வைரமுத்து படைப்புகளில் கிராமப்புற மருத்துவம்

This entry is part 1 of 35 in the series 11 மார்ச் 2012

ந.லெட்சுமி

முனைவர் பட்ட ஆய்வாளார்,

தமிழ்த்துறை,

தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி,

திருச்சி 2.

முன்னுரை

ஆதிகாலத்தில் காடுகளில் சுற்றித் திரிந்த மனிதன் ஓரிடத்தில் நிலையாக தங்கி தன் இனத்தை நிலை நிறுத்தினான். மனிதன் தன் தேவையினை இயற்கையிடம் பெற்று நிவர்த்தி செய்து கொண்டான். மனிதர்களுக்கு ஏற்படும் நோய்களுக்கு மருத்தவம் தேட முயன்ற மனிதன் இயற்கையில் கிடைக்கும் செடி, கொடி, காய், கனி, மரப்பட்டை போன்றவற்றிலிருந்த மருந்துகளைக் கண்டறிந்து தனக்கு ஏற்பட்ட நோய்களைத் தீர்த்துக் கொண்டான். வைரமுத்து படைப்புகளில் கிராமிய மருத்துவம் பற்றி ஆய்வு செய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

அக்கால மனிதன் கண்டறிந்த மருத்துவ முறைகள் மரபுவழிப்படி இன்றளவும் தமிழக கிராமங்களில் பின்பற்றப்பட்டு வருகின்றன. இன்றும் கிராமங்களில் வீட்டு வைத்தியம், கைவைத்தியம், பாட்டி வைத்தியம் போன்ற மருத்துவ முறைகள் பயன்பாட்டில் இருப்பதைக் காணலாம். தலைமுறை தலைமுறையாக நாம் தெரிந்து கொண்ட அனுபவத்தின் உதவியோடு எளிய முறைகளில் வீட்டிலேயே நோய்களைப் போக்கிக் கொள்ளும் மருத்துவ முறையை நாட்டு மருத்துவம் , (ஸ்டட்மேன், மருத்துவ அகராதி, பக்.42.) .என விளக்கம் தருகிறது ஸ்டேட்மேன் மருத்துவ அகராதி.

மனிதன் இயற்கையில் கிடைக்கும் செடி, கொடிகள், காய்கனிகள், மலர்கள், கிழங்குகள் மற்றும் கடையில் கிடைக்கக்கூடிய பொருட்கள் போன்றவற்றைப் பயன்படுத்தித் தனக்கு ஏற்படும் நோய்களைத் தீர்க்கும் முறையை நாட்டு மருத்துவம் எனலாம்.

வைரமுத்து அவர்கள் தம் கவிதையில், மனிதன் உயிர்வாழ சுவாசம் தேவை. நோயில்லா உடலும், ஆரோக்கியமான உள்ளம் ஏற்படுவதற்கு முதன்மையான மருத்துவ செயல்பாடு சுவாச முறையே ஆகும். சுவாசிக்கும் முறையினை வைரமுத்து கீழ்காணும் கவிதை வழியே புலப்படுத்திக் காட்டுகின்றனர்.

வாய்வழி சுவாசிக்காதே

காற்றை

வடிகட்டும் ஏற்பாடு

வாயில் இல்லையென்று

சொல்லுங்கள்

சுவாசிக்கவும்

சுத்திரம் உண்டு

எத்தனை பாமரர்

இஃதறிவார்

சுவாசிக்கும் சுத்தக்காற்று

நுரையீரலின்

தரை தொட வேண்டும்?

(வைரமுத்து, வைரமுத்து கவிதைகள், பக்.94.)

என்று சுவாசம் பற்றி மருத்துவ உண்மையினை எடுத்துரைப்பதோடு சுவாசிக்கும் முறையினையும் தெளிவுபட எடுத்துக்காட்டுகின்றார்.

சமுதாயத்தில் வாழ்கின்ற மனிதர்கள் பல்வேறு நோய்களுக்கு உட்பட்டு துன்பம் அடைகின்றனர். நோய் வருவதற்கான வழிமுறைகளை, மனித சமுதாயம் உணர்ந்து நோய்களைத் தடுக்க முன்வரவேண்டும். தனக்கு ஏற்பட்டிருக்கும் நோயின் தன்மையினை முன்கூட்டியே நாம் சில அறிகுறிகளை வைத்து தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை,

ஒரு கால் வீக்கம்

உடனே கவனி

யானைக்கால் அறிகுறி

இருகால் வீக்கம்

இப்போதே கவனி

சிறுநீரகத்தில்

சிக்கல் இருக்கலாம்.

வாயில் என்ன

ஆறாத புண்ணா?

மார்பகப் பரப்பில்

கரையாத கட்டியா?

ஐம்பது தொட்டதும்

பசியே இல்லையா ?

சோதிக்கச் சொல்லுங்கள்

அறியாத புற்றுநோய்

ஆனா, ஆவன்னா எழுதியிருக்கலாம்

(வைரமுத்து, வைரமுத்து கவிதைகள், பக்.102.)

என்கிறார். நோயின் தன்மைக்கேற்பத் தடுக்கும் வழியையும், மருத்துவர்கள் மனிதர்களுக்குச் சொல்லித் தரவேண்டும் என வலியுறுத்துகின்றார்.

நோய்கள் உருவாக முதற்காரணமாக அமைவது கட்டுப்பாடற்ற உணவு முறையாகும். அளவான உணவு உண்ணும் முறையே ஆரோக்கியமான வாழ்விற்கு வழிவகுக்கும் என்பது வைரமுத்துவின் அசைக்க முடியாத கருத்தாகும். மருந்தை உணவாக உட்கொள்ளாமல் உணவை மருந்தாக உட்கொள்ளும் முறையினை மானிடச் சமூகம் உணர வேண்டும் என்ற அறிவுறுத்தல்களை தம் படைப்பு வழியே பதிவு செய்கின்றனார்.

உணவுமுறையை திருத்துங்கள்

தட்டில் மிச்சம் வை

பசியோடு உட்கார்

பசியோடு எழுந்திரு

. . . . . . .

அவிக்காத காய்களே

அமிர்தம் என்று சொல்லுங்கள்

பச்சை உணவுக்குப்

பாடம் நடத்துங்கள்

மருந்தை உணவாக்காதே

உணவை மருந்தாக்கு.

(வைரமுத்து, வைரமுத்து கவிதைகள், பக்.112.)

எனும் கவிதை அடிகளில் நாம் உணவையே மருந்தாக அமைத்து உண்ண வேண்டும் என்கிறார் கவிஞர் வைரமுத்து.

கள்ளிக்காட்டு இதிகாசம் எனும் புதினத்தில் பேயத் தேவரின் மகள், மின்னல் ஆவார். மின்னலின் குழந்தைக்கு திடீரென ஒரு நாள் காய்ச்சல் ஏற்படுகிறது.

காய்ச்சலைப் போக்குவதற்கு `மஞ்சப்பத்து போட்டும் காய்ச்சல் குறையவில்லை. இந்நிலையில் அக்குழந்தையின் காய்ச்சலைப் போக்க முருகாயி மூலிகை தைலம் தயார்படுத்துவதை இப்புதினத்தில் புலப்படுத்துகின்றார்.

தேங்கா எண்ணெயில சுடத்தக் காய்ச்சி

ஒரு தைலம், வெள்ளப்புடு மஞ்சளத் தட்டிப்

போட்டு வேப்பெண்ணை காய்ச்சி ஒரு தைலம்

( வைரமுத்து, கள்ளிக்காட்டு இதிகாசம், பக்.97.)

என்று குழந்தையின் காய்ச்சலைப் போக்க உதவும் மருத்துவப் பொருளான தேங்காய் எண்ணை, சுடம், வெள்ளைப்புண்டு, மஞ்சள், வேப்ப எண்ணெய் போன்றவை பயன்படுத்துவதை விளக்கிக் காட்டுகிறார். குழந்தைகளின் வயிற்றின் உள்ளே புழு, புச்சிகள் தோன்றக்கூடும். இந்நிலையினால் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் உணவு ஆதாரத்தினை புழுக்கள் உண்டுவிடும். இதனால் குழந்தையின் உடல் வளர்ச்சி குறைபட்டு போய்விடும். மேலும் வயிற்றிலுள்ள உணவுப் பொருட்கள் சரியான முறையில் செரிக்காமல் போய்விடும். இப்புழு புச்சிகளை அழிப்பதற்கு கிராமப்புறங்களில் வேப்ப எண்ணெய் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தி வந்துள்ளமையைச் சுட்டிக்காட்டுகிறார். கருவாச்சியின் குழந்தை அழகு சிங்கத்திற்கு வயிற்றுப் புச்சியினை அழிக்க மேற்கொண்ட மருத்துவ முறையினை பின்வருமாறு சுட்டுகின்றனர்,

பிள்ளைக வயித்துல புழுவுக புச்சிக இருந்தால்

பசி குடுக்காது. தவிரவும் குடுக்கிற பால் புழு புச்சிக

குடிச்சுட்டுப் போயிரும். அதுக்குத்தான்

வேப்பெண்ணெயச் சுடவச்சு எளஞ் சுட்டுல

புகட்டிவிட்டா பிள்ளைக்கு

(வைரமுத்து, கருவாச்சிக் காவியம், பக்.118.)

என்பதன் மூலம் வயிற்றுப் புச்சியை அழிக்க வேப்ப எண்ணெயை உண்டு வந்தால் புழு, புச்சிகள் அழிந்து உடல் நலமடையும் நிலையினை உணர்த்திக் காட்டுகின்றனர்.

விலங்குகளுக்கு மேற்கொள்ளும் மருத்துவம்

வேட்டையாடி காடுகளில் திரிந்த மனிதன் விலங்குகளை விவசாயத்திற்கு பயன்படுத்தியமையே மனித நாகரிகத்தின் முதல்படி நிலை எனலாம். காடுகளில் சுற்றித் திரிந்த மருமகளை வேளாண் தொழிலுக்கு உட்படுத்தி வீட்டில் வளர்த்து வந்தனர். பின்பு மாடுகளையும் தங்கள் சக உறவுகளாக எண்ணி வந்தனர். மாடுகளை பராமரித்தல், பாதுகாத்தல் போன்றவைகளை மிக கவனமாகவே கையாண்டு வந்தனர். மாடுகளுக்கும் ஏற்படும் நோயை தமக்கு வந்த நோய் போல் எண்ணி குணப்படுத்தி வந்தனர்.

மாடுகள் மேய்ச்சல் நிலங்களில் மேய்ந்து கொண்டிருக்கும்பொழுது விஷப் புச்சிகள் தீண்டுவது இயல்பாகும். அவ்வாறு விஷம் தீண்டிய மாட்டை காப்பதற்கு சில மருத்துவ முறைகளை கிராம மக்கள் அறிந்திருந்தனர். பேயத்தேவர் விஷம் திண்டிய தன் மாட்டினை காக்க பின்பற்றும் மருத்துவ முறையினை கள்ளிக்காட்டு இதிகாசத்தில் பின்வருமாறு வைரமுத்து எடுத்துக்காட்டுகின்றனர்.

எலே மொக்க! எருக்கெல கொண்டாடா . . .

அந்த ஆமணக்குல ஒண்ண ஓடி என்று

உத்தரவிட்டவர் குப்பமணித் தழையைப்

பறித்துக் கொண்டே வேப்பம்பட்டை தட்ட

ஓடினார். எல்லாவற்றையும் ஒன்று கூட்டிக்

கமலைக்கல்லில் தண்ணீர் ஊற்றித் தட்டினார்.

மாடு புரண்டு புரண்டு படுத்தது. தலை ஒரு பக்கமாக இழுக்கத் தொடங்கியது

(வைரமுத்து, கள்ளிக்காட்டு இதிகாசம், பக்.138.)

என்பதன் வழியே மாடுகளின் உயிரைக் காக்க மேற்கொள்ளும் மருத்துவ முறையைக் காட்டுகிறார். எருக்க இலை, ஆமணக்கு, குப்பைமேனி, வேப்பம்பட்டை, மனித சிறுநீர் போன்றவைகள் விஷங்களை முறிக்கும் தன்மை கொண்ட மருந்து பொருளாக விளங்குவதை எடுத்துரைக்கின்றார்.

முடிவுரை

கிராமப்புற மக்கள் தாங்கள் கையாளும் மருத்துவ முறைகளையும், மருத்துவ குணம் படைத்த மருந்து பொருட்களையும், தங்களையும், தங்களைச் சார்ந்த விலங்கினங்களையும் காப்பதற்காகவும் பயன்படுத்தி வந்துள்ளனர். இயற்கை வழி கிடைக்கும் தாவரங்களையும் தங்கள் வாழ்வில் பயன்படுத்தும் உணவுப் பொருட்களையும் மருந்துப் பொருளாகக் கொண்டுள்ளனர் என்பதை வைரமுத்து படைப்புக்கள் எடுத்துக்காட்டுகின்றன.

Series Navigationஅகநானூற்று ஔவையார் பாடல்களில் உளவெளிப்பாடுகள்
author

ந.லெட்சுமி

Similar Posts

2 Comments

  1. Avatar
    natarajan says:

    It is unfortunate -we are losing readers !!Good sites are not visited and encouraged.My cousin in Australia introduced this site to me living in Chhattisgarh and left Tamil Nadu 60 years back. I am a fan of Vaira muthu

  2. Avatar
    Dr.G.Johnson says:

    An interesting study on POET VAIRAMUTHU’S poems in which village medicines are depicted in poetic form. The writer has done research on the subject in detail. Though not all are acceptable as scientific, VAIRAMUTHU has included them as they are believed in the villages. For example the worms in our intestines do not drink the milk as stated in one poem. It is true that our forefathers before the advent of modern madicine had their own ways of preventing and treating diseases through experience. They used whatever herbs, leaves, flowers, barks and roots available in our environment for their preparation of native medicines. Unfortunately it was done as a family practice of the village VAIDIYAS. Hence there were no proper scientific researches done on their useful discoveries as it was done in the west.For example, the RED INDIANS were using CHINCONA bark for curing malaria long before the discovery of QUININE which was extracted from it. We should not blindly say that native medicine is not scientific. Our ancesters were using them for generations in the past when modern medicine was in its infant stages. Instead we should do proper research and make them popular and acceptable for all. A poet mentioning the medicinal properties of village herbs is fantastic. And the writer doing research on this subject is even more fantastic! Congratulations NA.LETCHUMI!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *