கைலி

author
0 minutes, 1 second Read
This entry is part 3 of 41 in the series 13 மே 2012

பனசை நடராஜன், சிங்கப்பூர்

சாங்கி விமான நிலையத்தில் கால் வைத்ததும் ஏதோ ஒரு புது கிரகத்தில் இறங்கியது போலிருந்தது மூன்று பேருக்கும்.
சிவா, குமரேசன், சேதுராமன். தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் வசித்தாலும் படித்தது ஒரே தொழிற்கல்வி நிலையத்தில் (ஐடிஐ)., வெவ்வேறு காரணத்துக்காக இங்கே வந்திருக்கிறார்கள். அவர்களோடு வந்த மற்ற இருவரும் சிங்கப்பூரில் முன்பே வேலை பார்த்த அனுபவசாலிகள். அதனாலேயே கொஞ்சம் அதிகமாகவே எல்லாவற்றையும் விளக்கி சொல்லிக் கொண்டு வந்தார்கள். காலால்தான் நடக்கணும் வாயால்தான் சாப்பிடணும்னு மட்டும்தான் சொல்லலை. மற்றபடி அவர்களோட அலப்பறை அதிகப்படி..
ஒரு கப்பல் பட்டறையில் ஐந்து பேருக்கும் வேலை. முகவரின் வாகனம் தயாராயிருந்தது. பயணிக்கும் போது இரண்டு பக்கத்தையும் மாறி மாறி பார்த்துக் கொண்டே வந்தார்கள். பெரிய பெரிய கட்டடங்கள், தூய்மையான மேடு பள்ளமில்லாத சாலை, பசுமை கொஞ்சும் மரங்கள். பிரமிப்பாக இருந்தது மூவருக்கும்.
சிவா ஏழை. அவன் குடும்பத்தில் அழையா விருந்தாளியாக வந்த வறுமை நிரந்தரமாகத் தங்கி பதினைந்து ஆண்டுகள் ஆயிற்று. அப்பாவின் குடிப் பழக்கமும், ஊதாரித்தனமும்தான் அதை அழைத்து வந்தது. அவர் போன பின்பும் துணைக்கு இருப்போமென்று இன்னும் இருக்கிறது போலும். எப்படியாவது நல்ல வீடு கட்டி, நல்ல இடத்தில் அக்காவுக்கு திருமணம் செய்து வைக்கணும் என்று சிவாவின் மனசு எப்போதும் கூச்சல் போட்டுக் கொண்டே இருக்கும். அதெல்லாம் எங்கே மற்றவர்களுக்கு கேட்கப் போகிறது. எல்லோருமே சிவாவை ”அமைதியானவன், வார்த்தைகளை எண்ணி எண்ணிதான் பேசுவான்” என்று சொன்னார்கள். வைராக்கியம் கூடிக் கூடி இறுகிப் போனதால் வார்த்தைகள் குறைந்து போயிற்று. குடியிருக்கும் வீட்டை வட்டிக்கு அடமானம் வைத்து, மீதியை நண்பர்களிடம் கடன் வாங்கி மிகுந்த சிரமத்துக்கிடையேதான் இங்கே வந்திருக்கான்.
குமரேசனின் அப்பா அரசு ஊழியர். நடுத்தரக் குடும்பம்.. தங்கைக்கு திருமணம் முடித்தாயிற்று. கடமைகள்னு எதுவும் இல்லை. அவன் வாழ்க்கையை பார்த்துக் கொண்டால் போதும்னு அப்பா சொல்லிட்டார். இங்கே வரவும் அப்பாதான் பணம் கட்டினார். நல்லா சம்பாதிச்சு சொந்தமா ஒரு தொழில் ஆரம்பிக்கணும்னு சிங்கப்பூர் வந்திருக்கான்.
சேதுராமன் கதை ரொம்ப விநோதமானது. எக்கச்சக்கமா நிலம், தோப்புன்னு பணக்காரக் குடும்பம். நிறைய வேலையாட்கள் தினம் வேலை செய்வார்கள் அவன் அண்ணனும் அப்பாவும்தான் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறார்கள். இவனோ நண்பர்களோடு ஊர் சுத்துறது, திரைப்படம் பார்க்கிறதுன்னு பொழுதைக் கழிச்சுட்டு இருந்தான். அப்பாவோட நச்சரிப்பு தாங்காம என்னைக்காவது வயலைப் போய் பார்த்துட்டு வருவான். ஒருநாள் அவன் அப்பா கூப்பிட்டு,

”டேய், நீ இப்படி பொறுப்பில்லாம சுத்துறதைப் பத்திக் கூட நான் கவலைப் படலை. ஆனா உனக்கு கல்யாணமே ஆகாதோன்னுதான்டா கவலையா இருக்கு. மூணு வருஷமா உனக்கு பொண்ணு தேடுறோம். எல்லாரும் உன் குணத்தைப் பார்த்து தயங்குறாங்கடா. நம்ம தூரத்து சொந்தம் கமலா அக்கா மட்டும்தான் அரைமனசோட சரின்னு சொல்றாங்க. ஆனா அவங்க பொண்ணு வர்ஷினி இருக்காளே. ரொம்ப புத்திசாலி. நீ ஏதாவது ஒரு வேலைக்கு போகணுமாம், இல்லைனா நம்ம வயல், தோப்பை எல்லாம் பார்த்துக்கிட்டு பொறுப்பா இருக்கணுமாம். அப்பதான் உன்னைக் கட்டிப்பேன்னு சொல்றா. உன்னை வேணாம்னு மறைமுகமா சொல்றாளோன்னு தோணுதுடா எனக்கு. ஹும். என்னதான் நடக்குதுன்னு பார்ப்போம்”
அலுத்துக் கொண்டே உள்ளே போனார்.
கொஞ்சம் அவமானமாதான் இருந்தது. அவ்வளவு திமிரா அவளுக்கு. வயலை பார்த்துக்கிட்டு ஆளுங்களை சமாளிச்சுக்கிட்டு இந்த கிராமத்துல இருக்க முடியாது என்ன பண்ணலாம்ன்னு யோசிச்சுட்டு இருக்கும் போதுதான் அந்த போன் அழைப்பு வந்தது. குமரேசன்தான் கூப்பிட்டான்.

“சேது.. ஒரு லட்சத்து அறுபதாயிரம்ரூபாய்(சுமார் நான்காயிரம் சிங்கப்பூர் வெள்ளி) ஏஜண்ட்க்குக் கட்டினா சிங்கப்பூர்ல வேலையாம்டா. நான் அட்வான்ஸ் கட்டிட்டேன். சிவாதான் கொஞ்சம் சிரமப் படுறான். உனக்கு இதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை. நீ கேட்டா உங்க அப்பா ரெண்டு லட்சமா கொடுத்து மொதல்ல கிளம்பு.. காத்து வரட்டும்னு சொல்லுவாரு.. என்ன சொல்றே”
ஆஹா.. ஒரே நேரத்துல அப்பா வாயையும் அடைக்கலாம். வர்ஷினியையும் கல்யாணம் கட்டலாம். நாலுநிமிட பாடலில் கோடீஸ்வரனாகும் நிறைய திரைப்படக் கதாநாயகன்கள் கண்முன் வரிசையாக ஓடினார்கள். ஒரு முடிவோடு அப்பாவிடம் பணத்துக்காக போய் நின்றான் சேதுராமன்.

“வெளிநாடு போனாலாவது உருப்படுவியான்னு பார்ப்போம்”னு சொல்லிக்கிட்டே அவன் அண்ணனை விட்டு பணம் கட்டி அனுப்பி வைத்தார்.
முகவரின் வாகனம் சிங்கப்பூரின் குட்டி இந்தியாப் பகுதியில் நின்றது. கோயில், மசூதி, தேவாலயம் மட்டுமின்றி, இந்தியக் கடைகளும் நிறைந்திருந்த அந்த வட்டாரத்தைப் பார்த்தவுடன் திரும்பவும் விமானம் ஏறாமலேயே இந்தியாவுக்கு திரும்பி கொண்டு வந்து விட்டாரோ என்ற ஐயப்பாடு வந்து விட்டது மூவருக்கும்.. எல்லோருக்கும் வாழை இலை சாப்பாடு வாங்கி கொடுத்து சாப்பிட வைத்த பின்பு வாயைத் திறந்தார் முகவர்..
“ இங்கே பாருங்கப்பா.. ஊர்ல ஏஜண்ட் எல்லாத்தையும் சொல்லியிருப்பாருன்னு நினைக்கிறேன். குப்பை போடக் கூடாது. எச்சில் துப்பக் கூடாது. சண்டை போட்டுக்கக் கூடாது. அப்படி ஏதாவது நடந்துச்சுன்னா உடனே ஊருக்குதான் போகணும். புரியுதா?”.

”இதுக்கு அந்த ரெண்டு அனுபவசாலிங்களே பரவாயில்ல போலருக்கே! நாம என்ன குத்துசண்டை போட்டிக்கா வந்திருக்கோம்.. ஆரம்பத்துலயே அபசகுனமா பேசுறாரே..”
மெலிதாக காதில் கிசுகிசுத்த சேதுராமனை வாயை மூட சொல்லி சைகை செய்தான் குமரேசன்.
சிவா வழக்கம் போல அமைதியாக இருந்தான். ஆட்கள் தங்கும் விடுதியில் (டார்மெட்ரி) இவர்களை இறக்கி விட்டு போனார் முகவர். இடத்தைப் பார்த்து விட்டு நொந்து போனான் சேதுராமன். குமரேசனுக்கும் ஒரு மாதிரிதான் இருந்தது. இருந்தாலும் சமாளிச்சுக்கலாம்னு தோன்றியது. சிவாவுக்கு இதைப் பற்றியெல்லாம் கவலையேயில்லை.

”டேய் குமரேசா.. மனுசன் தங்குவானாடா இங்கே. கட்டில் மேலே கட்டில். நான் பெட்ல உட்கார்ந்திருக்கும் போதே ஒருத்தன் சுரைக்காய் பறிக்க ஏணியில ஏறிப் போறா மாதிரி மேலே போறான், அட அதுவாவது பரவாயில்லை. அவன் மேல் கட்டில்ல உருள்றதால கீழே தூங்க முடியாத அளவுக்கு ஒரே ‘கிரீச் கிரீச்’னு சத்தம். எங்க வீட்டில மைதானம் மாதிரி ரூம்ல தேக்குக் கட்டில்ல தூங்கினவண்டா நான். உன் பேச்சைக் கேட்ட எனக்கு வேணும்டா இதெல்லாம்.”

“விடுடா.. வர்ஷினிக்காகவாவது பொறுத்துக்கோ.. இதெல்லாம் அங்கே தெரியவா போகுது? ஊர்ல போய் இறங்கும் போது நல்லா செண்ட் அடிச்சுக்கிட்டு, சக்கரம் வச்ச பேக்கை இழுத்துக்கிட்டு போனேன்னா அவனவன் திறந்த வாயை மூட நாலு நாளாகும்டா”..
இப்படி சொல்லித்தான் சேதுராமன் வாயை தற்காலிகமாக மூட வச்சான் குமரேசன்.

“இவ்ளோ நடக்குது. கோந்து குடிச்சவனாட்டம் உட்கார்ந்திருக்கான் பாரு.”.
என்று தன்னைப் பார்த்து சொன்ன சேதுராமனை எந்த சலனமும் இல்லாமல் ஒரு வெற்றுப் பார்வை பார்த்து விட்டு திரும்பிக் கொண்டான் சிவா.
சேதுராமன் குமுறுவதும், அதை குமரேசன் குளிர்விப்பதுமாக மாதங்கள் போய்க் கொண்டிருந்தது. நான் எப்படியெல்லாம் வளர்ந்தவன், எங்கள் வீட்டில் எவ்ளோ ஆட்கள் வேலை பார்க்கிறார்கள்.. எங்களுக்கு ஊர்ல எவ்ளோ செல்வாக்கு… இப்படியாகவே இருக்கும் அவனோட பேச்சு. சிலநேரம் பிரேக் பிடிக்காத லாரியாட்டம் தறிகெட்டும் அவன் பேசுவதுண்டு.
அன்னைக்கு அப்படிதான் அவனோட சீன மேற்பார்வையாளர் அவனை, “ஏய் கேலிங்கியான்” அப்படின்னு கோபமாக் கூப்பிட்டானாம். அச்சில் எழுத முடியாத வார்த்தைகளால திட்டித் தீர்த்துட்டான் அவனை. நேரா இல்லை. தங்குமிடத்துக்கு வந்து குமரேசன்கிட்டயும், சிவாகிட்டயும்தான். காதை பினாயில் ஊத்திக் கழுவிட்டுதாண்டா தூங்கணும்னு குமரேசன் சொன்னதுக்கு அடக்க மாட்டாமல் சிரித்தான் சிவா.

“நக்கலாடா ரெண்டு பேருக்கும்? மாசம் நாணூத்தம்பது வெள்ளி சம்பளத்துக்கு வேலை செய்யுறதே அதிகம்.. இதுல இவனுங்க திட்டுறதை வேற கேக்கணுமா?..அது என்ன கேலிங்கியான். நான் இவ்ளோ நேரம் பேசினதை விட அசிங்கமான் வார்த்தைன்னு நினைக்கிறேன்.”

“நீ பேசினதை விட அசிங்கமான வார்த்தை எந்த மொழியிலயும் இருக்காதுடா.. சரி விடு. பொழைக்க வந்திருக்கோம். நான் பன்னீர்ல பல் விளக்கினேன்.. பஞ்சாமிர்தத்துல குளிச்சேன்னு ஆரம்பிச்சுடாதே. அதுக்கு என்னா அர்த்தம்னு யாரையாவது கேட்டுக்கலாம்”
என்று அப்போது சமாதானப் படுத்தி வைத்தான்.
மூன்று பேரும் சேர்ந்து சமைத்தார்கள். குமரேசன்தான் சமையலலில் கொஞ்சம் தேர்ந்தவன். சிவா பரவாயில்லை ரகம். சேது குழம்பு வைத்தால் இரண்டு விதமாக உபயோகித்துக் கொள்ளலாம். மேலாக எடுத்தால் ரசம். அடியில் கரண்டியை விட்டு எடுத்தால் குழம்பு. கலக்கி விட்டால் அவ்வளவுதான். அதனாலேயே அவனுக்கு கடைக்கு போகிற வேலை மட்டும் ஒதுக்கியிருந்தார்கள் இருவரும்.
அன்னைக்கு மழைங்கிறதால ஓவர்டைம் இல்லை. மூணு பேரும் சாயங்காலமே வந்து விட்டார்கள். அந்த நேரத்துல சமைக்கிற இடத்துல அடுப்பு கிடைக்காத அளவுக்கு கூட்டமாக இருக்கும். எல்லா ஊழியர்களும் சமைப்பார்கள்.

”சேது, போய் சமைக்கிற பொருளெல்லாம் இருக்கிற வாளியை கீழே எடுத்துட்டு வா.. கூட்டம் அதிகமாயிட்டா அடுப்பு கிடைக்காது. சிவா.. நீ அரிசியை கழுவிட்டு குக்கர்ல வை.”
என்று சொல்லிக் கொண்டே பரபரத்தான் குமரேசன்.
கீழ்த்தளத்தில் இரண்டு பக்கமும் வரிசையாக எரிவாயு அடுப்புகள் இருந்தன. சீனம், பங்களாதேஷ், மியான்மர், பிலிப்பைன்ஸ், தாய்லாந்துன்னு எல்லா மொழியும் கலந்த கூச்சலா அந்த இடம் இருக்கும். சோறு சமைக்க மின் அடுப்புக்கான இடம் தனியாக இருக்கும்.
குமரேசன் காய்கறியை வெட்டி சமைக்க ஆரம்பித்தான்.
”இந்தா வாளி.. நான் ஏதாவது உதவி செய்யட்டுமா?” என்ற சேதுராமனை
“வேணாம்டா. நீ எதுவும் செய்யாம இருக்கிறதுதான் பெரிய உதவி கடையில போய் நான் சொல்ற சமையல் பொருட்களை வாங்கிட்டு வா” என்றான் குமரேசன். சேதுராமன் போன பிறகு,

“சிவா. ஓவர்டைமெல்லாம் பார்த்தா நாற்பதாயிரம் சம்பாதிக்கலாம்னு ஏஜண்ட் சொன்னான். இப்போ எவ்ளோ சிக்கனமா இருந்தாலும் கைல ஐநூறு டாலர்தான் மிஞ்சுது. இது அவன் சொன்னதுல பாதிதானடா. என்னையும், சேதுவையும் விடு. நீ எப்போ கடனை அடைச்சு, எப்போ அக்கா கல்யணத்தை முடிப்பே..”
இதை சேதுராமன் இருக்கும் போது சொல்லியிருந்தா ஏஜண்டோட மொத்தப் பரம்பரைக்கும் வண்டி வண்டியாத் திட்டு விழுந்திருக்கும்.

”முடியும்டா குமரேசா.. இன்னும் மூணு மாசத்துல வேலை அதிகமாயிடுமாம். அப்போ ஓவர்டைம் அதிகமானா நான் நினைச்சதெல்லாம் நிறைவேறிடும். சேதுவுக்கு நெளிவுசுளிவு புரியல. யார்க்கிட்டயாவது வாயை கொடுத்து மாட்டிக்க போறான். உன்னோடதானே வேலை பார்க்கிறான். பார்த்துக்கோ” என்றான் சிவா.

“முடியலடா. போன வாரம் ஒருத்தர் இவனை ஊர்க்கார தம்பியா நீன்னு கேட்டுட்டார். அவர்கிட்ட சண்டை போடாத குறையா முறுக்கிக்கிட்டு நிக்கிறான். சமாளிச்சு கொண்டு வரதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு. அப்புறம்தான் அவர் என்கிட்ட சொன்னார். அந்த காலத்துல நம்ம ஆளுங்க இந்தியா போறதை ஊருக்கு போயிட்டு வரேன்னு சொல்வாங்களாம். அதனால இவங்க அவங்களை ஊர்க்காரங்கன்னு சொல்றது வழக்கமாம். என்னோட அப்பாவும் தமிழ்நாட்டுல இருந்து வந்தவங்கதான் தம்பின்னு ரொம்ப நல்லா பேசினார். இவனுக்கு அதெல்லாம் புரிய மாட்டேங்குது.. இங்கே இருக்கிறவங்கல்லாம் ஒரு காலத்துல குடியேறுனவங்கதானே..எல்லாரும் சமம்தானே..இப்போ வந்த நம்மளை இளக்காரமா பாக்குறாங்கன்னு பேசுறான். அதோட இந்த கேலிங்கியான் பிரச்சினை இன்னும் தீர்ந்த பாடில்லை. அந்த சீனன் ஏன் அப்படி என்னை திட்டினான். அதுக்கு என்னா அர்த்தம்னு கண்டுபிடிக்கணும்னு ஒருநாளைக்கு நாலு தடவையாவது என்கிட்ட குதிக்கிறான். போற போக்கை பார்த்தா அந்த வார்த்தைக்காகவே இன்னும் ஆறு மாசத்துக்குள்ள சீன மொழியை கத்துக்கிட்டாலும் கத்துப்பான் போலருக்கு. நானும் நிறைய பேர்க்கிட்ட அந்த வார்த்தைக்கு அர்த்தம் என்னான்னு கேட்டுட்டேன். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி சொல்றாங்க..”

“”அதுக்கும் இந்த ஊர்க்காரர் மாதிரி ஏதாவது ஒரு ஃப்ளாஷ்பேக் இருக்குமோ என்னவோ?.. அதை விடுடா. முதல் வருஷம் ஐடிஐ போனப்போ நம்மளை என்னமா ரேகிங் பண்ணி அழ வச்சானுங்க சீனியர் பசங்க.. அதுக்காக அடுத்த வருஷம் நீங்கல்லாம் சும்மாவா இருந்தீங்க. அவனுங்களை தாண்டுற அளவுக்கு புது பசங்களை பாடா படுத்தலை? அதை போலதாண்டா. இந்த மாதிரி வேலையில நிலைச்சிருக்கணும்னா வேலை தெரிஞ்சிருந்தா மட்டும் போதாது.. வாயை மூடிட்டு இருக்கவும் தெரியணும். சொல்லி புரிய வை அவன்கிட்ட..சரி சரி.. சேது வரான். கம்முன்னு இரு” என்றான் சிவா.

“என்னடா சிவா.. நான் இருந்தா ஊமைச்சாமி மாதிரி இருக்கே.. இப்போ பெரிய மீட்டிங்கே நடக்குது போலருக்கு? எல்லாம் என்னைப் பத்தியா?”

“ஆமாம்டா.. யார் எங்கே பேசிக்கிட்டாலும் இவரைப் பத்திதான் பேச போறாங்க.. சொன்னதெல்லாம் சரியா வாங்கிட்டு வந்தியா?”

“அதெல்லாம் சரியா வாங்கிட்டேன். அந்தக் கடைக்காரன் கூட நம்மளை கீழாதாண்டா நினைக்கிறான். முன்னாடி வந்த என்னை விட்டுட்டு இன்னொருத்தனுக்கு பில் போடுறான். எல்லோரும் சமம்னு சொல்றதெல்லாம் பேச்சுக்குதாண்டா.. ” என்று சேதுராமன் புலம்பியதோடு நிறுத்தியிருந்தாலும் பரவாயில்லை.
”வெள்ளை நிறத்தொரு பூனை-எங்கள்
வீட்டில் வளருதுகண்டீர்”
என்று கணீர் குரலில் சேதுராமன் ஆரம்பித்ததும் சிவாவுக்கும், குமரேசனுக்கும் ஏதாவது மேடைப் பேச்சாளரோட ஆவி இவன் உடம்புல புகுந்துடுச்சோன்னு அதிர்ச்சி கலந்த பயமாயிடுச்சு.
”வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால்-அதில்
மானுடர் வேற்றுமை யில்லை,
எண்ணங்கள செய்கைக ளெல்லாம்-இங்கு
யாவர்க்கும் ஒன்றெனல் காணீர்”.
அதே கணீர் குரல் மாறாமல் கோபமாக முடித்தான்.

”என்னடா நடக்குது இங்கே? எப்படிடா இதெல்லாம்?” அதிர்ச்சியிலிருந்து மீளாத இருவரில் குமரேசன்தான் கொஞ்சம் சுதாரித்துக் கொண்டு கேட்டான்.

“எங்க அம்மா இருந்த வரைக்கும் இது மாதிரி நிறைய பாட்டு சொல்லிக் கொடுத்து அர்த்தமும் சொல்வாங்க.. அதுல ஒண்ணுதான் இது. அந்த கடைக்காரனை நாலு வார்த்தைக் கேட்கணும்டா”

“கேக்க வேண்டியதானே? நீ என்ன கேட்டாலும் அவனுக்கு புரிய போறதில்லை. அதான் பேசாம வந்துட்டே.. எங்கக்கிட்டே வந்து செய்யுள் பாட்டெல்லாம் எடுத்து விடுறே.. இதுக்குதான் உன்னை கடைக்குக் கூட அனுப்பறதில்லை.. என்ற குமரேசனிடம் ஏதோ சொல்ல வாய் திறந்தான் சேதுராமன்.

” போதும் நிறுத்து.. முடியல.. இப்படி ஏடாகூடமா பேசிட்டு இருக்காம மளிகைப் பொருள் வாளியைத் தூக்கிட்டு மேலே வா. சிவா நீ அந்த குழம்பை தூக்கிட்டு வா.. நான் சாதக் குக்கரை எடுத்துட்டு போறேன்…. சாப்பிட்டு தூங்க மணி பதினொன்ணு ஆயிடுது தினமும்.” சொல்லிக் கொண்டே மாடியேறிய குமரேசனை பின் தொடர்ந்தார்கள் இருவரும்.
இரண்டு ஆண்டுகள் எப்படியோ ஓடி போனது. சிவா அனுப்பிய பணத்தில் கடன் அடைத்து அவங்க அக்காவுக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்திருந்தார் அவன் அம்மா. அக்கா கல்யாணத்துக்காக இன்னும் ஒரு மாதத்தில் ஊருக்கு கிளம்புகிறான். குமரேசனும் அதே நாளில் ஒரு மாத விடுப்பில் அப்பா அம்மாவைப் பார்க்க போகிறான். சேதுராமன் பர்மிட்டை முடித்து விட்டு இன்னும் ஒரு வாரத்தில் கிளம்புகிறான். ”எல்லாரும் சமம்னு யாருக்கும் புரிய மாட்டேங்குதுடா” என்ற அவனுடைய பல்லவி மட்டும் இப்பவும் ஓய வில்லை அவனுக்கு வர்ஷினியோடு கல்யாணம் நிச்சயமாயிற்று. கடந்த மூன்று மாதமாக அவளோடு போனில் பேசி பேசியே பாதி பணத்தை போன் கார்டுக்கு பறி கொடுத்திருந்தான். இவனைப் பற்றி ஓரளவு வீட்டிலும், ஊரிலும் மரியாதை கூடியிருக்கிறதென்று சேதுவின் நண்பர்கள் போனில் சொன்னார்கள்.

அப்பா, அண்ணன் குடும்பத்தார், வர்ஷினி குடும்பத்தார், நண்பர்களுக்கென்று பொருட்கள் வாங்க பெரிய பட்டியலோடு முஸ்தபா செண்டருக்குள் நுழைந்த சேதுராமனோடு கூடவே சிவாவும் குமரேசனும். எழுதி வைத்திருந்ததைப் பார்த்து எல்லாவற்றையும் வாங்கினான். மூணு இன்ச் பெல்ட் அப்பாவுக்கு, அண்ணன் குழந்தைகளுக்கு பொம்மை, அண்ணனுக்கு வாட்ச், அண்ணிக்கு சாதாரண செண்ட், வர்ஷினிக்கு விலையுயர்ந்த செண்ட், நண்பர்களுக்கு டிஷர்ட், கோடாலி தைலம்-னு ஒவ்வொன்றாக வாங்கிக் கொண்டே வந்தவன் லுங்கி எனப்படும் கைலி இருக்கும் இடத்துக்கு வந்தான். தெருவில் இருக்கும் சிலருக்கு ஏழெட்டுக் கைலிகளை எடுத்துக் கொண்டான்.

”வீட்டில் பண்ணையாள் ஒருத்தர் எனக்கு விபரம் தெரிஞ்ச நாள்ல இருந்து வேலை செய்றார்டா… அவருக்கு ஒரு கைலி எடுக்கணும்” என்று சொன்ன சேதுராமன் அதிக நேரம் தேடிக் கொண்டிருந்தான்.

“அவங்க வீட்டு வேலையாளுக்காக ரொம்ப மெனக்கெட்டு பார்த்து பார்த்து எடுக்கிறான் பாரு”ன்னு அவனைப் பெருமையாகப் பார்த்தானர் குமரேசனும், சிவாவும்.
இருவரும் அவனுக்கு உதவ சில கைலிகளை எடுத்துக் காட்டினார்கள்.

”ஏண்டா. இதுல ஆறரை வெள்ளில இருந்து இருக்கு. ஏதாவது ஒண்ணை எடுடா”
என்றான் குமரேசன்.

“இந்தா.. இது ஏழு வெள்ளி. நிறம் கூட நல்லா இருக்கு” என்று ஒரு கைலியை எடுத்துக் கொடுத்தான் சிவா..

”விலை ஓகேதான். ஆனா இந்த நிறம் வேணாம்டா. அவர் கீழ்சாதி. கொஞ்சம் கன்னாபின்னான்னு இருக்கிற நிறத்துல ஒரு கைலியை தேடுறேன். ஏன்னா எங்க தெரு ஆளுங்களுக்கு எடுத்திருக்கிறா மாதிரி டீசண்டான கலர்லயா அவருக்கும் எடுக்கறது?”
விக்கித்து போய் அதிர்ச்சியோடு அவனைப் பார்த்த குமரேசன்,
“எப்பப் பார்த்தாலும் எல்லோரும் சமம்தானேன்னு சொல்லுவியேடா. அது சிங்கப்பூருக்கு மட்டும்தானா?” என்ற போதுதான் சேதுராமனுக்கு ’சுர்’ரென்று உறைத்தது.
எந்த சலனமும் இல்லாத வழக்கமான பார்வையை சேதுராமன் மீது வீசினான் சிவா.
வார்த்தகளற்ற அந்தப் பார்வையில் குவிந்திருந்த ஆயிரமாயிரம் கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் தலை கவிழ்ந்தான் சேதுராமன்.

– முற்றும் –

Series Navigationதொலைந்துபோன கோடைவாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் –12
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *