கவிதைகள்: பயணக்குறிப்புகள்

1
0 minutes, 0 seconds Read
This entry is part 4 of 37 in the series 27 நவம்பர் 2011

16

செல்வழியெங்கும் பாய்ந்தோடிக்கொண்டிருக்கிறது
சிந்தா நதி யொன்று!
படகில்லை,
நீந்தத் தெரியாது,
சிறகில்லை,
பறக்கமுடியாது….
ஆனாலுமென்ன?
ஏழு கடல் ஏழு மலை தாண்டி
அந்தப் பச்சைக்கிளியைக் கண்டடைவதுதானே
வழிச்செலவின் வரவு
என்று
சுழித்தோடியவாறு அறிவுறுத்துகிறது ஆறு!

17
தெம்மாங்குப் பாட்டு தெரியாது.
கர்நாடக இசை படித்ததில்லை.
இந்துஸ்தானி, ஜாஸ், ராக், கஸல்
என்று எத்தனையெத்தனை உலகில்!
எதிலுமே பயிற்சியில்லை.
ஆனபோதும், குரலெடுத்துப் பாடவேண்டுமாய் எழும்
இந்தத் திருத்தினவை என்செய்ய….?
மெய்யோ பொய்யோ
உளதாம் குரல்வளம்;
உறுதியாய் கிளம்பும்தான் சுருதிபேதம்.
உச்சஸ்தாயியை எட்டமுடியாது;
பிசிறு தட்டும்.
நிச்சயமாய்த் தெரிந்தாலும்
இச்சமயம் வனாந்திரத்தில் எதிரொலிக்கும் குரலாய்
விரியும் இந்தப் பெருங்கனவை என்செய்ய?
பாடிவிடவேண்டியதுதான்!

18
அதெப்படியோ தெரியவில்லை
அயர்வையெல்லாம் மீறி
அவ்வப்போது என் நடையொரு துள்ளலாக
மாறிவிடுகிறது!
தேர்க்கால்களாக
புரவிப்பாய்ச்சலாக
அவ்வளவு ஏன் –
சற்றுமுன்னர் தான் சிந்நேரம்
மின்னலாகியிருந்தேன்!

19

”உனக்கு நீயே என்ன பிதற்றிக்கொண்டு போகிறாய்?”
_தாழப்பறந்துவந்து அன்போடு என் தலைதட்டிக் கேட்டது கொக்கு.
”மழலைப்பேச்சு மற்றவருக்குப் புரியாது – மக்கு! மக்கு!”
என்று செல்லமாய் அதன் நீள்மூக்கை நீவிவிட்டபடி கூறினேன்.
“இன்னுமா பாதைக்குப் பக்குவப்படவில்லை?” என்று கடிந்துகொண்டது
கரையோர முதலை.
”காத்திரு” என்று வேண்டிக்கொண்டேன்.
’நாளை மற்றுமொரு நாளாகாத’ நாளில் தருவேன்
நல்லதோர் பதிலை.

20

அருகேயொரு வண்ணத்துப்பூச்சி பறந்துகொண்டிருக்கிறது-
அற்புதச் சிறகுகளோடு!
ஆனால், எனக்கு ஆறறிவு இருக்கிறது!.
அந்த அசோகமரம்தான் எத்தனை உயர்ந்தோங்கி
வளர்ந்திருக்கிறது!
ஆனால், எனக்கு ஆறறிவு இருக்கிறது.
வழியில் காணக்கிடைத்த ஆமையின் ஓடு
அத்தனை உறுதியானது!
ஆனால், எனக்கு ஆறறிவு இருக்கிறது.
கருங்கல்லின் சொரசொரப்பும் கூழாங்கல்லின் வழுவழுப்பும்
தொடுவுணர்வின் நல்வினைப்பயனாகிறது!
ஆனால், எனக்கு ஆறறிவு இருக்கிறது.
நாயின் மோப்பசக்தி எத்தனை நம்பிக்கைக்குரியது!
ஆனால், எனக்கு ஆறறிவு இருக்கிறது.
சிலந்திவலையின் தொழில்நுட்பம்
சொல்லிலடங்காது!
ஆனால், எனக்கு ஆறறிவு இருக்கிறது.
ஆனால்… ஆறறிவில் என்ன இருக்கிறது…..?

21
வீதியெங்கும் சிதறிக்கிடக்கின்றன _
வெட்டரிவாள்கள்;
வறுமையின் பரிமாணங்கள்;
பாதிக்கால்கள்;
பலியான நீதிநியாயங்கள்
பிய்த்தெடுத்த நகக்கணுக்கள்;
பொய்த்துப்போன வாக்குறுதிகள்;
வெறியின் விரிவுகள்;
வேறுபலவும் நிரம்ப
உலர்ந்தும் உலராமலும் பெருகியவாறிருக்கும் குருதியில்
மொய்த்திருக்கும் ஈக்கள் நோய்க்கிருமிகளைப் பரப்பியவாறு…
கடந்துசெல்ல இயலவில்லை-
நினைப்பிலும் நடப்பிலும்.
பயணத்தில் இந்தக் கையறுநிலை நேராதிருந்தால்
எத்தனை நன்றாயிருக்கும்….
ஆறாது ஏங்கிச்சோரும் பித்துமனதைக்
காக்க காக்க கவிதை காக்க…..

0

Series Navigationமலேசியாவில் டான் ஸ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப் பரிசளிப்பு விழா 2011ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 17
author

ரிஷி

Similar Posts

Comments

  1. Avatar
    ஜெயபாரதன் says:

    ////வீதியெங்கும் சிதறிக்கிடக்கின்றன _
    வெட்டரிவாள்கள்;
    வறுமையின் பரிமாணங்கள்;
    பாதிக்கால்கள்;
    பலியான நீதிநியாயங்கள்
    பிய்த்தெடுத்த நகக்கணுக்கள்;
    பொய்த்துப்போன வாக்குறுதிகள்;
    வெறியின் விரிவுகள்;////

    /////அருகேயொரு வண்ணத்துப்பூச்சி பறந்துகொண்டிருக்கிறது-
    அற்புதச் சிறகுகளோடு!
    ஆனால், எனக்கு ஆறறிவு இருக்கிறது!.
    அந்த அசோகமரம்தான் எத்தனை
    உயர்ந்தோங்கி வளர்ந்திருக்கிறது!
    ஆனால், எனக்கு ஆறறிவு இருக்கிறது.
    வழியில் காணக்கிடைத்த ஆமையின் ஓடு
    அத்தனை உறுதியானது!
    ஆனால், எனக்கு ஆறறிவு இருக்கிறது.
    கருங்கல்லின் சொரசொரப்பும்
    கூழாங்கல்லின் வழுவழுப்பும்
    தொடுவுணர்வின் நல்வினைப்பயனாகிறது!
    ஆனால், எனக்கு ஆறறிவு இருக்கிறது.
    நாயின் மோப்பசக்தி எத்தனை
    நம்பிக்கைக்குரியது!
    ஆனால், எனக்கு ஆறறிவு இருக்கிறது.
    சிலந்திவலையின் தொழில்நுட்பம்
    சொல்லிலடங்காது!

    ஆனால், எனக்கு ஆறறிவு இருக்கிறது.
    ஆனால்… ஆறறிவில் என்ன இருக்கிறது…..?////

    த்ற்போதைய காட்சிகளைப் பளிச்செனத் திரையிட்டுக் மனிதக் குறைபாடுகளைக் காட்டிச் சிந்தனையைக் கிளறும் உன்னத வரிகள். பாராட்டுகள் லதா ராமகிருஷ்ணனுக்கு.

    சி. ஜெயபாரதன், கனடா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *