அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண்பு இல்லா தவர்.
வாழ்க்கையில் எப்பொழுதும் வெற்றிகள் கிடைக்கும் என்பதில்லை
வரும் தோல்விகளைக் கண்டால் துவண்டுவிடக் கூடாது
என் வாழ்க்கைப் பயணத்தில் வெற்றிகளும் தோல்விகளும் எதிர் கொண்டிருக்கின்றேன். வெற்றி கிடைத்த பொழுது தன்னிலை மறந்ததில்லை. எடுத்துவைக்கும் அடிகளை எச்சரிக்கையுடன் கவனச் சிதறல்களின்றி எடுத்துவைப்பேன். தவறுகளும் செய்வதுண்டு. அதனைப் படிப்பினையாக எடுத்துக் கொண்டு என்னைத் திருத்திக் கொள்வேன்.
இப்பகுதியில் நான் எழுதப் போகும் விஷயங்கள் இப்பொழுதே என் மனத்தை வருத்துகின்றது. ஆனால் என் கடமையுணர்வு எனக்கு சக்தி கொடுக்கும் என்ற நம்பிக்கையும் இருக்கின்றது. இதனை வாசிக்கும் பொழுது யாரையும் சாடுவதாக நினைத்தல் வேண்டாம் என்று அன்புடன் வேண்டிக் கொள்கின்றேன். எடுத்துக்காட்டுகளில் வருகின்றவர்கள் அனைவரும் நான் அறிந்தவர்களே. இவைகள் புனைந்துரையல்ல. எல்லாம் நிஜம்.
என்னிடம் கணினி வந்த பொழுதில் பயன்படுத்தும் வழிகளைக் கற்றுக் கொடுத்தவர்கள் இளைஞர்கள். 27 வயதைக் கடக்காதவர்கள். இருந்த ஏழுபேர்களில் ஒருவர் தவிர எல்லோரும் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அனைவரும் கிராமங்களிலிருந்து வந்தவர்கள். அவர்களில் ராஜாகான் எனக்கு ஆசான், ஓர் நண்பன் என்று சொல்லுமளவில் உட்கார்ந்து உலக விஷயங்களை அலசுவோம்.
பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின் நான் காணப் போகும் இரண்டாம் உலகத்திற்கு அழைத்துச் சென்றது சென்னை ஆன் லயனின் அரட்டையரங்கம். முதலில் பெயர், வயது பொய்யில் ஆரம்பித்தாலும் விரைவில் உண்மை வெளிப்பட்டபின் பலரும் என் வீட்டிற்கு வர ஆரம்பித்தனர். என்னை வயதானவள் என்று நினைத்து ஒதுக்கவில்லை. பலரும் மனம்விட்டுத் தங்கள் பிரச்சனைகளைக் கூறும் ஓர் இடமாக மதித்தனர். அவர்களை வைத்து ஓர் குழும்ம் ஆரம்பித்து விட்டேன்.
என் தோழிகளில் இருவர், புனிதவதியும் பிரமிளாகார்த்திக்கும் இந்த பயணத்தில் துணையானார்கள். பிரமிளாவின் தந்தை படுக்கையில் மிகவும் நோய்வாய்ப்பட்டு இருந்தமையால் அவள் வெளி வரமாட்டாள். தொலை பேசியில் எல்லாம் பேசிக் கொள்வோம். ஆனால் புனிதவதி என் வீட்டிற்கு வந்து ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் பங்கு கொண்டார்கள். இவர்கள் இல்லாத நேரங்களிலும் இளைஞர்கள் வீட்டிற்கு வந்து பிரச்சனைகளைத் கூறி ஆலோசனை கேட்பார்கள். அவர்களில் ஒருவரிடமிருந்துதான் அதிர்ச்சியான செய்தி கிடைத்தது. பெண்களுக்கு அதிகமாக நான் ஆதரவு கொடுப்பதாகக் குறைப்பட்டுக் கொண்டனர். அப்பொழுது தான் சில செய்திகள் கூறினர். வெறும் வாரத்தைகளாக இருந்திருந்தால் அது வம்பு என்று நினைத்திருக்கலாம். உறுதிப் படுத்தினர்.
பிள்ளைப் பருவ காலம் கடந்து, படிப்பு முடிந்து களப்பணிக்கு நான் வரும் பொழுது வருடம் 1956 ஏப்ரலில். உள்ளே நுழைந்த முதல் நாளே படிப்பினை ஆரம்பித்தது. பொய்களின் ஆட்டமும் பெண்களின் திண்டாட்டமும் பார்த்தேன். இரண்டாம் நாள் ஓர் பெண் சூழ்நிலையால் கெடுக்கப் பட்டதை அறிந்தேன். “எல்லோரும் கெட்டவர்கள் அல்ல. ஆனால் கெட்டது எப்பொழுது நடக்கும் என்று தெரியாது. எனவே எத்தனை வலுவான பெண்ணாக இருந்தாலும் கவனத்துடன் இருக்க வேண்டும்” என்பது இரண்டாம் பாடம். காலச் சுழற்சியில் ஏற்பட்ட மாறுதல்களைப் பின்னால் விரிவாக எழுதுவேன். இப்பொழுது எழுத எடுத்துக் கொண்டதில் கவனம் செலுத்த முயல்கின்றேன்
அரட்டையின் மூலம் அறிந்த இளைஞர்களில் சிலர் தற்காலப் பெண்கள் நிலைபற்றி சில விபரங்கள் கூறி வாதிட்டார்கள். அதில் பல விஷயங்கள் எனக்குத் தெரியாது என்பதை ஒப்புக் கொள்கின்றேன். அவர்கள் கூற்றை அப்படியே முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியா விட்டாலும் எல்லா வற்றையும் ஒதுக்க முடியாது என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
ஒரு மாணவனுக்கு செல் போனும் இருசக்கிர வண்டியும் இருந்துவிட்டால் பெண்கள் முதலில் லிப்ட் கேட்டு வருவார்கள். பின்னர் ரெஸ்ட்டாரண்ட் போகலாம் என்பார்கள். சில நாட்கள் சென்றால் சினிமா பார்க்கவும் ஊர் சுற்றவும் விரும்பிக் கூப்பிடுவார்கள். இளைஞனோ மகிழ்ச்சியில் அவளுடன் செல்வான். இந்த தொடர்பு நீடித்தால் சிலருக்குள் பாலியல் தொடர்பும் தொடர்ந்துவிடும்.
அவன் சொன்ன பொழுது மனத்தைக் குழப்பியது. ஆணும் பெண்ணும் நட்புடன் பழகுவது தவறாக நினைப்பவளல்ல நான். சிறுவயது முதல் வித்தியாசமின்றி ஆண்களோடு பழகி வருபவள் நான். ஆனால் அவன் கூறியது அதுவல்ல. இது நாகரீகத்தின் விளைவா? உல்லாசத்தில் எல்லையை மீறுவது சகஜமாகி விட்டதா?
முதலில் வாதிட்டேன். பின்னர் அவர்கள் பேசப் பேச மவுனமாகிவிட்டேன். அவர்கள் வம்பு பேசவில்லை. தங்கள் நண்பர்களின் பெயர்களைக் கூறி அவர்களின் அனுபவங்களையும் விளக்கினர். அத்துடன் பேச்சு நின்றிருந்தால் சரி. அடுத்து அவர்கள் தெரிவித்த செய்திதான் என்னை அதிர வைத்தது. அரட்டையரங்கு மூலம் வீட்டுப் பெண்களும் பழக ஆரம்பித்திருக்கின்றார்கள். தொலைபேசி எண்களைப் பரிமாறிக் கொண்டிருக்கின்றார்கள். முதலில் அவள் தன்னைப் பற்றிய எந்த விபரமும் கூறவில்லை. இவனும் சாதாரணமாக ஓர் பெண்ணுடன் பேசுவதாக எண்ணிப் பேசிக் கொண்டிருந்திருக்கின்றான். அவள் ஒரே ஒரு நிபந்தனை விதித்திருக்கின்றாள். தொலை பேசியில் அவள் கூப்பிடும் பொழுது மட்டும் பேசலாம். அவன் கூப்பிடக் கூடாது. காரணம் கேட்டிருக் கின்றான். பின்னால் சொல்வதாகச் சொல்லிவிட்டாள்.
ஒரு நாள் நேரம் குறிப்பிட்டு வீட்டிற்கு அழைத்திருக்கின்றாள். இவனும் சாதாரணமாகப் போயிருக் கின்றான். அங்கு போன பிறகுதான் அவள் மணமானவள் என்பதும் ஓர் குழந்தைக்குத் தாய் என்பதும் தெரிந்திருக்கின்றது. அருகில் உட்கார்ந்து தன்னைப்பற்றி பேசியிருக்கின்றாள். தன் கணவர் சரியில்லை யென்றும் அதனால் வாழ்க்கையில் மகிழ்ச்சியில்லை யென்றூம் கூறிவிட்டு அவன் தோள்மேல் சாய்ந்து அழ ஆரம்பித்திருக்கின்றாள். நம் இளைஞனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. அந்த நெருக்கத்தை அவள் பயன்படுத்திக் கொண்டு அவனை வசப்படுத்திவிட்டாள். அவனுக்கும் அனுபவம் புதிது. மருட்சி இருந்தாலும் மறுக்கவில்லை. அவனுக்கு ஏற்பட்ட அனுபவத்தைத் தன் நெருங்கிய நண்பர்களிடம் கூறியிருக்கின்றான். அந்த நண்பர்களில் சிலரும் இது போன்ற அனுபவங்கள் கிடைத்ததைப் பறிமாறிக் கொண்டிருக் கின்றனர். அதுதான் அதிர்ச்சி தரும் செய்தி. கணவனால் அவள் திருப்தி அடைய வில்லையாம். அவன் உதவி செய்தால் பணம் கொடுப்பதாகக் கூறியிருக்கின்றாள். ஆண் வியாபாரியின் உதயம் இப்படித்தான் ஆரம்பமாகி யிருக்கின்றது. ஏற்கனவே உல்லாசமாகத் திரிய பணம் போதாதவர்கள் இந்த வழியில் சம்பாதித்து விருப்பம்போல் உல்லாச வாழ்க்கை நடத்த ஆரம்பித்திருக் கின்றார்கள். சிலர் தங்கள் பெண் சிநேகிதிகளைத் திருப்தி படுத்தப் பணம் போதாமல் திண்டாடியவர்களுக்கும் இத்தகைய நண்பர்களால் இது போன்ற வீட்டுப் பெண்கள் அறிமுகமாகி, பணம் சம்பாதித்து பெண் சிநேகிதியுடன் உல்லாசமாகத் திரிய ஆரம்பித்திருக்கின்றனர்.
இளைஞர்களோ மற்றவர்களோ என் மீது கோப்பட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றேன்.
நான் கேள்விப்பட்டவைகளை எழுதுகின்றேன். செய்திகளை அறிந்த பொழுது மனம் மிகவும் வேதனைப்பட்டது. என் நண்பர்களில் ஒருவரிடம் கூறி இப்படியும் நடக்கின்றதா என்று கேட்டேன். அவர் என்னைத் திட்டினார். சமூக சேவை என்று இளைஞர்கள் பிரச்சனைகளில் நுழையவேண்டாம் என்றார். அது என் உயிருகே ஆபத்தாக முடியலாம் என்றார். மேலும் அவரும் சில உண்மைளைக் கூறினார். மேல்மட்டங்களில் சிலர் பண்டமாற்று முறை போன்றும். பழகுவார்கள். இப்பொழுது இப்படி இளைஞர்களை பணம் கொடுத்தும் உபயோகப்படுத்கின்றனர். அவனால் அவளுக்கு நிரந்தர தொல்லை இருக்காது என்று நினைக்கிறாள். எப்பொழுதாவதுதான் இப்படி நடப்பதால் கூப்பிட்ட குரலுக்குக் கிடைக்கும் வாலிபர்களை உபயோகப்படுத்திக் கொள்கின்றாள். வயதில் பெரியவனாக இருந்தால் தங்களை பிளாக்மெயில் செய்யலாம் என்று நினைக்கின்றனர். செலவழிக்கப் பெற்றோர் கொடுக்கும் பணம் சிலருக்குப் போதவில்லை. சில செல்வந்தர் வீட்டுப் பிள்ளைகளும் உல்லாச வாழ்க்கைக்கு எந்த எல்லைக்கும் போகத் தயாராகி விடுகின்றனர். தனியாக இருக்கும் பெண்களைத் தாக்குதலும் வளர்ந்து வருவதைக் கூறி இனிமேல் இதுபற்றி என்னை ஆராய்ச்சி செய்வது வேண்டாம் என்றார். தெரியாதவர்களிடம் பழக வேண்டாம் என்றும் அறிவுரை கூறினார். இந்தபுத்திமதிகள் பெற்ற பொழுது எனக்கு வயது 68. படிப்பினைகள் எந்த வயதிலும் கிடைக்கும். நானும் அதன்பிறகு இது பற்றி யாரிடமும் பேசுவதில்லை. ஆனால் மனத்தில் புகுந்த வேதனை மட்டும் அங்கேயே தங்கிவிட்டது.
அமெரிக்காவில் மாணவர்களுக்கு வேலைகள் கிடைக்கும் .உழைத்துக் கிடைக்கும் வருவாயைத் தங்கள் அதிகச் செலவிற்கு வைத்துக் கொள்வர். இந்தியாவில் மாணவர்களுக்கு அத்தகைய வாய்ப்புகள் கிடையாது.
நான் பார்த்த பணி “தாய் சேய் நலம்” மற்றும் சமுதாய நலன். இவர்களும் என் பிள்ளைகள். ஊடகங்களின் தாக்குதல்களில் உருண்டு புரண்டு கொண்டிருக்கும் நம் பிள்ளைகளுக்கு இப்படி ஓர் விஷப் பரீட்சையா? எங்கும் இன்னும் பரவவில்லை. ஆனாலும் தொடக்கமாகி விட்டதே. எத்தனை பெற்றவர்களுக்கு இந்த அபாயச் செய்தி தெரியும் ? இந்தச் செய்திகள் கேள்விப்பட்டு ஏறதாழ 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்பொழுது நிலைமை எப்படி இருகின்றதோ? அக்காலத்தில் கூட்டுக் குடும்பத்தில் மரியாதை முக்கியம். கடமை, கண்ணியம், கட்டுப்பாடும் இருந்தன. இன்று காலம் மாறிவிட்டது. கூட்டுக் குடும்பம் முறை இல்லை. சுதந்திரத்தைத் தந்திரமாக எத்தனை வழிகளில் முடியுமோ அனுபவிக்க ஆரம்பித்திருக்கின்றோம்.
பம்பாய் ஆண்வியாபாரிகள் பற்றிய ஒரு செய்தியைக் கூறவேண்டியது என் கடமை. அங்கு விலைமாதர்களுக்கு இருக்கும் தேவை போல் ஆண் வியாபாரிகளும் தேவை அதற்கும் தரகர்கள் இருக்கின்றார்கள். இயற்கை ஆணையும் பெண்ணையும் படைத்திருந்தாலும் உடல், உணர்வு இவைகளில் நிறைய வேறுபாடுகளுடன் படைத்திருக்கின்றது. ஆண்வியாபாரி முன்பின் தெரியாத பெண்ணுடன் பழக வேண்டும். அது அவ்வளவு எளிதல்ல. ஆண்மை சக்தி பெற அதற்கென்று சில மாத்திரைகள், சில ஊசிகள் உண்டு.. அதனை அடிக்கடி அவர்கள் உபயோகிக் கின்றார்கள். இதனை அடிக்கடி உபயோகித்தால் ஆண்கள் தங்கள் 45 வயதிற்குள் சக்தியை இழக்கலாம் என்று கூறினார்கள். என்ன கொடுமை?!. புதிய மாதவியிடம் கூறி விசாரிக்கச் சொன்னேன். நான் கேள்விப்பட்டது சரியென்று அவர்களும் கூறினார்கள்.
தேனியின் வாழ்க்கை நினைவிற்கு வருகின்றது. ஓர் கூட்டில் ராணி ஈ, ஆண் ஈக்கள், வேலைக்கார ஈக்கள் என்று மூவகை உண்டு. ஒரு “சீசனில்:” இராணி ஈ கலவி வேண்டி மேலே பறக்க ஆம்பிக்கும். ஆண் ஈக்கள் போட்டி போட்டு கொண்டு பின்னால் பறக்க முயலும்.. ஆண் ஈக்கள் சோம்பேறிகள். அவர்களால் வேகமாகவோ அதிக தூரமாகப் பறக்கவும் முடியாது. முயற்சியில் வென்ற ஒர் ஆண் ஈ ராணி ஈயுடன் கலவி கொள்ளும் .இன்பம் அனுபவித்த ராணி ஈ மகிழ்வுடன் பறந்து சென்று விடுவாள். ஆனால் ஆண் ஈ செத்து விழும். அதன் உயிர்நாடியில் ஆண்மையை இணத்த இயற்கையின் கொடுமையினை என் சொல்வது?! மும்பாய் சிகப்பு விளக்குப் பகுதி பெண்களைப் பற்றிப் பேசும் பொழுது பரிதாபப்படுகின்றோம். பக்கம் பக்கமாக அவலக் கதைகளை எழுது கின்றோம். இந்த ஆண்வியாபரிகளின் பிரச்சனைகளை ஆராய்ந்து அவர்களை வழி நடத்த வேண்டாமா? மகள் புதிய மாதவிக்கு ஓர் வேண்டுகோள் விடுக்கின் றேன். மனிதப் பிறவிகள் என்று வரும் பொழுது ஆண், பெண் இருபாலாரின் பிரச்சனைகளையும் ஆராய்ந்து உதவி செய்ய, வழி நடத்த ஓர் அமைப்பை ஏற்படுத்துங்கள். இன்று எழுதுவதற்கு நிறைய பேர்கள் இருக்கின்றார்கள். களத்தில் இறங்கி போராட, பணி செய்யத்தான் திறனும் வலிமையும் உள்ளவர்கள் தேவை. உங்களால் முடியும். களப்பணி தொடர்க.
பெண்களும் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். எங்கள் காலத்தில் பெண் வயதிற்கு வந்து விட்டால் அவள் முகத்திலே ஓர் மினுமினுப்பு இருக்கும். எல்லோரும் அழகுப் பெண்களாய்த் தெரிவர். இன்று அந்த அழகு எங்கே? என் காலத்தவர் பார்த்து ரசித்த அழகு இப்பொழுது எங்கே போய்விட்டது ? கால ஓட்டத்தில் கூட்ட நெரிசலில் நாம் இழந்துவிட்ட மென்மை எங்கே? அரிதாரப் பூச்சுகளால் அழகு படுத்தினாலும் மனத்தைக் கிளர்ச்சியுறச் செய்யுமே தவிர இனிமையான இன்பம் கிடைக்காது. இல்லறம் தொடங்கி இனிமையைச் சுவைத்து, அந்த நினைவுகள் மனச் சிமிழில் தேங்கி மகரந்தப்பூவாய் மணம் பரப்ப நடத்தும் தாம்பத்திய சுகம் இழந்து கொண்டிருக்கின்றோம். ஏற்கனவே ஏற்பட்டுவிட்ட சில நாகரீகச் சீக்குகளோடு, பாலியில் உறவும் உரிமை என்று நினைத்து விளையாடினால் இழப்பு நம் பெண் இனத்திற்கு அதிகம். வயதாக ஆக மனம் ரணமாக வலிக்கும். முதுமை கொடுமையாக இருக்கும்.
இயற்கைப் படைப்பில் ஆண் தோற்றம் அழகு. தோகை விரித்தாடும் மயில்கள், நிமிர்ந்து நிற்கும் சிங்கங்களைப் பார்க்கவும். மனித இனத்திலும் அப்படியே. ஆடைகளும் அணிகளும் பெண்னை அழகாகக் காட்டுகின்றன. ஆடைகளைக் குறைக்க குறைக்க பெண் கலவிப் பண்டமாகத் தெரிவாளே தவிர காதல்கன்னியாகத் தெரியமாட்டாள். இது என் கூற்று அல்ல. ஒர் தினம் பல எழுத்தாளர்கள் கூடியிருக்கும் பொழுது நடந்த விவாதத்தில் கூறப்பட்ட கருத்து. சிந்திக்க வைக்கும் கருத்து.
ஆண், பெண் இருவருமே காமக் களியாட்டங்களில் தங்களை அழித்துக் கொள்ளக் கூடாது. அளவிற்கு மீறினால் அமிர்தமும் விஷம். எதுவும் ஒர் எல்லைக்குள் இருக்கும்படியாக வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். மனம் நிம்மதி பெறுவது அவன் பொறுப்பில் அமைந்திருக்கின்றது.
அடுத்து இன்னொரு முக்கியமான பிரச்சனையைப் பற்றி எழுத விரும்புகின்றேன். “செக்ஸ்” பாபமில்லை. உறவு கொள்வதில் தவறில்லை. இப்படி பலரும் பேச ஆரம்பித்து விட்டனர். சிலர் அதன்படி நடக்கவும் ஆரம்பித்து விட்டனர். என்னைக் கிழவி யென்றும், பத்தாம்பசலியென்று கேலியாகப் பேசலாம். வீட்டைவிட்டு பெண் வெளிவரத் தயங்கிய காலம் முதல் பெண் விடுதலை பற்றிப் பேசுகின்றவள் நான். கற்பு ஆண்களால் கற்பிக்கப்பட்டது என்று நான் எழுதியது புத்தகங்களில் அச்சில் வந்திருக்கின்றது (1958). பொதுப்படையாகப் பார்க்கக் கூடாது. பாபம் என்றோ, கற்பு என்றோ பேசி இக்கருத்தை ஒதுக்க வில்லை. ஏன் என்று விளக்க வேண்டியது என் கடமை.
அண்டம் தோன்றியது மாபெரும் சக்தியால்தான். சக்தி என்றவுடன் இந்த மண்ணில் வெற்றிடத்தை நோக்குவதில்லை. சக்தியைப் பெண்வடிவமாகக் காட்டிய பூமி இது. இதனை ஆன்மீகம் என்று ஒதுக்க நினைப்பவர்கள் ஒதுக்கிவிடலாம். புது உயிரைப் படைப்பது யார்? ஆண் வித்தானாலும் கருவிலே பல மாதங்கள் காப்பது பெண். வயிறு வீங்கி தோற்றப் பொலிவைக் கூட மாற்றிவிடும். இடுப்புவலி சகித்துப் பிள்ளையைப் பெறுகின்றாள் ( இப்பொழுது வயிற்றை அறுத்து பிள்ளையை எடுக்கும் வழக்கம் தொடங்கியிருக்கின்றது ). குழந்தை பிறந்தவுடன், அதன் முகம் பார்த்து எப்படி மகிழ்கின்றோம்?! அதற்குப் பாலூட்டிச் சீராட்டி தோள்மேல் சாய்த்து உறங்க வைக்கும் பொழுது நாமும் மெய்மறந்து நிற்போம்! அந்தத் தாய்மையைக் கடைசிவரையில் காப்பாற்ற வேண்டாமா? பிள்ளை பெற்றால் மட்டும் போதுமா?
இரு எடுத்துக்காட்டுக்கள் காட்ட விரும்புகின்றேன்
அவள் ஒரு அழகி. பெயர் தேவி.மயக்கும் விழிகள். செதுக்கி வைத்த சிற்பம் போன்ற மேனியாள் தங்க நிறம். அவள் ஒரு தொண்டு நிறுவனம் அமைத்து அதன் மூலம் பலருக்கு உதவி செய்து வந்தாள். அதன் கீழ் பல அமைப்புகள். நாங்கள் ஒரே பகுதியில் குடியிருந்தோம். மேலும் அவள் செய்தது சமூக நலப் பணி என்பதால் இருவருக்கும் தொடர்பு இருக்க வேண்டியதாயிற்று. அவள் கணவர் ஓர் ஆசிரியர். ஆசைக்கு ஒரு மகன். ஆரம்பத்தில் அவள் செய்யும் பணிகளைக் கண்டு வியந்திருக்கின்றேன். இப்பொழுதும் சொல்வேன். அவள் சமுதாயத்திற்குச் செய்த பணிகளில் குறையில்லை. ஆனால் அந்த நிறுவனம் நடத்த வெளியாரிடமிருந்து உதவிகள் பெற்ற விதம் பல சமயங்களில் ஏற்றுக் கொள்ள முடியாததாக இருந்தன. அவளுக்கு நல்ல பெயர் இல்லை. சில வருடங்கள் கழித்துதான் எனக்கும் சந்தேகம் தோன்ற ஆரம்பித்தது. அழகைக் காட்டிப் பழகுவாள். என்றாவது ஒரு நாள் கிடைப்பாள் என்று நினைத்துப் பழகிய ஆண்களைப் பார்த்திருக்கின்றேன். அவள் பார்வையும் சிரிப்பும் சரியில்லை. நான் அடிக்கடி கண்டித்தேன். தான் எந்தத் தவறும் செய்ய வில்லை என்று கூறுவாள். ஆனால் சிலருடன் தவறாகப் பழகியிருப்பது பின்னால்தான் தெரிய வந்தது. அவள் கணவரால் எப்படி சகித்துக் கொள்ள முடிகின்றது என்று வேதனைப் பட்டேன். இருக்கும் ஒரு மகனிடமும் அக்கறை காட்டவில்லை. ஊராரின் அவச்சொல்லுக்கு அம்மாவின் பெயர் அடிபடுவது அவனை வருத்தியிருக்க வேண்டும். அதிகமாக தாயும் மகனும் பேசுவதை நான் பார்க்கவில்லை. அதையும் கண்டித்தேன். நான் அவளைத் திட்டும் பொழுது ஒரு சிரிப்பு சிரிப்பாள். “நான் தப்பு செய்யல்லே” என்று மட்டும் கூறுவாள். கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பித்தேன். ஆனாலும் அவளைப் பார்க்கும் பொழுது புத்திமதி கூறுவதை நிறுத்தவில்லை. என் குடியிருப்பை மாற்ற வேண்டிய சூழல் வந்து வேறு இடம் போய்விட்டேன். அவளை அடிக்கடி சந்திப்பதும் குறைந்து போனது. அவள் மகன் எப்படியோ பட்டப் படிப்பை முடித்து மேல்படிப்பிற்கு அமெரிக்கா சென்றான். அவளுடைய அண்ணன் அங்கே இருந்ததால் அங்கே அனுப்பிவிட்டாள்.
மேலும் வருடங்கள் கழிந்தன. ஒரு நாள் என்னைத் தேடி வந்தாள். மகன் படிப்பை முடித்து விட்டு அமெரிக்காவில் வேலை பார்க்க ஆரம்பித்துவிட்டானாம். ஒரு பெண் பார்த்து தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி எழுதியிருந்தான். கடிதத்தைப் படித்தவுடன் அவளுக்கு அறிவுரை கூறினேன். மகனுக்குச் சீக்கிரம் திருமணம் செய்து வைக்கச் சொன்னேன். “இப்பொழுதானே வேலைக்குப் போயிருக்கின்றான் கொஞ்ச நாளாகட்டும்” என்று கூறிவிட்டாள். சில மாதங்கள் கழிந்தன. ஒரு நாள் கண்ணிர் சிந்தும் கண்களுடன் வந்தாள். அவள் மகனின் திருமணப் பத்திரிகை தந்தாள். அதாவது பத்திரிகை கொடுக்கும் நாள்தான் மகனின் திருமணம். தாய் இந்தியாவில். மகன் அமெரிக்காவில். தாயைக் கேட்டுப் பயனில்லாமல் போகவே அவனே ஒரு அமெரிக்கப் பெண்ணைத் தேர்ந்தெடுத்து மணத்திற்கு ஏற்பாடு செய்துகொண்டு விட்டான். தகவல் மட்டும் தாய்க்கு அனுப்பினான். ஊராருக் காக இவளே ஒரு பத்திரிகை அச்சடித்து எல்லோருக்கும் கொடுத்தாள். கடைசியாக என்னிடம் கொடுத்துவிட்டு “ஓ” வென்று அழுதாள். எனக்கு இரக்கம் வரவில்லை. இப்பொழுது தண்டனை தாய்க்கா அல்லது மகனுக்கா என்று தெரியவில்லை.
தேவியிடம் ஒரு குணம். நான் என்ன திட்டினாலும் கோப்பட்டு என் நட்பை முறித்துக் கொள்ள வில்லை. என் முயற்சிகளிலும் பயனில்லை. தான் தவறு செய்யவில்லை யென்று மீண்டும் மீண்டும் கூறினாள். அவள் தடுமாறி விழுந்த சில நிகழ்வுகளை அறிவேன். இப்பொழுது பேசிப் பயன் என்ன? மகனின் திருமணக் காட்சியைக் காண முடியாமல் போய்விட்டது. மேலும் ஒரு வருடம் சென்றது. பேத்தி பிறந்திருப்பதாகச் செய்தி வந்தது. அவளுக்கு இருப்பு கொள்ள வில்லை. கணவரைக் கூட்டிக் கொண்டு அமெரிக்கா பயணமாகி விட்டாள். அவள் திரும்பிய பொழுது நான் அமெரிக்கா சென்றேன். காலம் எங்களுடன் விளையாடியது. அவள் மகன் வேலை பார்க்கும் ஊரிலேயே என் மகனுக்கும் வேலை கிடைத்தது. நானும் அவளும் அமெரிக்காவில் சந்திக்க ஆரம்பித்தோம். அவளிடம் இப்பொழுது சிரிப்பு இல்லை. ராணி போல் இந்தியாவில் வாழ்ந்தவள் பகுதி நேர வேலை பார்க்க கடைகளுக்குச் சென்றாள். பணம் கொடுக்கா விட்டால் அமெரிக்கா மருமகள் வைத்துக் கொள்ள மாட்டாளே.
அங்கே போக விட்டு அவளுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. மருமகளுக்குப் பல ஆண் நண்பர்கள். வெளியில் சென்றால் இரண்டு அல்லது மூன்று நாட்கள் கழித்து வருவாள். குழந்தையைத் தகப்பன்தான் பார்த்துக் கொள்ள வேண்டும். மனைவியைக் கண்டிக்கக் கூடாதா என்று மகனைத் திட்டியிருக்கின்றாள். அதற்கு அவன் “என் அப்பாவைப் போல் நானும் இருக்கின்றேன்” என்று மட்டும் பதில் சொல்லியிருக்கின்றான். அதைச் சொல்லி அழுதாள் உண்மை அவளைச் சுட்டிருக்கின்றது. தகப்பனுக்கும் மகனுக்கும் ஒரே பிரச்சனை. குழந்தையின் எதிர்காலம் நினைத்து உணர்ச்சியற்ற மனிதர்களக வாழ வேண்டிய நிர்ப்பந்தம். நடைப்பிணங்கள்!
இன்னொரு தாயைப் பார்க்கலாம். அவள் ஒரு ஆசிரியை. பெயர் வள்ளி. தந்தை ஓர் பண்ணையார். சொத்து அதிகம். ஒரே மகள். செல்லமாக வளர்த்துவிட்டார். அவருக்கு அரசியல் மேல் ஆசை. மகளை ஆசிரியைப் பணியைவிடச் சொல்லி அரசியலில் சேர்த்துவிட்டார். ஏற்கனவே மணமாகி இரு குழந்தைகளுக்குத் தாய். முருகன் மூத்தவன். குயிலி அவன் தங்கை. கணவர் விவசாயம்தான் பார்த்துக் கொண்டிருந்தார். கணவரை மதிப்பதில்லை. எப்படியோ இரு குழந்தைகள் பிறந்து விட்டன. அரசியலில் ஈடுபடவும் சுதந்திர வாழ்க்கை பிடித்துவிட்டது. கணவர் பொம்மையானார். வள்ளிக்கு ஆண் நண்பர்கள் கிடைத்தனர். கணவரை ஒதுக்கி விட்டாள். பெற்ற பிள்ளைகளுக்கு முன்னாலேயே மற்ற ஆண்களுடன் உறவு கொண்டாடினாள். குயிலியை என் வீட்டிற்குக் கூட்டிவரும் பொழுது அக்குழந்தைக்கு மூன்று வயது. என் மகனுக்கு இரண்டு வயது. அப்பொழுது முதல் நாங்கள் இருவரும் பழகி வந்தோம். அழகியைத் திட்டியது மாதிரி வள்ளியைக் கண்டிக்க முடியவில்லை. ஆனாலும் முடிந்த அளவு ஜாடையாகச் சொல்லிப் பார்த்தேன். பலருடன் பழகுவதை விடுத்து ஒருவருடன் நிரந்தரமாக வாழ ஆரம்பித்துவிட்டாள். எல்லோருக்கும் தெரியும்.
பிள்ளைகள் இருவரும் நன்றாகப் படித்தனர். முருகன் அதிக மதிப்பெண் வாங்கி உடனே வட நாட்டிற்கு வேலைக்குச் சென்றான். வள்ளியின் கணவர் மனம் வெறுத்து ஊரை விட்டே எங்கேயோ போய்விட்டார். மகளுக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்து மணமுடிக்கச் சொன்னேன். ஐ.ஏ.எஸ் மாப்பிள்ளை தேடினாள். மருமகன் மூலமாக அதிகாரம் செய்ய விரும்பினாள். வட நாட்டிற்கு வேலைக்குச் சென்ற முருகன் ஓர் விபத்தில் மாண்டுவிட்டான். இருக்கும் மகளுக்காவது சீக்கிரம் மணம் முடிக்கச் சொன்னேன். அவள் தேடிய ஐ.ஏ.எஸ் மாப்பிள்ளை கிடைக்கவில்லை. அவளிடம் பெண் எடுக்கவே பயந்தனர்.மகளின் வயது ஏறிக் கொண்டே போயிற்று. விருப்பதிற்கேற்ற மாப்பிள்ளை கிடைக்கவில்லை. குயிலி எம்.ஏ வரை படித்திருந்தாள். ஓர் தொழில் ஆரம்பித்து விட்டாள். அப்பொழுது உதவி செய்த ஒருவர்மேல் காதல் பிறந்தது. அதனை அறிந்த வள்ளி ,அந்தப் பையனின் தகப்பனைக் கூப்பிட்டு மகனைக் கண்டிக்கச் சொன்னாள். அல்லது உயிருக்கு ஆபத்து வரும் என்று பயமுறுத்தினாள். பலன் காதல் முறிந்தது. என்னால் பொறுக்க முடியவில்லை. சத்தம் போட்டு திட்டினேன்.
“இரண்டு பிள்ளைகள் பெற்றும், வயதாகியும் எத்தனை ஆண்களுடன் விளையாடினாய். உன் மகளுக்கு ஒருவனாவது வேண்டாமா? மகள் வாழ்க்கையைக் கெடுத்து விட்டாயே” என்று கத்தினேன். கடுமையான வார்த்தைகள்தான். அதன் பிறகு அவள் என்னுடன் பேசுவதில்லை. அமெரிக்காவில் நான் இருப்பதால் அவளைப் பற்றிய செய்திகளும் சரிவரக் கிடைக்கவில்லை. ஒரு நாள் அவள் இறந்து விட்டதாகக் கேள்விப் பட்டேன். மகளுக்கு அப்பொழுதும் திருமணமாக வில்லை. 45 வயதாகி விட்டது. வீட்டு எண்ணிற்கு பேச முயன்றேன். கிடைக்கவில்லை.
ஒரு வாரத்திற்கு முன்னால் தற்செயலாக ஒரு எண் என் கண்களில் பட்டது. அது குயிலியின் செல் நம்பர். இத்தனை வருடங்களில் மாறியிருக்காதா என்று நினைத்தேன். இருப்பினும் முயன்றேன். கடவுளே, அவள் குரல் கேட்டு கத்தி அழுதுவிட்டேன். அழுகையை அடக்க முடிய வில்லை. அவளுக்கு ஸ்ட்ரோக் வந்து வலது கை செயல் இழந்துவிட்டது. கால்கள் மெதுவாக நடக்க முடியும். முதலில் பேசவும் முடியாமல் இருந்தது. இப்பொழுது திக்கி திக்கி பேச முடியும். நினைவு சக்தி பாதிக்கப்பட்டு விட்டது. முதுகலைப்பட்டம் பெற்றவள். இப்பொழுது தமிழ் கூட வாசிக்கத் தெரியாது. கோடிக் கணக்கில் சொத்து இருக்கின்றது. ஆனால் பணக்கார அனாதை. தொழிலை மட்டும் தொடர்ந்து நடத்தி வருகின்றாள். தாய் செய்த குற்றத்திற்கு மகளுக்குத் தண்டனையா? தெய்வத்திடம் கோபம் ஏற்பட்டது. கடவுள் இருக்கின்றாரா என்று அழுது கொண்டிருக்கின்றேன். அவள் அம்மா மட்டும் உயிருடன் முன்னால் வந்தால் என்ன செய்வேனோ தெரியாது. நான் தூக்கி மகிழ்ந்த குழந்தை குயிலி இன்று முடமாகி விட்டாள். என் மகன் இதனைக் கேள்விப்படவும் கண்கலங்கி விட்டான். குழந்தைத் தோழியாயிற்றே! அவளைப் பார்க்கவாவது இந்தியாவிற்குப் போயாக வேண்டும்.
இன்னொரு தகவலையும் கூற வேண்டும். வெறி விளையாட்டில் AIDSஸ் நோய் பெற்றுக் கொண்டு தன் அப்பாவி மனைவிக்குப் பரிசாகக் கொடுக்கும் கணவன்மார்கள் இருக்கின்றார்கள். நோய் மட்டுமல்ல, குழந்தையையும் கொடுத்து விடுவான். இத்தகைய கணவனைக் கொண்டவர்கள் கர்ப்பமாகவும் மருத்துவர்களிடம் போக வேண்டும். உண்மைகளைக் கூறி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். புதிய உயிர் பிறக்கும் பொழுதே அப்பன் கொடுத்த சீதனமாக நோயை ஏன் எடுத்து வரவேண்டும். இப்பொழுது தடுக்கும் வழிகள் கண்டுபிடித்துவிட்டனர். கர்ப்பிணி தாய்மார்களுக்கு மற்றவர்கள் சொல்ல வேண்டும்., மருத்துவர் எப்பொழுதெல்லாம் வரச் சொல்கின்றாரோ அப்பொழுது சென்று தடுப்பூசி போட்டுக் கொள்வதிலிருந்து அவர்கள் சொல்லும் சிகிச்சைகளைத் தவறாது செய்து கொள்ள வேண்டும். நோயில்லாக் குழந்தை பிறக்கும். தாயின் அறியாமையில் குழந்தையின் வாழ்க்கை பாதிக்கப்படக் கூடாது. இதனைப் படிப்பவர்கள தயவு செய்து இச்செய்தியினைப் பரப்புங்கள். குழந்தைகளைக் காப்பாற்றுங்கள்.
இவ்வளவு முயன்றும் திருந்தாத பெண்களைக் காட்டியிருக்கின்றார். மற்றவர்களைத் திருத்தவே முடியாது என்று தோன்றுகின்றதே! பிறகு ஏன் வீண் முயற்சி எனக் கேட்கத் தோன்றலாம்.ஒரு பெண் தாயாகி விட்டபின் தவறு செய்வதும், அதன் விளவுகளையும் காட்ட எடுத்துக் கொண்ட உதாரணங்கள். இனி அடுத்த பகுதியிலிருந்து பல எடுத்துக் காட்டுக்கள் வர இருக்கின்றன. முயற்சிகளின் பலன்கள் ஒவ்வொன்றும் ஒரு விதம்.
அவசர முடிவும் சலிப்பும் தோன்றினால் நம் கடமைகளைச் சரிவரச் செய்ய முடியாது..
“இளைஞர் சக்தி உலகில் பிரம்மாண்டமான சக்தி. அந்த சக்தி ஆக்க பூர்வமாகப் பயன்படுத்தப் படுகிறதா, அழிவை நோக்கிப் பயன்படுத்தப் படுகின்றதா, பயன்படுத்தாமலேயே புதைந்து போகிறதா என்பதைத் தீர்மானிப்பதில் அவர்களுக்குக் கிடைக்கும் முன்மாதிரிகளுக்கும், அவர்கள் மனதில் பதியும் நிகழ்வுகளுக்கும் பெரும் பங்குண்டு.”
என்.கணேசன் – வாழும்கலை
தொடரும்.
படத்திற்கு நன்றி
- மானுடம் போற்றுதும்
- இலக்கியப்பயணம்: —கனவு இலக்கிய இதழுக்கு வெள்ளிவிழா —- கனவு 25
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் –34
- நம்பிக்கை ஒளி! (4)
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (மூன்றாம் அங்கம் முடிவு) அங்கம் -3 பாகம் -8
- இயேசு ஒரு கற்பனையா?
- அக்னிப்பிரவேசம் -7
- கொசுறு பக்கங்கள்
- காரைக்குடி கம்பன் கழகத்தின் பவளவிழா
- ‘பாரதியைப் பயில…’
- தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப் பரிசு 2012
- நான் ரசித்த முன்னுரைகளிருந்து………….. 2. பாரதியார் – பாஞ்சாலி சபதம்.
- சி.சு. செல்லப்பாவின் நூற்றாண்டு நிறைவினைக் கொண்டாடும் வகையில் தளத்தின் முதல் இதழ் சி.சு. செல்லப்பாவுக்கு அஞ்சலி
- தாகூரின் கீதப் பாமாலை – 37 யாருக்குத் தெரியும் ?
- வைதேஹி காத்திருந்தாள்
- ஆரோகணம் & பிட்சா – டிஜிடல் தமிழ் சினிமா புரட்சியின் மைல்கல்கள்
- தானாய் நிரம்பும் கிணற்றடி ..அய்யப்பமாதவனின் சிறுகதைத் தொகுதி எனது பார்வையில்
- கவிதைகள்
- பழமொழிகளில் கல்லும் கல்லெறியும்
- மணலும், நுரையும்
- மீட்சிக்கான விருப்பம்
- தபால்காரர்
- தீயில் கருகிய சில உன்னத உறவுகள் நினைவுகள்
- மரப்பாச்சி இல்லாத கொலு
- “தீபாவளி…… தீரா வலி….. !”
- ஸ்வாத் பள்ளத்தாக்குக்கு போகும் சாலை: வெறுப்பு அழித்ததை மனிதம் மீட்கிறது.
- லூப்பர் ( ஆங்கிலம் )
- பேரரசுவின் திருத்தணி
- கற்பனைக் கால் வலி
- மனிதாபிமானம்!!
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! விரைவாக மாறும் வெளிக்கருவால், பூமியின் காந்தப் புலமும், ஈர்ப்பு விசையும் பாதிக்கப் படுகின்றன.
- சிறுவன்
- முப்பெரும் சக்தியின் நவராத்திரி..!
- மன்னை சரஸ்வதி தாயுமானவன் எழுதிய ‘நெல் மணிகள்’கவிதைத்தொகுப்பு