பிறை நிலா

author
1
0 minutes, 1 second Read
This entry is part 27 of 37 in the series 22 ஜூலை 2012

(நிலாவண்ணன்)

செல்வியைக் காணப் போகும் அந்த மகிழ்ச்சியான நினைவோடு பேருந்தை விட்டு நான் இறங்கும்போது உச்சியைத் தொட்டுவிட்டது பொழுது.

இருபது ஆண்டு காலத்தில் எவ்வளவோ மாற்றம் அடைந்து விட்டிருந்தது தோட்டமும் சுற்றுப் புறங்களும்.

காலத்தின் கோலத்தைப் பாத்தியாப்பா…? எப்படி இருந்த இடம். இப்படி மாறிப் போய்க் கெடக்கு. இங்கன ஒரு பெரிய்ய மைதானம் இருந்திச்சு. நாம பந்து வெளையாடுவம். குளிக்க வர்ர வயசுக்கு வந்த பொம்பள புள்ளைங்க நாம வெளையாடறத பாக்கறதே நமக்கு ஒரு தெம்ப கொடுக்குமில்ல.

அந்த திடல்ல இன்னைக்கு வீடுங்களா மொளைச்சு போய்க் கெடக்கு. பழைய மேட்டு லயத்துக்கு போற இந்த வழியில ரெண்டு பக்கமும் இருந்த ஆறு எங்கன போய் மறைஞ்சுச்சோ தெரியல. அங்க அங்க ஆழமா உள்ள எடத்துல கல்ல போட்டு ஆளுங்க துணி தொவச்சுக்கிட்டு இருந்ததும் நாம பன்னண்டு வயசு ஆகியும் துணி கட்டாம அம்மணமா அவுத்துப் போட்டு குளிப்பம. நெனவுக்கு வருதா…?

பல ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த அந்த பயங்கரத்தை மனமே மறந்து விடு என்று கடிவாளம் போட்டாலும் கூடவே கை கோர்த்து நடந்து வருகிறதே… மற்ற அழகான நினைவுகளோடு…!

ஆமா…! எங்கப்பா ரெண்டு பக்கமும் இருந்த ரப்பர் மரங்க காணாமப் போச்சு. வரிச வரிசயா பட வீரங்க போல நிக்குங்களே… இந்த மாதிரி வெயில் காலத்தில ரப்பர் மரக்கொட்டைகள் பட் பட்டுன்னு வெடிச்சு விழுமே அது மாதிரியான சத்தத்தையே கேக்க முடியலே…!

`கிளப்பா சாவிட்’ன்ற எண்ணப்பனை மரங்க குளிச்ச பின்சனாடி நம்ம பொம்பளைங்க தலை விரிச்சு கூந்தல் ஆத்துவாங்களே அப்படியில்ல மட்டகள விரிச்சு கெடக்கு.  நாம `டவுன்ல கீலாங்’ (தொழிற்சாலை) வேலயிலயே கெடந்து உழன்றுகிட்டுருப்பதால இதெல்லாம் எங்க தெரியுது. இப்படி எப்பனாச்சும் கம்பங் காடான பழைய்…ய தோட்ட பக்கம் வந்தாதான இந்த மாதிரியான பச்சப் பசேல்ன்ற காட்சியெல்லாம் காண முடியுது.

அப்பல்லாம் தோட்டத்திலேருந்து ஏறக்குறைய ரெண்டு கிலோ மீட்டர் தொலைவாவுள்ள துரோங் டவுனுக்கு சைக்கிள்ள போவாங்க. தைப்பிங்லேருந்து பதினொராவது மைல் புருவாஸ் போற மெயின் ரோட்ல இருக்கு. ஒரு நூறு மீட்டர் நீளத்துக்கு ரெண்டு பக்கமும் மூனு வங்குசாக் கட, (பலசரக்கு கடை) நாலு சாப்பட்டுக் கட,  ரெண்டு சீனங்க தையக் கட. ரெண்டு முடி வெட்ற கட அத கொஞ்சம் என்ன ரொம்ப பேரு கண்ணாடி கடன்னும் சொல்லிக்கிடுவாங்க.  இந்த சின்ன கடத்தெருவத்தான் ரொம்பப் பெருமையா  டவுன்னு சொல்லிக்கிடுவோம்.

இப்பப் பாத்தா மோட்டார் சைக்கிள்ள போறாங்க. ஒன்னு ரெண்டு காடிங்க (மோட்டார் வண்டிகள்) கூட போவுது. தோட்டத்து மக்களோட வசதி பெருகித்தான் போச்சு. நெனச்சா மனசுக்கு மகிழ்ச்சியாத்தான் இருக்கு.

திரும்பவும் அந்த  நினைவுகள் எண்ணத் தடத்தில் உயிர் பெற்று எழுந்து வந்தன. அவனை – தோட்டத்து கோள் சொல்லியை- வியர்வை சிந்தி உழைத்தவர்களின் வயிற்றில் அடித்ததோடு இளம் பெண்களின் கற்பைச் சூரையாடிய சின்னக் கிராணியை ஓட-ஓட விரட்டி விரட்டித்  துரத்தியதும் அவன் உயிருக்குப் பயந்து மூச்சிரைக்க ஓடியதும் கழுத்தில் பாயவேண்டிய கத்தி குறி மாறி தோள் பட்டையில் இறங்கி ஒரு கை சரிந்து தொங்கியதும்… அதன் பின்பு எனக்காக தோட்டத்து மக்கள் வக்கீல் வைத்து வாதாடியதில் எனக்கு 10 ஆண்டுகள் தண்டனை கிடைத்ததும்… அதன் பின் வந்தவர்கள் நான் வீரன் என்பதை மறந்து கொலை செய்யத் துணிந்தவன் என பதிவு செய்து கொண்டதும்… அதை அறிந்து மனம் வெதும்பித் தோட்டத்தை வெறுத்து எந்தத் தொடர்பும் அற்றுப் போய் இருந்து என் செல்வியைக் காண மனம் மாறி இன்று வருவதும்….

நினைவுத் தடத்திலிருந்து மீண்டேன். அப்போது…! நான் எனக்குள்ளேயே மௌன உரையாடல் நிகழ்த்திக் கொண்டிருந்திருக்கிறேன். நான் பேசிய தோட்டத்து மொழியிலேயே சிந்தனையை ஓடவிட்டுக் கொண்டு வந்ததும் மனதுக்கு தோட்டத்தோடு ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

நான் லயத்திற்கு (தோட்டத் தொழிலாளர்கள் வசிக்கும் இல்லத் தொகுதி) போய்ச் சேர்வதற்கும் அமாவாசை வந்து வீட்டை அடைவதற்கும் சரியாக இருந்தது.

என்னைப் பார்த்தவன் அப்படியே மலைத்து-திகைத்து நின்று வாய் பேசா மௌனியாகிவிட்டான்.

“என்னடா இந்த வேகாத வெயில்ல நடந்தேவா வந்த…? இப்படி திடுதிப்புன்னு வந்து நிக்கிறே… நீ வர்றது தெரிஞ்சிருந்தா நான் ரோட்டுக்கே வந்திருப்பேன்ல…!”

நண்பனின் கனிவு அப்போது எனக்கு ஏற்பட்டிருந்த களைப்பைப் போக்கியது. அங்கே போட்டிருந்த `பிராஞ்சா’ வில் உட்கார்ந்து முகத்திலும் பிடரியிலும் வழிந்த வியர்வயைத் துடைத்துக் கொண்டேன்.

“கன்னியம்மா யார் வந்திருக்கான்னு வந்து பாரு…!” அமாவாசை அழைத்ததில் குசுனியில் ஏதோ கைவேலையாயிருந்த கன்னியம்மா வெளியே வந்து என்னைப் பார்த்துவிட்டு,  ‘ஐயோ…!” வென வாயில் கை வைத்து “வாங்க அண்ணே சொல்லாம கொள்ளாம வந்துட்டீங்களே… ரோட்டு வரைக்கும் ஆள் அனுப்பியிருப்போம்ல…!” என ஆதங்கப் பட்டுப் போனாள்.

நான் ஏன் வந்திருக்கிறேன் என்பதை அவர்களுக்குச் சொல்லாமலே வந்திருந்தேன்.  கண் மூடித் திறப்பதற்குள் ஓடிப் போன இந்த இருபது ஆண்டுகளில் நான் அவர்களுக்குக் கொடுத்த சிரமங்கள் போதும். இனிமேலும் தொடராமல் ஒரு வடிகால் ஏற்படுத்தி விடிவு தரவேண்டும். அவர்களுக்கும் மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களைப் படிக்க வைத்துக் கரையேற்ற வேண்டும். அதிலும் அமாவாசை தினசரி எண்ணெய்ப்பனை குலை வெட்ட அலக்கை சுமந்து செல்லும் தொழிலாளியாக இருந்தான். கன்னியம்மா உதிரிப்பழம் பொறுக்கும் தொழிலாளி. சிரமத்தில் விடிந்து வியர்வையில் வழிந்து போதாமையில் கண் மூடி உறங்கும் வாழ்க்கை.

இப்பொழுது தோட்டத் தொழிலாளர்களுக்கு நிறைவான சம்பளத்திற்கு பேச்சு வார்த்தை நடத்தியிருப்பதாக நினைவுக்கு வந்தது. அது வானத்தித்தில் விட்ட வான வேடிக்கை ஆகிவிடக்கூடாது! என் உள்ளம் நண்பனுக்காக நலம் வேண்டியது.

மகள் திருச்செல்வி பிறந்தவுடன் மனைவி தெய்வானை சரியான கவனிப்பின்றி கடுமையான சுரம் கண்டு இறந்தது என் உள்ளத்தில் இடியாக இறங்கிய நேரம். குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தையுடன் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தேன்.

இருபது ஆண்டுகளுக்கு முன்னாள்  நண்பன் அமாவாசை குடும்பத்திற்கு குழந்தைகள் இல்லை. அவர்களே மனமுவந்து என் குழந்தையைக் காப்பதற்கு முன் வந்தார்கள். அதையும் இப்போது நன்றியோடு நினைத்துப் பார்க்கத்தான் வேண்டியிருக்கிறது.

“என்ன ரெங்கையா… ஏதோ யோசனை போல…!”

“இல்லப்பா… பழைய நெனப்பு… சொல்லிச் சமாளித்தேன்.

தோட்டத்து பருப்பு சாம்பார், நெத்திலி (ஒரு வகை சிறிய மீன் கருவாடு) பொறியல், கூடவே சாடின் பெரட்டல், தொட்டுக்கொள்ள மாங்காய் ஊறுகாய்.  ஆண்டுகள் கடந்தும் இன்னும் மாறாத சமையல் பக்குவம். நடந்து வந்த அயற்சியும் பசியும் சேர்ந்து கன்னியம்மாவின் உடனடிச் சமையல் நாவுக்கு இதமாகவும் வயிற்றிற்கு நிறைவாகவும் இருந்தது. அதைவிட அவர்கள் இருவரின் உபசரணை என் நெஞ்சின் ஆழத்தில் ஈரம் கசிய வைத்தது.

“ஏம்பா எப்ப வந்தாப்பிடி… என்ன நெனவுக்கு வருதா..?”

இப்படி கேட்ட அந்த மூதாட்டியை உற்றுப் பார்த்து அடயாளம் கண்டு கொண்டேன்.

“நல்லா நெனவுக்கு வருதேம்மா. எல்லம்மா அக்கா… திருச்செல்வி பொறந்தப்ப நீங்கதான தினசரி குளிப்பட்டுவீங்க… எப்படிக்கா மறந்து போவேன்.!”

நான் சொன்னவுடன் அந்த மூதாட்டியின் விழிகளின் ஓரத்தில் நீர் கசிந்ததைக் கண்டு என் கண்களும் கசிந்தன.

“உம்மவளப் பாத்தியாப்பா…?” அந்த அக்கா என்னை நோக்கி வினவினார்.

“இல்ல எல்லமாக்கா… தூங்கற புள்ளய நாந்தான் எழுப்ப வேண்டான்னு சொன்ன..!”  அமாவாசை அவருக்குப் பதில் கூறினான்.

அத்தருணத்தில்தான் அமாவாசையிடம் நான் எதற்கு வந்திருக்கிறேன் என் முடிவு என்ன என்பதைக் கூறியவுடன் அவனிடம் ஒரு கொதிப்பு ஏற்பட்டது. நான் கூறியதைக் கேட்டு கன்னியம்மா ஒருகணம் திகைத்துவிட்டாள்.

“ஏண்டா ரெங்கையா… உன்னோட முடிவு சரியா இருக்குமாடா… செல்விய எங்கயோ தெரியாத எடத்தில சேக்கப்போரேன்றியே… அம்மா இல்லாதபுள்ள… அத அனாத ஆக்கனும்ணு முடிவு பண்ணிட்டியா…?” அமாவாசை அப்படிக் கேட்டதும் என்னை வெறுப்போடு பார்த்ததும் என்னால் தாங்கிக் கொள்ள முடியாததாக இருந்தது.

“அப்படி இல்ல. எவ்வளவு காலத்துக்குத்தான் செல்விய வச்சுக் காப்பத்துவீங்க. உங்களுக்கும் மூனு பிள்ளங்க இருக்காங்க அவங்கள பெரியவங்களாக்கணும். படிக்க வைக்கணும். இன்னும் என்னால உங்களுக்கு தொந்தரவு வேண்டாம்னிட்டுதான் இந்த முடிவுக்கு வந்த..!”

“அடப்போடா இதச்சொல்லரதுக்குத்தான் எங்கையோ இவ்வளவு காலம்  கண் காணாம இருந்திட்டு வந்தியா …?”

“அண்ணே செல்வி முழிச்சிக்கிடுச்சு வந்து பாருங்கண்ணே… கன்னியம்மா குரல் கேட்டு இருபது ஆண்டுகளுக்குப் பின் என் மகளை – திருச்செல்வியைப் பார்த்தேன்.

திகைப் பூண்டை மிதித்து நடுக்காட்டில் வழி தவறிய ஒருவனைப் போல் ஆகிவிட்டேன். பிறந்த போதே குறையாகப் பிறந்த என் செல்லமகள் வளர வளர இப்படி ஆகிப் போவாள் என்பது நான் எதிபார்க்கவில்லை.

இருபது வயதில் பத்து வயது தோற்றம். தலை பெருத்து உடல் சிறுத்து கை கால்கள் இரண்டு மூன்று சுள்ளிகளைச் சேர்த்துக் கட்டியதைப் போன்றிருந்தது. வாய் கோணி பேசிய சொற்கள் அதற்குள்ளேயே புதைந்து கொண்டிருந்தன.  தலை தொங்கி கண்கள் உள்ளே செருகி,  ஒரு வகையான விகாரத்தைத் தந்தன.

என் மகளே… திருச்செல்வி… முழு நிலவாக வளராமல் பிறை நிலாவாகிப் போன உன்னை இந்தக்கோலத்திலா பார்க்க வேண்டும்…? எனக்கு வந்தது கண்ணீரல்ல.. இரத்தம்.

“செல்வி செல்லம். அப்பா வந்திருக்காரு பாரும்மா…அப்பாடா… உன்ன பெத்த அப்பா… அப்பான்னு சொல்லு…!”

நான் தொடக்கூடக் கூசிய என் மகளைத் தூக்கிக் கொஞ்சி ஒரு மலர் மாலையைத் தோளில் போட்டுக் கொள்வதைப் போன்று போட்டுக் கொண்டாள் கன்னியம்மா. அமாவாசை என் மகளின் தலையை அன்போடு தடவி விட்டுக் கொண்டிருந்தான். அதில் கலப்பில்லாத வாஞ்சை இழையோடிக் கொண்டிருந்தது.

“டேய் இது உம் பிள்ள இல்லடா. எங்க புள்ள. இந்த வீட்டுச் செல்லண்டா. இது இல்லாம எங்க மூனு புள்ளைங்களும் சோறு தண்ணி சாப்பிட மாட்டாங்க. வேல காட்ல இருந்தாலும் கன்னியம்மாவுக்கும் எனக்கும் செல்வி நெனப்பாத்தான் இருக்கும். இதயாடா எங்க கிட்டயிருந்து பிரிச்சுட்டுப் போவ வந்த..!”

“அண்ணே, இந்த இருவது வருசமா பூ மாதிரி பொத்திப் பொத்தி வளத்துக்கிட்டு வற்றாமே அத கொண்டு போவ உங்களுக்கு எப்படிண்ணே மனசு வந்துச்சு…?”

கன்னியம்மாளின் அந்தக் கேள்விக்கு நான் என்ன பதில் சொல்வேன்.

“ரெங்கய்யா உனக்கு எப்படியோ…  எங்களுக்கு இதாம்பா செல்லம். இத ஒரு நாளைக்கு வந்து பாக்கலைன்னா எனக்கு தூக்கமே வராதேப்பா..!”

மூதாட்டி எல்லம்மாவின் அன்புக்கு முன்னால் தலை கவிழ்ந்து நின்றேன்.

அன்பு ஒன்றையே சொத்தாகக் கொண்டிருந்த அவர்களைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிடுவதைத் தவிர எனக்கு அப்போது வேறு ஒன்றுமே தோன்றவில்லை.

@@@@@@@@@@@@@@@@

Series Navigationநகர்வுஉலராத மலம்
author

Similar Posts

Comments

  1. Avatar
    இளங்கோ says:

    கண்ணில் நீர் வருகிறது நிலாவண்ணன்..அது ஏன் என்பது என்னோடேயே போகட்டும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *