மச்சம்

This entry is part 11 of 31 in the series 4 நவம்பர் 2012

 

உருது மூலம் – இஸ்மத் சுக்தாய்

தமிழில் – ராகவன் தம்பி

kpenneswaran@gmail.com

“சௌத்ரி… ஓ சௌத்ரி…  கொஞ்சம் நான் சொல்றதைக் கேளேன்”

கணேஷ்சந்த் சௌத்ரி அமைதியாக இருந்தார்.

“உஷ்… உஷ்”…

“எதுக்கு இப்படி சில்வண்டு மாதிரி தொந்தரவு பண்ணிக்கிட்டே இருக்கே?”

“எனக்கு ரொம்ப களைப்பா இருக்கு”

“மரியாதையா சும்மா உட்காரு.  இல்லேன்னா…”

“இனிமேலும் என்னால உட்கார முடியாது.  இங்கே பாரு.  உக்காந்து உக்காந்து முதுகெல்லாம் பலகை மாதிரி ஆகிப்போச்சு.  ஹே ராம்”

“ச்சு… ச்சு…

“எனக்கு  அப்படியே உடம்பெல்லாம் நடுக்கமா இருக்கு”

சௌத்ரி ஒன்றும் சொல்லவில்லை.

“இங்கே… தோ… இங்கேதான்.  இங்கே பின்பக்கமா எறும்பு கடிச்சுக்கிட்டே இருக்கு”

“இதோ பாரு ராணி.  பத்து நிமிஷம் கூட இன்னும் ஆகலை. அதுக்குள்ளே இப்படி ஆரம்பிச்சா எப்படி?”

“ஐயே… என்னை என்ன களிமண்ணுலேயா செய்திருக்காங்க?” ராணி தன்னுடைய தடித்த  உதடுகளைப் பிதுக்கியவாறு வெண்பளிங்கு முக்காலியில் இருந்து கீழே நழுவினாள்.

“சனியனே, அசையாமல் உட்காரு.  சொல்லிக்கிட்டே இருக்கேன்.  தேவடியா”.  சௌத்ரி வண்ணக் கலவைப் பலகையை ஸ்டூலின் மீது எறிந்து விட்டு அவளுடைய தோளைப் பலமாக உலுக்கினார்.

“அது சரி.  ஒண்ணு பண்ணலாம்.  கொஞ்சம் பக்கத்துலே வா”… என்றவாறு தரையில் மல்லாக்கப் படுத்தாள். பக்கத்தில் கடுப்புடன் நின்றார் சௌத்ரி.  அவளுடைய கன்னத்தில் பளார் பளாரென நான்கு அறைகள் விட்டால் என்ன என்று நினைத்தார்.  அப்படி ஏதாவது செய்தால் வேண்டுமென்றே கூப்பாடு போட்டு ஊரைக் கூட்டி விடுவாள்.  இத்தனை பிரயாசைப்பட்டு வரைந்து கொண்டிருக்கும் இந்த ஓவியம் அறைகுறையாக நின்றுவிடும்.

“இதோ பாரு.  கொஞ்சநேரம் இப்படி அசையாமல் உட்கார்ந்துக்கோ.  எல்லாம் பிறகு பார்த்துக்கலாம்” என்று சமாதானப்படுத்தும் தொனியில் சொன்னார்.

“ரொம்பக் களைப்பா இருக்கு” என்று தரையில் உருண்டாள்.

“களைப்பா இருக்கா?  தெருத்தெருவா நாள் முழுக்க ஊரெல்லாம் அலைஞ்சு சாணி பொறுக்கிக்கிட்டு இருந்தியே.  அப்போ உனக்குக் களைப்பா இல்லையா?  நாயே..”சௌத்ரிக்கு மீண்டும் கோபம் உச்சிக்கு ஏறியது.

“யாரு சாணி பொறுக்கினா?  சரியான அல்பம்யா நீ.  என்னமோ சண்டைக்கோழி மாதிரியும் வேண்டாத மாமியார் மாதிரியும் என்னோட சண்டைக்கு  நிக்கிறே” என்று சிடுசிடுத்தாள். சௌத்ரிக்குப் புரிந்து விட்டது.  இந்த நாளும்  வீணாகத்தான் கழியப்போகிறது.

“சரி.  இந்த கடிகாரத்தைப் பாரு.  அரைமணி நேரம்  அமைதியா இரு”

“அதெல்லாம் முடியாது.  வெறும் ஆறே நிமிஷம்தான்.  முக்காலியில் உட்கார்ந்து கொண்டே முனகினாள்.

விஷயம் என்னவென்றால் அவளுக்கு ஆறு அல்லது ஏழுக்கு மேல் எண்ணிக்கை தெரியாது.  வெறும் ஆறு நிமிஷம்தான் என்று எண்ணிக் கொண்டு உட்கார்ந்திருப்பாள்.  ஆனால் மிகவும் வசதியாக அரைமணி நேரத்தை ஓட்டிவிடலாம் என்று சௌத்ரிக்குத் தெரியும்.  ராணி இடுப்பை நேராக வைத்துக் கொண்டு  கனமாக இருந்த பெரிய பூஜாடியை   இடுப்பில் ஏந்தியபடி விரைப்பாக உட்கார்ந்து கொண்டாள்.     எத்தனை நேரம் அப்படி உட்கார்ந்திருந்தாள் என்று யாருக்கும் தெரியாது.

“இப்போ சரியா?

“ம்”, சௌத்ரி  தான் வரைந்து கொண்டிருந்த கேன்வாஸ் பக்கம் திரும்பினார்.

“என்னைப் பாரேன்”

“எல்லாம் சரியா இருக்கு”

“என்னைக் கொஞ்சம்  பாரேன்”

“எல்லாம் சரியா இருக்கு”

“அவருடைய தூரிகை சிறிது நேரம் சத்தமின்றி இயங்கிக்  கொண்டிருந்தது.  வண்ணக்கலவைகள் ஒன்றுடன் ஒன்று துரிதமாக இழைந்தும் குழைந்தும் ஓவியச்சீலையில் வர்ணஜாலம்  உருவாகிக் கொண்டிருந்தது.  இப்படி ஒரு   நிமிடம் கூடக் கடந்திருக்கவில்லை.  அவள் பொறுமையற்று சத்தமாகப்  பெருமூச்சை இழுத்து விட்டாள்.

“அவ்வளவுதான் சௌத்ரி.  உன்னோட ஆறு நிமிஷம் தீர்ந்தது”

“ஹூம்.. ஹூம்… ஓவியச்சீலையில் அறைகுறையாகத் தீட்டியிருந்த வர்ணங்களையும் அவளையும் பதட்டத்துடன்  மாறி மாறிப் பார்த்தார் சௌத்ரி.

“ரொம்பக் குளிரா இருக்கு.  சௌத்ரி, அந்தப் போர்வையை  போர்த்திக்கட்டுமா?”

“ஊஊஊ… ஆஆஆஆ… என்னமா குளிருது” என்று நாயைப் போல ஊளைச் சத்தம் எழுப்பினாள்.

“வாயை மூடு” என்று உறுமினார் சௌத்ரி.

“இடுப்பு… ஐயோ, என்னோட இடுப்பு… இப்படி பிடிச்சிக்கிச்சே… சௌத்ரிஜி” – அன்று அவள் தேவையின்றி அழிச்சாட்டியங்கள் செய்தாள்.  “சால்வை… என்னோட சால்வை எங்கே போச்சு?”

“வாயை மூடு” என்று மீண்டும் உறுமினார் சௌத்ரி.

“ஹூம்…நான் ரொம்ப களைப்பா இருக்குன்னு சொல்லிக்கிட்டே இருக்கேன்.  நீ கேட்க மாட்டேங்கறியே.  இந்தப் பூஜாடி    சனியனைத் தூக்கி எறிஞ்சிடுவேன்”

சௌத்ரி சரேலென அவளைத் திரும்பிப் பார்த்தார்.  இந்த ஓவியம் வரைவதற்காக மியூஸியத்தில் இருந்து அந்த ஜாடியை இரவல் வாங்கி வந்திருந்தார். அதை அவள் போட்டு உடைத்தாள் என்றால் அவளுடைய மண்டையை பிளந்து விடுவார்.

“நான் என்ன வேணும்னா பண்றேன்.  எனக்குக் களைப்பா இருக்கு.  நான் என்ன பண்ணட்டும்?     என் தலை முழுக்க பேன் ஊர்ந்துக்கிட்டு இருக்கு” பூஜாடியைக் கீழே இறக்கி வைத்து விட்டு தலையைப் பரபரவென்று இருகைகளாலும் சொறிந்து கொண்டாள்.

சௌத்ரி, கால்களை அகட்டி வைத்துக் கொண்டு கண்களை உருட்டி அவளைக் கொடூரமாக முறைத்துப் பார்த்தார்.  அவருடைய பொறுமை எல்லையைக் கடந்து கொண்டிருந்தது.  ஆத்திரத்தில் அவருடைய முகத்தின் நரம்புகள் தெறித்துக் கொண்டிருந்தன.   நரைத்து நீண்டு தொங்கிய வெண்தாடி புயற்காற்றில் சிக்குண்ட படகின் காற்றாடியை போலக் காற்றில் அலைந்து  கொண்டிருந்தது.  உச்சி மண்டை வழுக்கையில் வியர்வைத் துளிகள்  முத்து முத்தாகத் துளிர்க்கத் துவங்கின.

“இடுப்புக்குக் கீழே வலி உயிர் போகுது” என்று ஆரம்பித்தவள் சௌத்ரியின் முகத்தில் தெறித்த ரௌத்ரத்தைப் பார்த்து அடங்கிப் போனாள்.  அமைதியாகத் தன்னுடைய இடத்தில் முன்பு போலவே உட்கார்ந்தாள்.  பிறகு கண்களில் குபீரெனக் கண்ணீர் மல்க வாய்விட்டு அழத்துவங்கினாள்.

“ஐயோ… கடவுளே… நான் செத்தாலும் இங்கே யாரும் கேட்பாரில்லை… கடவுளே….” என்று பெருங்குரல் எடுத்து அழுதாள்.

சௌத்ரி அவளையே கோபத்துடன் உற்றுப் பார்த்தார்.  இப்படி அவள் அழும்போதெல்லாம் அவருக்கு தாடைகள் இறுகிக் கொள்ளும்.  இறுக்கமடைந்த முகத்துடன் அவளை மூர்க்கத்துடன் தாக்கத்    தயாராக இருப்பது போல முகத்தை வைத்துக் கொள்வார்.  அவருடைய கையில் அசையும் தூரிகை ஏதோ வாணவேடிக்கையைப் போல ஓவியச்சீலையின் மீது சீற்றம் கொண்டு அங்குமிங்குமாக  அலைந்தது.  வர்ணக் கலவைத் தட்டின் குழிகளில் படிந்திருந்த வர்ணங்கள் கலவையாகக் குழைந்து இருந்தன.  என்ன செய்வதென்று தெரியவில்லை.  தன்னுடைய மூளையில் குத்திய முள்ளைப் பிடுங்கி எறியும் வரை இந்த வேதனைக்கு ஒரு முடிவு இருக்காது  என்று நினைத்தார்.  எதிரில் அமர்ந்து இருக்கும் ராணியின் தேவையற்ற பிடிவாதமும் அவளுடைய உடல்மொழியும் அவருடைய ஆன்மாவைத் துளைக்கும்  ஈட்டியாகப் பாய்ந்தது.

சௌத்ரியின் எல்லா பாவனைகளும் சற்று மிகையானவை.  அவற்றின்  தாக்குதலில் இருந்து யாரும் அதிகம்  தப்பியது கிடையாது.  ராணியும் இதற்கு விலக்கல்ல.   வயிற்றை எக்கி பீறிட்டெழும் துக்கத்தில் உதட்டைத் துருத்தி அழுதுகொண்டே முக்காலியின் மீது தயக்கத்துடன் அமர்ந்தாள்.

சில கணங்களுக்கு பூமிப்பந்து  மீண்டும் வழக்கப்படி சுமுகமாக சுழலத் துவங்கியது.  சௌத்ரியின் தூரிகை கேன்வாஸ் மீது துரிதமாக இயங்கியது.      வண்ணக் கலவைத் தட்டு பல்வகை வண்ணங்களால் குழைக்கப்பட்டு  அசிங்கமாகக் காட்சியளித்தது.  பிறகு-

“சௌத்ரீ” என்று மென்மையான குரலில் செல்லம் கொஞ்சத் துவங்கினாள் ராணி.  சௌத்ரியின் அக்குளில் குப்பென்று வியர்த்தது.  பூமிப்பந்து லேசாக ஊசலாடிக் குலுங்கிற்று.

“சௌத்ரி, இதைப் பார்த்தாயா?”

சௌத்ரியின் தோள் சற்று அதிர்ந்தது.  அவருடைய மிருதுவான உச்சித் தலை வழுக்கையில் வியர்வைத்துளிகள் அதிகமாகப் பரவின.  ராணி மீண்டும் பேசினாள்.

“இதைப்பாரு.  இதோ, இங்கே… என் கழுத்துக்குக் கீழே இந்த மச்சத்தைப் பாரேன்.  இங்கே… கொஞ்சம் கீழே… இங்கே பாரு…  கையில் இருந்த பூச்சாடியை தரையில் வைத்து விட்டு மார்பகங்களின் பிளவில் கண்களை  சரித்தபடி சௌத்ரியை நோக்கிப் புன்னகைத்தாள்.

“பார்த்தியா இதை?  நீ அதைத்தான் பார்த்துக்கிட்டு இருக்கே இல்லையா சௌத்ரி… சீ…” என்று வெட்கப்படுகிறவள் போல பாவனை செய்தாள்.  “ஐயோ, எனக்குக் கூச்சமா இருக்கு…”

“சும்மா அசையாமல் உட்காரு” சௌத்ரி உறுமினார்.

“அடேயப்பா, என்ன ஒரு அதிகாரம்?   இப்படி ஒரு பொண்ணோட மச்சத்தை வச்ச கண் வாங்காமல் பார்க்கிறது நல்ல ஆம்பிளைக்கு அழகா?  அதுவும் இந்த மாதிரி ஒரு மோசமான இடத்துலே இருக்கிற மச்சத்தை இப்படியா ஒருத்தரு பார்க்கறது? என்று வெட்கப்படுவது போல அசட்டுத்தனமாகச் சிரித்தாள்.

“நான் எந்த மச்சத்தையும் பார்க்கலை.  எனக்குப் பார்க்கவும் வேண்டாம்” சௌத்ரிக்கு எரிச்சல் கலந்த கோபம் அதிகரித்துக் கொண்டே போனது.

“ஹூம்… சும்மா கதை விடாதே.  ஓரக்கண்ணாலே அந்த இடத்தையே நீ திருட்டுத் தனமா பார்க்கலே? குறுஞ்சிரிப்புடன்  வம்புக்கு இழுத்தாள்.

“ராணி”

ராணி மூக்கை விடைத்துக் கொண்டு அவரை நோக்கித் திரும்பினாள்.   சௌத்ரி, தோல்வியுற்றவராக ஓவியப் படுதாவுக்குப் பக்கத்தில் இருந்த பெட்டியின் மீது சரிந்து விழுந்தார்.

“எனக்கு என்ன வயசு ஆச்சுன்னு உனக்குத் தெரியுமா?”

“ஹேராம்… எத்தனை வயசு?  பூச்சாடியை கீழே வைத்து விட்டு அவரை நோக்கி லேசாகச் சாய்ந்தாள் ராணி.

“உன்னோட அப்பன் வயசு எனக்கு.  இல்லை.  தாத்தா வயசு.  அப்புறம் நீ?  உனக்கு எத்தனை வயசு? இன்னைக்கு இருந்தா பதினஞ்சு இருக்குமா?  வயசை மீறி ஆபாசமாப் பேசறே”.  சௌத்ரிக்கு ஒன்றும் அவளுடைய தகப்பன் வயதெல்லாம் கிடையாது.  தாத்தா வயதும் கிடையாது.  அப்படிச் சொன்னாலாவது அவள் வாயடைக்குமே என்பதற்காக அப்படிச் சொன்னார்.

“ஹூம்… நீதான் ஆபாசமாப் பேசறே.  என்னோட மச்சத்தை அப்படி உத்து உத்துப் பார்க்கறே.  அதுவும் அந்த மாதிரி மோசமான இடத்துலே இருக்கிற மச்சத்தை நீதான் அப்படி உத்து உத்துப் பார்த்துக்கிட்டு இருந்தே”  தன்னுடைய கரங்களால் அந்த இடத்தை மூடிக் கொள்வது போன்ற பாவனையில் தடவிக் கொண்டாள்.

“எத்தனை சின்னப் பொண்ணு நீ”.

“சின்னப் பொண்ணா?  நான் சின்னப்பொண்ணுன்னு யார் சொன்னா?  அப்படி நான் இருந்திருந்தேன்னா அப்புறம்….”

அப்புறம்? அப்புறம் என்ன?

“அந்த ரத்னா என்ன சொன்னான் தெரியுமா?    யாருக்கு அந்த இடத்துலே மச்சம் இருக்கோ…”

“ரத்னாவா? அவனுக்கு எப்படித் தெரியும் உனக்கு அங்கே மச்சம் இருக்குன்னு?”

“நான் அவனுக்கு இதைக் காண்பிச்சேன்” என்று அவள் அந்த  மச்சத்தின் மீது தட்டிக் காண்பித்தாள்.

“காட்டுனியா?  நீ… நீ இதை  அந்த ரத்னா பயலுக்குக் காட்டுனியா,

சௌத்ரிக்கு மீண்டும் ரத்தம் கொதிக்கத் துவங்கியது.  அக்குளில் ஒருமாதிரி வெடுக்கென்று வெட்டியது.  கன்னச்சதைகள் நடுக்கத்தில் குலுங்கின.  பிறகு அவருடைய தூரிகை பரபரவென்று துரிதமாக இயங்கத் துவங்கியது.  மீண்டும் வர்ணங்கள் ஒன்றோடு ஒன்று குழைந்து கலங்கின.

“ஆஹா… அது சரி.  அவன் அந்த மச்சத்தைப் பார்த்தால் நான் என்ன செய்யட்டும்?”

“எப்படி?  எப்படி அவனால் அதைப் பார்க்க முடிந்தது… நீ….”  கீல்கள் தளர்ந்த கதவினைப் போல சௌத்ரியின் தாடைகள் நடுங்கின.

“நான் குளிச்சிக்கிட்டு இருந்தப்போ அவன்…” என்று வாக்கியத்தை முடிக்காமல் பூச்சாடியை இடது கையில் ஏந்தி  மீண்டும் முக்காலியின் மீது உட்கார்ந்தாள்.

“நீ குளிச்சிக்கிட்டு இருந்தப்போ அங்கே வந்தானா? பாஸ்டர்ட்…”

“ஆமாம்.  நான் குளத்துலே குளிக்கப் போனேன்.  எனக்குத் தனியாப் போக பயமா இருந்தது.  அவனை துணைக்கு அழைச்சிக்கிட்டுப் போனேன்.  தீடீர்னு அங்கே வர்ரறவங்களை அவன் தடுக்கலாம் இல்லையா?  ஆமாம்.  குளிச்சிக்கிட்டு இருந்தேன்.  அவன் என்னோட ரவிக்கையைக் கூடத் துவைத்துக்  குடுத்தான்”.

“யாராவது குளிக்கறப்போ வந்துடுவாங்கன்ற பயத்துலே நீ அவனை அங்கே அழைச்சிக்கிட்டுப் போனே இல்லையா?

“ஆமாம்” வெகுளியாகச்  சொன்னாள்.

“ராணி”, சற்று முன்னே நகர்ந்தார் சௌத்ரி.

“மூஞ்சியை அந்தப் பக்கமா திருப்பிக்கோன்னு அவன் கிட்டே சொன்னேன்.  ஆனா…”

“ஆனா?”

“அவன் தூரத்துலே உட்கார்ந்திருந்தான்.  அப்புறம் நான்தான் சொன்னேன், ரத்னா, எனக்கு மோசமான இடத்துலே ஒரு மச்சம் இருக்கு.  அவன் எந்த ஆர்வத்தையும் காட்டலே.  சரி.  எனக்கு என்ன?  உனக்குப் பார்க்க வேண்டாம்னா நீ அங்கே பார்க்க வேண்டாம்னு சொன்னேன்.  என்ன சரிதானே சௌத்ரி?”

“அப்புறம் அவன் பார்த்தான்னு எப்படிச் சொல்றே?”

“அது என்னவோ உண்மைதான்.  நான் தண்ணியிலே முழுகறதுக்கு இருந்தேன்.    தண்ணி இத்தனை ஆழமா இருந்திச்சு”.  அவள் மச்சத்துக்குக் கீழே சற்று இறக்கித் தன் கைகளை வைத்துக் காண்பித்தாள்.

“தேவடியா முண்டை”- சௌத்ரி தூரிகையை தூர எறிந்து விட்டு தரையில் கிடந்த குச்சியைக் கையில் எடுத்தார்.

“ஹேராம்… ஒரு நிமிஷம்… கேளு சௌத்ரி… நீ என்ன நான் முழுகி செத்திருக்கணும்னு சொல்ல வர்றியா?”

“நாயே.. உனக்கு நீச்சல் தெரியாது?    பிறந்ததுலே இருந்து அந்தக் குளத்துலேதான் குளிச்சிருக்கே. அப்புறம் முழுகி செத்துத் தொலைய வேண்டியதுதானே?”

“ஓஹோ… அப்போ நான் குளிக்கப் போகலை.  நிஜமா… நிஜமாகவே அவனுக்கு அந்த மச்சத்தைக் காமிக்கத்தான்…

“அப்போ அவனுக்கு அந்த மச்சத்தைக் காண்பிக்கத்தான் எல்லா நாடகத்தையும் ஆடியிருக்கே இல்லையா?  சௌத்ரி அந்தக் குச்சியைத் தூக்கிக் காற்றில் எறிந்தார்.  மெலிதாகப் புன்னகைக்கத் துவங்கினார்.

“ஹேராம்… இந்தத் துண்டையாவது சுத்திக்கிறேன் சௌத்ரிஜி”.  அவள் குரங்கு போலத் தாவிக் குதித்து படிக்கட்டு அருகில் சென்று நின்றாள்.  “இப்போ என்னை அடிச்சா, நான் இப்படியே வெளியே போயிடுவேன்.   அப்புறம் எல்லோரையும் கூப்பிட்டு சொல்லிடுவேன்”…

சௌத்ரி அப்படியே சிலைபோல ஸ்தம்பித்து நின்றார்.  “அவங்க கிட்டே என்ன சொல்லுவே?”

“சௌத்ரி சொல்றாரு – என்னோட மச்சம்… ஹ்ம்… ஹ்ம்…

“தேவடியா” சௌத்ரி ஏதோ வெறி பிடித்த நரி போலத் துள்ளி எழுந்தார்.  அவளுக்குத் தெரிந்து விட்டது.  தான் எய்த அம்பு குறி தவறாமல் பாய்ந்து விட்டது என்று.

“சௌத்ரி, நான் கண்டிப்பா எல்லார் கிட்டேயும்  சொல்வேன்.  தெரிஞ்சிக்கோ.  அடிப்பியா?  தைரியம் இருந்தா அடிச்சிப் பாரு.  வாயேன்… தைரியம் இருந்தா அடிச்சுப் பாரேன்.   ஏன் என்னையே அப்படி முறைச்சுப் பார்க்கறே?  நான் வயசுப் பொண்ணு.   சின்னப்பொண்ணு.  நீ?  மஹா குறும்புக்காரன்” கதவை நோக்கி சிறிது சிறிதாக நகர்ந்து சென்றாள்.

சௌத்ரி வாயடைத்துப் போய் நின்றிருந்தார்.  ஒரு கணம், அந்த ஓவியத்தைத் தீயிட்டுக் கொளுத்திவிட்டு, அவளைக் கூழாக நசுக்கிக் கொல்லவேண்டும் என்று நினைத்தார்.  ஆனால் வரப்போகும் ஓவியக் கண்காட்சியையும் அதில் அவருடைய ஓவியம் முதல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு ஐயாயிரம் ரூபாய் சன்மானம் பெறுவதற்காக அவர் சில நாட்களாக உழைத்துக் கொண்டிருப்பதும் அவருடைய நினைவுக்கு வந்தது.

ஒரு கணம் தலைசுற்றியது.  அவருடைய வாழ்நாளில் பல்லாயிரக்கணக்கான ஓவியங்களை அவர் வரைந்திருக்கிறார்.  மொட்டவிழ்ந்து மலரும் ரோஜாப்பூக்கள், பசுமையான இலைகள், தழைகள், செடிகள், கொடிகள், மரங்கள், தாவிச்செல்லும் புள்ளினங்கள் என இயற்கையின் பரிசுகள் அனைத்தையும் வரைந்திருக்கிறார்.  இவை மட்டுமல்ல, பெருமூச்சுக்களையும் வாசங்களையும் கூடத் தன் தூரிகையில் சிறைப்பிடித்திருக்கிறார்.  இவரைப் போன்ற ஓவியருக்கு போஸ் கொடுக்கும் பெருமை ஒன்றுக்கே,   உலகின் பல பாகங்களில் உள்ள பெண்மணிகள் நிர்வாணமாகவும் ஆடைகள் அணிந்தும் அவருடைய ஓவியங்களுக்கு மாடல்களாக ஒத்துழைக்கக்  காத்திருக்கிறார்கள்.  ஆனால் எங்கோ, சாக்கடையில் இருந்து பொறுக்கி எடுத்து வந்த இந்தப் பெண் சமாளிக்க முடியாத வகையில்  அவருக்கு இம்சை கொடுக்கிறாள்.

அவரை மிகவும் தொந்தரவு செய்து கொண்டிருந்த ஒரு விஷயம் என்னவென்றால், என்னதான்  வண்ணக் கலவைகளைப் பல்வேறுவகைகளில்  மாற்றிப் பார்த்தாலும் அவளுடைய சருமத்தின் வண்ணத்தை   அச்சு அசலாக அப்படியே தீட்டுவதற்கு என்ன செய்தும் அவரால்  முடியவில்லை.  சந்தன நிறத்தைக் கறுமையுடன் கலந்து சிறிதளவு நீலவர்ணத்தை  சேர்த்துப் பார்த்தார்.  ஆனால் பளிங்குக்கல், சந்தனம், நீலம் மற்றும் லேசான காவி நிறம் சேர்ந்த கலவையாக இருந்தது அவளுடைய சருமத்தின் நிறம்.  அது மட்டுமல்ல.  அவளுடைய நிறமானது ஒருநாள் சிப்பியின் நிறமாகத் தோற்றம் அளித்தால் மறுநாள் விடிகாலையில்  வானத்தில் தோன்றும் சிகப்பில் இருந்து வெடித்துதோன்றும் வண்ணம் போல் காட்சியளிக்கும்.  வைகறையில் இளஞ்சிகப்பு மேகத்தின் வர்ணஜாலத்தில் மினுக்கும் அவளின் நிறம் மற்ற நேரங்களில் சர்ப்பத்தின் விஷத்தைப் போல   நீலமாகப் படர்ந்திருக்கும்.

அவளுடைய கண்களின் நிறமும் அவ்வப்போது தொடர்ச்சியாக மாற்றம் கொண்டிருக்கும்.  முதல் நாள் அவர் கண்களின் நிறத்துக்காக தார்க்கறுப்பு நிறத்தைக் குழைத்துத் தயாராக வைத்திருப்பார். ஆனால் திடீரென்று அவளுடைய கருவிழிப் படலத்தில் செவ்வண்ணமாக  வரிகள் படர்ந்து இருக்கும்.  அதனைச் சூழ்ந்திருக்கும் இமைப்படலங்கள் நீலமேகங்களால் சூழப்பட்டது போலக் காட்சியளிக்கும்.  அவர் சுத்தமாகப் பொறுமை இழந்தார். இதுவரை நிறைய பெயிண்டு கலவைகள் வீணடிக்கப்பட்டிருந்தன.  சில கணங்களுக்குப் பிறகு அவளுடைய கண்ணின் மணிகள் பச்சை நிறத்தில் மாறிச் சுழன்று இரு மரகத மணிகளாக நடனமிடத்  துவங்கியபோது அவருடைய பொறுமையின்மை எல்லையைக் கடந்தது.   கண்ணின் மணியைச் சுற்றியுள்ள வெண்பரப்பில் லேசாகப் படர்ந்திருந்த செவ்வரிகள் அடர்த்தி மிகுந்து ரத்தச் சிவப்பாக மாறியது.  “நாசமாப் போச்சு” என்று  விரக்தியின் உச்சியில்  பதற்றத்துடன் கைகளைப் பிசைந்து கொண்டார் சௌத்ரி.  தொல்லை அத்துடன் முடியவில்லை.

“பயங்கரமா கொசு கடிக்குது” என்று குழந்தையைப் போலச் சிணுங்கினாள் ராணி.   என்னதான்  இவள் எரிச்சல் மூட்டினாலும் இன்று முழுநாளும் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்று தீர்மானித்தார் சௌத்ரி.

“பாரேன்.  இந்தக் கொசு என்னைப் பிச்சுப் பிடுங்குது” என்று மீண்டும் கொஞ்சினாள்.  சௌத்ரி ஒன்றும் பேசாது அமைதியாக இருந்தார்.

சௌத்ரி கால்களை அகலமாக விரித்து நின்றார்.  ராணி திடீரென்று மிகவும் ஆபாசமான வசைச் சொல் ஒன்றை அவரை நோக்கி உதிர்த்தாள்.  சௌத்ரி ஒருகணம் அதிர்ந்துபோய் நின்றார்.  ஒரு பெண்ணால் எப்படி இதுபோன்ற வார்த்தையை எப்படி இப்படி லஜ்ஜையின்றிப் பேசமுடிகிறது? அவருக்கு இதுபோன்ற வசைகள் எல்லாம் அவ்வளவாகப் பரிச்சயம் கிடையாது.  அவருக்குத் தெரிந்திருந்த சில வசவுகள் மிகவும் மென்மையானவை.  அவர் இதையெல்லாம் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.  ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் வாயில் கூட இதுபோன்ற அசிங்கமான வசைகள் எல்லாம் வராது.  அதிகபட்சம் தன்னுடைய உத்தியோக நிர்ப்பந்தத்துக்காக சில வார்த்தைகளை  அந்தப் போலீஸ்காரன்  எப்போதாவது ஒரு படிமமாக உபயோகிக்கலாம்.

“நீ எங்கிருந்து இந்த மாதிரி கேவலமான வார்த்தைகளை எல்லாம்  பேசக்கத்துக்கிட்டே?”

“எது?  இதைச் சொல்றியா?” என்று முகத்தை அப்பாவியாக வைத்துக் கொண்டு அதே வசவை மீண்டும் கேள்வி போல உச்சரித்தாள்.

“ராணி” என்று இரைந்தார் சௌத்ரி.

“இதை ஒருமுறை சுன்னன் பேசக் கேட்டுஇருக்கேன்.  கொசுக்களை விரட்டும்போது அவன் அப்படித் தான் திட்டுவான்.  அவனோட குடிசையில் படைபடையா கொசு இருக்கும்” என்று அவள் விஷயத்தை சமாளிக்க முயன்றான்.

“என்ன? சுன்னனோட குடிசையிலேயா?  அப்போ நீ அவனோட குடிசைக்குப் போயிருக்கே இல்லையா?”

“ஆமாம். அவன் எனக்கு வெல்லச் சேவு  குடுக்கறேன்னு சொல்லி என்னை  அங்கே அழைச்சிக்கிட்டுப் போனான்”

“அப்போ அங்கே வெல்லச் சேவு சாப்பிட்டே…”

“ஐயோ… அப்படி இல்லை…  அவன் கூப்பிட்டப்போ வெல்லச்சேவு  எதுவும் அங்கே இல்லை.. அவன் சும்மா பொய் சொல்லி இருக்கான்.   இப்போ எல்லாம் ஒழுங்காக வாங்கிக்கிட்டு வந்துடறான்”.

“ஓஹோ… இப்போ எல்லாம் சுன்னன் உனக்கு வெல்லச் சேவு வாங்கிட்டு வர்றான் இல்லையா?”

“ஆமாம்.  வெல்லப்பாகுலே ஊற வச்ச பொரியும் வாங்கிட்டு வர்றான்”.  பூச்சாடியின் மீது பதித்த கண்ணாடிக் கற்களைத் தடவிக் கொண்டே சொன்னாள்.

“ஓஹோ… பொரி கூட… சரிதான்”.    ஏதோ தான் தேவையின்றி  அதிர்ச்சியானது  போல உணர்ந்தார் சௌத்ரி.  ராணிக்கு வெல்லச்சேவு  என்றால் கொள்ளைப் பிரியம்.  அதற்காக சுன்னன் குடிசையில் இருந்து ஏன், ஏதாவது சாக்கடையில்  புரளும் நாயின் வாயில் வெல்லச்சேவு இருந்தால் அதைக்கூடப் பிடுங்கி இவள் சாப்பிடுவாள் என்று நினைத்தார்.

“நான் உனக்குப் பணம் குடுத்திருக்கேன்.  அப்போவும் நீ சுன்னன் குடிசைக்குப் போய் வெல்லச்சேவு எல்லாம் சாப்பிட்டு வர்றே…”

“ஹூம்.  நான் ஒண்ணும் கெஞ்சிக்கேட்டு வாங்கி சாப்பிடறது இல்லை.  அவன் எனக்காக வாங்கிக்கிட்டு வருவான்.  தன் குடிசைக்கு வந்துட்டுப் போன்னு என்னைக் கூப்பிடுவான்.  அவனை எனக்குப் பிடிக்கவே பிடிக்காது.  மீசையை எத்தனை பெரிசா வளர்த்து வச்சிருக்கான்.  எனக்குத் தும்மலா வந்துக்கிட்டு இருக்கும்.  அக்ஷ்.. அக்ஷ் என்று வேண்டுமென்றே யாரோ அவள் நாசிக்குள் குச்சியை செருகியது போலத் தும்மிக் காண்பித்தாள்.

“சௌத்ரி, என்னோட முதுகிலே கொஞ்சம் சொறிஞ்சிக்கட்டுமா?”

சௌத்ரிக்கு மீண்டும் உடம்பெல்லாம் பற்றி எரிவது போலத் தோன்றியது.  அவனுடைய மண்டைக்குள் நுழைந்து யாரோ கைதட்டும் ஓசையை எழுப்புவது  போல இருந்தது.  தாடைகள் இறுகின.     அனைத்து வர்ணங்களும் ஒன்றுடன்  ஒன்று குழைந்து தன் மண்டையோட்டைத் துளைத்து  மாயக்காளான்களாக முளைத்து வெளிக்கிளம்புவது போல உணர்ந்தார்.

அப்போது அவருக்கு எதிரில் இருந்த முக்கியமான கேள்வி என்னவென்றால், இந்த ஓவியத்தை வரைவதை மேலும் தொடர்வதா அல்லது பாம்பு போலப் பின்னித் தன்னை வதைக்கும் வேடிக்கைக்கு ஆளாவதா என்று குழம்பி நின்றார்.  இது தொடர்ந்தால் தான் சட்டையைக் கிழித்துக் கொண்டு  சேற்றில் புரண்டு அலைய வேண்டியிருக்கும் அல்லது தீயாகக் கொழுந்து விட்டெரியும் தலையை எங்காவது குட்டையில் கொண்டு போய் புதைத்துக் கொள்ள வேண்டியிருக்கும் என்று நினைத்தார்.

குட்டையை நோக்கி அவருடைய கால்கள் தானாக நடந்தன.  வீட்டில் இருந்து குளம் அத்தனை தூரம் இல்லை.  இது அவருக்குள் அடிக்கடி நடக்கும் விஷயம்தான்.  குளத்தின் கரையில் உட்கார்ந்து நீருக்குள் குலுங்கிக் குலுங்கி மினுங்கும் சூரியனின் நிழலையே வெறித்துக் கொண்டிருப்பார்.  அவர் இயற்கையிலேயே ஒரு கவிஞர்.  இந்த உலகில் வாழ்ந்து கொண்டே எல்லாவற்றில் இருந்தும் ஒருவகையான தூரத்தைக் கடைப்பிடித்து வாழ்கிறவர்.  அத்தனை வயதானவர் இல்லை.  ஆனால் இளைஞர் என்றும் சொல்ல முடியாது.  தன்னுடைய தாடியை ஓழுங்காக வெட்டிக் கொள்ளக்கூட சிரத்தை காட்டாது புதராக மண்டிப் போன தாடியுடன் அலைந்து கொண்டிருந்தார்.

அவருடைய அக்குள் இடுக்கில் மீண்டும் நடுக்கம் ஏற்பட்டது.  ராணியின் பேச்சுக் குரல் தவளை ஒன்றின் கத்தலுடன்  சேர்ந்து ஒலித்தது போலத் தோன்றியது.  தவளையா அது?  ஆனால் இன்னும் மழைக்காலம் துவங்கிவில்லையே.  அதனால் தவளையாக இருக்க வாய்ப்புக் குறைவுதான்.  ஒருவேளை பூனையின் கத்தலாக இருக்குமோ?    இருக்காது.  பூனையாக இல்லாமல் இருந்தால் வேறு ஏதாவது ஒன்றாக இருக்கலாம்.

எதையும் நம்பும் தன்மை கொண்ட அவருடைய கண்கள் ராணியும் ரத்னாவும் குளத்தில் முரட்டுத்தனமாக ஏதோ ஒரு விளையாட்டில் ஈடுபட்டிருப்பதைக் கண்டபோது, ஒருவகையான காட்சிப்பிழையாக இருக்கலாம் என்று நினைத்தார்.  இதுபோன்ற எண்ணங்களும் காட்சிகளும் அவரை சொல்லொணா வேதனையில் ஆழ்த்தி வதைக்கும். இன்று எல்லாமே எல்லை மீறிக்கொண்டு போகின்றன என்று நினைத்தார்.

அவர்கள் இருவரையும் அவர் நெருங்கிய போது அவர்களுடைய ஒழுங்கீனமான சிரிப்பொலி அடங்கி, இருவரும் பளிங்குச் சிலைகளாக மாறிப் போனார்கள்.  அவர்களின் கண்கள் ஆச்சரியத்தில் வெறித்துத் தெறித்தன.      மாயத்தோற்றமாக இருந்தாலும் எத்தனை தெளிவாக இருந்தது?   உருண்டு திரண்டதொடைகள், தூக்கி வாரிய   சிகையலங்காரம், ஆழமாகத் துளைத்தெடுக்கும் கருவிழிகள்… என அவனுடைய   ஒவ்வொரு அவயமும் மிகவும் எடுப்பாகவும் தெளிவாகவும் இருந்தது.   ராணியின் கட்டான மேனி, சாம்பல் கலந்த பழுப்பும், இளஞ்சிவப்பும், கற்பூர வெண்மையும் நீல நிறத்திலும் வர்ணக் கலவையாகத் தெறித்தது.

எடுப்பாகப் புடைத்திருந்த அந்தக் கருமச்சம், சௌத்ரியின் மீது துப்பாக்கிக் குண்டுபோலப் பாய்ந்தது.

ரத்னா தன் வேட்டியைக் கையில் எடுத்துக் கொண்டு பக்கவாட்டில் மெல்ல நழுவினான்.  ஆனால் ராணி மட்டும் எவ்வித எதிர்வினையும் இன்றி தன்னுடைய இருகரங்களாலும் நீரை வாரி இறைத்து விளையாடிக் கொண்டிருந்தாள். யாரோ ஒரு ஊஞ்சலில் தன்னை வலுக்கட்டாயமாக உட்கார  வைத்து வேகமாகவும் முரட்டுத்தனமாகவும் ஆட்டி, ஆட்டி மிகவும் உயரே  தன்னைத் தூக்கி எறிந்தது போல இருந்தது சௌத்ரிக்கு.

“அப்போ என்னோட மச்சத்தைத்தான் உற்றுப் பார்த்துக்கிட்டு இருக்கே இல்லையா?  குறும்பைப் பாரேன்”  சௌத்ரியை சமாதானப்படுத்துவதற்காக    பசப்புத் தனமாகச் சிரித்தாள் ராணி.

“எங்கிருந்து நீ இத்தனை ஆபாசமான வார்த்தைகளைக் கத்துக்கிட்டே?”

கடினமாக இறுகிய நிலையில்  இருந்து சௌத்ரியால் வெளிவரமுடியவில்லை.

நீரில் மெதுவாக மூழ்கிக் கொண்டிருக்கும் புதிய சௌத்ரியை ஒரு பக்கமாக ஒதுக்கி விட்டு, “தண்ணீரை விட்டு வெளியே வா…” என்றார்.

“ஓஹோ… என்னை அடிப்பியா?” என்று தண்ணீருக்குள்ளிருந்து தலையை வெளியே நீட்டியபடி ராணி கூச்சலிட்டாள்.

“இன்னிக்கு உன்னை உயிராடு தோலை உரிக்கப் போறேன்”.  சாக்கடையில் பெரிய தவளையாக வளர்ந்திருந்த அதே பெண்தான் இவள் என்று தனக்குத்தானே உறுதிப்படுத்திக் கொண்டார் சௌத்ரி.

“அம்மணமாக நிக்கிற ஒரு பெண்ணை அடிக்கக் கையை ஓங்குறியே வெக்கமா இல்லையா உனக்கு?” என்று ராணி கேட்டாள்.

சௌத்ரி பெரிதும் சீற்றம் கொண்டார்.

“அம்மணமாக இருக்கிற பெண்களை எல்லாம் அடிப்பாயா?  என்ன காரியம் இது?” தண்ணீரில் இருந்து அவள் உருவம் இடுப்புக்கு மேல் உயர்ந்தது.  அவள் மிகவும் பயந்திருந்தாள்.  எனவே அவளுடைய குரலை சண்டைக்கோழி மாதிரி வைத்துக் கொண்டு நிலைமையை சமாளிக்க முயன்றாள்.

“சீ போ…” என்று கூச்சத்துடன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

சௌத்ரியின் கைகளில் ஆடிக் கொண்டிருந்த குச்சி கையில் இருந்து நழுவியது.  சௌத்ரியின் உயரம் ஒரு சில அங்குலத்துக்கு அதிகரித்தது.  அவருடைய கைகள் வீங்கிப் போயின.  மண்டைக்குள் ஏதோ எறும்புகள் ஊர்ந்து செல்வது போல இருந்தது.  சில்லென்ற மூடுபனியைப் போல் மேல்கிளம்பிய கருங்காற்று அனைத்தையும் அள்ளிக் கொண்டு சென்றது போல இருந்தது.  முழுவேகத்துடன்  தீப்பொறிகள் தெறித்து, தீச்சுவாலைகள் உயரக் கிளர்ந்து எழுந்தன.  புடைத்திருந்த அவளுடைய மச்சத்தின் மீது அவருடைய பசியேறிய கண்கள் ஆழப்பதிந்தன.

அந்த மச்சம் திடீரெனக் கருங்கல்லாக மாறி அவருடைய நெற்றியைத் துளைத்தது.  சண்டையில் தோல்வியைக் கண்ட நாயைப் போல மிகவும் வேகமாகத் தன் அறைக்குள் சென்று படுக்கையில் வீழ்ந்தார்.  அன்றைக்கே ரத்னாவை வெளிய துரத்தினார் சௌத்ரி.  ரத்னா, தான் தன்னுடைய கோவணத்தை இறுக்கக் கட்டிக் கொண்டிருந்ததாக பிடிவாதத்துடன் மன்றாடிக் கொண்டிருந்தான்.  ஆனால் ஆவேசம் வந்தது போல சௌத்ரி உக்கிரமாக இருந்தார்.  இரவு முழுதும் அவர் அரக்கர்களின் படை ஒன்று தன்வசம் இருப்பது போன்ற பாவனையில் சமர் புரிந்து கொண்டிருந்தார்.  அவருடைய உடலின் வழியாக யாரோ துளையிடும் இயந்திரத்தை வைத்துத் துளைப்பது போலவும் இடையில் ஏதோ கருங்கல் ஒன்று தடுப்பதால் அந்த இயந்திரம் துளைக்க முடியாமல் தடைபட்டு நிற்பது போலவும் தோன்றியது.

அன்று பலவகையான வர்ணங்களும் அவருடைய கட்டுப்பாட்டில் இருந்தன.  மஞ்சள் காவி நிறத்துடன் லேசாக நீலத்தைக் கலந்தார்.  அது கடலின் ஆழத்தில் கிடைக்கும் அடர்த்தியான நீலவர்ணத்தில் குழைந்து மிளிர்ந்தது.     கண்களுக்கான வர்ணத்துக்காக  இளம்பச்சை மற்றும் கருப்பை – இல்லை, விழியோரத்தில் சாம்பல் நிறச்  சாயலில் இளஞ்சிவப்பைச் சேர்த்தார்.  ஒருகணம் தன்னைத்தானே கண்ணாடியில் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தார்.  நீண்ட நேரமாக இதனை அவர் செய்யாமல் இருந்தார்.  ஒரு ஓவியர் தன்னுடைய முகத்தைத்தானே கண்ணாடியில் பார்த்துக் கொள்ளவேண்டுமா?  கண்ணாடி அந்த ஓவியனுக்கு எதைக் காட்டும்?  அவர் வரைந்த எண்ணற்ற ஓவியங்கள் அவருடைய முகத்தை மட்டுமல்லாது ஆன்மாவின் ஒவ்வொரு இண்டு இடுக்குகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டும் கண்ணாடியாக இருந்தன.  வண்ணக் கலவைகளால் உருவாக்கப்பட்ட  அவருடைய இதயமும் எண்ணங்களும் அவர் பார்வையில் படும் வகையில் எதிரும் புதிருமாக நின்று கொண்டிந்தன. இருப்பினும் தன் முகத்தின் பிம்பத்தைக் காணவேண்டும்  என்று ஆசைப்பட்டார்.   காலியாகிப் போன  தகர டின்களில் ஒன்றைக் கையில் எடுத்து அதனை அடிப்புறமாகத்  திருப்பிப் பார்த்தார்.  இரண்டு பாச்சைகள் அவருடைய மூக்கை உரசியபடி பறந்து போயின.  புறக்கையால் டப்பாவில் படிந்திருந்த ஒட்டடையைத் துடைத்துவிட்டு டப்பாவின் பளபளப்பான மேற்பரப்பில் தன் முகத்தைப் பார்த்தார்.   முதலில் அத்தனை தெளிவாகப் பார்க்க முடியவில்லை.  என்னதான் நுணுக்கமாகக் கூர்ந்து  பார்த்தாலும் அடர்த்தியான குச்சங்களாகப் படர்ந்திருக்கும் கடலின் ஆழத்தைப் பார்ப்பது போலத்தான் அவரால் உணரமுடிந்தது.  அல்லது இமைகளில் ஏதேனும் பிரச்னையோ? காணும் அனைத்தும் கலங்கியும் நுரைத்தும் காணப்படுவது போல அவருக்குத் தோன்றியது.    வேடிக்கையாகத் தொங்கும் அவருடைய தாடியும் பசித்த கண்களும் அனலாக தகிப்பதைக்  கண்டார்.  அவரா அது?  டப்பாவை மீண்டும் தலைகீழாகத் திருப்பி மீண்டும் தன் முகத்தைப் பார்த்துக் கொண்டார்.   அவருடைய தாடி இன்னும் தெளிவாகத் தெரிந்தது.  ஒரு கண்ணை மூடிக்கொண்டு பார்த்தபோது கறைபடிந்த அவருடைய மூக்கின் நுனியும் செம்பட்டையாகிப் போன ஒழுங்கற்ற மீசையும் தெரிந்தது.  ஒரு கத்திரி இருந்திருந்தால் அந்த மீசையை ஒழுங்காகத் திருத்திக் கொண்டிருக்கலாம். பார்ப்பதற்கும் கொஞ்சம் மதிப்பாக இருந்திருக்கும்.

சுன்னனின் மீசை தனக்குக் குத்தியதாக ராணி சொன்னாள்.  மீசை குத்தியதால் தும்மல் வந்ததாகவும் சொன்னாளே.  தன்னுடைய மூக்கால் தும்முவது போன்ற ஓசையை எழுப்பினார்.  ரத்னா கோமணம் அணிந்திருப்பான் என்று அவருக்குத் தெரியும்.  இப்போது ஒருவேளை அவன் வேட்டியைக் கட்டி இருக்கலாம்.  அல்லது தன் பார்வைக்கு வரும்போது மட்டும் அவன் வேட்டியைக் கட்டிக் கொண்டு வரலாம்.  ஆனால் அவனுடைய அந்த வெல்லச்சேவு?

சௌத்ரிக்கு விநோதமான எண்ணம் ஒன்று தோன்றியது.  தன் வீட்டின் சுவர்கள் அனைத்தும் வெல்லச்சேவினால் கட்டப்பட்டது  போலவும் அச்சுவர்கள் தன்னை வலுவாக நெருக்கி நசுக்குவதாகவும் தோன்றியது.  அரைகுறையாகத் தாக்கப்பட்டு படபடக்கும் சிறகுகளுடன் தவிக்கும் ஈயைப்போல  அந்த வெல்லச்சேவுக் குவியலின் உச்சியில் அவர் சிக்கியிருந்தார்.

மேலும் கீழுமாக பரபரப்புடன் நடந்ததில் அவர் மிகவும் களைப்புற்று ஸ்டூலின் மீது உட்கார்ந்து கொண்டார்.  அரைகுறையாக முடிக்கப்பட்டிருந்த ஓவியத்தின் மேலிருந்து திரையை விலக்கினார்.  சற்று நேரத்துக்குப் பிறகு அந்த ஓவியத்தில் இருந்த புள்ளிகளும் பூச்சுக்களும் அவரைச் சுற்றிச் சுற்றிப் பறந்து பறந்து ஓரிடத்தில் உறைந்து நின்றன. தோள்கள் மெருகேற்றப்பட்ட தோலைப்போல மினுமினுத்தன.  கண்கள் நீலம், கருமை மற்றும் பச்சை நிற விளக்குகளைப் போல மிளிர்ந்தன.  மச்சம்?  அந்த மச்சம் இங்கே எப்படி வந்தது?  பாம்பைப் போலப் புடைத்துச் சுருண்டிருந்தது.  ஓ… மச்சம்.  டிக்… டிக்… டிக்… அவருடைய இதயம் கடிகாரத்தைப் போன்று துடித்தது.

அவர் ஒரு கணம் எழுந்து கொண்டார். தன்னை அறியாமலே கால்கள் ராணியின் குடிசைக்கு அவரை இழுத்துச் சென்றன.  அக்குடிசை மிகவும் குறுகலாக, அசிங்கமாக, மூச்சைத் திணற வைப்பதாக இருந்தது.  அதன் கூரையை நாளை சற்று உயர்த்திக் கட்ட வேண்டும் என்று நினைத்தார்.   அது வேண்டாம்.  காலி டப்பாக்களை அடுக்கி வைத்திருக்கும் தன்னுடைய வீட்டின்  அறை ஒன்று இந்தக் காரியத்துக்குப் போதும் என்று நினைத்தார்.  அவர் இருளில் சற்று முன்னேறினார்.  அவருடைய இதயம் இன்னும் கடிகாரத்தைப் போலத் துடித்துக் கொண்டிருந்தது.  அதனுள் இருந்த இருட்டு ஈரமான அடுப்புக்கரியைப் போல அவருக்குள் அப்பிக் கொண்டது.  கயிற்றுக் கட்டிலின் நாடாக்களில் அவருடைய கை மாட்டிக் கொண்டது.  அவர் இருளில் மூர்க்கமாகத் தடவிக் கொண்டே சென்றார்.  ஆனால் ராணி அங்கு இல்லை.  கொசுக்கள் அவருடைய உடலெங்கும் அட்டைபோலப் பரவி குருதியைக் குடித்தன.   முரட்டுத்தனமாக ரீங்கரித்தன  கொசுக்கள்.  வெல்லச்சேவுகள்  ஒவ்வொன்றாக அவர் மீது விழுந்து கொண்டிருந்தன.

மறுநாள் காலை, ராணியின் முடியைக் கொத்தாகப் பிடித்துத் தூக்கி நிறுத்தி, “தேவடியா, ராத்திரி எல்லாம் எங்கே போயிருந்தே?” என்றுகேட்க வேண்டும் போல இருந்தது அவருக்கு.  ஆனால், தன்னுடைய குடிசையில் அவருக்கு என்ன வேலை என்றும் தன்னுடைய கட்டிலில் இவர் ஏன் புரண்டு கொண்டிருந்தார் என்றும் அவள் கண்டிப்பாகக் கேட்பாள்.

அமைதியாக அவர் தன் வேலையைச் செய்து கொண்டிருந்தார்.  ராணியும் அன்று அமைதியாக இருந்தாள்.  அவள் ஏதாவது பேசவேண்டும் என்று நினைத்தார்.  அப்போதுதான் நேற்று இரவு அவள் எங்கே போயிருந்தாள் என்கிற விஷயத்தைத் தெரிந்து கொள்ள முடியும்.    ஆனால் எதுவுமே கேட்கமுடியாதபடி அவள் முகத்தைக் கடுப்புடன் உம்மென்று தூக்கி வைத்துக் கொண்டும் சிணுங்கிக் கொண்டும் இருந்தாள்.

பூச்சாடியை தரையில் வைப்பதைக் கவனித்த அவர், என்ன   களைப்பா இருக்கா?” என்று மிகவும் கரிசனத்துடன் கேட்டார்.  அவளுடன் அன்று எந்தத் தகராறும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று நினைத்தார்.

“பின்னே?  என்னை என்ன களிமண்ணுலேயா செஞ்சிருக்கு?” என்று கேட்டாள்.  தன் இருகைகளாலும் இடுப்பை லேசாகப் பிடித்து மஸாஜ் செய்து கொண்டிருந்தாள்.

அவளை உற்சாகப்படுத்தும் வகையில் ஏதாவது சொல்ல வேண்டும் என்று நினைத்தார் சௌத்ரி.  ஆனால் திடீரென தொனியை மாற்றிக் கொள்ளக் கூச்சமாக இருந்தது அவருக்கு.

“சரி.  வா.  வேண்டிய ஓய்வு எடுத்தாச்சு”.  தன்னோடு அவள் சண்டையிடுவாள் என்று எதிர்பார்த்தார்.  ஆனால் அவள் ஜாடியை இடுப்பில் சுமந்து கொண்டு அமைதியாக போஸ் கொடுக்கத் துவங்கினாள்.

அன்று வர்ணங்கள் அவருடன்  தீராத சமர் புரிந்து கொண்டிருந்தன.  அவரை ஏளனம் செய்து கொண்டிருந்தன.  அந்த மச்சத்தை அன்று வரையவேண்டும் என்று யோசித்திருந்தார்.  வர்ணங்கள் தங்களுக்குள் மச்சங்களைக் கொண்டிருக்காதோ?   ஆனால் வர்ணங்கள் கலகத்தில் ஈடுபட்டிருப்பதைக் கண்ட  கண்டதும் அதுபோன்ற யோசனையை முற்றிலுமாகத் தவிர்த்தார்.

ராணி அங்கிருந்து கிளம்புவதற்காக முக்காலியை விட்டு எழுந்தபோது அவள் சுற்றிக் கொண்டிருந்த துப்பட்டாவில் இருந்து வெல்லச்சேவுத் துண்டு ஒன்று கீழே விழுந்தது.  அவளுக்கு எதுவும் தெரியவில்லை.  ஆனால் சௌத்ரிக்கு ஏதோ கூரையே தன் மீது சரிந்து விழுந்ததைப் போன்று இருந்தது.

“இந்த… இந்த வெல்லச்சேவு…” கோபத்தில் அவருடைய வாயில் நுரை தள்ளியது.  அந்த வெல்லச்சேவுத் துண்டை குனிந்து எடுக்க  முயற்சித்தாள்.  ஆனால் சௌத்ரியின் கோபத்தைப் பார்த்ததும் எண்ணத்தைக் கைவிட்டாள்.

“நீ வேணும்னா அதை எடுத்துக்கோ” என்று தோளைக் குலுக்கித் துடுக்காகச்  சொன்னாள்.

மரணத்துக்கு ஈடான விரைப்பு சௌத்ரியின் உடல் எங்கும் பரவியது.  ராணியின் உருவம் மறைவதைப் பார்த்துக் கொண்டே நின்ற அவர், தன் காலடியில் விழுந்திருந்த அந்த வெல்லச் சேவுத் துண்டை வெறியோடு பொடிப் பொடியாக நசுக்கினார்.

மறுநாள் ராணி எவ்விதச் சுவடும் இன்றி மறைந்து போனாள்.  தன்னுடன் எதையும்  எடுத்துச் செல்லாமல் வந்தது  போலவே திரும்பிப் போனாள்.  மீண்டும் சேற்றிலும் சகதியிலும்  புரளும் தன்னுடைய வாழ்க்கைக்குத் திரும்பினாள்.

சௌத்ரியின் ஓவியம் அரைகுறையாக நின்றுபோனது.  ஐயாயிரம்  ரூபாய் சன்மானம் அவருடைய மூளைக்குள் ஒரு கரும்புள்ளியாக உறைந்து போனது.

மச்சத்தை நினைவில் கொண்டுவரும் கரும்புள்ளி.

அவருடைய நெஞ்சில் குத்திய கரும்புள்ளி.

இதற்குப் பிறகு சௌத்ரி ஒரு வகையான மனக்கொதிப்புடன் வாழத் தொடங்கினார்.  ராணி மாயமாக மறைந்து போனதைப் அவர் யாரிடமும் சொல்லவில்லை.  அப்படிச் சொன்னால் இவர் மீதே அவர்கள் சந்தேகப்படுவார்கள்.  நாட்கள் நகர்ந்தன.  தொடர்ந்து ஓவியங்களை வரைந்து கொண்டிருந்தார்.  ஆனால் யாரும் அவருடைய ஓவியங்களுக்கு காலணா கூடக் கொடுக்கத்  தயாராக இல்லை.  அதற்கான காரணம் என்னவென்றால் அவர் வரையும் பூக்களின் மீது கருப்பு மற்றும் சாம்பல் நிற வர்ணத்தைப் பூசியதால் அவை விகாரமாகக் காட்சியளித்தன. அவருக்குப் பைத்தியம் பிடித்து விட்டது என்று எல்லோரும் நினைத்தார்கள்.

அவர் வீட்டில் இருந்த வர்ணங்கள் எல்லாம் ஒன்றாகக் குழைந்து போய் கலங்கிய  சேறாகக் காட்சியளித்தன.

மேலும் சில வேதனையான சம்பவங்கள் தொடர்ந்தன.  அண்டை வீட்டுக்காரர்கள் அவரிடம் ராணியைப் பற்றிக் கேட்டார்கள்.  அவள் எங்கே போனாள் என்று தனக்குத் தெரியாது என்று எல்லோரிடமும் சொல்லிக் கெர்ணடிருந்தார்.  ஆனால் இதுபோன்ற நேரடியான பதில் அவர்களைத் திருப்திப் படுத்தவில்லை.

“ராணியை யாருக்கோ விற்றுவிட்டார் இந்த சௌத்ரி”

“ஏதோ ஒரு வியாபாரிக்கு பல ஆயிரங்களுக்கு விற்று விட்டார்”

“அவளோடு இந்த ஆளுக்குக் கள்ளத் தொடர்பு இருந்தது.  எப்படியோ அவளைக் கழித்துக் கட்டி விட்டார்”

இப்படி ஆதாரமற்ற வம்புகள் முடிவில்லாமல் தொடர்ந்தன.  சௌத்ரியின் வாழ்க்கை ஒரு இருட்டறையில் முடங்கிப் போனது.   ஜனங்கள் ஏதோ அவரை வறுத்து விழுங்கத் துடித்துக் கொண்டிருப்பது போலத் தோன்றியது.

அது மட்டுமல்ல.  ராணி ஒருநாள் சாலையின் முனையில் ரத்தம் தோய்ந்த சிறிய மூட்டை ஒன்றை விட்டுச் செல்ல முயன்றபோது அங்கு பெரும் ரகளை ஏற்பட்டது.  உடனடியாக அந்தக் கிராமத்தில் ரெய்டுகள் நடந்தன.  சௌத்ரி மிச்சமிருந்த கொஞ்ச நஞ்ச நிதானத்தையும் இழக்கத் துவங்கினார்.  ராணி மாயமாக மறைந்து போன புதிரும் மிக எளிதாக விடுபட்டது.  சௌத்ரி வாயடைத்துப் போனார்.  என்ன அநீதி இது?  இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டினால் தன் வாழ்நாள் முழுதும் அவர் சேமித்து வைத்திருந்த மதிப்பும் மரியாதையும் நாசமாகப் போய்விட்டது.  ஆனால் கடவுளுக்குத் தெரியும். அவர் குற்றமற்றவர் என்று.  மற்ற நிரபராதிகளைக் காப்பாற்றுவது போலத் தன்னையும் காப்பாற்றுவார் என்று  உறுதியுடன் நம்பினார்.  சத்தியம் எப்போதும் வெல்லும்.  ஆனால்… இவர் குற்றவாளி என்று அவர்கள் எப்படித் தீர்மானித்தார்கள்?  இந்த உலகில் பிறந்ததே தான் செய்த பெரும் குற்றம்தான் என்று வருத்தப்பட்டார்.

ராணி தொடர்பான அந்தக் குற்றத்துக்குத் தானே உடந்தையாக இருந்திருக்கலாமே என்று ஆதங்கப்பட்டார்.   சிறைத்தண்டனை, வலி, பாதிப்பு, கடுந்துயரம்,  சபையில் அவப்பெயர் போன்ற அனைத்தையும் புன்னகையுடன் ஏற்றுக் கொண்டிருப்பார்.   இப்படி அவர் விடுவிக்கப்படலாம் என்பது தெரிந்திருந்தால் கடவுளிடம் பிரார்த்தனை செய்திருக்க மாட்டார்.  அங்கு மச்சம் இருந்தது உண்மைதான்.  சரி.  ஆனால் மனிதனுக்கு உள்ள பலவீனங்களைப் பற்றி கடவுளுக்குத் தெரியாதா என்ன?  ஒருவேளை ராணியிடம் போலீசார் விசாரிக்கும்போது அல்லது வழக்கறிஞர்கள் தன்னைக் குறுக்கு விசாரணை செய்யும்போது தான் வகையாக சிக்கிக் கொள்வோம். அப்போது ராணி தன்னுடைய வாக்குமூலத்தினால் தன்னை விடுவித்தாலும்  அதன் வழியாக அவள் தன்னை முற்றிலுமாக அழித்துவிடலாம் என்கிற விஷயம் சௌத்ரிக்குத் தெரிந்திருக்கவில்லை.

“அது சௌத்ரிக்கு சொந்தமானது அல்ல” என்று பெருந்திரளாகக் கூடியிருந்த நீதிமன்றத்தில் ராணி வாக்குமூலம் அளித்தாள்.  “சௌத்ரி ஆண்மையற்றவர்” என்று அலட்சியத்துடன்  உளறினாள்.  சுன்னனையோ ரத்னாவையோ கேட்டுப் பாருங்கள்.  அது யாருடையது என்று நான் எப்படிச் சொல்ல முடியும்?  ஹூம்.. என்று விரைப்புடன் கத்தினாள்.

சௌத்ரியின் தலைமீது பிரம்மாமாண்டமான கறுப்பு மலை ஒன்று வெடித்துச் சிதறியது.  பேரிடியும் மின்னலும் இணைந்து கொண்டது.  தூரத்தில், வெகுதூரத்தில் ஆழமான வட்டமான கரும்புள்ளி ஒன்று கிளர்ந்து உச்சியில் நின்றது.

சௌத்ரி இன்றும் கூட, சாலையில் உட்கார்ந்து  ஒரு கரிக்கட்டியால் பெரும் வட்டங்களை, பெரும்புள்ளிகளாக, கருமையான  மச்சக் குறியைப் போல எப்போதும் வரைந்து கொண்டிருக்கிறார்.

உருது மூலம் – இஸ்மத் சுக்தாய்

தமிழில் – ராகவன் தம்பி

kpenneswaran@gmail.com

 

 

 

 

 

Series Navigationவாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் -35அக்னிப்பிரவேசம் – 8
author

ராகவன் தம்பி

Similar Posts

Comments

  1. Avatar
    Innamburan says:

    ஒருவிதத்தில் பார்க்கப்போனால், இஸ்மத சுக்தாய் அவர்கள் நமது சூடாமணியைப்போல. எப்படியாவது மனதிற்க்குள் புகுந்து ஆட்டிவிடுவார், ஆட்டி. மொழிப்பெயர்ப்பும் அருமை.
    ‘விஷயம் என்னவென்றால் அவளுக்கு ஆறு அல்லது ஏழுக்கு மேல் எண்ணிக்கை தெரியாது.’
    ‘எடுப்பாகப் புடைத்திருந்த அந்தக் கருமச்சம், சௌத்ரியின் மீது துப்பாக்கிக் குண்டுபோலப் பாய்ந்தது.’
    ~ இவையெல்லாம் அருமையாக மொழியாக்கப்பட்டுள்ளன.
    வாழ்த்துக்கள், பென்னேஸ்வரன்.
    இன்னம்பூரான்
    05 11 2012

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *