருகிறார்களம்மா.’
20 ஆண்டுகள் பிரிந்து சந்திப்பதுபோல் அப்பாவைக் கட்டிக் கொண்டு கதறினேன். அம்மா வந்து என்னை அப்பாவிடமிருந்து பிரித்தார். அம்மாவைக் கட்டிக் கொண்டு மிச்சக் கண்ணீரையும் கொட்டினேன். அப்பா சொன்னார்.
‘தங்கம் டீச்சர் என்னிடம் அப்போதே சொல்லிவிட்டாரம்மா. இந்தக் காதலை நீங்கள் நிறைவேற்றாவிட்டால் அது உங்கள் மகளுக்குச் செய்கின்ற மாபெரும் அநீதி என்றார். உனக்காம்மா நான் அநீதி செய்வேன். விரல் நுனியில் கண்ணாடிக் குவளையை கீழே விழாமல் எவ்வளவு காலம் பாதுகாத்திருக்கிறாயம்மா. உனக்கு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுப்பதற்கு முன் நான் செத்துவிடக்கூடாது என்று மட்டும்தானம்மா நான் கடவுளிடம் கேட்கிறேன்.’
7
எங்களுக்குத் திருமணம் முடிந்தது. எனக்கும் நல்ல வேலை. சக்திக்கும் நல்ல வேலை. வீடு வாங்கிவிட்டோம். என் மகன் ப்ரதீப்புக்கு இன்று 3 வயது. கருவிலேயே என் அப்பாவைப் பற்றி கடவுள் அவனிடம் சொல்லிவிட்டார் என்று நினைக்கிறேன். அப்பாவை அவனும் அப்பா என்றுதான் அழைக்கிறான்.அப்பா வருகிறாரென்றால் கதவுக்குப் பக்கத்தில் போய் நின்று கொள்கிறான். அப்பாவைக் கட்டிக் கொண்டு விடவே மாட்டான். அன்றும் அப்பா வந்தார். சீனப்புத்தாண்டு முடிந்திருந்த சமயம். சிங்கநடனம் எங்க வீட்டுக்குக் கீழே நடந்தது. ‘ப்ரதீப் போய் ட்ரஸ் மாற்றிக் கொள். சிங்க நடனம் பார்த்துவிட்டு வீட்டுக்குப் போவோம்’ என்றார் அப்பா.நான் அப்போது கழிவறையில் இருந்தேன். சில விநாடியில் அவன் போட்ட சத்தத்தில் காகங்கள் பறந்தன.சிங்க நடனச் சத்தத்தையும் மீறி பலர் மேலே பார்த்தார்கள். ப்ரதீப் தானாக அந்த ஜீன்ஸை போட்டுக் கொண்டு ஜிப்பை இழுத்திருக்கிறான். ஜிப்பில் ஆண்குறியின் நுனி சிக்கிவிட்டது. அடுப்பில் குக்கர் கத்துகிறது. அதையும் விட சத்தமாக நான் கத்துகிறேன். ஒரு லேசான போர்வையைப் போர்த்திவிட்டு இரண்டு கைகளிலும் ஏந்தியபடி அடுத்த ரோட்டில் இருக்கும் 24 மணிநேர கிளினிக்குக்கு அப்பா ஓடுகிறார். பின்னாலேயே நானும் ஓடுகிறேன். படுக்கையில் ப்ரதீப்பைப் படரவிட்டு மெதுவாக போர்வையே நீக்கினார் அப்பா. அந்த ஜிப் ஏற்கனவே தான் பிடித்து வைத்திருந்த பொருளுக்கு விடுதலை கொடுத்திருந்தது. லேசான ரத்தக்கசிவு மட்டும் இருந்தது. மீண்டும் ப்ரதீப்பை அப்படியே வீட்டுக்குத் தூக்கிவந்து படுக்கையில் தூங்கப்போட்டார் அப்பா. அழுத களைப்பு. ஆழ்ந்து தூங்குகிறான் ப்ரதீப். அப்பா சொன்னார். ‘அம்மாவுக்கு பல்வலியாம்.நான் அழைத்துக்கொண்டு போகவேண்டும். டாக்டர் போய்விடுவாரம்மா.’ என்று சொல்லிக் கொண்டே ஓட்டமும் நடையுமாக அப்பா போகிறார்.
ஜன்னல் வழியாக அப்பாவைப் பார்க்கிறேன். கண்ணீருக்குக் காயங்களும் புரியும். பந்தபாசத்தின் கனமும் புரியும். கனம் புரிந்த கண்ணீர் வெள்ளப் புனலாகக் கொட்டுகிறது. ஐந்து வயதில் அன்று என்னை தூக்கிக் கொண்டு ஓடினீர்கள். இன்று என் மகனைத் தூக்கிக் கொண்டு ஓடுகிறீர்கள். இருபத்தைந்து ஆண்டுகளைத் திரும்பிப் பார்த்து விட்டேனப்பா. எங்கே திரும்பினாலும் நீங்கள் மட்டும் தானப்பா இருக்கிறீர்கள். அப்பா! அப்பா!! அப்பா!!!
யூசுப் ராவுத்தர் ரஜித்

Series Navigationஅர்ஜண்ட் வெயிட் லாஸ்.. ஒரு யாத்ரா டிக்கட் ப்ளீஸ்..பழமொழிகள் கூறும் உதவி எனும் வாழ்க்கை நெறி
author

யூசுப் ராவுத்தர் ரஜித்

Similar Posts

3 Comments

  1. Avatar
    Palani says:

    Very nice story. I have read my life in your words. My mother lived for me and did the same as in your story. She dedicated all her life for me. Unfortunately, she is nomore now.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *