மூன்று தலைவர்களும் நம் அடையாளமும்

மூன்று தலைவர்களும் நம் அடையாளமும்
This entry is part 7 of 40 in the series 6 மே 2012

ஒரு இந்தியன் என்னும் அடையாளம் நம்மால் அண்மைக் காலத்தில் ஊடகங்கள் முன் வைத்த வழியில் மட்டுமே புரிந்து கொள்ளப் பட்டுள்ளது. அது மிகவும் எளிமையானது. தேசியக் கொடி, தேச வரைபடம், மூன்று தேசியப் பண்டிகைகள் என்னும் அளவு எளிமையானது. இதே போல் காந்தியடிகள் நமக்கு சுதந்திரம் பெற்றுத் தந்தவர் என்னும் அளவில் மட்டுமே அவரைப் பற்றிய புரிதல் இருக்கிறது.இந்தியன் என்னும் அடையாளத்தை இவ்வளவு எளிமைப் படுத்துவது சிறுபிள்ளைத்தனமானது. தொன்று தொட்டு இந்திய நிலப்பரப்பில் அன்னிய படையெடுப்பை ஒரு விதமாகவும் (எதிர்த்தும்) அன்னிய கலாசாரத்தை வேறு விதமாகவும் (சில நிபந்தனைகளுடன் வரவேற்றும்) எதிர்கொண்டதைக் காண்கிறோம். எனவே இந்தியரின் அடையாளம் எந்த அடிப்படையிலானது? அதன் வேர்கள் மிக நீண்டவை. பல நூற்றாண்டுகளைக் கடந்து செல்பவை.

மூன்று தலைவர்களை நம் அடையாளத்தின் மிக முக்கியமான பரிமாணங்களாக நாம் காண இயலும். முதலாவதாக காந்தியடிகள், இரண்டாமவர் டாக்டர் அம்பேத்கர், மூன்றாமவர் ஸ்ரீஅரவிந்தர். சுதந்திரப் போர் நிகழ்ந்த காலத்தில் நம் நாடு விடுதலை பெறுவதில் மூவருமே முன் சென்று வழி நடத்தினர்.

ஆனால் மூவருக்குமே நம் மண்ணின் பண்பாட்டைக் குறித்த அக்கறையும் கவனமும் மிகுந்திருந்தது. பிரிட்டிஷ் ஆட்சி முடிவடைந்ததும் எல்லாமே சரியாகிவிடும் என்று அவர்கள் கருதவில்லை. இந்த மூன்று தலைவர்களும் மூன்று முக்கியமான தளங்களில் செயற்பட்டார்கள். காந்தியடிகள் அரசியல் தளத்திலும், அம்பேத்கர் சமூக தளத்திலும், அரவிந்தர் ஆன்மீகத்திலும் தீவீரமாக இயங்கினார்கள்.

இதில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது காந்தியடிகள் சுதந்திரப் போராட்டத்தை இரண்டு ஷரத்துக்களுடன் முன்னெடுத்துச் சென்றார். ஒன்று சுதந்திரம் கிடைக்கும் வரை அது ஒன்றே மிக முக்கியமான பிரச்சனை. இரண்டாவது அதை வென்றெடுக்க அகிம்சை ஒன்றே வழி. ஆனால் அம்பேத்கரும் அரவிந்தரும் இதில் வேறு பட்டார்கள். அம்பேத்கர் சமூக நீதியையும், அரவிந்தர் ஆன்மீகத்தையும் சுதந்திரத்துக்கு இணையாக முக்கியத்துவம் மிகுந்த பிரச்சனைகளாக அங்கீகரித்தார்கள். காந்தியடிகளுக்கும் இந்த இரண்டிலும் அப்பழுக்கற்ற ஈடுபாடும் பொறுப்பும் இருந்தது. ஆனால் அவரது அணுகுமுறை தமது கண்ணோட்டத்தின் வழியில் மட்டுமே இருந்தது. எனவே சுதந்திரப் போருக்கு முன்னிரிமை தந்த அவர் சமூக ஆன்மீக தளங்களில் தமது புரிதலின் வழி சென்றார். அற வழியில் காலப் போக்கில் சமூகம் தானே முன் வந்து சமூக நீதியை உணர்ந்து செயற்படும் என்பது போன்ற புரிதலே அது.

இந்தப் புள்ளியில் தான் அம்பேத்கர் வேறுபட்டார். பலநூற்றாண்டுகளாக தலித்துகளுக்கு எதிரான வருணாசிரமப் போக்கு அறவழியில் மாறி நீதி கிடைக்கும் என்பது நடக்காத காரியம் என்பதில் தெளிவாக இருந்த அவரது தீர்க்கதரிசனம் இன்றும் நிரூபணமாகிறது. இன்றும் கூட அரசாங்கம் மட்டுமே தலித்துகளுக்கான சட்டரீதியான உரிமைகளை வழங்குகிறது. தலித் அல்லாதோரிடம் இன்னும் தலித்துகள் தமக்கு இணையான அதிகாரம் மற்றும் கல்வி, நிபுணத்துவத்தைப் பெற வேண்டும்; பல நூற்றாண்டுகளாய் அவர் அனுபவித்த அநீதிக்கு நிரந்தர பரிகாரம் அல்லது மாற்று நிகழ வேண்டும் என்னும் மனித நேயமிக்க சகோதரத்துவம் மிக்க அணுகுமுறை இல்லை. ஒரு குறிப்பிட்ட அளவு இதற்கு அரசியல்வாதிகள் காரணம் என்றாலும் அது நிகழாமலே போய் விடுமோ என்னும் கவலை ஏற்படுத்தும் அளவே தலித் அல்லாதோர் சிந்தனைப் போக்கு இருக்கிறது.

எனவே அன்று அம்பேத்கரை தலித்துகளுக்கான இடம் எது என்று அறுதி செய்யும் லட்சியமும், அரவிந்தரை நம் ஆன்மீகப் பின்னணியை நம் மக்களுக்கு நினைவூட்டி வழிகாட்டும் அற உணர்வும் வழி நடத்தின. எனவே இவர்கள் இருவருமே சுதந்திரப் போராட்டம் உச்ச கட்டத்தில் இருந்த போது தமது மேற் குறிப்பிட்ட லட்சியங்களைப் பின் பற்றி தனித்தே செயற் பட்டார்கள். காந்தியடிகளுடனோ அல்லது காங்கிரஸுடனோ இணையவில்லை. மறுபக்கம் காந்தியடிகள் அவரது அரசியல் வாரிசுகளாலேயே அன்றே தோற்கடிக்கப் பட்டார். ஆனால் தமது அறப் பாதையில் என்றும் இமயமாய் உயர்ந்து நிற்கிறார்.

இந்தத் தலைவர்கள் நம் மண்ணின் அடையாளங்கள். நமது முன்னுரிமை வலிமையான அரசு, சமூக நீதி, ஆன்மீகம் என்பதே இந்தத் தலைவர்களின் வரலாறு நமக்கு வழங்கும் பரம்பரைச் சொத்து. நமது முன்னுரிமைகளில் ஏற்பட்டுள்ள குழப்பங்களே இன்றைய பின்னடைவுகளுக்குக் காரணம்.

நம் நாட்டுப் பற்றும் நம் நாடு பற்றிய பெருமிதமும் ஒப்பற்ற இந்தத் தலைவர்கள் எந்த மகோன்னதமான லட்சியங்களை முன் வைத்தார்களோ அதன் அடிப்படையில் இருக்க வேண்டும். அறமும் பெருமையும் மிக்க அந்த சிந்தனைகளை நம்முடையதென்று அடையாளம் கொண்டு சிறுமையிலிருந்து நாம் அன்னியப் பட வேண்டும்.

அரசியல் , சமூகம், ஆன்மீகம் என்னும் மும்முனையிலும் நாம் உயரும் கனவு வேண்டும். இதற்கு நேரெதிர் திசையில் செல்லும் ஆளுமைகள் இம்மூன்று தளங்களிிலும் நிறைந்து விட்டது நம்மைப் பற்றிக் கொண்ட ஒரு நோயின் அதன் விளைவான பலவீனத்தின் குறியீடாகும். நம்மைச் சிறுமைப் படித்தி வருவோருடன் நம்மை அடையாளப் படுத்திக் கொள்கிறோமா இல்லை நம் மிகப் பெரிய பெருமைக்குரிய பின்னணியான இந்தத் தலைவர்களுடன் நம்மை இனங்காண்கிறோமா என்பதே நம்முன் உள்ள கேள்வி.

பொருளும் வசதிகளும் இந்த இரண்டிற்காக சமாதானம் செய்து அற உணர்வின்றி வாழ்ந்து முடிப்பதும் என்னும் குறுகிய நோக்கு மட்டுமே நம்மைப் பிணைத்து விட்ட சங்கிலி. அதுவே சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் உள்ளடிக்கிய அனைவரின் நல வாழ்வுக்கான பாதைகளை அடைத்து விடுகிறது.

அதே சமயம், இது எல்லாக் காலத்திலும், அதாவது ராமாயண மகாபாரத காலத்திலிருந்து தொன்று தொட்டு வரும் நோய் என்பதும் உண்மை. முற்காலத்தில் எல்லாம் சரியாக இருந்தது. இப்போதுதான் எதுவுமே சரியில்லை. இனி சரிசெய்ய வழியுமில்லை என்பது கையாலாகாத மேம்போக்கான எண்ணம். அன்று நம் தாத்தாக்கள் போன்ற இந்தத் தலைவர்கள் எந்த அற உணர்வுடன் சமூக நன்மையை மையமாகக் கொண்டு இயங்கினார்களோ அதே பாதையில் மட்டுமே நாம் தலை நிமிர்ந்து இந்தியன் என்று சொல்லிக் கொள்ள இயலும். நம்மை புதைமணலிலிருந்து கை தூக்கிக் காப்பாற்றியவர்கள் அவர்கள். இன்று தலை நிமிர்ந்து அவர்கள் நம் அடையாளம் என்று சொல்லா விட்டால் புதைந்து விடுவோம்.

Series Navigationபில்லா 2 இசை விமர்சனம்தாகூரின் கீதப் பாமாலை – 12 உன்னைத் தேடி வராத ஒருத்தி !

3 Comments

  1. அரசியலை கையிலெடுக்க வேண்டும். ஆங்கில ஆட்சியால், நமக்கு ஒரு உலக மொழி கிடைத்த்து. அதனை, ஒரு துருப்பாக வைத்துக் கொண்டு, விஞ்ஞானம், தொழில் நுட்பத்தில் வல்லுனர்களாக மாறி வருகின்றோம். ஆனால், இந்த அரசியலைத்தான், கோட்டை விட்டோம். அதனால், கோட்டையை, கோட்டான்கள் பிடித்துக் கொண்டு, நாட்டையே சாக்கடையாக மாற்றிவிட்டது.

    இரா. ஜெயானந்தன்

  2. இந்த அரசியல்வாதிகள் திருந்த வேண்டும். அல்லது, உண்மையான தொண்டு நோக்குடன் மக்கள் பணி செய்ய, இளைஞர்கள் முன் வந்து,

    please add these two lines in the beginning of this letter.

    r. jayanandan.

  3. நன்றி திரு.ஜயநந்தன், ஆங்கிலத்தில் inclusive என்று குறிப்பிடும் அனைத்து தரப்பினரையும் உள்ளடிக்கிய வளர்ச்சி பற்றி கற்றறிந்தவர் அக்கறை கொள்வதில்லை. இது ஒரு பெரிய சோகம். இளைஞர் மட்டுமன்றி அனைவருமே சமூக நலன் தொட்ட சிந்தனைகளில் விவாதங்களில் இருப்பது முதல் முன்னர்வாக இருக்கும். பின் அரசியலோ வேறு சேவைகளோ சாதி தாண்டி வர்க்கம் தாண்டி மதம் தாண்டி சமூக நோக்குடன் நாம் செயற்படும் வரை இந்தப் பெரிய தலைவர்களின் வழிகாட்டுதலும் அவர்கள் ஆற்றிய தன்னலமற்ற பணிகளும் வீணாகப் போனதாகும். அன்பு சத்யானந்தன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *