காசி

This entry is part 25 of 43 in the series 24 ஜூன் 2012

மூன்றாவது நாளாக இன்றும் அதே மரத்தடியில் சுருண்டு படுத்துக் கொண்டிருக்கும் மனிதரைப் பார்த்து விட்டு கண்டும் காணாமல் செல்ல முடியவில்லை குயிலிக்கு. யாராக இருக்கும் இந்த மனிதர்… பார்க்க பெரிய இடத்துப் பிள்ளை போல இருக்குதே என்று யோசித்துக் கொண்டே அருகில் சென்று, மூக்கினருகில் கையை வைத்துப் பார்த்தாள். நல்ல வேளையாக மூச்சு இருக்கிறது என்று மகிழ்ச்சியடைந்தாலும், நெற்றியின் இடது புறம் இரத்தம் வந்து காய்ந்து கிடந்தது. சுய நினைவின்றி கிடப்பது தெரிந்தது. யாரையாவது துணைக்குக் கூப்பிடலாம் என்றால் கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை ஒருவரையும் காணவில்லை…
”அண்ணே. அண்ணே என்று மெதுவாக உலுக்கிப் பார்த்தாள்.. லேசான முனகலும், அசைவும் தெரிய, மீண்டும் தட்டி எழுப்ப முயற்சித்தாள். கையில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து முகத்தில் கொஞ்சம் தெளித்தாள்.. அந்த உருவம் வாயைத் திறக்கவும், வாயிலும் கொஞ்சம்,கொஞ்சமாக தண்ணீர் ஊற்றினாள். மெதுவாக மயக்கம் தெளிந்து எழுந்து உட்கார்ந்தவரின் முகத்தில் பெருமளவில் களைப்பு தென்பட்டது. உடனே குயிலி பசியோ என்னவோ என்று நினைத்து, தன் சாப்பாட்டுப் பையிலிருந்து டிபன் பாக்ஸை திறந்து உணவைக் கொடுத்தாள். பழைய சாதமும், பச்சை மிளகாயும் வைத்திருந்தாள்.. சற்றே யோசித்தவர், மிளகாயை எடுத்துப் போட்டுவிட்டு மளமளவென அந்த சாப்பாட்டை சாப்பிட்டு முடித்தார், ‘பசி வந்தால் பத்தும் பறந்து போம்’ என்பது போல…
தான் அறியாத பசிக்கொடுமையா என்பது போல குயிலி எந்த ஆச்சரியமும் இல்லாமல் அவனைப் பார்த்தாள். 35 வயது இருக்கலாம், ஒடிசலான நெடிய உருவம். அந்தக் கண்களில் ஒரு தீட்சண்யம் தெரிந்தது. நல்ல கூரிய சிந்தை உள்ளவராக இருக்க வேண்டும் என்றுகூட தோன்றியது அவளுக்கு… உடுத்தியிருந்த உடுப்பு விலையுயர்ந்ததாக இருப்பினும் மிகவும் அழுக்கடைந்து, கசங்கிக் கிடப்பதைப் பார்த்தால் பல நாட்களாக மாற்றாமல் அலைந்து திரிந்து வந்து சேர்ந்திருப்பதாகத் தெரிந்தது. மெதுவாக பேச்சு கொடுத்துப் பார்த்தாள்.
“அண்ணே.. நீங்க யாரு.. எங்கிருந்து வாரீக.. தமிழ் பேசுவீகளா… மூனு நாளா இங்கனயே கிடக்கறீக.. என்ன ஆச்சுது..?”
“ம்ம்ம்ம்.. ம்ம்…. நானு.. நானு… “
என்று கூறிக்கொண்டே மண்டையைப் பிடித்துக் கொண்டார்.. முகத்தில் குழப்ப ரேகைகள் அதிகமானது. பார்க்கவே பரிதாபமாக இருந்தது.
“நான் யாரு… எனக்கே தெரியலயே… குழப்பமா இருக்குதுங்க… தலையெல்லாம் சுத்துது… “
”சரிண்ணே, சிரம்ப்படாதீக… நீங்க இங்கனயே படுத்திருங்க.. நானு அதா அங்கனத்தான் கட்டட வேலை பாக்குதேன். அதோ அங்கன பாலம் கட்டுறாக பாருங்க அங்கதான் இருப்பேன்.. ஏதாச்சும் வேனுமின்னா கூப்பிடுங்கண்ணே, நான் சாப்பாட்டு நேரம் வந்து பாக்குதேன்…”
அவர் தலையை ஆட்டவும், வேலைக்கு நேரமாகிவிட்டதே மேஸ்திரி சண்டைக்கு வருவாரே என்று நினைத்துக் கொண்டே ஓட்டமும் நடையுமாக விரைந்தாள். ஏனோ இந்த மூன்று நாட்களாக அவ்வப்போது இந்த மனிதரை இந்த ஏரியாவில் பார்த்தபோதெல்லாம் ஏதோ ஒரு பாசம், விட்டகுறை, தொட்டகுறை போல தொற்றிக் கொண்டது புரிந்தது.. தான் யார் என்றே தெரியாத குழப்ப நிலையில் இருக்கும் மனிதரைப் பார்த்து இப்போது பரிதாபத்துடன் ஒரு பாசமும் இணைந்து கொண்டது. யாராக இருக்கும், ஏதோ பெரிய இடத்துப் பிள்ளையோ, மனநிலை சரியில்லாமல் வந்திருப்பாரோ வீட்டைவிட்டு என்று சிந்திக்க ஆரம்பித்தாள்…
“எலேய்….. ஏய்… அடிக்கேடுகெட்ட சிறுக்கி… என்ன அப்படியே வானத்துல மிதப்பு…வேலைக்கு வந்தா அதுல மட்டும் கவனமிருக்கோணும்…இப்படி நினப்பு ஊரு மேயப்படாது…”
என்று கத்திக் கொண்டே நறுக்கென்று தலையில் ஒரு கொட்டு வைத்தான் அந்த கிழ மேஸ்திரி. சுரீரென்று உச்சி மண்டையில் வலி தாக்கி மின்சாரம் போல ஜிவ்வென்று இறங்கி, கண்களை கலங்கச் செய்தது.. அடுத்த நொடி சூழ்நிலை புரிய வாரிச்சுருட்டிக் கொண்டு காரைச்சட்டியை தூக்கிக் கொண்டு ஓடினாள். ஓயாமல் ஓடி ஓடி வேலை.. நிற்கவும் தண்ணீர் குடிக்கவும் கூட நேரமில்லை. ஆச்சு சாப்பாட்டு நேரம் வந்தது. பசி வயிற்றைக் கிள்ளியது. அப்போதுதான் அங்கு மரத்தடியில் ஒரு ஜீவன் கிடப்பது நினைவிற்கு வந்தது. அடுத்த நொடி நேரே டீக்கடைக்குச் சென்றாள்.
“அண்ணே, இரண்டு டீயும், இரண்டு வடையும் குடுண்ணே.. நாளைக்கு காசு தாறேன்.. “
“ஏற்கனவே 40 ரூவா பாக்கி தெரியுமில்ல…திரும்ப கடன் கேக்கற.. என்னா சேதி…?”
“அண்ணே.. சும்மா குடுண்ணே.. நாளைக்கு சனிக்கிழமை கூலி வந்தா குடுத்துப்பிட்டுப்போறேன்.. அதுக்குள்ள என்னமோ அலுத்துக்கறியே”
டீயும், வடையும் தூக்கிக் கொண்டு அந்த மனிதரை நோக்கி ஓடினாள். இன்னும் எழுந்திருக்காமல் அடித்துப் போட்டது போல படுத்துக் கிடந்தான் அவன். மெதுவாகப் போய் தட்டி எழுப்பி உட்காரவைத்து அந்த டீயையும், வடையையும் கொடுத்தாள். ஒரு மாதிரி திருப்பித் திருப்பிப் பார்த்தவன், பசியை உணர்ந்து வெடுக்கென்று முழுங்கி வைத்தான்.
மாலை வேலை முடிந்து வீட்டிற்குச் செல்ல அந்தப்புறம் சென்றவள், அவன் குயிலியை எதிர்பார்த்திருப்பவன் போல எழுந்து வந்து நின்று கொண்டிருந்தான். அவள் நெருங்கும் சமயம், தானும் புறப்படத் தயாரானான். குயிலி அவனைப் பார்த்து ”நல்லாயிருக்கியாண்ணே…. என்ன பண்ணலாம்னு இருக்கே..?” என்றாள்.
அவன் எதையும் யோசிக்காமல் அப்படியே அவள் பின்னாலேயே கிளம்பினான். அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.. ’என்னது இந்த மனுசன் இப்படிப் பன்றாரேன்னு நினைத்தவள் மறுகணம் பாவம் தான் யாருன்னே தெரியாம இருப்பவனை இங்கன தனியா உட்டுப்போட்டு போனா பாவம் அந்த மனுசன் சோத்துக்கு என்னா பண்ணும் ‘ என்று யோசித்த போது ஏனோ திடீரென்று, மணல் அடிக்கும் லாரியில் விபத்தில் இறந்து போன தன் அண்ணனைப் ப்ற்றிய நினைவு வந்தது. தன் சகோதரனே மறுபிறவி எடுத்து வந்தது போன்று தோன்றவே சற்றும் யோசிக்காமல், காசி அண்ணே என்று கூப்பிட்டாள். அவனும் திருதிருவென விழிக்க, குயிலியோ,
“அண்ணே இனிமேல் நீதான் என் காசி அண்ணாத்தை. .. வா எங்கூட” என்றாள்..
வீட்டிற்குச் சென்றால் அம்மாவும், அப்பாவும் என்ன சொல்லுவார்களோ என்று தயக்கமாக இருந்தாலும், கட்டிய புருசன் இரண்டு குழந்தைகளை விட்டுப்போட்டு எவளோ ஒருத்திய இழுத்துக்கிட்டுப் போய் குடும்பம் நடத்திக்கிட்டிருக்கும் துரோகி, அல்பாயுசில போன அண்ணன், வயசான அப்பா, அம்மா இப்படி ஆம்பிளை துணை இல்லாத வீட்டில் ஒரு சகோதரனா தன் வீட்டிற்குள் அழைத்துச் செல்ல எந்த தடையும் இருக்கவில்லை அவளுக்கு. பத்துக்கு எட்டு கணக்கில் ஒரு அறையும், எட்டுக்கு எட்டு என்ற அளவில் ஒரு சமையலறை, உணவருந்தும் அறை, படுக்கையறை எல்லாம் அதுதான். சாக்கு பைதான் மறைப்புக்கு, பாத்ரூம் என்ற பெயரில். கழிவறையும் மிக மோசமாக இருக்கும்.. இதில் வயதான அப்பா, அம்மாவுடன் மேலும் ஒரு சகோதரனையும் கூட்டிக் கொண்டு வந்தபோதும், அந்தப் பெற்றோர் முகத்தில் எந்த வெறுப்பும் இல்லை.. இதுதான் மேல்மட்ட வர்கத்தினருக்கு இல்லாத ஒரு சிறப்பான குணம். அரை வயிற்றுக் கஞ்சியானாலும் பகிர்ந்துண்டு வாழும் நிலை. ஊருக்கெல்லாம் விதவிதமாக மாட மாளிகையும், கூட கோபுரமும் கட்டித்தரும் இந்த பாவப்பட்ட ஜென்மங்கள் மட்டும் இப்படி ஒண்டுக் குடித்தனத்தில் அரை வயிற்றுக் கஞ்சியுடன் வாழும் நிலை மிகக் கொடுமை.
காசி அண்ணனாக தத்து எடுத்துக் கொண்ட மனிதரை முழு மனதுடன் வீட்டில் அனைவரும் ஏற்றுக் கொண்டது பெரிய விசயமாக இல்லை அவர்களுக்கு. ஆனால் தான் யார் என்று எதுவுமே நினைவில்லாத நிலையிலும் வயிற்றுக்காக பாடுபட வேண்டும் என்பது மட்டும் நன்றாகவே உரைத்தது காசிக்கு. அடுத்த நாளிலிருந்தே குயிலியுடன் வேலைக்குச் செல்லத் தயாராகிவிட்டான் காசி. சுறுசுறுப்பாக வேலை கற்றுக் கொள்வதிலும் பெரிய பிரச்சனை இல்லை அவனுக்கு. அவன் வேலை செய்யும் அழகை இரசிக்கவே ஒவ்வொருவராக அவனிடம் நெருங்கி வந்து விசாரித்து விட்டுப்போனார்கள். அவனுடைய ஒவ்வொரு அசைவிலும் ஒரு பெரிய மனிதத் தன்மை இருப்பது மிகத்தெளிவாகவே தெரிந்தது. வியர்க்க,விறுவிறுக்க மிகச் சிரமப்பட்டே கட்டிட வேலையை செய்து கொண்டிருந்தான் அவன்.
நாட்கள் நிமிடங்களாக கரைந்தன. காசி வந்து 15 நாட்கள் ஓடிவிட்டது. 15 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தது போன்று அனைவரிடமும் ஒட்டிக் கொண்டான். அநாதரவாய் நிற்கும் குயிலிக்கு ஆதரவாய் இருக்கும் பொருட்டு தானும் ஒரு கூலியாளாக உருவம் கொண்டான் காசி. காண்போரெல்லாம் பேராச்சரியத்துடன், வைத்த கண் வாங்காமல் பார்க்கும்படியான சிவந்த மேனியும், ஒளிவீசும் முகமும் கொண்டு விளங்கிய காசி, அதற்கு துளியும் சம்பந்தமில்லாமல் இடுப்பிலே அழுக்குப் படிந்த பழைய ஆடையை அணிந்து கொண்டிருந்தது பொருந்தாமலே இருந்தது. தலையிலே சும்மாடு வைத்து அதன் மேல் மண் அள்ளிக் கொட்டுவதற்கான கூடையைக் கவிழ்த்துக் கொண்டு, தோளின்மீது ஒரு மண்வெட்டியும் மாட்டிக் கொண்டு சென்றான்.
செம்மனச்செல்வி எனும் அநாதைக் கிழவியின் துயர் துடைக்கும் பொருட்டு மண்ணுலகம் வந்து, பிட்டுக்கு மண் சுமந்த சோமசுந்தரக் கடவுள் போன்று இந்த காசியும் இன்று மண் சுமந்து கடும் பணியாற்றியபின், சிறிதளவு கஞ்சியும், அரை வயிறு உணவாகக் கொண்டு பிழைப்பை நடத்திக் கொண்டிருந்தான்.
அன்று வழக்கம் போல குழந்தைகளுக்கு  சாப்பாடு செய்து வைத்துவிட்டு, பெற்றோருக்குத் தேவையான பணிவிடைகள் அனைத்தையும் முடித்துவிட்டு வேலைக்கு ஓடினாள். வழக்கம் போல லேட்டாக வந்ததற்கு வசவும் வாங்கிக் கட்டிக் கொண்டு வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். உச்சி வெய்யில் மண்டையைப் பிளக்க தட்டுத் தடுமாறி வேலை செய்து கொண்டிருந்தவள், ஈரம் காயாத 8 அடி சுவர் அப்படியே இடிந்து அவள் தலையில் விழப்போவது எப்படியோ காசியின் உள் உணர்வில் பட்டு, அது கண்களின் வழியாக காட்சியும் விரிந்தது. நொடியில் கையிலிருக்கும் மண் கூடையை தூக்கி வீசிவிட்டு ஓடிப்போய் குயிலியை அப்படியே தரதரவென இழுத்து விட்டு, தானும் ஓட எத்தனிப்பதற்குள், கட்டிடம் திபுதிபுவென விழ ஆரம்பித்து விட்டது. அதன் ஒரு பகுதி காசியின் தலைமீதும் விழுந்து, அய்யோ என்ற பெருங்குரலுடன் மயங்கி விழவும் செய்தது..
அத்துனை தொழிலாளர்களும் படபடக்க வந்து கூட்டம் போட்டு நிற்க, அதற்குள் குயிலி ஓடிவந்து அனைவரையும் விலக்கி தண்ணீரை முகத்தில் தெளித்து , ஒரு அட்டையை எடுத்து காற்று வீசினாள். நல்ல வேளையாக பெரிய அடியெல்லாம் இல்லை என்றே நம்ப முடிந்தது. இரத்த காயம் இல்லாவிட்டாலும், உள அடியாக மண்டையில் பட்டிருக்கும் என்று எல்லோரும் பேசிக் கொண்டிருந்தார்கள். மேஸ்திரி அதற்குள் காண்டிராக்டருக்கும், இன்ஜினீயருக்கும், போனில் கூப்பிட்டு தகவல் சொல்லிவிட்டார். ஆனாலும் வெளியூரிலிந்து அவர்கள் வந்துசேர 2 மணி நேரமாவது ஆகலாம் என்று சொல்லி விட்டார் அவர். செய்வதறியாது கையைப் பிசைந்து கொண்டு நின்றிருந்தார்கள் அனைவரும்.
கிட்டத்தட்ட 2 மணி நேரம் ஓடிவிட்டது அப்படியே அசைவற்றுக் கிடந்த காசிக்கு மெல்ல நினைவு திரும்புவதற்கு. கண் விழித்த மறு நொடி சுற்றுமுற்றும் வித்தியாசமாகப் பார்த்தவன்,  குயிலி வந்து அண்ணே நல்லாயிருக்கியாண்ணே என்று கட்டிப்பிடித்து கண்ணீர் சிந்தியபோது நெளிந்து கொண்டு நின்றிருந்தார் அந்த காசி…
அடுத்த நிமிடம் அங்கு பரபரவென பல காட்சி மாற்றங்கள்…. கண் இமைக்காமல் அனைவரும் திறந்த வாய் மூடாமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆம், மேஸ்திரியிடமிருந்து உரிமையுடன் போனை பிடுங்கி, வரிசையாக எங்கெங்கோ ஆங்கிலத்தில் சரமாரியாக பேசிக் கொண்டிருந்தார் அந்த மனிதர். ஒரு சில மணி நேரங்களில் அந்த இடமே அல்லோகல்லோலப்பட்டது. வரிசையாக கார்கள் படையெடுத்து வந்து கொண்டிருந்தது.. அவர்களெல்லாம் வந்து பேசிக் கொண்டதைப் பார்த்து அசந்து போய குயிலி புரிந்து கொண்டது, காசி என்று தான் பெயர் வைத்த பெரிய மனிதரின் பெயர் மனோகரன் . பெரிய காண்டிராக்டர் மற்றும் தொழிலதிபர். தொழில்முறை போட்டியாளர்க்ள் வன்மம் காரணமாக , மனோகரனை கடத்தி வந்து அடித்துப் போட்டுப் போயிருக்கிறார்கள். படாத இடத்தில் பட்டு நினைவு தப்பினாலும், தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார்.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரியிடம் புகாரும் கொடுத்து விட்டார் இந்த நேர்மையான காண்டிராக்டர். பொதுவாக ஐந்திற்கு ஒன்று என்ற கணக்கில் போட வேண்டிய சிமெண்ட், கலவை பத்திற்கு ஒன்று என்ற கணக்கில் போட்டு கட்டியதன் விளைவு கட்டி முடிக்கும் முன்பே கட்டிடம் இடிந்து விழுந்தது என்று தெளிவாக புகார் கொடுத்தாலும், தான் அங்கு தங்கி இருந்ததன் நினைவாக தானே இந்த பாலத்தை நல்ல முறையில் இலவசமாகக் கட்டிக் கொடுப்பதாகவும் வாக்களித்தார். மேட்டூர் அணையை கட்டி முடித்துச் சென்று நூறு ஆண்டுகளுக்கும் மேலாகியும், இன்றும் அதைக்கட்டி முடித்த ஸ்டான்லி என்பவருக்கு சிலை வைத்து மரியாதை செலுத்துகிறோம். முல்லைப் பெரியாறு அணையும் அதே போன்று கட்டியவரின் பெயரை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறது. இப்படி காலங்காலமாக கட்டியவரின் பெயர் சொல்ல வேண்டிய ஒரு பொதுப் பாலத்தை இவ்வளவு அனாவசியமாக கட்டி விட்டீர்களே என்று கேட்டபோது மனம் வருந்தி தலை குனிந்து நின்றார் அந்த காண்டிராக்டர்.. பணம் சம்பாதிப்பதற்கு வாழ்க்கையில் எத்தனையோ வழிகள் இருக்கின்றன. இப்படி சக மனிதர்களின் உயிருடன் விளையாடக்கூடிய இது போன்ற பண வேட்டை ஒரு பாவ மூட்டையல்லவா என்று மனம் நொந்து கூறியபோது அனைவருமே கண் கலங்கத்தான் செய்தார்கள். வெறும் கல்லும்,மண்ணும் மட்டும் சேர்த்து உருவாக்கப்படுவதில்லை ஒரு கட்டிடம் என்பது. எத்துனை தொழிலாளிகளின் வேர்வைத் துளிகளும், கண்ணீர் முத்துக்களும் கலந்திருக்கின்றன அதில்.
சகோதரனாகத் தத்து எடுத்துக் கொண்ட அந்த நல்ல உள்ளத்தை தானும் மனதார சகோதரியாக ஏற்றுக் கொண்ட மனோகரன், குயிலியை அவள் குடும்பத்துடன் தன்னுடன் அழைத்துச் செல்ல தயாராக இருந்தும், தம் மண்ணை விட்டு வர மனமில்லாமல் அவள் மறுத்து விட்டாலும், அவளுக்கு மட்டுமன்றி அந்தத் தொழிலாளர்கள் அனைவருக்கும் அவர்களின் வாழ்க்கைத் தரம் உயரும் வகையில் தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்வதாக வாக்களித்துச் சென்றபோது அத்துனைப்பேரின் கண்களிலும் கண்ணீர் மழைதான்…….. குறிப்பாக குயிலி மீண்டும் காசி அண்ணனை இழந்து விட்டோமே என்று ஆழ்ந்த சோகம் கொண்டாலும், மனோகரன் அண்ணே தங்களின் இருண்ட வாழ்க்கையின் விடிவெள்ளி என்பதை உணர்ந்து ஆனந்தக் கண்ணீரே வடித்தாள்.

————————

Series Navigationநினைவுகள் மிதந்து வழிவதானதுஇஸ்லாமியப் பண்பாட்டில் நாட்டுப்புற நம்பிக்கைகள் மானுடவியல் அணுகுமுறை
author

பவள சங்கரி

Similar Posts

11 Comments

 1. Avatar
  s.ganesan says:

  the author exposes the poor quality of public work done by some contractors due to earn extraordinary profit and thus causing danger to public life and property….the authors social awareness is commendable…well done sankari…

 2. Avatar
  பவள சங்கரி. says:

  அன்பின் திரு கணேசன்,

  தங்களுடைய ஊக்கமான வார்த்தைகள் எம்மை மேலும் பண்ப்டுத்திக் கொள்ளச் செய்கிறது. மிக்க நன்றி.

  அன்புடன்
  பவள சங்கரி

 3. Avatar
  பவள சங்கரி. says:

  அன்பின் லறீனா அப்துல் ஹக் அவர்களுக்கு,

  அன்பான வாழ்த்திற்கு நன்றி தோழி.

  அன்புடன்
  பவள சங்கரி.

 4. Avatar
  Dr.G.Johnson says:

  KASI by PAVALA SANKARI is a very interesting story indeed. The way she has introduced the main characters, namely KUYILI and KASI ( MANOKARAN )prompts the readers to read further. This is an essential aspect of of a good story. The opening lines should captivate the readers to read further. Her description of Kasi especially his complexion, attire and appearance gives the readers a general impression about his background- that he may be from a respectable family. His inability to recollect the past due to head injury and his stay with Kuyili as one of her family seems a bit artificial. Kuili should have informed the matter to her co- workers. How could he stay in that condition for three days without food and water? She should have taken him to the hospital or reported the matter to the police. But maybe these are not possible for her in her poor ans secluded circumstances. Anyway this is only a fictious story and his stay with her without knowing his whereabouts is accetabble. The accident at the worksite and the after effects are truely realistic.The ending is superb. The dishonesty of the contractors in their construction works has been well exposed in this story….Congratulations to Pavala Shankari for this dramatic dhort story!…Dr.G.Johnson.

  1. Avatar
   Peter Johnson says:

   Dear Dr. Johnson,
   I am in the process of redesigning my Tamil website. You could access the partially-completed website at:
   http://www.tamilnetmalaysia.net

   I would like to request you to write short stories and/or articles on common diseases afflicting Tamils in general as you have done before (I have read your answers to health questions from readers in Malaysia (published in local dailies).
   You could contact me at: peterj@streamyx.com
   or 03-5632 5800 OR 013-2310 662 .
   I am staying in Subang jaya, Selangor.
   Thank you and regards
   Peter Johnson

  2. Avatar
   பவள சங்கரி. says:

   அன்பின் டாக்டர் ஜான்சன் அவர்களுக்கு,

   வணக்கம். தங்களின் ஆழந்த ஈடுபாட்டுடன் கூடிய விமர்சனம், படைப்பாளர்களுக்கு மிகுந்த ஊக்கச்சக்தி அளிப்பவை. மிக அழகாக தொகுத்து வழங்கும் வல்லமை மகிழ்ச்சி ஏற்படுத்தக் கூடியது. தங்களுடைய சிறுகதைகள் படிக்கும் ஆவல் தோன்றுகிறது. தயவுசெய்து வாசிக்கத் தாருங்கள் ஐயா.

 5. Avatar
  Dr.G.Johnson says:

  Dear Mr.Peter Johnson, Thank you for comments and your request to write short stories. I will do that as soon as I install Tamil in my lap-top. Glad to know that you are reading my medical question answers in Malaysian Tamil Dailies. I will keep in touch with you. Thanks…Dr.G.Johnson.

  1. Avatar
   Peter Johnson says:

   Dear Dr. Johnson,
   Thank you for your prompt reply. You could install Murasu Anjal unicode fonts or any other unicode fonts. Unicode fonts are the standard for web publishing.
   I grew up and studied at Kluang. My late mother, Mrs. Mary Durairaj, was the Head Mistress of the Tamil School in Kluang for a number of years until her death.
   Best regards
   Peter Johnson

 6. Avatar
  jayashree shankar says:

  அன்பின் பவள சங்கரி,

  ஒரு மனிதாபிமானம் ஆரம்பத்திலிருந்து கடைசி வரைக்கும்….
  எப்படி இருக்கக் கூடாது, எப்படி இருக்கணும்…என்றெல்லாம்
  சொல்லாமல் சொல்லிப் புரிய வைத்து..”மூடுபனி” கிளைமாக்ஸ் காட்சி
  காரணம் இன்றி மதக் கதவைத் தட்டினாலும்….அந்த முடிவை மாற்றி…
  மனிதாபிமான முத்திரை அடித்து நெகிச்சியான கதை….!
  கண்ணில் காட்சிகள் விரிந்தது, உங்களின் ஆழ்ந்த நோக்கு கண்டு வியக்கிறேன்.

  அன்புடன்
  ஜெயஸ்ரீ ஷங்கர்.

 7. Avatar
  பவள சங்கரி. says:

  அன்பின் ஜெயஸ்ரீ,

  மிக்க நன்றி தோழி. மனம் திறந்த வாழ்த்துகளுக்கு மீண்டும் நன்றி.

  அன்புடன்
  பவள சங்கரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *