மலை பேச்சு – செஞ்சி சொல்லும் கதை -25

author
0 minutes, 8 seconds Read
This entry is part 37 of 41 in the series 13 மே 2012

28. “அம்மாவும் ஜெகதீசனும் இடைக்குல பெண்மணி ஜெகதாம்பாள் பாதுகாப்பில் இருக்கிறார்கள்; அவர்களிருவரையும் அதிக நேரம் அந்நியபெண்மணியின் பொறுப்பில் விட்டு வைப்பதும் நல்லதல்ல. இன்னொருமுறை வருகிறேன். சாவகாசமாக உன்னிடம் சம்பாஷிக்க விஷயங்கள் இருக்கின்றன”, எனக்கூறி சித்ராங்கி செண்பகத்திடம் விடைபெற்றாள்.

– இதோ பக்கத்தில்தானே இருக்கிறீர்கள், ஒரு வண்டியை அனுப்பி அழைத்துவர ஏற்பாடு செய்யட்டுமா, என்ற சேடியின் வற்புறுத்தலுக்கு சித்ராங்கி கூறிய சமாதானம் அவளுக்கு நியாயமானதாகத் தோன்றியிருக்குமாவென்கிற அக்கைறையின்றி புறப்பட்டாள்.

வண்டிக்காரன் மாடுகளை இழுத்துப்பிடித்து, நாக்கில் சொடுக்குப்போட்டு ஏர்காலிலிருந்து சித்ராங்கின் இல்லத்தின்முன்னே குதித்தபொழுது சாயங்காலம் ஆகியிருந்தது. குறிசொல்லும் மண்டபத்தில் செண்பகத்தைப் பார்ப்பதற்கு முன்பாக சகலவியாதியையும் குணப்படுத்தும் கமலக்கண்ணியின் முலைப்பால் கையிலிருந்தது. இது தவிர பிரசாதமென்று பக்தர்களுக்கு தானமாக வழங்கிய விபூதி, உதிரிப்பூக்கள், வேப்பிலைக்கொழுந்து ஆகியவையும் மடியிலிருந்தன. வாசற்படியில் கால்வைத்தபோது, வலது திண்ணையில் படுத்திருந்த ஜெகதீசன் எழுந்து உட்கார்ந்தான். ஒரு வாரத்திற்கு முன்பு அம்மா அழைத்துவந்த ஜெகதீசனில்லை. விலா எலும்புகள் தசைக்குள் புதைந்திருந்தன. எண்ணெய் பூசியதுபோல சரீரத்திற்கு மினுமினுப்பு கிடைத்திருந்தது.

-ஹி..ஹி.. ஈறுகள் தெரிய பற்களைக் காட்டி சிரித்தான். கண்களில் மொய்த்த கொசுக்களை ஓட்டக் கைகளில் வலுவிருந்தது. அவனிடம் வலதுகை ஐந்துவிரல்களையும் முத்திரைபிடிப்பதுபோலக் குவித்து:

– சாப்பிட்டாயா? எனக்கேட்டாள்.

– அம்மா!

திரும்பிப் பார்த்தாள், வண்டிக்காரனின் குரல்.

– என்னய்யா?

– நான் புறப்படறேன் அம்மா. தம்பி கார்மேகத்திடம் பேசிக்கொள்கிறேன்

– செய்யுங்கள்- என்றவள் பார்வை மீண்டும் ஜெகதீசனிடம் படிந்தது.

– உங்களிடம் சாப்பீட்டீர்களா என்று கேட்டேன், நீங்கள் பதிலேதும் சொல்லவில்லையே?

அவன் தலையாட்டினான். தாய் மீனாம்பாள் மனதை சித்ராங்கி பிறந்ததிலிருந்து நன்றாகப் படித்தவள். ஜெகதீசன் பட்டினிகிடக்க வேடிக்கை பார்க்கமாட்டாளென்று நன்கு தெரியும். சித்ராங்கியிடம் ஒவ்வொருநாளும், “நாளைக்கு முதல்வேலையாக இப்பைத்தியத்தை வீட்டைவிட்டு துரத்தினால்தான் நமக்கு நிம்மதி”, என்பாள். ஆனால் உணவருந்த உட்காருகிறபொழுது, “ஏண்டி அந்தப் பிள்ளைக்கு ஏதாச்சும் கொடுத்தாயா இல்லையா?” என்ற கேள்வி தவறாமல் வரும்.

அவன் தலையாட்டலில் நிம்மதியுற்றவளாய் நிலைவாசற்படியில் கால் வைக்கிறபொழுதுதான் அவன் வேட்டி அவிழ்ந்து அம்மணமாக இருப்பது தெரிந்தது. திடுக்குற்றவளாய் கையிலிருந்தவற்றை திண்ணையில் வைத்துவிட்டு குறட்டோரமாக வேகமாக நடந்து திண்னையின் மறுகோடிக்குவந்தாள். உட்கார்ந்திருந்தவனை மார்பில் சாய்த்து வேட்டிமுனையை முடிந்தாள்.

– வந்ததும் வராததுமாக அவனுக்கு சிசுருட்ஷை ஆரம்பித்தாகிவிட்டதா? மீனாம்பாள் குரல்- வாசலுக்கு வெளியே இருந்தாள்.

– உள்ளே போம்மா. எதற்காக ஊதற்காற்றில் நிற்கிறாய்.. உனக்குதான் கபமிருக்கிறதே, வீணாய் உடம்பை ஏன் கெடுத்துக்கொள்கிறாய்.

– ஏதோ என்னைப்பற்றியும் நினைக்கிறாயே சந்தோஷம். இவன் வந்த நாளிலிருந்து என்னை மறந்துபோச்சுதோவென நினைத்தேன். ரங்கநாதர் புண்ணியத்துலே அப்படி எதுவுமில்லை. செண்பகத்தைப் பார்த்தாயாமே?

இவள் கரத்தைப் பற்றிய ஜெகதீசனிடம், ‘பிறகு வந்து உங்களைப் பார்க்கிறேன்’ என்பதுபோல கைஜாடை செய்துவிட்டு அவன் முகபாவத்தை பார்த்தாள். அவன் தலையாட்டலை சம்மதமாக எடுத்துக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்தாள். கூடத்தில் பாய்விரித்து மீனாம்பாளும் ஜெகதாம்பாளும் உட்கார்ந்திருந்தார்கள். ஐந்தடி தள்ளி கார்மேகம் உட்கார்ந்திருந்தான். சித்ராங்கி இருபெண்மணிகளுக்கிடையில் சம்மணமிட்டு பாயில் உட்கார்ந்தாள்.

– ஏண்டி செண்பகத்தைப் பார்த்தாயாமே? – மீனாம்பாள் மகளிடம் கேட்டாள்.

– அவளைப்பற்றியே மூச்சுவிடாமல் கேட்டுக்கொண்டிருக்கிறாயே? பார்த்தேன். இப்போது என்ன நடக்கணுமெனென்று எதிர்பார்க்கிற. நாங்கள் பட்டினிகிடந்துசாகிறோம். எங்ககிட்ட நீ பார்த்த சேவகத்தை நினைத்து ஏதாச்சும் சகாயம்செய்யென காலில் விழவா?

– சித்தெமுன்னே நன்றாகத்தானே இருந்தாய். அதற்குள்ள குணம் கெட்டுப்போகுமா என்ன? நீ சொல்லவில்¨யென்றாலென்ன கார்மேகம் எல்லா வயணத்தையும் சொன்னான்.

சித்ராங்கி கார்மேகத்தைத் திருப்பிபார்த்தாள். அவன்மீது முதன்முறையாக கோபம் வந்தது. அவனை முறைத்துப் பார்த்தாள். எதையும் தன்னிடம் தெரிவிக்க அவன் கடமைபட்டவன் என்பதுபோல அவள் பார்வை இருந்தது. அவன் மௌனம் சாதித்தான்.

– கிருஷ்ணபுரமே செண்பகத்தின் முந்தானையிலிருக்கிறதென்கிறான் கார்மேகம்.

சித்ராங்கியின் பார்வை மீண்டும் கார்மேகம் திசைக்குத் திரும்பியது. அவன் தலையாட்டினான்.

மீனாம்பாள் தொடர்ந்தாள்:

– சிலமாதங்களுக்கு முன்பாக மலைக்கு ஆட்டை தேடிபோனபோது இராத்திரிவேளையில் செண்பகத்தை காவலர்கள் ராஜகிரிபக்கம் இழுத்துபோனதைக் கண்ணாரகண்டிருக்கிறான். அதற்குப்பிறகு அவள் கமலக்கண்ணியாக அவதாரமெடுத்திருப்பதும் கிருஷ்ணப்ப நாயக்கர் அவள் சொல்லுக்குத் தலையாட்டுவதும் புரியாத மர்மம் என்கிறான். என்ன அழிவுகாலமோ?

– அழிவுகாலமில்லாமலா? மன்னர் மீண்டும் மஹாமண்டலத்தை எதிர்த்து அரசியல் செய்யப்போகிறாராம். நேற்று குறிகேட்க சென்றிருந்தபோது அருள்வாக்கு கேட்க மன்னர் வந்துபோனதாக பேசிக்கொண்டார்கள்-கார்மேகம் குறுகிட்டான். .

– ஏன் அதனாலென்ன ஆளுகின்றவர்கள் சுதந்திரமாக இருக்கவேண்டுமென்று நினைப்பதில் என்ன தவறு இருக்க முடியும் – சித்ராங்கி

– தவறில்லைதான். ஆனால் நம்முடைய பலம் எதிராளியின் பலம் இவருக்கு துணை நிற்கிறவர்களின் பலம் என்றெல்லாம பார்க்க வேண்டுமில்லையா? இவர் பெரிதும் நம்பிகொண்டிருந்த லிங்கம நாயக்கர் கதை என்னவாயிற்றென்று உலகம் அறியுமே.

– அரசர்கள் சாமான்யமானவர்களா? நீ சொல்லும் விடயங்களெல்லாம் அவர்களுக்கும் தெரிந்ததுதானே? பார்க்காமலா இருப்பார்?

– இவர் பார்க்கிறவரில்லையே. இருபது வருடங்களுக்கு முன்பு என்ன நடந்தது? இதுபோலவே விஜயநகர அரசாங்கத்தை எதிர்த்தார், தேவையின்றி பலமாதங்கள் சிறையிலிருந்தார். தஞ்சை இரகுநாத நாயக்கர் விஜயநகர பேரசுவிற்கு இஸ்லாமியரின் படையெடுப்பின்போது தமது படையை அனுப்பி உதவினார். அதற்கு கைமாற்றாக தஞ்சை மன்னர் இரகுநாத நாயக்கர் கேட்டுக்கொள்ள விஜயநகரமன்னர் மகாராயர் வெங்கிடபதி நாயக்கர், சிறையிலிருந்து நமது மன்னரை விடுவித்து கைப்பற்றிய நாட்டையும் அவர் வசம் ஒப்புவித்தார். அதற்கு நன்றிக்கடனாக இரகுநாத நாயக்கருக்கு இவர்மகளையும் திருமணம் செய்துவைக்கவேண்டியிருந்தது. மீண்டும் இப்போது விஜயநகர அரசாங்கத்திற்கு திரைசெலுத்த மாட்டேன் என்கிறார். இவர் திரை செலுத்தவில்லையே தவிர, நம்மிடம் தண்டல் செய்வது எவ்வித குறையுமின்றி நடந்தேறுகிறது. போதாததென்று இராத்திரி காலங்களில் மன்னரின் வீரர்களே குதிரையில் வந்து வரபேர் போரபேர்களை அடிச்சு பறிக்கிறதும் நடக்கிறது. மன்னருக்கு நெருக்கமான இருவர் இதைச் செய்கிறார்களென்று வதந்தி. விஜயநகர அரசாங்கமும் தூதுமேல் தூது அனுப்பி பார்த்துவிட்டார்கள். மகாராயரின் ஒற்றர்கள் ஏற்கனவே நாட்டில் நிலவரத்தை அறிய வந்திருப்பதாக தெரியவந்திருக்கிறது. எந்நேரமும் விஜய நகரப்படைகள் கிருஷ்ணபுரத்தின் மீது படையெடுக்கலாம் என்பதுதான் நாட்டின் நிலவரம்.

(தொடரும்).

Series Navigationரியாத் தமிழ்ச்சங்க விழாவில் சுகி.சிவம், பேராசிரியர் அப்துல்லா பேச்சுவலைத் தளத்தில்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *