தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத்
yandamoori@hotmail.com
தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன்
tkgowri@gmail.com
இன்டர் பரீட்சைகளை நன்றாக எழுதினாள் சாஹிதி. முதல் வகுப்புக் கண்டிப்பாய் வரும். மருத்துவக் கல்லூரியில் சேர வேண்டும் என்றால் நுழைவுத் தேர்வுகள் உண்டு. அதற்காக விடுமுறையில் கோச்சிங் கிளாசில் சேர வேண்டும். நிர்மலாவை அந்த விஷயமாக கேட்டாள்.
‘அங்கிள் வரட்டும் சாஹிதி. அவரைக் கேட்டுவிட்டு சேர்ந்துகொள்” என்றாள் நிர்மலா.
“நுழைவுத் தேர்வுக்கு இன்னும் ஒரு மாதம்தான் இருக்கும்மா. உடனே சேர வேண்டும். அங்கிள் இன்னும் ஒரு வாரத்திற்கு வரமாட்டேன் என்று சொன்னார். நான் போய் சேருகிறேன் மம்மி” என்றாள் சாஹிதி.
‘வேண்டாம் சாஹிதி. கேட்காமல் சேருவது நல்லது இல்லை. நன்றாகவும் இருக்காது. நம் விவகாரங்களை எல்லாம் அவரே பார்த்துக் கொண்டு இருக்கும் போது, ஒரு வார்த்தைக் கூட சொல்லாமல், நாமே முடிவு செய்தால் வருத்தப்படுவார். அவர் வரட்டும். அப்படியே மிஞ்சிப் போனால் வீட்டிலேயே ட்யூஷனுக்கு ஏற்பாடு செய்கிறேன்.”
“அது இல்லை மம்மி..” ஏதோ சொல்ல வந்தாள்.
‘வேண்டாம். கட்டாயப்படுத்தி என் மனதை நோகடிக்காதே. அதற்குப் பிறகு அவர் வருந்தினால் என்னால் தாங்கிக் கொள்ள முடியாது.”
“அது இல்லை அம்மா. அங்கிள் வேண்டாம் என்று சொன்னால் அப்பொழுதே விட்டு விடுகிறேன். ஆனாலும் அங்கிள் மறுக்க மாட்டார்.”
“என்னவாக இருந்தாலும் அவரிடம் சொல்லாமல் ஒரு காரியம் பண்ணுவது எனக்குப் பிடிக்கவில்லை. அவ்வளவுதான்.”
சாஹிதி பதில் பேசாமல் அங்கிருந்து போய்விட்டாள். எங்கோ ஏதோ அபசுருதி ! தந்தை இருந்தபோது தாய் என்றுமே இவ்வாறு பேசியது இல்லை. அவர் ஏதாவது வேண்டாம் என்று சொன்னாலும் வாதாடுவாள். இப்பொழுது அங்கிள் எது சொன்னாலும் அதுதான் வேதம். முந்தாநாள் சிம்மாசலம் விஷயத்தில் கூட அப்படித்தான் நடந்தது. பரீட்சை சந்தடியில் அவள் கவனிக்கவில்லை. ஊருக்குப் போய்விட்டு வருவதாய் சொல்லிவிட்டுப் போனவன் வரவேயில்லை. மம்மியிடம் அதைப் பற்றி கேட்டபோது வேலையிலிருந்து நீக்கிவிட்டதாய்ச் சொன்னாள். ஒருவாரத்தில் வருவதாகச் சொல்லிவிட்டுப் போனவன் இருபது நாட்களுக்குப் பிறகுதான் வந்தானாம்.
“என்னம்மா இது? ஏதாவது அவசர வேலை ஏற்பட்டு தங்கிவிட்டானோ என்னவோ?”
“உடல்நிலை சரியாக இல்லைன்னு ஏதோ ஒரு சாக்கு சொன்னான். ஆனாலும் அங்கிளுக்கு ரொம்ப கோபம் வந்து விட்டது. சுவாமி அறையில் சுருட்டுப் புகைத்தானாம்.”
சிம்மாசலதிற்கு சுருட்டுப் புகைக்கும் பழக்கம் உண்டு. ஆனால் சுவாமி அறைக்குள் புகைக்கும் அளவுக்கு கெட்டவன் இல்லை. பதினைந்து ஆண்டுகளாய் அந்த வீட்டில் வேலை பண்ணிக் கொண்டிருக்கிறான். ஒரு சிறிய காரணத்திற்காக அவனை வேலையிலிருந்து நீக்கியது வருத்தத்தைத் தந்தது.
’சீ.. ஏன் இப்படி யோசிக்கிறாள்? அங்கிளை சந்தேகிப்பதா? அவர் எந்த விஷயமாக இருந்தாலும், யோசித்துப் பார்த்துவிட்டு நல்லது கெட்டது உணர்ந்துதான் முடிவை எடுப்பார். சிம்மாசலத்தின் மூலம் எந்த தவறு நேர்ந்ததோ தெரியவில்லை. அப்படி நேர்ந்து இருந்தால் அது மன்னிக்க முடியாத குற்றமாகத்தான் இருந்திருக்கும்’ என்று மனதை சமாதானப் படுத்திக் கொண்டாள்.
பத்து நாட்களுக்குப் பிறகு வந்தான் பரமஹம்சா. நிர்மலா எல்லா விஷயங்களையும் சொல்லிவிட்டால் போலும். அவன் சாஹிதியின் அறைக்கு வந்தான்.
“என்னம்மா, மேடிசினில் சேரணும் என்று ஆசைப் படுகிறாயாமே? கோச்சிங் இல்லாவிட்டாலும் உனக்கு சீட் கிடைக்கும். அப்படி முடியாவிட்டாலும் லட்சம் லட்சமாய் கொடுத்து உனக்கு சீட் வாங்கித் தந்து விடுகிறேன். ஆனால் ஒரு விஷயத்தை யோசித்துப் பாரும்மா. உன்னுடையது மென்மையான சுபாவம். ரத்தத்தைக் கண்ணால் பார்க்க முடியாது உன்னால். யாரவது வலியால் துடித்தால் பார்த்து நடுங்கி விடுவாய். சமீபத்தில் யாரோ சைக்கிளில் விழுந்து அடிபட்டுக் கொண்டதும் அழுது விட்டாய். நாளைக்கு பெரிய விபத்தில் உடம்பெல்லாம் காயத்தோடு யாரவது வந்தால் தைரியமாய், துணிச்சலுடன் நின்று வைத்தியம் பண்ண முடியுமா உன்னால்? யோசித்துப் பார். அந்தத் தொழிலுக்கு நியாயம் செய்ய முடியும் என்ற நம்பிக்கை உனக்கு இருந்தால், எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. படிப்புகூட சாதாரணமானது இல்லை. போஸ்ட் கிராட்யுயேஷன் பண்ணாவிட்டால் மதிப்பு கிடையாது. கிராமத்தில் ஐந்து வருடங்கள் சர்வீஸ் பண்ண வேண்டியிருக்கும். அங்கே இருக்கும் அரசியல்களை சமாளிக்கத் தெரியணும். அதெல்லாம் தேவை இல்லை என்று வைத்துக் கொள். பணம் செலவழித்து ஒரு நர்சிங் ஹோம் கட்டித் தந்துவிட முடியும் என்னால். ஆனால் உனக்கு அதில் திருப்தி கிடைக்குமா? இது அவ்வளவு சுலபமாய் எடுத்துக் கொள்ளக் கூடிய முடிவு இல்லை. வாழ்க்கையில் இது ஒரு முதல் படி. முக்கியமான திருப்பம்.”
அதென்னவோ தெரியாது. பரமஹம்சாவின் வாதத்தில் என்றுமே உண்மை இருக்கும். எதிராளியை யோசிக்க வைக்கும். எல்லாவற்றையும் மீறி அவன் சொன்னதுதான் சரி என்று தோன்றும். சாஹிதி உடனே தன் முடிவைச் சொல்லிவிட்டால். பி. எஸ். ஸி. யில் சேருவதாய்.
சாஹிதி கல்லூரியில் சேர்ந்து ஒருவருடம் ஆகிறது பரமஹம்சா எப்போதும் போல் வந்து போய்க் கொண்டிருந்தான். எல்லா விவகாரங்களையும் ஒழுங்காய் பார்த்துக் கொண்டான். வீட்டில் எந்த விஷயமாக இருந்தாலும் அவன் சொன்னபடியேதான் நடந்துக் கொண்டிருந்தது. ஆனால் திருமண விஷயத்தை மட்டும் யாருமே எடுக்கவில்லை.
ஒருநாள் பரமஹம்சா சாப்பிட்டத் தட்டில் அதை அலம்பாமலேயே தாய் சாப்பிட்டதை சாஹிதி பார்த்தாள். அத்தனை அன்பை அவள் உள்ளத்தில் வைத்திருந்தாள் என்று அதுவரை தெரியவில்லை. தந்தை அவள் தாயின் அன்பை உணரமுடியாமல் போனது துரதிர்ஷ்டம்தான். திருமணத்திற்கு ஏன் இன்னும் தாமதம் என்று நினைத்துக் கொண்டாள். அன்றைக்கு பரமஹம்சாவே அதைப் பற்றிய பேச்சை எடுத்தான். நிர்மலா, சாஹிதி இருவருமே அவ்விடத்தில் இருந்தார்கள் அந்த சமயத்தில்.
“என் குடும்பவிவகாரம் இப்போதைக்கு முடியும் போல் தோன்றவில்லை. கோர்ட்டில் இவ்வளவு தூரம் இழுத்தடிப்பார்கள் என்று நினைக்கவில்லை. பெரிதாய் வாய்கிழிய பேசிவிட்டு இப்பொழுது பின்வாங்குகிறேன் என்று நினைக்கப் போறீங்களே என்று எனக்கே கில்டியாய் இருக்கு. இந்த நிமிடமே நான் திருமணத்திற்குத் தயார். ஆனால் பப்ளிக் ஆக எல்லோருக்கும் தெரியும் விதமாக பண்ணிக்கொள்ள முடியாது என்னால். உங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்றால் சிம்பிளாய் பண்ணிகொள்கிறேன்.”
“எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை” என்றால் நிர்மலா தாழ்ந்த குரலில்.
“நீ என்ன சொல்கிறாய் சாஹிதி? நிலைமை சரியான பிறகு வெளியில் எல்லோருக்கும் தெரிவிப்போம். குறைந்தபட்சம் இப்படி செய்தாலாவது நம் மனதிற்கு அமைதி கிட்டும் இல்லையா?”
“சரி அங்கிள். உங்கள் இஷ்டம். முஹூர்த்தம் எப்போ என்று சொல்லுங்கள். ஏற்பாடுகள் செய்து விடுகிறேன்” என்றாள் உற்சாகத்துடன்.
பரமஹம்சா பஞ்சாங்கத்தை எடுத்து ஏதோ கணக்கு போட்டான். “வெள்ளிக்கிழமை இரவு ஒன்பதரை மணிக்கு நல்ல முகூர்த்தம்” என்றான்.
சாஹிதி உற்சாகமாய் எல்லா ஏற்பாடுகளையும் செய்தாள். அன்று மாலையே வேலைக்காரர்கள் எல்லோரையும் ஏதோ சாக்கு சொல்லி வெளியே அனுப்பி விட்டார்கள். பழைய ஆட்கள் யாருமே இல்லை. இருந்தாலும் சிம்மாசலம் இருந்திருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது சாஹிதிக்கு. அவனுக்கு அந்த வீட்டுடன் சொன்ன முடியாத பந்தம் இருந்தது.
முகூர்த்த நேரத்திற்குத் தாயை சுயமாய் அலங்காரம் செய்தாள். போட்டு எவ்வளவு அழகைத் தருகிறது என்று விப்படைந்தவளாய் அப்படியே பார்த்துக் கொண்டிருந்து விட்டாள் சாஹிதி. நிர்மலாவின் முகம் ரொம்ப களையாய் இருக்கும். கொஞ்சம் அலங்கரித்துக் கொண்டால் போதும். மிக அழகாய்த் தென்படுவாள். சாஹிதிக்கு அக்காவைப் போல் தோன்றுவாள்.
பரமஹம்சாவின் முகத்தில் ஆனந்தம் தாண்டமாடிக் கொண்டிருந்தது. குறிப்பிட்ட முகூர்த்த நேரம் வந்ததும் கேசட்டில் மங்கள இசையை வைத்தார்கள். மாலையை மாற்றிக் கொண்டார்கள். பரமஹம்சா நிர்மலாவின் கழுத்தில் தாலியைக் கட்டினான். அந்தத் திருமணத்திற்கு ஒரே சாட்சி சாஹிதி. அவள் போட்டோக்களை எடுத்தாள். பரமஹம்சா தடை சொல்லவில்லை.
படுக்கையறையை அவளே சுயமாய் அலங்கரித்தாள். பரமஹம்சா படுக்கை அறைக்குள் நுழையும் முன் தடுத்து நிறுத்தினாள் சாஹிதி.
“அங்கிள், நீங்கள் பண்ணிய இந்த தியாகத்திற்கு என்ன கொடுத்தாலும் எங்களால் நன்றிக்கடனை தீர்க்கமுடியாது. பெற்ற தந்தைகூட என்னிடம் அன்பு காட்டவில்லை. சொத்தை மட்டும் விட்டுவிட்டுப் போனார். உங்களிடமிருந்து நான் எதிர்பார்ப்பது அன்பும், அபிமானமும்தான். அவை எனக்குக் கேட்காமலேயே கிடைத்து விடும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு. அதனால்தான் உங்களுக்குப பரிசு….. ஊஹும் பரிசு இல்லை, பொறுப்பை ஒப்படைக்கிறேன்.”
“என்ன சாஹிதி? என்ன பொறுப்பு?” வியப்புடன் கேட்டான். நிர்மலாவுக்கும் விஷயம் என்னவென்று புரியவில்லை.
“எங்கள் சொத்து எல்லாவற்றுக்கும் நீங்களே கார்டியனாய், எங்கள் வியாபார விஷயங்களை பார்த்துக் கொள்வதற்கு முழு உரிமையும் உங்களுக்குத் தரும் உறுதிப் பத்திரங்கள். இரண்டு நாட்களாய் நம் லாயருடன் கலந்தாலோசித்து இதை எழுதி வாங்கி வந்தேன்.” அவன் கைகளில் வைத்தாள்.
“ஆனால் சாஹிதி, இப்போதே எல்லா விவகாரங்களையும் நான்தானே பார்த்துக் கொண்டு வருகிறேன். இன்னும் இந்த பார்மாளிடீஸ் எதற்கு? இந்தத் திருமண விஷயத்தை லாயரிடம் சொன்னாயா?”
“இல்லை அங்கிள். உலகத்தாரின் பார்வையில் நீங்க எனக்கு யாரோ. ஆனால் என்னுடைய் கண்ணோட்டத்தில் தந்தையாய் என் பொறுப்பை ஏற்றுக் கொண்டு இருக்கீங்க. இதுவும் உங்க கையில்தான் இருக்கணும். என் சந்தோஷத்திற்காக இதைச் செய்தேன். மறுக்காதீங்க.”
பரமஹம்சாவின் கண்களில் நீர் துளிர்த்தது அருகில் வந்து இரு கைகளால் அவள் முகத்தைத் தூக்கி நெற்றியில் முத்தம் பதித்தான். நன்றிக்கு வார்த்தைகள் தேவையில்லை.
அன்று இரவு சாஹிதியின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. ஒரு நல்ல காரியத்தைத் தன் கையால் செய்து முடித்த சந்தோஷத்தில் அவளுக்கு தூக்கமே வரவில்லை. ஒரே ஒரு குறை. தன் சந்தோஷத்தைப் பகிர்ந்துகொள்ள பமீலாவைத் தவிர பக்கத்தில் யாருமே இல்லை. தன் உணர்வுகளை எல்லாம் டைரியில் எழுதினாள்.
மறுநாள் கல்லூரிக்குப் போனாள். மாலையில் கல்லூரியிலிருந்து திரும்பி வரும்போது பரமஹம்சா வீட்டில் இல்லை. நிர்மலா எப்போதும் போல் ஹாலில் உட்கார்ந்து பாகவதம் படித்துக் கொண்டிருந்தாள்.
தாயைப் பார்க்கும் போது சாஹிதிக்கு அதிர்ச்சியாக இருந்தது. “என்னம்மா இது? நெற்றியில் போட்டு இல்லையே, ஏன்?” என்று கேட்டாள்.
நிர்மலா மென்மையாக சிரித்தாள். “வேலைக்காரர்கள் எல்லோரும் சந்தேகப்பட மாட்டார்களா? நன்றாக இருக்காது, வைத்துக்கொள்ளதே என்று அங்கிள் சொல்லிவிட்டார். உண்மைதானே. அதான் எடுத்து விட்டேன்.”
தொண்டையில் ஏதோ அடைத்துக் கொண்டாற்போல் சாஹிதிக்கு வாயில் வார்த்தைகள் வரவில்லை. அந்த வாதனையில் உண்மை இருந்தது நிஜம்தான். ஆனால் எந்த சௌபாக்யத்திற்காக அவள் இவ்வளவு தியாகம் பண்ணியதாய் நினைக்கிறாளோ அதற்குக் கொஞ்சம் கூட மதிப்பே இல்லையா? அங்கீகாரம் கிடையாதா?
கொஞ்ச நேரத்திலேயே அவள் தேறிக்கொண்டு விட்டாள். சில உண்மைகளை ஜீரணித்துக் கொள்வதற்குக் கொஞ்சம் சமயம் தேவைப்படும்.
இரவு ஒன்பது மணிக்கு வந்தான் பரமஹசா. மூவரும் சேர்ந்து சாப்பிட்டார்கள். பரமஹம்சாவும், நிர்மலாவும் உற்சாகத்துடன் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள். சாஹிதியால் ஏனோ மனப்பூரவமாக அந்த சந்தோஷத்தில் பங்கெடுத்துக் கொள்ள முடியவில்லை.
வேலைக்காரர்கள் எல்லோரும் படுத்துக்கொள்ள போனதும், நெற்றியில் போட்டு வைத்துக் கொண்டாள் நிர்மலா. பால் தம்ளரை எடுத்துக்கொண்டு அறைக்குள் நுழைந்து கதவைச் சாத்திக்கொண்டதைப் பார்த்துக் கொண்டுதான் இருந்தாள் சாஹிதி.
ஏனோ நேற்று போல் அந்தக் காட்சி சந்தோஷத்தை அளிக்கவில்லை.
(தொடரும்)
- சந்திரனில் விவசாயம் எப்படி நடக்கலாம் என்று யூகம் தரும் இயந்திர விவசாயப் பண்ணைகள்
- மலேசிய தான் ஸ்ரீ சோமா அறவாரியத்தின் அனைத்துலகப் புத்தகப் பரிசினை இலங்கை அறிஞர் மு.பொன்னம்பலம் வென்றார்
- மூன்று பேர் மூன்று காதல்
- மதிப்பும் வீரமும்
- ‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து……………… 8. தி.ஜ.ரங்கநாதன் – ஆஹா ஊகூ
- அரசன் சார்ந்த அறநெறி / இல்லற நெறி – (இராமாயண ராமர் பற்றி)
- காளை மேய்த்தல்(Ox Herding)- பத்து ஜென் விளக்கப் படங்கள்
- வெளி
- கண்ணீர்ப் பனித்துளி நான்
- தாகூரின் கீதப் பாமாலை – 43 சதுப்பு நிலப் பாடல்கள்
- ஒருவர் சுயத்தனம் பற்றி எனது பாடல் -1 (1819-1892) (புல்லின் இலைகள் -1)
- நினைவுகளின் சுவட்டில் (105)
- சந்திப்பு
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 39
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் அங்கம் -4 பாகம் -6
- பி.ஜி.சம்பத்தின் “ அவன் நானல்ல ( மலையாளக்கதை ) – ஒரு பார்வை
- 22 ஃபீமல் கோட்டயம் ( மலையாளம் )
- நம்பிக்கை ஒளி! (10)
- சீமைத் தரகர்களும் ஊமை இந்தியர்களும்
- வந்த வழி-
- பாகிஸ்தானில் பாதுகாப்பற்ற கருக்கலைப்பால் நிகழும் மரணங்கள்
- வேள்வெடுத்தல் (வேவு எடுத்தல்) என்னும் நகரத்தார் திருமண நடைமுறை
- ஆத்ம சோதனை
- உன்னை போல் ஒருவன், முசுலிம்களுக்கு எதிரான படமில்லை? – 1
- பூகோளம் சூடேறி ஆர்க்டிக் பனிப் பாறைகள் உருகி கடல் வெப்பம், மட்டம் உயர்வு.
- அக்னிப்பிரவேசம் -13