இராமநாதன் பழனியப்பன் “திருச்செந்தூரின் கடலோரத்தில்” நூல் விமர்சனம்

This entry is part 15 of 35 in the series 11 மார்ச் 2012


பக்தி என்பது அறிதல், அறிவித்தல், அனுபவித்தல் அனுபவித்ததை பகிர்தல் போன்ற நடைமுறைகளைச் சார்ந்தது. பக்தியை அறிந்தவர்கள் அறியாதவர்களுக்கு அறிவிக்கும் பேறு பெறுகிறார்கள். பக்தியை அனுபவித்தவர்கள் அனுபவிக்காதவர்களுக்கு அனுபவிக்கக் கற்றுத்தருகிறார்கள். தொடர்ந்து உருவாகிவரும் இந்த பக்தி இழை அவ்வப்போது சிக்குண்டு, சிதறுண்டு, நெருக்குண்டு கிடந்ததும் உண்டு. நெருக்குதல்கள் பற்பல இருந்தாலும் அதன் தொடர் இழை அறுந்துபோகாலமல் ஞானிகள் காத்தார்கள், காத்து வருகிறார்கள். காத்துவருவார்கள். அவர்களின் சொற்கள்,இலக்கியங்கள் காட்டாதனவற்றைக் காட்டும். கேட்காதனவற்றைக் கேட்கச் செய்யும். புரியாதனவற்றைப் புரியச் செய்யும். அறியாதனவற்றை அறியச் செய்யும். அனுபவிக்காததை அனுபவிக்கச் செய்யும்.

பக்தி என்பதன் அடிப்படையை மக்களிடத்தில் உணர்த்தவேண்டிய காலக்கட்டம் இது. மக்களைப் பயபக்தியில் ஈடுபடுத்தும் வன்மையான காலக்கட்டம் இது. மக்களை அவர்களின் அறியாமையைக் காட்டிப் பயமுறுத்திக் கடவுளைக் காசாக்கி வணக்க வைக்கும் இந்தக் காலக்கட்டத்தில் பக்தியின் உண்மையை, நன்மையை, அதன் அன்புருவை வெளிக்காட்ட வேண்டிய பல பணிகள் இன்றைக்குத் தேவைப்படுகின்றன.

முரட்டு பக்தியாக உடலை வருத்தும் குழுக்கூட்டம் ஒருபுறம். திரட்டு பக்தியாக மக்கள் திரளைக் கூடச் செய்யும் கூட்ட பக்தி ஒருபக்கம். களிப்புகளுக்கு இடம் தந்து ஆடல், பாடல், கரகாட்டத்துடன் இயங்கும் களிப்பு பக்தி ஒருபுறம். கவலை பக்தி ஒருபுறம். காக்க வேண்டும் என்ற காவல் பக்தி ஒருபுறம். இவ்வகை நடப்புகளை உடைய ஆரவார பக்தியில் அமைதி பக்தி, ஆன்ம பக்தி காணாமல்போய்க் கொண்டிருக்கிறது. இச்சூழலில் உண்மையான, நன்மையான, இனிமையான பக்தியின் பாங்கினை துறைதோறும், துறைதோறும் துணைக்கருவிகள் பல கொண்டு அறிவிக்கவேண்டி இருக்கிறது.

காலம் காலமாக அறிவின் ஆற்றல் பெருகி வந்தாலும் அறியவேண்டியனவாகவே உயிர்கள் இருந்து கொண்டே இருக்கின்றன. இந்த உயிர்களுக்குப் பக்தி வழியில் பகவானை அடைந்த பேரின்பவாதிகளை அறிமுகப் படுத்திக் கொண்டே இருக்கவேண்டும். அப்போதுதான் உயிர்களின் அறியாமை களைந்துபோகும். இவ்வினிய முயற்சியில் திட்டமிட்டு திடமுடன் இறங்கி இருக்கும் அருளடியார் இராமநாதன் பழனியப்பன் அவர்களின் இனிய நூலான திருச்செந்தூரின் கடலோரத்தில் நூலைக் காணும், படிக்கும், ருசிக்கும், துதிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

முருகனைச்,சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைக் கடம்பனை அணுஅணுவாக ரசித்து உலகமெல்லாம் அவனடியில் கிடப்பதை எடுத்துரைக்கும் அருள் அனுபவ நூல் திருச்செந்தூரின் கடலோரத்தில் என்ற நூலாகும்.

வடமொழியில் ஆதி சங்கர மாமுனிவர் அருளிய சுப்பிரமணிய புஜங்கத்தின் அருமையான அருள் தமிழ்ப் பதிப்பு திருச்செந்தூரின் கடலோரத்தில். சங்கரர் தனக்கு ஏற்பட்ட நோவு நீங்க ஜெயந்திபுரம் என்ற திருச்செந்தூருக்கு வருகை தந்துப் பாடிய அருள் பாடல்கள் முப்பத்து முன்றின் இனிய சர்க்கரைப் பிழிவு இந்த நூல். முருகப் பெருமான் காலடியில் கிடந்த கரும்பாம்பு நீங்கியதாகச் சங்கரருக்கு இப்புஜங்கம் பாடும்போது கிடைத்த அருள் அனுபவம் அவரின் நோவைத் தீர்த்தது. முப்பத்து முன்று என்ற எண்ணிக்ககை முப்பத்து முன்று கோடி தேவர்கள் என்ற எண்ணிக்கையின் உள்ளடக்கக் குறியீடு ஆகும்.

இந்த நூலின் அமைந்திருக்கும் சிறப்புகள் பற்பல. உரைநடை வளமும், காட்சி நயமும், கவிதை வளமும், எளிமையும், இனிமையும் அருளும், அனுபவமும் முற்றி முதிர்ந்திருந்து இந்நூலை அணி செய்கின்றன. இணையதளம் முதல் இனியவன் கோயில் கொண்டிருக்கும் அனைத்துத் தலங்கள் பற்றிய உண்மைத் தகவல்களுடன் நேர்த்தியான கட்டுமானம், ஓவியங்கள், படங்கள் என்று வீட்டின் சூழலைக் கூட கோயிலாக மாற்றிவிடும் வலிமை பொருந்தியது இந்நூல்.

முருகப் பெருமானின் திருச்செந்தூர் பற்றியும், தலப் பெருமை, தலநூல்கள் என அனைத்தையும் தந்து எண்ணூறு பக்கங்களுக்கு விரிகிறது இந்நூல். முன்னதாக அறிமுக இயலில் முக்தி அனுபவம், முருக வரலாற்றின் சிறப்பு, உலக முருகன் கோயில்கள், ஞானவான்களாம் அருணகிரிநாதர், இரத்தினகிரி பாலமுருகன் அடிமை சுவாமிகள், சங்கரர் அருள் வரலாறு முதலிய தக்க சான்றுகளுடன் எடுத்துக்காட்டப் பெறுகின்றன.

படங்களும் சித்திரங்களும் கலந்து நிற்கும் இந்நூலில் ஆங்காங்கே வண்ணமிட்டுக் கட்டம் கட்டி முக்கியமான தகவல்கள் இணைக்கப் பெற்றிருக்கின்றன. இதனைக் கண்ணூற்றாலே பல அறியாச் சிக்கல்கள் அழிந்து போகின்றன. அறியச் செய்கின்றன.

இரண்டாம் பகுதியான புஜங்க இயலில் சுப்பிரமணிய புஜங்கத்தின் வடமொழி, தமிழ் வடிவம் , விரிவான உரை முதலிய எடுத்துரைக்கப் பெறுகின்றன.

முன்றாம் பகுதி இணைப்பாக முருகப் பெருமானின் அருள் வெள்ளத்தைப் பாடிப் பரவும் பக்திப் பனுவல்கள் இணைக்கப் பெற்றுள்ளன.

இம்முன்று நிலைகளில் அமைந்துள்ள இந்நூல் சுப்பிரமணிய புஜங்கத்தின் புகழை இனிது நிலை நிறுத்துகிறது. புஜங்கம் என்பது தோளால் நகரும் முறைமை என்று பொருள். பாம்பின் நகர்ச்சி போன்ற ஓசையுடன் இது வடமொழியில் பாடப் பெற்றுள்ளது. தமிழ் வடிவில் கவிதை நடைக்கு ஒட்டிய இந்த இசை இணையும் முறை பின்பற்றப் பெற்றுள்ளது. எனவே இது புஜங்கம் என்று பெயர் பெற்றது.

மச்சக் காவடி, சர்ப்ப காவடி பற்றி சரியான தகவல்களை இந்நூல் பதிவு செய்துள்ளது. சர்ப்பகாவடி என்பது பாம்பினைப் பச்சை மண்பாத்திரத்தில் கொண்டு வந்துத் திருச்செந்தூர் சீரலைவாய்ப் பகுதியில் விட்டுவிடுதல் என்ற முறைமை கொண்டது என்ற செய்தி பிரமிப்பை ஏற்படுத்துகிறது. மச்சக் காவடி என்பது திருச்செந்தூரில் கிடைத்த மீனை முன்று கூறிட்டு மஞ்சள் நீரில், மஞ்சள் துணிமுடப்பட்டு கொண்டுவருவது என்றும், இம்மீனை கடலில் விட்டால் இறந்தமீன் துள்ளித் திரியும் என்றும் தரும் கருத்து இறையிருப்பை உணர்த்துவதாக உள்ளது.

இதுபோன்ற பல புதிய தகவல்களுடன் இந்த நூல் அமைந்து சிறக்கிறது.

தீராத வியாதிகளான வலிப்பு, தீமைமிகு காசம்
குஷ்டம், சுரம், மேகவெட்டை, குடல்ப்புண்
புற்றுநோய், பிசாசு, பொல்லாத மனப்பயம்,
இன்னபிற நோய்கள் அனைத்தும்
தாரகனை வதம் செய்தவனே
பன்னீர் இலையில் மடித்த உன் திருநீற்றைப்
பார்த்த மாத்திரத்தில் பறந்தோடி மறைந்துவிடுமே(25)

என்ற புஜங்கப் பகுதி திருச்செந்தூரின் இடப் பெருமைக்கும், சொல் பெருமைக்கும், பொருள் பெருமைக்கும் சான்றாக அமைவது ஆகும். இது போன்று முப்பத்து முன்று வடமொழிப் பாடல்களுக்கும் இனிய தமிழாக்கம் ஆசிரியரால் தரப் பெற்றுள்ளது. இப்பாடல்களுக்குச் சொல்லுக்குச் சொல் விளக்கம், பொருள் விளக்கம், இட விளக்கம், வரலாறு விளக்கம் என்று விளக்கங்களின் வரிமை இந்நூலை விரிதாக்கி படிப்பவரின் பாராட்டைப் பெறுகின்றது. இன்னும் படிக்கலாம் என்பது போன்ற ஆசிரியரின் இனிய நடை புத்தக உலகில் புதிய நடை முறைமையைக் கொண்டுவந்துச் சேர்த்துள்ளது.

இந்நூலின் ஒவ்வொரு பகுதி எழுதப்படும்போது அதற்கு தொடர்புடைய பல அருளனுபவங்கள் ஆசிரியருக்குக் கிடைத்துள்ளன. மலேசிய நாடு சார்ந்து தண்ணீர் மலை முருகனுக்கு தேங்காய்கள் உடைப்பதை ஓருமுறை கண்ட இவருக்கு பல முறை முருகனையும் அவள் அருள் வெள்ளத்தையும் காண எண்ணம் சென்று கொண்டே இருக்கிறதாம். மேலும் சங்கரரின் பிறந்த இடமான காலடியைப் பற்றி இவர் எழுத முற்பட்டபோது அந்தக் காலடிக்கு இவர் காலடி வைக்கவேண்டிய சிறப்பு நிகழ்ந்துள்ளது.

தண்ணீர் மலை முருகன் வரும்போது தேங்காய்கள் உடைக்கின்ற நிகழ்ச்சி இவருக்கு வேறுபட்ட அனுபவத்தைத் தந்துள்ளது. அதாவது தேங்காயின் இளநீர் கொண்டு தண்ணீர் மலையான் வரும் வழி முழுவதும் கழுவப் படுவதாக ஆசிரியர் வரைகிறார். இவ்வாறு அருள் அனுபவம் கலந்து இந்நூல் செய்யப் பெற்றுள்ளது.

நகரத்தார்களின் இனிய முருக பக்தியும், அவர்கள் அயல் நாடுகளுக்குச் செல்கையில் பழனியாண்டவனை வழிபட்டதிறமும், அன்னதான மடம் ஏற்படுத்திய அறக் கொடையும், பழனி பாதயாத்திரை பற்றிய வரலாற்று ஆவணங்களும் இந்நூலின் சக்தியைப் பெரிதும் கூட்டுகின்றன.

முருகப் பெருமான் பற்றிய ஒரு கலைக்களஞ்சியம் என்று சொல்லத்தக்க அளவில் நல்ல அருமையான வடிவில் அழகன் முருகனுக்கு பல்லாண்டு பாடும் சிறப்பான நூல் இது.

நம்மைப்போன்றோர் கரங்களில் இருந்தால் நமக்கு பயம் அணுகாது. படபடப்பு அணுகாது. துணை இதுவே ஆகும். இந்நூல் கொண்டு சங்கரர் என்ற குருவை இனம் காண முடியும். அவரின் அத்வைத தத்துவத்தை அறிந்து கொள்ளமுடியும். அதன் வழி நடக்க முடியும். முருகனின் பாதத் துளிகளைத் தலைமேல் கொள்ளமுடியும். வடமொழியை வணங்க இயலும். தமிழால் வாழ்த்த இயலும். புராணம் கற்கலாம். புனிதம் கற்கலாம். இன்னும் எத்தனையோ எத்தனையோ பயன்கள் தரக்கூடிய கிட்டக் கூடிய கிடைத்தற்கரிய பொக்கிஷம் இந்நூல்.

என்றும் இதுபோன்ற பல நல்ல பணிகளை ஆசிரியர் செய்ய கந்தக்கடவுள் அருள் துணை கூட்டும்.

நூல் விபரம்

விற்பனை உரிமை. பழனியப்பா பிரதர்ஸ், கோனார் மாளிகை, 25. பீட்டர்ஸ் சாலை, சென்னை, 14

நூலின் விலை ரு 600

ஆசிரியர் முகவரி இராமநாதன் பழனியப்பன், ஸ்ரீ புவனேஸ்வரி, 3362ஏஎக்ஸ் 11ஆவது மெயின் ரோடு, அண்ணாநகர் மேற்கு, செனனை 40, 04426211194

Series Navigationமொட்டுக்கள் மலர்கின்றனமலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை -17
author

முனைவர் மு. பழனியப்பன்

Similar Posts

Comments

  1. Avatar
    n.mohanasundaram says:

    திரு.இராமநாதன் பழனியப்பன் அவர்கள் எழுதிய“திருச்செந்தூரின் கடலோரத்தில்” நூல் விமர்சனம் கண்டேன். மகிழ்ந்தேன்.

    மேற்படி பெருமைக்குரிய நூலை கையில் வைத்திருக்கும் பெரும் பாக்கியம் கொண்டவர்களில் நானும் ஒருவன்.

    பரந்து விரிந்த கடலைப்பார்க்கும் ஒரு குழந்தையின் வியப்பும், பிரமிப்பும், கரையின் அலையில் கால் வைத்து மகிழும் நிலைப்பாடுமே என்னுள் உள்ளது. உங்களின் அற்புதமான விமர்சனத்தைப்படித்த பின்பு கொஞ்சம் கொஞ்சமாக கடலில் இறங்கி முத்தெடுக்க வேண்டும் என்ற முனைப்பும் நினைப்பாடுகிறது. முருகனருள் கூடவேண்டும்.

    இவ்வளவு பெரிய புத்தகத்தை எழுத வேண்டுமென்றாலும் அல்லது விமர்சனம் செய்ய வேண்டுமென்றாலும் எந்த அளவிற்கு அறிவும் ஆற்றலும் முயற்சியும் உழைப்பும் வேண்டுமென்பதை உணர முடிகிறது.

    “திருச்செந்தூரின் கடலோரத்தில்” என்ற இந்த அரிய நூல், அனைத்து நூலகங்களிலும் வாங்கி வைத்து பலரும் படிக்க வழி செய்யப்படவேண்டும் என்பது எனது ஆசை.

    நன்றி.
    ந.மோகனசுந்தரம்
    திருநெல்வேலி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *