உன்னை போல் ஒருவன் வெளியான சமயத்தில் அது முசுலிம்களுக்கு எதிரான படம் என்று சிலர் வாதிட்டார்கள். அதே போல, இரண்டு வாரங்களுக்கு முன்பு, துப்பாக்கி படத்தில் உள்ள முசுலிம் எதிர்ப்பு காட்சிகளைப் பற்றி நேர்படப் பேசு என்ற நிகழ்ச்சியில் விவாதம் நடந்த போது, சினிமா விமர்சகர் திரு. அஜயன் பாலா, உன்னை போல் ஒருவன் முசுலிம்களுக்கு எதிரான படம்; அதை பற்றி யாரும் பேசவில்லை என்று தெரிவித்தார். இதை அடுத்து, என் மனதில் அடங்கிப் போய் கிடந்த சில விமர்சனங்கள் மறுபடியும் எழ ஆரம்பித்திருக்கின்றன. ஜனவரியில் விஸ்வரூபம் வரப் போகிறது. அதுவும் இதே போன்ற சில குற்றச் சாட்டுகளை சந்திக்கும்.
அதற்கு முன்பு, பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ஹே ராம் பற்றிய ஒரு தவறான பார்வையையும், உன்னை போல் ஒருவன் பற்றிய விரிவான விளக்கத்தையும் அலச வேண்டி இருக்கிறது.
நான் படித்தவரை சிலர் இப்படி தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
ஹே ராம் ஒரு முசுலிம் எதிர்ப்புப் படமாம்! படத்தின் கதாநாயகர் சாகேத் ராம், தன்னுடைய மனைவியின் இறப்பை காரணம் காண்பித்து இதனால் தான் ‘நான் தீவிரவாதி ஆனேன்’ என்று தன்னுடைய செய்கையை நியாயப் படுத்துகிறாராம். இதே நியாயத்தை உன்னை போல் ஒருவனில் முசுலிம்களும் உபயோகித்துக் கொள்ள அனுமதிக்க வில்லையாம் கமல். இதனால், இவர் ஒரு இந்துத்வ வெறியாளராம்.
இவர்கள் பார்வையில், ஹே ராம் படத்தின் கதையை சில வரிகளில் இப்படி விவரிக்கலாம்.
தன் மனைவியின் இறப்பை கண்கூடாகக் கண்ட பிறகு எதிராளியின் (முசுலிம்) மீது ஏற்பட்ட வெறியால் உந்தப்பட்ட ஒருவன்(சாகேத் ராம்) முசுலிம்களை வேட்டையாடுகிறான். அவனை, ஸ்ரீ ராம் அப்யங்கர் என்ற இந்துத்வ வெறியாளன் மூளைச் சலவை செய்து காந்திக்கு எதிராக திருப்பி விடுகிறான். இதனால், எல்லாவற்றிற்கும் மூலக் காரணமாய் விளங்கிய காந்தியை கொலை செய்ய, கோட்சேவுக்கு இணையாக ஒரு திட்டத்தை தீட்டுகிறான் சாகேத் ராம். முசுலிம்களை எதிரியாகக் கொள்கிறான்.
இப்போது, உண்மையில் இந்தப் படம் என்ன சொல்கிறது என்பதை இவ்வாறு விவரிக்கலாம்.
இந்துத்வ குடும்பத்தில் பிறந்த சாகேத் ராம், ஒரு தொல் பொருள் ஆராய்ச்சியாளர்(அந்தக் கால பிராமண குடும்பங்களுக்கு தொடர்பில்லாத ஒரு வேலை). அவர் தன் குடும்பத்தின் அனுமதியில்லாமல் பிராமணர்
அல்லாத குலத்தில் பிறந்த ராணி முகர்ஜியை மணந்து கொள்கிறார். தன்னுடைய நண்பர்களுடன் ‘ராமன் ஆனாலும் பாபர் ஆனாலும்’ என்று பாட்டு படுகிறார். நண்பர் ஷாருக் கான்(முசுலிம்)-உடன் ஒட்டி உறவாடுகிறார். இது வரை, ‘ஒரு பிராமணனாக இருந்தால் இதை எல்லாம் செய்யக் கூடாது’ என்று சம்பிரதாயங்களின் மூலம் முடிவு செய்து வைத்திருந்த செயல்கள் அனைத்தையும் செய்கிறார் சாகேத் ராம்.
ஆனால், மனைவியை சந்திக்க கல்கத்தாவுக்கு அவர் திரும்பிய போது, அவளை ஒரு முசுலிம் கற்பழித்துக் கொல்கிறான். அந்த வெறியில், பார்ப்பவர்களை(முசுலிம்) எல்லாம் சுட்டுத் தள்ளுகிறார். இதை கவனித்த அப்யங்கர் என்ற இந்துத்வ வெறியாளன் அவருக்கு குங்குமம் இட்டுவிடுகிறான். ‘இப்படி சென்றால் தான் மக்களுக்கு(இந்துக்களுக்கு) உங்களை அடையாளம் தெரியும்’ என்று சொல்கிறான். ஆனால்,
தன்னையும் ஒரு மத வெறியாளன் போல் சித்தரிக்க நினைத்த அப்யங்கார்-இடம், தன்னுடைய தவறுக்கு போலீஸ்-இடம் சரண் அடைந்து தண்டனை கோரப் போவதாக சொல்கிறார் சாகேத் ராம். நான் உங்களில் ஒருவன் இல்லை என்கிறார். அதற்கு அப்யங்கர், தன்னுடைய குடும்பத்தவர்களுக்கு நிகழ்ந்த அவலத்தை சுட்டிக் காட்டி, ‘இங்கே போலீஸ் லீவ்-ல போயிருக்கு. நாம தான் இருக்கோம். கொலை குத்தமுன்னா, யுத்தமும் குத்தம்’ என்று பேசி அவருடைய செய்கையை நியாயப் படுத்துகிறான். தடை செய்யப் பட்ட ஒரு புத்தகத்தை கொடுத்து படிக்க வைத்து, சாகேத் ராமின் பார்வையை மாற்றி, காந்திக்கு எதிராக திருப்பி விடுகிறான்.
இதற்குப் பின் சாகேத் ராம்-ற்கு ஒரு பிராமணப் பெண்ணோடு மறுமணம் நடக்கிறது. ஜோசியர் கூறுவதைக் கேட்டு, தன்னை பயித்தியம் என்று கூறும் குடும்ப உறுப்பினர்களின் மூட நம்பிக்கையால் கோபம் அடைந்து அவளை வெளியூருக்கு கூட்டிச் செல்கிறார். அங்கே எதிர்பாராத விதமாக அப்யங்கருக்கு விபத்து ஏற்படுகிறது. பந்த பாசங்களை அறுத்து ஏறிய அப்யங்கரிடம் சத்தியம் செய்கிறார் சாகேத் ராம். அப்யங்கருடைய துணை இல்லாமலே காந்தியை கொல்ல ஆயத்தமாகிறார். மனைவியை திரும்ப பிறந்த வீட்டிற்கு கொண்டு போய் விட்டுவிட்டு, சன்யாசம் வாங்கிக் கொள்கிறார். பூணூலை அறுத்து எறிகிறார்.
இந்நிலையில் தான் மறுபடியும் நண்பர் ஷாருக் கான்-ஐ சந்திக்கிறார். அவரிடம், ‘கைபர் கணவாய் வழியாக வந்த விதேசி நீ’ என்று சொல்லி முசுலிம் எதிர்ப்பை உமிழ்கிறார். இதைக் கேட்டு, ‘உன் மனைவியை ஒரு முசுலிம் கொன்றான் என்பதற்காக எல்லா முசுலிம்-களையும் பழி வாங்குவாயா? அப்படியானால், என்னையும் சுட்டு விடு’ என்று சொல்கிறார் ஷாருக் கான். உடனே, ‘நான் உன்னை சுட வரவில்லை. இதற்கெல்லாம் மூலத்தை சுட வந்திருக்கிறேன்’ என்று சொல்கிறார் சாகேத் ராம்.
இதற்கு ஷாருக் கான், காந்தி நம்மையெல்லாம் அண்ணன்-தம்பிகளாக வாழச் சொல்கிறார். அதனால், ‘உன்னுடைய அபர்னாவை(ராணி முகர்ஜி) கொன்றதற்காக நான்(முசுலிம்) உன்னிடம் மன்னிப்பு கேட்கிறேன். அதே போல், என்னுடைய வாபாவை கொன்றதற்காக நான் உன்னை(இந்துவை) மன்னிக்கிறேன். இந்த மத வெறியை விடு!’ என்கிறார்.
இதற்குள், டெல்லி கணேஷ்(இந்துத்வ மத வெறியாளர்) ஷாருக் கான்-ன் இடத்தில் உள்ள துப்பாக்கிகளை பறிப்பதற்காக கூட்டத்தோடு வருகிறார். அவரிடம் இருந்து ஷாருக் கான்-ஐ காப்பாற்ற அவரை தன் தம்பி என்று பொய் சொல்கிறார் கமல். இதை பார்த்து, ‘நீயும் நானும் அண்ணன்-தம்பி போல் வாழ முடியும் என்பதை இது நிரூபிக்கிறது’ என்று சொல்கிறார் ஷாருக். தான் ஒரு முசுலிம் தான் என்று அக்கூட்டத்தாரிடம் சொல்கிறார். இதனால், ஷாருக் கான்-ஐ ஒரு இந்து வெறியாளன் தாக்கி விடுகிறான். தன்னுடைய நண்பனான ஒரு முசுலிம்-ஐ காப்பாற்ற அந்த இந்துத்வ மத வெறியாளரை சுட்டுக் கொல்கிறார் சாகேத் ராம். ஷாருக்-ஐயும், அவருடைய சொந்த பந்தங்களை காக்க, அவருடைய இடத்திற்குச் சென்று இந்துத்வ வெறியாளர்களுடன் சண்டை இடுகிறார்.
முடிவில் ஷாருக் இறக்கும் போது, துப்பாக்கியுடன் அவந்த அந்த நபர் யார்? என்று காவல் துறையினர் மரண வாக்குமூலம் கேட்கின்றனர். அப்போது, ‘இவன் என்னுடைய அண்ணன்’ என்று கமலை காட்டிக் கொடுக்காமல் சாகிறார் ஷாருக். இங்கு தான் கமலுக்கு மன மாற்றம் ஏற்படுகிறது.
‘இந்து-முசுலிம் பாய் பாய்’ என்று கூறிய ஒருவனை கிண்டல் அடித்த அப்யங்கருடன் முதலில் கூட்டு சேர்ந்த அவர், மனம் திருந்தி, பாசிச இந்துத்வ வெறியை விட்டொழிந்து, ஷாருக் கான்-உடைய மனைவியை தன்னுடைய சகோதரியாக ஏற்றுக் கொள்கிறார். காந்தியிடம் சென்று விவரங்களை சொல்லி மண்டியிட்டு மன்னிப்பு பிச்சை கேட்க நினைக்கிறார். எனக்கு நேரம் இல்லை என்று சொல்லி அதை காந்தி தட்டிக் கழித்த அடுத்த நிமிடம் அவரை கோட்சே சுடுகிறான். உடனே, அவனை சுட துப்பாக்கியை தூக்கும் கமல், காந்தியின் அருகில் இருப்பவர் இப்படிச் சொன்னதும், வன்முறையை கை விட முடிவெடுக்கிறார்:
“காந்தி நம்மிடம் இருந்து எதிர்பார்த்த அகிம்சையை நிரூபிக்கும் தருணம் இது தான். அவனை சட்டத்தின் பிடியில் விடுவோம்!”
முடிவில், ‘காந்தியை சுட்டது ஒரு இந்து தான். முசுலிம் இல்லை. ஒரு பெரிய மதக் கலவரத்தில் இருந்து தப்பித்தது இந்தியா!’ என்று வெள்ளையர்கள் பேசிக் கொள்வதை கேட்கிறார் சாகேத் ராம். அந்த வசனத்தோடு ‘இந்து முசுலிம் விளையாட்டை விட்டு நாம் எல்லாம் அண்ணன் தம்பிகளாக வாழ வேண்டும்’ என்ற கருத்தை நம் மனதில் ஏற்படுத்தி முடிகிறது கதை.
இது எந்த வகையில் ஒரு முசுலிம் எதிர்ப்பு படம்? இது எந்த வகையில் முசுலிம்களின் நியாயத்தை ஏற்றுக் கொள்ளாத படம்? இது எந்த வகையில் இந்துத்வ பாசிசத்தை வலியுறுத்தும் படம்? விமர்சகர்கள் தான் யோசிக்க வேண்டும்!
அடுத்து, உன்னை போல் ஒருவன் பற்றிய குற்றச் சாட்டு எந்த அடிப்படையில் முன்வைக்கப் படுகிறது என்பதை முதலில் வரிசை படுத்த வேண்டும். படத்தில் சிலர் சுட்டிக் காட்டிய குறைகளை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
- காமன் மேன்(கமல்)- முசுலிம் எதிர்ப்பு, இந்துத்வ பாசிசம் பேசுகிறார்
- மோகன் லால்- ஜனநாயகத்திற்கு எதிராக தனிப்பட்ட முறையில் அதிகாரத்தை எதிர்பார்க்கிறார்.
- உள்நாட்டு தீவிரவாதிகளையும் கரப்பானுக்கு சமமாக காமன் மேன் நடத்துகிறார்.
- முசுலிம் தீவிரவாதிகளை மொத்தமாக காபீர் எதிர்பாளர்கள் என்று சொல்கிறார்கள்
பல ஆண்டுகள் முன்பு, சாட்டிலைட் டிவி வந்துவிட்டால் சினிமா உலகம் படுத்துவிடும் என்று சிலர் கூறிக் கொண்டிருந்த போதே கமல் தைரியமாக முன்வந்து டிவி நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துக் கொண்டவர். அப்படிபட்ட அவர், உன்னைப் போல் ஒருவன் வெளி வந்த பிறகு தான், முதல் முறையாக நேயர்களை சந்திக்கும் ஒரு டாக் ஷோவில் பங்கெடுத்துக் கொண்டார். அந்தப் படத்தை பற்றிய பல தவறான பார்வைகள் கிளம்பியதாலேயே இந்த முடிவு. அவரிடம் சில கேள்விகள் கேட்கப் பட்டன. அதற்கு அவர் தந்த பதில்களை உள்ளடக்கியே இந்த எதிர் விமர்சனம் முன்வைக்கப் படுகிறது.
உன்னை போல் ஒருவனில் வெளிப்பட்ட கமலின் மதசார்பின்மையை பல இடங்களில், களவாணித் தனம் என்றும், நேர்மையற்றது என்றும் சிலர் காட்டமாக மரியாதை இல்லாமல் விமர்சனம் செய்திருந்தனர்.
ஆனால் அவர்கள் சொல்வது போல், கமல் ஒரு இந்துத்வ வெறியரா? நாத்திகம் என்ற போர்வையில் ஒளிந்து கொண்டு பாசிசத்தையும் முசுலிம் எதிர்ப்பையும் நம் மனதில் விதைக்கிறாரா? இந்தக் கேள்விகளுக்கான விடைகளை விமர்சகர்களின் உதாரணங்களில் இருந்தே நாம் பெறலாம். அடுத்த பகுதியில் விரிவான அலசல் தொடங்கும்.
(தொடரும்)
கண்ணன் ராமசாமி
- சந்திரனில் விவசாயம் எப்படி நடக்கலாம் என்று யூகம் தரும் இயந்திர விவசாயப் பண்ணைகள்
- மலேசிய தான் ஸ்ரீ சோமா அறவாரியத்தின் அனைத்துலகப் புத்தகப் பரிசினை இலங்கை அறிஞர் மு.பொன்னம்பலம் வென்றார்
- மூன்று பேர் மூன்று காதல்
- மதிப்பும் வீரமும்
- ‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து……………… 8. தி.ஜ.ரங்கநாதன் – ஆஹா ஊகூ
- அரசன் சார்ந்த அறநெறி / இல்லற நெறி – (இராமாயண ராமர் பற்றி)
- காளை மேய்த்தல்(Ox Herding)- பத்து ஜென் விளக்கப் படங்கள்
- வெளி
- கண்ணீர்ப் பனித்துளி நான்
- தாகூரின் கீதப் பாமாலை – 43 சதுப்பு நிலப் பாடல்கள்
- ஒருவர் சுயத்தனம் பற்றி எனது பாடல் -1 (1819-1892) (புல்லின் இலைகள் -1)
- நினைவுகளின் சுவட்டில் (105)
- சந்திப்பு
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 39
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் அங்கம் -4 பாகம் -6
- பி.ஜி.சம்பத்தின் “ அவன் நானல்ல ( மலையாளக்கதை ) – ஒரு பார்வை
- 22 ஃபீமல் கோட்டயம் ( மலையாளம் )
- நம்பிக்கை ஒளி! (10)
- சீமைத் தரகர்களும் ஊமை இந்தியர்களும்
- வந்த வழி-
- பாகிஸ்தானில் பாதுகாப்பற்ற கருக்கலைப்பால் நிகழும் மரணங்கள்
- வேள்வெடுத்தல் (வேவு எடுத்தல்) என்னும் நகரத்தார் திருமண நடைமுறை
- ஆத்ம சோதனை
- உன்னை போல் ஒருவன், முசுலிம்களுக்கு எதிரான படமில்லை? – 1
- பூகோளம் சூடேறி ஆர்க்டிக் பனிப் பாறைகள் உருகி கடல் வெப்பம், மட்டம் உயர்வு.
- அக்னிப்பிரவேசம் -13