பாசாவின் கர்ண பாரம்

This entry is part 33 of 40 in the series 1 ஏப்ரல் 2012

வடமொழி நாடக ஆசிரியர் பாசாவின் பதிமூன்று நாடகங்கள் கேரளத்தைச் சேர்ந்த கணபதி சாஸ்திரியால் கண்டு பிடிக்கப் பட்டு அறிமுகம் செய்யப் பட்டுள்ளன.பாசாவின் காலத்தைப் பற்றிய கணிப்புகள் பலவாக இருந்தாலும் சாகுந்தல காளிதாசனுக்கு முற்பட்டவர் என்பதில் கருத்து வேறுபாடில்லை. மாளவிகாகினிமித்திரத்தில் பாசாவைப் போற்றி காளிதாசன் எழுதியுள்ள குறிப்பு இதை உறுதி செய்கிறது. நல்ல சிற்பங்களையும் ,ஓவியங்களையும் செதுக்கிய கலைஞனை விட அவன் படைப்புகளே சாஸ்வதமாகி நிற்கின்றன. இந்தியச் சிந்தனையைப் பொறுத்தவரை படைப்பாளியின் சுய வரலாற்று விளக்கங்கள் முக்கிய இடம் பெறாமலே போயிருக்கின்றன. பாசாவும் இதற்கு விதி விலக்கல்ல.நவீன நாடக உலகத்தவராலும் பேசப்படும் பாசாவின் நாடகங்கள் இராமாயண , மகாபாரதப் பாத்திரங்களை பல மாறுபட்ட கோணங்களில் காண்பதாகின்றன. அவருடைய நாடக வரிசையில் கர்ணபாரம் இரண்டாவது நாடகமாகும். கவச குண்டலங்களை கொடை யாகத் தருகிறேன் என்று வாக்கு தந்து விட்ட பிறகு அவற்றைத் தன்னிடமே வைத்திருப்பதை கர்ணன் பாரமாகக் கருதுவதால் கர்ண பாரம் என்ற தலைப்பு பொருத்தமுடையதாகும் .கர்ணன் என்ற பெயரே கவசத்தையும், குண்டலத்தையும் நினைவூட்டும் அளவிற்கு பரிச்சயமானவன். தேரோட் டியின் வளர்ப்பு மகனாகப் பல துன்பங்களை எதிர்கொண்டவன். தன்னை ஒரு வீரனாக நில நிறுத்திக் கொள்ள விரும்பி பொய் சொல்லி வித்தைகள் கற்று உரிய நேரத்தில் பயன் படாமல் போகும் சாபம் பெற்றவன். போருக்குப் புறப்படும் பொழுதில் தனக்கு இடப்பட்ட சாபம் நிழலாடுகிறது. தன் தேரோட்டியான சால்யனிடம் தன் சஞ்சலத்தை வெளிப் படுத்துகிறான். தன்னை சமாதானப் படுத்தும் சால்யனிடம் அர்ச்சுனன் உள்ள இடத்திற்கு த் தேரச் செலுத்துமாறு கூறுகிறான்.அப்போது ” கர்ணா ! உன்னிடம் மிகப் பெரிய கொடை ஒன்றைக் கேட்டு வந்துள்ளேன் ” என்றொரு குரல் எழுகிறது.வேறு வேடத்தில் வந்த இந்திரனை கர்ணன் வரவேற்றுப் பேசுகிறான். இது இந்திரனுக்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறது. “வரவேற்கும் கர்ணனிடம் நான் பதிலுக்கு எதைச் சொல்வது?’நீண்ட நாள் வாழ்க ’ என்று வாழ்த்தினால் அவனுக்கு நீண்ட வாழ்வு கிடைத்து விடும். வாழ்த்தாவிட்டால் அவன் என்னை அறிவற்றவனாக நினைக்கக் கூடும்.இரண்டையும் தவிர்க்க நான் என்ன செய்வது ” என்று மனதுக்குள் குழப்பமேற்படுகிறது.எனினும் அதிலிருந்து மீண்டு “உன் புகழ் சூரியனைப் போல , சந்திரனைப் போல, இமயத்தைப் போல , கடலைப் போலத் தழைக்கட்டும் ” என்கிறான். இந்த வாழ்த்துதல் கர்ணனுக்கு புதியதாகத் தெரிகிறது. நீண்ட காலம் வாழ்க என்பதை விட இது மேன்மையானதா என்று தோன்றுகிறது. விரும்பும் பொருளைக் கேட்குமாறு அந்தணனிடம் சொல்கிறான்.பதில் மௌனம் என்பதால் தானே முன் வந்து ஆயிரக் கணக்கான பசுக்கள் ,குதிரைகள், யானைகள், பொன் என்று பட்டியலிட்டு அதற்கும் பதில் கிடைக்காத போது தன் தலையையும் தருவதாக கூறுகிறான். கொடை எதையாவது தந்தே ஆக வேண்டும் என்னும் சிந்தனையில் யாராலும் அழிக்க முடியாத தன்னோடு பிறந்த கவச, குண்டலங்களைத் தருவதாகவும்,சொல்ல தான் வேண்டி வந்தது கிடைத்ததாக அந்தணன் மகிழ்ந்து அவற்றைத் தருமாறு கேட்கிறான்.
இக்கணத்தில் கர்ணனின் மனதில் ஐயம் எழுகிறது.இதுதான் அந்தணன் விரும்பியதா? இதுவும் கண்ணனின் கணக்கற்ற லீலைகளில் ஒன்றாக இருக்குமோ என்ற எண்ணம் ..இருந்து விட்டுப் போகட்டும். இம்மாதிரியான எண்ணம் எனக்குள் ஏற்பட்டிருக்கக் கூடாது என்று தன் மனதோடு மோதுகிறான். கொடைப் பொருளப் பெற்றுக் கொள்ளும் படி கர்ணன் சொல்ல தேரோட்டி சால்யன் குறுக்கிட்டு கவச குண்டலங்களைத் தர வேண்டாமன இறைஞ்சுகிறான்.தன் செயலிலிருந்து தன்னைத் தடுக்க வேண்டாம் என்பதை
“பெற்ற அறி ஒரு காலத்தில் நம்மை விட்டுப் போகிறது.
ஆழமான வேர்களைக் கொண்ட மரங்கள் விழுந்து விடுகின்றன.
ஆறுகளில் தேக்கப் பட்ட தண்ணீர் வற்றிப் போகிறது.
ஆனால் தியாகங்களும் தர்மங்களும் அழிவின்றி நிலைக்கின்றன.
என்ற விளக்கம் தந்து விட்டு கவச குண்டலங்களைத் தருகிறான். அந்தணன் தன் கருத்து நிறைவேறிய மகிழ்ச்சியில் புறப்படுகிறான். சால்யன் இந்திரன் அந்தணனாக வந்து ஏமாற்றியதைத் தெரிவித்து மனம் வருந்துகிறான். கர்ணனுக்கு இக்கருத்தில் உடன்பாடில்லை.தேவர் தலைவனே தன்னிடம் வந்தது தனக்குப் பெருமை தருகிற செயல் எனவும் சாதாரண மனிதனுக்கு இதை விட வேறு என்ன வேண்டும் என்று தன் வெற்றிக்கு வேறு முகம் காண்கிறான். அர்ச்சுனன் இருக்குமிடத்திற்குத் தேரைச் செலுத்தும்படி வேண்டுகிறான். எதிரிகளின் பாசறையிலிருந்து கிளம்பும் சங்கொலியின் முழக்கத்தைக் கேட்டபடி தன் முடிவை உணர்ந்தும் ஒரு வீரனாக அதை எதிர் கொள்ளும் நிலையில் கர்ணாபாரம் நிறைவடைகிறது.
இம்மாதிரி நாடகங்களைப் படைக்கும் படைப்பாளி சில சம்பவங்களை மூல கதையோடு மாறுபட்ட வகையில் அமைப்பது இயல்பாகிறது.பாசாவின் படைப்பில் இது மிகச் சிறிய நாடகமாகும். நாடகத்தில் பெண் பாத்திரங்கள் இல்லை. அவல முடிவு கொண்ட படைப்புகளை படைப்பாளியும் ,படிப்பவரும் சுலபமாக ஏற்றுக் கொள்வதில்லை.எனவே அவை எண்ணிக்கையில் மிகக் குறைவாக உள்ளன.
அவலமான முடிவு கொண்ட மிக மிகச் சில வட மொழி நாடகங்களில் இதுவொன்றாகும்.

Series Navigationநட்புறவு – கலீல் கிப்ரான் (மொழி பெயர்ப்பு)இறக்கும்போதும் சிரி
author

முனைவர் தி.இரா மீனா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *