“தா க ம்”

This entry is part 40 of 45 in the series 26 பிப்ரவரி 2012

வருஷங்கூடி தீபாவளிக்கென்று மட்டும் வெறும் நூறு ரூபாய்தான் நான் அவனுக்குக் கொடுத்திருக்கிறேன். அதற்கு மேல் என்னவோ எனக்கும் கை வந்ததில்லை. அவனும் மேற்கொண்டு கேட்டதில்லை. ரொம்பச் சந்தோசம் சார்…இவ்வளவுதான் அவன் வார்த்தை. துளி மனக்குறை இருக்காது அதில். இத்தனைக்கும் அவனுக்கு ஒரு துணைப்பொட்டலம் வேறு உண்டு. அவன் வேறு அம்மாதிரி நாட்களில் கூடவே வந்து கொண்டிருப்பான். சைக்கிளைப் பிடித்துக் கொண்டு அவன் வீதியில் நிற்க, இவன்தான் வீடு வீடாக ஏறி இறங்குவான். இவன் லீவு போட்ட நாட்களில்தான் அவனுக்கு வேலை. ஆனால் தீபாவளிக் காசில் அவனுக்கும் பங்குண்டு போலும்.
வழக்கத்திற்கு மாறாகத் தபால் வரும் நேரம் தாமதமாகிறதென்றால் அன்று அவன் இல்லை என்று பொருள். நேரம் ஆனதும் போதாதென்று வியர்க்க விறுவிறுக்க தட்டுத் தடுமாறித் தபால்களை விநியோகம் செய்து கொண்டு போவான் அந்தக் கொடுக்கு. சமயங்களில,; சார், விட்டுப் போச்சு என்று இரண்டாவது முறையாக ஏதாவது தபால்களைப் போட்டு விட்டுப் போவான். போடுவது கூடப் படு அவசரமாக, பதட்டத்தோடுதான் இருக்கும். என்றும் அவன் நிதானித்து நான் கண்டதில்லை. பதிலி என்றால் அதற்காக இப்படியா? கேட்டுக்குள் அவன் வீசுவது காற்றில் பறந்து ஏதாச்சும் ஒரு மூலையில் கேட்பாரற்றுக் கிடக்கும். தூரப் பார்வைக்கு ஏதோ வேஸ்ட் பேப்பரோ என்று தோன்ற, போய்ப் பார்த்தால் அடப் பாவி! அவன்பாட்டுக்கு வீசிட்டுப் போய்ட்டானே! என்றவாறே கை எடுக்கும். என்றாவது வருபவன்தானே. என்னத்தைச் சொல்வது அவனை! அன்று பார்த்து நாம் கவனமாக இருந்து கொள்ள வேண்டியதுதான் என்று விட்டு விடுவதுதான்.
ஒன்றிரண்டு இடங்களில,; டெலிவரி செய்யப்படாமல் தபால்கள் சாக்கில் கட்டப்பட்டு வீட்டில் கிடந்தன, கிழித்து எறியப்பட்ட தபால்கள் குவியலாகக் குப்பையாய்க் கிடந்தன என்றெல்லாம் செய்தி படிக்கிறோமே அதற்கு இது எவ்வளவோ பரவாயில்லையே!
சே!சே! நம்மாள்ட்ட அதெல்லாம் கிடையாது சார்…என்ன, கொஞ்சம் பதட்டமாவே வேலை செய்வாரு…எக்ஸ்பீரியன்ஸ் பத்தாது…அதுதானேயொழிய வேறே நீங்க நினைக்கிறமாதிரியெல்லாம் எதுவுமில்ல….
உன்னோட அஸிஸ்டென்டை குறை சொல்ல முடியுமா? உன்னை வச்சுதானே அவன்…
அவன் சொன்னால் நம்ப வேண்டியதுதான். ஓருவனைப் பற்றி அறிய அவன் நண்பனை அறி என்பது முதுமொழி. இங்கே இளையவனைப்பற்றி, அவனின் உதவியாளனைப்பற்றி அறிய அந்த முதியவனை (சர்வீசில்) அவனின் பேச்சுக்களை நம்பித்தான் ஆக வேண்டியிருக்கிறது. ஏனென்றால் அவனின் நாணயம் அப்படி. மனிதர்களை அவர்களின் ஏதாச்சும் நற்குணங்களைக் கொண்டுதானே அடையாளம் கண்டு கொள்கிறோம். தீய குணங்களைக் கொண்டும் அடையாளம் கண்டு கொள்வதுதான். ஆனால் அவர்களை நாம் மனதுக்கு நெருக்கமாக உணர்வதில்லையே!
அவன் பெயர் ஆலயமணி. எப்படி ஒரு பெயர் பாருங்கள். எங்காவது கேள்விப் பட்டிருக்கிறீர்களா? ராஜாமணி, ரசிகமணி, தெய்வேந்திரமணி, ரமணி என்றெல்லாம்தான் கேள்விப்பட்டிருக்கிறோம். இதென்ன ஆலயமணி.
அது எங்கப்பா வச்ச பேர் சார்….
எல்லாருக்கும் அவங்க அப்பா இல்லன்னா அம்மாதான் பேர் வைப்பாங்க… ரொம்ப வித்தியாசமா இருக்கேன்னுதான் கேட்டேன்….
அதெல்லாம் எனக்குத் தெரியாது சார்…எங்கப்பா ஒரு பயங்கரமான சிவாஜி ரசிகர்…வெறியர்னே வச்சிக்குங்க…வீட்டுல எந்நேரமும் சிவாஜி பாட்டாப் போட்டுக் கேட்டுக்கிட்டு இருப்பாரு…சமயத்துல நடிச்சுக் கூடக் காண்பிப்பாரு சார்…
அது சிவாஜி பாட்டில்லப்பா…டி.எம்.எஸ். பாட்டு….
சிவாஜி மாதிரியே அச்சு அசலா பாடியிருப்பாருல்ல சார் அவரு…அதுல சட்டி சுட்டதடா…கை விட்டதடான்னு ஒரு பாட்டு இருக்குமில்ல…சதா அந்தப் பாட்டையே கேட்டுக்கிட்டு இருப்பாரு…அதுல மணியோசை வரும்…அந்த மணியோசைதான் ஒம்பேருன்னாரு ஒரு நா…அதுவே நிலைச்சுப் போச்சு….
இதென்ன பேரு, ஆலயமணி கிண்டாமணின்னுக்கிட்டு? அந்தக் கேரக்டர் பெயரை வச்சாலும் பரவாயில்ல…இல்லன்னா பேசாம அவரு பெயரையே வச்சிட்டுப் போகலாம்…ஜன்ம சாபல்யம் ஆனமாதிரியாவது இருக்கும்…ரெண்டுமில்லாம இதென்ன? புரிஞ்சிக்க முடியலயே? உங்கம்மா எதுவும் சொல்லலையாமா?
எங்கம்மாவும் ஒரு பெரிய சிவாஜி பைத்தியம் சார்…ஏன் கேட்குறீங்க அந்தக் கூத்தை? பழைய குண்டு சிவாஜி படம்னா அவுங்களுக்கு உசிரு…
சர்தான் போ…உயிரிணையை நம்பி உன்னை அஉற்ரிணை ஆக்கிட்டாங்க போல்ருக்கு…
இதற்கு அவன் ஒன்றும் சொல்லவில்லை. புரிந்திருக்காது. இந்தக் காலத்தில் உயிரிணை அஉற்ரிணை என்றால் யாருக்குத்தான் புரியும். பள்ளிகளிலேயே தமிழ் இலக்கணமெல்லாம் இருப்பதாகத் தெரியவில்லையே! ஆங்கில இலக்கணத்திற்கே வழியில்லை. அதுவே ஒரு தாய்மொழி போல் புழக்கத்திற்கு வந்த ஒரு நிலையாகத்தானே இருக்கிறது. சரி, விஷயத்திற்கு வருவோம்…
இன்று என்ன ஆயிற்று? ஆளைக் காணவில்லையே? தபால் எதுவும் இல்லையோ? திங்கட்கிழமைகளில்தானே அவனுக்கு நேரம் ஆகும்.
எப்பவுமே வாரத்துல மொத நாள் தபால் ஜாஸ்திதான் சார்…எல்லாரும் உட்கார்ந்துதான் பிரிப்போம்…கட்டுக்களைப் பிரிச்சு ஆளுக்குக் கொஞ்சமா எடுத்துக்கிட்டு உட்கார்ந்திடுவோம்…யார் யாருக்கு எந்தெந்த பீட்டுன்னு எல்லாருக்கும் தெரியும்…குறைஞ்சது ஒரு மணி நேரம் ஆகும் சார்…அவுங்கவுங்க பிரிச்ச தபாலை அந்தந்தப் பீட்டுக்காரங்ககிட்ட மாத்திக்கிடுவோம்….பிறகு ஏரியாவைஸ் அடுக்குவோம்…அதுலர்ந்து நான் டெலிவரிவைஸ், தெருத் தெருவா, வீடு வீடாப் பிரிச்சு வரிசையா அடுக்கிக்கிடுவேன்…பிறகு மணி ஆர்டர், ரிஜிஸ்டர்ன்னு என்ட்ரியெல்லாம் போட்டுட்டுக் கிளம்பும்போது எப்டியும் மணி பத்தரையைத் தாண்டிடும் சார்…அதுனாலதான் நீங்க கூடச் சமயத்துல போஸ்டாபீஸ் வந்து கேட்கும்போது தர்ற முடியறதுல்ல…மொத்தமாக் கிடக்குற தபால்களைப் பிரிச்சு முடிச்சாத்தான் சார் எதுவும் தெரியும்…எல்லாரும் உட்கார்ந்து பிரிக்கிறதுனால யார்ட்ட வேணாலும் உங்க தபால் இருக்கலாம்…நாம்பாட்டுக்கு உங்களுக்குத் தபால் இல்லன்னு சொல்றேன்னு வச்சிக்குங்க…அது நல்லாயிருக்காது…நீங்க ஏதாச்சும் முக்கியமானதை எதிர்பார்த்து ஆர்வமா வந்திருப்பீங்க…
ரொம்பவும் பக்குவமான பேச்சு அவன் பேச்சு. ஆலயமணி ஒலிக்கும்போது எப்படி ஒரு தெளிந்த ரீங்காரத்தை உணர்கிறோமோ அதுபோல மனிதர்களைச் சமனப்படுத்தும் இந்த உயிரிணை ஆலயமணியின் வார்த்தைகள்.
இன்று என்னவாயிற்று? மணியைப் பார்த்தேன். பன்னிரெண்டரை தாண்டிவிட்டது. பன்னிரெண்டு ஆகிவிட்டாலே மனது அவனை எதிர்பார்க்க ஆரம்பித்து விடும். அறையில் உட்கார்ந்து ஏதாவது புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கும் எனக்கு சரியாகக் கவனம் செல்லாது. பதினொன்றரை மணியைப் போல் ஒருவன் சைக்கிளில் வழக்கமாகப் ப+ விற்றுக் கொண்டு போவான். இந்த வெய்யிலில் யார் ப+ வாங்குவார்கள். எல்லாமும் காலையிலேயே விற்றிருக்க வேண்டாமா? இப்படி நேரங் கெட்ட நேரத்தில் அலைகிறானே? ஒரு வேளை மீந்த ப+வாய் இருக்குமோ? தினமுமா மீந்து போகிறது. கேள்வி கேள்வியாகத்தான் இருக்கிறது இன்றுவரை. அவனும் தினமும் போய்க்கொண்டுதான் இருக்கிறான். வழக்கமாய் என் வீட்டு முன்னால் வரும்போது ஒரு முறை பெல் அடிப்பான். மணி பதினொன்றரை என்பது உறுதியாகும்.
அதுபோல் பனிரெண்டுக்கு ஒரு அம்மாள் வாழைப்பழம் விற்றுக் கொண்டு வரும். உடம்பில் சுற்றிய சேலை முந்தியை வெயிலுக்கு இதமாகத் தலைவரை இழுத்துவிட்டுக்கொண்டு அதில் கூடையை நிறுத்தி ரஸ்தாளி, நாடு, ப+வம் பழம் என்று கூவிக்கொண்டு. அது போகும்போது மணி பன்னிரெண்டை நெருங்குவது வழக்கம். ஓரிரு முறை அந்தம்மாளிடம் பழம் வாங்கிய பழக்கத்தில் தினமும் ஒரு முறை வீட்டு வாசலில் நின்று கேட்டுவிட்டுப் போகும். வேண்டாம், வேண்டாம் என்று எத்தனை நாளைக்குச் சொல்வது? எனக்கோ மனதுக்குக் கஷ்டமாக இருந்தது. கடைகளில் கூட நாம் கேட்ட பொருள் இல்லையென்றால் இன்னைக்கு வந்துரும் சார், நாளைக்கு வருது சார் என்றுதான் சொல்வார்களேயொழிய, இல்லை என்ற வார்த்தை வராது. அதுபோல் வேண்டாம் என்ற வார்த்தையைச் சொல்லச் சங்கடப்பட்டுக்கொண்டு என் அறைக்குள் நான் அமைதி காப்பேன். ரெண்டு முறை கூவி விட்டு, அதுபாட்டுக்குப் போய்விடும். உள்ளார வேலையா இருக்காக போல்ருக்கு என்றோ தூங்குறாக போலிருக்கு என்றோ எதையாவது நினைத்துக் கொள்ளட்டுமே…வேண்டாம் என்ற வார்த்தைக்கு அது எவ்வளவோ பரவாயில்லையே!
பாவம், தினமும் இந்த வீதியில் யார் யாரெல்லாமோ எதை எதையோ கூவி விற்றுக் கொண்டு பதை பதைக்கும் வெய்யிலில் ஒரு நாளின் பாடைக் கழிக்க எப்படியெல்லாம் அலைகிறார்கள்? இவர்கள் காலையில் ஏதாவது சாப்பிட்டிருப்பார்களா இல்லையா? மதியச் சாப்பாட்டை எப்பொழுது சாப்பிடுவார்கள்? இந்தக் காசைக் கொண்டுபோய் தேவையானதை வாங்கிப் பிறகுதான் பசியாறுவார்களோ? அது எத்தனை மணிக்கு?அதுவரை எப்படிப் பசி தாங்குவார்கள்? அரசுதான் இலவச அரிசி தருகிறதே? அப்படியானால் இந்த வருவாய் மற்ற செலவுகளுக்குப் போதுமா?இவர்களின் இந்த அலைச்சல் எப்பொழுது ஓயும்? இந்த வருவாயை வைத்து எப்படிக் காலம் கழிக்கிறார்கள்? தினமும் ஒரே மாதிரியான வருவாய் நிச்சயமில்லையே இவர்களுக்கு? அம்மாதிரி ஏற்ற இறக்கம் ஏற்படும்பொழுது எப்படிச் சமாளிப்பார்கள்? குழந்தைகளை எப்படிப் படிக்க வைக்கிறார்கள்? படிக்குமா அல்லது அவைகளும் கூலி வேலைகளுக்குச் செல்லுமா? அட, கடவுளே…என்னவெல்லாம் தோன்றி இந்தப் பாழும் மனது சங்கடப்படுகிறது? இறைவா, என்று இந்த ஏற்றத் தாழ்வுகளெல்லாம் நீங்கும்?
மீனு மீனோய்….கெண்ட, கெளுத்தி, எறா, அயிரை……
இது ஒண்ணுதான் இந்தத் தெருவுல வராம இருந்தது…இப்போ அதுவும் வர ஆரம்பிச்சாச்சு….
அது சர்தான்….உனக்கு வேண்டாம்னா ஊருக்கு வேண்டாம்னு அர்த்தமா?
கருவாடு…கருவாடு….என்று ஒருவன் சைக்கிளில் வைத்துக்கொண்டு பொழுது விடிஞ்சதும் விடியாததுமாக சர்ரென்று பறக்க, வாசலில் கோலம் போட்டுக்கொண்டிருந்த என்னவளைக் காற்றுவாக்கில் அது வந்து தழுவ…உள்ளே ஓடி வந்து என்னவொரு ஒமட்டல்…விழி பிதுங்க…கண்களிலிருந்து ஜலம் கொட்ட…வாயிலிருந்து சரம் சரமாய் எச்சில் வழிய….போதுண்டா சாமி…
அதென்னவோ சார்…இந்தக் கருவாட்டு வாடையை நிறையப் பேரால பொறுத்துக்கவே முடியறதில்ல…அதச் சாப்பிடறவங்க கூடப் பலபேர் அந்த வாடைக்கு ஒதுங்குறாங்களே…மூக்கைப் பிடிச்சிக்கிறாங்களே…அப்பப்பா…என்னவொரு பயங்கர ஸ்மெல்….
ஆயிற்று…மணி ஒன்று தாண்டிவிட்டது. பெரும்பாலும் இனிமேல் வருவதற்கில்லை. திங்கட்கிழமை மட்டும்தான் இது தாண்டிய எதிர்பார்ப்பு…இன்று தபால் இல்லை. அவ்வளவுதான். சற்று நேரத்திற்கு முன் ஏதோவோர் மணிச் சத்தம் கேட்டதுபோல் இருந்தது. அது சைக்கிள் மணிதானா? ஒரு வேளை தபால் இல்லை என்பதற்கடையாளமாய்ச் சத்தம் கொடுத்துவிட்டுக் கடந்து போயிருப்பானோ? வராண்டா கதவைத் திறந்துகொண்டு போய் வீதியில் நின்று நீள நெடுகப் பார்த்தேன். தெருக்கோடிவரை காக்கா குஞ்சு இல்லை. வெயில்தான் பளீரென்று மஞ்சள் படுகையாய் விரிந்து கிடந்தது.
வேலையில்லாதவனின் வேலை இந்தத் தபால் எதிர்பார்ப்பு. பணியிலிருந்து ஓய்வு பெற்றவனுக்கு இப்படி எதையாவது பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்தால்தான் ஆயிற்று. நேரம் போக வேண்டுமே? எவ்வளவு நேரம் புத்தகம் படிப்பது? எவ்வளவு நேரம் பகலில் தூங்குவது? எவ்வளவு நேரம் டி.வி. பார்ப்பது?
இந்தக் கதவு, ஜன்னல், இண்டு, இடுக்கு இதிலெல்லாம் எவ்வளவு தூசி படிஞ்சிருக்கு…கைல ஒரு பிரஷ்ஷை எடுத்திட்டு இதையெல்லாம் சுத்தம் பண்ணி வைக்கலாமுல்ல…தெனமும் ஒரு ஜன்னல், இல்லைன்னா ஒரு கதவு…கணக்கு வச்சி மெது மெதுவாச் செய்யுங்க…சும்மாவே உட்கார்ந்திட்டிருந்தா சாப்பிடுற சாப்பாட்டுக்கு வேலை வேண்டாமா…எப்டி ஜீரணிக்கும்…அப்புறம் ப்பீ.பி…உஷ_கர்ன்னு வந்தா அது இன்னும் அவஸ்தையாக்கும்…கொஞ்சமேனும் உடம்பை அசைக்கப் பாருங்க…
அவளும் சொல்லித்தான் பார்க்கிறாள்.
அம்பத்தெட்டு வயசுவரைக்கும் உழைச்சிட்டுத்தாண்டி உட்கார்ந்திருக்கேன்…சும்மா நொய் நொய்ங்காதே…கொஞ்ச நாளைக்குப் பேசாம இரு…இருக்கிற பழைய படமெல்லாம் ஒரு ரவுண்ட் பார்த்து முடிச்சிக்கிறேன்…இரும்புத்திரை, பதிபக்தி, பாதகாணிக்கை, மோட்டார் சுந்தரம்பிள்ளை இதெல்லாம் பார்த்து ரொம்ப வருஷமாச்சு..படிக்க வேண்டிய புத்தகங்கள் வேறே நிறைய இருக்கு….வேலை செய்ய உடம்பு வளைந்தால்தானே…
இதுக்கு எதுக்கு உடம்பு வளையணும்…நின்னமேனிக்கு செய்ய வேண்டிதானே…நல்லகாலத்துலயே தில்லைநாயகம்….இனிமே கேட்கவா போறீங்க…அவளும் சொல்லிப் பார்த்து ஓய்ந்துதான் போய்விட்டாள்.
இனிமே இது தேறாது…அவள் என்னை அஉற்ரிணையாக்கி வெகுநாளாயிற்று.
தினசரி பகல் மணி பன்னிரெண்டை நெருங்கும் சமயம். அந்தக் காலத்தில் ராத்திரி பனிரெண்டை ஏதோ பேய் பிசாசு வரும்நேரம் போல் இருள் கலந்த அமைதியோடு காட்டி கடிகாரத்தின் பெண்டுலத்தை டங்…டங்…கென்று அடிக்க வைத்து பயமுறுத்துவார்கள் தமிழ் சினிமாவில். அப்படியான ஒரு அதி முக்கிய நேரமாக இந்தப் பகல் பன்னிரெண்டு அமைந்து விட்டது எனக்கு.
வீட்டு வாசலில் கிணிகிணியென்று தொடர்ச்சியாக சைக்கிள் பெல்சத்தம் கேட்க, வந்துட்டேன் என்று நான் ஓடிப் போய் நிற்க…எதிர் மரத்தடி நிழலில் சைக்கிளை நிறுத்தி விட்டு, கையில் தபால் கட்டுக்களோடு, எனக்கான தபாலைப் பிரித்துக் கொண்டே ‘குடிக்கத் தண்ணி கொடுங்க ஸார்…’ என்பான் அவன். வாங்கிய தபாலை மேலோட்டமாகப் பார்த்துக் கொண்டே கையெழுத்து எதுவும் வேணாமா…என்று கேட்டுக் கொண்டே உள்ளே சென்று செம்பு நிறையக்; குளிர்ந்த குடிநீரைக் கொண்டு வந்து நீட்டுவேன் நான்.
கடகடவென்று ஒரு செம்புத் தண்ணீரும் தடையின்றி உள்ளே இறங்கும். மீதத்தை சட்டைக் காலரைத் தூக்கி முதுகுக்குள்ளே விட்டுக் கொள்வான் அவன்.
இந்த வெயிலுக்கு முதுகு குளிர்ந்துச்சுன்னா ரொம்ப எதமா இருக்கும் சார்…அந்தச் சொகமே தனி….
இன்னும் கொஞ்சம் கொண்டு வரவா….நல்லா நனைச்சுக்குங்க…
போதும் சார்…போதும் சார்…
வியர்வையும் தண்ணீருமாய் அவன் ஆசுவாசத்தோடு நிற்பதைப் பார்க்க எனக்கு என் அப்பா ஞாபகம்தான் வரும். இப்படிப் பொங்கப் பொங்கத்தானே அடுப்பு முன் நின்று தானும் கூடவே வெந்து ஐம்பது அறுபது ஆண்டு காலம் வேலை பார்த்தார் அவர். சொல்லக் கூடாது என்று நினைத்துக் கொள்வதுதான். ஆனாலும் வந்து விடுகிறது. என்ன செய்ய? அப்பாவின் நினைப்புத்தானே இன்றுவரை மெய்யாய் வழிநடத்திச் செல்கிறது? பிறகு எப்படி நினைக்காமல் இருப்பது? ஊனில் கலந்து உயிர் கலந்து….
‘அப்புறம்…சொல்லுங்க….’ –அவனைப் பேச்சுக்கு இழுப்பேன் நான். ரெண்டு வார்த்தைகள் என்னிடம் பேசி விட்டுப் போனால் அவனுக்கு ஒரு ஆசுவாசம்…வீட்டு நிழலில் சற்று நின்று இளைப்பாறியது போலவும் ஆயிற்று. புதுத் தெம்போடு புறப்படுவான்.
உங்க வீட்டுல இப்பத் தண்ணி குடிக்கிறேன்ல சார்….பெறவு இப்டியே இந்த ஒளவையார் நகர் ப+ராவும் முடிச்சிட்டு பஸ் ஸ்டாண்டு இருக்குல்ல…அந்தப் பழக்கடைல போயி ரெண்டு வாழப்பழம்…பிறகு வடக்குப் பக்கம் ஒரு நாலஞ்சு தெரு…மணி நாலு போல வீட்டுக்குப் போயித்தான் சாப்பாடு….இதுதான் நம்ம ரொட்டீன்….வரட்டா சார்…இன்னைக்குத் தபால் எக்கச் சக்கம்…எல்லாம் வெறும் கம்பெனித் தபாலா வருது சார்…மொக்க மொக்கையா தடி தடியா வெறும் புஸ்தகங்களா….
கம்பெனிகளோட அன்ய+வல் ரிப்போர்ட்டா இருக்கும்…ஷேர் ஆசாமிக நிறைய இருக்காங்களோ….
அதெல்லாம் நமக்குத் தெரியாது சார்…நா அதெல்லாம் கேட்டுக்கிறதில்ல…தபால் டெலிவரி பண்றதோட நம்ம வேலை முடிஞ்சிச்சு….
மீண்டும் புத்துணர்ச்சியோடு வண்டியில் வேகமாய்க் காலைத் தூக்கிப்போட்டுப் பறந்து விடுவான் அவன். ஒரு செம்புத் தண்ணீர் அவனை அப்படி உயிர்ப்பித்திருக்கும்.
வாசலில் மணிச் சத்தம். அட, வந்தாச்சு போல….- ஓடுகிறேன் நான்.
சார்…ரிஜிஸ்டர் ஒண்ணு இருக்கு….எல்.ஐ.சி.லர்ந்து வந்திருக்கு…
ஆமாங்க, பாலிஸி முடிஞ்சி போச்சு…மண்டையப் போட்டாத்தாங்க பெனிஃபிட்டு…இல்லன்னா அது ஒரு சாதாரண சேமிப்புதாங்க….சலிப்புடன் சொல்லியவாறே தபாலைப் பெற்றுக் கொண்டு கையெழுத்திட்டு நீட்டினேன்.
ஏன் சார் அப்டிச் சொல்றீங்க…இதான் சார் நமக்குப் பிறகு நம்ம குடும்பத்தக் காக்குறது….இல்லன்னா ஒண்ணுமே வெக்காமப் போயிட்டான் அப்பங்காரன்னு பழி பாவமாயிரும் சார்…
நான் அமைதியாகச் சிரித்துக் கொண்டேன்.
தண்ணி கொடுங்க சார்….
இதோ வந்திட்டேன்….பார்த்தீங்களா மறந்திட்டே நிக்கிறேன்…ஒரு நிமிஷம்…. –உள்ளே சென்று தண்ணீரை வழக்கமான செம்பில் எடுத்துக்கொண்டு வந்து நீட்டினேன்.
இன்னைக்கு என்னவோ கொஞ்சம் கலங்கலா இருக்கு…
அப்டியா சார்…பரவால்ல…இந்தக் கார்ப்பரேஷன் வாட்டர் குடிச்சாத்தான் நிறைவா இருக்கு சார்….இதுல இருக்கிற டேஸ்ட் வேற தண்ணீல இருக்கிறதில்ல சார்….
வேற தண்ணீன்னா….எதைச் சொல்றீங்க…போர் வாட்டர் நிச்சயம் டேஸ்ட் இருக்காது…ஏன்னா இந்த ஏரியாவுல எல்லாமும் நானூறு அடிக்குக் கீழ…குளிக்க, துணி துவைக்கத்தான் உதவும்…இது மணல் மேடு வாட்டர் ஆச்சே….
இது என்னைக்கும் டேஸ்ட்தான்னு சொல்ல வர்றேன்…நேத்து அங்கொரு வீட்ல தண்ணி சாப்டேன் சார்…ஏண்டா கேட்டோம்னு ஆயிடுச்சி…படு சப்புன்னு இருந்திச்சு….பயங்கரக் கடுப்பு…
அப்போ நேத்து வந்தீங்களா நீங்க….என்னடா சத்தத்தையே காணலயேன்னு பார்த்தேன்….இந்த வழியாத்தான் போயிருக்கீங்கன்னு சொல்லுங்க…
வராம….அப்புறம் எப்டி சார்…? உங்களுக்கு நேத்து தபால் இல்ல…..பன்னென்டே காலுக்கெல்லாம் இதக் கடந்துட்டனே…? – சொல்லிக்கொண்டே வாசலைக் காண்பித்தான்.
பார்த்தீங்களா….நாந்தான் உங்ககிட்ட ஏற்கனவே சொல்லியிருக்கேன்ல….தபால் இல்லாட்டாலும் பரவால்ல….ஒரு சத்தம் கொடுங்க…நான் இந்த முதல் ரூம்லதான் இருப்பேன்னு…
அவன் லேசாகப் புன்னகைத்தவாறே அமைதியாயிருந்தான்.
.ஒரு சொம்புத் தண்ணி கொடுக்கிறதுக்கு என்ன? குறைஞ்சா போறேன்…இருந்து தாகம் தீரத் தண்ணியக் குடிச்சிப்பிட்டு, ரெண்டு வார்த்தை நின்னு பேசிட்டுப் போகலாம்ல….சொன்னாக் கேட்க மாட்டேங்கிறீங்களே….
அதுக்கில்ல சார்…உங்களுக்கு நேத்து ஒண்ணும் தபால் இல்ல…அதான்…எப்டீ…
பார்றா…என்ன எப்டீ கிப்டீ? அட, தபால் இல்லாட்டி என்னய்யா…தண்ணி குடிக்கக் கூடாதுன்னு இருக்கா…அலைஞ்ச அலைச்சலுக்கு அப்பதானேய்யா தாகம் தீரும்…ஒரு செம்புத் தண்ணி கொடுத்தா குறைஞ்சா போவாங்க யாரும்….அங்க எங்கயாவது போயி கண்ட தண்ணியக் குடிப்பீங்களா…தொண்டையைக் கெடுத்துக்கிட்டு, தடுமம் பிடிச்சிக்கிட்டு அலைவீங்களா…
நீங்க தூங்கிக்கிட்டு இருப்பீங்களோ…ஏதாச்சும் வேலையா இருப்பீங்களோ…எதுக்கு சாரை டிஸ்டர்ப் பண்ணுவானேன்னுதான்….
ஏங்க, என்னங்க இது வெட்டி வியாக்கியானம்…? நாந்தான் சொல்லியிருக்கேன்ல ஏற்கனவே…எப்ப வேணாலும் தயங்காம வாங்க….ஒரு சத்தம் கொடுங்கன்னு…அப்புறம் என்ன? இவ்வளவு பழகிட்டு அப்புறம் இப்டி இருந்தீங்கன்னா எப்டீங்க…? வேலை வெட்டி இல்லாமச் சும்மாத்தானங்க நா உட்கார்ந்து கெடக்கேன்…உங்களுக்குத் தண்ணி தர்றதுல என்ன சிரமம்? நீங்களா எதாச்சும் நினைச்சிக்குவீங்களா? சர்தான் போங்க…
அவனிடம் நீண்ட அமைதி.
தபாலில்லாம ஒங்ககிட்ட எப்டி சார் தண்ணி கேட்குறது….வந்தமா, தபாலைக் கொடுத்தமா, தண்ணியக் குடிச்சமான்னு இருந்தா அது ஒரு மாதிரி…சும்மாவாச்சும் வந்து நின்னு கேட்க முடியுமா சார்….
இப்பொழுது என் வாய் அடைத்துப் போனது. நான் அமைதியானேன்.
இல்ல சார், இருக்கட்டும்…..நா வர்றேன்….அதான் தபால் கொடுக்கிற அன்னிக்கெல்லாம் செம்புத் தண்ணி குடிக்கிறேன்ல….ஒண்ணும் நினைக்க வேணாம்…- சொல்லிவிட்டு என்னைத் தலை நிமிர்ந்து கூடப் பார்க்கக் கூச்சப்பட்டவனாய் அவன் போய்க் கொண்டிருந்தான்.
செல்லும் திசையையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தேன் நான்.
அடடா! எப்படியெல்லாம் மனிதர்கள்? சிலிர்த்துப் போனது எனக்கு! மனிதத்துவம் என்று சொல்கிறார்களே… அது இதுதானோ?

————–

Series Navigationஇஸ்லாமிய அரசியலில் மாற்றுவாசிப்புவிளிம்பு நிலை மக்களின் உளவியல்: நீர்த்துளி: சுப்ரபாரதிமணியனின் புதிய நாவல்
உஷாதீபன்

உஷாதீபன்

Similar Posts

6 Comments

  1. Avatar
    Dr.G.Johnson says:

    THAAGAM by USHATHEEBAN is an appropriate title for a short story which depicts human passion. The main character is a retired gentleman who stays idle at home. He spends time watching old movies and reading books.He knows the timing of the regular vendors.But above all, he has developed a passion for the postman who sees him daily. Though he is not expecting any important post, he finds solace talking to him and giving him drinking water. And if he is missing for a day he feels upset and restless. But the postman sometimes passes the house when there is no post. He insists that he stop at his house for drinking water even if there is no post. But ALAYAMANI says that he should only drink water when there is post. The writer has played with the words uirinai and nattrinai in a humourous manner.Humanity isportrayed in a very subtle mannar in AALAYAMANI..Awaiting to hear more bell chimes USHATHEEBAN…VAAZHTHUKKAL!

  2. Avatar
    லறீனா அப்துல் ஹக் says:

    வித்தியாசமான/ ஒரு நல்ல சிறுகதையை வாசித்த நிறைவு. வாழ்த்துக்கள்!

  3. Avatar
    ganesan says:

    The writer beautifully narrates the relationship and expectation btw the post man and the retired man….the importance of post man is being reflected in the story ““தா க ம்”” even in the period of email,sms,skype,facebook and courier services.well narrated ushadeepan.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *