பேரரசுவின் திருத்தணி

This entry is part 28 of 34 in the series 28அக்டோபர் 2012

எல்லோரும் சுயநலத்துடன் வாழ்வதால் தாயை இழந்து, தன் குடும்பத்துக்காக மட்டும் வாழும்  ஒருவனை, பொதுநலத்தை நோக்கித் திருப்பும் பட பட பட்டாசு கதை.

பத்துக்கு ஆறு இலாக்களைக் கையில் வைத்துக் கொண்டு பேரரசு இயக்கிய படம். அதில் முன்னோடியான டி.ஆரைப் பாடவைத்தது புத்திசாலித்தனம். ஆனால் எத்தனை நாட்களூக்கு ஒரே மாவை வைத்து இட்லி, தொசை, ஊத்தப்பம் என சுடுவார் என்பது ரசனைப் பசி உள்ள ரசிகனின் கேள்வி.

ஐந்து நட்சத்திர ஓட்டல் சமையல்காரர், வேலை இழந்து கையேந்தி பவன் ஆரம்பித்தால் எப்படி இருக்கும்?  பரத்தின் திருத்தணி போல இருக்கும்.

ஆனால் திரைக்கதை அதே திருப்பாச்சி பரபர.. போதாதற்கு பொதுசனம் கனவில் விஜய்! நிஜத்தில் பரத்.

திருத்தணி (எ) வேலு அசகாய சூரன். அடிதடி ஒன் மேன் ஆர்மி. எல்லாம் தன் குடும்பத்துக்கு கேடு வந்தால்தான். இல்லையென்றால் ‘எனக்கென்ன’ தான். ஊரை ஆட்டிப்படைக்கும் அமைச்சர் ( ஆஷிஷ் வித்யார்த்தி ), அவன் குடும்பம், அடியாட்களின் அக்கிரமம் தாங்க முடியாமல், ‘மிலிட்டரி’ ( ராஜ்கிரண் ), வேலுவைத் தூண்டுகிறார். ரவுடிகளால் தாய் செத்த போது துணைக்கு வராத சமூகத்திற்கு உதவ மறுக்கிறான் வேலு. ‘ஆறுமாதம் தான் உனக்கு வாழ்வு’ என டாக்டரை விட்டு பொய் சொல்லச் சொல்லி, அமைச்சரையும் அடியாட்களையும் அழிக்க வைக்கிறார் மிலிட்டரி. கடைசியில் செய்தது தானே என்று குண்டடிபட்டு சாகிறார். திருத்தணி, சுவாமிமலையாக அடுத்த ஆட்டத்தை ஆரம்பிக்கிறான்.

விஜய் படத்துக்கான காட்சிகள், வசனங்கள், பாடல்கள்.. இசை, வரிகள் பேரரசு. ‘அடி வானவில்லே’ வயலின், தபலா இழையோடக் கொஞ்சம் தேறுகிறது. மற்றதெல்லாம் குத்து. “ சாதாரண ஆளுக்கு எமன் உண்டு. சாதிக்க பிறந்தவனுக்கு எமன் இல்லை” போன்ற வசனங்கள் படம் நெடுக.

பரத் கடுமையாக உழைத்திருக்கிறார். நடன அசைவுகளில் அசத்துகிறார். ஆனாலும் எல்லாவற்றிலும் விஜய்யைப் பொருத்திப் பார்க்க தோன்றுகிறது. சுனைனா நல்ல நடிகை. இடைவேளை வரை நடிக்கவும் வாய்ப்பு. பாராட்டும்படி நடிக்கிறார். பின்பாதியில் பெருச்சாளி வில்லனைப் பிடிக்கும், மசால் வடையாக மட்டுமே பயன்படுகிறார். ஆஷிஷ் வித்யார்த்தியை இன்னும் எத்தனை நாள் இப்படியே பார்ப்பது. புது வில்லனைக் கொண்டு வாங்கப்பா!

காமெடிக்கு தனி ஆள் இல்லாமல், பரத்தே அதைச் செய்கிறார். முழுக் காமெடி படத்தில், முனியாண்டியை மீண்டும் பார்க்க ஆசை.

ஒரு சீனில் வரும் இயக்குனர் ‘ நான் வம்புக்கு அப்பா’ என்கிறார். தொடர்ந்து காவடி எடுத்து அதை நிருபிப்பார் போல.

திருத்தணி : பழைய பஞ்சாமிர்தம்.

0

Series Navigationலூப்பர் ( ஆங்கிலம் )கற்பனைக் கால் வலி

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *