கொசுறு பக்கங்கள்

This entry is part 8 of 34 in the series 28அக்டோபர் 2012

·பேம் மல்டிப்ளெக்சில் சக்கரவியூஹ் இந்திப்படம். பத்து ரூபாய் டிக்கெட்டை பாப்கார்னோடு 100 ரூபாய்க்கு விற்றுவிட்டதாலும், பாப்கார்னும் பெப்சியும் நிதான நிலையில் நான் உட்கொள்வதில்லை என்பதாலும், 120 டிக்கெட்டில் போனேன். என் சீட் எம் 8. அஷ்டமத்தில் சனி! 7ம் நம்பர் ஆசாமி பழைய துணி போட்டு வாங்கிய பிளாட்டிக் டப்பில் பாப்கார்ன் கொரித்துக் கொண்டிருந்தார். ஆள் இரட்டை நாடி. இரு புறமும் கடோத்கஜ புஜங்கள். ஒடுங்கிக் கொண்டு படம் பார்த்தது பத்ம வியூக அனுபவம் எனக்கு.

ஆயாளும் ஞானும் தம்மில் மலையாளப்படம். பத்து ரூபாய் டிக்கெட். “ காம்போ சார் “ என்றான் கவுண்டர் பையன். சாப்பிட்டால் சேரும் வம்போ என்று விட்டு விட்டேன். முதல் வரிசையில் என்னைத் தவிர, எல்லோரும் இளைஞர்கள். கையில் பெப்சியும் பாப் கார்னும். இப்போதெல்லாம் கிளாஸ் கட்டடிக்கும் இளம் ஜோடிகளின் சாய்ஸ் காம்போ சீட்டுகள் தாம். பிகரும் கரெக்டாகும்.. பர்சும் பிய்யாது. டூ இன் ஒன்.. நான் படத்தையும் பாப்கார்னையும் தான் சொன்னேன்.

கேமராமேன் கங்காதோ ராம்பாபு, தெலுங்கு படம் போரூர் கோபால கிருஷ்ணாவில். எட்டு பேருக்கு ரெண்டு ·பேன் ஒரே தியேட்டர் அதுதான். “ அந்த காமெடி ஆக்டர் பேரு ஏமி “ என்றேன் இடைவேளையில் ஒருவரிடம். “ சம்ஜா நை “ என்றான் பிழைப்புக்காக தமிழகம் வந்த அந்த பீகார் தொழிலாளி.

பூந்தமல்லி விக்னேஸ்வராவின் மூத்திர நாற்றம் போயே போச். நவீனப்படுத்தி குளுரூட்டி யிருக்கிறார்கள். ஆனால் இப்போது டிக்கெட் விலை 100. அது செம ஹாட் மச்சி. டாய்லட்டில் ஐநாக்ஸ் ஸ்டைல் யூரினல். ப்ளஷ் கூட உண்டு.. அடுத்தவர் அடிக்கும் போது!

ப்ரியங்கா சோப்ராவுக்காக பர்·பி பாருங்கள் என்றேன் நண்பரிடம்.. கட்டிங்குக்கும் கடலை மிட்டாயுக்குமான காசை காலி பண்ண சொல்றியே என்றார் அவர். ஆனாலும் பத்து ரூபாய் பர்·பி செம டேஸ்டி.

ஆங்கில டப்பிங் படங்களுக்கு வசனம்  எழுதுபவர்கள் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைகள் : மொட்டை, மாங்காத்தலையா, வூட்ல சொல்லிகினு வந்துட்டியா? யாராவது இதற்கு ஒரிஜினல் ஆங்கில வார்த்தை சொல்லுங்களேன் ப்ளீஸ்.

போரூர் அழகர் மெஸ் புதிய கடை. இரண்டே இளைஞர்கள், ஒரு பரோட்டா மாஸ்டர். மூணு இட்லி பத்து ரூபாய். இஞ்சி தேங்காய் சட்னி, வெங்காயத் தொக்கு என அமர்க்கள டேஸ்ட். பக்கத்து ப்ளேட்டில் கெட்டியாக ஏதோ இருந்தது. என்ன அது? “சேறுவா” “சைவமா?” “ இல்லீங்க சிக்கன் “ அழகர் anti ஆகிவிட்டார்.

0

Series Navigationஅக்னிப்பிரவேசம் -7காரைக்குடி கம்பன் கழகத்தின் பவளவிழா
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *