சுப்ரமணிய பாரதியாரும் சுப்ரீம் கோர்ட்டும்

This entry is part 23 of 41 in the series 13 மே 2012


கஞ்சி குடிப்பதற்கில்லார்-அதன்
காரணம் இவை என்னுன் அறிவுமில்லார்
பஞ்சமோ பஞ்சமென -நிதம்
பதைபதைப்பார் மனம் துடிதுடிப்பார்
நெஞ்சு பொறுக்குதில்லையே-இந்த
நிலை கெட்ட மனிதரை நினைத்து விட்டால்

என்னும் சுப்ரமணிய பாரதியாரின் ஆதங்கமான பாடலை கடந்த வாரம் ஒரு பொது நல மனுவில் வணக்கத்துக்குரிய சுப்ரீம் கோர்ட்டின் கருத்து நினைவு படுத்தியது. ‘ப்ளாஸ்டிக் பைகள் அணு குண்டை விட ஆபத்தானவை” என்ற கருத்தை மேதகு நீதிபதிகள் கூறியுள்ளனர். குடி நீருக்கான நன்னீர் வாய்க்கால்கள், குழாய்கள், கழிவு நீர் ஜல தாரைகள், ஏரிகள், குளங்கள் எல்லாமே ப்ளாஸ்டிக் பைகளால் அடைப்பு உண்டாகி குடி நீரைப் பாதுகாத்துப் பயன்படுத்துவது மிகவும் பாதிக்கப் படுகிறது. கழிவு நீர் அடைப்பால் ஆரோக்கியத்துக்கு ஊறு ஏற்படுகிறது. பசு மற்றும் ஆடுகள் மெல்லிய ப்ளாஸ்டிக் பைகளை உண்டு நோய்வாய்ப்பட்டு இறப்பது ஒரு அவலம். அவை தரும் பாலை, ஆட்டிறைச்சியை உண்போருக்கு ப்ளாஸ்டிக்கால் ஊறு ஏற்படுகிறது.

ப்ளாஸ்டிக் பைகளைத் தடை செய்வது பற்றி எந்த அரசாங்கத்துக்கும் உண்மையான அக்கறை கிடையாது. சாயக் கழிவுகளால் திருப்பூர் முதல் ஈரோடு வரை நிலத்தடி நீர் மாசு பட்டு ஏழை எளியோர் உடல் நலம், விவசாயம் ஆகியவை மிகவும் பாதிக்கப் பட்டது எந்த அரசுக்கும் பெரிய பிரச்சனையாகத் தெரியவில்லை. மக்களின் சுகாதாரத் தேவைகள், மருத்துவத் தேவைகள், கல்விக்குத் தேவையான பள்ளிகள் இல்லாமை பற்றியோ, சாலைகள், குடிநீர், மின்சாரம் இவற்றிற்கான பற்றாக்குறை பற்றியோ அக்கறை கிடையாது. பெண் சிசுக் கொலைகள், ‘தலித்’, நலிந்தோர், சிறுபான்மையினர் பிரச்சனைகள், மத நல்லிணக்கமின்மை, வேலை வாய்பின்மை போன்ற சமூகப் பிரச்சனைகள் மீதும் எந்த அரசாங்கத்துக்கும் அக்கறையோ இவற்றின் தீர்வுக்கான திட்டமோ கிடையாது. ஆனால் இந்தப் பிரச்சனைகளால் அரசியல் ஆதாயம் தேடுவதில் எந்தக் கட்சியும் ஏனைய கட்சிகளை விட இளைத்ததாகாது. இந்த ஒரே காரணத்தினால்தான் அரசாங்கம் பொறுப்பெடுத்துச் செய்திருக்க வேண்டிய பல விஷயங்கள் கிடப்பில் போடப்பட்டு, பின்பு பொது நல மனு மூலம் நீதி மன்றங்கள் தலையிட்டு ஓரளவு நிவாரணம் கிடைப்பது வழக்கமாகி விட்டது.

சேது சமுத்திரத் திட்டம், முல்லைப் பெரியாறு விவகாரம், காவிரிப் பங்கீடு , கூடங்குளம் விவகாரம் போன்ற விஷயங்களில் பொது கருத்து ஏற்படும் வாய்ப்பு குறைவு. ஆனால் மக்களில் உடல் நலம், கல்வி, சுகாதாரம், மருத்துவம் ஆகிய விஷயங்களில் ஏன் பொதுக் கருத்து கட்சிகளிடையே இல்லை? எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஏன் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்கான வாய்ப்பே ஏன் இல்லை?

இதற்குக் காரணம் என்ன? அரசியல்வாதிகளின் மீது எல்லாப் பழியையும் போட்டு விட்டு இந்தக் கட்டுரையை நிறைவு செய்து விடலாமா?

இதற்கான விடையைக் கூறியதற்காகத் தான் அமர்தியா சென் நோபல் பரிசு பெற்றார். பங்களா தேஷின் வறுமைக்கான காரணங்களை அவர் ஆராய்ந்து மகத்தான முடிவுகளை வெளியிட்டார். மக்கள் நலத் திட்டங்களைப் புரிந்து கொண்டு, பங்கேற்று, மேம்பட்ட வாழ்க்கைத்தரத்தை அடைய மக்களுக்கு கல்வி அறிவு அவசியம். அதைத் தவிரவும் தமது நலன் பற்றிய சாதக பாதக அம்சங்கள் பற்றிய அறிவு மிக மிக அவசியம். கல்வி அறிவும் வாழ்க்கைத் தரம் உயர்வதும் ஒன்றோடொன்று இணைந்தவை. அரசாங்கம் சுகாதாரம், மருத்துவம் மேம்பட விரும்பினால் மக்கள் கல்வியும் அவசியம் அவற்றுடனே இணைந்து முன்னேறினால் மட்டுமே மக்கள் தமக்கான நலத் திட்டங்களில் பங்கு பெற்று பயன் பெற இயலும்.

பள்ளிக்கூடப் பாடத்திட்டத்தில் ஒன்று சேர்க்கப் பட்டுத்தான் மக்கள் புரிந்து கொள்வார்கள் என்று கட்டாயமில்லை. சமூக நலனில் அக்கறையுள்ள விஞ்ஞானிகள், கல்வியாளர்கள் எழுதுபவை சென்று சேர வெகுஜன ஊடகங்கள் பணியாற்ற இயலும். நம்மால் இன்னும் நன்றாக நலமாக வாழ இயலும் என்னும் எண்ணமும் புரிதலும் மக்கள் மனதில் வேறுன்ற இன்றைய சூழலில் தொலைக்காட்சியில் ஆரோக்கியமான விவாத அரங்குகள் முக்கியமான விஷய தானங்களைச் செய்பவையாக இயங்க வேண்டும். பரபரப்புக்கு இடம் இருந்தால் மட்டுமே ஒரு உருப்படியான விஷயம் தொலைக்காட்சியில் இடம் பெறும் என்பதே இன்றைய நிலை.

மக்களின் அறிவும், புரிதலும் மட்டுமே சரியான இலக்குகளுக்கான எழுச்சிக்கு வழி வகுக்கும். மக்கள் மதிக்கும் எந்த ஒரு புகழ் வாய்ந்த நபரும் தனக்கென உருவாகி வழி தெரியாமல் தன் பின்னே திரியும் பெரிய கூட்டத்திற்கு வழி காட்ட வேண்டும். ஆட்டு மந்தையாய் தன்னைப் பின் தொடர்வோரை அறிவுப் பசிக்குத் தூண்ட வேண்டும்.

எல்லாக்கட்சிகளும் மக்கள் நலனுக்கான ஒரு குறைந்த பட்ச வரைவு நகல் திட்டத்தில் ஒன்றிணைந்து மாறி மாறி வரும் எந்த அரசாயிருந்தாலும் அத்திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். “மாமியாரா? மருமகளா?” ‘கிராமமா? நகரமா?” போன்ற பட்டிமன்றங்களை விட்டொழித்து வல்லுநர்களை தொலைக்காட்சியில் பேச வைத்து மக்கள் தம் முன்னுரிமைகளை, தமது தலையாய பிரச்சனைகளைப் புரிந்து கொண்டு ஆட்சியாளர்களைத் தட்டிக் கேட்குமளவு வளர வேண்டும். ஜனநாயகத்தின் பலமும் பலவீனமும் “மக்கள் எவ்வழி மன்னன் அவ்வழி” என்பதே.

Series Navigationஇன்றைய தமிழ் சினிமாவின் சென்டிமெண்ட் வியாபாரம்மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) அங்கம் -1 பாகம் – 1
author

சத்யானந்தன்

Similar Posts

4 Comments

 1. Avatar
  punai peyaril says:

  நெஞ்சு பொறுக்குதில்லையே-இந்த
  நிலை கெட்ட மனிதரை நினைத்து விட்டால்— யார் யாரோ தங்களை கவிஞர் என்று சொல்கிறார்கள்… இவரை, என்னவென்று சொல்ல…. வணக்கம் என்றும் இவருக்கு…. நன்றி இவரை பற்றி எழுதியதற்கு…

 2. Avatar
  Sathyanandhan says:

  நன்றி. நாம் நம் முன்னோர்களான மகத்தான ஆளுமைகளை, அப்பழுக்கற்ற நன்நெஞ்சங்களை, நல்ல சமூகம் உருவாக அவர் கண்ட மகத்தான கனவுகளை மறந்து விட்டோம். இந்த சோகம் மாறும் போது சமுதாயம் முன்னேறும். வணக்கம். சத்யானந்தன்

 3. Avatar
  Kavya says:

  அமார்த்தியா சென் சொல்வது பொதுவாகச் சரிதான். கல்வியறிவு பெற்றவர்களையும் அர்சியல்வாதிகள் கைக்குள் போட முடியும். எப்படி? அக்கல்வியறிவு பெற்றவர்களின் சுயநலத்தைத் தங்களுக்குச் சாதகாகப்பயன்படுத்தி. ஒரு கல்வியறிவு படைத்தோர் நிறைந்த தெரு ஒன்று இருந்தால், அங்கு அரசியல்வாதி அவர்களுக்கு வேண்டியதைச் செய்து த்ன்னலம் காப்பாற்றிக்கொள்வான். நாலைந்து தெரு தள்ளி நான்கு நாட்களாக கெட்ட நீர் தேங்கிக்கிடக்கிறது; அல்லது சாலை சரியில்லையென்றால், கற்றவர் நிறைந்த தெருவினர் அதைபப்ற்றி நினைத்துக்கூட பார்ப்பதில்லை. அதே வேளையில் அத்தெருவில் க்ட்டிய நீரால் நோய்பரவி தம்தெருவுக்கும் வந்து விடுமோ என்றச்சம் வந்தால், இவர்கள் அதைத்தம்பிரச்சினையாக்கித் தீர்வுக்குத் துடிப்பரல்ல்வா? ஆக, கல்விக்கும் பொதுநலம் பேணுவதற்கும் தொடர்பில்லை என்று இந்தியர்கள் நிரூபித்து வருகிறார்கள். மதவெறிக்கு எளிதில் வீழ்கிறார் என்று தெரிந்தே வெளிநாடுகளில் வேலைப்பார்க்கும் இந்தியர்களிடையே மதப்பிரச்சாரங்களை இந்திய மதயமைப்புக்கள் தூண்டிவிட்டுவருகின்றன் எனப்து கண்டிபிடிக்கப்பட்டுவருகிறது. இணயதளங்கள் படிக்காப்பாமரர்களால் எழுத்ப்படுவதில்லை. அங்கு எவ்வள்வு வெறி !

  பிளாஸ்டிக் கவரின் வைத்து வாங்கி சுற்றுப்புறச்சூழலை மாசுபடவைப்போர் படிப்பில்லா ப்ட்டிக்காட்டானா? படித்தவரும் தெரிந்தே செய்கிறார். ஏன், எங்கோதானே மாசுபடுகிறது. எனக்கு என்ன கவலை?

  கல்வியறிவு வேண்டிய இடங்களும் உள்ளன. எ.கா. கூடங்குளம். படிப்பறிவில்லா மக்களுக்கு அதன் விளைவுகள் தெரியாது. ஆதூ வீஞ்ஞானம். அவரகளுக்கும் தெரிய வேண்டும். ஆனால் வெகு சாதாராண விசயங்களுக்கு அவசியமில்லை. பிளாஸ்டி சாக்கடையை அடைத்து தெருவை நாசம் பண்ணுகிறது எனப்து கண்கூடு. பார்த்தே தெரிந்து கொள்ளலாம். தெருவில இரவில் ஒலிபெருக்கிகள் அலறுவதனால் குழந்தைகள் தூங்க முடியவில்லை; மாணவர்கள் படிக்கமுடியவில்லை; இதுபோன்ற சாதாரண விசயஙக்ளுக்கு படிப்பறிவோ, விளக்க்கூட்டங்களோ தேவையே இல்லை. தமிழ்நாட்டு மக்களில் பெரும்பாலோர் தமிழ் நாளிதழ்கள் படிப்பவர்தான். அவை நாள்தோறும் படங்களையும் வெளிவிடுகின்றன.

  இருந்தும் மக்களிடம் எழுச்சியில்லை. மக்கள் பொதுநலம் பேணாக்குணப்பாங்கே காரணம். கற்றவனுக்கும் க்ல்லாதவ்னுக்கும் பொதுநலவுணர்வில்லை. தான் வாழ்ந்தால் சரியென்ற நினைப்பு மட்டுமே இருக்கிறது.

  இதே அமார்த்திய சென் இன்னொரு இடத்தில் சொன்னதாவது: இந்தியாவில் அரசு எவ்வளவுதான் நன்றாக புதுப்புது பொதுநலத்திட்டங்கள் தீட்டி அதைச்செயல் படுத்த ஆவன் செய்தாலும், மக்களின் அடிப்படை ஊழல் குணம் அவைகளை வெற்றியடையாமல் பண்ணுகின்றன. அவர் அரசியல்வாதிகளை மட்டும் சொலல்வில்லை. ஒட்டுமொத்தமாக இந்தியர்களைச்சொல்கிறார். Moral bankruptcy sweeps across the population in public affairs. It has not spared the Anna team: one exploits air concessional fares; the other member was ousted because he acted as a spy. From amoung this population arise the wily politicians to serve the wily people !

 4. Avatar
  R. Jayanandan says:

  எல்லாக்கட்சிகளும் மக்கள் நலனுக்கான ஒரு குறைந்த பட்ச வரைவு நகல் திட்டத்தில் ஒன்றிணைந்து மாறி மாறி வரும் எந்த அரசாயிருந்தாலும் அத்திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். “மாமியாரா? மருமகளா?” ‘கிராமமா? நகரமா?” போன்ற பட்டிமன்றங்களை விட்டொழித்து வல்லுநர்களை
  தொலைக்காட்சியில் பேச வைத்து மக்கள் தம் முன்னுரிமைகளை, தமது தலையாய பிரச்சனைகளைப் புரிந்து
  கொண்டு ஆட்சியாளர்களைத் தட்டிக் கேட்குமளவு வளர
  வேண்டும். ஜனநாயகத்தின் பலமும் பலவீனமும் “மக்கள் எவ்வழி மன்னன் அவ்வழி” என்பதே.

  டிவி கொஞ்ச நேரமாவது, மக்கள் சிந்தனைகளூக்கு முக்கியத்துவம்,
  நாட்டில் நல்ல பல திட்டங்கள் உருவாகலாம். உங்கள், சிந்தனைக்கு நன்றி.

  இரா. ஜெயானந்தன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *