பஞ்சதந்திரம் தொடர் 47

This entry is part 35 of 41 in the series 10 ஜூன் 2012

 

மூடத் தச்சன்

ஒரு ஊரில் ஒரு தச்சன் இருந்தான். அவன் மனைவி ஒரு வேசி என்பது ஊரறிந்த சங்கதி. அவள் நடத்தையைச் சோதிக்க நினைத்தான் தச்சன்

‘’இவளை எப்படிச் சோதிப்பது?

பெண்களின் கற்பின் முன்னே நெருப்பு குளுமையடையும், நிலா நெருப்பாகிவிடும், கெட்டவன் நல்லவனாவான்.

என்றொரு பழமொழி உண்டு. ஊர் ஜனங்கள் பேசிக்கொள்வதிலிருந்து இவள் ஒரு வேசி என்று எனக்குத் தெரியும்.
வேதத்திலோ சாஸ்திரத்திலோ காணாததையும் கேளாததையும், பிரபஞ்சம் முழுவதிலுமுள்ள சகல விஷயங்களையும், ஜனங்களிடமிருந்து தெரிந்து கொள்ளலாம்.

என்றொரு பழமொழி உண்டல்லவா?’’ என்று யோசித்தான். தன் மனைவியிடம், ‘’அன்பே, காலையில் நான் வேறு கிராமத்துக்குப் போகிறேன். அங்கே சில தினங்கள் தங்க வேண்டிவரும். ஆகவே நீ எனக்கு நல்ல சாப்பாடு தயார் செய்துவை’’ என்று சொன்னான். அவனுடைய பேச்சைக் கேட்டு அவன் சந்தோஷமடைந்தாள். எல்லாக் காரியங்களையும், விட்டுவிட்டு, உற்சாகத்தோடு நெய்யும் சர்க்கரையும் கலந்து உணவு தயாரித்தாள்.

கனத்த மேகங்களால் பகல் இருண்டிருக்குபோதும், ஊர் வீதிகளில் சேற்றால் நடக்கமுடியாமல் இருக்கும்போதும், கணவன் வெளியூருக்குச் சென்றிருக்கும்போதும், சோரம் போகிறவளுக்குக் கொண்டாட்டந்தான்.

என்று சொல்லியிருப்பது சரியே.

விடியற்சாலையில் தச்சன் எழுந்து வீட்டிலிருந்து வெளியேறினான். அவன் போய்விட்டதை அவள் அறிந்துகொண்டு தன்னை அழகு படுத்திக்கொள்வதிலேயே ஈடுபட்டு ஒருவாறு பகல்பொழுது கழிந்தது. பிறகு, ஏற்கனவே தனக்குத் தெரிந்த ஒரு ஸ்திரீலோலனின் வீட்டுக்கு அவள் போய், ‘’அந்தப் படுபாவியாகிய என் புருஷன் வெளியூருக்குப் போயிருக்கிறான். ஆகவே, ஊர் உறங்கியபின் நீ என் வீட்டுக்கு வந்துவிடு’’ என்று சொன்னாள்.

அதன்படியே அவனும் வந்தான்.

அந்தத் தச்சன் பகற்பொழுதைக காட்டில் கழித்துவிட்டு, மாலையில் திரும்பி தன் வீட்டின் பக்கவழியே நுழைந்து கட்டிலின் அடியில் ஒளிந்து கொண்டான். அந்தச் சமயத்தில் அந்த ஸ்திரீலோலன் வந்து அந்தப் படுக்கையில் உட்கார்ந்தான். அவனைப் பார்த்துவிட்டுத் தச்சன் மிகுந்த கோபமடைந்தான். ‘’எழுந்துபோய் இவனைக் கொல்லலாமா? அல்லது, இரவில் இருவரும் தூங்கியபின் சுலபமாக இவர்களைக் கொல்லலாமா? அல்லது, அவள் என்ன பேசுகிறாள், என்ன செய்கிறாள் என்று கவனிக்கட்டுமா?’’ என்று யோசித்தான். அந்தச் சமயத்தில் அவள் வீட்டில் கதவை நன்றாகப் பூட்டிவிட்டு வந்து படுக்கையில் ஏறினாள்.

அவள் ஏறும்போது தச்சனின் உடம்பின்மீது அவள் கால் கட்டுவிட்டது. உடனே அவள் ‘நிச்சயம் அவன் அந்தப் படுபாவி புருஷனாகத்தான் இருக்க வேண்டும். என்னைச் சோதிக்க வந்திருக்க வேண்டும். பெண்களின் சாகஸத்தை அவனுக்குக் காட்டுகிறேன்’ என்று யோசித்து முடிவு செய்தாள்.

இவள் இப்படி நினைத்துக்கொண்டிருக்கையில் அந்தக் காமுகன் அவளைச் சேர துடிதுடித்துக் கொண்டிருந்தான். அப்போது அவள் தன் கைகளைப் கூப்பி, ‘’மகானுபாவனே, நீ என்னைத் தொடாதே’’ என்று சொன்னாள். ‘’அப்படியானால் என்னை ஏன் அழைத்தாய்?’’ என்றான் அவன். அதற்கு அவள், ‘’ஏய், நான் விடியற்காலையில் அம்மனைத் தரிசிக்கச் சண்டிகேஸ்வரி கோவிலுக்குப் போயிருந்தேன். அங்கு திடீரென்று ஆகாயத்திலிருந்து ‘பெண்ணே, என்ன செய்வேன்? நீ என் பக்தைதான். இருந்தாலும் விதிவசத்தால் நீ ஆறுமாதகாலத்தில் விதவையாகப்போகிறாய்’ என்று ஒரு குரல் கேட்டது. அதற்கு நான், ‘’ஹே பகவதி! ஆபத்துத் தெரிந்த மாதிரியே பரிகாரமும் உனக்குத் தெரிந்திருக்கும். என் கணவன் நூறு வருஷங்கள் உயிரோடிருப்பதற்கு ஏதாவது உபாயம் உண்டா?’’ என்று கேட்டேன். ‘’ஆம் இருக்கிறது, ஆனால் பரிகாரம் முழுவதும் உன்னைப் பொறுத்திருக்கிறது’’ என்று தேவி பதில் சொன்னாள். ‘’என் உயிரைத் தரவேண்டியதானாலும் சரி, கட்டளையிடு. நான் செய்கிறேன்’’ என்றேன் நான். அதற்குத் தேவி, ‘’பரபுருஷனோடு ஒரே படுக்கையில் ஏறி ஆலிங்கனம் செய்து கொண்டால் அப்போது உன் கணவனைப் பற்றியுள்ள கண்டம் அந்தப் பரபுருஷனைப் பற்றிக்கொள்ளும். உன் கணவனும் நூறு வருஷங்கள் உயிரோடு இருப்பான்’’ என்றாள் தேவி. அதனால்தான் நான் உன்னை வேண்டிக் கொண்டேன். ஆகவே, இனி உன் இஷ்டப்படிச் செய். தேவியின் வாக்கைப் பொய்யாக்கக் கூடாது. இது நிச்சயம்’’ என்றாள் அந்த வேசி மனைவி. அந்த ஸ்திரீலோலன் தனக்குள்ளே சிரித்துக்கொண்டான், அவன் முகம் மலர்ந்தது. அவள் சொன்னபடியே செய்தான்.

மூடத்தச்சன் அவளுடைய பேச்சைக் கேட்டுவிட்டுப் புளகமடைந்த தேகத்துடன் கட்டிலின் கீழேயிருந்து வெளிவந்து பேசினான். ‘’கற்பரசியே, நீ செய்தது நல்லது. என் குலவிளக்கே,  கெட்ட மனிதர்களின் பேச்சைக் கேட்டு நான் உன்மேல் சந்தேகம் கொண்டேன். உன்னைச் சோதிக்க வேண்டி வேறு கிராமத்துக்குப் போவதாகச் சொல்லிவிட்டு கட்டிலின் கீழ் ஒளிந்திருந்தேன். ஆகவே, வா, என்னை அணைத்துக்கொள்’’ என்று சொன்னான். சொல்லி விட்டு, அவளை அவன் ஆலிங்கனம் செய்து தோளில் ஏற்றிக்கொண்டான். பிறகு ஸ்திரீலோலனைப் பார்த்து, ‘’ஏ மகானுபாவனே, நீ இங்கு வந்தது நான் செய்த புண்ணியத்தினால்தான். உன் அருளால் எனக்கு நூறு வருஷம் ஆயுள் கிடைக்கிறது. ஆகவே, நீயும் என் தோளில் ஏறிக்கொள்’’ என்று தச்சன் சொன்னான். அந்தக் காமுகனுக்கு விருப்பமில்லாதிருந்தும், தச்சன் அவனைப் பலவந்தமாகத் தோளில் ஏற்றிக்கொண்டு கூத்தாடினான். எல்லா உறவினர் களுடைய வீட்டு வாசல்களுக்கும் கூத்தாடியபடியே சென்று திரிந்தான்.

அதனால்தான் ‘கண்ணெதிரே பாவம் செய்தாலும் அதை நிம்மதியாகப் பார்த்தபடியே மூடன் சந்தோஷிக்கிறான்’’ என்றெல்லாம் சொல்லலானேன்’’ என்றது ரக்தாட்சன்.

அது மேலும் பேசுகையில், ‘’இனிமேல் நாம் வேரறுக்கப் பட்டமாதிரியே, நாசமான மாதிரியே.

இதமான வார்த்தை பேசி, விபரீத காரியம் செய்பவன் நண்பன் உருவில் வந்த எதிரிதான், என்று கூரிய புத்தியுடையவர்கள் அவனைக் கண்டு கொள்கின்றனர்.

என்றொரு பழமொழி உண்டு. மேலும்,

இடத்துக்கும் காலத்துக்கும் பொருந்தாத, அறிவில்லாத, யோசனைகளைக் கேட்டு நடந்தால், சூரியன் முன்னே இருள் நீங்குவது போல், அடைந்த பொருளும் போய்விடும்.

என்றது ரக்தாட்சன்.

அதன் வார்த்தையை ஆந்தைகள் சட்டைசெய்யவில்லை. ஸ்திரஜீவியைத் தூக்கிக்கொண்டு தங்களுடைய கோட்டைக்குப் போகத் தொடங்கின. போகிறவழியில் ஸ்திரஜீவி ஆந்தையரசனைப் பார்த்து, ‘’அரசே, ஒன்றும் செய்யாமலே அந்த அவஸ்தைக்கு ஆளாகிய என்னை ஏன் அழைத்துப் போகிறீர்கள்? நான் தீக்குளிக்க விரும்புகிறேன். நெருப்புக்கு ஏற்பாடு செய்தால் உங்களுக்கு நான் என்றும் கடமைப்பட்டவனாவேன்’’ என்றது.

அதன் மனதில் இருந்த எண்ணத்தை ரக்தாட்சன் தெரிந்து கொண்டது. ‘’நெருப்பில் ஏன் விழ விரும்புகிறாய்?’’ என்று கேட்டது. ‘’உங்கள் பொருட்டாகத்தான் நான் இந்தக் கதிக்கு ஆளானேன். ஆகவே அவர்களை வஞ்சம் தீர்ப்பதற்காக ஆந்தையாக மறுபிறப்பெடுக்க ஆசைப்படுகிறேன்’’ என்றது ஸ்திரஜீவி.

ரக்தாட்சன் ராஜநீதியில் நிபுணன். எனவே, அது ஸ்திரஜீவியிடம் நண்பனே, கபடத்திலும் இரண்டு அர்த்தம் கொள்ளும்படி பேசுவதிலும், நீ கெட்டிக்காரனாக இருக்கிறாய். நீ ஆந்தையாகவே பிறந்தாலும் உன் காக்கை இனத்தையே நீ பெரிதாக மதிப்பாய். இந்தக் கதையை நீ கேட்டதில்லையா?

சூரியனும், மேகமும், காற்றும், மலையும் பெண் எலியை மணக்க இருந்தும், அது அவர்களில் யாரையும் கணவனாக ஏற்றுக்கொள்ள மறுத்தது. தன் இனத்தையே மீண்டும் வந்தடைந்தது. சொந்த இனத்தை விட்டு யாரும் செல்ல முடியாது!

என்றது ரக்தாட்சன். ‘’அது எப்படி?’’ என்று ஸ்திரஜீவி கேட்க, ரக்தாட்சன் சொல்லிற்று:

எலிப்பெண் எலியானாள்

கரடுமுரடான கற்பாறைகளுள்ள கரைமீது அலைநீர் மோதி மோதி ஹ¥ங்காரம் செய்கின்றது. அந்தப் பேரொலியைக் கேட்டு மீன்கள் பயந்து துள்ளிக் குதிக்கின்றன. மீன்கள் துள்ளுவதால் முத்து முத்தாக வெண்ணுரைத் திவலைகள் கொப்பளித்து அலைகளுக்குப் புள்ளியிட்டு அழகு செய்கின்றன. இந்தக் கோலத்தில் காட்சி தரும் கங்கை நதிக்கரையின் அருகிலே ஒரு ஆஸ்ரமம் இருந்தது. அதில் பல ரிஷிகள் இருந்தனர். ஓமம், நியமம், தவம், படிப்பு, உபவாசம், யாகம், சடங்கு, அனுஷ்டானம், பாராயணம், முதலிய காரியங்களில் அவர்கள் ஈடுபட்டுக் காலங்கழித்து வந்தனர். அவர்கள் குடிப்பது சுத்த ஜலம்தான். அதையும் அளவாகக் குடிப்பார்கள். கிழங்குஇ வேர், பழம், பாசியையே அவர்கள் உண்டு வந்தனர். அதன் காரணமாக அவர்களின்  உடல் வாடியிருந்தது. மரவுரியாலான கோவணமே அவர்கள் அணிந்த ஆடை.

அந்த ஆஸ்ரமத்தில் யாக்ஞவல்கியர் என்ற முனிவர்கோன் இருந்தார். அவர் கங்கையில் குளித்துவிட்டு, வாய் கொப்பளிக்கும் தருணத்தில், ஒரு பருந்தின் வாயிலிருந்து நழுவிய பெண் எலி ஒன்று அவருடைய கையில் வந்து விழுந்தது. அவர் அதைப் பார்த்து ஒரு ஆலிலைமேல் வைத்துவிட்டு மறுபடியும் குளித்து வாய் கொப்பளித்தார். அத்துடன் பிராயச்சித்தச் சடங்கும் செய்து முடித்தார். பிறகு தமது தவவலிமையால் அந்தப் பெண் எலியை ஒரு மனிதப் பெண்ணாக மாற்றி ஆஸ்ரமத்துக்கு அழைத்துச் சென்றார். குழந்தை இல்லாதிருந்த தன் மனைவியிடம், ‘’அன்பே, அவளை ஏற்றுக்கொள். உன் பெண்போல் அவள் வந்திருக்கிறாள். அவளைக் கவனமாக வளர்த்து வா’’ என்று சொன்னார். ரிஷியின் மனைவி அவளை வளர்த்துச் செல்லம் கொண்டாடி வந்தாள். பெண்ணுக்குப் பனிரெண்டு வயதானதும், கல்யாண வயது வந்துவிட்டதென்று கண்டு, ரிஷியின் மனைவி தன் கணவனிடம், ‘’நாதா, உங்கள் பெண் கல்யாண வயதைத் தாண்டிவருவது உங்களுக்குத் தெரியவில்லையா?’’ என்று கேட்டாள்.

‘’அன்பே, நீ சொல்வது நிஜமே. ஒரு முதுமொழி கூறுவதுபோல்:

பெண்களை முதலில் சந்திரன், கந்தர்வன், அக்னி முதலிய தேவர்கள் அனுபவிக்க வேண்டும். பிறகுதான் மனிதன் அனுபவிக்கிறான். அதனால் பிறகு பெண்ணுக்குத் தோஷமொன்றும் ஏற்படாது.

சந்திரன் அவளுக்கு அந்தரங்க சுத்தி அளிக்கிறான். கந்தர்வன் அவளுக்கு இனிய குரல் அளிக்கிறான். அக்னி அவளுக்குப் புனிதத்தன்மை அளிக்கிறான். அவற்றால், பெண்கள் பாவமற்றவர்களாக ஆகிறார்கள்.

பெண் பருவமடைவதற்கு முன் வெள்ளை என்று வர்ணிக்கப் படுகிறாள். பருவமடைந்தபின் சிகப்பு என்று வர்ணிக்கப்படுகிறாள். பருவமடைவதற்கு முன் பெண் நிர்வாணமாயிருந்தால்  அதனால் அவளுக்கு ஒரு குற்றமுமில்லை.

பெண் பருவமடைந்தபின் அவளுடைய வளரும் அழகில் சந்திரன் அனுபவிக்கிறான். ஸ்தங்களில் கந்தர்வர்கள் அனுபவிக்கின்றனர். மாதவிடாயில் அக்னி அனுபவிக்கிறான்.

எனவே, பருவமடைவதற்குமுன் பெண்களை மணம் செய்து கொடுப்பது நல்லது. எட்டு வயதில் மணம் செய்து தருவது புகழப்படுகிறது.

முதலில் பூப்பு ஒருவனைக் கொல்கிறது: பிறகு ஸ்தானங்கள் ஒருவனைக் கொல்கின்றன. அவளிடம் சுகம் பெறாததால் உலகமும், அவளை மணம் செய்து கொடுக்காததால் தந்தையும், பிறகு கொல்லப்படுகின்றனர்.

பருவமடைந்த பின்பும் பெண் வீட்டிலிருந்தால் தனக்கு இஷ்டமானவனை வரித்துக்கொண்டு சென்றுவிடுவாள். ஆகவே, பருவமடைவதற்கு முன்பே அவளை மணம் செய்து கொடுத்துவிடு என்று மனு சொல்கிறார்.

மணமாகாமலே தந்தை வீட்டில் எந்தப் பெண் பருவமடைகிறாளோ அவளை மணக்க வேண்டாம். அவளைப் பரத்தை என்று நினை.

பெண் பருவமடைவதற்குமுன் தந்தை அவளை உயர்நிலையில் இருப்பவனுக்கோ மணம் செய்து வைக்க வேண்டும். அப்படிச் செய்தால் தோஷம் இல்லாமலிருக்கும்.

ஆகவே, இவளை இவளுக்குச் சமமான நிலையிலிருப்பவனுக்குக் கொடுக்கிறேன்.
ஒத்த குலமும், ஒத்த செல்வமும் பொருந்தியவர்களிடையே தான் திருமணமும் நட்பும் இருக்க வேண்டும். பணக்காரனுக்கும் ஏழைக்கும் இடையே அவ்வித உறவுகள் இருக்கக்கூடாது.

குலம், குணம், அந்தஸ்து, கல்வி, செல்வம், அழகு, இளமை – இந்த ஏழு அம்சங்களையும் கவனித்துத்தான் அறிவாளிகள் பெண்ணைக் கொடுக்கிறார்கள். மற்றவற்றைப் பற்றி யோசிக்க வேண்டியதில்லை.

உனக்கு இதில் இஷ்டமிருந்தால், சூரியபகவானைக் கூப்பிட்டு இவளைத் தருகிறேன்’’ என்றார் முனிவர். ‘’அதில் தோஷமென்ன இருக்கிறது? அப்படியே செய்யுங்கள்’’ என்றாள் மனைவி.

உடனே முனிவர் சூரியனை அழைத்தார். சூரியன் உடனே தோன்றி, ‘’சுவாமி, என்னை ஏன் அழைத்தீர்கள்?’’ என்று கேட்டான். ‘’இதோ என் மகள், அவளை நீ மணந்துகொள்’’ என்று முனிவர் சொல்லி, தன் பெண்ணைப் பார்த்து, ‘’மகளே, மூவுலகுக்கும் தீபமாக விளங்கும் சூரிய பகவானை நீ விரும்புகிறாயா?’’ என்று கேட்டார். ‘’அப்பா, இவன் ரொம்பவும் சுட்டெரிக்கிறான். ஆகவே, எனக்கு விருப்பமில்லை. இவனைவிட மேலானவனை அழையுங்கள்’’ என்றாள் பெண்.

அந்தப் பதிலைக் கேட்டு முனிவர் சூரியனிடம், ‘’தேவா, உன்னைவிட மேலானவர்கள் யாராவது உண்டா?’’ என்று கேட்டார். ‘’இருக்கிறான். என்னைவிட உயர்ந்தவன் மேகம். அவன் என்னை மறைத்தால் நான் கண்ணுக்குத் தெரியாமல் போகிறேன்’’ என்றான் சூரியன்.

முனிவர் மேகத்தை வரவழைத்துவிட்டு, பெண்ணைப் பார்த்து, ‘’மகளே உன்னை இவனுக்குத் தருகிறேன்’’ என்றார். ‘’இவன் கறுப்பு நிறமாயிருக்கிறான். ஜடமாயுமிருக்கிறான். எனவே இவளைவிட மேலானவனுக்கு என்னைக் கொடும்’’ என்றாள் மகள். முனிவர் மேகத்தைப் பார்த்து, ‘’மேகமே, உன்னைவிட மேலானவன் யாராவது உண்டா?’’ என்று கேட்டார். ‘’என்னைவிடப் பெரியவனான காற்று இருக்கிறானே’’ என்று மேகம் சொல்லியது.

உடனே முனிவர் காற்றை வரவழைத்தார். பெண்ணைப் பார்த்து, ‘’மகளே, உன்னை இவனுக்குக் கொடுக்கிறேன்’’ என்றார். ‘’அப்பா, இவன் ரொம்பவும் சபலபுத்தி உள்ளவன். ஆகவே இவனைவிட மேலானவனைக் கூப்பிடுங்கள்’’ எனறு பதிலளித்தாள் பெண். ‘’காற்றே, உன்னைவிட மேலானவன் யாராவது உண்டா?’’ என்று முனிவர் கேட்டார். ‘’என்னைவிட அதிக பலமுள்ளவன் மலையரசன்’’ என்றது காற்று.

உடனே முனிவர் மலையை வரவழைத்தார். பெண்ணிடம், ‘’பெண்ணே, இவனுக்கு உன்னைத் தரட்டுமா?’’ என்று கேட்டார். ‘’அப்பா, இவன் உடம்பு கடினமானது. இருக்கிற இடத்தை விட்டு அசையாதவன். ஆகவே, வேறு யாருக்காவது என்னைக் கொடும்’’ என்றாள் பெண். முனிவர் மலையைப் பார்த்து, ‘’மலையரசனே, உன்னைவிட மேலானவன் யாராவது உண்டா?’’ என்று கேட்டார். ‘’என்னைவிட மேலானவை எலிகளே’’ என்றான் மலையரசன்.

முனிவர் எலியை வரவழைத்து பெண்ணுக்குக் காட்டி, ‘’இந்த எலியை உனக்குப் பிடிக்கிறதா?’’ என்று கேட்டார். எலியைப் பார்த்த பெண், தன் இனத்தைச் சேர்ந்தது அது என்று உணர்ந்துகொண்டு, உடலெல்லாம் பொங்கிப் பூரித்துப் போனாள். ‘’அப்பா, என்னைப் பெண் எலியாகச் செய்து இவனுக்குக் கொடுத்துவிடும். அப்படிச் செய்தால், நான் என் இனத்துக்குத் தகுந்தபடி இல்லறம் நடத்திவருவேன்’’ என்று சொன்னாள். முனிவர் தமது தவ வலிமையால் அவளைப் பெண் எலியாக மாற்றி வந்த எலிக்குத் தந்துவிட்டார்.

அதனால்தான்…. சொந்த இனத்தை விட்டு யாரும் செல்லமுடியாது’ என்று சொல்லலானேன்’’ என்றது ரக்தாட்சன்.

அதன் பேச்சை கேட்காத ஆந்தைகள், தமது குலத்துக்கு நாசம் விளைவிக்கும் முறையிலே, ஸ்திரஜீவியை தம் கோட்டைக்குக் கொண்டு போயின. போகிற வழியில் ஸ்திரஜீவி தனக்குள்ளே சிரித்துக்கொண்டே பின்வருமாறு எண்ணிற்று.

‘’இவனைக் கொல்லுங்கள்’’ என்று யார் அரசனுக்கு நல்லதைச் சொன்னானோ அவனே ராஜநீதியின் தத்துவத்தை அறிந்தவன். மற்றவர்களுக் கெல்லாம் அது தெரியாது.

அவனுடைய பேச்சைக் கேட்டு நடந்திருந்தால் இந்த ஆந்தைகளுக்கு ஒரு ஆபத்தும் ஏற்பட்டிருக்காது’’.

கோட்டை வாயிலை அடைந்ததும் ஆந்தையரசன், ‘’நண்பர்களே, நமது நன்மையை விரும்பும் இந்தத ஸ்திரஜீவிக்கு அவனுக்கு இஷ்டமான ஜாகையைக் கொடுங்கள்’’ என்று சொல்லிற்று. அதைக்கேட்ட ஸ்திரஜீவி, ‘’இவர்களைக் கொல்வதற்கு நான் ஒரு திட்டம் போட்டுத் தீர வேண்டும். இவர்கள் மத்தியிலிருந்தால் அப்படிச் செய்ய முடியாது. என் காரியமாய் நான் போய்வருவதைக் கண்டுவிட்டு இவர்கள் உஷாராகி விடலாம். கோட்டை வாயிலில் இருந்து கொண்டே என் விருப்பத்தை நிறைவேற்றுகிறேன்’’ என்று எண்ணிற்று.

அப்படியே தீர்மானம் செய்து, ஆந்தையரசனிடம், ‘’அரசே, தாங்கள் சொன்னது சரியே. என்றாலும், எனக்கும் ராஜநீதி தெரியும். நான் உம் நன்மையை விரும்புகிறவன்தான். இருந்தபோதிலும், ஒருவன் விஸ்வாசமும், நல்லெண்ணமும் உள்ளவனாயிருந்தாலும்கூட அவன் கோட்டையின் மத்தியிலே வசிப்பது சரியல்ல. ஆகவே, இந்தக் கோட்டை வாயிலிலேயே நான் இருந்து கொண்டு தங்களுடைய தாமரை போன்ற பாதங்களின் தூளியால் உன் உடல் புனிதமாக்கப்பட்டபடியே தினந்தோறும் தங்களுக்குச் சேவைசெய்து வருகிறேன்’’ என்று சொல்லிற்று.

ஆந்தையரசன் அதற்கு ஒப்புக் கொண்டது. அரசனின் ஆட்கள் ராஜ கட்டளைப்படி ஸ்திரஜீவிக்கு மிகவும் மேலான மாமிச உணவை இஷ்டப்படி தினந்தோறும் கொடுத்து வந்தன. சில நாட்களிலேயே ஸ்திரஜீவி மயிலைப் போல் பலம் பெற்றுவிட்டது.

ஸ்திரஜீவியை இப்படிப் போஷிப்பதைக் கண்டு ரக்தாட்சன் ஆச்சரியமடைந்தது. மந்திரிகளிடமும், அரசனிடமும், ‘’என்ன துரதிர்ஷ்டம்! இந்த மந்திரிகளும், தாங்களும் முட்டாள்களே, வேறு விதமாக நினைக்க எனக்கு முடியவில்லை.

முதலில் நான் முட்டாள் ஆனேன். பிறகு என்னைப் பீடித்தவன் முட்டாள் ஆனான். பிறகு அரசனும், மந்திரியும் முட்டாள்கள் ஆனார்கள். எல்லோருமே ஒரு முட்டாள் கூட்டம்தான்.

என்றொரு பழமொழி உண்டு’’ என்றது ரக்தாட்சன். ‘’அது எப்படி?’’ என்று ஆந்தைகள் கேட்க, ரக்தாட்சன் சொல்லிற்று:

Series Navigationபிரேதம்புதிய கட்டளைகளின் பட்டியல்..
author

அன்னபூர்னா ஈஸ்வரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *