பண்டைய சீனாவில் கி.மு. 475-221 வரலாற்றில் அதிக போர்கள் நடந்த காலம். ஏழுக்கும் மேற்பட்ட குறுநிலப் பிரதேசங்களுக்கு இடையே எப்போதும் போர் தான்.
அவற்றில் மிகவும் அதிக பலம் பொருந்திய அரசன் என்று கருதப்பட்டவன் அரசன் ச்சின் சீ ஹ_வாங். அவன் தன்னாட்சி செய்து வந்த காலம். அவன் மற்ற பிரதேசங்களுடன் எப்போதும் சுமுக உறவுடன் இருக்க விரும்பாதவன். அதிலும் மன்னன் ச்ஜாவ் என்றால், பலகீனமான மன்னன் என்பதால், மிகவும் காட்டமாக இருப்பான்.
இதற்கு மேலாக, மன்னன் ச்ஜாவ் மிகவும் அரிதான, விலைமதிப்பற்ற, சிறப்பான ஹேஷி பச்சை மாணிக்கக் கல் ஒன்றை வைத்திருந்தான். அது சீனா முழுவதும் பெயர் பெற்ற கல். அதை ச்ஜாவ் பல வருடங்களாக மிகவும் போற்றி பாதுகாத்து வந்தான். அதனால் போர் செய்து அதைப் பெற விரும்பாமல், அந்த மன்னனைச் சாதுரியமாக மடக்கி, அந்தக் கல்லை தனதாக்கிக் கொள்ள ஒரு முறை திட்டமிட்டான் அரசன் ச்சின்.
அதனால் ஒரு நாள், திட்டமிட்டபடி, ச்சின், ஒரு அரசுத் தூதுவனை, மன்னன் ச்ஜாவ்விடம் அனுப்பி வைத்தான்.
அவையில் மன்னன் ச்ஜாவ்விடம் தூதுவன், “அரசர் ச்சின் எப்போதும் மதிப்புமிக்க அழகிய ஹேஷி மாணிக்கக்கல்லை மிகவும் மெச்சுவதுண்டு. அதனால் அவர் உங்களிடம் என்னை அனுப்பி, வியாபாரம் பேசச் சொன்னார். பச்சை மாணிக்கக் கல்லுக்கு மாற்றாக ச்சின் நாட்டின் பதினைந்து நகரங்கள் உங்களுக்குத் தரப்படும்” என்ற செய்தியைக் கூறினான்.
ஆச்சரியமடைந்தான் மன்னன் ச்ஜாவ்.
“இந்தப் பெருந்தன்மையான வியாபாரத்திற்கு நீங்கள் மறுப்புக் கூற மாட்டீர்கள் என்று எங்கள் அரசர் நம்புகிறார்” என்றான் தூதுவன் மேலும்.
மன்னன் ச்ஜாவ் தூதுவனிடம் தனக்கு யோசித்துத் தீர்மானிக்க சிறிது அவகாசம் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டான்.
தூதுவன் சென்ற பின், மன்னன் ச்ஜாவ் மிகவும் கவலை கொண்டு, தன் நாட்டின் மூத்த ஆலோசகர்களை அழைத்தார்.
“அரசன் ச்சின் சூழ்ச்சிக்காரன். அவனை நம்ப முடியாது” என்றான் மன்னன் அலுப்புடன்.
“மேன்மை தங்கிய அரசரே.. உங்களுக்கு உதவ ஒருவர் இருக்கிறார். அவர் சாதாரண அதிகாரியாக இருந்த போதும், மிகவும் தீரமும் விவேகமும் கொண்டவர்” என்றார் ஒரு ஆலோசகர்.
“யாரது?” என்ற அரசனின் கேள்விக்கு, “அவர் பெயர் லின் சியாங் ரூ. அவர் ராஜீய அரசாங்க விஷயங்களில் மிகவும் நுண்ணிய அறிவு உள்ளவர்” என்று மேலும் கூறினார் ஆலோசகர்.
உடனே மன்னனின் முன்னால் லின் தருவிக்கப்பட்டான். லின் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்திருந்த போதும் மிகவும் அறிவார்ந்த மாணவனாக இருந்தான். அரண்மனையில் வேலை கிடைத்து, பற்பல ராஜீய காரியங்களை செவ்வனே செய்து பெயர் பெற்றிருந்தான்.
இது தான் மன்னருடன் முதல் சந்திப்பு.
மன்னர் முன்னால் வந்ததும், மண்டியிட்டு, குனிந்து வணங்கினான். மன்னன் பேசும் வரை தலையை உயர்த்தவில்லை. பிறகு மன்னன் பேச ஆரம்பித்ததும், நிமிர்ந்து, அவர் சொல்வதைக் கூர்ந்து கேட்டான். ச்சின்னின் தூதுவன் சொன்ன மொழிகளை அறிந்தான்.
பின்னர், “நீ புத்திசாலி, ராஜதந்திரி என்று என் ஆலோசகர்கள் சொன்னார்கள்” என்றான் அமைதியாக.
லின் அமைதியாக இருந்தான்.
“நம் நாடு மிகவும் ஆபத்தில் இருக்கிறது. அரசன் ச்சின் என்னுடைய அரிய பொக்கிஷத்தைப் பெற விரும்புகிறான்” என்றான்.
“மேன்மை தங்கிய அரசரே.. நாம் அவருடைய ஆலோசனையை ஏற்றுக் கொள்ளவில்லையென்றால், அது அவரை எதிர்ப்பது போன்றது. அவரோ பலம் பொருந்திய அரசர். நாம் கேட்டதைத் தரவில்லையென்றால், இதையே சாக்காகக் கொண்டு, நம்மைத் தாக்கத் துணியலாம்” என்றான் நிதானமாகவும் எச்சரிக்கையுடனும் லின்.
“ஆனால் நாம் மாணிக்கக் கல்லை அரசர் ச்சின்னிடம் கொடுத்த பின்னர், அவர் நமக்குப் பதினைந்து நகரங்களைத் தராமல் போனால், என்ன செய்வது?” என்று கேட்டான் ச்ஜாவ்.
“அப்போது எல்லோருக்கும் அவரது நேர்மையின்மையை வெளிக்காட்ட வேண்டும். பின் மற்ற எல்லா நாடுகளும் அவருக்கு மதிப்புத் தராமல் அரசனாக இருக்க லாயக்கற்றவர் என்று கூறும்படிச் செய்ய வேண்டும். அப்போது, அரசர் ச்சின் நம் வழிக்கு வந்தேயாக வேண்டும்” என்று பதிலளித்தான் லின்.
லின்னின் கூர்ந்த உள்ளுணர்வைக் கண்டு நல்லவிப்பிராயம் கொண்டான் அரசன். ஆனாலும் சந்தேகம் இருந்தது.
லின் கம்பீரத்துடன் வணங்கி, அரசன் முன் சபதம் செய்தான்.
“ச்சின் அரசரிடம் சேர்க்க மாணிக்கக் கல்லை என்னிடம் தாருங்கள். ச்சின் அரசர் தன்னுடைய சத்தியத்தை மீறினால், அதை அப்படியே பத்திரமாக நம் நாட்டிற்கு திருப்பிக் கொண்டு வருவது என் பொறுப்பு” என்று வாக்குக் கொடுத்தான்.
ச்ஜாவ் மன்னனுக்கு வேறு வழியேதும் இல்லாததால், திட்டம் வெற்றிகரமாக நிறைவேறும் என்று அரைமனதுடன் நம்பி, மாணிக்கக் கல்லை லின்னிடம் கொடுக்க ஒப்புக் கொண்டார்.
தூதுவனுடன் கிளம்பிய லின் ச்சின்னின் நாட்டிற்கு வந்தான்.
ச்சின்னின் அரசவைக்கு வந்ததும், லின் மன்னனை வணங்கி, “மேன்மை தங்கிய அரசருக்கு வணக்கம். நான் ச்ஜாவ் மன்னர் தரப்பில், இதோ ஹேஷி மாணிக்கக் கல்லைத் தர வந்திருக்கிறேன். மேலும் தாங்கள் சொன்னபடி அரசர் ச்ஜாவ்விற்கு பதினைந்து நகரங்களைச் சாசனப்படுத்தும் பத்திரத்தையும் பெற வந்துள்ளேன்” என்று கூறி நின்றான்.
ச்சின் அரசன் மாணிக்கக் கல்லை பேராசையுடன் கையில் வாங்கியதுமே, லின் பேசியதை சற்றும் கண்டு கொள்ளாமல், கல்லைப் பார்த்துக் கொண்டே நின்றான்.
“ஆஹா.. என்ன அழகிய மாணிக்கக் கல். ஹேஷி கல்!!! மதிப்பற்றது. அது எப்படி ஒளியைப் பிரதிபலிக்கிறது. எவ்வளவு சுத்தமாக இருக்கிறது” என்று அரசன் அதை மெச்சுவதிலேயே தன் கவனத்தைக் கொண்டிருந்தான். லின்னுக்கு பதிலேதும் கூறாமல், மாணிக்கக் கல்லை அனைவரிடமும் காட்டுவதிலேயே இருந்தான்.
சபையோரும் கல்லைக் கண்டு மெச்சினார்கள்.
“வாழ்த்துக்கள் அரசரே.. விலைமதிப்பற்ற பொக்கிஷத்தைப் பெற்றுவிட்டீர்கள். மேன்மை தங்கிய அரசருக்கு அது நல்ல ஆரோக்கியத்தையும் சுகத்தையும் தரட்டும். கெட்ட ஆவிகளை விரட்டட்டும்” என்று வாழ்த்தினார்கள்.
தன்னை யாரும் கண்டு கொள்ளாததைப் புரிந்து கொண்ட லின், ச்சின் மன்னன் ச்ஜாவ் மன்னனுக்குச் செய்த சத்தியத்தின் படி நடக்கும் எண்ணம் சிறிதும் இல்லை என்பது விரைவில் புரிந்தது. அதனால் லின் ச்சின் அரசனுக்கு அருகே சென்று, ஹேஷி மாணிக்கக் கல்லின் தோற்றம் பற்றியும், அது ச்ஜாவ் மன்னன் கைகளுக்கு எப்படி வந்தது என்பது பற்றியும் கூறத் தொடங்கினான்.
மாணிக்கக் கல்லைக் கண்டு பிடித்த மனிதர் பெயர் “ஹி”. அதை அவர் ச்சூ நாட்டின் அரசன் லீக்குத் தந்தார். ஆனால் அந்த அரசன் அதை மிகவும் சாதாரணக் கல்லாக எண்ணினான். ஹி பித்தலாட்டக்காரன் என்று அறிவிக்கப்பட்டு, அவனது இடது காலை வெட்டி தண்டித்தான்.
ஹி அதை மறுபடியும், அடுத்த அரசன் ஊக்கு பரிசாகக் கொடுத்தார். அவரும் அந்தக் கல்லில் எந்தச் சிறப்பும் இருப்பதாகத் தோன்றாமல், அவரது வலது காலையும் வெட்டித் தண்டித்தார்.
ஹி தான் பட்ட கஷ்டங்கள் போதும் என்று எண்ணி, அது கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கே திருப்பி அனுப்பினார். ஆனால் மன்னன் வென், முடி சூடும் போது, சிறந்த கலைஞனை அனுப்பி, அந்தக் கல்லை வெட்டி மெருகூட்டச் சொன்னான்.
கல்லைச் செதுக்கும் கலைஞன் வேலை முடிந்ததும், சாதாரணக் கல்லாகத் தோன்றிய பொருள் மிகவும் அழகிய பொக்கிஷமாக மாறியது.
அதனால் கல்லைக் கண்டுபிடித்த மனிதருக்கு மதிப்புக் கொடுக்கும் வகையில், அரசன் வென், அதற்கு “ஹி கல்” என்று பெயர் வைத்தான். பிறகு அது “ஹேஷி கல்” என்றானது.
லின் சொன்ன விஷயங்களைக் கேட்டதும், “ஒன்றுமில்லாததற்கு.. முட்டாள் தன் இரண்டு கால்களையும் இழந்தான்” என்று ஆச்சரியப்பட்ட அரசன் ச்சின், “பிறகு அந்தக் கல் சூ நாட்டின் கள்வனொருவனால் களவாடப்பட்டது என்று கூறப்பட்டு, பிறகு அரசன் ச்ஜாவ்விடம் தரப்பட்டது என்பது வரலாறு” என்று கதையை முடித்தான்.
“மேன்மை தங்கிய அரசரே.. அப்படியும் நடந்து இருக்கலாம். ஆனால் மிகவும் முக்கியமான இன்னொரு விஷயம் இருக்கிறது. அது இந்த ஹேஷி கல்லின் இரகசியம் மட்டும் வெளியே சொல்லப்படவில்லை என்பது தான்” என்று நிறுத்தினான் லின்.
“அதென்ன இரகசியம்?” என்று ச்சின் கேட்டான்.
“உண்மையில் இந்த ஹேஷி கல்லில் ஒரு குறை உள்ளது”
அரசன் ச்சின் மாணிக்கக் கல்லை மறுபடியும் கூர்ந்து பார்க்க விரும்பி, அதை சந்தேகத்துடன் திருப்பிப் பார்த்தான்.
“குறையைக் கண்டுபிடிக்க அதை மிகவும் கூர்ந்து பார்க்க வேண்டும்.” என்று சொல்லிக் கொண்டே, “கொடுங்கள்.. உங்களுக்கு நான் காட்டுகிறேன்” என்றான் லின் அரசனுக்கு அருகே நின்றபடி.
பேச்சுவாக்கில், அரசனும் லின்னிடம் மாணிக்கக் கல்லைக் கொடுத்தான்.
ஆனால் கல் லின்னின் கைகளுக்கு வந்ததுமே, பக்கத்திலிருந்த கல்லாலான தூணுக்குப் பக்கத்தில் தாவினான். அதை உயரே பிடித்து எல்லோருக்கும் காட்டி, “மேன்மை தங்கிய அரசர் மாணிக்கக் கல்லை ஏற்றுக் கொண்டார். ஆனால் மன்னர் ச்ஜாவ்விற்கு வாக்குத் தந்த படி பதினைந்து நகரங்களைத் தரவில்லை. அந்த வாக்கினை காப்பாற்றுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கில்லை. அதனால் இந்தக் கல்லை இந்தக் தூணில் இடித்து, அதை இல்லாமல் செய்து விடுகிறேன்” என்றான் தீரத்துடன்.
தன்னுடைய அரசவையில் மானம் போக விரும்பாத மன்னன் ச்சின், லின்னுக்கு உறுதி கொடுத்து, உடனே தன்னுடைய அதிகாரியை அழைத்து, “சின் நாட்டின் வரைபடத்தைக் கொண்டு வா.. இந்த அதிகபிரசங்கி தூதுவனுக்கு நான் தரப்போகும் பதினைந்து நகரங்களைக் காட்டுகிறேன்” என்றான்.
ஆனால் லின்னுக்கு அகங்காரமும் பேராசையும் கொண்ட அரசன் தன்னுடைய நகரங்களை அவ்வளவு எளிதில் கொடுக்கத் துணிய மாட்டார் என்று நம்பினான்.
அதனால் லின் உடனே திட்டமிட்டு, “மேன்மை தங்கிய அரசரே.. உங்களுக்கும் உங்கள் நாட்டிற்கும் மரியாதை செய்யும் பொருட்டு, அரசர் ச்ஜாவ் உங்களுக்காக அவரது அரசவையில் மூன்று நாட்கள் நோன்பிருந்து சடங்குகள் செய்து என்னை இங்கு அனுப்பி வைத்தார். அதனால் அதே மரியாதையை நீங்களும் தருவீர்கள் என்ற நம்பிக்கையில், இந்த ஆபரணத்தைக் பெற, அது போன்ற சடங்கைச் செய்வீர்கள் என்று எண்ணுகிறேன்” என்றான்.
தன்னுடைய மதிப்பைத் தக்க வைத்துக் கொள்ளும் ஆர்வத்தில், அரை மனத்துடன் அரசன் ச்சின் அதற்கு ஒத்துக் கொண்டான்.
பிறகு, அனைவரும் தூங்கச் சென்றபின், லின் தன்னுடைய மிகவும் அந்தரங்கமான வேலையாளிடம் மாணிக்கக்கல்லை கொடுத்தான். நிலவற்ற அந்த இரவில், அந்த வேலையாள் இரவோடு இரவாக மாணிக்கக் கல்லுடன் அந்த நாட்டிலிருந்து தப்பிச் சென்று, ச்ஜாவ்விடம் கல்லைக் கொண்டு சேர்த்தான்.
மூன்று நாட்கள் கழிந்த பின்பு, அரசன் ச்சின், மிகவும் ஆடம்பரமான கொண்டாட்டத்திற்கு அரசவையில் ஏற்பாடு செய்தான். லின்னை மறுபடியும் சந்தித்தான்.
“அரசே.. ச்சின் நாட்டின் கீழிருக்கும் இருபது நாட்டு மன்னர்களும் தங்கள் வாக்கினை காப்பாற்றுபவர்கள் இல்லை. அதனால் நேற்று இரவு, நான் என்னுடைய பணியாளிடம் ச்ஜாவ் மன்னனிடம் மாணிக்கக் கல்லைச் சேர்க்கச் சொல்லி கொடுத்து அனுப்பி விட்டேன்” என்று பிரகடனப்படுத்தினான்.
“என்னை ஏமாற்ற எத்தனை தைரியம்?” என்று கொதித்த ச்சின் மன்னனின் முகம் சிவப்பேறியது.
“லின் சியாவ் ரூ நம்மை ஏமாற்றி விட்டான். அவனை சித்ரவதைப் படுத்தி கொல்லுங்கள்” என்று சபையோர்கள் கத்தினார்கள்.
லின் சபையோரைப் பார்த்து, “ நீங்கள் உண்மையில் நான் அரசனை ஏமாற்றியமாக எண்ணினால், நான் தண்டனையை ஏற்றுக் கொள்கிறேன்” என்றான் கம்பீரத்துடன்.
அரசன் ச்சின் கடுங்கோபம் கொண்ட போதும், லின்னை தண்டிப்பது தவறு என்று எண்ண ஆரம்பித்தான். தன்னுடைய கண்ணியத்தைக் காத்துக் கொள்ள மூத்த அதிகாரிகளை நோக்கி கம்பீரத்துடன், “ நான் லின்னை தண்டித்தால், நாம் ச்ஜாவ் மன்னனுடன் போரிட வேண்டி வரும். அதனால் மற்ற அரசர்கள் கோபத்திற்கு ஆளாகலாம். அத்துடன் எனக்கு மாணிக்கக் கல்லின் மேல் இப்போது ஆசை ஏதும் இல்லை. அது மிகச் சாதாரணக் கல் தானே! அதனால் தலையுடன் லின் ச்ஜாவ்விடம் திரும்பட்டும்” என்று அறிவித்தான்.
லின் விடுவிக்கப்பட்டு, நாட்டிற்கு பத்திரமாகத் திரும்பினான். சபையில் மன்னன் ச்ஜாவ் அவனை இதயப்பூர்வமான பிரியத்துடன் வரவேற்றான்.
இந்த வெற்றிகரமான சேவையைப் பாராட்டி லின், மன்னன் ச்ஜாவ்வின் முக்கிய மந்திரியாக நியமிக்கப்பட்டான்.
சபையோர் அனைவரும் லின் சேவையைப் பாராட்டி பதவி உயர்விற்கு ஒப்புதல் அளித்தனர்.
—
- சந்திரனில் விவசாயம் எப்படி நடக்கலாம் என்று யூகம் தரும் இயந்திர விவசாயப் பண்ணைகள்
- மலேசிய தான் ஸ்ரீ சோமா அறவாரியத்தின் அனைத்துலகப் புத்தகப் பரிசினை இலங்கை அறிஞர் மு.பொன்னம்பலம் வென்றார்
- மூன்று பேர் மூன்று காதல்
- மதிப்பும் வீரமும்
- ‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து……………… 8. தி.ஜ.ரங்கநாதன் – ஆஹா ஊகூ
- அரசன் சார்ந்த அறநெறி / இல்லற நெறி – (இராமாயண ராமர் பற்றி)
- காளை மேய்த்தல்(Ox Herding)- பத்து ஜென் விளக்கப் படங்கள்
- வெளி
- கண்ணீர்ப் பனித்துளி நான்
- தாகூரின் கீதப் பாமாலை – 43 சதுப்பு நிலப் பாடல்கள்
- ஒருவர் சுயத்தனம் பற்றி எனது பாடல் -1 (1819-1892) (புல்லின் இலைகள் -1)
- நினைவுகளின் சுவட்டில் (105)
- சந்திப்பு
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 39
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் அங்கம் -4 பாகம் -6
- பி.ஜி.சம்பத்தின் “ அவன் நானல்ல ( மலையாளக்கதை ) – ஒரு பார்வை
- 22 ஃபீமல் கோட்டயம் ( மலையாளம் )
- நம்பிக்கை ஒளி! (10)
- சீமைத் தரகர்களும் ஊமை இந்தியர்களும்
- வந்த வழி-
- பாகிஸ்தானில் பாதுகாப்பற்ற கருக்கலைப்பால் நிகழும் மரணங்கள்
- வேள்வெடுத்தல் (வேவு எடுத்தல்) என்னும் நகரத்தார் திருமண நடைமுறை
- ஆத்ம சோதனை
- உன்னை போல் ஒருவன், முசுலிம்களுக்கு எதிரான படமில்லை? – 1
- பூகோளம் சூடேறி ஆர்க்டிக் பனிப் பாறைகள் உருகி கடல் வெப்பம், மட்டம் உயர்வு.
- அக்னிப்பிரவேசம் -13