விமோசனம்

This entry is part 9 of 40 in the series 1 ஏப்ரல் 2012

அடியே அலமு! மளிகை ஐட்டங்களுக்கு லிஸ்ட் போட்டுட்டியோன்னோ? குடு போய் வந்துட்றேன். அப்புறம் நான் சொல்றாப்பல நடந்துக்கோ.இனிப்புக்கு கேசரி கிளறிடு. போறும். வேலைக்கு சுலுவு. வேணும்னா முந்திரி பருப்பை சித்த உபரியா சேர்த்துக்கோ. பசு நெய்யை தளற வார்த்துக்கோ. .கையிலெடுத்தா நெய் சொட்டணும்.

“சும்மா படுத்தாதேள்.. நம்மாத்து கொழந்தைகள்னா வர்றது?. கேளுங்கோ! அதிரசம்,பாசந்தி, கைமுறுக்கு, அப்புறம் ‘மலாய்கஜா’ன்னு பால்கோவால ஒரு ஐட்டம் செய்வேனே.போன தடவையே மஞ்சுஆசைப்பட்டா. பதம் இளகலா பிசுபிசுன்னு வரணும். அவளுக்கு சரியாவே வரலியாம்.. வர்றச்சேஒரு கிலோ பால்கோவா வாங்கிண்டு வாங்கோ..”

அவளுக்கு முகத்தில் பெருமை வழிந்தது.

“ஏன்னா! அவல் பாயாசம்னா மீரா ஆத்துக்காரர் உயிரை வுட்டுடுவார். மறக்காம அவுல் வாங்கி வந்துடுங்கோ!.”

”அடி அசடே!உசுர வாங்கற ஐட்டமாச் சொல்லிண்டிரு எல்லாத்துக்கும் நீ ஒருத்திதாண்டி மல்லுக் கட்டணும். நம்மாத்து பொண்டுகள் அடுப்படியில ஒரு ஹெல்ப்பும் பண்ண மாட்டா. புரியறதோன்னோ?. வருஷா வருஷந்தான் அந்தக் கூத்தைப் பார்த்திண்டு வர்றேனே.”

“இருக்கட்டுமே, யாருக்குச் செய்றேன்?”.

“நீ இன்னும் சின்னப் பொண்ணு இல்லடீ! அம்பத்தெட்டு வருஷக் கிழம் ப்ளட் ப்ரஷரும், ரத்தத்தில வண்டியாய் சர்க்கரையும் வெச்சிண்டிருக்கிற நோயாளி. புரிஞ்சி நடந்துக்கோ!.”

அவர் தன் ஸ்கூட்டிபெப்ஐ. வெளியே தள்ளிக்கொண்டு வந்து, ஸ்டார்ட் பண்றப்ப, திரும்பி, வீட்டைத் தன் குலப் பெருமை. மாதிரி பார்த்தார். இவர் தலையெடுத்தப் பிறகு யோசித்து யோசித்துத் தொடுத்த பதினைந்து சதுர வீடு. ஒவ்வொரு வருஷமும் சங்கராந்தி கழிச்சி வரும் முதல் சனி, ஞாயிறுகளில் இந்த வீடு நிறைய மனுஷாள் கூட்டம் புரளும்.. ஸ்ரீரங்கத்திலே கொடுத்திருக்கிற இரண்டு பெண்கள்,மாப்பிள்ளைகள், பேரன்,பேத்திகள்.,சென்னையில் டி.சி.எஸ்.ஸில் வேலை பார்க்கும் ஒரே மகன், என்று எல்லோரும் வந்துச் சேர,ஒரு கெட்டுகெதர் விழா மாதிரி வீடு அமளி துமளிப் படும்..

மூன்று நாள் திருவிழா.அது முடிந்ததும், எல்லாம் பறந்துப் போய்விட, நாடகத்தின் அடுத்தக் காட்சிப் போல, பழையபடி வீடு வெறிச்சொடிப் போய்…,கிழங்கள் இரண்டும் மூலைக்கொன்றாய் உட்கார்ந்து மோனத்தவம் புரிய, பயமுறுத்தும் நிசப்தம்., இருட்டைப் போல சட்டென்று வந்து ஒட்டிக் கொண்டுவிடும். அப்புறம் தினத்துக்கும் காயத்ரி மந்திரமும், ஸ்ரீஆண்டாள் பாசுரங்களும் தான் துணை.

ஆயிற்று வெள்ளிக் கிழமை சாயரட்சைக்கெல்லாம் பட்டாளம் வந்து இறங்கி விட்டது.குறுக்கும்நெடுக்கும்பேரன் ,பேத்திகளின் ஓட்டங்களுமகூச்சல்களும்…,ஆலமரத்து பறவைக் கூச்சல்கள் மாதிரி சளசள வென்று பேச்சுகள்,சிரிப்புகள். மாப்பிள்ளைகள் இரண்டு பேருக்கும் அரசங்க உத்தியோகம். வருஷம் பூராவும் குதிரைக்குக் கடிவாளம்

போட்டதுப் போல,போறது, வர்றது, போட்டதைத் தின்றுவிட்டு தூங்கறது என்று நாக்கு செத்துக் கிடக்கிற நடுத்தரவர்க்கம். இந்த இரண்டு நாளும் மாமியார் ஆத்துல வயணமாக சாப்பிட்டு அனுபவிக்கணும்னு வந்த மாதிரி சின்ன மாப்பிள்ளை வரும் போதே மெனு லிஸ்ட்டை ஒப்பிவிக்க ஆரம்பித்து விட்டார்.

“மாமி! கடம்பூர் போளின்னு மெத்து மெத்துன்னு சூப்பர் ஐட்டம் ஒண்ணு செய்வேளே. அத செய்யுங்கோ. அப்புறம் நாளைக்கு கார்த்தால இட்லிக்கு தேங்காய் சொதி குழம்பு. சரிதானே. மதியம் கத்திரிக்காய் எண்ணைக் காய் குழம்பு.. மாமாகிட்டச் சொல்லி நல்லா இலவம்பாடி முள்ளு கத்திரிக்காய்யா பார்த்து வாங்கச் சொல்லுங்கோ. அப்புறம் தேங்காய் பாலும் ,எலுமிச்சை சாறும் செர்த்து பருப்பு ரசம் வெப்பேளே. ஆமா மீரா இந்தாத்துப் பொண்ணுதானே? உங்க கை பாகம் ஒண்ணு கூட வரலியே அவளுக்கு..”

அலமு வெட்கச் சிரிப்புடன் முந்தானையை இழுத்துப் போர்த்திக் கொண்டு நகர்ந்தாள். பேரன்,பேத்திகள், பாட்டீ..பாட்டீ!. என்று அவளைப் பிய்த்து எடுத்தன.. பெண்களும் அம்மா..அம்மான்னு த்த்தம் தேவைகளுக்காக நச்சரித்துக் கொண்டிருக்க, அலமு காலில் சக்கரம் கட்டிக் கொண்டாள். பிள்ளையாண்டானது தனி உலகம், வந்தவுடன் நாலு வார்த்தை பேசியாயிற்று. தன் அறையில் தொம் தொம்னு ஸ்டீரியோவின் ஸ்பீக்கரை அலறவிட்டுட்டு, உட்கார்ந்துக் கொண்டு இர்விங் வாலஸோ,ஹெரால்டு ராபின்சோ, அல்லதுசேஸ் நாவலோ? .மூழ்கிக், கிடக்கிறான்

அலமுவுக்கும் அவருக்கும் மனசுக் கொள்ளா சந்தோஷம் வழிகிற்து.பின்னே? ஊரே பொறாமைப் பட்றாப்பல பிள்ளைகள் அமோகமா வாழறது ஒரு கொடுப்பினைதானே?. வெள்ளிக்கிழமை மதியத்திலிருந்தே எரியத் தொடங்கியிருந்த இந்த அடுப்புக்கும் ,அலமுவுக்கும் ஓய்வில்லை.. நேயர் விருப்பம் போல, அவரவர் டேஸ்டுக்குப் பட்சணங்கள், குழம்பு வகைகள், பொரியல், அவியல், கூட்டு, பச்சடி, அப்பப்பா..! அலமு திரட்டுப் பாலெடுத்து ஏதோஒரு இனிப்பு வகைக்கு முயற்சித்துக் கொண்டிருந்தாள். வியர்வை கொட்டுகிறது., ஜாக்கெட் தொப்பலாய் நனைந்து விட்டது.. எல்லோரும் அங்கே டி.வி.யில் லயித்துக் கிடக்கிறார்கள். அடுத்த இரண்டு நாட்களும் ஏகப்பட்ட புரோக்ராம்கள் இருக்கு. லேட்டஸ்ட்டு ஆங்கிலப் பட கேஸட்டுகள் வேறு ரெடியாய் காத்திருக்கின்றன.

“அம்மா.! அம்மா! இங்கே வாயேன்.சித்த நேரம் வா! விவேக் காமெடியப் பாரேன். அப்புறம் செஞ்சிக்கலாம் வாம்மா1.”

மீராவும் சின்ன மாப்பிள்ளையும் போய் அலமு கத்தக் கத்த அடுப்படியிலிருந்து இழுத்துக் கொண்டுவந்தார்கள

“ஐயோ! விட்றீ! வாணாம்டீ! அடுப்புல அப்படியப்படியே விட்டுட்டு எப்படி வர்றது? ஐயோ மாப்பிள்ளை! வாண்டாம் வுட்ருங்கோ!.”

“சித்த நேரம் இப்படி உட்காருங்கோ மாமி! அடுப்படியில ஒண்ணும் முழுகிப் போயிடாது.”

அவளை அழுத்தி உட்கார வைத்தார்கள். ஐயோ!அடுப்பில எண்ணைச் சட்டிய ஏத்தியிருக்கேனே. நெளிந்துக் கொண்டிருந்தாள். விவேக் ஒரு பெண்ணிடம் ஏதோ சேட்டை பண்ண, அங்கே குபீரென்று சிரிப்பு வெடித்தது அந்த இடைவெளியில் அலமு ஓசைப் படாமல் நழுவினாள்..

உள்ளே அவர் உளுந்து மாவைக் கொஞ்சம் கொஞ்சமாய் எடுத்து வடை தட்டி லாவகமாய் வாணலியில் இட்டுக் கொண்டிருந்தார்.

“பகவானே!இதென்னக் கூத்து? ஆம்பளையா லட்சணமா ஹால்ல போய் உட்காருங்கோ.! கையை எடுங்கோ.”

அவர் கையை எடுக்கவில்லை.

“அலமு! இது தான்டீ லட்சணம். இதெல்லாம் உன் பாடுன்னு நானும் போய் உட்கார்ந்துட்டேன்னா, அதுதான்டீ அவலட்சனம்.. ஆமா இன்னும் என்ன ஆவணும்?”

“இதோ எல்லாம் ஆயிடுத்து. தேன்குழல், மலாய்கஜா, கத்திரி எண்ணைக்காய் குழம்பு, கூட்டு, பொரியல்.வடை, அவல் பாயாசம், அப்பளம், போதுமில்லையோ?.. இதோ ஆயிடுத்து உளுந்து வடைய தட்டி தயிர்லப் போட்டு தாளிச்சிட்டா இலையைப் போட்டுடலாம்.”

“நோக்கு எத்தனை தடவைதான் சொல்றது? மஞ்சுவையோ, மீராவையோ துணைக்கு வெச்சிக்கோன்னு. பார் எவ்வளவு டயர்டா ஆயிட்ட?.”—அவருக்குக் கஷ்டமாக இருந்தது.

“நான் மாட்டேன்னு சொல்றாப்பல பேசுவேளே. விட்ருங்கோ. அவாள்லாம் யாரு?நம்மாத்து பொண்டுகள். ஆஞ்சி ஓஞ்சி வந்திருக்கிற்துகள் ,எதுவும் வில்லங்கமா பேசிப்புடாதேள்.”

“என் வாயை அடைச்சுடு.”

வாசற்பக்கம் நிழலாடியது.. மீரா ஆத்துக்காரர்.

“மாமி!ஒத்த மனுஷியா எதுக்கு சிரமப் பட்றேள்?. ஒண்ணுக்கு ரெண்டு பொம்மனாட்டிகள் இருக்காலோல்லியோ? ஏன்டீ மீரா.!..மீரா.!.”

அவள் எரிச்சலுடன் எழுந்து வந்தாள் டி.வி. யில் முக்கியமானக் கட்டம் போய்க்கிட்டிருக்கு. ஜோதிகா எவரியதூ..?ன்னு கர்ஜித்துக் கொண்டிருக்கிறாள்.

“மாமி அடுப்படியில ஒண்டியா சிரமப் பட்றாளோல்லியோ?கூட ஒத்தாசைப் ப்ண்ணுடீ.. டி,வி.ய அப்புறம் பார்த்துக்கலாம்..”

“ஐயோ! மாமி பேர்ல ரொம்பத்தான் கரிசனம்.. இதெல்லாம் அம்மாக்கு அநாயாசம். ஒரு வேலையையும் என்னைத் தொடவிடமாட்டா.. அதில்லாம நீங்கதான் எங்கம்மா கைபாகம் வேணும்னுட்டு வேற அடம் பிடிக்கிறேளே.”

“பின்னே! மாமியோட ஒரு வெந்தையக் காரக் குழம்புக்கு ஈடாகாது.. மறு நா வரைக்கும் சாப்பிட்டக் கை மணக்குமே.”

அலமு சோற்று குண்டானையும், பொரித்த அப்பளத் தட்டையும் ,தூக்கிக் கொண்டு டைனிங் டேபிள் பக்கம் போக, இவர் ஆதங்கத்துடன் தயிர்வடை பாத்திரத்தைத் தூக்கிக் கொண்டு பின்னாலியே போனார்.மாப்பிள்ளை வயணமாய் சப்பிட்றதில மட்டுமில்லே தன் ஆத்துக்காரிக்கு சமத்தா தாளம் தட்றதிலேயும் கெட்டிக்காரர்தான்.

மதியம் சாப்பிடும் போது ஒவ்வொரு ஐட்டத்துக்கும் என்னமாய் பாராட்டு? கத்தரிக்கய் எண்ணைக்காய் குழம்பும், கடம்பூர் போளியும், மலாய்கஜாவும், கொஞ்சமாய் எண்ணைவிட்டு தாளித்த பருப்பு உசிலியும், அவல் பாயாசமும், எல்லோருடைய வாயையும் ஆஹாகாரம் போட வைத்ததுவிட்டதுகள். எல்லோரும் வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு, வெற்றிலைப் போட்டுக் குதப்பி, துப்பிட்டு, ஜலம் அருந்திட்டு, பாம்பு இரை விழுங்கினாற்போல, நெளிந்து நெளிந்து ஏப்பம் விட்டு, அப்பாடான்னு குட்டித் தூக்கத்துக்கு போயிட்டபோது, அலமு அப்போதுதான் குளிக்கச் சென்றாள். .அவள் வரட்டும் என்று இவரும் சாப்பிடாமல் காத்திருந்தார்.

அடுத்த நாளும் இதே கூத்துத் தான்..அலமுவுக்கு இதை விட அதிகமாய். வேலை.. ஐட்டங்கள் ஜாஸ்தியாச்சே. பொண்டுகளுக்கு போறச்சே பட்சணங்களை மூட்டைக் கட்டியனுப்பணுமே. லட்டு, ஜாங்கிரி, ரவா லாடு, முறுக்கு, தட்டை,…ராத்திரி முழுக்க எண்ணைச் சட்டிக்கும் ஓய்வில்லை. ராத்திரி ஒரு மணி வரைக்கும் இந்த வீட்டில் ஒருத்தரும் தூங்கவில்லை. கொண்டுவந்த பட கேஸட்டுகள் முழுசும் பார்த்து முடித்தாயிற்று.

ஆயிற்று மூணு நாள் டிகானா முடிந்துவிட்டது. எல்லோரும் கிளம்ப ரெடியாயிண்டிருந்தா. அவாளவாளுக்கும் பட்சண மூட்டைகள் காலம்பறவே கட்டி வெச்சாயிடுத்து. பிள்ளையாண்டானுக்கு ஒர் சின்ன மூட்டை.அலமு எங்கே? இவர் தேடிக்கொண்டு ரேழியைக் கடந்து பின் கட்டுப் பக்கம் போனார்.காற்றோட்டமில்லாத உக்கிரான அறையிலே தொந்திரவு இல்லாம அலமு அசந்து தூங்கிண்டிருந்தாள். நெற்றியில் முத்துமுத்தாய் வியர்வை.. ஓசைப் படாமல் திரும்ப, பின்னால் வந்து நின்ற மஞ்சு

“அம்மா…!அம்மா!….”—அவள் போட்டக் கூச்சலில் அலமு வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தாள். அவருக்குக் கோபம் கொப்பளித்தது.

“ஏண்டீ அம்மாவை இம்சிக்கிற? இப்பவாவது அவ தூங்கட்டும் விட்றீ..”

மஞ்சு அவரை முறைத்துக் கொண்டே போனாள்.

“ஐயோ! பகவானே! விவஸ்தையில்லாம இப்படி தூங்கிட்டேனே. இதோ நிமிஷத்தில வந்துட்றேண்டீ கண்ணூ.”

சொன்னபடி முகம் கழுவிக் கொண்டு நிமிஷத்தில் ஹாலுக்கு வந்து சேர்ந்தாள். எல்லோரும் கிளம்பி வெளியே வந்து நின்றார்கள்.

“மாமா! கிளம்பறோம். நீங்களும் மாமியும் ஒரு தடவை ஸ்ரீரங்கம் வரணும். என் தோப்பனார் நோக்கு லெட்டர் கூடப் போட்டாளாமே.”

“ஆமாமா லெட்டர் வந்தது..”

“மாமி! கிளம்பறோம். இந்த ரெண்டு நாளும் திவ்வியமான போஜனம். மலாய் கஜா தித்திப்பு இன்னும் நாக்குல தித்திச்சுண்டேயிருக்கு. கடம்பூர் போளி..? அடடா !..ஹும்! இத்தோட அடுத்த சங்கிராந்தி கழிஞ்சி தான்.”

சின்ன மாப்பிள்ளை ஊடே புகுந்தார்.

“மாமி! நாங்க முடிவுப் பண்ணிட்டோம். அடுத்த சங்கிராந்தி கழிஞ்சி ஒரு வாரம் இங்கதான் டேரா..”

அவர் புரியாமல் மகள்களைப் பார்த்தார்.

“ஆமாப்பா! அடுத்த வருஷத்திலிருந்து ஒரு வாரம் தங்கப்போறோம். இப்ப சந்தோஷந்தானே?.”

அவர் உனர்ச்சியற்று நிற்க, அலமு முந்திக் கொண்டாள்

“உம்..ம்..பரமசந்தோஷம். எங்களுக்கு உங்களை விட்டா வேற சந்தோஷம் என்னடீ இருக்கு ?.”

அவருக்கு ஆற்றாமையாக இருந்தது. அம்மா பார்த்துப்பா..,அம்மா பார்த்துப்பான்னு இந்த வயசில அலமு எவ்வளவுதான் செய்வா?. பெத்தவளுக்கு வயசாயிடுத்துன்னு. பொண்ணுகள்ல ஒருத்தியும் நினைக்கிறதில்லை. சொன்னா மூக்குக்கு மேல கோவம் தெறிக்கும். நாங்க இங்க வர்றது நோக்கு பொறுக்கலம்பாளுங்க.. இல்லை இந்த வாயில்லாத ஜீவனின் விமோசனத்துக்கு எதையாவது செய்தே தீரணும்.அது மட்டுமல்ல இந்தாத்துப் பெண்கள் கஷ்டத்தை உணரணும்.

“அட! நாங்க வேற மாதிரின்னா யோசிச்சி வெச்சிருக்கோம்.”—என்றார் அவர். கூலாக

“என்ன மாதிரி?.”

“நீங்க ரெண்டு பேருந்தான் வருஷம் தப்பாம ஸ்ரீரங்கம் வரச்சொல்லி கூப்பிட்டுண்டு இருக்கேள்,ரெண்டு சம்பந்திகளும் வேற வருஷா வருஷம் கூப்பிட்றா. ஸோ அடுத்த வருஷத்திலேயிருந்து சங்கிராந்தி கழிஞ்சி நாங்க அங்க வந்திட்றோம்.. பண்டிகை கழிஞ்சி ஸ்தல யாத்திரை போனாப்பலயும் ஆச்சு,உங்களையெல்லாம் பார்த்த மாதிரியும் ஆச்சு., பட்சணங்களை கொண்டுவந்து உங்காத்துகள்ல சேர்த்தமாதிரியும் ஆச்சு. என்ன?.”

இரண்டு மாப்பிள்ளைகளும் ஒரு நிமிடம் திக்குமுக்காடி நின்றார்கள்

“ஒ..ஒ…யெஸ்! ரொம்ப சந்தோஷம். மாமா.”—என்றார்கள்.. பெண்கள் முகத்தில் ஏமாற்றம் அப்ப்ட்டமாய் தெரிந்தது. அ.ப்.ப்.பா! அலமுவுக்கு பெரிய ரிலீஃப். கொடுத்தாச்சி.. அலமு சங்கடமாய் நெளீந்தாள். அவரைப் பார்த்து முறைத்தாள்.

“ஏன்னா! என்ன பேச்சு இது? வருஷம் முழுக்க இந்த சந்தோஷமான ஒரு நாளுக்குத்தானே காத்திண்டிருக்கோம்? அதை கெடுத்து வெக்கிறேளே.சித்த சும்மாயிருங்கோ!.

சின்ன மாப்பிள்ளை சூட்சுமக்காரன். கெட்டி.

“மாமீ! மாமா சொல்றதுதான் சரி.. பெஸ்ட் ஐடியா. எங்களுக்கும் டபுள் சந்தோஷம்.. மாமா! எங்காத்துல மூணு நாளு ,அண்ண்ன் ஆத்துல மூணு நாளு தங்கி தினசரி அனந்தசயன ரங்கநாதனை திவ்வியமாய் சேவிக்கலாம்.. எங்காத்துகள்ல சொல்றோம். அவாள்லாம் ரொம்ப சதோஷப் படுவா. உம்..மாமீ! உங்க சமையலைப்பத்திச் சொன்னா எங்காத்துல ஒருத்தரும் நம்பமாட்டேன்றா. நானு மாமியாரை தலையில தூக்கி வெச்சுண்டு ரொம்பத்தான் ஆட்றேனாம்.. சொல்றா. அடுத்த வருஷம் வாங்கோ. வந்து உங்க கை பாகத்தை காட்டுங்கோ அப்புறம் அவா அவாளும் வாயை மூடிண்டுதான ஓடியாவணும்?”.

”ஆமாம்மா! நம்மாத்து மனுஷாள்னா அவாளுக்கு எளப்பம் அவா வாய்களையெல்லாம். அடைக்கணும்மா..”—இது மீரா

அலமு நொந்துப் போய் என்னைப் பார்த்தாள்.அதில் ஆயிரம் அர்த்தங்கள். நான் ஆண்டியாய் குறுகிப் போய் நின்றேன்.. எஸ்! ஆண்டிதான். சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்த ஆண்டி

************************************************************

Series Navigationவாழ்வியலும் ஆன்மீகமும்: வடிவுடையானின் நூல்களை முன்வைத்து -4தனிமை உலகம்: வேட்டை :சுப்ரபாரதிமணியன் புதிய சிறுகதைத் தொகுப்பு
author

செய்யாறு தி.தா.நாராயணன்

Similar Posts

2 Comments

  1. Avatar
    jayashree shankar says:

    திரு.செய்யாறு.தி.தா.நாராயணன் அவர்களுக்கு.
    விமோசனம்…..இன்றும் வீட்டுக்கு வீடு நடந்து கொண்டு தான் இருக்கிறது..
    அம்மாக்களுக்கு பாசத்தில் இருந்து விமோசனமே கிடையாது…
    கதையின் கரு…வடிவம்….நடை….பாவனை….அழகு….
    வீட்டுக்குள் ஹாலில் உட்கார்ந்து நாடகம் பார்ப்பது போல் இருந்தது.
    நன்றி
    ஜெயஸ்ரீ ஷங்கர்.

    1. Avatar
      தி.தா.நாராயணன் says:

      நன்றி மேடம்.ஒரு படைப்பாளிக்கு இதை விட வேறு நல்ல டானிக் என்ன இருக்கிறது?.தாயின் பாசத்தைப் ப்ற்றிச் சொன்னவர் ஊடே நாதமாய் ஒலிக்கும் அந்த வயதான கணவனின் தவிப்பையும், கரிசனத்தையும் குறிப்பிடவில்லையே என்று ஒரு ஆணாய் ஆதங்கம் ஏற்படுகிறது எனக்கு. நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *