சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற காவல் கோட்டம்—-ஒரு ார்வை

This entry is part 8 of 45 in the series 26 பிப்ரவரி 2012

பண்டைத் தமிழர்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, என நிலப்பகுதியை வகைப்படுத்தி இருந்தனர். அந்தந்த நிலங்களின் சூழ்நிலைக்கேற்ப அவர்கள் செய்யும் தொழில்களும் நடந்து வந்தன. பாலை நிலத்தில் வாழ்வோர் விவசாயமோ வேறு தொழில்களோ செய்ய இயலாச் சூழலில் தங்களின் வாழ்வாதாரத்திற்காக அந்நிலவழிச் செல்பவரிடம் வழிப்பறி செய்து வாழ்வை நடத்தினர். இவர்கள் காலச் சூழலில் வேறு நிலங்களுக்குக் குடியேறியபோதும் பிறர் பொருளைக் களவு செய்யும் தொழிலை நடத்த நேர்ந்தது. தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் சில கிராமங்களில் வாழ்ந்து வந்த கள்ளர்களின் வாழ்வைச் சிறப்பாகப் பதிவு செய்திருக்கும் நாவல்தான் சு.வெங்கடேசன் எழுதியுள்ள “ காவல் கோட்டம் “.
நாவலின் முற்பகுதில் மதுரையின் வரலாறு கூறப்படுகிறது. மதுரையை ஆண்ட மன்னர்களின் உண்மை நிகழ்வுகள் இணைக்கப்பட்டுள்ளன. அவர்களில் நாயக்கர்கள் பற்றி மட்டும் சற்று விரிவாகப் பேசப்படுகிறது. கள்ளர்களைத் தொடர்பு படுத்தி இணைப்பதற்காக இப்படி எழுதப் பட்டிருக்கலாம். 1371 மாசி 17ஆம் நாள் தொடங்கி 1816 சூன் 16 வரை மிகப்பெரிய வரலாற்றை நிரப்பிப் பின்னால் கள்ளர் கதையை நாம் படிக்க நாவலாசிரியர் நம்மை ஆயத்தப்படுத்துகிறார்.

களவும் காவலும் ஒன்றுக்கொன்று முரண் பட்டவை. ஆனல் களவில் தேர்ந்தவர்களையெ காவலுக்கு நியமித்து அவர்களுக்குக் காவல் கூலி கொடுத்துப் பொருள்களைக் காத்துக் கொள்ளும் வழக்கம் இருந்தது. அவர்களின் காவலில் களவு நடந்தால் கூட துப்புக்கூலி கொடுத்து மீண்டும் பொருளைக் காவல்காரன் கொண்டுவந்து சேர்த்து விடுவான். இந்தக் குடிக்காவல் முறை நடந்து வந்ததை நாவல் கூறிவிட்டு அக்காவல் முறை அழிந்த விதத்தையே தன் கூற்றாக அது விவரிக்கிறது.

மாலிக்கபூரின் படை வந்து மதுரையை நாசம் செய்வதில் தொடங்கும்

நாவல் தொடக்கத்திலேயே கருப்பண்ணன் எனும் காவல்காரனின் வீரச்சாவைக் காட்டி நாவலின் முடிவு எப்படி இருக்கும் என்பதையும் உண்ர்த்திவிடுகிறது. நாவலின் இறுதியில் செத்துப் போன கள்ளர் குலப்பெண்கள் பெருங்கல்லாக, சிறு கல்லாக நடப்படுவதைக் காட்டி நாவல் முடிகிறது.

ஒரு யுகம் முடிந்து மறுயுகம் தோன்றும் போது முதல் யுகத்தின் நியாய அநியாயங்கள் அடுத்த யுகத்தில் முறையே அநியாயங்களாக மாறக்கூடும்

பரத்தையர் சேரல், கள்ளுண்ணல், உடன்கட்டை ஏறல் குழந்தைத் திருமணம், ஆகியவற்றைச் சான்றுகளாகக் கூறலாம். இக் குடிக்காவல் முறையை மாற்றித்தங்கள் போக்கில் இருந்த கள்ளர் குலத்தினரைச் சித்திரவதை செய்து, தாதனூர், நல்லூர், பூசலப்பட்டி, வீரனூர், ஆகிய கிராமங்களில் குற்றப் பரம்பரை சட்டத்தை ஆங்கிலேயர் அமல்படுத்தியதை நாவல் விரிவாகப் பேசுகிறது.

காவல் நிலையங்களும் நீதி மன்றங்களும் அமைக்கப் பட்ட பின்னும் அவ்ற்றிற்கு வேலை இல்லாமல் இருப்பதைப் பார்த்த ஆங்கிலேயர்கள் நிர்வாகம் தங்கள் கைக்கு வர குடிக்காவல் முறையை ஒழிக்கத் திட்டமிட்டனர். இறுதியில் துப்பாக்கியின் துணையோடு வெற்றியும் பெற்றனர்.

வரலாற்றையும் கற்பனையையும் கலந்து இணைத்துப் புதினம் படைக்கும் பொழுது முக்கியமான வரலாற்று நிகழ்வுகள் பதிவு செய்யப் பட வேண்டுவது அவசியமானதாகும். கற்பனையைப் படைப்பிலிருந்து உருவிவிட்டாலும் வரலாறு உறுதியாக நிற்க வேண்டும்.

1798—இல் இராமநாதபுரம் சமச்தான வல்லுநர் முத்துகிருழ்ணப்பப் பிள்ளை முதன் முதலில் பெரியாற்று நீரைக் கம்பம் பள்ளத்தாக்கிற்குத் திருப்பிவிட ஆய்வு செய்ததையும் பின்னால் அணை உருவானதையும் நாவல் கூறுகிறது. அணை கட்டுவதில் ஏற்பட்ட சிரமங்கள், இழந்த உயிர்கள், ’ தாது ’வருடப் பஞ்த்தினால் அணைக்கு வேலை செய்ய வந்த மனித உழைப்பு, அத்தனையும் நாவலில் பதிவாயிருப்பது குறிப்பிட வேண்டிய ஒன்றாகும்.

“ புளியம் பழத்தை உதிர்ப்பதைப்போல நகரத்தில் எல்லாத் தெருக்களில் இருந்தும் பிணத்தை உதிர்த்தது பஞ்சம் “

” நெஞ்சுக் கூட்டை வகுத்ததைப் போல காட்டை பிளந்து பாதை போட்டிருந்தனர் “

“ பிளேக்கும் காலராவும் பல கல்லறைகளுக்கு செங்கல் செய்து கொடுத்திருந்தன ”

“ அவன் மார்பில் குத்தி வைத்திருந்த பச்சையில், படமெடுத்து நின்ற பாம்பு மெல்ல இறங்கி, விம்மி எழுந்த அவள் மார்பின் மீது ஏறியது “

” இருளில் நடப்பது வேறு, இருளுக்குள் நடப்பது என்பது வேறு “ என்பன போன்ற சொல்லாடல்கள் நாவலைக் களைப்பின்றிப் படிக்க உதவுகின்றன.

கள்ளர்களின் சமூகத்தைச் சார்ந்திருக்கிற காது வளர்ப்பு, ஜல்லிக்கட்டு, பிரசவம் நிகழ்வது, திருமணச் சடங்குகள், போன்றவற்றை வெங்கடேசன் சரியாகவே பதிவு செய்துள்ளார். அதுபோலவே சிறுவயது முதலே குழந்தைகளைக் களவுக்குத் தயார்படுத்த கல் எறிதல், கற்றாழை தாண்டுதல், கன்னம் வைத்தல் போன்றவற்றைச் சொல்லிக் கொடுப்பதையும் கவனமாகச் சேர்த்துள்ளார். ஆக மொத்தத்தில் அவருடைய பத்து ஆண்டுகால உழைப்பு பக்கத்திற்குப் பக்கம் தெரிந்து நாவலைக் கள்ளர் சமூகத்தின் மிகச் சிறந்த பதிவாக மாற்றி உள்ளது,

ஆனால் நாவலை மிகச்சிறந்த ஒருவர் “ எடிட் “ செய்து பக்கங்களைக் குறைத்திருக்க வேண்டும். மதுரையைப் பற்றியதாக வரும் முதல் முந்நூறு பக்கங்கள் மிகையாகவே வாசகனை ஆயத்தப் படுத்துகின்றன.

திருடச் செல்கின்ற ” கொத்துகள் “ போவதும் வருவதும் அதிகமாகவே கூறப்படுவதால் அவை பற்றிய நம்பிக்கியின்மை தோன்றுகிறது.

நாயக்கர் வம்சத்தைக் குறிப்பாக விசுவநாதன் –நாமக்கர் பற்றிப் பல படைப்புகள் பல வகைகளில் வந்துவிட்டதால் முதலில் வருபவை நம்மைத் தாண்டச் சொல்லி நச்சரிக்கின்றன.
நாவல் மதுரையைப் பற்றியதாகத் தொடங்கினாலும் பாதியிலேயே தாதனூர் மதுரையை விழுங்கி விடுகிறது.

ஆனால் நாவலாசிரியரின் எழுத்தாளுமை இதனை அவரின் முதல் நாவல் என்ற நம்பிக்கையைத் தகர்க்கின்றது. அவர் சாகித்திய அகாதெமிப் பரிசு பெறத்தகுதியானவர் என்று இந்த நாவல் மூலம் நிரூபித்தாலும் இந்த நாவல் அதற்குத் தகுதியானது தானா என்று யோசிக்க வைக்கிறது. நேர்த்தியான முறையில் வெளியிட்டிருக்கும் “ தமிழினி “க்குப் பாராட்டுகள்.

[ காவல் கோட்டம்—சு. வெங்கடேசன்—,தமிழினி—-சென்னை-14;;பக்:1048 விலை ரூ 590 ]

Series Navigationபுலம்பெயர்வுமானம்
author

வளவ.துரையன்

Similar Posts

2 Comments

  1. Avatar
    யுவபாரதி says:

    மதுரையைத் தெலுங்கு நாயக்கர்கள் கைப்பற்றியது என்பது எவ்வளவு முக்கியமானது என்பதையும், அவர்களது ஆட்சியும் அதிகாரமும் எவ்வளவு அவசியமானது என்பதையும், அவர்கள் தமிழ் மண்ணை எப்படிக் காத்தார்கள்(?) என்பதையும் எவ்விதக் கேள்வியுமற்று வாசகர்களை உள்வாங்கச் செய்வதில் வெற்றி பெற்றிருக்கிறார் என்பதையும் சொல்லிப் பாராட்டாமல் விட்டீர்களே! இதற்காக (அவர் சார்ந்த) மதுரைவாழ் நாயக்கர் அமைப்புகள் அவரை எப்படிக் கொண்டாடின என்பதை நீங்கள் அறியவில்லை போல?

  2. Avatar
    Nirmal says:

    ஒரு நாவலை அரசியல் தவிர்த்து வாசிக்கமுடிந்தது, சரித்திரமே ஆட்சியாளர்கள் எழுதிக்கொள்ளும் ஒரு புதினம்தான். ஒரு புதினமாக நல்ல வாசிப்பு அனுபவத்தை தந்தது. http://nirmalcb.blogspot.com/2012/04/7.html

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *